Thursday, June 13, 2024
Homeபுனைவுசிறுகதைநெடுநிலத்துள் - அகரமுதல்வன்

நெடுநிலத்துள் – அகரமுதல்வன்

நெடுநிலத்துள் - ஓவியம் : வல்லபாய்
ஓவியம் : வல்லபாய்

வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் அம்மம்மாவின் குடிசைக்கு முன்னால் சனங்கள் குழுமியிருப்பார்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை தமது மடியில் கிடத்தி நிலத்தில் அமர்ந்திருக்கும் இளந்தாய்மார்கள் அம்மம்மாவிற்காக காத்திருப்பார்கள். மனக்குறை, ஏதென்று தெரியாத பயமும் பதற்றமும் பீடித்தவர்கள் உட்பட பக்தர்களும் வந்துசேர பூமியில் இருள் பூக்கத்தொடங்கியிருக்கும். குடிசையின் வலதுபக்கத்தில் நிற்கும் மிக உயரமான பனையிலிருந்து கூட்டமாய் கிளிகள் சத்தமிட்டு பறக்கும். சாதுவான காற்றிலும் காவோலைகள் உரசி அந்தப் பொழுதின் மகத்துவத்தை ஒரிசையாய் உய்விக்கும். அம்மம்மா குடிசையினுள்ளே இருக்கும் சாமிகளுக்கு பூசை முடித்துவிட்டு, கற்பூரம் எரிந்தபடியிருக்கும்    திருநீற்று தட்டோடு குழுமியிருக்கும் சனங்களுக்கு முன்னால் வந்துநிற்கையில், “அம்மாளாச்சி” என்று உருகியழுது கும்பிடுவார்கள்.

அம்மம்மாவை நானும் இந்தப் பொழுதுகளில் மூக்குத்தி அம்மன் என்று தான் அழைப்பேன். அவளின் மினுங்கும் மூக்குத்தியின் ஒளியே கடவுளை மறுப்பதற்கு ஒரு போதும் இடமளியாது. நெற்றியின் திருநீற்றுப் பூச்சு வசீகரமான புலரியை பெருங்கனிவாய் எல்லோருக்கும் நினைவுபடுத்தும். கையை நீட்டித்  “தா” என்று கேட்டதும் ஒடித்துவைத்திருந்த வேப்பிலைக்கட்டை உடனேயே எடுத்துக் கொடுப்பாள் ஒருத்தி. விரிக்கப்பட்ட ஓலைப்பாயில் அம்மன் சப்பாணி கட்டியிருந்ததும் ஒவ்வொருவராக அவளிடம் நீறுபோட்டுச் செல்வர்.அம்மாளாச்சி.. அம்மாளாச்சி என்று மனதுக்குள் உச்சரித்தபடியேயிருக்கும் சிலரோ அம்மனிடமிருந்து  ஆறுதலான வார்த்தைகளைக் கேட்பதற்காக தமது மனக்குழப்பங்களை கூறுவார்கள். காய்ச்சல் வந்த குழந்தைகளை அம்மனின் வேப்பிலையால் அடித்து தண்ணீர் தெளித்து நலம்பெற முண்டியடிப்பார்கள்.

மூக்குத்தி அம்மன் என்றழைக்கப்படும் எனது தாயின் தாயாரான திருமதி. சிவயோகம் எனக்கு நிறையைக் கதைகளைச் சொல்லி வளர்த்தாள். அவளின் கொடுப்புக்குள் அடைந்திருக்கும் வெற்றிலையோடு கூடிய பொயிலைக் குழைச்சலின் வாசத்தோடு கதைகளைக் கேட்பேன். இந்தப் பழக்கத்தினால் நானும் வெற்றிலை போடப்பழகினேன். காய்ந்த பாக்கை விடவும் பச்சைப்பாக்கில் ஈரப்பதமிக்க துவர்ப்பு இருப்பதாகச் சொல்லி அதையே எனக்குத் தருவிப்பாள்.சிலநேரங்களில் காய்ந்த பாக்கை சீவலாக சீவிக்கொடுத்து “இது காணும் இதற்கு மேல் கேளாதே” என்று கண்டிப்பாள். அம்மம்மாவும் நானும் வெற்றிலை போட்டு ஒன்றாக மென்று துப்பிக் கொண்டு வீட்டின் முற்றத்தில் இரவிரவாக இருந்து கதைத்துக்கொண்டிருப்போம். அந்த இரவுகளில் அவள் சொன்ன கதைகளை எந்தக் காகிதத்திலும் குறித்து வைக்கமுடியாதென என்னுடைய சிறுவயதிலே தெளிவுற்றிருந்தேன்.

நிர்மல வான்வெளியில் அசைகிற உள்ளுணர்வு போலவிருக்கும் அந்தக்கதைகளை இப்போது மீட்டிப்பார்க்கிறேன். ஏராளமான சிதிலங்களோடு உதிர்ந்து போகிற நினைவுகளில் தப்பித்து நிற்கும் சில கதைகள் அலையலாய் மங்கிநிற்கின்றன. அவற்றின் துலக்கம் போதவில்லை. நேற்றைக்கு எனது கனவினில் வெற்றிலை வாசத்தோடும் நரைத்து உதிர்ந்து போன தலைமுடியோடும், மூக்குத்தியுமில்லாமல் பாம்பாய் ஊர்ந்து வந்த அம்மம்மா புதிய கதையொன்றைச் சொன்னாள்.

மோனே நீ பிறந்த அன்றைக்கு தென்மராட்சியில் பெலத்த மழை பெய்துகொண்டிருந்தது. வயிறு குத்தத்தொடங்கி உனது கொம்மா வலியில் துடித்தாள். ஆசுபத்திரிக்கு ஏற்றிச்செல்ல ஒரு வெள்ளைநிற ஆமைக்காரை பிடித்துக்கொண்டு வந்தான் உன்னுடைய கொப்பன். ஓடையில் நீரருந்தும் மேய்ச்சல் மாட்டைப்போல கள்ளுக்குடித்து ஊரை மேய்ந்துவிட்டு வரும் குடிகாரன் அன்றைக்கு கொஞ்சம் பொறுப்பாக நடந்துகொண்டான். இல்லையேல் நீயும் உன் தாயும் மூச்சடங்கியிருப்பீர்கள். வலிதாங்காமல் கதறிக்கொண்டிருந்தவளைத் தூக்கி காரில் ஏற்றினோம். சுய நினைவற்று அப்படியே சட்டையோடு மூத்திரம் போயிருந்தாள். மழையில் நனைந்து வெய்யிலில் மினுங்கும் பனைமரக் கறுப்பு, கட்டை ஆம்பிளையான உன்னுடைய அப்பனே “அம்மாளாச்சி.. அம்மாளாச்சி” என்று கும்பிட்டபடி வந்தான்.

என்னுடைய இடுப்புப்பையிலிருந்த திருநீற்றை எடுத்து அவளின் நெற்றியில் பூசினேன். சாவகச்சேரி ஆசுபத்திரிக்கு போகும் வேளையில் மழையின் இருள் வீதியை மூடியிருந்தது. மின்னலும் இடியும் வெறிகொண்டு விழுந்தபடியிருந்தன. அந்த மழையின் மூர்க்கம் நிலத்தையே அச்சத்தில் மிதக்கச்செய்திருந்தது. கொடுங்கடலை புயற்காற்றில் கடக்கும் பாய்மரக்கலத்தைப் போல போய்க்கொண்டிருந்தது கார். வலியில் கதறி ஓய்ந்து முனகத்தொடங்கியிருந்தாள். பாவஞ்செய்த நிலத்தின் மீது ஊழ் கவிவதைப் போல பெய்யும் மழையைக் கடந்து ஆசுபத்திரியை அடைந்தோம். பனிக்குடம் உடைந்து நீண்ட நேரம் ஆகியிருப்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தை அதைக்குடித்திருந்தால் தப்புவது கஷ்டமென டாக்குத்தர் ஒருவர் சொன்னார். ஆனால் நீ உயிரோடு பிறந்தாய். அக்கணமே மழையின் நடுவே இருள்பிளந்து ஒரு மின்னல் விழுந்தது.

நிலமெங்கும் ஓடிக்கொண்டிருந்த நீரில் இந்திர ஒளியோடியது. மழையின் மூர்க்கம் படிப்படியாக குறைந்து நீராடிய பெண் கூந்தலின் சொட்டைப்போல கிளர்த்திக் கொண்டிருந்தது.

உனது பனைமரக் கறுப்பான அப்பன் கொட்டும் மழையில் கள்ளுத்தவறணையைத் தேடிப்போனான். பிரசவ விடுதியில் தாய்க்கு அருகில் களைப்பாகி அமைதியாய் ஆழ்ந்திருந்தாய். இடையிடையே வீறிட்டு அழவேண்டும் என்பதற்காய் நானே உனக்கு வலியூட்டி அழச்செய்தேன். உன்னுடைய உடலிலிருந்து நஞ்சூறிய மரவள்ளிக்கிழங்கின் வாசனை வருவதை என்னால் உணரக்கூடியதாய் இருந்தது. சிலநேரங்களில் ஒரு நாகத்தின்  வாசனையும் வந்தது. தாயின் முலையிலிருந்து பாலருந்தும் உன் விழிகள் நீலத்துகளாய் ஒளிர்ந்தன. பிறந்து ஆறாவது நாளில் ஆசுபத்திரியிலிருந்து  வீட்டிற்கு வந்தாய். உனது சகோதரங்கள் உன்னோடு கொஞ்சி விளையாடினர். உனது சிறியதிலும் சிறியதுமாயிருந்த சின்னிவிரல்களில் நாகலிங்கமலரின் வாசம் எழுந்து  வீட்டையே அடைத்து நின்றது. பாலூட்டும் நேரங்களில் இரண்டு நாக்குகள் தனது மார்புக்காயில் படுவது போலிருப்பதாக என்னிடம் வந்து சொன்னாள் உன் அம்மை. அதற்கு பிறகு வந்த வெள்ளிக்கிழமையொன்றின் மாலை நேரத்தில் நான் “ஆச்சியிடம்” கேட்டேன். புதிதாக பிறந்திருக்கும் நீ யாரென்று அவள் சொல்லமறுத்தாள். நான் அவளோடு மல்லுக்கு நின்றேன்.கற்பூரத்தட்டின் அந்தப்பக்கம் அம்மனும்  இந்தப் பக்கம் நானுமாய் நின்று பேசிக்கொண்டோம். அவள் நீ யாரென்று சொல்ல மறுத்தாள்.

ஆறு மாதங்களுக்கு பிறகு எங்கள் வளவில் கிணறு வெட்டுவதற்காக மூன்று கூலியாட்கள் வந்திருந்தனர். அதிலொருவனின் பெயர் குத்திகன் என்றான். என்னுடைய ஐம்பது வயதுவரைக்கும் இப்படியொரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. அவனது குடும்பத்தின்  அடி அனுராதபுரமென்று கதைக்கும் போது சொல்லியிருந்தான். கிணறு வெட்டத்தொடங்கி இரண்டு நாட்களுக்கு  மேலாகியும் ஊற்றுக்கண்ணை காணமுடியாதிருந்தது. மூன்றாவது நாளின் மதிய நேரத்தில் கிணற்றின் ஊற்றுக் கண் பத்தாவது அடியில் திறக்குமென குத்திகன் ஆருடம் சொல்வதைப் போல சொன்னான். நிலத்தை மையமாகத் தோண்டிக்கொண்டே இருக்கையில் மண்வெட்டியின் முனை கல்லில் மோதுண்டது. குத்திகன் மீண்டும் அதன் மீது மண்வெட்டியை வீழ்த்துகையில் கிணற்றினுள் அசரீரி தோன்றியது.

 “நாக” என்ற சத்தம் மீண்டும் மீண்டும் ஒலித்தது.குத்திகன் எல்லோருக்கும் குரல் கொடுத்தான். வெளியே நின்ற கூலிக்காரர்கள் என்னை அழைத்தனர். கிணற்றை நான் எட்டிப்பார்க்கையில் ஒரு நந்திவிக்கிரகத்தை தனது கைகளில் தூக்கி வைத்திருந்தபடி அம்மா  “நந்தி.. நந்தி” என்று கத்தினான். கிணற்றில் நீர் பொங்கிக்கொண்டிருந்தது.

அவன் எழுப்பிய ஓசை ஊருக்கெல்லாம் கேட்டது. கிணற்றுக்குள் இருந்து நந்தியை சனங்கள் கட்டி இழுத்தனர். குத்திகன் மட்பாண்டங்கள், சங்கு, சிற்பி, கூரையோடுகள், செங்கற்கள் போன்றவற்றை நந்தியிருந்த இடத்திலிருந்து கண்டெடுத்தான். நந்தி விக்கிரகத்தை மூன்று குடம் நீரெடுத்துவந்து குளிப்பாட்டினேன். சனங்கள் பூக்களை ஆய்ந்து வந்து நந்தியின் மீது சொரிந்தனர். சிறுவர்கள் தேவாரம் இசைத்தனர். குத்திகன் மிச்சப்பொருட்களையும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்தான். நீ பிறந்த  ராசியே எனது வளவிற்குள் இப்படியான பெறுமதியான பொருட்கள் கிடைத்தன என ஊரெங்கும் பேச்சாகியது.

இயக்கப்பிள்ளையள் சிலர் வந்து பார்த்தனர். இயக்கத்தின் ஊடகப்பிரிவு போராளிகள் வந்து அதனை புகைப்படங்கள் எடுத்தனர். இந்தச் செய்தியை அறிந்த வரலாற்று அறிஞர்கள் எங்கள் ஊருக்கு படையெடுத்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறிவியலாலளர்கள் தங்கியிருந்து ஊரையே சல்லடைப் போட்டுத் தேடினர். வீட்டின் உள்ளே தையல் ஊசியை தவறவிட்ட மூதாட்டியைப் போல அவர்கள் நிலத்தைப் பார்த்துக் கொண்டே நாட்களைக் கழித்தனர். ஆனாலும் அவர்கள் சில பொருட்களை கண்டெடுத்தாக அறிவித்தனர். எங்கள் ஊரின் சிறிய பகுதியிலிருந்து கண்டெடுத்த  மட்பாண்ட ஓடுகளையும் கல்மணிகளையும் சில நாணயங்களையும் தந்தை செல்வா வாசகசாலையில் கண்காட்சிக்கு வைத்தனர்.

அதுபோன்ற நாணயங்கள் சிலவற்றை என்னுடைய சிறிய வயதிலிருந்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்கிற தகவலை நான் அன்றைக்கு கூட யாரிடமும் சொன்னது கிடையாது. அவர்கள் கண்டெடுத்த நந்தியையும் ஏனைய பொருட்களையும் என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு செல்ல முயன்றனர். நான் நந்தியை மட்டும் தரமுடியாது என உறுதியாக நின்றேன். குத்திகன் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தான். பின்னர் நிறையத் தலையீடுகளின் அழுத்தத்தால் அவற்றை வழங்கவேண்டியதாய் ஆகியிருந்தது. அதற்கொரு நாளை அவர்களிடம் சொன்னோம். அந்த நாள் வரையும் எமக்கு இடையூறு செய்யக் கூடாதென மக்கள் அறுதியாக சொல்லிமுடித்தனர். சரியாக பத்துநாட்களுக்கு மேலாக நந்தியை எனது வளவில் வைத்து பூசை செய்தோம். பதிகங்கள் ஓதி களிகொண்டோம். குத்திகன் தீட்சையணிந்து தொன்மத்தின் வயிற்றில் அவனின் ஆன்மாவை காற்றாய் இழந்தான். பக்தியில் சிறுகளைப்பும் அண்டாது துடியின் ஒலியில் ஆடிக்கொண்டேயிருந்தான். ஓம் என்று சொல்கையில் உன்மத்தம் கொண்டு “நாக”… “நாக”… என்று பேரொலி எழுப்பினான்.

அவனது கோலம் ஒரு மன்னனுக்குரியதாய் இருந்தது. அவனது கைகள் நந்தியின் மேல் படுகையில் அதனது முதுகு அசைவதைப் போல ஒரு நேசமிருப்பதை என்னால் அறியமுடிந்தது. ஆறு மாதங்களேயான உனது கண்கள் இந்தத் திருவிழாவை பார்த்தன. நந்தியை நாம் அவர்களுக்கு கையளித்த நாளில் உனக்கு குத்திகனே பெயர் சூட்டினான். அவனது கரங்களில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு நந்தியின் காதில் உன் பெயரை  சொன்னான். “உதிரன்” என்று உனக்குப் பெயர் சூட்டப்பட்ட நாளில் எங்கள் கிராமமே ஒன்றாகக் கூடி நின்று “உதிரன்” என்று உச்சரித்தது.

சங்குகள் ஓங்கி ஒலித்தன. நந்தி எங்கள் கிராமத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டது. குத்திகன் பிறகு அடிக்கடி எனது வீட்டிற்கு வரத்தொடங்கினான். உன்னில் அவனுக்கு ஒரு அதீதமான அகவயமான நேசம். வீட்டுக் கிணற்றை பொதுக்கிணறாக பாவிக்குமாறு நானே சனங்களுக்குச் சொல்லியிருந்தேன். நான் சிறியவயதிலிருந்து சேர்த்துவைத்த நாணயங்களை ஒரு ரங்குப்பெட்டியில் எனது குஞ்சியம்மாவின் சீலையால் சுருட்டிக்கட்டி வைத்திருந்தேன். அதனை அவிழ்த்து பார்க்கவேண்டுமென்று ஆசை தோன்றிற்று. அன்றைக்கிரவு ரங்குப்பெட்டியை திறந்தேன். குஞ்சியம்மாவின் சீலை முடிச்சை அவிழ்த்து நாணயங்களை கைகளில் எடுத்துப் பார்த்தேன். லாம்பின் திரிதீண்டி அந்த நாணயத்திலிருக்கும் சின்னங்களை கொஞ்சம் துலக்கமாய் பார்த்தேன். குத்துவிளக்கும், பிறைச்சந்திரனும், சூரியனும் இருமீன் சின்னமும் சில எழுத்துக்களும் கண்ணுக்கு தென்பட்டன. அந்த இருமீன் சின்னம் என்னை வசீகரித்திருந்தன. நான் அவற்றை மீண்டும் பக்குவமாய் மூடி வைத்தேன்.

உன்னுடைய முதலாவது வயதில் எங்களூரை விட்டு இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. நாம் மொத்தமாக இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்பாக வீட்டின் சில பொருட்களை தாட்டு வைப்பதற்காக பெரிய கிடங்கொன்றை வெட்டினோம். உனது தகப்பன் ஒரு பெரிய ஒதிமரத்தை அடையாளமாக வைத்து அந்தக் கிடங்கை  வெட்டி முடித்தார். அப்போது அங்குமே நாணயங்கள் கிடைத்தன. ஆனால் தெய்வ உருவங்கள் பொறித்த இந்த நாணயங்கள் எனக்குமே புதியதாக தெரிந்தன. அவற்றையும் எனது ரங்குப்பெட்டியில் சேர்த்து வைத்தேன். வெட்டிய கிடங்கிற்குள் ஆட்டுக்கல், அம்மி, குழவி கிடாரம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆகியனவற்றோடு எனது ரங்குப்பெட்டியையும் நிலத்தினுள் ஒளித்தேன். இடம்பெயர்ந்து போவதற்கு முன்னர் கிணற்றில் போய் நீரள்ளி அருந்தினேன். முற்றத்து மண்ணை அள்ளி எனது சிறிய திருநீற்றுப்பையில் சேர்ப்பித்தேன்.

ஊரே இடம்பெயர்ந்து நகர்ந்துகொண்டிருந்தது. பறவைகள் ஒரு சோகவொலி எழுப்புகின்றன  என்றாள் உனது அம்மா.பசுக்கள் புல்லுக்காணிகளில் நின்றுகொண்டு எம்மைப் பார்த்து கத்தின. கன்றுகள் எம் பின்னே ஓடி வந்து அழுதன. துணிகளையும் அன்றாடத் தேவைக்கான பொருட்களையும் தூக்கிச் சுமந்துகொண்டு சனங்கள் நடந்தபடியிருந்தனர். போர் விமானங்கள் மேலே பறந்து போய்க்கொண்டிருந்தன. வீதியின் ஓரத்தில் வெட்டப்பட்டிருந்த பதுங்குகுழிகளுக்குள் மக்கள் சிலர் இளைப்பாறி இருந்தனர். ஒரு வயது நிரம்பிய குழந்தையான உனக்கு குதூகலாமான பயணமாக இந்தக் அலைக்கழிவு தோன்றிற்று. உன்னுடைய நீலவிழிகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு மேலாக நடந்து ஒரு கடலின் கரையை நாம் அடைந்த பொழுது நீ கடலின் முன் நின்று மூத்திரத்திற்கு போக அடம்பிடித்தாய். பிறகு அங்கேயே நின்று கொண்டு அலையோடு கதைத்துக் கொண்டிருந்தாய். இப்படித்தான் நான்கு இடப்பெயர்வுகளுக்குள் ஐந்து வயதினைத் தொட்டிருந்தாய்.

பறவைகள் பறப்பது மனிதர்களால் பார்க்கமுடியாத ஆகாயத்திலென்றும், ‘நாகம்’ மண்ணின் தெய்வமென்றும் நீ கதைக்கத்தொடங்கிய நாட்களில் குத்திகன் ஒரு மன்னனின் அலங்காரங்களோடு எனது கனவில் தோன்றத் தொடங்கினான். அவனது தேசத்தின் மீது படையெடுத்தபடியிருக்கும் எதிரிநாட்டு மன்னர் படையோடு போர்க்களத்தில் களமாடிக் கொண்டிருந்தான்.

அவனின் அரசு நிகழும் அந்தத் தேசத்தில் நிறைய நந்திவிக்கிரகங்கள் வழிபாட்டிலிருந்தன. எதிரி நாட்டின் போர்வீரர்களின் படைத்தளபதி தனது கையில் ஒரு மனிதப்பல்லையும், இன்னொரு படைத்தளபதி வெள்ளரசுக் கன்றையும், புத்த பிட்சு ஒருவன் கையில் வாளோடும் குத்திகனின் தேசத்திற்குள் நுழைய எத்தனிக்கின்றனர். ஆனால் எல்லா நகர்வுகளையும் குத்திகனின் படைகள் வென்று கொண்டேயிருக்கின்றன. குத்திகன் தனது அகன்ற நெஞ்சில் இரண்டு மீன்களை பச்சை குத்தியிருந்தான். அவன் “நாக” “நாக” என்று குரலெழுப்பி யுத்தத்தை எதிர்கொண்ட விதமே போரின் சாரமாக விளங்கியது. கண்களை விழித்தும் குத்திகன் பற்றிய கனவுகளே என்னை சூழ்ந்திருந்தன. அந்நேரத்தில் போர்விமானங்கள் சனங்களின் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசியபடியிருந்தன.நீ பதுங்குகுழியினுள்ளே இருந்தபடி வெடிகுண்டுச் சத்தங்களை வேடிக்கையாக கேட்டாய். உலங்குவானூர்தியின் படபடப்பான துருவேறிய ஒலி வளியைக் கிழித்து கீழ் நோக்கிச் சுட்டது. சனங்கள் செத்துவீழ்ந்தனர். அவற்றைக் கடந்துகொண்டு நாம் வேறொரு இடம் நோக்கி இடம்பெயர்ந்தோம்.அவ்வளவு பிணங்களும் அப்படியே புழுத்துப்போயின. அந்தச் சிறிய வயதினில் உனக்குப் புலப்படாத ஒரு பிரளயத்தை நீ பார்த்துக்கொண்டு வளர்ந்தாய்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதியில் அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கி வசித்தோம். சனநெரிசலின் கூச்சல் எப்போதும் கேட்டபடியிருக்கும். குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவத்தொடங்கியிருந்தது. மனம் குலைந்துபோனவர்களைப் போல எல்லோரும் நடமாடிக்கொண்டிருந்தோம். பச்சை விறகில் அடுப்பு புகைந்து  உலையில் சோறு வெந்தது. இயல்பாகவே வாழ்வின் விருப்பு எல்லோரிடமும் குன்றிப்போயிருந்தது. குழந்தைகளைப் பெறுவதற்கே  விருப்பமற்று இளம்சோடிகள் தாம்பத்யம் நடத்தினர். தவறிப்பிறக்கும் குழந்தைகளும் ஊனமுற்று இருந்தனர். அகதிமுகாமிலிருந்து சில குடும்பங்களோடு சேர்ந்து இராணுவத்தின் அனுமதியோடு வெளியேறி சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு சென்றோம். உன்னுடைய தந்தையை இராணுவம் பிடித்திழுத்துக்கொண்டு போனது. ஆறாவது நாளில் நாங்கள் தங்கியிருந்த வீட்டினருகேயிருந்த இராணுவத்தின் சிறிய முகாமின் ஆலமரத்தினருகில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த வேதனை உனக்கு ஞாபகத்திலிருக்குமென்று முதன்முறையாக தோன்றுகிறது.

இந்தத் துயருக்குப்பிறகும் குத்திகன் எனது கனவில் வந்தான். தனது படைகளை வைத்து அதே எதிரிகளோடு யுத்தம் செய்தபடிக்கு என்னோடு கதைத்தான். நிறைய நந்திவிக்கிரகங்களை கைவிட்டு பின்வாங்கிக்கொண்டிருப்பதாக கவலையுற்றான். அவனுடைய முகத்தில் தோல்வியின் வாட்டம் எழுந்து நின்றது. திடீரென விநோதமாக அவன் ஓங்கிக்குரலெழுப்பி நாக… நாக என்று கத்திக்கொண்டு எதிரிநாட்டுப் படைகளைத் தாக்கினான். ஆயினும் குத்திகனின் படையில் ஆளணி குறைந்து கொண்டேயிருந்தது. யுத்தத்தின் எரிதழல் வீச்சு அந்தநிலமெங்கும் பரவிச் சென்றது.

மண்ணை வன்கவரும் பெளத்த படைகளை கொன்று வீழ்த்தும் வேட்கை ஒரு கடலாய் விரிந்தது. குத்திகன் கட்டளைகளுக்கு இயங்கிய சேனை வெற்றியைப் பெற்றுக்கொண்டேயிருந்தது. படையெடுத்து வந்த பெளத்த படைகள் செத்து வீழ்ந்தன. பின்வாங்கிய படைகளை ஒரு புத்தபிட்சு சந்தித்து பேசுகிற செய்தியை  ஒற்றர்கள் மூலம் அறிந்துகொள்கிறான் குத்திகன். போர்புரிந்த களைப்பும் வெற்றியின் திகைப்பும் குத்திகனின் படைகளுக்கு.

மூன்று நாட்கள் கழித்து ஒரு மழைநாளின் மதியநேரத்தில் மீண்டும் யுத்தம் தொடங்கியது. குத்திகனின் படைகள் மும்முரமாக பிட்சுக்களின் சேனையை தாக்கின. ஆயினும் அவர்களின் ஆளணி பலமானதாய் இருந்தது. ஒரு பொழுதில் நிலைமை தலைகீழாக ஆனது. புத்த பிட்சுகள் தலைமையேற்கும் எதிரி படைகளால் குத்திகனின் சேனை தோற்கடிக்கப்படுகிறது. குத்திகன் உயிர் பிரியும் நேரத்தில் பேரழகு பொலிந்து மண்ணில் வீழ்ந்தான். “உதிரன்” என்ற உனது பெயரை ஒரேயொரு தடவை உச்சரித்த அவனின் கழுத்தை அறுத்த எதிரிநாட்டு மன்னன் புத்தபிட்சுகளின்  காலடியில் அதனை படையலிட்டான்.

தேங்கி நின்ற குருதியின் மீது மழை பொழிந்தபடியிருந்தது. நிலமெங்கும் ஓடிய வெள்ளத்தில் நந்தி விக்கிரகங்கள் மூழ்கின. நாகமும்,மீன்களும் பொறித்த நாணயங்கள் கேட்பாரற்று நிலமெங்கும் கிடந்தன. எஞ்சிய நந்தி விக்கிரகங்களை புத்த பிட்சுகள் உடைத்து நொறுக்கினர். அந்த குருதியின் ஈரப்பதத்தின் மீதே வெள்ளரசுக் கன்றுகளை நட்டனர். தமது கைகளில் இருந்த கொலைவாள்களை புத்தனின் சிலைகளில் மறைத்து வைத்தனர். எத்தனையோ சூழ்ச்சிகள் நிரம்பிய வெள்ளரசு மரங்கள் குத்திகனின் தேசமெங்கும் கிளைவிடத்தொடங்கின. நந்திகளற்ற குத்திகனின் தேசத்தில் எருக்கலை பூக்கள் பூத்து நின்றன. மேலும் குத்திகனின் ரத்தம் வெதுவெதுப்பாக எனது கிணற்றில் ஊற்றெடுப்பதாக கனவுநீள்கையில் திடுக்கிட்டு கண்விழித்தேன் என்று கதையைச் சொல்லிமுடித்தாள் அம்மம்மா. பாம்புடலால் அவள் கனவினில் ஊர்ந்து சென்று மறைந்த போதில் தவம் கலைந்த உணர்வெனக்கு. ஏனெனில் அவளென் முதுசத்தின் செட்டை.

இந்தக்கதையை கேட்டெழுந்த அன்றைக்கு காலையிலேயே போரிலும் அழியாமல் எஞ்சி நிற்கும் ஒதிமரத்தின் கீழுள்ள ரங்குப்பெட்டியை எடுப்பதற்கு மண்ணைத்தோண்டலாமென முடிவெடுத்தேன். ஐந்தடிக்கு தோண்டியும் எந்தப்பொருட்களுக்கும் எனக்கு  கிடைக்கவில்லை. ஆயினும் மரத்தைச் சுத்தி எல்லாப்பக்கங்களிலும் கிடங்கு வெட்டினேன். பிறகு ஊரிலிருக்கும் சிலரும் அதில் உதவி புரிந்தனர். மரத்தின் வலதுபக்கமாக இரண்டாவது நாள் நாம் கிடங்கை வெட்டிக்கொண்டிருந்த போது ரங்குப்பெட்டியைக் கண்டெடுத்தோம். அதனைத் திறந்து பார்த்தோம். சீலைமுடிச்சுக்குள் நாணயங்கள் இருந்தன. அவற்றை வாங்கிப்பார்த்த கந்தசாமிப்பிள்ளை வாத்தியார் இது நாகர்காலத்து தமிழ் நாணயங்கள் என்றார். அவரின் குதூகலம் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அந்த நாணயங்களை வாங்கி கண்களில் ஒத்திக்கொண்டேன். அந்த ஒதி மரத்தின் பூக்கள் நீலவண்ணமாய் பூத்துக்குலுங்கின. கந்தசாமிப்பிள்ளை எனது கண்களின் நீலச்சுடரை உற்றுநோக்கியபடியே உனது வியர்வையில் நாகம் நெளிகிறது என்றார்.

நாகர்களின் வம்சமடா நாமென்று அவர் உரக்கக் கத்தினார். சனங்கள் மெதுவாக கதைக்குமாறும்,இது இராணுவத்திற்கோ அல்லது பொலிசுக்கோ தெரிந்தால் ஊருக்கே ஆபத்து என்றும் எச்சரித்தனர். அரசாங்கம் இப்படியான எச்சங்கள் இருப்பதாக கேள்விப்பட்டால் அதனை மூடிமறைப்பதற்கு ஊரையே அழிக்குமென கந்தசாமிப்பிள்ளையே சொன்னார்.

இப்படியொரு வரலாற்று சம்பவமானது நூறாண்டு கால ஒதி மரத்தின் கீழே நிகழ்ந்து கொண்டிருக்கையில் அம்மம்மா கிணற்றுக்குள் இருந்து கூப்பிடும் சத்தம் காதினில் ஒலித்தது. கிணற்றை நோக்கி ஓடிப் போனேன். கிணற்று நீரில் மூக்குத்தியோடு நீந்திக்கொண்டிருந்தது ஒரு நாகபாம்பு. அதன் தித்திப்பான அசைவில் புராதனத்தின் ஆழம் பெருகிக்கொண்டே இருந்தது. அம்மம்மா என்று குரலெடுத்து கூப்பிட்டேன். அந்தக் கிணற்றில் நீந்திக்கொண்டே இருந்த நாகத்திலிருந்து வரலாறு என்னைத்  தீண்டத்தொடங்கியது. அதன் நீச்சலில் தனித்தனி கோபங்களும் தீரங்களும் படமெடுத்தாடியபடியிருந்தன.

கந்தசாமிப்பிள்ளை ஒரு நாணயத்தை பெருவிரலில் வைத்து மேலே சுண்டினார். நாணயத்தின் சுழற்சியில் ஆயிரக்கணக்கான ஆண்டின் ஓலம் தலையிலும் பூவிலுமிருந்து வெளியேறியது. இதுவரை காலமும் சிந்திய குருதி காயம்பட்ட பெருநிலத்தின் ஆழத்திலிருந்து எரிதழலாய் பூத்துக்கிளம்பியது. மனமெழுந்து வாதையைப் பிளந்தது. ஊர்க்குடி திரண்டு அம்மாளாச்சி… அம்மாளாச்சி என்றனர். காற்றில் கம்பீர வெக்கை கலந்து சனங்களை உசுப்பிக்கொண்டிருந்தது. இந்த மண் எங்களின் சொந்த மண் என்று நாகரின் காதையை பிரசங்கமாய் சொல்லத்தொடங்கினார் கந்தசாமிப்பிள்ளை.

அன்றிரவு திடீரென கறுத்து திரண்ட வானம்-இடியும் மின்னலோடும் பூமியில் இறங்கிற்று. நாய்கள் இரண்டு ஒரு காலஇடைவெளியில் ஊளையிட்டுக் கொண்டே இருந்தன. ஈரப்பதம் கூடிய காற்று வீசத்தொடங்கியிருந்தது. நாகர்களின் தமிழ்பொறித்த நாணயங்கள் என்னிடம் இருப்பது அரசாங்கத்திற்கு தெரிந்தால் என்னை நரபலி கொள்ளுமென அஞ்சினேன். கடுமையாக உடல் நடுங்கி உயிரோடு திடுக்கிட்டேன்.

குத்திகன் போர்க்களத்தில் களப்பலியான உடன் நந்திகளை அழித்து புத்தசிலைகளை நிறுவிய பிட்சுகள் அதனுள்ளேயே வாள்களை மறைத்துவைத்தனர் என்ற காட்சி மீண்டும் மீண்டும் எனக்குள் வந்துபோனது. இருட்டின் சமுத்திரத்தில் விழித்திருந்தே அந்த நாணயங்களை எங்கே மறைத்து வைப்பதென தெரியாமல் அம்மம்மாமவின் கிணற்றுக்குள் கொட்டிவிட எண்ணினேன். மழையின் பேரிருளில் இயற்கையின் நாளங்கள் மின்னலாய் ஒளிர்ந்தன. தவளைகள் கத்தத்தொடங்கிய போது வீட்டின் முற்றத்தில் பாம்புகளின் வாசம் வரத்தொடங்கியிருந்தன. குளிர் காற்றின் மீது தாழம்பூ வாசம் மேலேறியிருந்தது. மனைவியை எழுப்பிவிடாமல் படுக்கையிலிருந்து எழும்பி நாணயங்களை அள்ளிக்கொண்டு கிணற்றடிக்கு நடந்தேன். இடியின் ஒலி பனையில் மோதியது போலிருந்தது. மழைக்கும் காற்றுக்கும் இடையே மரங்கள் தள்ளாடின.

பிரம்புப் பிடிபோட்ட அவளது குடையை விரித்துபிடித்தபடி  கிணற்றின் மீது ஏறியிருந்து கதை சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மம்மா. அவளுக்கருகில் என்னைப் போன்ற சாயலில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்து கதைகேட்கிறான். உடலின் இயக்கம் உறைந்துபோய்விட்டது. மாயத்தின் அலைகளில் நங்கூரமிடமுடியாதபடி தத்தளித்து போயிருந்தேன். மழையின் பெருமுழக்கத்தோடு உடலை சிலுப்பிக்கொண்டு அம்மம்மாவின் முன்னே போய் நின்றேன். கையில் கிடந்த நாணய சீலைமுடிச்சை இறுகப்பற்றியிருந்தேன்.

உங்களுக்கு பக்கத்திலிருக்கும் சிறுவன் ஆர் என கேட்டேன்?

வெள்ளிக்கிழமையில் கட்டுச்சொல்லும் மூக்குத்தி அம்மனாக கணத்தில் உருமாறி நாகர்களின் புத்திரனாய் புலகதன் எனும் நாமத்தோடு உனது குழந்தையாய் பிறக்கவிருக்கிறான் என்றாள்.

போர் தின்ற குழந்தைகளின் மாம்சங்களால் இந்த நிலமெங்கும் துர்வாடை நிரம்பிற்று. குலமழிந்து குடியழிந்து போயிருக்கும் இந்நிலத்தில் குழந்தைகள் இனி அதிகமாக பிறப்பார்கள். அவர்களே அமைதியையும் அழிக்கவியலா விடுதலையையும் தருவார்கள். நாகர்களின் குருதியோடு இன்னுமின்னும் பெருகுவார்கள். அவற்றின் தொடக்கமாக புலகதன் பிறக்கிறான் என்று சொன்ன பொழுது மழை திசைமாறி பெய்தது. வானிலிருந்து நீலச்சுடர் வழிந்து என்முன்னே தும்பியைப் போல பறந்துகொண்டிருந்தது. பூமியின் அசைப்பில் “ஓம்” “ஓம்” என்ற ஒலி மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

கிணற்றில் கொட்டச்சென்ற நாகநாணயங்களோடு மீண்டும் படுக்கைக்கு திரும்பினேன். மனைவியின் மூச்சும் முத்தமும் நாணயங்களின் பழமைபோல நிறைந்திருந்தது. மனைவியின் அண்மையில் ஆலிங்கனம் தனது அலகால் பொழுதைக் கவ்விக்கொண்டு பறக்க காத்திருந்தது. மழையின் கிளைகளின் மீது சுகத்தின் தோகைகள் விரிந்திருந்தன. அவள் மேலே விழுந்த எனது உடலில் நாகத்தின் மினுக்கமும் வாடையும் பலம் கூடி நின்றது. நீரால் நிலத்தை கழுவ எண்ணி பெய்யும் இந்த மழையிரவில் நிலமெங்கும் நாகர்களை பிரசவிக்கும் முனைப்பில் புணர்ச்சியில் புகுந்தனர் நாடிழந்த  பூர்வகுடிகள்.

அக்கணத்தில் நீண்டுபெருத்து பெருமூச்சை எய்தது இரண்டாம் குத்திகனின் மூச்சடங்கிய நந்திக்கடல் காயல்.

 

(அகர முதல்வன், ஈழ எழுத்தாளர். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு வெளிவந்துள்ளன. ஆசிரியரின் தொடர்புக்கு –  தொடர்புக்கு –akaramuthalvan01@gmail.com)

ஓவியம் : வல்லபாய் .

RELATED ARTICLES

4 COMMENTS

 1. என்று அம்மம்மா கதை சொல்லி முடித்தார். எனும்போதுதான் அது பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் கதை என்றே தெரிகிறது..

  அந்தக் கிணற்றில் நீந்திக் கொண்டிருந்த பாம்பிலிருந்து வரலாறு என்னைத் தீண்டுவது போலிருந்தது எனும்போது
  திக்கென்று இருந்தது..

  என்ன ஒரு ஆழமான மொழிநடை …ஆரம்பத்தில் எழுத்தாளரின் சொல்லாடல்கள் சில புரியவேயில்லை. மீண்டும் ஒருமுறை கதையை வாசிக்க வேண்டும்..

 2. ‘’கனவுகளை பகுத்தறியும் முயற்சி என்பது மனித மூளையின் அனிச்சை செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதற்கான ராஜபாட்டை’’ என்பது பிராய்டியன் தியரி. ஒரு நாடிழந்தவனின் மனநிலையும் அதனால் விளைகிற கனவுகளும், கனவுகள் சொல்கிற தீர்வுகளும் ஒரு அமானுஷ்ய கதையின் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நாகர்களின் வரலாறு குறித்து நமக்குத் தெரிந்திருக்குமேயானால், கதையின் ஆழம் மேலும் பிடிபடும். அகரமுதல்வனின் தனித்த நடையும், உவமைகளும், படிமங்களும் வாசகனை மேலும் ஈர்க்கின்றன. வாழ்த்துக்கள் அகரமுதல்வனுக்கும், ‘’மீண்டும் யாவரும்.காம்’’ நண்பர்களுக்கும்.

  • அண்ணன் அகரமுதல்வன் அவர்களின் வழக்கமான, ஆக சிறந்த மொழி நடையும், உயிரோட்டமான கதையையும் உணரமுடிகிறது. குத்திகன் என்ற உவமை போராளிகளை குறிப்பதாகவே உணர்கிறேன். குத்திகனின் தேசத்தி நந்திவிகாரைகள் சிதைக்கப்பட்டு புத்தனின் சிலையை நிறுவும் பிக்குகள் தாங்களின் கொலைக் கருவிகளை புத்தனுக்கு பின்பாக ஒழித்து வைத்தார்கள் என பதிவு செய்திருப்பது பத்தாண்டுகள் கடந்து விட்ட பெருந்துயரின் சாட்சியாகவே பார்க்க தோன்றுகிறது. ஓதி மரத்தடியில் கண்டெடுக்கப்படும் ரங்குப்பெட்டியில் நாகர் கால நாணயம் என்பது, நாகர்களின் வழித்தோன்றல்கள் என்பதும் அதன் தொன்மசாட்சியாக தமிழ் பொறித்த நாணயங்களை கந்தசாமிப்பிள்ளை சுண்டி எரியும் போது அதன் தலையிலும் பூவிலும் பல்லாயிரம் ஆண்டுகளின் தொன்மங்களின் சுவடுகளை நாமும் காணமுடிகிறது, ஆனால் இந்த உண்மை அறியும் பட்சத்தில் அரசாங்க ராணுவம் ஊரையே தடம் தெரியாமல் அழிக்கவும் தயங்காது ஏனெனில் இது அவர்களின் தாய் நிலம் என்பதற்கான எல்லா தடங்களையும் அழிக்க துணிந்த அரக்கர்கள்தான் அவர்கள் அதன் கடந்தகால சாட்சிதான் யாழ்நூலக எரிப்பும், மனித கொலைகளும்.

   மனைவியின் மூச்சிலும், முத்தத்திலும் நாணயங்களின் பழமை நிறைந்திருக்க, நிலமெங்கும் நாகர்களை பிரசவிக்கும் முனைப்பில் புணர்சியில் ஈடுபட்டனர் நாடிழந்த பூர்வகுடிகள் என முடிகிறது கதை.

   உயிரோட்டமும், வலியும், நிறைந்த வன்மத்தின் கோரமுகத்தை காட்டும் அழிக்கப்பட்ட தொன்மையான இனத்தின் துயரம் நிரம்பிக கதை.

 3. அண்ணன் அகரமுதல்வன் அவர்களின் வழக்கமான, ஆக சிறந்த மொழி நடையும், உயிரோட்டமான கதையையும் உணரமுடிகிறது. குத்திகன் என்ற உவமை போராளிகளை குறிப்பதாகவே உணர்கிறேன். குத்திகனின் தேசத்தி நந்திவிகாரைகள் சிதைக்கப்பட்டு புத்தனின் சிலையை நிறுவும் பிக்குகள் தாங்களின் கொலைக் கருவிகளை புத்தனுக்கு பின்பாக ஒழித்து வைத்தார்கள் என பதிவு செய்திருப்பது பத்தாண்டுகள் கடந்து விட்ட பெருந்துயரின் சாட்சியாகவே பார்க்க தோன்றுகிறது. ஓதி மரத்தடியில் கண்டெடுக்கப்படும் ரங்குப்பெட்டியில் நாகர் கால நாணயம் என்பது, நாகர்களின் வழித்தோன்றல்கள் என்பதும் அதன் தொன்மசாட்சியாக தமிழ் பொறித்த நாணயங்களை கந்தசாமிப்பிள்ளை சுண்டி எரியும் போது அதன் தலையிலும் பூவிலும் பல்லாயிரம் ஆண்டுகளின் தொன்மங்களின் சுவடுகளை நாமும் காணமுடிகிறது, ஆனால் இந்த உண்மை அறியும் பட்சத்தில் அரசாங்க ராணுவம் ஊரையே தடம் தெரியாமல் அழிக்கவும் தயங்காது ஏனெனில் இது அவர்களின் தாய் நிலம் என்பதற்கான எல்லா தடங்களையும் அழிக்க துணிந்த அரக்கர்கள்தான் அவர்கள் அதன் கடந்தகால சாட்சிதான் யாழ்நூலக எரிப்பும், மனித கொலைகளும்.

  மனைவியின் மூச்சிலும், முத்தத்திலும் நாணயங்களின் பழமை நிறைந்திருக்க, நிலமெங்கும் நாகர்களை பிரசவிக்கும் முனைப்பில் புணர்சியில் ஈடுபட்டனர் நாடிழந்த பூர்வகுடிகள் என முடிகிறது கதை.

  உயிரோட்டமும், வலியும், நிறைந்த வன்மத்தின் கோரமுகத்தை காட்டும் அழிக்கப்பட்ட தொன்மையான இனத்தின் துயரம் நிரம்பிக கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular