Monday, October 14, 2024
Homesliderபஞ்சவர்ண வேழம்

பஞ்சவர்ண வேழம்

விஜய ராவணன்

சாமுவேல் கிழவர் இப்போது கடவுளாகப் பரிணாமம் எடுத்திருந்தார். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவை உயிர்ப்பித்த சக்திதான் தன்னுள்ளும் இறங்கியிருப்பதாக நம்பினார். நித்தம் நகரும் இரவின் நாட்குறிப்புகள் அவரது நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தின. இத்தனை பிரம்மாண்டமாய் இவ்வளவு நேர்த்தியாய் படைப்புக்கு உயிர் கொடுப்பவன் நிச்சயம் தேவனாகவோ இல்லை தேவதூதனாகவோ தானே இருக்க முடியும்…?

“நானும் காலையிலேந்து கேக்கேன், என்னதான் முடிவு…?” சுருள்சுருளாய் அடர்ந்திருக்கும் நெஞ்சுமுடியின் மேல் விழுந்து கிடக்கும் சிலுவையை உள் பனியனின் மேல் எடுத்துப்போட்டபடியே வாசல் படியில் நின்றுகொண்டு சார்லஸ் கேட்ட அன்று சாமுவேல் பதில் ஏதும் சொல்லவில்லை. பலநாட்களுக்குப் பின் ஊருக்கு வந்திருக்கும் மகனின் கேள்விகளை சாமுவேல் தவிர்க்கவே நினைத்தார். கேள்விகள் தான் சச்சரவுகளின் தொடக்கப்புள்ளி. வீட்டு வாசலில் இருக்கும் மணல் மேட்டில் இரு கால்களையும் ‘வி’ வடிவில் விரித்து கறுப்பு பச்சைக் கட்டம் போட்ட சாரத்தைக் கால்களினிடையே திணித்து செய்யது பீடியைப் புகைத்தபடியே, வீட்டை ஓட்டிப் போகும் குண்டுக்குழிச் சாலையை பதில் பேசாமல் சாமுவேல் பார்த்தபடியிருந்தார்.

ஊருக்குள் ஒன்றிரண்டு இருசக்கர மோட்டார் வண்டியும், காலி தூக்குச்சட்டி, கசங்கிய துண்டு சகிதமாக வேலை முடித்து வரும் ஆட்களும், மேய்ச்சல் முடித்து ஆட்டுமந்தையை ஓட்டிப் போகும் இசக்கியும் தெரிந்தனர்.

வானம் கொஞ்சம் கொஞ்சமாய் நீலத்தை வெறுக்க பொழுது சாயத் தொடங்கியிருந்தது. சோப்பு நுரையாய் மேகங்கள் அங்குமிங்குமாய் சிதறியிருந்தன. சாமுவேல் தன் முறுக்கேறிய ஒல்லியான மேல் உடம்பில் கம்பளியைச் சுற்றியிருந்தாலும், மிதமான காற்று வீசியதும் வயதான காதுக்குள் மார்கழி மாதக்குளிர் ஓவென கேலி செய்துவிட்டுப் போனது.

அவரது கால்களுக்கடியில் மரச்சிராய்களும் மரத்துகள்களும் அங்கங்கே கூட்டப்படாமல் கிடந்தன. அதில் சிறு மரத்துண்டை எடுத்து, வாசல் மண்தரையில் கைபோன போக்கில் ஏதோவொன்றை வரைய முயன்று, பின் திருப்தியடையாதவராய் வரைந்ததை இடது கையால் கலைத்துவிட்டு மரத்துண்டை வீசி எறிந்தார். மகனின் கோபமும் அதற்கான காரணமும் அதன் பொருட்டுத் தன் நிலைப்பாடும் சாமுவேல் கிழவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்ததால் பதிலற்ற மௌனத்தால் அவனது கோபத்தை மெல்லக் கடக்க நினைத்தார்.

“நான் பாட்டுக்கு நாய் மாதி கத்துதேன்!, நீ பாட்டுக்கு உனக்கென்னனு இருக்க…!!” சார்லஸின் கறுத்த முகம் கோபத்தில் இறுகி மேலும் கருமையைக் கூட்டிக் காட்டியது. முப்பது வயதிலேயே தலைமுடியைக் கணிசமாய் இழந்திருந்தான். முன்கோபக்காரன். எப்போதும் கடுகடுவென இருக்கும் அவனது முகம் வெடிப்பு விழுந்த கரிசல் மண்ணை நினைவுபடுத்தும்.

“இந்த வயசுல இனி என்னால ஊரவிட்டு வந்து சென்னைல இருந்துக்கிட முடியாது!!”

வாசலில் சங்கிலி போட்டுப் பிணைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டியின் சக்கரத்தினடியில் நெட்டையும் குட்டையுமாய்ப் பாதி உடைந்தும் உடையாமல் இருக்கும் ஈர்க்குச்சி வாரியலை வைத்து மரக்குப்பைகளைத் தூர்த்து ஒதுக்கித் தள்ளியபடியே கிழவர் பதில் சொன்னார். அறுபதைத் தாண்டியும் விறுவிறுவென வேலை பார்க்கும் கிழவரின் கைகால் நரம்புகள் ஈரம் உலர இறுக்கிப் பிழியப்பட்ட துணியைப் போல் முறுக்கிக் கொண்டிருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாய் வானில் வெளிச்சம் காணாமல் போய்க் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தார். இருட்டில் சார்லஸ் நிற்பது செங்குத்தான நிழலாய்த் தெரிந்தது. அவன் புருவங்களை உயர்த்தி முறைத்துக் கொண்டிருந்தான். வாசல் குண்டு பல்பைப் போட வீட்டுக்குள் நுழைந்தார். சார்லஸும் பேசியபடியே பின்தொடர்ந்தான்.

“வாங்குற சம்பளம் பட்டணத்துல கைக்கும் வாய்க்குமே சரியாருக்கு!. புள்ள வேற ரெண்டாப்பு வந்துட்டான். இதுல மாசாமாசம் ஒனக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு அனுப்புதேன். நீ என்கூட வந்தா அந்தக் காசாச்சும் மிச்சமாகும், புரியாம மாட்டேனு சொல்லுத!“

“நான்தான் எனக்குத் துட்டு அனுப்ப வேணாம்னு சொல்லுதேன்ல”

“எதுக்கு…? அப்பன கவனிக்காம பொஞ்சாதி புள்ளயோட சென்னைக்குப் போயிட்டான்னு ஊர்க்கார்னுவோ காறித்துப்பவா…?” 

“அப்படியொன்னும் ஒன் காசு தேவையில்ல!” என்று கறாராய்ப் பதில் சொல்லும் நிலையில் அப்பா இல்லை என்பது சார்லஸ்க்கும் ஒன்றும் சொல்லாமலிருக்கும் சாமுவேலுக்கும் தெரியும்.

வாசலில் நிற்கும் தள்ளுவண்டியின் கீழ்த்தட்டில் சுருட்டி வைத்திருக்கும் பழைய துண்டை எடுத்து வண்டியைத் துடைத்துவிட்டு நீலநிற தார் பாயால் வண்டியை மூடிக் கொண்டிருந்தார் சாமுவேல்.

“ஒன்ன பாக்க அடிக்கடி சென்னைலேந்து வேற வரணும், பஸ் காசு எவன் தரான்? இதுல பேரனக் கூட்டி வரலியானு வேற கேட்க… ரெண்டு பேரு வந்து போனா என்ன ஆச்சு? ஒன்னக் கண்டுக்க மாட்டேன்னா சொல்லுதேன். நீ இங்க தனியா இருக்குறதுக்கு இந்த வூட்ட வாடகைக்கு விட்டுட்டு என்கூட வந்துரு… மாசச்செலவு கொறையுங்கறேன்… நீ வீம்புக்கு மாட்டேங்க…!”

சாமுவேலின் ஏறிய நெற்றியில் புருவங்கள் தாராளமாய் மேலே போக “அது எப்படிய்யா முடியும்? அப்போ தொழிலு…?”

“ஆமா பெரிய தொழிலு…வயத்தக் காயப்போட்டுட்டு பொம்ம செஞ்சு ஊரூரா விக்குற தொழிலு? எவன் வாங்குதான் இந்த காலத்துல இந்தப் பொம்மைய? நீ மட்டும் தனி உலகத்துல வாழுத?”

சார்லஸ் சொல்வதைப் போல் சாமுவேலின் உலகம் விசித்திரமானது. அங்கு மனிதர்களுக்கு இடமில்லை. ஆனால் அவனை விட மேலான பொம்மைகளால் நிறைந்தது. கைதட்டிச் சிரிக்கவோ பதிலுக்குப் பேசவோ சப்தம் போடவோ குதித்தோடவோ தானாக எதுவும் செய்யத் தெரியாத மரபொம்மைகள்! மரபொம்மைகள் என்றால் சாமி பொம்மையோ அரசியல் தலைவர்களின் உருவங்களோ அல்ல.

சிறுபிள்ளைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், தலையாட்டி பொம்மைகள், நடைவண்டி, சொப்புச்சாமான், பெரிய உருண்டைத் தலையும் கைகால் இல்லாத பலூன் மனிதர்கள், ரயில் வண்டி, மாட்டு வண்டி, வண்ண வண்ண பம்பரம், மிருக பொம்மைகள்…. அதிலும் குறிப்பாக அவருக்குப் பிடித்தது ஆனை பொம்மை… மரபொம்மை செய்யும் நேர்த்தியும் யானை மீதான ஈர்ப்பும் சாமுவேலுக்கு சிறுவயதிலேயே அப்பாவிடமிருந்து தொற்றிக்கொண்டது.

“இம்முனுபூண்டு மிருகத்த பொம்மையாக்குறதுல என்னடே இருக்கு?, அத்தாதண்டி ஆனைய மரத்துல செய்யணும். அதயும் எல்லாவனும் செய்தானோ, ஆனா வேல சுத்தமில்ல..! கண்ணுக்குள்ள நிக்குற மாதி, நிசமா முன்ன நின்னு தும்பிக்கைய ஆட்டுது மாதித் தோனணும், அப்பத்தான் கை நின்னு பேசுதுனு அர்த்தம். இதே சோலியா இருந்தா எல்லா வந்துரும்..!.” சாமுவேலின் சிறுவயதில், பெரிய வெள்ளை மீசையை முறுக்கியபடியே அவர் அப்பா அடிக்கடிச் சொல்வார்.

சாமுவேலின் இரண்டு அறைகள் கொண்ட ஓட்டுவீட்டில், பொம்மைகளுக்கென்று ஒரு தனிஅறை! அந்த உள் அறையின் அலமாரி அடுக்குகளிலும் தகரப்பெட்டியின் மேலும் கீழும் மர நாற்காலியின் கால்களுக்கு இடையேயும், தரையில் விரித்திருக்கும் கோணித்துணியிலும் அவை ஒன்றோடொன்று இடித்துக்கொண்டும் சரிந்து சாய்ந்து கொண்டும் மௌனமாய் தங்களுக்குள் பேசியபடி ஒற்றை ஜன்னல் வெளிச்சத்தில் நனைந்தபடியிருக்கும். மழைக்காலம் என்றால் தான் பிரச்சனை. மழைத்தண்ணீர் உள்ளே இறங்காமலிருக்க சாமுவேல் ஜன்னலை அடைத்து விடுவார், பொம்மைகளுக்கு இருட்டில் சிறைவாசம் தான்.

லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு பேருந்து நிறுத்தம் எதிரே தினசரியை ஒருநாள் முழுதும் புரட்டிக்கொண்டு நினைப்பு வரும்போதெல்லாம் பீடியைப் புகைத்தபடி, பக்கத்து டவுனுக்குத் தள்ளுவண்டியில் பொம்மைகள் விற்றுவருவார். பெரிதாய் லாபம் ஏதுமிருக்காது. பாதிவிலைக்குப் பேரம் பேசுவார்கள். தங்கமே ஆனாலும் தள்ளுவண்டிக்கு வந்துவிட்டால் அதுதான் நிலைமை. விற்காத பொம்மைகளை திரும்பத் தள்ளிக்கொண்டு ஊருக்கு வருவதற்குப் பதிலாக அவர்கள் கேட்கும் காசுக்குக் கொடுத்துவிட்டால் வண்டி தள்ளும் பாரமாவது குறையும். போகும் விலைக்குக் கொடுத்துவிட்டு கோயிந்தன் கடையில் மீன்குழம்பு மட்டும் தூக்குச் சட்டியில் வாங்கிவருவார். பழைய நண்பர் என்ற முறையில் சாமுவேலுக்கான பிரத்யேக சலுகை அது. மீன்குழம்புக்கு சாமுவேலிடம் காசு வாங்க மாட்டார். குழம்பில் மீனும் இருக்காது. வீட்டுக்கு வந்து சோறு மட்டும் பொங்கிக் கொண்டால் போதும்.

ஆனால் சாமுவேலின் பொம்மைகளுக்கும் ஒருகாலத்தில் அப்படியொரு மவுசு. எப்போதும் வீட்டைச் சுற்றிப் பொடிசுகள் கூட்டம் முட்டிமோதி நின்று கொண்டிருக்கும். ”தூரப்போங்கலே! அங்குட்டு வெளிச்சம் வரமாட்டேங்கு.!..” என்று அவர் கூட்டத்தை விரட்டி விடும் வரை.

டவுனில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் கடை வைத்திருந்தார். கடைவாசலில் பெரிய மரஆட்டோ, இரண்டடுக்குப் பேருந்து, மூன்றுசக்கர நீல மஞ்சள் ரோஜா நிறங்கள் பூசிய நடைவண்டியைத் தவிர்த்து ஏதோவொரு யானை பொம்மை ஒன்று எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். கடையின் முகப்பில் இருபக்கமும் அடைப்பு கிடையாது என்பதாலும் வாசலில் தொங்கும் பெரிய மரபொம்மைகள் சாலைத்திருப்பத்தில் இருந்தே தெரியும். அப்படித் தொங்கவிடும் எந்த பொம்மையும் அதிகபட்சம் ஒருவாரம் பத்துநாள் தான், அதற்குள் விற்றுவிடும்.

கலர் கலரான பிளாஸ்டிக் பொம்மைகளைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்ட போது சாமுவேல் வேடிக்கையாகத்தான் சிரித்தார். அது ஏற்படுத்தப்போகும் சுனாமி மாற்றத்தைப் பற்றியோ அதில் அடித்துச் செல்லப்படப்போகும் தன் தொழிலைப் பற்றியோ மூழ்கப்போகும் பொம்மைக்கடை பற்றியோ அவர் அறியாதவராகவே இருந்தார். கடையும் தொழிலும் சிறுத்து ஒடுங்கிக் காணாமல் போய்த் தள்ளுவண்டியில் தெருவுக்கு வந்து அவரும் அவர் செய்யும் மரயானையும் மெலிந்து வருடங்கள் இருக்கும்.

“வாய மூடியே சாதிச்சுட்ட!” ஆணியில் தொங்கும் அரைக்கைச் சட்டையை எடுத்து உதறி நடந்தபடியே பொத்தான்களைக் கோபத்தில் வேகமாய்ப் போட்டுக்கொண்டு சார்லஸ் கிளம்பினான்.

“இன்னும் கொஞ்சநேரம் இருந்துட்டு அப்புறம் ஊருக்கு போவலாம்ல…!.”

சார்லஸ் பதில் ஏதும் சொல்லாமல் போய்க்கொண்டிருந்தான். “இந்தா, இத பேரன்கிட்ட கொடு…” மேசையில் பழைய செய்தித்தாளுக்குள் சுருட்டி வைத்திருந்ததை மகனிடம் நீட்டினார். போகும் வேகத்தில் வாங்கிப் பிரித்துப் பார்த்தவன் “இம்புட்டு நேரமா கத்திட்டிட்டுக் கிடந்தேன், திரும்பவும் பேரனுக்குனு ஆனை பொம்மையக் கொடுக்க!” சுற்றியிருக்கும் செய்தித்தாளைக் கிழித்தெறிந்து பொம்மையை வீசி எறிந்தான். காரைபெயர்ந்த தரையில் பக்கவாட்டில் விழுந்த பொம்மை சறுக்கியபடி சுவரில் மோதி உடைந்து போனது.

தும்பிக்கை உடைந்து தரையில் கிடக்கும் மரயானையைக் கிழவரின் கண்கள் அசைவற்றுப் பார்த்தன. காட்டில் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் யானை போல் அந்த உடைந்த பொம்மை அசைவற்று விகாரமாய்க் கிடந்ததைக் கிழவர் மௌனமாகப் பார்த்தபடியே இருந்தார். இருவருக்கும் பேச்சு மறந்துபோனது. சிறிது நேரம் உடைந்த பொம்மையையும் அப்பாவின் முகப்போக்கையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்த சார்லஸ் எதுவும் பேசமுடியாமல் திரும்பிப்போனான்.

கிழவர் மெல்ல முணுமுணுத்ததார் ”தும்பிக்கை இழந்த ஆனை அடையாளம் இழந்த மனுசன் மாதிரி…!”

கரிய பெரிய ஆண் வாரணம்! தன் நீண்ட வலுவான வெள்ளைத் தந்தத்தால் இரவின் அடர்ந்த துகள்களைக் கீறி எறிந்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது. நிற்காமல் விசிறும் அதன் சாம்பல் நிறக் காதுகளுக்குள் தொடர்ந்து கேட்கிறது கொட்டு சப்தம். கானகமே இடிந்து விழும்படியான ஓசை அது. பாறைகள் அதிர ஓடி மலை உச்சியை அடைந்த வாரணம், தன் சிறிய கண்களால் சாமுவேலைத் திரும்பிப் பார்க்கிறது. அந்தச் சிறிய கண்கள் ஏதோ சொல்ல விழைந்த தருணத்தில் யாரோ அதை விரட்டுவதைப் போல… மொத்த கானகமே கறுப்பு உருவம் கொண்டு அதைத் தள்ளியதைப் போல… அந்தக் கருத்த பேருடல் மலை உச்சியில் இருந்து பிளிறியபடி செங்குத்தாய்ச் சாயும்போது சாமுவேல் கட்டிலில் பதறி எழுந்து உட்கார்ந்தார்.

தூரத்தில் தென்னை மட்டை விழும் சப்தம். கண்ணில் தென்படுவதை எல்லாம் இருட்டு விழுங்கியிருந்தது. இரவுப்பூச்சிகளின் சீரான ரீங்காரம். அறையின் மின்விளக்கை இட்டுப் பார்த்தார். மணி பதினொன்று. அலமாரியில் சரித்து வைத்திருக்கும் உடைந்த யானை பொம்மையின் மரக்கண்கள் அவரை அசைவற்றுப் பார்த்தபடியே இருந்தன. கனவில் பார்த்த களிறின் அதே பரிவு குழைந்த பார்வை… எதையோ சொல்ல விரும்பும் மௌனப்பார்வை!

“ஏசப்பா..!” பாசிமாலையோடு கழுத்தில் தொங்கும் சிலுவையில் முத்தமிட்டார்.

மண்பானையில் ஒரு குவளைத் தண்ணீர் குடித்து முடித்ததும் கனவின் பிம்பம் உடைந்த போனது. மேற்கூரையின் இடைவெளியிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது.பெட்டியின் மேலிருக்கும் குளிர் குல்லாவை எடுத்து அணிந்து கொண்டு மின்விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தார்.

கண்கள் தூங்க மறுத்தன. விட்டத்திலும் வேழத்தின் அதே சிறிய கண்கள்… அதே மௌனப்பார்வை. மீண்டும் மெல்ல முணுமுணுத்தார் ”தும்பிக்கை இழந்த ஆனையும் அடையாளம் இழந்த மனுசனும் ஒன்னு…!”

உடம்பில் குளிர் ஏற கண்களை இறுக மூடியபடி கம்பளிக்குள் முகத்தைப் புதைத்தார். சில நிமிட ஓட்டத்திற்குப்பின் மீண்டும் தூக்கம் தலைக்கேறியது.

கதவு தட்டும் சப்தம்….!!

போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தார். எந்தவொரு அவசரமும் பரபரப்புமற்ற சீரான கதவு தட்டும் ஓசை. இத்தனை இனிமையாய் பொறுமையாய்க் கதவு தட்டப்படுமா என்ன?

யாராக இருக்கும்? ஒருவேளை ஊருக்குப் போன மகன் மனசு கேட்காமல் திரும்பி வந்திருப்பானோ? மின்விளக்கை இட்டார். நேரம் பன்னிரெண்டைக் கடந்திருந்தது. கம்பளியை மேலுக்கு சுற்றியபடி எழுந்து கதவைத் திறந்தார்.

தூக்கிவாரிப் போட்டது!

காய்ந்த களிமண் நிறத்தில் பெரிய வேழம் ஒன்று பின்னால் திரும்பி நின்றுகொண்டிருந்தது, தன் சிறிய வாலால் வாசல் கதவைச் சீரான இடைவெளியில் தட்டியபடி..!.

சாமுவேல் உடம்பின் அத்தனை வியர்வைச் சுரப்பிகளும் ஒருசேர உச்சவேகத்தில் இயங்கின. கனவுதான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணை மூடித் திறந்தார். அதே காட்சி! தன் சாம்பல் நிற காதுகளை விசிறியபடி பின்னால் திரும்பி நிற்கும் வேழம்… திரும்பவோ பிளிறவோ இல்லை…. இரவுப்பூச்சிகளின் ஓசையைவிட அவரது இதயத்துடிப்பு சப்தமாய்க் கேட்டது.

வேகமாய்க் கதவைச் சாத்தி உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார். குளிர் குல்லாவைக் கழற்றித் தூக்கி எறிந்தார். பதட்டம் பயம் வியப்பு எதுவென்று சொல்ல முடியாத உணர்வு!. குளிர்ந்த பானைத் தண்ணீர் தொண்டைக் குழியைக் கடந்ததும் உடம்பு நிதானித்தது. காடோ மலையோ இல்லாத கிராமத்தில் எப்படி ஆனை? ஒருவேளை பெரிய எருமையாக இருக்குமோ? ஆனால் கொம்பில்லை….வேறு ஏதாவது அமானுஷ்யம்!!

உடம்பு மேலும் ஜில்லிட்டது. உள்ளடங்கிய நெஞ்சுக்கூட்டில் தொங்கும் பாசிமாலையின் சிலுவையை எடுத்து கீழ்உதட்டின் மேல் வைத்து சில நிமிடங்கள் கண்கள்மூடி ஜபித்தார்.

கதவுத் தட்டும் சப்தம் கேட்டு கொண்டேயிருந்தது.வீட்டின் மூலையில் கிடந்த பெரிய மரக்கட்டை ஒன்றை கையில் எடுத்து கொண்டார். அத்தனைப் பெரிய களிறை இந்தச் சிறிய மரக்கட்டை என்ன செய்துவிட முடியும்… அதெல்லாம் யோசிக்கவில்லை.கதவை அரைவிட்ட வடிவில் திறந்தார். கருத்த தடிய சணல் கயிற்றைப் போன்ற வால்பகுதியின் மயிர்கற்றைகள் முகத்தில் பட்டன. கனவில்லை! நிஜம்தான்.

கட்டையை மேலே ஓங்கி உதடு ஜபித்தபடி பக்கவாட்டில் முன்னேறினார். கோடுகோடாய்ச் சுருக்கங்கள் தழதழக்கும் அதன் மேலுடம்பில் தொங்கும் மணிகளின் ஓசையும் சாமுவேலின் இதயத்துடிப்பும் ஒரே விசையில் ‘கணகண’வென அடித்தன. முன்னால் சென்று பார்த்தார். தும்பிக்கை அறுந்த யானை!

உடம்பு நடுங்கியது. கையிலிருக்கும் மரக்கட்டை கீழே விழுந்தது.வேழத்தின் சிறிய கண்கள் சாமுவேலைத் திரும்பிப் பார்த்தன. அத்தனை ஆழமான மௌனப்பார்வை அந்தச் சிறிய கண்களில்….

மூர்ச்சைக்கு முந்தைய நிலையில் அவரது உடல்… ஒரே ஓட்டமாய் உள்ளே நுழைந்தார். சுற்றிவிடப்பட்ட நாணயமாய்ச் சுழன்ற கிழவரின் பார்வை அலமாரியில் சரிந்துகிடக்கும் உடைந்த பொம்மை மீது வீழ்ந்தது. தும்பிக்கை உடைந்த மரயானை; இருபக்கமும் தொங்கும் அதே மணிகள்…

தலை கிறுகிறுத்தது. கதவுத் தட்டும் சப்தம் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. கண்கள் செருகி படுக்கையில் விழுந்தார். கண் விழித்தபோது பொழுது புலர்ந்திருந்தது.

கதவை கொஞ்சம் கொஞ்சமாய்த் திறந்து பார்த்தார். எதிர் சாலையில் ஒன்றிரண்டு சாம்பல் கறுப்பு நிற மாடுகள்… வெளியே வந்து பார்த்தார். வாசலில் மரக்கட்டை அதே இடத்தில் கிடந்தது. ஆனால் அத்தனை பெரிய உருவத்தின் கால்தடம் ஏதுமில்லை. நம்ப மறுத்து குறுகலாகவும் வளைந்தும் ஓடும் பக்கத்துத் தார்சாலைக்குப் போய் பார்த்தார். உலோக யானை ஒன்று வந்து போனதைப் போல் தார்சாலை முழுதும் குண்டுகுழிகள்… ஆனையின் சாணப் பிண்டங்களோ அது உடைத்துப்போட்ட மரக்கிளைகளோ எங்குமில்லை!

எத்தனை முயற்சித்தும் துதிக்கை அறுந்த வேழம் நினைவுகளில் மீண்டெழுந்து கண்முன் வந்து கருப்பாய் நின்றது. அன்றைய தினம் சாமுவேல் தள்ளுவண்டியில் பொம்மைகள் விற்க வெளியே போகவில்லை. உள் அறையில் அடுக்கி வைத்திருக்கும் மரக்கட்டைகளில் வழவழப்பானதை எடுத்து வந்து வாசல் நிலைபடியில் உட்கார்ந்தார்.

அன்றைய விடியலைப் போன்றதொரு புத்தம் புதிய மரயானை ஒன்று செய்யத் தொடங்கினார். அழகாய்… நேர்த்தியாய்… கம்பீரமாய்… முழு நீளத்துதிக்கையுடன்….அதன் பேருடலை மறைக்கும்படி நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்காரத் துணி… துதிக்கையின் பாதிவரை நீளும் நெட்டிப்பட்டம்…

கிழவரின் பலமணி நேரங்களை அந்த மரவேலை விழுங்கிய பின் வண்ணம் பூசப்படாத வெள்ளை நிற மரஆனை நிலைப்படியில் நின்று கொண்டிருந்தது. வேலை முடிந்த பிற்பாடுதான் கவனித்தார். இருட்டு எப்பவோ கவியத் தொடங்கியிருந்தது. அதுவரை மறந்து போயிருந்த பசியும் தாகமும் நினைவுக்கு வந்தன. சாப்பிட்டுவிட்டுக் கதவை அடைக்கும் முன் ஒருமுறை வீட்டைச் சுற்றிப் பார்த்தார். தெருவிலும் ஆட்கள் இல்லை. இருட்டின் ஜாடியில் எந்தவொரு பூதமும் ஒளிந்திருக்கவில்லை. செய்து முடித்த புது வெள்ளைமர வேழத்தை தகரப்பெட்டியின் மேலே வைத்தார். ஜபித்து விட்டுப் படுத்தவர் அப்படியே கண் அயர்ந்தார். முழுநாளின் வேலை அயர்ச்சி அவரை ஆழ்ந்த தூக்கத்தின் அடிமட்டம் வரை மூழ்கடித்தது.

வாசல்கதவு சீரான இடைவெளியில் மெதுவாய்த் தட்டப்படும் அரவம்! கனவுலகின் உயரமான படிக்கட்டில் நின்று கொண்டிருக்கும் அவரது உள்ளுணர்வு அந்த மெல்லிய ஒலியை உணர்ந்து கனவிலிருந்து பிரித்தெடுக்கச் சில நிமிடங்கள் பிடித்தன. தூக்கம் விழித்தெழுந்து கட்டிலில் உட்கார்ந்தார்…

நேற்று கேட்ட அதே சப்தம்! பின்னிரவு கடந்திருந்தது. கதவுக்கு மறுபக்கம் காத்திருப்பது எது? அந்தக் கேள்வி எழுந்த விநாடியில் மீதமிருக்கும் சொற்ப தூக்கத்தையும் கண்கள் உதறிக் கொண்டன. குளிர்ந்த நீரை முகத்தில் இரண்டு மூன்று முறை தெளித்துக் கொண்டார். ஒரு பக்கமாய் காதை வைத்து கதவில் சாய்ந்து கேட்டுப்பார்த்தார். செவிக்குள் ஓங்கி அடித்தது கதவு தட்டும் ஓசை!.

எச்சரிக்கையாய் கையில் மரக்கட்டையை எடுத்து கொள்ளவோ வாசல் மின்விளக்கை இடவோ அரைவிட்ட வடிவில் கதவைத் திறந்து எட்டிப்பார்க்கவோ பயத்தில் கண்களை இறுக மூடிக்கொள்ளவோ தோன்றவில்லை. வெளியே காத்திருக்கும் காட்சி எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தோடு ஒரே வீச்சில் கதவை முழுதாய்த் திறந்தார்.

பௌர்ணமியின் அப்பழுக்கற்ற ஒளியில் நிலவிலிருந்து இறங்கி வந்ததைப் போல் பிரம்மாண்ட வெள்ளை நிற வேழம்! வீதியை நோக்கி நின்றபடி மத்தகத்தை இடதும் வலதும் ஆட்டிக்கொண்டு குடிசையின் வாசலில் அதன் பெருத்த பின்பக்கம் தெரியும்படி திரும்பி நின்று கொண்டிருந்தது. ஜபிக்கவும் உதடு மறந்து போனது. தான் செய்யும் களிறு இத்தனை பிரம்மாண்டமானதா? முதன்முறை யானையைப் பார்க்கும் சிறுவனின் உற்சாகத்தோடும் இனம்புரியாத அச்சத்தோடும் தன் உறைந்த பார்வையை அதன் உடலெங்கும் செலுத்தினார்…

மர யானையில் அவர் பொறித்திருந்த சூரியகாந்திப்பூ வேலைப்பாடுடன் கூடிய அதே அலங்காரத் துணி! குளிர்க்காற்று முகத்தில் வீசியது. முன்னால் சென்று பார்த்தார். அதன் பரந்த நெற்றியில் மரயானையில் செய்த அதே நெட்டிப்பட்டம்!! அறுபடாத துதிக்கை… சின்னச்சின்ன வெள்ளைக் கிறுக்கல்களாய் சுருக்கமேவிய தோல். பல மரக்கட்டைகளை ஒன்றாய் இறுகக்கட்டிய உறுதியான கால்கள். தன் நீண்ட வெள்ளைத் துதிக்கையைத் தரையோடு உரசியபடி வெண்ணிற வாரணம் உயிர்ப்பு வழியும் தன் சிறிய கண்களால் மௌனமாய் அவரைத் திரும்பிப் பார்த்தது. பிளிறவில்லை…

சாமுவேல் கிழவர் இப்போது கடவுளாகப் பரிணாமம் எடுத்திருந்தார். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவை உயிர்ப்பித்த சக்தி தான் தன்னுள்ளும் இறங்கியிருப்பதாக நம்பினார். நித்தம் நகரும் இரவின் நாட்குறிப்புகள் அவரது நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தின. இத்தனை பிரம்மாண்டமாய் இவ்வளவு நேர்த்தியாய் படைப்புக்கு உயிர் கொடுப்பவன் நிச்சயம் தேவனாகவோ இல்லை தேவதூதனாகவோ தானே இருக்க முடியும்…?

பகலில் உருப்பெறும் அவரது கற்பனைகள் இரவில் உயிர் பெற்று வந்தன. படைப்புலகின் எல்லையைத் தாண்டி பறக்கத் தொடங்கினார். இயற்கை சொல்லும் நியமமும் வரம்பு மீறும் அவரது கற்பனையும் ஒன்றோடொன்று மல்லுக்கட்டிப் பார்த்து முடியாமல் இறுதியில் கைகோர்த்துச் சமரசம் செய்து கொண்ட புள்ளியிலிருந்து அவரது படைப்புகள் உயிர்பெறத் தொடங்கின. தினமும் வெவ்வேறு யானைகள்… ஒவ்வொரு விதமாய்…

யானையின் படைப்பு இலக்கணத்துக்கு உட்படாத பொம்மைகளைச் செய்யத் தொடங்கினார். வேழத்தின் கருத்த உடலில் சேவலின் சிவப்புக் கொண்டையோடு; நாயைப் போல் சுருண்ட வாலோடு; ஒளியும் இருட்டும் புணர்ந்தது போன்ற கருப்பு வெள்ளை நிறத்தில், செங்குத்தாய் கீழ்நோக்கி நீளும் தந்தங்களோடு, காற்றில் துடுப்பிடும் பெரிய வெள்ளைச் சிறகுகளோடு!!

ஆனால் தான் உயிர்ப்பிக்கும் இயற்கை நீதிக்கு முரணான படைப்புகள் அழகிலும் வனப்பிலும் சற்றும் குறைந்ததாய் இருக்கக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தார். அவரது கற்பனையை நிதர்சனத்தில் சுமந்துவந்த வாரணங்களும் அவர் எதிர்ப்பார்ப்பை விட மேலானதாகவும் பிரமிப்பூட்டுவதாகவுமே இருந்தன. வேழத்தின் ஸ்பரிச வெப்பத்தை ஒவ்வொரு குளிர்ந்த இரவிலும் அவரால் உணர முடிந்தது. சொரசொரவென இருக்கும் அதன் உடலைத் தடவிப் பார்க்கும்போது அவரது உள்ளங்கை அணுக்கள் சொன்னது அந்த உணர்வு மெய்யென்று. பரிவு ததும்பும் வேழத்தின் சிறிய கண்களுக்கு சாமுவேல் கிழவரும் பழகிய பாகனாகவே தெரிந்தார்.

தினமும் சொல்லி வைத்தாற்போன்று பின்னிரவில் களிறு தோன்றிக் கதவைத் தட்டும்…! சாமுவேல் பார்வையிடத் தயாராய் வாலை ஆட்டியபடி பின்னால் திரும்பியபடி நிற்கும். சாமுவேலும் தான் செய்த மரயானை சதை உருவில் எந்தளவு நுட்பமாய் வந்திருக்கிறது என்று வெளியே வந்து பார்ப்பார். தன் படைப்பின் நேர்த்தியை பார்வையிட வரும் சிற்பியைப்போல்….

கருவிழிகள் அச்சத்தில் உருளவோ, தொண்டைக்குழி காயவோ, உதடு ஜபிக்கவோ தேவையற்றதாகிப் போனது. தினமும் மரபொம்மையைப் பின்னிரவின் இருட்டில் நிஜமாய்ப் பார்ப்பது அவருக்கு ஒரு சாதாராண நிகழ்வாகிப் போனது, ஏதோ பட்டனைத் தட்டியதும் சுழலும் மின்விசிறியைப் போல…

வேலைக்குப் போகவும் மறந்திருந்தார். தள்ளுவண்டி தூசி படிந்தும் தார்ப்பாயால் மூடப்பட்டும் பழைய ரப்பர் சக்கரங்கள் சங்கிலியால் கட்டப்பட்டும் அதே இடத்தில் அப்படியே நின்றிருந்தது. பசியும் தாகமும் தேவையற்ற பாரமாகிப் போனது. பேருக்கு கிடைப்பதை சாப்பிட்டபடி வீட்டு வாசல்படியில் அமர்ந்து, பழைய ரேடியோவை பக்கத்தில் வைத்துக்கொண்டு அன்றாடமும் மரயானை செய்யும் வேலை தான். ஏன் யானை மட்டும்? என்ற கேள்வி இதுவரை அவரது கைவிரல்கள் கேட்டதில்லை.

“ஆனைய பாத்தியா…?”

“நம்ம ஊரு கோயில்ல ஏது ஆனை?”

“கோயில்ல இல்ல நம்ம ஊரு தெருல…!”

“ஆனைலாம் சின்னவயசுல ஊருக்குள்ள பாத்தது. இப்போலாம் எங்குட்டு வருது? நீ ஏன் திடீர்னு ஆனைய பாத்தியான்னு அடிக்கடி வரவன் போறவன்கிட்டெல்லாம் கேக்க? நேத்து முருகேசன்கிட்ட கேட்டியாக்கும்?. அவன் ஊர் முழுசும் சொல்லிட்டுத் திரிதான்….” கழுத்தில் தொங்கும் பழுப்புநிறத் துண்டைச் சரிசெய்து கொண்டு மிதிவண்டியில் ஒற்றைக்காலை ஊன்றி நின்றபடியே துரை கேட்டபோதும் கிழவர் ஏதும் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்தார். உயிர் கொடுக்கும் கடவுளின் மெத்தனச் சிரிப்பு.

ஊர் முழுதும் கிழவரின் போக்கு பேச்சுப்பொருளாகத் தொடங்கியிருந்தது. நாசுக்காக முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது காதுபடவே சப்தமாய்ப் பேசிக் கொண்டனர். “பெருசு மரபொம்மைகளோட ஒத்தையா இருக்குல அதான் புத்தி பேதலிச்சுட்டு..!.”

கிழவரின் கைவிரல்களில் மரவேழம் நித்தம் ஒன்று உயிர்பெறுவதை அவர்கள் அறியவில்லை. மகனைத் தொலைபேசியில் அழைத்துத் தன் கைசெய்யும் மாயத்தைப் பற்றிச் சொன்னார். கண்டுகொள்ளப்படாத மரப்பொம்மைகள் உண்மையில் உயிரற்றதில்லை என்று வாதிட்டார். பேரனைக் கூட்டி வந்தால் அவனுக்கு இரவு உயிர்பெறும் யானையைக் காட்டுவதாக அழுத்தமாய்ச் சொன்னார்.

பேரனைப் பார்ப்பதற்கும் தன் தனிமையைப் போக்குவதற்கும் கிழவர் ஏதோ உளறுகிறார்… என்று தோன்றியது மகனுக்கு. ஒருவேளை அவர் விருப்பம்போல் தன் மகனோடு ஒன்றிரண்டு நாட்கள் அங்கு சென்று தங்கி வந்தால் அப்பாவின் மனநிலை தேறும் என்று நினைத்தவன் இரண்டுநாட்கள் கழித்து வருவதாகச் சொன்னான். அப்பாவிடமிருந்து கைப்பேசியை வாங்கிய பேரன் கேட்டான் “தாத்தா இந்தவாட்டி ஊருக்கு வந்தா எனக்கு என்ன செஞ்சு தருவ?”

“பஞ்சவர்ண ஆனை”

பஞ்சவர்ண வேழம் செய்து முடிக்க இரண்டு நாட்கள் பிடித்தன. நீலநிற துதிக்கையும் பச்சை மஞ்சள் வெள்ளையும் மேவிய பெருத்த உடலும் சிவப்புநிற நீண்டத் தந்தங்கள் கொண்ட பஞ்சவர்ண வேழம்!

தாத்தா செய்யும் பஞ்சவர்ண மரயானையை வேடிக்கைப் பார்த்தபடியே கன்னத்தில் கைவைத்துச் சம்மணமிட்டுப் பக்கத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பொம்மை செய்யும் மரவாசமும் இழைப்புளி மரத்துண்டில் ஏற்படுத்தும் சப்தமும் பிடித்திருந்தது. அப்பாவைப்போல் ஏறிய நெற்றியில் சுருக்கங்கள் விழக்கேட்டான்…

“தாத்தா இது கீ கொடுத்தா ஓடுமா…?”

“இது என்ன பிளாஸ்டிக் பொம்மையா…? உயிரோட வரப்போற மரபொம்மை!”

“நெஜமா ஆனை ராத்திரி உயிரோட வருமா?”

“கட்டாயம் வரும் மக்கா… தாத்தா சொல்லுதேம்ல…” மறுபடியும் தலைகுனிந்து அதன் வாலுக்கு நீலவண்ணம் கொடுக்கத் தொடங்கினார்.

“கிழவனுக்கு ஏதோ ஆயிட்டு…!.” சார்லஸ் முணுமுணுத்துக் கொண்டான். அப்பாவின் இந்த பொம்மை விளையாட்டில் அவனுக்குப் பெரிதாய் நாட்டமோ எதிர்ப்பார்ப்போ இல்லை.

பஞ்சவர்ண வேழத்திற்காக அவர்கள் காத்திருந்த அன்றைய இரவு ஒரு கிழட்டு ஆமையைப்போல் மெதுவாக நகர்ந்தது. சார்லஸ் பொம்மைகள் இருக்கும் அறையில் பாயை விரித்து சீக்கிரமே படுத்துத் தூங்கிவிட்டான்.

“ஆனை எப்போ தாத்தா வரும்??”

“நடுராத்திரிக்கு மேல…”

தாத்தாவும் பேரனும் ஆளுக்கு ஒரு கறுப்புக் கம்பளியைச் சுற்றிக்கொண்டு கதவைப் பார்த்தபடியே தரையில் உட்கார்ந்திருந்தனர். வாசல் மின்விளக்கை அணைக்கவில்லை, ஒரு நொடியும் சிந்திவிடாமல் வேழத்தின் ஐந்து நிறங்களையும் பார்க்கத் தோதுவாய் மஞ்சள் வண்ணம் பரப்பியபடியே வாசலில் குண்டுபல்ப் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

கதவின் இடுக்கு வழியே சாமுவேல் கிழவர் கண்களைச் சுருக்கிப் பார்த்தார். நிலைகொள்ளாத மனதோடு கதவைத் திறந்து வெளியே போய்ப் பார்த்தார். இரவுக்காற்று களிறின் பிளிறலாய்ச் சப்தம் எழுப்பியது. தூரத்தில் தெருநாய்கள் ஊளையிட்டன. தெருமுனை வரை நடந்து பார்த்துவிட்டு வந்தார். பல்லாயிரம் வாரணத்தைப்போல் கரிய இருள் அவரை மௌனமாய்ப் பின்தொடர்ந்தது. எந்தவொரு அசைவோ சப்தமோ இல்லை. மீண்டும் குடிசைக்குள் நுழைந்து குந்தி உட்கார்ந்து கொண்டார். பேரன் அவனையே அறியாமல் உட்கார்ந்தபடி தூங்கிப்போயிருந்தான். சாமுவேலின் கிழட்டுக் கண்கள் மரக்கதவைப் பார்த்தபடியே இருந்தன. உலகின் தட்டப்படாமல் இருக்கும் ஒரே கதவு இதுதான் என்று தோன்றியது.

“தாத்தா உனக்கு ராத்திரி ஆனை காட்டினாரா…?” மறுநாள் சார்லஸ் தன் மகனிடம் சிரித்தபடி கேட்டான்.

“ஏன் தாத்தா, பொய் சொன்ன…?. ஆனை கட்டாயம் வரும்னு நெனெச்சேன் தெரியுமா? ஊர்ல பிரெண்ட்ஸ்ட்டல்லாம் கூட சொல்லிருந்தேன்!”

சாமுவேல் பதில் ஏதும் பேசவில்லை. மேஜையில் இருக்கும் பஞ்சவர்ண யானையையும் மோட்டுவளையையும் மாறி மாறிப் பார்த்தபடியே இருந்தார். தன்னை ஏமாற்றிய கடவுளையும் மரபொம்மைகளையும் அவர் வாய் பழித்தபடியிருந்தது.

மகன் பேரனைக் கூட்டிக்கொண்டு பட்டணம் கிளம்பிப் போனான். சாமுவேல் செய்தித்தாளில் சுருட்டிக்கொடுத்த மரயானை பொம்மையைக் கூடப் பேரன் வாங்கிக் கொள்ளவில்லை. சுருங்கிய முகத்துடன் ‘போ தாத்தா ஏமாத்திட்ட…!’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அன்றிரவு பல மாதங்களுக்குப் பிறகு சாமுவேல் மது அருந்தினார். அவரது உள்ளடங்கிய வயிற்றில் கடுங்கறுப்புத் திரவம் முறுக்குக் கம்பியாய் இறங்கி மன ஓட்டத்தில் துளையிட்டது. ஏமாற்றிய மர ஆனையின் நினைவு மீண்டும் மூளையைக் குடைந்தது. கழுத்தைச் சாய்த்து ஒரே வீச்சில் மீதமிருக்கும் மதுவைக் காலிசெய்தார்.

“நானா உங்கிட்ட ராத்திரி வரச்சொல்லிக் கேட்டேன்.. நீங்களே தான தினமும் வந்தீங்க…!”

அலமாரியிலும் மேசையிலும் அடுக்கியிருக்கும் மரபொம்மைகள் பதிலேதும் சொல்லவில்லை. மறுமொழி பேசிப்பழகாதவை எப்போதும் போல் இன்றும் மௌனம் காத்தன. கோபமும் போதையும் ஒன்றாய்ச் சேர்ந்து சாமுவேலுக்குத்  தலைசுற்றியது. உலகில் உள்ள அத்தனை யானைகளையும் கழுவேற்ற நினைத்தார். சுற்றும் முற்றும் பார்த்த அவரது கண்கள் பேரன் விட்டுப்போன பஞ்சவர்ண மரவேழத்தின் மீது விழுந்தது. பொம்மையை வேகமாய் கையில் எடுத்து சுவற்றில் தூக்கி எறிந்தார். உடம்பெங்கும் கீறலோடு வெடிப்போடு கீழே விழுந்தது. மறுபடியும் எடுத்தெறிந்தார். கிழித்துப் போட்டக் காகிதத்துகள்களாய் யானை பொம்மை துண்டுதுண்டாய் உடைந்து விழுந்தது. இன்னும் கோபம் அடங்காதவராய் உடைந்த துண்டுகளை எட்டி மிதித்துவிட்டு படுக்கையில் விழுந்தார்.

வீட்டுக்கூரை கீழிறங்கி தன்னைக் கட்டிலில் போட்டு அமுக்குவதாய்த் தோன்றியது. கண்களை இறுக மூட முயற்சித்தும் முடியாமல் தொண்டைக்குழியில் புரட்டி எடுக்கவும் எழுந்து உட்கார்ந்தபோது தரையைக் கவனித்தார்.

யானையின் அழுகிய இறந்த சடலத்தை ஓநாய்க்கூட்டம் குதறியெடுத்ததைப் போல் மரயானை அலங்கோலமாய்த் தரையில் உருக்குலைந்து கிடந்தது. உருவம் சிதைந்து போன யானை பொம்மையை உறக்கம் கலைந்து மிரட்சியோடு கிழவர் பார்த்துக்கொண்டிருக்கும் அதே வேளையில்….வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது.

***


 விஜய ராவணன், சமீப காலமாக சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் தம் கதைகளுக்காக  ‘கலை இலக்கியப் பெருமன்றத்தின்’ 2018ஆம் ஆண்டு விருது பெற்றுள்ளார்.  தொடர்ந்து அரூ, கணையாழி போன்ற இதழ்களில் இவரது வெளியாகியுள்ளார். தொடர்புக்கு – penavummayum@gmail.com

+91-8056392254 (Ph &Whatsapp)

RELATED ARTICLES

4 COMMENTS

  1. *பஞ்சவர்ண வேழம்*

    இரவின் தொடக்கத்தை அந்திசாயும் நேரத்தை நீலத்தை வெறுத்த வானமெனக் குறிப்பிட்டது புதுமெருகு.

    இருபதுகளில் முப்பதைத் தொடாத (சரிதானே?) வயதில் இதன் ஆசிரியருக்கு மரத்தாலான விளையாட்டுச் சாமான்களும் அதன் செய்நேர்த்தியும் தெரிந்திருப்பதே ஆச்சர்யம்தான்.

    அதிலும் “இம்முனுபூண்டு மிருகத்த பொம்மையாக்குறதுல என்னடே இருக்கு? அத்தாதண்டி ஆனைய மரத்துல செய்யணும்….. கண்ணுக்குள்ள நிக்கறமாதி நிசமா முன்ன நின்னு தும்பிக்கைய ஆட்டுதமாதி தோணனும்.. என்று சாமுவேல் சொல்வதில் நாமும் குழந்தைப்பருவத்தில் பொம்மைகளை பொம்மைகளாகக் கையாள்வதில்லை. அவ உயிருள்ளவை என்றே உருவகித்து உல்லாசமடைந்தது நினைவில் நிழலாடுகிறது.

    உடைந்த மரயானையை காட்டில் வேட்டையாடப்பட்ட யானையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதிலிருந்து ஒரு மாய மனப்பிறழ்வுக்கு ஆளானது மிக மெல்லிய நுட்பமாக படிப்படியாக சொல்லப்பட்டவிதம் அருமையாய் அழகாய்….

    பகலில் உருப்பெறும் சாமுவேலின் கற்பனைகள் இரவில் உயிர்பெறுவதை பழகிய பாகனாவதை வாசகனுக்குக் கடத்துவதும் பிரமிப்பு.
    பேரனுக்குத் தந்த வாக்குறுதி பொய்யானபின்பு அவரால் அவரது நடவடிக்கையால் சிதைந்த ஆனை அன்றும் வருமென்று நாமும் நினைக்கத் தொடங்குவதே கதையின் ஹைலைட்.

    💐வாழ்த்துகள்.

    • கதையினைப் படிக்கும் பொழுதே நமக்குள் கற்பனை ஓடுகிறது. பெரியவரின் உருவம் அவர் செய்யும் மர வேழத்தின் உருவம். அத்தனையும் அருமை. இறுதியில் அந்த சிதைக்கப்பட்ட யானை வருமென்றே எதிர்பார்க்க வைத்தது ஈர்ப்பு. கைகால்களின் நரம்புகள் ஈரம் உலர இறுக்கி பிழியப்பட்ட துணி போல் .

  2. Kadhaiyil kattiya uvamaigal anaithum sirapu..kuripaga soap noorai pola meghangal padarnthu irunthana pondra varigal arpudham!!!
    Melum thangaladhu padaipai ethirnoki kathirukum ungal rasigan!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular