Tuesday, April 23, 2024
Homeபுனைவுகவிதைபதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் - அறிமுகம் (சீனக் கவிதைகள்)

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – அறிமுகம் (சீனக் கவிதைகள்)

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் –

தமிழில் சீன செவ்வியல் கவிதைகள்,நேரடி மொழிபெயர்ப்பில்.

மொழிபெயர்ப்புகள்: செ.ச.செந்தில்நாதன் (ஆழி பதிப்பகம்)

அறிமுக உரை

வாசகர்களே,

சில ஆண்டுகளாக சீன மொழியைப் படிப்பதும் அதனூடாக சீனக் கவிதைகளை தமிழில் மொழிமாற்றம் செய்வதும் எனது அதிவிருப்ப செயல்பாடுகளில் ஒன்றாக இருந்துவருகின்றன. அவற்றை இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற வேட்கை அதிகரித்திருக்கிறது. அதன் விளைவே இந்தத் தொடர்.

பேர்ரசிய சீன மரபில் தாங் வம்ச காலம் (கிபி 618-கிபி 907) சீன இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. நமக்கு சங்க காலம் போல. அந்த தருணத்தில் உருவான மகத்தான சீன கவிதை மரபின் பிதாமகர்களின் கவிதைகளை இந்தத் தொடரில் தமிழில் காணலாம்.      து ஃபு, லி பய், வாங் வய் உள்பட பல முக்கிய கவிஞர்களின் பசப்பும் எளிமை கொண்ட கவிதைகளை நேரடியாக சீன மூலத்திலிருந்து மொழிபெயர்க்க நான் எடுத்துக்கொண்ட தருணங்கள் அனைத்தும் கவிக்காம தருணங்களே.

ஒரு செவ்வியல் மொழியிலிருந்து மொழிபெயர்ப்பது சுலபமல்ல. ஒவ்வொரு கவிதையையும் மொழிபெயர்க்கும் முன்பு அக்கவிதைகள் உருவான காலத்தின் சமூக, கலாச்சார, அரசியல், தத்துவ, கலை மரபுகளைப் பற்றிய புரிதல் வேண்டும். மகாகவிகளின் வார்த்தைகளுக்குப் பின்னுள்ள தத்துவங்களைத் தரிசிக்க நமக்கு இலக்கிய புலமை மட்டுமே போதாது. அக்கவிஞர்களின் வாழ்க்கையையும் படிக்கவேண்டும்.

இப்படித்தான் சில தாங் வம்ச காலம் குறித்து படித்தேன். இதைப்பற்றி சுருக்கமாக எனது டிராகன் என்கிற நூலில் முன்பு எழுதியிருந்தேன், தாங் வம்ச காலத்தின் முக்கியக்கவிதைகளின் ஆங்கில ஆக்கங்கள் பலவற்றையும படித்து முடிந்தவரை பரிச்சயப்படுத்திக்கொண்டேன். கவிஞர்கள் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் சிறப்புக்கூறுகளையும் உள்வாங்கி முதலில் ஒரு வாசகனாக அதற்குள் கரையவேண்டியிருந்தது. பின்பு நெடுங்காலம் அதில் ஊறி, கால தேச பயணங்களினூடாக மனத்துக்குள் அவர்களைத் தரிசிக்கவேண்டும். சம காலத்தில் சீன மொழியின் இலக்கிய, இலக்கணக்கூறுகளின் நுட்பங்களில் ஆழ்ந்துகிடக்கவேண்டும். எப்போது நாம் புத்தனாகமுடியும் என்று சொல்லவே முடியாது.

நல்லதோர் தருணத்தில் மனமும் கையும் பரபரபரக்க நான்கு வரிகளை மொழிபெயர்த்துப் பார்ப்போம். கூடி வராது. ஒரு மகாகவியை அவ்வளவு சுலபமாக சிக்கவைக்கமுடியுமா என்ன? தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிடவேண்டியதுதான். ஆனால் இது சுவையான ஆட்டம். அதற்குப்பின்பும் ஒருநாள் அதே கவிதையை நாம் வாசிப்போம். இப்போது அவற்றின் சித்திர எழுத்துகள் ஒரு ரகசியத்தை நமக்குச் சொல்லும். ஏதோ பிடிபட்டுவிட்டது போலிருக்கும். உடனே  அகராதிகளின் உதவியுடனும் இணையத்தின் உதவியுடனும் எழுத்தெழுத்தாக, சொல் சொல்லாக அநதக் கவிதையை அலசி ஆராய்ந்து பார்ப்பேன். இந்த கட்டத்தைத் தாண்டாமல் மொழிபெயர்ப்புச் சாத்தியமே இல்லை. எந்த செவ்விலக்கிய மொழிபெயர்ப்புக்கும் அம்மொழியின் எழுத்து. சொல், பொருள் புலப்பாடுகளினூடாக பயணம்செய்தே ஆகவேண்டும். சீன மொழியில் விசேஷம் அதன் பொருள் விளங்கும் சித்திர எழுத்துக்கள். இவ்வாறு கவிதையின் அருகே அமைந்திருக்கும் எல்லாக் காரணிகளையும் பிய்த்தெறிந்து ஒரு குரங்காக அதன் மீது ஆடினால்தான் சற்றே விளங்கிக் கொள்ளமுடியும். பிறகு கவிதையின் எல்லா இரைச்சல்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு,. அவற்றினூடாக காதை மேலும் கூர்மையாக ஆக்கி மனம் ஓர்மைப்படுத்தினால், கவிதை ஆத்மாவின் நுண்ணொலியை செவிமடுக்க நேரிடலாம். அந்த ஓர் கணத்தில், சில நிமிடங்களி்ல் மொழிபெயர்ப்புப் பணி முடிந்துபோய்விடும். முன்னாட்டமும் புணர்ச்சியும் போல.

இப்படித்தான் சீன செவ்வியற் கவிதைகளை நான் அனுபவித்து வருகிறேன். உங்களிடம் பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன்.

 

– செ.ச.செந்தில்நாதன்

(அடுத்த பகுதியில் இருந்து கவிதைகள், இனி ஒவ்வொரு வாரமும்)

RELATED ARTICLES

1 COMMENT

  1. மிகவும் சிறந்த பரிசோதனை ஆகக்கூடிய மாற்றம் தேவையான ஒன்று நல்ல முயற்சியில் வாழ்த்துகள் , சார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular