Tuesday, April 23, 2024
Homesliderநூற்றாண்டின் மணம்

நூற்றாண்டின் மணம்

பாக்கியராஜ் கோதை

வெய்யிலைக் கிழித்தபடி காவல்துறையின் டாடா சுமோ வேன் சாத்தனூருக்குள் சென்றது. நத்தம உடையாரின் ஏரோப்பிளேன் வீட்டுப் பஞ்சாயத்திற்குத் தொப்பையில்லாத மூன்று போலிஸ்காரர்கள் வந்திருந்தனர்.

ஏரோப்பிளேன் வீட்டு மரப்படிக்கட்டு அருகே நின்று பானுவும் ரம்யாவும் வக்கீல் அண்ணன் சுந்தரழகனிடம் கைகள் நடுங்கப் பேசிக் கொண்டிருந்தனர். ‘கோர்ட்டுக்குப் போயிருந்தா, நம்மால ஒரு மயிரையும் புடுங்கி இருக்க முடியாது, ஊர் பஞ்சாயத்துதான் சரி, வீடு நிச்சயமா நம்ம கைய விட்டுப் போகாது, சாவடிக்குக் கிளம்புங்க, நேரமாச்சு’ என்று, படி எடுத்த உடையாரின் உயில் பத்திரங்களைக் கோப்பு ஒன்றிற்குள் போட்டு, ஊர் பஞ்சாயத்திற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார் வக்கீல் சுந்தரழகன்.

பஞ்சாயத்து நடக்கப்போகும் ஆலமரச் சாவடியின் பரந்த முற்றத்தில் ஆள்கள் கூடிக்கூடிப் பேசியபடியிருந்தனர்.  கூடியிருந்த கூட்டத்திற்கு ஏரோப்பிளேன் வீட்டு ஆள்கள் மகிழ்வுக் கொடையாக அளித்த காராச்சேவும், குளிர்பானமும், தினசரி நாளிதழ்களும் சுழற்சி முறையில் திரும்பத்திரும்பக் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. காற்றுக்காக வைக்கப்பட்டிருந்த மேசைக்காற்றாடி அனல் காற்றைத்தான் வழங்கிக்கொண்டிருந்தது.

‘பெரிய மனுஷங்க கூடி இருக்கிற இடத்துல பொடுசுங்களுக்கு என்னடா வேலை’ என்று தங்கமோதிரம் தன் கை டம்ளிரில்  இருக்கும் குளிர்பானம் சிந்திவிடாதவாறு அங்கு மொய்த்துக் கூடியிருந்த சிறுவர்களைத் துரத்திவிட்டார். கண்மாயில் கல்லைப் போட்டதும் பாசி விலகி மீண்டும் கூடுவது போல, சிறுவர்களும் விலகுவது போல விலகி மீண்டும் கூடியபடி இருந்தனர். ‘விடுப்பா மோதரம், பஞ்சாய்த்துன்னொன்ன, இந்தக்காலப் பொடுசுங்க பார்த்திருக்க மாட்டாங்க, அதான் மழையப் பாத்த தவளை கணக்கா கத்திக் குதிக்கிறானுக’ எனக் காராச்சேவை மென்றபடி சோசியக்காரத் தங்கமணி சொன்னார்.  

‘எத்தாம் பெரிய முத்தம், வாசல், அதுவும் அந்தக்காலக் கருப்பம்பட்டி அகலச் செங்கல்ல கட்டுன மூனுமாடி வீடு, மாட்டுக்கொட்டால இருக்குற கதவுகூட தேக்குமரம் தான், காரைக்குடிச் செட்டிமார் வீடு மாறி, இழச்சு இழச்சுதான் கட்டியிருக்காரு நத்தம உடையாரோட தாத்தா, ரசனக்கார மனுசன்தான்’ என்றார் நொட்டாங்கை கழுகுமலை.

‘செங்கிப்பட்டி பூர்ணம்ஆசாரி தலைமைல 40 ஆசாரிமாருங்க சேர்ந்து இந்தக்கதவு சன்னல் எல்லாம் கோயில்ல இருக்கிற சிற்பம் மாதிரி பதவிசா செதுக்கினதா எங்கதாத்தாரு சொல்லுவாரு’, ‘திருடன் ஓட்டப் போட்டு கூட திருட முடியாதுங்கிற அளவுக்கு அவ்வளவு கனம் இந்த நிலைக்கதவு’  ‘முதல்ல தங்கத்த கடவச்சு தான் பூச அறை தளம் போடுறதா இருந்துச்சாம், திருஷ்டி நிரந்தரமாப் போய்டும்ன்னு பயந்துக்கிட்டு தான் கைவிட்டாங்களாம்’ என்று வீட்டின் வரலாற்றை வியப்போடு விவரித்தார் பட்டறை கோமான்.

‘சின்னவயசுல இந்த வீட்டு மாடி வழியா தான் துரைங்க ஏரோப்பிளேன்ல இருந்து இறங்கிவருவாங்கன்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன்பா’ என்றார் அப்பாவியாக மாடத்தி பாட்டைய்யா.

‘யாரு எவரு எப்ப பேர் வச்சாங்கன்னு தெரில, இந்தியாவுக்குத் தாசுமகால் மாரி, நம்ம சாத்தனூருக்கு ஏரோப்பிளேன் வீடு ஒரு தனி அடையாளமாவே போச்சு,  எப்படியும் இன்னிக்குத் தேதிக்குக் குறைஞ்சது ஒரு அம்பது லட்சம் தேறாது’ என்று தூரத்தில் தெரியும் பெருத்த ஏரோப்பிளேன் வீட்டை அளவெடுத்தபடி தனது ஐ விரலையும் அமுக்கி அமுக்கிச் சொன்னார் நீயூஸ் பேப்பர் தவசி.

‘போப்பா சுத்தம் விவரம் புரியாத ஆளா இருக்கியே, அஞ்சு கோடி கொடுக்கிறதுக்கு நம்ம ரங்கசாமிஉடையாரே ரெடியா இருந்தாருப்பா, பரம்பரவீடுன்னு பானு கொடுக்க முடியாதுன்னுச்சு, கட்டக்கடேசில இந்த வீட்டு நிலம இன்னிக்கு இப்படியாகிப் போச்சே, என்று வாயில் புகையிலை குதப்பியபடி பாவப்பட்டு வருந்தினார் மளிகைக்கடை தேசிகன்.

பஞ்சாயத்திற்குத் தலைமையேற்கும் ரங்கசாமி உடையார் கண்மருத்துவமனையில் இருந்து வந்து சேர இன்னும் அரைமணிநேரம் எடுக்கும் என்ற தகவல் உளுந்துவடை, புதினா துவையலுடன் சொல்லப்பட்டது.

சாவடியின் வடக்குமூலையில் உடைந்த மாட்டுவண்டி அருகே கெக்கேபிக்கே என அலம்பல் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டது. நான்கைந்து நடுத்தரவயது ஆண்கள் போதையில் சிரித்துக் கொண்டிருந்தனர். ‘தெனமும் பதவிசா உருவி உருவி ஆட்டிவிட்டுருந்தாக்கூட நான் கொடுத்திருக்கமாட்டேன்பா,’ ‘கிழவன் எப்படி மயங்குனான்னு தெரியலயே’ எனச் சிரித்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் தின்பதற்குக் காராச்சேவிற்குப் பதில் சிக்கன் சிக்ஸ்டி-பை கேட்பதாகச் சுந்தரழகனிடம் மாட்டுக்கார இராமர் புகார் வாசித்தார். ஏற்பாடு செய்து கொடுக்கும்படி விரட்டினார் வக்கீல் சுந்தரழகன். பஞ்சாயத்திற்கு இப்படிப்பட்ட ஆள்களும் தேவை என்பதை அவர் நன்கு உணர்ந்து இருந்தார்.  

குழந்தைப் பையன்கள் சிறுநீர் கழிப்பது போல உடலில் வியர்வை அடித்து ஊற்றியது. சட்டை போட்டிருந்த பஞ்சாயத்து உறுப்பினர் சிலர் பொத்தான்களைக் கழட்டிக் காலரைத் தூக்கி விட்டனர். சட்டை அணியாதோர் வாகாகத் தன் துண்டை வைத்து கவட்டையிலும் தலையிலும் அடிக்கடி துடைத்துக்கொண்டனர். ‘அவனுகள என்ன, இன்னும் காணல, பயந்துட்டானுகளா,’ எனச் சொட்டைச் சொக்கலிங்கம் கேட்க, ‘ஏய்..இல்லப்பா, காலனிக்கோயில் வாசல்லதான் 20, 30 பேரும் நிக்காங்க, ரங்கசாமி உடையாரு வந்ததும் வருவாங்களாம், அதுக்கு முன்னாடி தேவையில்லாம கசமுசா ஆயிடக்கூடாதுன்னு அந்த வக்கீல் இருக்கானே, எழிலு அவன்தான் எல்லாத்தையும் அடக்கி வச்சிருக்கான்னு தகவல்’ என்றார் கறிக்கடைச் சின்னமலை.

வெய்யிலால் சோர்ந்திருந்த காலனி தண்டுமாரியம்மன் கோயிலின் வேப்பமர நிழலில் சிதறியபடி பஞ்சாயத்து உறுப்பினர்கள் குறிப்பிட்ட ‘’அவனுகள்’’ அமர்ந்திருந்தனர். கோயில் திண்ணையில் உயில் பத்திரங்களைப் புரட்டிப்பார்த்தபடி அமர்ந்திருந்த வக்கீல் எழிலிடம், ஆலமரச் சாவடியில் இருந்து ஓடிவந்த சிறுவன் சிட்டு, ‘ரங்கசாமி உடையார் வர இன்னும் அரைமன் நேரமாவுமா’ என்றான். அடுத்து எழில் என்ன சொல்வார் என்பதைக் கேட்க கூட்டம் அழுத்தத்துடன் அவரைப் பார்த்தது. அனைவரும் குடிப்பதற்கு ஒருகுடம் தண்ணீர் எடுத்து வரும்படி பஞ்சம்மாவிடம் எழில் கூறினார். பஞ்சம்மா கீழத் தெருவிலிருக்கும் தன் வீடு நோக்கி விரைந்து நடந்தாள்.

தங்கையனும் அவன் நண்பர்களும் சரக்கடித்திருந்தனர் எனினும், பஞ்சாயத்திற்குள் சென்றுவிட வேண்டும் என்றெண்ணத்தில் தங்கள் மூச்சொலி கூட வக்கீல் எழிலுக்குக் கேட்டுவிடக் கூடாதென்று கோயில் வாசலில் அமைதியாக இருந்தனர். வக்கீல் எழில் அவர்களைப் பஞ்சாயத்துச் சாவடிக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதில் கடுமை காட்டியிருந்தார்.  கூடுதலான அமைதியும், அடக்கமும் ஒழுக்கமும் இந்தச்சனத்துக்கு ஒருவகை சாபம் போல அமைந்திருந்தாலும், அதைக் கடைபிடித்தொழுகுவது முதன்மையானதெனத் தனக்குள் ஒரு கொள்கை வகுத்து வைத்திருந்தார் எழில்.

கோயிலருகே ஓடும் சாக்கடைக் கால்வாய் குட்டைச்சுவரில் முக்காடு போட்டு, உழைத்து உழைத்துச் சாயம்போன நைட்டியோடு வேப்பமர நிழல் ஒன்றில் வக்கீல் எழில் தன்னை ஒருமுறை பார்த்துவிட மாட்டாரா என்ற நோக்கத்தோடு அமர்ந்திருந்தாள் அஞ்சலா. வக்கீல் எழில் தன்பக்கம் திரும்பினால் ஒரு புன்னகையாவது செய்யலாம். ஆனால் அவர் திரும்பவே இல்லை. அவர் சினத்தோடு இருக்க தான்தான் முக்கியக் காரணம் என்பதை அவள் அறிந்திருந்தாள். கருகரு முகத்தில் தனித்து தெரிந்த தன் முகக் காயங்களை, மாராப்பை மூடுவது போல இழுத்து இழுத்து முக்காட்டினால் மறைத்துக் கொண்டாள் அஞ்சலா.

முன்பெல்லாம் ஏரோப்பிளேன் வீட்டினைப் பார்க்க வெளிநாட்டுக்காரர்கள், சினிமாகாரர்கள், ஓவியக்காரர்கள் எனச் சிலர் எப்பொழுதாவது பரிந்துரையோடு வருவார்கள். வீட்டைச் சுற்றிக் காண்பிக்க அஞ்சலாதான் அழைத்துச் செல்வாள். ஏரோப்பிளேன் வீட்டில் சுழலும் ஒரு குளவி கூட இவளுக்குத் தெரியாமல் அங்கு கூடுகட்ட முடியாது. வீட்டின் இண்டு இடுக்கு அத்தனையும் அறிவாள். தினமும் வீடு முழுக்கத் துடைத்துக் கழுவுவாள். கலைப்பாடுகள் மிக்க அரண்மனை போன்ற அந்த வீட்டினைத் துடைப்பது அவளுக்கு மிகப் பிடிக்கும். ஒவ்வொரு அறையையும் ஒவ்வொரு பொருளையும் எப்படி எதனைக் கொண்டு துடைப்பது என்பதனை நன்கு அறிந்திருந்தாள். நைட்டியை வேட்டிபோல மேலாக்காக மடித்துவிட்டு துடைக்கத் தொடங்கினால் வேலையில் தோய்ந்து ஒன்றிவிடுவாள். தன் சாதிசனம் யாரும் இந்த வீட்டுக்குள் நுழையவே முடியாதபோது, தான் இந்த வீட்டில் வேலைக்காரியாக இருப்பதைப் பெருமையாகச் செருக்காக எண்ணி அலைவாள்.

ஒழிந்திருக்கும் மாலைநேரத்தில் தன்தோழிகள் முன்னிலையில் வீடு பற்றிய கதைகளையே கதைத்துக் கொண்டிருப்பாள். ஏரோப்பிளேன் வீட்டின் முதல் மாடியில் பித்தளைச்சங்கிலியால் சந்தனப்பலகைகொண்டு அரசன்மார்கள் அமரும் சிம்மாசனம் போல நுணுக்கமாகச் செதுக்கி ஆக்கப்பட்டிருக்கும் பெரிய ஊஞ்சல் அவளை ஒவ்வொரு நாளும் வியப்படையச் செய்யும். அதன் சந்தனப் பலகையை அடிக்கடி துடைத்துத் துடைத்து மோந்து பார்த்து அதன் நூற்றாண்டு மணத்தை நுகர்வாள்.

இவள் சொல்வதைக் கேட்டு, அந்த ஊஞ்சல் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும் என அவள் தோழிகள் ஆர்வமாவார்கள். அட போங்கடி உங்க காலுபட்டா அந்த வீட்டுக்கே தீட்டு எனச்சொல்லி செருக்கோடு கடந்து போய்விடுவாள்.

அழுத்தித் துடைக்கும்போது ஒருமுறை ஊஞ்சல் அசைந்து, வீட்டின் மெளனத்தைக் கொன்றுவிட, கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்துவிட்டார் நத்தம உடையார். வேட்டியை இழுத்துக்கெட்ட முடியாத பலவீனமான நிலையிலும் கூட கெட்டவார்த்தை பேசும்போது மட்டும் உடையாருக்கு எப்படி இவ்வளவு வன்மை வந்துவிடுகின்றதென்று வியப்பு கொள்வாள் அஞ்சலா. ‘ஊஞ்சல்ல உக்காந்திட்டியா (பறத்)தேவடியா..’எனத் தொடங்கினால் அன்றைய நாள் முடியும் வரை விதம்விதமான கெட்டவார்த்தைப் பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருப்பாள்.

இருந்தாலும் ஊஞ்சலைத் துடைக்காமல் இவளால் இருக்கமுடியாது. தான் இதைத் துடைப்பதற்குத்தான் இந்தப் பிறப்பே எடுத்தது போல மீண்டும் மீண்டும் பக்குவமாகக் கடுகு எண்ணெயில் நீர் கலந்து துடைப்பாள். எப்பொழுதும் வார்னிஷ் அடித்தது போல பளபளவென ஊஞ்சலை வைத்திருப்பாள். அதிலிருக்கும் சிற்ப வேலைப்பாடுகளில் மனம் பறிகொடுப்பாள். வெறுமனே சில மணிநேரங்கள் ஊஞ்சலை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பாள். பானு அக்காவும் ரம்யாவும் இந்த ஊஞ்சலில் ஆடுவதைப் பார்த்திருக்கிறாள். ஊஞ்சலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பதற்றம் கொள்வாள். அவர்கள் வீட்டு ஊஞ்சலில் அவர்கள் ஆட, தனக்கு ஏன் பொறாமை வருகிறதென, தன்னைத்தானே அடித்துக் கொள்வாள். அந்த அரசன்மார் ஊஞ்சலில் தான் ஒரு மகாராணி போல அமர்ந்து மெல்ல ஆடுவதாய் அடிக்கடி அவளுக்கு வரும் கனவினை இன்றுவரை யாரிடமும் பகிர்ந்ததில்லை.

‘பெத்தமக ரெண்டுபேரும் ஊர் உலகம் தள்ளி இருக்கோம். அப்பாவ கூட்டிட்டும் போகமுடியாது உடம்பு கண்டிசன் அப்படி, நீதான் பாத்துக்கணும், பிபி வேற, கோவம் பழியா வரும். உன் அப்பா மாரி பாத்துக்க’ என்று பானு அக்கா நத்தம உடையாரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, தன் கையைப் பிடித்து கண் கலங்கச் சொன்ன நாள் இன்றும் அஞ்சலாவின் நினைவில் இருக்கிறது.

அஞ்சலாவிற்குச் சொந்தமென்று அவள் அண்ணன் மட்டும்தான் இருக்கிறான். தாய் தந்தை இறந்து விட்டிருந்தனர். சிறுவயது முதலே ஏரோப்பிளேன் வீட்டில்தான் வேலை. நத்தம உடையாரின் இளையமகள் ரம்யாவுடன் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவள் அஞ்சலா. அஞ்சலாவின் அம்மாவும் உடையார் வீட்டுப் பின்புற மாட்டுக்கொட்டாயில் சாணியள்ளி வறட்டி ஆக்கும் வேலை செய்தவள். முப்பது வருடங்களாக வேலை செய்திருந்தாலும் அம்மாவால் எரோப்பிளேன் வீட்டிற்குள் செல்ல முடிந்ததில்லை. சமையலுக்கு, துடைப்பதற்கு, கழுவுவதற்கென்று ஐந்தாறு வேலைக்காரர்கள் அன்று இருந்தனர். நத்தம உடையார் மனைவி காமாச்சிஅம்மாவுக்கு நீரழிவு வந்து காலொன்றை எடுத்து விட்டிருந்தார்கள், அந்த சமயத்தில் ஏதேனும் அவசரத்திற்கு வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாதபோது, காமாச்சியம்மா அஞ்சலாவைத் தான் உள்ளே கூப்பிடுவாள். தன் காலனியில் இருக்கும் எல்லா வீடுகளையும் இந்த ஒரு வீட்டிற்குள் அடக்கிவிடும் அளவிற்குப் பெரியவீடா என்று வாய் பிளந்தாள். காலால் எட்டுவைத்தே வீட்டினையும் காலனியையும் அளந்து பார்க்கவேண்டுமென்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அவ்வூர் காலனியில் முதன்முதலாக ஏரோப்பிளேன் வீட்டிற்குள் சென்றவள் தான்தான் என்பது தனக்குக் கிடைத்த பட்டம் போலப் பெருமையாக நினைத்துக்கொள்வாள் அஞ்சலா.

பத்தாவதுக்கு மேல் படிக்க முடியாமல் இவள் வேலைக்காரியாகத் தங்கிவிட, உடையாரின் மகள்கள் மேற்படிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டார்கள். மாதமொருமுறை பெற்றவர்களைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள். அவர்கள் வந்து செல்லும் நாள்களெல்லாம் வீடு கூடுதலாக அழுக்கடையும். எல்லாப் பொருள்களையும் பரப்பிவிடுவார்கள். கொஞ்சம்கூட வீட்டின்மேல் அக்கறையில்லாம கிடக்கிறீங்களே என்று நத்தம உடையாரும் திட்டுவார், அதான் அஞ்சலா இருக்காளே, அவ பாத்துக்குவா என்று பானு அக்கா உரிமையுடன் பேசுவாள். அப்படிப் பேசும்போதெல்லாம் இந்த நம்பிக்கைகாகவே இன்னும் இன்னும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஊற்றெடுக்கும். விடுதியில் இருந்து எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் அஞ்சலாவிற்கு நைட்டியும் வாங்கி வருவாள் பானு. அவள் கொடுத்த நைட்டிகளைத்தான் இப்போதுவரை அஞ்சலா உடுத்திக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது போட்டிருக்கும் இந்தக் கத்தரிப்பூ நைட்டி கூட அவள் இரண்டு தீபாவளிக்கு முன் வாங்கிக் கொடுத்ததுதான்.

பஞ்சம்மா குடத்து நீரை நடுவாக வைத்து மூடி, அதன்மேல் சொம்பை வைத்தாள். தாகத்தில் கூட்டம் குடத்தை சூழத் தொடங்கியது. வக்கீல் எழிலை நேர்கொண்டு பேச இன்னும் அஞ்சலாவிற்குத் துணிவு வரவில்லை. தன்மேல் படிந்திருக்கும் பழியை எதை வைத்து துடைப்பது என்ற எண்ணத்திலே ஆழ்ந்து கிடந்தாள்.

நத்தம உடையாருக்குப் பலவருடங்களாக உடல்நலமில்லை. அருகிருக்கும் நூலகத்திற்குச் சென்று வந்த நிகழ்வுகள் கூடக் குறைந்துவிட்டிருந்தது. எப்பொழுதும் டிவியில் செய்திகள்தாம் பார்ப்பார். பட்டிமன்றங்கள் மிகப் பிடிக்கும். தன் கையில் இருக்கும் போனில் எல்லாவகையான பட்டிமன்றங்களையும் ரசித்துப் பார்ப்பார். ரங்கசாமி உடையார் மட்டுமே அரிதாக எப்போதேனும் வந்து போவார். போகும் போதெல்லாம் தன் அகன்ற புரைக்கண்களால் ஏரோப்பிளேன் வீட்டினைத் தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வார். ஏரோப்பிளேன் வீட்டு வேலையாட்களும் படிப்படியாகத் திருமணம், பிள்ளைகள் தலையெடுப்பு எனப் பல காரணங்களால் நின்றுவிட்டனர். இன்னும் சிலர் உள்ளூரில் வேலை செய்வது இழுக்கு என்று கருதி, வெளியூர்களில் கூலிவேலைக்குச் சென்றுவிட்டனர். வேலைக்கு ஆள் கிடைப்பதே குதிரைக் கொம்பாக மாறிவிட்ட காலமிது. நம்பிக்கை வைத்து வடநாட்டு ஆட்களை வீட்டு வேலைக்கு யாரும் எடுப்பதில்லை.  

நத்தம உடையாரை முழுமையாக இவள்தான் கவனித்துக் கொள்கிறாள். பொழுது புலர்கையில் நைட்டியை மேலுயர்த்திக் கட்டி வேலையைத் தொடங்கினால் என்றால் அதனை இறக்க, பொழுது சாய்ந்து விடும்.

மிக வசதியான வீட்டில் திருமணம் முடித்து வெளிமாநிலம் சென்றுவிட்ட மகள்களும் உடையாருக்கு மாதம் ஒருமுறையோ, இருமுறையோ போன் செய்வார்கள், இவளிடமும் பேசுவார்கள். மறக்காமல் அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளச் சொல்வார்கள். வீட்டுவேலை செய்வதற்கு இன்றுவரை முறையான சம்பளம் என்று ஏதுமில்லை. ‘உன் கல்யாணத்துக்கு ஒருபவுன் செயின் போடுறேன் அஞ்சலா’ என்று பானுஅக்கா பேசும்போது அன்பு கொப்பளிப்பதாய் உணர்வாள்.  அஞ்சலாவின் திருமணத்திற்குக் கொத்தாக ஏதாவது செய்வார்களெனத் தோழிமார்கள் அவளிடம் ஆசை வளர்ப்பார்கள். உடையார் வீட்டினர் அப்படி ஒன்றும் நம்மைக் கைவிட்டு விடமாட்டார்கள் என்ற எண்ணம் அஞ்சாலாவுக்கும் உறுதியாக இருந்தது.

அஞ்சலாவின் அண்ணனின் கால் ஒன்று ஒடிந்து நடக்க முடியாமல் செயலிழந்த நிலையில் கிடக்கிறான். இவளுக்கு வயது முப்பதை எட்டிக் கொண்டிருந்தது. இவளின் திருமணம் பற்றிப் பேச யாருமில்லை. பானு மட்டும்தான் அடிக்கடி திருமணம் பற்றி விசாரிப்பாள். அப்பொழுது மட்டும் ஏக்கம் கண்களை மறைக்கும். தன்னைக் காதலிப்பதாய்ச் சொல்லி சிலநாள்கள் உறவுகொண்ட குட்டியானை ரவி, அம்மா அப்பா சகிதம் பெண்பார்க்க வந்த மூன்றாம் நாளில் சாலை விபத்தொன்றில் இறந்துவிட இராசி இல்லாதவளானாள். கல்யாணம் நடக்கனும்னு விதி இருந்தா, நடக்காமலா இருக்கப்போவுது என்று தனக்குத்தானே சமாதனம் செய்து கொள்வாள். திருமண ஏக்கங்களையும் வேலை செய்தே அழிப்பாள்.

பூட்டி, பாட்டி, அம்மா, இவள் என நான்கு தலைமுறைகளாக வேலை பார்த்த வீடு, அஞ்சலாவிற்கு நேற்றுவரை அடைக்கலமாக இருந்த வீடு, இந்த ஏரோப்பிளேன்வீடு. ஆனால் இனி என்ன ஆகப்போகிறதோ என்ற கவலையில் அஞ்சலா முக்காடினைச் சரிசெய்தபடி அமர்ந்திருந்தாள்.

ஏரோப்பிளேன் வீடு சென்றதும் முதல் வேலை மலமூத்திர நாற்றமெடுக்கும் உடையாரின் படுக்கை விரிப்புகளையும், அவர் அணிந்திருக்கும் வேட்டி துண்டுகளையும் சர்ப் போட்டு, ஊறவைத்து, லைசால் போட்டு வீட்டை முழுகித் துடைப்பாள். அதற்குள் கோலை ஊன்றியபடி காலைக் கடன்களை முடித்துவிட்டு, சோபாவில் ஆற அமர்ந்து டிவி பார்க்கத் தொடங்கி விடுவார் உடையார். பக்கத்து வீட்டுப் பரிமளம் அக்கா பிளாஸ்கில் தேநீரும், சூட்டு ஏனத்தில் சிற்றுண்டியும் கொடுத்து விட்டுப்போவார்.

காமாட்சியம்மா இருந்தவரை அஞ்சலாவிற்கு உடையாரோடு அதிகம் தொடர்பில்லாமல் இருந்தது. அந்தம்மா இறந்ததும் அவரோடு அடிக்கடி புழங்க வேண்டியிருந்தது. அவர் மகள்மார்கள் வெளியேறிய பிறகு, அவரோடு மட்டுமே மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. நாள்தோறும் கிட்டத்தட்ட வார்த்தைப்போர்தான். கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ளாமல் நசநச என்று கத்தியபடியே இருப்பார். பொருளை வைத்த இடம் மறந்துவிட்டு வேறு இடத்தில் தேடிக் கொண்டிருப்பார். அதற்குள் அதனைக் காணோம் நீதான் திருடினயா’ வெனத் தையத்தக்கா குதிப்பார். அதைத்தேடி எடுத்துக் கொடுத்ததும் பதிலேதும் சொல்லாமல் அதைப்பிடிங்கிக் கொண்டு முறைத்தபடி சென்றுவிடுவார். சில நேரங்களில் ஏரோப்பிளேன் வீட்டுப் பக்கமே செல்லக்கூடாது என்று வைராக்கியம் பிடித்து நின்றாலும், ஆள் அனுப்பி வரவழைத்து விடுவார் உடையார்.  அப்போதும் வீட்டுல தூரமா இருக்கியா ஏன் வரல’ என்று ஏசுவார்.

முன்பொருமுறை உடையார் அஞ்சலாவைக் கெட்ட வார்த்தைகளில் ஏசுவதைக் கேட்ட, அவள் அண்ணன் கார்மேகம், குடித்துவிட்டு உடையாரை அடிக்கப் போவதாக அலம்பல் செய்து கொண்டிருந்தான். அப்படி ஏதாவது செய்தால் உணவில் விசம் வைத்துக் கொன்று விடுவேனென அவனை மிரட்டி வைத்திருந்தாள்.

ஆத்திரம் குறையாத நாள்களிலெல்லாம் அவள் அண்ணன், ஊரின் வடக்குப்புறமூலையில் இருக்கும் உடையாரின் தென்னத்தோப்பில் இரவில் இளநீர் திருடி மதுவில் கலந்து குடிப்பான். உடையார் தோப்பில் அமர்ந்து குடிப்பது, ஒருவகையில், உடையாரை இழிவுபடுத்துவது போல இருந்தது அவனுக்கு. வெறியோடு நிலத்தைக் குத்திக்குத்தி குடிப்பான். தன் சொந்தத்தோப்பு போலத் தன்நண்பர்களையும் அழைத்துச்சென்று மதுகுடிக்கும் இடம்போல அந்தத்தோப்பைப் பயன்படுத்தினான். இச்செய்தி நத்தம உடையார் காதுகளுக்குச் செல்ல, அவர் காவல்நிலையத்தில் ரங்கசாமிஉடையார் மூலம் புகார் கொடுத்துவிட்டார். அஞ்சலாவையும் அசிங்கமாகத் திட்டித் தீர்த்தார்.  கார்மேகம் தோப்பில் இளநீர்திருடிய ஒருநாளில் காவல்துறை அவனைப் பிடிக்கப் பாய்ந்தது. மரத்தில் இருந்து விழுந்தவனின் இடக்கால் நடமாடமுடியாமல் முறிந்துவிட்டன.

எவ்வளவோ கெஞ்சியும், பானுஅக்கா பரிந்துரை செய்தும் புகாரைத் திரும்பப்பெற உடையார் மறுத்துவிட்டார். மாவுக்கட்டுக்காலோடு வீல்சேரில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டான். திரும்பிவரும்போது அந்தக்கால் இல்லாமலேயே வந்தான். இந்த வக்கீல் எழில் மட்டும் இல்லாவிட்டால் இவனை இன்று உயிரோடு பார்த்திருக்க முடியாது. ஜெயிலில் அழுகிப்போன கால்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அஞ்சலாவின் அண்ணனை, முக்கிய அதிகாரிகளுடன் பேசி, உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்து உயிரோடு மீட்டார். அண்ணன் செய்த திருட்டுக்குப் பிறகும் நத்தம உடையார் தன்னை ஏரோப்பிளேன் வீட்டில் தொடர்ந்து வேலைசெய்ய அனுமதித்ததே கோடி புண்ணியம் என்று நினைத்துக்கொண்டாள். அஞ்சலா முன்னிலும் விஸ்வாசத்தோடு வேலை செய்தாள்.

இன்று நடக்கும் பஞ்சாயத்திற்குத் தானும் வருவேன் என்று கட்டை ஊன்றி அடம்பிடித்து வந்த அஞ்சலாவின் அண்ணனை எழில்தான் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பணமில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வாதாடி நீதி பெற்றுத்தரும் இந்த நல்ல மனிதர் வக்கீல் எழிலின் பேச்சை மீறி இப்படிச் செயல்பட்டு அவருக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டோமேயென அஞ்சலா வருந்தினாள்.

வெய்யில் உச்சம் ஏறி, எறும்புகள் கூட நடமாட்டத்தை நிறுத்தியிருந்தது. பஞ்சாயத்திற்கு ரங்கசாமிஉடையார் வந்து விட்டாரா எனப் பார்த்து வர விளையாடிக் கொண்டிருந்த சிட்டுவை மீண்டும் ஆலமரச்சாவடிக்கு அனுப்பிவைத்தார் எழில்.

தன்னால்தானே இன்று இவ்வளவு பெரிய பஞ்சாயத்து என்பது அஞ்சலாவிற்கு எண்ணிப்பார்க்க எண்ணிப்பார்க்கக் கூசியது. திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த ஆயிரம்ரூபாய் பட்டுப்புடவையில் தொங்கிவிடலாமா என்றுகூட நேற்று நினைத்திருந்தாள். உடலில் இருக்கும் காயங்களை விட மனக்காயம் அவளுக்கு உறுத்தி வலித்தது. தன்னை நல்லவளாக நிறுவிய பிறகு சாகலாமென்று தற்கொலை எண்ணத்தைத் தள்ளி வைத்தாள்.

நத்தம உடையார் இப்படிச் செய்வாரென்று கனவிலும் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஏன் இப்படிச் செய்தார் என்று அஞ்சலாவுக்கும் விளங்கவேயில்லை.

பேச்சுமூச்சு நடமாட்டமில்லாமல் இறந்து போவதற்குச் சிலநாள்கள் முன்பு கூட ,உடையார் எங்கே எழுந்து வந்து நம்மைத் திட்டிவிடுவாரோ என்று பயந்துபயந்துதான் அவருக்கு மல மூத்திரம் கழுவித் தூய்மை செய்தாள் அஞ்சலா. சாகும்போதும் உடையார் தன்னை முறைத்துக் கொண்டே சாவது போலத்தான் அவளுக்குத் தோன்றியது. பின்பு உடையார் ஏன் இப்படிச் செய்தார்? என்பதே புரியாத கேள்வியாய் சுழன்றடித்தது.

உடையார் இறந்தபிறகு, இனி இவ்வீட்டில் என்ன வேலை, சோற்றுப்பாட்டுக்கு வழி ஏது, கூலிவேலைக்குத் தான் செல்ல வேண்டுமா, யாரில்லாவிட்டாலும் வீட்டைப் பானுஅக்கா தன்னைத்தான் பார்த்துக்கொள்ளச் சொல்வாளென்று தானே எதிர்பார்த்திருந்தாள். மகள்கள் இருவரும் குத்துக்கல்போல இருக்க, உடையார் இப்படிச் செய்வதற்கான காரியத்தை அவளால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஏரோப்பிளேன் என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் இந்தப் பெரியவீட்டை – அஞ்சலாவிற்கும், ஊரின் வடக்குப்புறமூலையில் இருக்கும் நாலுஏக்கர் தென்னந்தோப்பை அஞ்சலாவின் அண்ணன் கார்மேகத்திற்கும் உயில் எழுதிவைத்து செத்திருந்தார் நத்தம உடையார். மற்ற நகை உள்பட அசையும் சொத்துகளை இரண்டு மகள்களுக்கும் சமமாகப் பிரித்து எழுதி வைத்திருந்தார்.

உயில் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் அஞ்சலா கிணற்றுமேட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். பானுஅக்கா அவளின் முடியைப்பிடித்து இழுத்து, நைட்டி கிழிய ரத்தம் வர அடித்து, கெட்டவார்த்தையில் ஏசி, வீட்டைவிட்டு, தெருவைவிட்டு வெளியே தள்ளினாள். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் கண்ணீர்விட்டபடி அஞ்சலா வீட்டிற்கு வந்து கதறி அழுதாள்.

கிழவனை என்னத்த செய்து மயக்கினாள் என்பதுதான் சிலநாள்கள் தலைப்புச்செய்தியாக ஊருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ‘ஆயிரம் ரெண்டாயிரம் இரக்கப்பட்டுக் கொடுக்கலாம், காலம் முழுக்க வேலை பார்த்திருக்கா, மல மூத்திரம் கழுவியிருக்கா, ஏன் ஒரு தங்கச்சங்கிலி கூட எடுத்துப் போட்டிருக்கலாம் ,தப்பில்ல, ஏன் வீட்டையே எழுதிக் கொடுத்தாரு? என்று விசாரணைகள் எங்கும் உலவின. ஊம்பிப் புழைக்கிறதுன்னா இதுதான் போல என்று பொருமினர் பலர். ‘மயிரக்குடுப்பாங்க வீட்ட(பறத்)தேவடியாளுக்கு’ ‘எந்தச்சாதி, எந்தச் சாதித் தெருவுல வந்து வாழலான்னு பாக்குறது’ என்று பேச்சுகள் மிகச் சாதாரணமாகக் கேட்டது.   அடிப்பட்ட இடத்திற்கு மருந்துபோடக் கூட வெளியே வர முடியாமல் அஞ்சலா முடங்கிக்கிடந்தாள்.

நத்தம உடையாரின் உயிலைப் பிரித்துப் படித்தநாளில் இருந்து இந்த நொடி வரை ஏரோப்பிளேன் வீட்டிற்குள் அஞ்சலாவால் செல்ல முடியவில்லை. பரபரவென்று வேலைசெய்தவளால் சும்மா இருக்க முடியவில்லை. சுவரைப்பிரிந்த பல்லியைப்போல வீட்டைப் பிரிந்து உழன்றாள்.

செய்தி எப்படியோ வக்கீல் எழிலின் காதுகளுக்குச் சென்றது. உயிலின் நம்பகத்தன்மையைச் சோதித்து வழக்குத்தொடுக்கலாம் என்றார்.  அஞ்சலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உரியமுறையில் உடையார்வீட்டில் பேசப்போன வக்கீல் எழிலின் மீதும் சாதிய வசைகள் தெறிக்கப்பட்டன. வழக்குபோட்டால் தலைபோய்விடுமென்ற மறைமுக மிரட்டல் பதிலாய் வந்தது.

என்ன நடந்தாலும் அஞ்சலாவைச் சம்மதிக்கவைத்து வழக்குதொடுப்பதில் உறுதிகாட்டினார் எழில். செய்தி மனிதஉரிமைக்குழு வரை கசிய, அடக்கி வாசிக்கலாயினர் உடையார் வீட்டினர். நத்தம உடையாரின் குற்றஉணர்வே அஞ்சலாவிற்கும் அவள் அண்ணனுக்கும் சொத்து எழுதிவைக்கக் காரணம் என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருந்தார் எழில். கோர்ட்டில் இதை நிறுவுவது மிக எளிது என்பது எழிலுக்கும், உடையார் வீட்டு வக்கீல் சுந்தரழகனுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.

சுந்தரழகனும் பானுவும் நீதிமன்றம் செல்லாமல் ஊர்ப்பஞ்சாயத்து மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று பலவழியாகத் தூது விட்டார்கள். முடியாது என்று ஒற்றைச்சொல்லில் மறுத்துவிட்டார் எழில்.

பக்கத்து வீட்டுப் பரிமளம்அக்கா மூலம் அஞ்சலாவுக்குத் தொடர்ந்து தூது அனுப்பி உள்ளூர் பஞ்சாயத்துக்குச் சம்மதம் வாங்கினாள் ரம்யா. இதனால்தான் இன்று பஞ்சாயத்து கூட்டப்பட்டு, ஒப்புக்குக் காவல் துறையினரையும் வரவழைத்து நிறுத்தியிருக்கின்றனர்.

ஏன் இந்த அஞ்சலா பஞ்சாயத்திற்கு ஒத்துக்கொண்டாளென அவள்மீது கோவமாக இருந்தார் எழில். உச்சநீதிமன்றமே நம்பகத்தன்மை இழந்து வருகிற இந்தக்காலத்தில், ஆண்டைசாதிப் பஞ்சாயத்துகளில் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ற யதார்த்த விரக்தியில் இருந்தார் எழில்.

எழில், முன்பே அஞ்சலாவிடம் பேசிப் பேசித் தோற்றுப் போயிருந்தார். உழுகிறவர்க்கே நிலம் சொந்தமென்றால், வீட்டைத் தாய்போலப் பார்த்துக் கொண்டவளுக்கு வீடு சொந்தமில்லாமல் ஆகிவிடுமா என்ன, முன்மாதிரிகளாய் சமூகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மீது கல்லெறிகள் கட்டாயம் விழத்தான் செய்யுமென்று எடுத்துக் கூறியும் அஞ்சலா மறுத்துவிட்டாள். வீடு தனக்குச் சொந்தமென்பதை அஞ்சலாவால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சோற்றில் சாணத்தைக் கலந்ததைப்போல ஒவ்வாமையாக உணர்வதாய் எழிலிடம் சொல்லியிருந்தாள்.

எழில் பஞ்சாயத்திற்கே வரக்கூடாதென்று தான் கருதியிருந்தார். கடேசி வாய்ப்பாக ஏதேனும் அற்புதம் நடந்துவிடாதா என்ற ஏக்கத்திலும், எளியமகள் மேலும் ஏமாற்றப்பட்டு விடக்கூடாதென்று அக்கறையிலும் வேறுவழியில்லாமல் பஞ்சாயத்துப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

சிட்டு ஓடிவந்து ரங்கசாமி உடையார் ஆலமரச்சாவடிக்குப் பெரிய கறுப்புக் கண்ணாடி அணிந்து வந்திருப்பதாகக் கூறினான். வேர்வையைத் துடைத்தபடி எல்லாரும் எழுந்தனர்.

போலிஸார் தூரத்தில் செவன்அப் குளிர்நீர் குடித்துக் கொண்டிருக்க, பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது.

‘நத்தம உடையார் வச்சிருந்தார்னே கூட எடுத்துக்கலாம்பா, அதுக்காகக் கோடி ரூவாக்கு மேல மதிப்புள்ள பரம்பரவீட்டக் கொடுத்திர முடியுமா’என்றார் பஞ்சாயத்தில் ஒருவர். சொத்து அவரோடதில்ல, பரம்பரச் சொத்து, எழுதி வைக்கிற அதிகாரம் நத்தம உடையார்க்கே இல்ல, அதனால உயில் செல்லாதென்றார் இன்னொருவர். தனக்கு அதிகாரமில்லன்னு தெரிஞ்சும் எழுதியிருக்கிறதால – அந்தப்பறச்சி தான் உடையார மயக்கி எழுதி வாங்கி–என்று இன்னொருவர் கூறிக் கொண்டிருந்தபோது பாதியில் கத்தியபடியே எழுந்தாள் அஞ்சலா.

‘ஒரு நிமிசங்கய்யா, பெரியவுக பேசும்போது நடுவுல பேசுறதுக்கு என்னப் பொறுக்கனும். மனசுல இருக்குறத சொல்லிப் போறேன் சாமி’.

எல்லோரும் அவள் சொல்லப்போவதை ஆவலாய்க் கண்ணுற்றார்கள்.

‘அந்த வீட்டு அரசன்மார் சந்தன ஊஞ்சல்ல நான் ஆடுறதா இந்தப்பாவி அடிக்கடி கனவு கண்டிருக்கேன்., உண்மைதான் மறைக்கல சாமி, ஆனா அப்படிப்பட்ட கனவு வர்றது கூட எவ்வளவு பெரிய தப்புன்னு, அந்த கனவு வந்த ஒவ்வொரு நாள்லயும் எனக்கு நானே சூடு வச்சுக்குவேன், பாருங்க சாமி, பாருங்க சாமி’ என்று தன் உடைகளைக் கழற்றி சூட்டுத்தழும்புகளைக் காட்டினாள்.முலைக்கும் முதுக்குக்கும் இடையேயான கருத்தக் குறுக்குப்பகுதியில் எண்ணிக்கையில்லாக் காய்ந்து போன தழும்புகள் ஒழுங்கில்லாமல் கிடந்தன. கூட்டத்தினர் அனைவர் முன்பும் வீறாப்புடன் தழும்புகளைக் காட்டினாள். மெல்ல உடைகளை மீண்டும் அணிந்துகொண்டு ஓரமாகச் சென்று நின்றாள். ஒரு பெரிய அழுத்தத்தில் இருந்து விடுபட்டது போல அவள் கண்கள் ஒளியேறி நின்றது.

வேறொரு வழக்கு தொடர்பாகச் சிலமாதங்கள் கழித்து சாத்தனூர் காலனிக்கு வந்த எழில், அஞ்சலா பற்றி விசாரித்தார். ‘திருச்சி பைபாஸ் ரோட்டு பாலம் கட்டுற இடத்துல கூலிவேல செய்றா’ – என்ற பதில் வந்தது. கூடவே – ‘எங்க பாலம் கட்டி முடிச்சோடனே, பாலத்த எழுதி வாங்கிருவாளோன்னு அந்தக் காண்ட்டிராக்டர் பயந்து நடுங்கிக் கிடக்காரு – என்று பகடியாகச் சிரித்தனர். எழிலால் சிரிக்க முடியவில்லை. மனம் கனத்துப் போனார். இந்த அறியாமைப் பகடிச்சிரிப்பொலியில் பல நூற்றாண்டுகளின் ஆண்டைத் திமிர் மணம் ஊடுருவியிருப்பதை எழில் உணர்ந்திருந்தார்.

இன்று வரை அந்த ஏரோப்பிளேன் வீடு எந்தவொரு ஆள்களின் புழக்கமில்லாமல் ஒளியிழந்து கிடக்கிறது.

***

பாக்கியராஜ் கோதை – ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர் தற்பொழுது சென்னையில் திரை துறையில் பணியாற்றி வருகிறார்.

RELATED ARTICLES

2 COMMENTS

 1. நல்லதொரு கதை…
  நூற்றாண்டின் மனத்தை கடைசி வரை அஞ்சலாவால் உணர முடியாதுதான் இன்னும் நிஜமாய் பல இடங்களில்…
  அந்தக் கேலி பேச்சுக்கள்தான் பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
  தன் இனத்தில் ஒருத்திக்கு நேர்ந்த அவமானம் கூட இங்கு சிரிப்பாய்தான் இருக்கிறது… வலி எல்லாருக்கும் பொதுவானது என்பதை யாரும் உணர்வதிலை.
  வாழ்த்துகள்.

 2. வாசித்து முடித்ததும் இக்கதை குறித்தான நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுதான் கண்ணில் பட்டது. 2019ம் ஆண்டில் வெளியான ரைன் ஜான்ஸனின் Knives Out என்ற அமெரிக்கத் திரைப்படத்திற்கும் இந்தக் கதைக்கும் ”தொடர்புடைய பதிவுகள்” போல இருக்கும் பந்தம் பற்றி ”ஒரே கருத்தை மையமாகக் கொண்ட இருவேறு படைப்புகள்” என்று குறிப்பிட்டிருந்தார். எனக்கும் கூட அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டிருந்தது. தவிர பாக்கியராஜ் கோதை சினிமாத்துறையைச் சேர்ந்தவர் என்ற அறிமுகமும் இருந்ததாலும் கூட (அருவி திரைப்படத்தின் உதவி இயக்குநர்) இந்த மனவோட்டம் தவிர்க்க முடியாதபடி ஆனது.

  ஆனபோதும், இந்தக் கதையின் ’கரு மூலங்கள்’ எக்கச்சக்கமாக தமிழ்ச்சூழலில் கண்ணுக்கு முன் நடந்தேறியனவே. எத்தனையோ ஜெமீன்களின் கதைகளில் உறைந்துகிடக்கும் பின்வரலாற்றுக் கூறுகளுக்குள் குடும்பங்கள்/வாரிசுகள் சொத்தை அடையமுடியாதபடி உயில்களை ரத்த சம்பந்தமற்ற நபர்களுக்கு எழுதிக் கொடுத்த கதைக்கூறுகள் நம்மிடையே உண்டு. பாக்கியராஜ் கோதையின் இந்த ‘முதல் சிறுகதைக்குள்’ சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களும் அவர்களது அப்பட்டமான புழங்குச் சொற்களும் அவர்களது சாதிய மனக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன. அவையே கதையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் பயன்படுகின்றன. அதே நேரம் அவர்களது தரப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் விதமான, பறையரினப் பெண் அஞ்சலாவின் மறுமொழி இங்குள்ள சமூக எதார்த்தம். அந்தக் கட்டுத்தளைகளை மீறும் கதைகளும்கூடச் சமீபமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன. உதாரணம் அரசனின், ‘நின்றுகொல்லும்’ சிறுகதை. (Knives Out திரைக்கதை முற்றிலும் வேறுபடுகிற இடம் இங்குதான். அதன் தீவிரத் தன்மையை நத்தம உடையாரின் பாத்திரத்தைச் செய்யும் கிறிஸ்டோபர் ப்லம்மரின் மரணம் ஏற்படுத்திவிட்டிருக்கும். கதைக்குள் என்ன ஒன்று இங்கு அஞ்சலாவுக்கு சாதிப்படிநிலை, மார்த்தாவுக்கு அகதி-பூர்வகுடி முரண்கள்) மற்றபடி இச்சிறுகதையில் ஏரோப்ளேன் வீடு பற்றிய விவரிப்புகள் வழக்கமானவையாகப்பட்டது. கதாபாத்திரங்களும் கூட மனத்தில் தங்காமல் ஓடிவிடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular