Tuesday, April 22, 2025
Homesliderபனைமரம்

பனைமரம்

பரிவை சே குமார்

“சாமியய்யாவோட பனமரத்த வெட்ட ஆளு வந்திருக்கு… ஒன்னோட பன ஒண்ணு கோணத்தல வரப்புல இடி வுழுந்து கொண்டக்கட்டு கருகி நிக்குதுல்ல அதயும் வெட்டச் சொல்லலாமுல்ல…” பல் குச்சியோடு கொல்லக்காட்டுப் பக்கம் போய்விட்டு வந்த செதம்பரம் எச்சியத் துப்பியபடி என்னிடம் கேட்டான்.

“இல்ல மச்சான்… அத பெரிய மச்சினன் வந்து வெட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லியிருக்காரு…”

“ஓ… அப்பச் சரி… இல்ல ஆளு வந்திருக்கு… அப்பறமாத் தேடிப் போயி ஆளுப் புடிக்கிறதுக்கு வந்தவங்கள வெட்டச் சொல்லலாமேன்னு பாத்தேன்…” வேப்பங்குச்சி பல்லில் விளையாடியது.

“இவங்கக்கிட்ட சொன்னாலும் இன்னக்கி வெட்டமாட்டாக மச்சான்… நாளக்கி வாறோமுன்னு சொல்லுவாக… வெலயும் அடிச்சிக் கேப்பாக… அதான் மச்சினன் வேணுமின்னுட்டாரு… அவருக்கிட்ட தரமாட்டேன்னு சொல்ல முடியுமா என்ன… மாட்டுக் கசாலக்கி ஓடு போடும் போது அவருதானே கைமரமெல்லாம் கொடுத்து விட்டாரு… பனய வித்து எம்புட்டு லாபம் பாக்கப் போறோம்… அதான் வந்து வெட்டிக்குங்கன்னு சொல்லிட்டேன்…”

“ம்… ஆமாமா… வெலக்கிக் கொடுத்தா எம்புட்டுக்கு கொடுக்கப் போறோம்… அவரு எடுத்துக்கிட்டா நாளப்பின்னா எதுவும் வேணுமின்னா கொடுத்து உதவுவாருல்ல…” என்றபடி எச்சியைத் ‘புளிச்’செனத் துப்பிவிட்டு நகர்ந்தான் செதம்பரம்.

நாங்க சின்னப்புள்ளயா இருக்கயில வூருக்குள்ள ரெண்டு எடத்துல பனமரங்க கூட்டமா நிக்கிம்… வயக்காட்டுக்கு நடுவ வரப்புகள்ல கிட்டத்தட்ட எரநூறு மரங்களுக்கு மேல நிக்கிம்… அதுக்குப் பேரே பெரிய பனங்காடுதான்.. அப்புறம் கொல்லக்காட்டுப் பக்கம் ஒரே எடத்துல அறுவது மரங்களுக்கு மேல நிக்கும்… அது சின்னப் பனங்காடு… இது போக கம்மாக்கரயில ரெண்டு… அங்கங்கே வய வரப்புல ஒண்ணு ரெண்டுமான்னு நெறயப் பனைங்க நின்னுச்சு… அதெல்லாம் காலப்போக்குல சன்னஞ்சன்னமாக் கொறஞ்சிருச்சு…  நெட்டப் பன…. குட்டப்பன… கோணப்பன… சதக்காச்சி… கொட்டக்காச்சி… குப்பக்கரப்பன… மடக்கரப்பனயின்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு பேர் இருக்கும்…  ஒரு சில பனைக்கி அது யாருக்குச் சொந்தமோ அவங்க வீட்டுப் பேரும் வழக்குல இருக்கும்.

அப்புடித்தான் வேப்பஞ்செய்யில நின்ன ஒத்தப்பனைக்கி சாமியய்யாவுட்டுப் பனயின்னு பேரு… இப்ப உள்ளதுக சொல்றது செல்லப்பனோட பன… ஆமா நாங்க சின்ன வயசுல சாமியய்யா வீட்டு வய வரப்புல நின்னதால சாமியய்யாவுட்டுப் பனன்னு சொன்னோம்… இப்ப இருக்க எளசுகளுக்கு அது செல்லப்பனோட வயலாயிப் போச்சு… அதனால பனக்கிப் பேரும் செல்லப்பனோவோட பனயின்னு ஆயிப்போச்சு… ஒறவு மொறக்கி ஏத்தமாரி மாமா, சித்தப்பா, அண்ணங்கிறது செல்லப்பனுக்கும் பனைக்கிம் எடயில வந்து நின்னுக்கும்…

வூருக்குள்ள சாதி சனத்துல சேரமா ஒரு பய எப்பவுமே தனியாவே திரிவான்… அப்படித்தான் சில பனயிங்க பனங்காட்ட விட்டு வயலோட வரப்புல தனிச்சி நிக்கிம்… அப்படிப் பனங் கூட்டத்துல சேராம  தனியா நின்ன பனதான் இந்தப் பன… நல்ல உயரமா… அடி பெருத்துப் போயி… கருகருன்னு நிக்கிம்… தனிச்சி நிக்கிறதால அதுக்கு பேரே ஒத்தப்பனதான்… ஒரு சில வூருக்குப் போகும்போது பாத தெரியாம வழி கேட்டா, அந்தா தெரியுதுல்ல ஒத்தப்பன… அதத்தாண்டுன்னா வூரு வந்துரும்ன்னு சொல்றத நாங்கேட்டிருக்கேன்.

சின்ன வயசுல ரொம்ப அதிகம் உயரமில்லாமத்தான் இருந்துச்சு… இப்ப நல்ல உயரம்… கண்டேவி கோவிலு கோபுரத்த விட உயரமா இருக்கும்… ஆடிக்காத்துல அது ஆடுறதப் பாத்தாலே ஒடிஞ்சி விழுந்துருமோன்னு பயமாயிருக்கும்… அப்புடித்தான் மனசுக்குள்ள தோணும்…. ஆனா அதுக்கு ஒண்ணும் ஆவாது… எனக்குத் தெரிஞ்சதுல இருந்து பட்டுப் போற வரக்கிம் அப்புடியேதான் நின்னுச்சு… என்ன இப்பக் காப்புக் கம்மி… முன்னால சாக்குச் சாக்கா பணம்பழம் புடுங்குவாங்க… சமீபத்துலதான் நச்சத்திரம் ஒண்ணு எரிஞ்சி விழுந்து கொண்டக்கட்டு கருகிப் போயிருச்சு… இப்ப கருகுன கொண்டக்கட்டும் கீழ விழுந்துருச்சு… மொட்ட மரமாத்தான் நின்னுச்சு…

சின்ன வயசுல வீட்டுக்கு வெளிய படுத்துக்கிட்டு நச்சத்திரத்த எண்ணிக்கிட்டு ஆத்தா கத சொல்லக் கேட்டுக்கிட்டு படுத்துக் கெடப்போம்… அப்ப மானத்துல நச்சத்திரம்  நகந்து போறத எண்ணிக்கிட்டு இருப்போம்… செல நேரத்துல நச்சத்திரம் எரிஞ்சி விழுகுறதப் பாத்தா ஆத்தா ஒடனே எதாச்சும் பூவ நெனச்சிக்கங்கன்னு சொல்லும்… அப்பல்லாம் மனசுல்ல படக்குன்னு வாரது மல்லியப்பூத்தான். நச்சத்திரம் விழுகுறதப் பாக்கயில பூவ நெனக்காட்டி மறதி வருமாம்… என்ன மறதி வந்துருக்கு இது வரக்கிம்… இந்தா பழசெல்லாம் அப்புடியேதானே நெனவுல இருக்கு…

பன மரத்துல இடியோ, நச்சத்திரமோ விழுந்துட்டா அதோட கொண்டக்கட்டு காத்துல விழுறதுக்கு முன்னால வித்துறணும்… அப்பத்தான் கொஞ்சமாச்சும் வெல போகும்ன்னு அப்பா சொல்லக் கேட்டிருக்கேன்… கொண்டக்கட்டு விழுந்துட்டா அம்புட்டுத்தான்… உச்சியில பொந்தாயிப் போயிரும்… அதுவும் மழக் காலமாயிருந்தா அந்தப் பொந்துல தண்ணி நின்னு பன ஒண்ணுக்கும் ஒதவாமப் போயிரும்ன்னு சொல்வார்… அப்ப வாங்குறவுக சொல்ற வெலக்கித்தான் கொடுத்தாகனும்… எங்க மரத்துல இடி விழுந்து ஒரு வாரந்தான் ஆவுது… ஓலை கருகித்தான் நிக்கிது… இன்னும் கொண்டக்கட்டு விழுகல… இப்பக் கொடுத்தா சொன்ன வெலக்கி அஞ்சு பத்து கொறச்சித்தான் போகும்… அடிமாட்டு வெலக்கி கேக்க மாட்டாங்க… சாமியய்யாவோட பனய அடிமாட்டு வெலக்கித்தான் வாங்கியிருப்பானுக… யாரு வாங்கியிருக்கப் போறா, வாழ்ற மாணிக்கத்துல செங்கக் காலவா போடுற மாரிமுத்துதான் வாங்கியிருப்பான்.

சாமியய்யாவோட மரத்துப் பனங்காயி வெல்லம் போட்டாப்புல அப்புடி இனிக்கும்… அது சரியான சதக்காச்சி… ஒத்தக்காச்சி… ரெட்டக்காச்சின்னு இல்லாம எல்லாமே மூணு கொட்ட வச்சி பெரிய காயாத்தான் இருக்கும்… பனம்பழ சீசன்ல காலயில எந்திரிச்சி பனம்பழம் பொறக்கப் போறவங்களோட மொதக்குறி அந்தப் பனயாத்தான் இருக்கும்… அப்புறந்தான் பனங்காட்டுப் பக்கம் போவோம்… சாமியய்யா எப்பவும் பழம் பழுத்து விழ ஆரம்பிச்சதுந்தான் ஆளு விட்டு வெட்டுவாரு… அதுக்குள்ள நாம ஒரு பழமாச்சும் எடுத்தாந்து சுட்டுத் தின்னுறலாம்.

மரத்துல இருந்து விழுற பனம்பழத்த நெருப்புல போட்டு சுட்டுப்புட்டுத் தின்னா ஆகா…. அம்புட்டு சொவயாயிருக்கும்… அதுவும் மொத்தமா வெட்டிக் கொண்டாந்து சதய மட்டும் அறுத்தெடுத்து அவிச்சிக் கொடுப்பாங்க… அது அதவிடச் சொவயாயிருக்கும்… அதுவும் எங்காத்தா ரெண்டு கருப்பட்டிய வேற அவிக்கும் போது தட்டிப் போட்டு, ஏலக்காய நசுக்கிப் போட்டு விடும்… அந்தச் சொவ எல்லாம் இப்ப எங்கயிருக்கு… சதக்காச்சி கூட சின்னச் சின்னதாத்தான் காய்க்குது இப்போ… அதுவும் காய் அதிகமிருக்கதில்ல…

ஒரு தடவ பால்பாண்டிப் பய மொங்கு வெட்டுறேன்னு அந்தப் பனயில ஏறிட்டான்… வயிராத்தா… அதான் சாமியய்யாவோட பொண்டாட்டி தயிர் வூத்திட்டு ரோட்டுல வரும்போதே பனமரத்தப் பாத்துச்சு… நாங்க ஓடி ஒளிஞ்சாலும் அதோட பார்வயிலயிருந்து தப்ப முடியுமா என்ன… ஒரே கத்து… என்னடா பண்ணுறிய பனயிலன்னு கத்திக்கிட்டு வயல்ல எறங்கிருச்சு… நாங்க எல்லாரும் ஓடி ஒளிய, பனந்தூருல நின்னுக்கிட்டு நெத்தில கய்ய வச்சி சூரியன மறச்சிக்கிட்டு மேல பாக்குது… கொண்டக்கட்டுல கொரங்கு மாரிக்கித் தொங்கிக்கிட்டு நிக்கிறான் பால்பாண்டி… அட எடுபட்ட பயலன்னு ஆரம்பிச்சி… அப்பனாத்தாவ எல்லாம் இழுத்துத் திட்டி கீழ இறங்குறியா இல்ல நா மேல வரவாடான்னு கத்த, ஆத்தாடி இந்தப் பொம்பள ஏறுனாலும் ஏறிருவானு பயந்துக்கிட்டு மெல்ல எறங்கி பாதியிலயிருந்து ஒரே குதியாக் குதிச்சி எறங்கி ஓடியாந்து முள்ளக் குத்திக்கிட்டு அந்த முள்ளு கொடுத்த வேசாடு தாங்காம வய்யாபுரிக்கிட்ட முள்ளெடுத்து மந்திரிச்சதெல்லாம் தனிக்கத… இப்ப பால்பாண்டிய பொதச்ச எடத்துல புல்லு மொளச்சிப் போச்சு… ம்… அம்புட்டுத்தான் வாழ்க்க…

அப்ப கசால கட்டுறதுக்கு பனவோலதான்… எங்கப்பாரு எங்க பனயள்ள வெட்டுற ஓல பத்தாதுன்னு மத்தவங்க மரத்துலயும் வெட்டிக்கிறேன்னு கேப்பாரு… இப்பல்லாம் கொடுக்க யோசிப்பாங்க… அப்ப அப்படியில்ல… நல்லா வெட்டிக்கப்பா அப்படின்னு சொல்லுவாங்க… அவங்க வீட்டுக் கசால கட்ட எங்க மரத்துல வெட்டிப்பாங்க… அப்பல்லாம் சாமியய்யா மரத்துலயும் வெட்டுவோம்… ஒவ்வொரு ஓலயும் நல்ல அகலமாப் பெரிசா இருக்கும்… ஒரு மரத்து ஓல நெறயா இருக்கது அந்த மரத்துலதான்.

கசால கட்டுறதே பெரிய வேலதான்… ஓல வெட்டி… அத ஒண்ணுக்குள்ள ஒண்ணாக் கோர்த்து வரிசை அடுக்கி வச்சி கருக்கோட இருக்க மட்டய வெட்டு எடுத்து, மட்டயோட ரெண்டு பக்கமும் இருக்க கருக்கவெட்டி எடுத்துட்டு அத உறிச்சி நாறெடுத்து வச்சிப்பாங்க… ஓல கொஞ்சம் காஞ்சதும் கசால கட்டுறதுக்கு மொதநாளு வட்டமா அடுக்கி, பள்ளயம் போடுறதுன்னு சொல்லுவாக…  சாமி கும்பிடும் போது சாமிக்கு முன்னால வாழ இலயில பொங்கலோ சுண்டலோ படக்கிறதுக்கும் பள்ளயம்ன்னுதான் சொல்வாங்க… ஓலயில கொடங்கொடுமா தண்ணி ஊத்தணும்… நா அக்கா தம்பின்னு தண்ணி கொண்டாந்து ஊத்த, ஐயா, அப்பா, சித்தப்பாக்கன்னு எல்லாரும் தண்ணியில வூறுன பன்நாற ஓலயில கோத்துக் கொடுப்பாங்க… தங்கச்சியும் சின்னத் தம்பியும் ஒலயக் கொண்டு போயிக் கொடுக்க,  மொதனாலு வந்து கை மரத்தயெல்லாம் கைபாத்து கம்பெல்லாம் சரி பண்ணிக் கட்டி வச்சிருப்பாக, அது மேல ஓலய வாங்கி நெருக்கம் நெருக்கமாக் கட்ட ஆரம்பிப்பாங்க… அங்காளி, பங்காளி கூட உதவிக்கி வந்து நிப்பாக.

சுத்துக்கட்டு வேல சுளூவா முடிஞ்சிரும்… ஆனா பன ஓலய வச்சி மோடு கட்டுறதுதான் பெரிய வேல… அது நல்லாத் தெரிஞ்ச ஆளுதான் ஒழுகாமக் கட்ட முடியும்… மழ காலத்துல மோடு ஒழுதா மாடுக படுக்க முடியாம… கசாலயில மூத்தரம், சாணியோட மழத்தண்ணியும் சேர தொழி அடிச்சி வச்சிருங்க… அதுல படுத்து மேலெல்லாம் நாறடிச்சிக்கிட்டு நிக்கிங்க… அப்ப அதுக பக்கத்துல போனா வாலால அந்தத் தண்ணிய நம்ம மேல அடிக்கும் பாருங்க… அத அனுபவிச்சிருந்தாத்தான்… அந்த நாத்தமும் சாணியும் கொடுக்கிற கடுப்புத் தெரிஞ்சிருக்கும்… அதுனால மோடு கட்டுறதுதான் இருக்கதுலயே சள்ள சுடிச்ச வேல… நறுக்குன்னு கட்டி… ரெண்டு பக்கமும் கூராச் செதுக்குன கம்பச் சொருகி கம்பி சுத்தி கட்டி, அதுமேல நாறயும் சுத்தி கட்டி முடிச்சிட்டுக் கீழ எறங்குவாங்க.

கட்டி முடிச்ச கசாலக்குள்ள போயி நின்னா புது ஓல வாசம் சும்மா கும்முன்னு இருக்கும்… ஆள அப்புடியே சுண்டியிழுக்கும்… கொஞ்ச நாளக்கி கசாலக்குள்ள அடிக்கடி போச் சொல்லும்… ஒரு மழ பேஞ்சி மோடு ஒழுதா… என்ன கட்டுனானுங்க… மோடு தொர்ருன்னு ஒழுவுதுன்னு ஆத்தா கத்த, அப்பா போயி நாகப்பனயோ பூமியயோ இழுத்தாருவாரு. வந்து கம்பிய அவுத்து ஓலயலச் சரிபண்ணி, வக்கல அதுமேல மெத்தமாரி விரிச்சி மறுபடியும் கம்பியை நறுக்குன்னு சுத்தி விடுவாக… அப்புறம் அது ஒழுகாது. பண ஓலயவிட தென்னங்கிடுகு பரவாயில்லன்னு கசாலயத் தென்னங்கிடுகு வாங்கி கட்ட ஆரம்பிச்சோடனே பன ஓலக்கி வேல இல்லாமப் போச்சு… உழப்புன்னு பாத்தா தென்னய விட பனதான் கூட… இப்ப தென்னங் கீத்துல கட்டுறதும் போயி எல்லாரு வூட்டுலயும் ஓட்டுக் கசாலயாயிருச்சு… அந்தக் கசாலக்கி மாடுகளத்தான் காணோம். இப்ப விழுற காவோலய அடுப்பெரிக்கவும் பெரிய கார்த்தியக்கி சுழுந்து கட்டவுந்தான் வச்சிக்கிட்டோம். பயக அந்த ஒல மட்டய வண்டியாச் செஞ்சி இழுத்துக்கிட்டுத் திரிவானுக…  

கம்மா மூலயில ஒரு குட்டிப் பன இருந்துச்சி… அதுலதான் வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இருக்காருன்னு கும்பிடுவாக… அந்தப்பன பட்டுப் போயி, கொஞ்சங் கொஞ்சமா நொறுக்கி விழுந்து மண்ணோட மண்ணா மக்கிப்போச்சு… வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இப்ப எங்க இருக்காருன்னே தெரியல… அவரு மட்டுமில்ல… அங்கங்கே மரங்கள்ல வச்சிக் கும்பிட்டா சாமிக எல்லாம் காணாமப் போச்சு… நாங்க அந்தப் பக்கம் போகயில கையெடுத்துக் கும்பிட்டுப் போவோம்… எளவரசுகளுக்கு அதெல்லாம் தெரியாது… வூருக்குள்ள இன்னன்ன சாமி இருந்துச்சுன்னு இப்ப யாருஞ் சொல்லிக் கொடுக்குறதும் இல்ல… நாகரு, பாம்பரம்மா, கொன்னயூரா அப்படின்னு வச்சிக் கும்பிட்ட சாமியெல்லாம் இப்ப இருந்த எடந்தெரியாமப் போச்சு.

சாமின்னதுந்தான் பழனிக்குப் போனது ஞாபகத்துல வருது… அப்பல்லாம் இங்கயிருந்து எம்புட்டுப் பேரு பழனிக்கி நடப்பாக தெரியுமா… அது ஒரு திருவிழா மாரிக்கி இருக்கும்… ஒரு மாசத்துக்கு பஜன… மலக்கிக் கெளம்புறதுக்கு மொத நாளு வடிச்சிப் போடுறதுன்னு கள கட்டும்… ஒரு வருசம் பழனிக்குப் போனதுல நானு, ராஜகோபாலு, செதம்பரம்,  பால்பாண்டி, தொரராசுன்னு எல்லாமும் எளவரசுக… ஒரே ஆட்டம் பாட்டந்தான்…

சிங்கப்புணரி தாண்டி வயக்காட்டு வழியில நடந்து போறோம்… கூந்தப்பன ரெண்டு நிக்கி… பூப்பூத்து அவ்வளவு அழகா… இதென்னடா புதுசாயிருக்கு… பன மாரியிருக்கு… பூத்திருக்குன்னு சொன்னப்ப… சாமியய்யாதான் இது கூந்தப்பனடான்னு சொன்னாரு… அதப்பத்திப் பேசிக்கிட்டுப் போறோம்… முன்னால ஒரு கூட்டம் அரோகரா போட்டுப் போவுது… அதுல நாலு தாவணிக… அதுக எங்களப் பாக்க… நாங்க அதுகளப் பாக்க… அப்புறம் கூந்தப்பன… கூந்தப்பனன்னு பின்னாலயே வெரட்டிப் போக, அடேய் மலக்கிப் போறோமுடா… வள்ளி தேவானய அங்க போயி பாத்துக்கலாமுடான்னு வெள்ளச்சாமி மாமா சிரிக்காமச் சொன்னாரு… ஆனாலும் விடாம கொட்டாம்பட்டியல அதுக தங்குன எடத்துலயே நாங்களும் தங்குனோம்… அப்பப்ப சின்னச் சின்னதா பேச்சு வார்த்த நடந்துச்சு… மறுநாக் காலயில அவங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எங்களக் கெளப்பிக் கொண்டு போயிட்டாரு சாமியய்யா… அப்புறம் அதுகள சம்முவ நதிக்கிட்ட பாத்தோம்… சிரிச்சிச்சிக…. பேரு கூட செவாமி, சவுந்தரம்ன்னு சொன்ன ஞாபகம்.

ரெண்டு மூணு கொண்டக்கட்டு உள்ள பனமரம் பக்கத்து வூருல நின்னுச்சு… அத  சாமின்னு சொல்லிக் கும்பிடுவாக… அதோட அடியில மஞ்சளக் கொட்டி வச்சிருப்பாக… ஒரு ஆணி அடிச்சி வெள்ளி செவ்வா பூப்போடுவாக… அது இருந்த எடத்துல இப்ப ஒரு வூடு வந்துருச்சு… அதுலயிருந்த சாமி இப்ப அங்கயில்ல…  அவரு ஆடு மேக்கப் போகும் போது ஒரு வூருல இருவத்தோரு கொண்டக்கட்டோட ஒரு மரமிருந்துச்சுன்னு அப்பா சொல்லியிருக்காரு… இருவத்தோரு கொண்டக்கட்டான்னு ரொம்பப் பெரமிப்பா இருக்கும். கலியாணம் முடிஞ்சி மாமனாரு வீட்டுக்குப் போனப்போ ஊருக்குப் பக்கத்துல இருக்க ஐயனாரு கோவிலுக்குக் கூட்டிப் போனாங்க… அங்க குதிரச் செல பெரிசா நின்னுச்சு… அதுக்குப் பக்கத்துல ஒரு பன நாலு கொண்டக் கட்டோட நின்னுச்சு… ஒரு பேய் மழயில குதிரயோட அதுவும் வுழுந்து நொறுங்கிப் போச்சு… குதிர புதுசா செஞ்சிட்டாக… பன நின்ன எடத்துல இப்ப வேம்பு நிக்கிது.

கொல்லக்காட்டுல நின்ன பனயெல்லாம் இருந்த எடந் தெரியாமப் போச்சு… இப்ப வேலிக்கருவதான் மண்டிக் கெடக்கு… அதேமாரி பெரிய பனங்காட்டுல இப்ப இருவது மரம் நிக்கிறதே பெரிசு… இப்ப யாரும் மொங்கு வெட்டுறதுமில்ல பனம்பழம் பொறக்கப் போறதுமில்ல… வெட்டுறதுமில்ல… அதுவாக் காச்சி சும்மாதான் கொட்டிக் கெடக்கு… இப்ப இருக்க மரங்க அதிகமாக் காக்கிறதுமில்ல… காக்கிற மரமெல்லாம் எப்பவோ காலாவதி ஆகிப்போச்சு.

‘ம்… சாமியய்யாவோட மரத்த வெட்டுறாகன்னு செதம்பரம் சொன்னதும் என்னென்னமோ நெனப்பு வந்திருச்சு… போ… பொழப்புத் தழப்பப் பாக்காம வெட்டியா ஒக்காந்திருந்தாத்தான் வாழும்..’ என்றபடி முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தேன்.

“எங்குட்டுப் போறிய… ஒருதா சாப்புட்டுப் போங்க…” வீட்டுக்குள் இருந்து மருமகளின் குரல் கேட்டது.

“இந்தா வாரேந்தா… பால் மாடு மெலெலாம் சாணி அப்பிக்கிட்டு நிக்கிது… ரெண்டு வாளித்தண்ணி எறச்சி ஊத்தி கழுவிட்டு, அப்புடியே குளிச்சிட்டு வாரேந்தா…”

“ம்… செரி மாமா… அப்புடியே கன்னுக்குட்டியவும் கழுவியாந்துருங்க… இந்த சோலப்பய எங்கிட்டுப் போனான்… அது இருந்தா ஒங்களுக்கு ஒதவியாயிருக்குமுல்ல்…”

“நா பாத்துக்கிறேந்த்தா… அவன எதுக்குத் தேடுற…” என்றபடி மாட்டயும் கன்னயும் அவுத்துக்கிட்டு, ஒரு வாலியவும் மோந்து ஊத்திக் கழுவ ஒரு சிலுவருச் சட்டியவும் எடுத்துக்கிட்டு, கெடந்த வக்கல்ல கொஞ்சத் எடுத்துக்கிட்டு  அடிபயிப்ப நோக்கிப் போனேன்…

எதுத்தாப்புல செல்லப்ப மவன் சுந்தரம் வந்தான்.

“என்னப்பா… ஒத்தப்பனய வித்துட்டியாளாக்கும்…?”

“ஆமா சித்தப்பா… அதான் நச்சத்திரம் எரிஞ்சி விழுந்து பட்டுப்போச்சுல்ல…”

“ம்… பாத்தேன்… வெல போயிருக்காதே…”

“அப்பாதான் கொடுத்தாக… மரக்கட மாரிமுத்து மாமாதான் வாங்கியிருக்காக… எம்புட்டுன்னு தெரியல… பனங்காட்டுல மேலச்செய்யி வரப்புல நிக்கிற ரெண்டயும் சேத்துக் கொடுத்துட்டாக…”

“அட அதயுமா… அது நல்லாத்தானே நின்னுச்சு… அத எதுக்குக் கொடுத்தான்…”

“இருந்து என்னத்துக்கு ஆவுது… நல்லாயிருக்கும் போதே கொடுத்தா வெல கொஞ்சம் கூடப்போகுமுல்ல அதான்… ஆமா உங்க மரங்கூட இடி விழுந்து பட்டுபோயி நிக்கிதே… கொண்டக்கட்டு விழுகுறதுக்குள்ள கொடுத்துடலாமுல்ல…” என்றான்.

“கொடுக்கணும்… உங்க பெரிய மாமா கேட்டிருக்காரு… அதான் விக்கல….”

“செரி சித்தப்பா… வரவா…” என்றவன் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் நகர்ந்தான்.

‘பனயிருந்து என்னத்துக்கு ஆவுதுன்னு சொல்ற நெலமயாயிப் போச்சு… ம்… என்ன சொல்ல’ன்னு நெனச்சப்போ எனக்குப் பெருமூச்சுத்தான் மிச்சமானது.

“என்னய்யா செல்லப்பய்யாவோட மரத்த வெட்டுறாகளாக்கும்…” கேட்டபடி எதிரே இருந்த தட்டில் இட்லியை வைத்துச் சாம்பாரை ஊற்றினாள் பேத்தி சுகப்பிரியா.

“ம்… பட்ட மரத்தக் கொடுத்தாலும் பரவால்ல… நல்லா நிக்கிர மரத்தயும் சேத்துல்ல கொடுத்திருக்கான்…” ஆதங்கத்தச் சொன்னேன்.

“ஆமா… பனமரம் நின்னு என்னத்துக்கு ஆவுது…”

“உனக்கென்ன தெரியும்… பனயப் பத்தி… பனம்பழம் சுட்டுத் திங்கத் தெரியுமா… மொங்கு வெட்டி அப்புடியே உறிஞ்சிக் குடிக்கத் தெரியுமா… கிழங்குப் பண்ண போடத் தெரியுமா… கெழங்கு அவிக்கத் தெரியுமா… இல்ல சுட்டுத்தான் திங்கத் தெரியுமா… இன்னக்கி மொங்கு நாப்பது ரூவாக்கி அஞ்சுன்னு எண்ணிக்கயில வாங்கித் திங்கிறிய… பொங்கலுக்கு இருவது ரூவாக்கி அஞ்சின்னு கெழங்கு வாங்கி சாமி கும்பிட்டு அதத் திங்காம காயப் போட்டு தூக்கி வீசுறிய… பன மண்ணரிப்பத் தடுக்கும்… அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போவுது… டிவியக் கட்டி அழத்தான தெரியுது… “

இதுக்கு மேல் நின்னா பேசியே கொன்னுருவாருன்னு அவ சத்தமில்லாமப் பொயிட்டா.

மாட்டக் கொல்லக்காட்டுல கொண்டேயி விட்டுட்டு வரலாம்ன்னு போகும் போது ஒத்தப்பன வெட்டுறதப் பாத்தேன்…. பாதிப்பனயில கயிறு போட்டு ரெண்டு பேரு இழுத்துப் பிடிச்சிருந்தாக ஒராளு தூருல கோடாரியால வெட்டிக்கிட்டு இருந்தான்… சுத்தி வெட்டியிருக்க, மரம் ஆட்டம் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு…

‘ம்… ஒத்தப்பன இருந்த எடத்த இனி மறந்துருவோம்… ம்… மரமட்டுமில்ல மனுசனும் செத்துட்டா யாரு நெனக்கப் போறா… நானே செத்தாலும் எம்புட்டு நாளக்கி நெனக்கப் போறாக… எம்புட்டு மரம்… எத்தன பன… எல்லாம் போன எடந் தெரியல… யாரு ஞாபகத்துல வச்சிருக்கா… எனக்கே சிலது ஞாபகமில்ல…’ மனசுக்குள் பேசியபடி நடக்க ஆரம்பித்தேன்.

மாட்ட அவுத்து விடும்போது ‘சடச்சட’ன்னு சத்தமும் அதத் தொடந்து ‘தொப்’புன்னு ஒரு சத்தமும் கேட்டுச்சு.  ஒத்தப்பன செத்துருச்சுடான்னு சத்தமாச் சொல்லிக்கிட்டேன்.

திரும்பி வரும் போது ஒத்தப்பன நின்ன இடம் வெறுமையாய்…

வேப்பஞ் செய்யிக்குள்ள ஒத்தப்பனயோட தலப்பக்கம் சிதறிப் போயிக் கிடந்தது வேப்பமரத்து உச்சியிலயிருந்து தவறி விழுந்து செத்துப்போன சாமியய்யாவோட தல போல….

பாக்கச் சகிக்காம முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

***

பரிவை சே குமார், தற்பொழுது அபுதாபியில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு எதிர்சேவை அண்மையில் வெளியாகி உள்ளது

Previous article
Next article
RELATED ARTICLES

11 COMMENTS

  1. வாழ்வியல் வழக்கம் போல் பால்ய கால கிராமம் மனக் கண் முன். அபாரம்

  2. “நிலத்தில் பனைகளின் வாழ்வு போதமழிந்து போனக் காலம் எவ்வளவு விரைந்து, ஒரு அலையைப்போல எழுந்து அடங்கிவிட்டது என்பதை இப்போதும் நிமிசத்தில் மனம் நினைத்துக் கொள்கிறது.

    ஊருக்கென்று ஒரு சத்தம் கொடுத்தால் குருவிகளுக்கும் கொக்கு, நாரைகளுக்கும் மீன்கொத்திக்கும் அப்பாற்பட்டு பனைகளின் சடசடப்புதான் அதிகம் மனதில் எழுந்தடங்குகிறது.

    பரிவை சே குமார் இக்கதைக்குள் பயன்படுத்திய வழக்கும், வளப்பமடிக்கும் சொல்மொழியும், நான் நன்கு அறிமுகப்பட்ட திணை மாந்தனின் சாடையோடிருக்கிறது.

    நிகழ்கணத்திலிருந்து பழசில் தோய்ந்துபோகும் வார்ப்புள்ள கதை. நுணுக்கமான சில நம்பகங்கள், பழசுகளின் சொவை இரண்டும், நட்சத்திரம் விழுந்தால் பூவை நினைக்கச் சொல்வதிலும், கருப்பட்டி ஏலக்காய் தட்டிப்போட்டு பனம்பழம் அவித்துத் தின்பதிலும் எட்டிப்பார்க்கின்றன”

    வாழ்த்துகள். நித்யா குமார்

    -காத்திக் புகழேந்தி
    23-07-2020

  3. குமார் அருமையா எழுதியிருக்கீறீர்கள். பல கிராமத்து விஷயங்கள், நம்பிக்கைகள் என்று கலந்து கட்டி நினைவுகளுடனான கதை. அருமை

    துளசிதரன்

    கீதா

  4. கிராம வாழ்வு பனையோடு பின்னிப் பினைந்தது.நேர்த்தியான நடையில் விவரணை எவ்வளவு தகவல்கள்! கண்ணில் காட்சியாய் விரிகிறது கதை. இளம் பனைமட்டையில் விசிரி செய்தது. பனை ஒலை காற்றாடி, கிலுகிலுப்பை செய்தது, தடுக்கு பின்னியது எல்லாம் நினைவுக்கு வந்தது. நல்ல எழுத்தாற்றல் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துகள் குமார்.

  5. மிகவும் அருமை குமார் சகோ. வட்டார வழக்கு என் சொந்த ஊரையும் உறவுகளையும் நினைவுபடுத்துகிறது. பன ஓல வாசம் வந்துருச்சே உங்க கதையப் படிச்சி!
    பனைகள் தொலைந்தது வேதனை தான்..ஆமாம், நமக்கென்ன தெரியும்,,தொலச்சுட்டு நிக்குறோம்.
    நீங்க முகநூலில் பகிர்ந்த அன்றே வாசித்தேன், கருத்திட முடியவில்லை. ஆனால் என்னைவிட்டகலாமல் கதை மீண்டும் அழைத்து வந்தது. வாழ்த்துகள் சகோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular