Tuesday, July 16, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்பச்சோந்தியின் பக்கம்

பச்சோந்தியின் பக்கம்

குறுங்கதை

பானி

த்திரி வெயில் நெருப்பாய் எரியும் நகரத்தில், வறண்ட நாக்குடன் அலைகிறான் அப்துல் சலாம். நகரமே பூட்டிக் கிடக்கிறது. எங்கும் ஒரு துளி ஈரமில்லை. உயிர்போகும் தாகத்தோடு கடற்கரைக்குச் சென்றான். அங்கே கடலும் பூட்டப்பட்டிருந்தது. சுடும் பாறையாய்த் தகிக்கும் உடல். வெப்பக் காற்றாய் நடனமிடும் உடை. பசியில் தாகத்தில் எரிகுழம்பாய் கண்ணீர் வெடிக்க, மீண்டும் பூட்டிய நகரத்திற்குத் திரும்பினான். வீடுகளின் துளைவழி தாகம் தாகம் என்கிற கதறல். தொற்று அபாயத்தில் துளைகளும் அடைக்கப்படுகின்றன. ஐம்பது பேர் கொண்ட மரண ஊர்வலத்தில் தாகம் தாகம் என்றான். பறையோசையில் நகரம் அதிர ஆடிச்செல்லும் கூட்டத்தில் ஒரே ஒரு தும்மலோசை கேட்க, பாடையை அங்கேயே போட்டுவிட்டுத் தெறித்து ஓடினார்கள். ஏதொன்றும் அறியாத சலாம் காளி கோயிலுக்குள் ஓடி ஒளிந்தான். அங்கே நீர் சொட்டும் சத்தம். தேடிச் சென்று மிடறு மிடறாய்ப் பருகினான். சுடும் உடலில் இருந்து ஆவி பறந்தது. வானில் பறந்த ஆவி கண்டு காந்தி ராமன் பதறி ஓடிவந்தான். நீ யார் உன் பெயர் என்ன, உன் அப்பா பெயர் என்ன என்று விசாரித்தான். என் பெயர் அப்துல் சலாம், அப்பா பெயர் ரஹீம். “எங்களின் வாழ்வை அழிக்க அரேபியாவில் இருந்து வந்தவனே” என்ற வார்த்தைகள் சலாமின் கைகளைத் திருகி முதுகில் குத்தின. நிலையிழந்து வீழ்ந்த சலாமின் வயிற்றிலும் நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி உதைத்தான் காந்தி ராமன். மீண்டும் மீண்டும் அடித்ததில் கிழிந்து தொங்கியது சலாமின் உடை. அவன் கடைவாயில் இருந்து ரத்தம் சொட்டும் சத்தம். மிடறு மிடறாய்க் குடித்தான் காந்தி ராமன். பின் காளியின் நிழலில் இளைப்பாறிய காந்தி ராமனின் வாயின் மீது ஒற்றைக் காலை வானில் செருகிய மிருகம் சிறுநீர் பெய்து சென்றது. 

***

கவிதை

மண்டையோட்டின் முகக் கவசங்கள்

1

எந்த நூற்றாண்டில் பற்றவைத்த நெருப்பு இன்னும் எரிக்கிறது சேரியை. ஊருக்குள் இருந்தபடியே ஊதாங்குழலால் அணைந்த நெருப்பை ஊதிக்கொண்டிருப்பது யார். பசியுற்ற கண்ணனுக்கு மாட்டின் முட்டி எலும்பின் குழம்பைச் சற்று முன்புதான் தட்டிக் கொடுத்தேன். எரிந்தபடியே இடைவிடாது பாடும் புல்லாங்குழலையாவது காப்பாற்றுங்கள். இது விருந்தாளியின் தலைமுறைக்குக் கைம்மாறு அல்லவா.

மண்புழுவைக் குத்தும் கடப்பாரை, நத்தையின் முதுகில் தீப்பந்தம், பட்டாம் பூச்சிச் சிறகுகளில் உருட்டுக்கட்டை, பஞ்சாரத்தின் ஓட்டையில் பெட்ரோல் குண்டு. தப்பித்து ஓடும் சுருங்கிய தோலை சம்மட்டியால் அடிக்கும் வாலிபன் உடைந்த கட்டிலின் கால்களைப் பொறுக்கிப் பத்திரப்படுத்துகிறான். நெளிந்த பீரோவுக்குள் இருந்த மினுமினுப்பை அள்ளி ஓடுகிறார்கள். அங்கொருவன் தலை துண்டிக்கப்பட்ட உடைந்த கூண்டுச் சிலைக்குக் காவிச் சாயம் அடிக்கிறான்.

2

முகக் கவசம் அணிந்த ஓர் ஆணும் பெண்ணும் நடுநிசியில் ஓடுகின்றனர். இருவரையும் துரத்தும் கத்திகள் நந்தனம் சிலையைக் கண்டதும் தரையைத் தொழுதன. ஊரடங்கின் இரவு மயான அமைதியில். நாய் கவ்விய நடைமேடை தவறி விழுந்தது. அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி உருண்டோடும் இரண்டு பனங்கொட்டைத் தலைகள். சமூக இடைவெளியுடன் உறங்கிய குடும்பம் பெண் குழந்தையைத் தேடியலைகிறது.   

3

மண்டையோட்டை முகக் கவசமாக்கியவனைக் கோயம்பேட்டில் கண்டேன். ஓட்டின் தலைப்பகுதியில் வெட்டுத் தழும்பு. தண்டவாளத்தின் அடியில் கிடைத்ததாம். ஒன்றை எடுக்கும் கணத்தில் ஊற்றாய் மண்டையோடுகள் பெருகப் பெருக, மிரண்டு ஓடிவந்துவிட்டானாம். ஓர் தாய் தண்டவாளத்தில் குப்புறக்கிடந்த அரும்பு மீசையின் பாதத்தைக் கன்னத்தில் அழுத்தி அழுகிறாள். சிதறிய ரத்தத்துளிகளில் எண்ணற்ற ரயில்கள் தடதடத்தன.

4

எரியும் தந்தையின் சிதை மீது பாய்கிறாள் மகள். தொற்றில் இறந்த தந்தைக்கு எழுபது வயது. மகளோ என் தந்தைக்கு ஏழு வயதுதான். சில நேரங்களில் என் வானத்தில் தூக்கிப் போடும் பொம்மை. என் நுரையீரலில் இருந்து ஊதிப் பெருகும் பலூன். பிரசவிக்காத என் குழந்தை. எப்போதும் சுமக்கும் எடையற்ற சுமை. இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம் என் தந்தையை. அவர் என் தந்தை அல்ல என் குழந்தை; இன்னும் பிரசவிக்கா குழந்தை என்று கதறியபடியே தன் குழந்தையின் சிதையில் விழுந்து எரிகிறாள். மண்டை ஓடுகளில் மலரும் தாமரை மலர்கள், தொழுவத்தில் கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருக்கின்றன. சிதையின் சுடரை இரவல் பெற்று தேசமே விளக்கேற்ற, பிரபஞ்சமெங்கும் ஒலிக்கின்றன கைதட்டும் ஓசைகள்.  

***

கவிஞர் பச்சோந்தி, இயற்பெயர் ராசு கணேசன். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர். கணையாழி, விகடன் உள்ளிட்ட இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது நீலம் இதழில் துணை ஆசிரியராகப் பணி புரிகிறார். இவரது கவிதைத் தொகுப்புகள் வேர்பிடித்த உலக்கை, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள் ஆகியன..
ஆசிரியர் தொடர்புக்கு: poetpacho@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular