Monday, October 14, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்பச்சோந்தி குறுங்கதைகள்

பச்சோந்தி குறுங்கதைகள்

1. ரத்தத் தீவு

கடவுளைத் திருடி வயிற்றை நிரப்பும் ஒருவன் பாலத்துக்கடியில் ராமர் சிலைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அச்சிலைகளில் ஒன்றில் வனத்தில் சீதை தொலைந்த துக்கத்தில் ராமன் அழுது கொண்டிருந்தான். கோணியில் இறுக்கிக் கட்டி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும்போது எல்லா திசைகளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். தொலைதூரத்தில் சைரன் ஒலிக்கப் புதருக்குள் வண்டி மறைந்தது. 

பனை மரங்களுக்கிடையே சஞ்சீவினி மலையோடு சிக்கிக்கொண்ட வால் ஹரே ராம ஹரே ராம என்று அலறியது. கோணிக்குள் இருந்த ராமனின் செவிகளில் விழவில்லை. சீதா சீதா என்று ஒலித்த குரல் கோணிக்கு வெளியேயும் கேட்கவில்லை.

திருட்டு போன இடத்திற்கு விரைந்துவந்த காவலாளிகள் பறக்கும் விமானம் மூலம் துரிதமாகத் திருடனைத் தேடினர். கண்ணிமைக்கும் நேரத்தில் வெங்காயத் தாமரைக்குள் ஓடி ஒளிந்துகொண்டான். தண்ணீரில் இறங்கிய காவலாளிகள் தண்டை ஒடித்துப் பார்த்தனர். ஒடிக்க ஒடிக்கத் தண்டு விட்டு தண்டு பாய்ந்தான்.

மிச்ச மீதியின்றி அனைத்துத் தண்டுகளும் உடைந்துவிட்டன. பனையின் உச்சியில் ஓலைகள் கிடுகிடுத்தன. கிறுக்குப் பிடித்த காவலாளிகள் பனையை வேரோடு சாய்த்தனர்.

அவிழ்க்கப்பட்ட கோணியில் இருந்து கடவுளைக் கீழே கொட்டியபோது, “என் நகைகளை எடுத்துக்கொண்டு என்னை மட்டும் உயிரோடு விட்டுவிங்கள்” என்று காலைப் பிடித்துக் கெஞ்சினான் ராமன். 

ஆ… இது ஐம்பொன் சிலை இல்லை; பித்தளை. 

ஏமாற்றமடைந்த காவலாளிகள் சிலைகளைக் கரைப்புதரில் வீசிச்சென்றனர். விட்டால் போதுமென்றிருந்த ராமன் தென்னிலங்கையை நோக்கி ஓடினான். 

கட்டப்பட்ட கைகள் குதத்தில் தொங்கின.

பின்மண்டையைக் குறிவைத்தான் புத்தன். கடலில் மிதந்தது ரத்தத் தீவு.

*  

2. மாறுவேடம்

 கழுத்து நரம்பைக் கோணூசியில் உருவி பாசுபதஅஸ்திரத்தை வளைத்துக்கட்டிய அர்ஜுனன் வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க பசுவின் சாணத்தைக் கோமியத்தில் கரைத்துக் குளிக்கிறான். மண்டையில் குட்டுவைத்த மருத்துவச்சி கோவிட் தடுப்பூசியைப் புஜபலத்தில் குத்தியிறக்குகிறாள். வில்லோடு வந்த வேட்டுவச் சிவன் வேடுவப் பறிகுழியில் பதுங்கி நடுக்கத்துடன் ஒற்றைக் கண்ணால் எட்டி எட்டிப் பார்க்கிறான். அர்ஜுனனின் இருமலால் சிவனின் உடலைக் கவ்வியது காய்ச்சல். வனாந்திரத்தில் எந்தப் பூவும் மணக்கவில்லை. நாநுனிக்கு எந்தச் சுவையுமில்லை என்று பார்வதியிடம் துணுக்குற்றான். துப்பட்டாவை முகக் கவசமாக்கி வயர்கூடையைத் தூக்கிக்கொண்டு மாமிசம் வாங்கச் சென்றாள்.

நீண்ட வரிசையில் தனக்கான வட்டத்தில் நிற்பதை செல்ஃபி எடுத்துத் தன் கணவனுக்கு அனுப்புகிறாள். வலுத்துக் காயும் வெய்யிலில் தலைசுற்றியது. முழு துப்பட்டாவையும் உருவி கண்கள் மட்டும் தெரிய இறுக்கிக் கட்டினாள். அவள் கண்கள் விண்மீனைப்போல் மின்னின. தன் செல்போன் கேமராவில் தன்னை அழகுபடுத்தி முன் நிற்கும் இளைஞனை நோக்கினாள். பின் நிற்கும் வயோதிகனின் செல்போனில்`பார்வதி என்னைப் பாரடி’ ரிங்டோன் ஒலிக்கிறது. அதிர்ச்சியுற்றவள் தன் சுடிதாரை ஒழுங்கு செய்வதுபோல் பாவனை செய்தாள்.

மாறுவேடத்தில் வந்த சிவன் கண்களால் வளையத்தில் இருந்து பார்வதியை இழுக்கப் பார்த்தான். முகக்கவசத்தை மூக்குக்கும் மேல் போடச்சொல்லி சைகை செய்தாள். அவன்மேலே இழுக்கும்போது வாயின் மேற்பகுதிக்குச் சென்றது. உதட்டின் கரும்பள்ளங்களில் பார்வதியைப் பதுக்கினான். தனிமையில் சந்திப்போமா என்றாள். எனக்குக் காய்ச்சல். கொரோனா முடிந்து பார்ப்போமே என்றான். அவள் இப்போது கண்களையும் சேர்த்து மூடிக்கொண்டாள். துப்பட்டாவை அவிழ்த்து முடிந்த கணத்தில் அவளை அடையாளம் கண்டுகொண்டான்.

அப்போது தெருவில் ஒருவன் கிருமிநாசினி தெளித்துக்கொண்டு வந்தான். அப்புகைமூட்டத்தோடு தொலைந்து போனான் சிவன். கொரோனா தடுப்பு உடைகளோடு மட்கும் குப்பைத்தொட்டியின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தது பாசுபத அஸ்திரம்.

*    

3. மாமிச மஸ்தகம்

 உடல் தசைகளை முறுக்கேற்ற நான்கு தலைகளுடன் அன்ன வாகனத்தில் விரைந்தான் பிரம்மன். சிக்னலின் சாலையோரத்தில் ஒவ்வொரு வாகனத்தையும் இடைமறித்த காவலர்கள் முகக் கவசமற்றவர்களுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். பதற்றமடைந்த பிரம்மன் அன்னத்தின் சிறகுகளை ஒடித்து முகத்தில் கட்டிக்கொண்டான்.

‘நீங்கள் சொன்ன இடத்திற்கு வந்துவிட்டேன். இதற்குப் பிறகு எப்படி வருவது”. “எங்கள் பணியாள் வந்து உங்களை அழைத்துவருவார்” என்றாள். சிவப்புநிறத் தொப்பி அணிந்த பையன் “வாங்க சார்” என்றான். படிக்கட்டுகள் வழியாகப் பின்தொடர்ந்த பிரம்மன் சுவர்களில் ஒட்டியிருந்த மசாஜ் விளம்பரச் சுவரொட்டிகளைக் கண்டதும் குதூகலமடைந்தான். பணத்தைக் கட்டிவிட்டு அறைக்குள் சென்றவன் மலைமுகட்டில் ஏறிக்குதித்து விளையாடுவதுபோல் பருத்த முலைகளைப் பற்றியேறி விளையாடிக் கொண்டிருந்தான். மிளகு போன்ற மார்க்காம்புகளின் சுவையில் மயங்கிக் கடித்து விழுங்கிவிட்டான். 

‘அடப்பாதகா! என் காம்புகளைக் கொடு… இல்லையேல் உன்னைத் தொட விடமாட்டேன்” என்றாள். “போகும் போதுகொடுத்துவிட்டுப் போகிறேன்” என்றான். “உன்னை இப்படியே விட்டால் என்னையே விழுங்கி விடுவாய். முதலில் என் காம்புகளைக்கொடு” என்றாள். “சரி நீயே எடுத்துக்கொள்” என்றபடி முடிக்கற்றைகளை முகர்ந்தான். இரைப்பையில் கைகளை விட்டுத் துழாவிக் கொண்டிருக்கையில், நறுமணத்தில் ஒவ்வொரு கற்றையாய்க் கடிக்கத் தொடங்கியிருந்தான். ஆவேசமடைந்தவள் பிரம்மனின் ஒரு தலையைப் பிய்த்துவிட்டாள். இனி உனக்கு எந்த வாடிக்கையாளனும் வரமாட்டான் என்று சாபமிட்டான். மேலும், “அது கபாலமாய் மாறி உன் கையைவிட்டு அகலாது இருக்கும். இனி உன் ஆயுள் முழுக்கப் பிச்சை எடுத்துதான் வயிற்றை நிரப்புவாய்” என்றான். ச்சீ போ என்று லிங்கத்தின் மீது எட்டி உதைத்தாள். இடுப்புக்குக் கீழே கைகளைப் பொத்தியபடி அலறி ஓடினான் பிரம்மன். கழற்றிய நகைகளை எடுக்கும் போதுதான் மார்க்காம்புகளையும் கழற்றி வைத்தது அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. 

பிரம்மனிடம் மன்னிப்பு கோரினாள். பிரம்மனின் மார்புகளில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. காமத்தால் கிள்ளி எறியப்பட்ட தலையை நினைத்து மூன்று தலைகளும் மாட்டுவால் சூப்பை அருந்திக் கொண்டிருந்தன.

*

4. எரியும் நகரம்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுவிடச் சிரமப்படுகிறான் ராமன். சிவப்பேறிய கண்களுடன் உயிருக்குப் போராடும் தன் கணவனைக் காப்பாற்ற சிலிண்டரைத் தேடிச் சென்று விட்டாள் சீதை. மருத்துவமனை எங்கும் தேற்றுவாரற்ற கேவல்கள் காதை அடைக்கின்றன. பெருக்கெடுக்கும் கண்ணீர் கங்கையில் கலக்க, கழுகுகளின் சிறகுகளோ வானத்தை மறைத்திருந்தன. பீதியில் உறைந்த நகரம் அங்கும் இங்குமாய் அலைக்கழிகிறது.

 
சிலிண்டரின்றி ஏமாற்றத்துடன் திரும்பிய சீதை ராமனிருந்த படுக்கையில் வேறு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். இங்கிருந்தவர் எங்கே என்று வினவினாள். மூத்திரப்பையைக் கையேந்தியபடி தப்பிச் சென்றுவிட்டார். எந்தப் பக்கமாகச் சென்றார். படிமேல் ஏறிச் சென்றதாக அங்கிருந்த செவிலியர் சொன்னார். எவ்வளவோ தடுத்துப் பார்த்தோம். எல்லாத் திசையிலும் வளைத்துப் பிடிக்க முயற்சி செய்தும் சுவருக்குள் புகுந்து தப்பிவிட்டார். சுவருக்குள் நுழைந்து பிடிக்க முயன்ற எங்கள் சீனியர் மருத்துவருக்கு மண்டை உடைந்தது தான் மிச்சம். யாரும்மா அந்த அதிசய மனிதர். அட நீங்க வேற… வேலைக்குப் போகாமல் தினமும் குடித்துவிட்டு என்னை அடிக்கிற மனுசன் அவர். ஒன்னுக்கும் உதவாத ஆளு அவர். சரி சரி அதெல்லாம் பேசுற நேரமா இது. படியேறி எங்கு சென்றார். வானத்தில் குதித்துவிட்டார். என்ன சொல்றீங்க. அவர் பறவையா என்ன? சும்மா விளையாடாமல் உண்மையைச் சொல்லுங்கள். அதே படுக்கைக்குத் துணையிருக்கும் பெண்ணொருத்தி வலி தாங்க முடியவில்லை. மூச்சுவிட முடியவில்லை என்று முனகியபடியே போனார். மேலும் சும்மா வெட்டியாகப் பேசி நேரத்தை வீணாக்காமல் மேகங்களில் தேடு என்றாள். குழப்பத்துடன் படியேறிச் சென்றாள் சீதை. விரல் தொடும் சுவரை உற்றுப் பார்த்தபடியே மொட்டை மாடிக்குச் சென்றாள். மேகமற்ற வானம் செந்நிறம் பாரித்திருந்தது. உச்சிக்கிளையின் நடுவே கழுத்து மாட்டிக்கொண்டது. பின் கிளையொடிந்து டைல்ஸ் தரையில் தலைகீழாய் விழுந்தான். தரையில் மோதிய ஒலியில் நகரம் அதிர்ந்தது. சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. தன் தோளில் தூக்கிச் சென்றாள். சுடுகாட்டில் பிணத்தை எரிக்கக் கேட்ட பணம் சீதையை விழிபிதுங்கச் செய்தது.  பின் கங்கைக் கரையோரம் மணலைத் தோண்டி புதைத்துவிட்டு வீடு சென்றாள்.


மறுநாள் காலையில் பறக்கும் விமானம் கங்கையைச் சுற்றியலைவதைத் தொலைக்காட்சியில் பார்த்தாள் சீதை. கரையொதுங்கிய பிணங்களைக் கண்டு வாயைப் பொத்தி அழுதாள். மல்லாக்கக் கிடந்த உடலை மிருகம் குதறிக்கொண்டிருந்தது. படித்துறையில் மிதந்த ராமனின் கண்களைக் காகம் கொத்திக் கொண்டிருந்த வேளையில் கழுகொன்று அயோத்தியை நோக்கிப் பறந்தது. கனம் தாங்காது விழுந்த கழுகும் ராமனும் சரயு நதியில் நீராட இடைவிடாது எரிகிறது இரவும் பகலும். 

5.எலும்புக் குவளை

மாட்டு வத்தல் வாங்க கட்டை பையை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றான் தர்மன். பேருந்தில் செல்லும் போது கறி மணக்கும் கட்டப்பையை அருவருப்பாகப் பார்த்து மூக்கைப் பொத்தும் சக பயணிகளில் சிலர் சந்தையில் கூடுதல் எலும்புகளைக் கேட்டு வாங்கிச் செல்பவர்கள். அதிலும் முருகப்பத் தேவர் சந்தைக்கு உள்ளே வராமல் கிலோ கணக்கில் கறியும் வத்தலும் வாங்கிச் செல்பவர். அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால் வெள்ளைத்துண்டால் முக்காடு போட்டு முகத்தையும் மூடிக்கொள்வார். ஒருமுறை தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான் தர்மன். எல்லைக்கு அப்பால் பறந்த பந்து முக்காட்டு மண்டையைப் பதம் பார்த்துவிட்டது. அய்யோ என்று துண்டைக் கழற்றும் போதுதான் தெரிந்தது அது முருகப்பத் தேவர். பந்தை எடுக்கப்போன தர்மனை, அவர் பையில் இருந்து வந்த வத்தல் வாசம் அள்ளிச் சென்றது. மோப்பம் பிடித்ததைக் கண்டுகொண்டவர் விடுக்கென்று பையைத் தூக்கிக்கொண்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் விருட்டென்று சென்றுவிட்டார்.

அன்று சந்தையே தெரியாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா இரண்டாவது அலை உயிர்களைக் காவு வாங்குவது தெரியாமல் ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டிருந்தனர். ஒருவன் மாஸ்க்கை வாய்க்கு மேல் தூக்கியபடி எச்சிலைத் துப்பினான். துண்டால் முகத்தை மூடியிருந்தவன் மூக்கைச் சிந்தி சந்தை மீது எறிந்தான். கறி வாங்காமல் வீடு திரும்ப நினைத்தான் தர்மன். வத்தலற்ற உணவு தொண்டையில் இறங்காது என்பதால் கூட்டம் காலியாகும் வரை இருந்து வாங்கி விட்டுத்தான் வந்தான்.

எலும்புக் குவளையில் கொதித்துக் கொண்டிருந்தது கன்று. முதல் மிடறு உதட்டை எரிக்க, மின்விசிறியில் ஆறவைத்தான். மிதமான சூட்டில் அருந்தி, சலங்கை குலுங்க வாலை அசைத்துச் செல்லும் திரௌபதியை இறுக்கிக் கட்டியணைத்தான். அவள் உடலெங்கும் வத்தல் வாசம். கொம்புகளைப் பிடித்துக் காளையை அடக்குவது போல் தர்மனைத் தள்ளினாள். தள்ளிய உடலை பத்துவிரல்களால் இழுத்துக் கவ்வினாள். இருவரும் வாய் முத்தத்தில் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருந்தனர். தர்மனும் திரௌபதியும் நான்கு பேருக்குத் துரோகம் இழைத்ததாய்த் தெருவெங்கும் ஒரே புலம்பல்.

***

பச்சோந்தி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ராச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது நீலம் இதழில் உதவி ஆசிரியராகப் பணி புரிகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள் ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள்.

மின்னஞ்சல் – poetpacho@gmail.com


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular