Monday, December 9, 2024
Homeபுனைவுசிறுகதைபனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

சைகள் குறைந்திருந்த சர்ச் வீதியில் ஒரு பூனைக்காக நான் காத்திருந்தேன்.  அப்பூனை ஒரு பிரித்தானியர் கால பங்களாவின் இடப்பக்கத்தில், மூட முடியாதபடி உடைந்திருக்கும் மரக்கதவுகளை உடைய சாளரத்தின் நூற்றாண்டு கால இருளிலிருந்து வெளியே குதித்து, அவசரமேயில்லாமல் நடந்து சுற்றுச்சுவரில் துருப்பிடித்து ஒட்டிக் கொண்டிருக்கும் வெளிப்புறக் கதவருகே வந்து நிற்கும்.  அதன் முகத்தில் எந்தச் சலனத்தையும் எதிர்பார்க்க முடியாது.  இந்த உலகில் அதன் தேவைகளென்று எதுவுமேயில்லை என்பதைப் போல அசைவின்றி நிற்கும்.  பூனையின் நிதானத்திற்கு பழகிவிட்ட நான், என் கையிலிருக்கும் அலுமினிய உறையைப் பிரித்து கோழி இறைச்சித் துண்டுகளை அதனருகே வீசுவேன்.  அந்தப் பூனைக்கு ஒரு வழக்கமிருக்கிறது.  இறைச்சித் துண்டுகளைச் சுற்றி நடந்து சிதறிக் கிடக்கும் துண்டுகளில் முதலில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தின்று முடித்ததும் என்னைப் பார்க்கும்.  அப்போது நான் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும்.  மிகத் தாமதமாகத்தான் பூனையின் இந்த வழக்கத்தை கவனித்தேன் (எவையெல்லாம் நம்முன்னே தொடர்ந்து நிகழ்கின்றனவோ அவற்றில் நமது கவனம் குவிவதற்கு வெகு காலமாகிறது).  இன்று அந்தப் பூனையைக் காணவில்லை.  சர்ச் வீதியிலிருக்கும் எனது ஒரே பிணைப்பு அதுதான்.  அதை விட்டால் கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் நான் செல்லும் “பனை” எனப் பெயரிடப்பட்டிருக்கும் ஒரு மதுபான விடுதி.  அதற்கு எதிரே தான் வீதியின் மறுகரையில் இருளிலிருந்து தோன்றும் பூனை வசிக்கும் பங்களா இருக்கிறது.  வெகு அரிதாகத்தான் அதில் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.  அல்லது அதைப் போன்ற சிதிலமடைந்து கொண்டிருக்கும் இடத்தில் வசிக்கும் துயரத்தை மனிதர்கள் யாருக்கும் வழங்க விரும்பாத நான் அந்தப் பூனை மட்டுமே அங்கே வசிக்கிறதென்று நம்ப விரும்புகிறேன்.  நாயோ, பூனையோ சிதிலங்களின் மீது கால்வைத்து நடப்பதைப் பார்ப்பதே துயரத்தை அதிகரித்து விடுகிறது.

       கையிலிருக்கும் இறைச்சித் துண்டுகளை உறையோடு குப்பைத் தொட்டியில் வீசினேன். குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் மூச்சடைக்கச் செய்யும் வீச்சம். எதிர் நடைபாதையில் மோமோஸ் வேகவைக்கப்படும் தள்ளுவண்டியிலிருந்து நீராவி எழுந்து, வளைந்திருக்கும் விளக்குக் கம்பங்களின் தலையிலிருந்து பொங்கும் ஒளியில் கரைவதைப் பார்த்தேன்.  மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகேயிருந்த தள்ளுவண்டியைச் சுற்றி சில இளம்பெண்கள் நின்றிருந்தனர்.  அவர்களுடைய ஆடைகள் முழுக்க மேற்கத்திய பாணியிலிருந்தன.  பாக்ஸர் ஷார்ட்ஸ் அளவிலான கீழாடை அணிந்த பெண்கள் இப்போது அதிகமாகியிருக்கிறார்கள் (நான் இந்த வீதியில் நுழைந்த நாட்களில் வெளிர் நீலநிற ஜீன்ஸ் கால்சட்டையும், வெள்ளை அல்லது கருப்பு நிற சட்டையுமே இளம்பெண்களின் உடையணியும் பாணியாக இருந்தது). யாராவது ஒருவர் கால மாற்றத்தை உற்றுக் கவனிக்க விரும்பினால் அவர்கள் பெண்களின் உடைகளைத் தான் முதலில் கவனிக்க வேண்டும். அவர்களது வெண்ணிறக் கால்களின் பச்சை நரம்புகள் உடலைச் சுற்றிப் படர்ந்து விளக்குக் கம்பங்கள், கட்டிடங்கள், மரங்களென சகல உயரங்களையுமே மூடுமென்ற எனது உறக்கம் வராத இரவுநேரக் கற்பனையை ஒவ்வொரு முறையும் வெண்ணிறக் கால்களின் பச்சை நரம்புகளைப் பார்க்கும் போது நினைப்பேன்.  பச்சை நரம்புகள் என்னுடைய போர்வைக்குள் நுழைந்து சர்ச் வீதியின் மணங்களோடு என் மீது இலை பரப்பி மலர் விரிக்கும் இரவுகளில் பெண்ணுடலின் பிரத்யேகமான தசைகள் எனது கண்களின் மீது அசையும்.

       மீண்டும் மதுபான விடுதிக்குத் திரும்பி குளிர்ச்சியாக ஒரு பியரை அருந்த விரும்பினேன்.  ஆனால் இன்று வராமல் போன பூனையைப் பார்க்கும் வரை நேரம் கடத்தவே அங்கே செல்ல விரும்பினேன் என்று உணர்ந்தேன்.  எத்திசையில் செல்வதென்று குழம்பினேன் (பிரிகேட் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் எனது காருக்குச் சென்றால் வேறெங்கும் போகாமல் ஃபிரேஸர் டவுனிலிருக்கும் எனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்குத் திரும்புவேன்).  பர்ட்டன் சென்டரின் உறுதியான தோற்றமும், வீதியை நிறைத்திருக்கும் மரங்களின் நிழலும் எனது குழப்பத்தை மேலும் அதிகரித்தன.  இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனமொன்று அதன் ஆசனவாயிலிருந்து வரும் உறுமலோடு வேகமாகச் சென்றது.  எதிர்காலம் என்ற ஒன்றில் நான் நுழைந்து வழி தெரியாமல் நிற்பதைப் போல உணர்ந்தேன்.  நேரம் கடந்து விட்டதால் சர்ச் வீதியிலிருக்கும் புத்தகக் கடைகளில் ஏதாவது ஒன்றிற்கு செல்லவும் முடியாது.  மெட்ரோ இரயில் நிலையத்தின் சுவரில் அடர்த்தியான நிறத்தைப் பின்னணியாகக் கொண்டு வரையப்பட்டிருக்கும் சிறுவர்களின் முகங்களைப் பார்த்தேன்.  இரயில் நிலையத்தின் படிக்கட்டுகள் சர்ச் வீதியில் இறங்கிய நாட்களுக்கு முன்பிருந்தே இங்கே வருகிறேன் என்பதால் இந்த ஓவியம் வெறும் நிறமாகத் துவங்கி உருவங்களாக மாறி முற்றுப் பெற்றது வரை நான் பார்த்திருக்கிறேன்.  இனி அவை வளர முடியாது.  வளர்ச்சியென்ற ஒன்றை அறிந்தேயிராத ஓவியச் சிறுவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படவும் மாட்டார்கள்.

  என்னைப் போலவே எல்லோரும் சர்ச் வீதிக்கு வருகிறார்கள்.
  நோக்கமுள்ளவர்கள்
  வேடிக்கை பார்ப்பவர்கள்
  ஊர்சுற்றிகள்
  சுற்றுலா வந்தவர்கள்
  இப்படியெல்லாம் இங்கே விஷயங்கள் இருக்கின்றனவென்று பார்க்க வந்தவர்கள்
  மேலும் பலரும்

இப்போது தெருவில் யாரையும் காணவில்லை.  அங்குமிங்கும் நின்று கொண்டிருக்கும் ஒரு சிலரோ பொருட்படுத்த தக்க எண்ணிக்கையில் இல்லையென்பதால் அவர்கள் அங்கே இல்லை என்றே எடுத்துக் கொள்ளலாம்.  கண்களை மூடிக்கொண்டு பார்வையை தலை நரைத்த காலங்களில் நிலைநிறுத்தும் பழைய சோசலிஸ்ட்டுகளும் இந்தியா காஃபி ஹவுஸ் வாசலிலிருந்து கலைந்து சென்றிருந்தார்கள்.  மெட்ரோ இரயில் நிலையத்தில் ஒரு பெண் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.      

       “பனை” மதுபான விடுதியில்தான் நான் ஜாஸ் இசை கேட்டு பழகினேன்.  எனது திருமணத்திற்கு முன்பு சில நண்பர்களோடு சர்ச் வீதியின் ஒருமுனைக்கு அருகேயிருக்கும் ஹார்ட் ராக் பப்பிற்குச் சிலமுறை சென்றிருக்கிறேன்.  முன்பதிவு செய்தவர்கள் வார இறுதியில் அங்கே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் எனது நண்பனொருவன் இருக்கைகளை முன்பதிவு செய்திருந்தான்.  அன்றைய தினம் நேரடியாக ஒரு ராக் இசைக்குழு சில பாடல்களைப் பாடியதைக் கேட்டோம் (லீட் கிதாருக்கும் பேஸ் கிதாருக்கும் எனக்கு அப்போது வேறுபாடு தெரியாது).  என்னை விடவும் குறைவான வயதுடையவர்களே சுற்றிலும் குழுமியிருந்தனர் (சர்ச் வீதியிலிருக்கும் மதுபான விடுதிகளில் குடிக்க வரும் பெண்களின் சராசரி வயது ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது).  குடித்திருப்பதால் மினுமினுப்படைந்திருக்கும் இளம்பெண்களின் ஈரப்பதமிக்க உதடுகளின் நிறம் அடர்ந்திருப்பதை நெருக்கத்தில் பார்க்கும் போதெல்லாம் கால்சட்டைப் பாக்கெட்டுகளில் ஒளிந்திருக்கும் எனது விரல்கள் லேசாகத் துடித்து விழித்தெழுவதை உணர்வேன்.

ஆனால் சமீப நாட்களாக ஜாஸ் இசையிலிருந்து பாப் பாடல்களுக்கு “பனை” மதுபான விடுதியின் இசை மாறியிருக்கிறது.  மதுபான விடுதியின் பணியாளர்களும் கன்னடர்களாக இருந்து இப்போது முழுக்க இந்தி பேசுகின்றவர்களாக நிறைந்திருக்கிறார்கள்.  கட்டணப் பணத்தை வாங்குபவன் மட்டும் ஒரு கன்னடன்.  அவன் பெயர் இலட்சுமணன்.  அவனும் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகத்தான் இங்கே இருக்கிறான்.  என்னைப் பார்த்ததும் “நம்ஸ்காரா சார், நிம்ம டேபிள் ரெடியிதே” என்பான்.  அவன் எனக்காகவேயென ஒரு மேஜையைத் தயார் செய்து வைத்திருக்காவிட்டாலும் எனக்கென ஒரு மேஜை எப்போதுமே கிடைத்துவிடக் கூடிய அளவிற்கே அங்கே கூட்டம் வரும்.  கடந்த மாதம் என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது அலுவலக நண்பர்கள் சிலருக்கு இதே மதுபான விடுதியில் ஒரு பார்ட்டி அளித்தேன்.  அதற்கான கட்டணத் தொகையைப் பார்த்த லட்சுமணனுக்கு அளவுக்கதிகமான புன்சிரிப்பு.  இப்போதும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அது குறையாமல் இருக்கிறது.

இலட்சுமணன் தான் என்னை உலுக்கினான்.  யாருக்காக நான் அங்கே காத்திருக்கிறேன் என்று கேட்டான்.  நான் வெறுமனே தோள்களைக் குலுக்கினேன்.  அவன் ஒரு வாடிக்கையாளனோடு வந்திருந்தான்.  அட்டைகளைத் தேய்க்கும் இயந்திரம் செயல்படவில்லை என்பதால் அவனோடு பணமெடுக்கும் இயந்திரம் வரை செல்வதாகச் சொன்னான்.  நான் அவனிடம் திரும்பவும் மதுபான விடுதிக்கே செல்வதாகச் சொன்னேன்.

அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரும் அவருக்கே எதிரே ஒரு சிறுவனும் மட்டுமே விடுதியில் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களைத் தவிர எல்லோரும் போய்விட்டிருந்தார்கள்.  கூட்டம் இவ்வளவு சீக்கிரமாகக் கலைந்திருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  வழக்கமாக நான் அமரும் மூலையிலிருக்கும் நாற்காலியில் அமர்ந்தேன்.  நாற்காலியின் மெத்தையில் நான் விட்டுச் சென்றிருந்த சூடு இன்னும் குறைந்திருக்கவில்லை.  புதிதாக வந்திருந்த ஏல் பியர் குடுவையொன்றை கொண்டு வரச்சொன்னேன்.  சிறிது நேரம் முன்புதான் ஒரு குடுவை நிறைய அருந்தியிருந்தேன்.  விடுதிச்சிப்பந்தி மதுபானக் குடுவையை எனது மேஜையில் வைக்கும் போது வீதியின் மட்டத்திற்கு இணையாக இருக்கும் விடுதியின் தரையில் கால்களைத் தேய்த்துக் கொண்டு கசங்கிய டெனிம் மேற்சட்டையும், அழுக்கேறியிருந்த கால்சட்டையும் அணிந்திருந்த, தாடியில் முகம் புதைந்திருக்கும் ஒருவன் விடுதியின் உள்ளே நுழைந்தான்.  அவனைப் பார்த்ததும் அவன் என்னைத்தான் தேடி வந்திருக்க வேண்டுமென்று உணர்ந்தேன்.  அரிதாகத்தான் என்னுடைய உள்ளுணர்வு சரியாகச் செயல்படும் என்று எனக்கு நன்றாகவே தெரியுமென்பதால் பலரும் சொல்வதற்கு மாறாக நான் அதற்கு எதிரான முடிவுகளையே எடுப்பேன்.  ஆனால் இம்முறை அது சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறது.

அவன் நேராக எனக்கு எதிரே அமர்ந்தான்.  அவனுக்கு சுமார் ஐம்பது வயதிருக்கலாம் என்று அனுமானித்தேன்.  ஐநூறாகக் கூட இருக்கலாம்.  வாரப்படாத அவனது நரைமுடியும், சவரம் செய்திராத முகத்தின் சுருக்கங்களும் அவன் பிறப்பதற்காகக் காத்திருந்து அவன் பிறந்த உடனே அவனோடு சேர்ந்திருக்கக் கூடும்.  அவை அவனை விடவும் மூப்படைந்திருந்தன.  இதுவரை நான் பார்த்தேயிராத அவன் என்னிடம் கேட்டான் “டென்சிங் நார்கே ஷெர்பாவை நினைவிருக்கிறதா..?”

“ எனக்கு அவனை நினைவிருக்கிறது. ஆனால் உனக்கு எப்படி அவனைத் தெரியும்..? ”

“ எனக்கு அவனையும் தெரியும், உன்னையும் தெரியும்.”

நான் சற்றே பயந்தேன்.  பார்த்தேயிராத யாரோ ஒருவன் வம்பிழுப்பவனைப் போன்ற தோரணையில் எதிரே வந்து டென்சிங் ஷெர்பாவை நினைவிருக்கிறதா என்று மட்டும் கேட்டிருந்தால் நான் பயந்திருக்க மாட்டேன்.  அவனை சர்ச் வீதிக்கு அதிலும் குறிப்பாக இந்த மதுபான விடுதியை ஒட்டியிருக்கும் புத்தகக்கடைக்கு வருகின்றவர்களில் ஒரு சிலருக்காவது நினைவிருக்க  வாய்ப்பிருக்கிறது.  நானோ உடல்களேயில்லாத தெருவில் நுழைந்து கடக்கும் காற்றைப் போல வந்து போகிறேன்.  புத்தகக்கடை, மதுபான விடுதி ஊழியர்களைத் தவிர என்னை யாரும் தெரிந்திருக்க முடியாது.

“ எனக்கு ஒரு பியர் வாங்கிக் கொடு.  நாம் அப்போதுதான் செளகர்யமாகப் பேச முடியும் ”.  அவனுக்கும் ஓர் ஏல் பியர் குடுவையை ஆர்டர் செய்தேன்.  முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே விடுதிச் சிப்பந்தி அவன் முன்னே பியர் குடுவையை வைத்தான்.  அவனுடைய தோற்றமும், உடையும் அவனுக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.

வாயெடுக்காமல் பாதிக் குடுவையை காலி செய்தபின் ஆசுவாசம் அடைந்தவனாகக் கேட்டான்.

“ என்னை எங்காவது பார்த்திருக்கிறாயா ”.

என்னுடைய அலுவலகத்தின் அருகிலோ, அன்றாடம் பணிக்குச் சென்று திரும்பும் வழியிலோ நான் கவனித்துப் பார்த்திருந்த மனநிலை பிறழ்ந்தவர்களின் முகங்களை நினைவு கூர்ந்தேன்.  ஒன்றன் பின் ஒன்றாக நினைவுச் சட்டகத்தில் மாறிய முகங்களில் இவன் சாயலில் கூட யாரையும் பார்த்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

“ இல்லை.  ஆனால் நீ என்னைப் பார்த்திருக்கிறாயா..? ”

“ பத்தாண்டுகளாக.  உன்னை மட்டுமில்லை சர்ச் வீதிக்கு வரும் எல்லோரையும் பார்த்திருக்கிறேன்.  என்னுடைய வேலையே வேடிக்கை பார்ப்பதுதான்.  மனித முகங்கள் எதையெல்லாம் சுமந்து இந்த வீதியில் நுழைந்து வெளியேறுகின்றன என்று அவதானிப்பது ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு.  இளைஞர்களின் முகத்தில் காலச்சேகரமும் அதனால் உண்டாகும் அலைக்கழிப்பும் இல்லை.  வாழ்வின் அத்தனை களைப்பும் ஏறி அமர்ந்திருக்கும் வயதானவர்களின் முகங்களைப் பார்.  அவர்கள் பயந்த கணங்களின் பீதியும், மகிழ்ச்சியான கணங்களின் திளைப்பும், ஒத்துழைக்காத உடலின் தளர்ச்சியால் உண்டாகும் அமைதியும் ஒன்றாகக் கலந்து எப்போதுமே ஒரு மாலைநேரம் அவர்களது முகங்களில் குடிகொண்டிருக்கிறது.  முதுகில் சுமந்து வந்திருக்கும் கிதாரை உறை பிரித்து அவர்களது போக்கில் கட்டிடங்களின் வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து ஆங்கிலப் பாடல்களை வாசிக்கும், அவர்களைச் சுற்றி நின்று தாங்கள் விரும்பிய சில பாடல்களை வாசிக்கச் சொல்லும் கூட்டமும்,  ஓரினச் சேர்க்கை, வீடுகளில் பணிபுரியும் பெண்களுக்கான அடிப்படை ஊதிய நிர்ணயம், ஊழலுக்கு எதிராக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெரிய அங்காடிகளில் பொருட்களை வாங்குவதை விடுத்து, வீடுகளுக்கு அருகேயிருக்கும் கடைகளில், கூடைக்காரிகளிடத்தில், தள்ளுவண்டிக்காரர்களிடம் மளிகைச் சாமான்களையும், காய்கறிகளையும் வாங்கச் சொல்லும் இளைஞர்களை நாம் பார்க்கிறோம்.  இந்த வீதியைத் தாண்டியதும் அவர்களது அடையாளங்களே மாறிவிடும்.  அவர்களது உலகில் அத்துமீறி நுழைந்து விட்டவர்களைப் போல ஒதுங்கி நடக்கும் வயதானவர்களைப் பார். ஒரே உலகத்தின் வெவ்வேறு காலங்கள் ஒன்று கலக்காமல் விலகிச் செல்வதைப் பார்ப்பதே வேடிக்கையானது.  நாம் எல்லோரும் ஒரு நேர்கோட்டில் வசிப்பதாக நம்புகிறோம்.  ஆனால்  நாம் ஒரு வட்டத்தின் மீது நகர்ந்து கொண்டிருக்கிறோம்.  நான் சொல்வது சரிதானே? ”.

நான் பொறுமையிழந்தேன்.

“ பொத்தம் பொதுவாக இப்படி எல்லோராலும் பேசிவிட முடியும்.  நானும் கூடச் சொல்வேன் இங்கே வருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லோரையும் பற்றி. ”

“ டென்சிங் நார்கே விடைபெற்றுச் செல்லும்போது நீ அவனிடம் கொடுத்தது மூன்றாயிரம் ரூபாய்.  இப்போது என்னை நம்புவதைத் தவிர உனக்கு வேறு வாய்ப்பே இல்லை.”

எனது பயம் அதிகமானது.  என்னுடைய பியர் குடுவையிலிருந்து இன்னும் ஒரு வாய்கூட அருந்தியிருக்கவில்லை.  இலட்சுமணன் திரும்பி வந்திருந்தான்.  அவன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.  கூண்டிலிருப்பதைப் போல உணர்ந்தேன்.  இலட்சுமணனிடமிருந்தோ எனக்கு எதிரே அமர்ந்திருப்பவனிடமிருந்தோ, மதுபான விடுதியிலிருந்தோ வெளியேற முடியாதென்பதைப் போல.  பிரிகேட் சாலையிலிருந்து துவங்கி கோஷி உணவகத்தின் முகத்தில் முடியும் சர்ச் வீதியின் நடுப்பகுதியில் நகர முடியாமல் அமர்ந்திருந்தேன்.  வீதியின் இரண்டு முனைகளும் தொலைதூரத்திலிருந்தன.

அவன் அமைதியாக மீதமிருக்கும் பியரை அருந்திக் கொண்டிருந்தான்.

                           II

டென்சிங், திபெத்திலிருந்து நேபாளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களான ஷெர்பா  இனத்தைச் சேர்ந்தவன்.  எவரெஸ்ட் சிகரத்திலேறும் மலையேற்றக்காரர்களுக்கு உதவியாளர்களாக, வழிகாட்டிகளாக, சுமைதூக்கிகளாகவும் இருப்பவர்கள்.  ஆண்டுக்கு இரண்டு முறையாவது எவரெஸ்ட்டில் ஏறிவிடக் கூடிய அவர்கள்தான் பேஸ் கேம்ப்பிலிருந்து அலுமினிய ஏணிகளை, கயிற்றை, ஆக்ஸிஜன் பாட்டில்களை, கூடாரம் அமைப்பதற்கான சாமான்களைச் சுமப்பதோடு, ஆபத்தான இடங்களைத் தெரிந்து வைத்து அவற்றைக் கடப்பதற்கான வழிமுறைகளைச் சொல்பவர்கள்.

       டென்சிங் நார்கே ஷெர்பாவின் நினைவாக அவனுக்கு அப்பெயரை அவனுடைய பெற்றோர் வைத்திருந்தாலும் பிறக்கும் போதே ஒரு கால் வளைந்திருந்ததால் அவனால் மலையேற்றக்காரர்களுக்கு உதவி செய்யும் பணியை மேற்கொள்ள முடியவில்லை.  ஆறு நபர்களுடைய குடும்பத்தில் அவனுடைய அண்ணனான பசாங் ஷெர்பா மட்டுமே மலையேறும் வெள்ளைக்காரர்களுக்கு உதவி செய்யும் வேலைக்குச் சென்றவன்.  அவனும் அவனுடைய அண்ணன் மட்டுமே ஆண்கள்.  அவனுடைய அம்மாவையும் சேர்த்து மீதி நான்கு பேரும் பெண்கள்.  ஹிமெக்ஸ் கம்பெனிக்காரர்கள் பசாங் ஷெர்பாவை பணிக்கு அமர்த்தியிருந்ததால் நிலையான வருமானம் போல சம்பாத்தியம் கிடைத்தது.  கும்பு பனிப்பொழிவில் ஆபத்தான அளவிற்குத் திரண்டிருந்த பனித்திரட்சியின் அடியே மெதுவாக நடந்து அதனைக் கடந்து செல்பவர்கள் எந்நேரமும் விபத்தில் சிக்கலாம் என்பதால் இரண்டாயிரத்து பனிரெண்டாம் வருடம் கம்பெனிக்காரர்கள் மலையேற்றத்தை ஏற்பாடு செய்வதை நிறுத்தி விட்டார்கள்.  பின்பு சிறுசிறு நிறுவனங்களுக்காகவும், தனிப்பட்ட முறையில் மலையேற வருபவர்களுக்காகவும் பசாங் பணியாற்றினான்.  இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டில் கும்பு பனிப்பொழிவில் ஹிமெக்ஸ் கம்பெனிக்காரர்கள் எதைக்கண்டு மலையேற்றத்தை நிறுத்தினார்களோ அதே பனித்திரட்சி சரிந்து பதினேழு நேபாளிகள் இறந்தனர்.  அவர்களில் நான்கு வழிகாட்டிகளின் உடல்கள் கிடைக்கவில்லை.  பசாங் அவர்களில் ஒருவன்.

        “ என்னுடைய சகோதரன் வெள்ளைப் பனியின் அடியே உடல் அழுகாமல் உறங்கிக் கொண்டிருப்பான்.  வெண்ணிறத்தைத் தவிர வேறொரு நிறத்தை அவனால் பார்க்க முடியாது. ”  என்னுடைய வீட்டிற்கு டென்சிங் ஷெர்பா வந்திருந்த நாளில் அவனுடைய அண்ணனைக் குறித்து பேசும்போது சொன்னான்.

அவனுடைய மரணத்திற்குப் பிறகு டென்சிங்கின் குடும்பத்தில் வருமானம் குறைந்தது.  டென்சிங்கிற்கு அவனுடைய நண்பர்களில் சிலரைப் போல வெளிநாடுகளுக்கு டாக்ஸி ஓட்டுவதற்குச் செல்ல ஆசைதான் என்றாலும், அவனுடைய வளைந்த காலால் கார் ஓட்டுவது சிரமம் என்பதால் அவன் காரோட்டவும் கற்றுக் கொள்ளவில்லை.  சம்பாத்தியத்திற்கு வழிதேடி பெங்களூர் வந்தவனுக்கு நேபாளிகளில் யாரோ ஒருவன் சர்ச் வீதியிலிருக்கும் புத்தகக் கடையில் வாகனம் நிறுத்துமிடக் காவலாளி வேலையை வாங்கித் தந்தான்.  புத்தகக் கடை நிர்வாகத்தினர் அவனை கடையின் கீழே நிலத்தடித் தளத்தில் தங்குவதற்கும் அனுமதித்தார்கள்.

       நான் அங்கேதான் அவனைப் பார்த்தேன்.  நிலத்தடித் தளத்திற்கு நுழையும் சரிவான வாயிலில் நின்று, இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்களை ஒழுங்குபடுத்தும் அவனுக்கு அருகேயிருந்த தொட்டிலில் அவனது குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.  நீளமான தலைமுடியில் ஒருபகுதியை முடிந்து உச்சியில் கொண்டை வைத்திருந்தான்.  நிலத்தடித் தளத்தில் எனது இருசக்கர வாகனத்தை (அந்நாட்களில் நான் கார் வாங்கியிருக்கவில்லை) நிறுத்தச் செல்லும்போது தான் கவனித்தேன், காற்றும் வெளிச்சமும் புகாத ஒரு மூலையில் கார்ட்போர்ட் தடுப்புகளுக்குப் பின்னே புதிதாக ஒரு வசிப்பிடம் உருவாகியிருப்பதை.  கம்பளி ஆடை அணிந்திருந்த ஒரு வயதான பெண் (அவனுடைய அம்மா) கதவிற்குப் பதிலாகத் தொங்கிக் கொண்டிருந்த திரைக்கு அருகே உட்கார்ந்திருந்தாள்.  தடுப்பைச் சுற்றிலும் உடைந்த நாற்காலிகளும், பயனற்ற பொருட்களும், காலியான அட்டைப் பெட்டிகளும், அடிமட்ட விலைக்கு விற்பதற்காக குவிக்கப்பட்டிருக்கும் எவ்லின் வா(ஹ்)வின் புத்தகங்களும் அவனது வசிப்பிடத்தை மூழ்கடிக்க முயன்றிருந்தன.  இருளை விரட்டுவதற்காக ஒரு மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அந்த விளக்கின் வெளிச்சத்திற்குப் பதிலாக இருட்டிற்கு பழகிவிட்டால் அவர்களால் நன்றாகப் பார்க்க முடியும் என்று நினைத்தேன்.  குளிப்பதற்கு வசதியாக சிமெண்டால் தரையில் கரை கட்டிய இடத்தில் குழாயும், இரண்டு பக்கெட்டுகளும் இருந்தன.  இந்த நகரத்தில் நிலத்தடியே வசிப்பவர்கள் பெருகிக் கிடக்கிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும் அவனோடு சிறிது நேரம் உரையாடுவேன்.  அவனுடைய குழந்தைக்கு ஆடைகளும், அவனுடைய அம்மாவிற்கு கொஞ்சம் பணமும் அளிப்பேன்.  அவனுடைய மனைவியை நான் பார்த்ததேயில்லை.  அவள் எங்கே என்ற கேள்விக்கு வேலைக்குச் சென்றிருப்பதாகவே டென்சிங் ஷெர்பா பதிலளிப்பான்.

       ஒரு சனிக்கிழமை மாலை புத்தகக் கடையின் மேலாளரிடம் அனுமதி பெற்று டென்சிங் ஷெர்பாவை எனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு அழைத்து வந்திருந்தேன் (அன்றைக்கு பெர்னார்ட் ஷா எழுதிய முன்னுரைகளின் முழுத்தொகுப்பும், ஜான் அப்டைக்கின் ஆரம்பகால சிறுகதைகள் தொகுப்பும் வாங்கியிருந்தேன்).  கார்ட்போர்ட் தடுப்புகளின் சிறையிலிருந்து ஓர் இரவுக்கான பரோலை நான் அவனுக்கு அளிக்க விரும்பினேன்.  ஃபிரேசர் டவுனிலிருக்கும் எனது வீட்டிற்குச் செல்வதற்கு அரைமணி நேரம்  (அந்தப் பகுதியை புலிகேசி நகர் என்று பெயர் மாற்றியிருந்தாலும் இன்றுமே அதை ஃபிரேசர் டவுன் என அழைப்பவர்களே அதிகம்).  கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் வழியாகத்தான் வர வேண்டும்.  ஒருநாளின் சில மணிநேரங்களை சாலைகளில் செலவழிக்கும் வாழ்க்கை முறைக்கு வெகுவாக பழகியிருந்ததாலும் ஒவ்வொரு முறையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போதும் எரிச்சலடைவதைத் தவிர்க்க முடிவதில்லை.  டென்சிங் பெங்களூர் வந்ததிலிருந்து பயணித்ததேயில்லை என்றான்.  காரின் முன்பக்க இருக்கையில் ஒடுங்கி அமர்ந்திருந்தான்.

       பால்கனியில் ஒரு மேசையை அமைத்து அதன்மேல் விரிப்பு ஒன்றை விரித்தேன்.  ஆல்பர்ட் பேக்கரியிலிருந்து வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை தட்டுகளில் வைப்பதற்கு டென்சிங் உதவினான்.  குளிர்சாதனப் பெட்டியின் உறைவிக்கும் பகுதியிலிருக்கும் பிளாஸ்டிக் தட்டுகளில் நீரை ஊற்றி வைத்தேன். நீர் பனியாகும் வரை அவனைக் காத்திருக்கச் சொன்னேன்.

       வரவேற்பறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த டென்சிங் புத்தக அலமாரியையும், சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படங்களையும் பார்த்தான்.  நான் ஆடைகளைக் களைந்து, எப்போதுமே இரவு உடையாக அணியும் பருத்தியாலான டி-சர்ட்டும், அரைக்கால் சட்டையும் அணிந்தேன்.

       பனித்துண்டங்கள் தயாரானதும் அவனும் நானும் மேசைக்குச் சென்றோம்.  உயர் ரக விஸ்கி ஒரு முழுபாட்டிலை வாங்கியிருந்தேன்.  மிகுந்த கூச்சத்திற்குப் பிறகு விஸ்கி குடிப்பதற்கு ஒப்புக் கொண்டான்.  விஸ்கியோடு, பனித்துண்டங்களையும், டானிக் தண்ணீரையும் கலந்து கொடுத்தேன்.  இந்தச் சந்திப்பிற்கு முன்பே திட்டமிட்டிருந்ததால் அன்று நான் “பனை”க்குச் சென்றிருக்கவில்லை.  ஹாஜி சர் இஸ்மாயில் சேட் மசூதியை எனது வீட்டின் பால்கனியிலிருந்து தெளிவாகப் பார்க்க முடியும்.  அண்ணாசாமி முதலியார் பள்ளிச் சீருடை அணிந்திருந்த சிறுவர்கள் ஒருசிலர் மசூதியின் அருகே ஏதோ போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்தனர்.  இரவுத் தொழுகை முடிந்தும் அங்கே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

       ஷெர்பாக்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக் கொள்வார்கள்.  அவர்களது பிழைப்பே வெள்ளைக்காரர்களைச் சார்ந்திருப்பதால் மலையேற்றத்தை எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்கிறார்களோ அதே அளவில் ஆங்கிலம் பேசுவதற்கும்.  ஆனால் டென்சிங் ஷெர்பா தயங்கித் தயங்கிதான் ஆங்கிலம் பேசினான்.  தவறாகப் பேசி விடக்கூடாதென்ற தயக்கத்தைக்  காட்டிலும் அவன் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றவனாக நான் உணர்ந்தேன்.  அவனுடைய மனைவியைப் பற்றிக் கேட்டேன்.  பதில் சொல்லாமல் அவனுடைய ஊரைப் பற்றியும், எவரெஸ்ட் சிகரம் ஏற வருகின்ற வெள்ளை மலையேற்றக்காரர்களைப் பற்றியும் பேசினான்.  வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் மலையேற்றத்திற்கு முன்பே பல நூறுமுறை ஷெர்பாக்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்கிறார்கள் என்றான்.

       “நாங்கள் ஒரு சிகரத்தில் எங்கள் வாழ்வைப் பிணைத்துக் கொண்டு வாழ்கிறோம்.  வெள்ளைக்காரர்கள் மலையேற வராவிட்டால் பனிமூடிய அந்த மலைகளில் நாங்கள் என்ன விவசாயமா செய்ய முடியும்..?  நீங்கள் எப்போது இந்த வீட்டை வாங்கினீர்கள்? இல்லை பிறந்து வளர்ந்ததே இங்கேதானா.?”.

 “ இந்த வீட்டை எனது திருமணத்திற்கு முன்பாக வாங்கினேன்.  அப்போது நான் ஐடிசியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  திருமணத்திற்கு முன்பு நான் வில்ஸன் கார்டன் பகுதியில் வசித்தேன்.  எனது சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள சென்னை.  இந்தப் பகுதியில் தமிழர்கள் நிறைய இருப்பதால் எனது ஊரிலிருப்பதைப் போலவே உணர்வேன். ”  நான் சொன்ன இடங்களை அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அவன் பால்கனியிலிருந்தே வீட்டை மீண்டுமொருமுறை நோட்டமிட்டான்.  வரவேற்பறையும், உணவருந்தும் அறையும் இணைந்திருக்கும் பகுதிவரை இங்கிருந்து பார்க்க முடியும்.  இரண்டு படுக்கையறைகளில் ஒன்றை மட்டுமே நான் பயன்படுத்துவேன்.  இரண்டாவது படுக்கையறையை சென்னையிலிருந்து என் பெற்றோர்கள் வந்தால் பயன்படுத்துவதற்கென்று ஒதுக்கி வைத்திருந்தேன்.  வரவேற்பறையில் இரண்டு ஓவியங்களை தொங்க விட்டிருக்கிறேன். ஆளுயர புத்தக அலமாரியை நிரப்பியிருக்கும் புத்தகங்களில் பெரும்பாலானவை வாசிக்கப்படாதவை.  அதற்கு அருகே நாற்பத்தி நான்கு அங்குலம் அளவுள்ள தொலைக்காட்சியும், பழங்குடி முகமூடியொன்று ஒட்டப்பட்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டியும்  இருக்கின்றன.

       “ உங்கள் மனைவியின் புகைப்படம் ஒன்று கூடவா இல்லை..? ”

       அவனோடு பழகத் துவங்கிய சிலநாட்களிலேயே என் மனைவி இறந்து போய்விட்டதை அவனுக்குச் சொல்லியிருக்கிறேன்.

       “அவளுடைய ஞாபகம் தொந்தரவூட்டக் கூடாது என்பதற்காக கழற்றி வைத்திருக்கிறேன்.  உன்னுடைய அம்மா இரவு நேரத்தில் பையன் எழுந்து அழுதால் சமாளித்துக் கொள்வாளில்லையா..? ”

“என்னையும் சேர்த்து ஐந்து குழந்தைகளை வளர்த்தவள்.  பார்த்துக் கொள்வாள்.  ஷெர்பா ஆண்கள் மலைகளை எப்படி அறிந்திருக்கிறார்களோ அதைப் போலவே எங்களது பெண்கள் குழந்தைகளை அறிந்திருக்கிறார்கள்.”  இதைச் சொல்லும்போது அவனது குரல் மிடுக்காக வெளிப்பட்டது.  தயக்கமில்லாமல்.

       அவனுடைய ஊரை விவரித்தான்.  மலையைச் சுமக்கும் வேலைக்குக் கிடைக்கும் சொற்ப ஊதியத்தையும், விபத்தில் இறந்து போனால் கிடைக்கிற குறைவான இழப்பீட்டுத் தொகையையும், அரசியல் நெருக்கடிகளுக்குப் பிறகு நேபாளத்தில் பெருகிவிட்ட விபச்சாரமும், சூதாட்டமும், எல்லையோர கடத்தல்காரர்களையும் குறித்துப் பேசினான்.  பள்ளிகளே இல்லாத நேபாளத்தின் கிராமப்புறங்களையும்.

       இடையிடையே எழுந்து சென்று நான் அவனுக்காக கோழிக்கறி வறுவல் சமைத்தேன்.  அதை எடுத்து வந்து தட்டில் பரப்பி எலுமிச்சை சாறு பிழிந்து வைத்ததும் ஆவலாக எடுத்துச் சாப்பிட்டான்.

       “ நீங்கள் ஒருமுறையாவது எனது வீட்டில் சாப்பிட வேண்டும்.  என் அம்மா சாம்பாவும், வெண்ணை கலந்த தேநீரும் சுவையாகச் செய்வாள்.  இங்கே வந்த பிறகு அவள் ஒருமுறை கூட ரக்சியைக் குடிக்கவில்லை.  அதுகுறித்து அவளுக்கு வருத்தமிருந்தாலும் ஊருக்கு போகின்றவர்கள் யாராவது வாங்கி வரும்வரை அவள் காத்திருக்கத்தான் வேண்டும்.  தும்ஜி பண்டிகைக்கு அவள் ஊரில் இல்லாதது, காய்ந்து போன காஜர்…..காஜர்…. கேரட்டைப் பார்த்தால் எரிச்சலடைகிறாள்.  நீங்கள் அவள் தயாரிக்கும் வெண்ணை கலந்த உப்புத் தேநீரைக் குடிக்க வேண்டும்.  சுவரைப் பார்த்து தியானம் செய்த போதிதர்மா தூங்கிவிடக் கூடாதென்று அவரது இமைகளை அறுத்துப் போட்டார்.  அதுதான் தேயிலை.  நாங்கள் அதை நம்புகிறோம்.  ஒவ்வொரு தேயிலையும் போதி தர்மாவின் புதிதாக அறுக்கப்பட்ட இமைகள்.  கணக்கேயில்லாத இமைகளை வெட்டிக்கொண்டே போதிதர்மா தியானத்திற்கு முயல்கிறார்.  நாம் தேநீர் அருந்துகிறோம். தேநீரைத் தயாரிக்க மூங்கிலைக் கூடப் பயன்படுத்துவோம்.  அது ஒரு மருந்து.  மாவோயிஸ்ட்டுகள் எழுச்சியின் போது குக்கர் பயன்படுத்துவதை தடை செய்திருந்தார்கள்.  குக்கரைப் பயன்படுத்தி அவர்கள் குண்டுகள் செய்தனர்.  நாங்கள் தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூட சிரமப்பட்டோம்.  இங்கே வந்து ஒரு குக்கரை வாங்கியதும் அம்மா கொஞ்சம் சமாதானமானாள்.  கோழிக்கறியும், முட்டையும் அங்கே விலை அதிகம்.  இங்கே கோழிக்கறி விலை குறைவாகக் கிடைக்கிறது.  பியர்கள் ஒன்றுகூட குடிக்கும் தரத்தில் இல்லை.  வண்டிகளை நிறுத்துபவர்கள் அளிக்கும் பணத்திலிருந்து பியர் வாங்கி வந்து நானும் அம்மாவும் அருந்துவோம். அப்போது கூடுதலாக எங்களது ஊர் ஞாபகம் எழும்.  நாங்கள் அருந்தும் பியரை ரின்போச்சேதான் உருவாக்கினார் (கைகளைக் குவித்து தலைவணங்கினான்). அவர் தயாரித்த பியரில் ஆந்தையின் கண்களையும், புலியின் இதயத்தையும் கலந்தார்.  அதனால்தான் ஒருசிலர் பியரைக் குடித்தால் உறங்குகிறார்கள், வேறு சிலர் புலியைப் போல எழுச்சியடைகிறார்கள்.  நீங்கள் உங்கள் ஊரில் என்னவிதமான மதுவை அருந்துவீர்கள் கடைகளில் விற்கும் வெளிநாட்டுச் சரக்குகள் அல்லாமல்..? ”

        “ முன்பு கள்ளும், சாராயமும்.  சென்னையில் அவை கிடைப்பதில்லை.  ஒருசிலர்  சமைக்கப்பட்ட அரிசியை நொதிக்க வைத்து அருந்துவார்கள்.  எங்களது மதுவகைகளுக்கு தயாரிப்புக் குறிப்புகள் உண்டே ஒழிய உங்களுடையதைப் போல தொன்மங்கள் கிடையாது. ”

       தேவையான இடைவெளியை எடுத்துக் கொண்டான்.  விஸ்கியின் அளவைக் குறைத்தே ஊற்றினேன்.

       “ அதை வீடென்று தவறாகச் சொல்லி விட்டேன்.  மனிதர்கள் வசிக்கும் இடங்களெல்லாம் வீடாக மாறுவதில்லை.  அது எலிகள் வசிக்குமிடம் (வங்கு என்பதற்கான ஆங்கிலச் சொல்லிற்காகத் தடுமாறினான்.  எனக்குமே மறந்து போயிருந்தது).  தூங்கும்போது என் அம்மாவின் மீது கால்படும் ஒவ்வொரு முறையும் குறுகலான அந்த இடத்தில் தூங்குவதை விடவும் இறந்து போய் அதை விடவும் குறுகலான ஓரிடத்தில் நிரந்தரமாகத் தூங்குவதே நல்லதென்று நினைப்பேன் (அவனுடைய மனைவியைக் குறித்து ஒன்றும் சொல்லாமலிருந்தது ஆச்சரியமாக இருந்தது).  இன்னும் எவ்வளவு வருடங்கள் நாங்கள் இந்தச் சிரமத்திற்கு உள்ளாக வேண்டுமோ..?  குளிர்ச்சியான எங்கள் இமாலயக் காற்றை எப்போது சுவாசிப்போமோ..?  அந்தக் காற்றே ஒரு மருந்து.  மனக்கவலை, உடல்வலி எல்லாவற்றையும் போக்கி விடும்.  அம்மாவிற்கு இங்கே வந்த நாட்களிலிருந்தே தொடர்ச்சியாக இருமல். வெளிச்சத்தைப் பார்ப்பதற்கே ஏதோ மலைக்குகையிலிருந்து வெளியே வருவதைப் போலிருக்கிறது. ”

“ உங்கள் ஊர்க்காரர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் போகிறார்கள் இல்லையா..? ”

       “ முன்பு இல்லை. எவ்வளவு நாள்தான் மலையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது..? தவிர அங்கே சம்பாதிக்கும் சொற்ப பணம் கட்டுப்படியாவதில்லை.  நாங்கள் பெருகிவிட்டோம். மலையிலிருந்து சமவெளிகளுக்குப் போகிறோம்.  கண்களைக் கூசச்செய்யும் பனிமூடிய சிகரங்களையும், தூய்மையான நீலவானத்தையும் பார்ப்பதற்கு ஏக்கமாக இருக்கிறது.  இங்கே கண் விழிப்பதிலிருந்து தூங்குவது வரை நாங்கள் வெளிச்சத்தையே பார்க்க முடியாமல் இருக்கிறோம்.  ஆனால் எங்கேயிருந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான். அது மலைச்சிகரமோ, நிலத்தடியோ வாழ்க்கை ஒன்றுதான் ”

       டென்சிங் செர்பா அழுதான்.  நான் அமைதியாக எழுந்து அவனது தோளைத் தட்டிக் கொடுத்தேன்.  கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

       “ உனது மனைவியைப் பற்றி ஒன்றுமே சொல்லவேயில்லையே..? ”

“ குழந்தை பிறந்த சில நாட்களில் அவள் இறந்து போனாள். நானே அவளைக் கொன்றேன். ”

அவனது பதிலைக் கேட்டு நான் அதிர்ந்தேன்.  அவனிடம் தொடர்ந்து பேசுவதற்கு முன்பாக ஒருமுறை விஸ்கியைக் குடித்தேன்.  அதன் சுவை வேறொன்றாக நாவில் படர்ந்தது.

“ ஏன் அவளைக் கொன்றாய்..? ”

“ இந்தக் குழந்தை இருக்கிறதே (அருகேயிருப்பதைப் போல கைகளை நீட்டிச் சொன்னான்) அது எனக்குப் பிறந்ததில்லையென்று என் அம்மா சொன்னாள்.  அது உண்மையா பொய்யா என்றுகூட நான் யோசிக்கவில்லை, ஆத்திரத்தில் கழுத்தை நெரிக்க அவள் இறந்து போனாள்.  எங்களது சிறிய விவசாய நிலத்தில் அவளை அம்மாவும் நானும் புதைத்தோம். என்னுடைய அண்ணனைப் போலவே அவளும் ஒரேயொரு நிறத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பாள்.  மண்ணின் செம்பழுப்பு நிறம்.  அதற்காக நான் பலமுறை மனம் வருந்தினேன்.  இப்போதும் வருத்தமிருக்கிறது.  ஒருவேளை என் அம்மா இதைச் சொல்லியிருக்காவிட்டால், நான் அவளைக் கொன்றிருக்காவிட்டால் நிலத்தடியில் வசிப்பதற்கு நான் வந்திருக்கவே மாட்டேன்.  அவளைக் கொன்றதற்காகத்தான் இங்கே வெளிச்சமேயில்லாத இடத்தில், தெரியாத ஊரில் தண்டனையை அனுபவிக்கிறோம்.  அவளுடைய கரிய நீண்ட கூந்தல் அவ்வளவு அழகானது. ”

அவனுடைய குரல் தளர்ந்து, மீண்டும் அழுதான்.  அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.  மீதமிருந்த விஸ்கியை முழுதுமாக அவனுடைய கோப்பையில் ஊற்றினேன்.  டானிக் தீர்ந்து போயிருக்க நீர் கலந்து அவனுக்குக் கொடுத்தேன்.  ஒரே மடக்கில் குடித்தான். குடித்ததும் தேம்பி அழுதான்.  அவனுடைய தோள்கள் அளவுக்கதிகமாகக் குலுங்கின.  வழிந்த கண்ணீரால் வற்றிப் போயிருக்கும் அவனது கன்னங்கள் பளபளத்தன.  நான் எழுந்துபோய் ஒரு துண்டை எடுத்து வந்து அவனுக்குக் கொடுத்தேன்.  துண்டை முகத்தில் வைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் அழுதான்.  நான் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மேஜையிலிருந்த விஸ்கி பாட்டிலை, கோப்பைகளை, தட்டுகளை எடுத்து சமையலறையில் வைத்தேன்.  மேஜையை எடுத்து வந்து வரவேற்பறையின் ஒரு மூலையில் வைத்தேன்.  மீந்து போயிருந்த தின்பண்டங்களை, கோழி எலும்புகளை உறைபோட்டிருந்த குப்பைக் கூடையில் கொட்டினேன்.  அவனுக்கு வரவேற்பறையில் படுக்கை விரித்தேன்.  குளிரூட்டியை முடுக்கினேன்.  அவனை நாற்காலியிலிருந்து எழுப்பி கைத்தாங்கலாக அழைத்து வந்து படுக்க வைத்தேன்.  தலையணைக்கு அருகே தண்ணீர் பாட்டிலை வைத்தேன்.  அவனை உறங்கச் சொல்லிவிட்டு நகரும் போது கேட்டான்:

“ உங்கள் மனைவி எப்படி இறந்தார்கள்..? ”

“நாம் மதுவருந்திய பால்கனியிலிருந்து தவறி விழுந்து.” பால்கனியைக் காட்டினேன்.  அவன் மெதுவாகத் தலையைத் திருப்பி படுத்தவண்ணமே பால்கனியைப் பார்த்தான்.  காலியாக இருந்த பால்கனிக்கும் அப்பால் வெளிச்சமேயில்லாத வெளியில் ஒரு முகம் தெரிவதைப் போல உணர்ந்தேன்.  அப்படி உணர்வது அது முதன்முறை இல்லை.  மேசைக்கு கீழே தொங்கும் விரிப்பு காற்றில் அசைந்தது.  பால்கனிக்கு அருகேயிருந்த கதவைச் சாத்தினேன்.  கதவுக்கு வெளியே யாரோ உள்ளே நுழைவதற்காகக் காத்திருப்பதைப் போலிருந்தது.  அது யாரென்றும் எனக்குத் தெரியும்.  மூடப்பட்டிருக்கும் எல்லாக் கதவுகளுக்குப் பின்னும் உள்ளே நுழைவதற்காக யாராவது காத்திருக்கத்தான் செய்வார்கள்.

அவனை எனது வீட்டிற்கு அழைத்து சென்ற சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அவனைச் சந்தித்தேன்.  ஆடைகள் வாங்கிக் கொடுத்தேன்.  அவன் விலை மலிவான சீன செல்போன் ஒன்றை வாங்கி, அவனுடைய எண்ணைக் கொடுத்தான்.  அவன் ஊருக்குச் சென்ற நாளில் என் கையிலிருந்த மூன்றாயிரம் ரூபாய்களைக் கொடுத்தேன்.  அவனுடைய அம்மா நன்றி சொல்பவளைப் போல கைகளைக் கூப்பினாள்.  எனக்கோ அவளைப் பிடிக்காமல் போயிருந்தது.  ஊருக்குச் சென்றவன் மீண்டும் வரவேயில்லை.  புத்தகக் கடை மேலாளரிடம் கேட்டேன்.  அவருக்கும் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.  நிலத்தடித் தளத்திற்கு சென்று பார்த்தேன்.  கார்ட்போர்ட் தடுப்புகளாலான வசிப்பிடம் கலைக்கப்பட்டிருக்க பொருட்கள் நிறைந்திருக்கும் தளத்தில் ஒரு மூலை மட்டும் குகைகளின் வாயிலைப் போன்ற வெறுமையுடன் இருந்தது.

இப்போது நினைவுக்கு வருகிறது.  மிகச்சரியாக அவன் விடைபெற்றுப் போன தினத்தில்தான் நான் அந்தப் பூனைக்கு கோழி இறைச்சித் துண்டுகளை அளிக்கத் துவங்கினேன்.

                           III

என் முன்னே அமர்ந்திருந்தவன் இன்னொரு பியர் வாங்கித் தரக் கேட்டான்.  இலட்சுமணன் மட்டுமே அங்கேயிருந்தான்.  நான் அவனிடம் இன்னொரு குடுவை பியர் கொண்டுவரச் சொன்னேன்.

“ டென்சிங்கைப் பற்றி நீ ஏன் என்னிடம் கேட்கிறாய்..? ”

இம்முறை ஒரே மடக்கில் அவனால் குடிக்க முடியவில்லை.

“ அன்றைக்கு நீ அவனிடம் பொய் சொல்லியிருக்கிறாய். ”

இதயம் வேகமாகத் துடிப்பதைக் கேட்டேன்.  எனது மார்பின் உள்ளேயிருந்து ஏதோவொன்று எலும்புகளை உடைத்துத் திறந்து வெளியேற முனைந்தது.  இலட்சுமணன் என்னையே பார்த்திருந்தான்.  அகலத் திறந்திருக்கும் வாசலுக்கு வெளியே சர்ச் வீதியே இருளில் மூழ்கிய தோற்றத்திலிருந்தது.  மதுபான விடுதியில் இசை நின்றிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.   அது முன்பே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.  நான் கவனித்திருக்கவில்லை.  அங்கே நிலவிய அமைதியோ இசை ஒலிகளிலிருந்து பிரிந்து அதன் முந்தைய நிலைக்குச் சென்றிருந்தது.  தொந்தரவூட்டப்படாத தூக்க நிலை.

நிதானமாக அவன் பியர் அருந்தினான்.  நான் பன்னெடுங்காலமாக அவன் முன்னே அமர்ந்திருப்பவனைப் போல அவனிடமிருந்து விலக விரும்பினேன்.  இந்தச் சந்திப்பு முடிவுறாமல் நீளுமென்று யோசித்தேன்.

“ கொஞ்சம் கோழி இறைச்சியை ஆர்டர் செய். ”

அவனுடைய கட்டளைக்குப் பணிவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  இலட்சுமணனை அழைத்து அவனுக்கு வேண்டியதைக் கொண்டுவரச் சொன்னேன்.  இலட்சுமணன் அவனிடம் உணவு அட்டவணையை நீட்டினான்.

“ எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது.  நீயே ஏதாவது கொண்டு வா. ”

இலட்சுமணன் என்னைப் பார்த்தான்.  நான் தலையசைத்தேன்.

அவன் முகத்தைப் பார்த்தேன்.  புன்னகைப்பதாகத் தெரிந்தது.  வெகுகாலமாக அங்கேயே வேர்விட்டு அமர்ந்திருப்பவனைப் போல அசையாமலிருந்தான். பியர் குடிப்பதைத் தவிர ஒன்றுமே பேசவில்லை.  வெகு நேரமாகிவிட்டதாகவும், இரவு மறுநாளின் பகல் பொழுதையும் செரித்து நீண்டு கொண்டிருப்பதாகவும் தோன்றியது.

இலட்சுமணன் இறைச்சியை ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தான்.  நான் கட்டணச் சீட்டைக் கொண்டுவரச் சொன்னேன்.  இத்தோடு அவன் முடித்துக் கொள்வான் என்று நினைத்தேன்.

“ நீ இதை அலுமினிய உறையிலிட்டு எடுத்துக் கொள். நாம் போகலாம்.”  டெனிம் சட்டையில் சிந்திய பியரைத் துடைத்துக் கொண்டே சொன்னான்.  இலட்சுமணனை அழைத்து இறைச்சியை பொட்டலம் கட்டச் சொன்னேன்.

 “ நாம் போகலாம் ”. சிரமப்பட்டு எழுந்த அவன் மேல்கோட்டை இரண்டு கைகளாலும் பிடித்து உதறினான்.  நான் பொட்டலத்தை எடுத்துக் கொண்டேன்.  நாங்கள் இருவரும் வெளியே வந்தோம்.  அவன் என்னிடம் கையசைத்து விடுதிக்கு எதிரேயிருந்த பிரித்தானியர் கால பங்களாவின் வாசலுக்கு வரச்சொல்லி விட்டு எனக்கு முன்பே அங்கே சென்றான்.  இரும்புக் கிராதிகளால் ஆன வெளிப்புறக் கதவில் சாய்ந்து கொண்டு கேட்டான்:

“ உண்மையில் உன் மனைவி தவறி விழுந்து தான் இறந்தாளா..? ”

பதில் சொல்லாமல் அவனையே பார்த்தேன்.  சிரித்தான்.

“ இறைச்சித் துண்டுகளைத் தூக்கிப் போடு. ”

நான் அலுமினிய உறையிலிருந்து பிரித்து சூடாக இருந்த இறைச்சித் துண்டுகளை வெளிப்புறக் கதவுக்கு உள்ளே வீசினேன்.  டெனிம் கோட்டணிந்திருந்த ஐம்பதோ அல்லது ஐநூறோ வயதான அவன் ஒரு பூனையாக மாறி வெளிப்புறக் கதவிடுக்கின் வழியாக உள்ளே நுழைந்தான்.  நான் இமைகொட்டாமல் அதைப் பார்த்தேன்.  இறைச்சித் துண்டுகளைச் சுற்றிக்  கொண்டிருந்த அப்பூனை ஒரு துண்டைத் தேர்ந்தெடுத்து கடிக்கத் துவங்கியிருந்தது.  பின்னே நகர்ந்து சர்ச் வீதியின் நடுவே நின்றேன்.  உலகு முடியுமிடத்தின் முனைக்குச் செல்லும் வீதியில் தனித்து நின்றிருக்கும் விளக்குக் கம்பங்கள் ஒவ்வொன்றும் ஓசையின்றி சிரித்தன.  அவற்றின் திடீரெனப் பெருகிய ஒளியில் நான் ஏற்கனவே கரைந்திருப்பதாக உணர்ந்தேன்.

*

நன்றி – கல்குதிரை

*

(பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தற்பொழுது ஓசுரில் வசித்து வருகிறார். கனவு மிருகம், துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. ஆசிரியரின் தொடர்புக்கு – tweet2bala@gmail.com )

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular