நீலநிற ஆக்காட்டி

0

சிவகுமார் முத்தய்யா

1

பூக்காரத் தெருவுக்கு ஆறுமுகம் வந்தபோது யாரோ கெட்ட வார்த்தையில் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வார்த்தை தன்னை நோக்கி வருவதுபோல போல உணர்ந்த அவன் ஒரு நிமிடம் நின்று வசவு வந்த அந்த வீட்டை புதிதாக பார்ப்பது போல உற்றுக் கவனித்தான். முகப்பு சுவரில் நீலநிற பெயிண்ட் அடிக்கப்பட்ட அந்த வீட்டிலிருந்து அடர்த்தி கூடிய மல்லிகையின் மயக்கமுறச் செய்யும் அது இக்கணமும் அவனை குலைவு அடைய செய்திருந்தன.. அந்த மணம் அது பூக்காரன் வீடு என்பதை பல ரூபங்களில் உணர்த்தும் விதமாக காட்சியளித்தது. புதிதாக முளைத்த நஞ்சுச்செடி போல  கடுஞ்சொற்களில் அங்கு பேசும் அந்த நபர்  மஞ்சுளாவின் அப்பா என்று முதலில்  நினைத்தான்.

எந்த அப்பாவும் மகளை இப்படிப் பேசி இவன் கேட்டதில்லை. ஆமாம் சினிமாவில் கூட. அப்படியானால் இவர் யார்? வேறு யார் இப்படி உரிமையுடன் கண்டிக்க முடியும். பேசிய ஆளின் குரல் புதிது. சற்று குனிந்து தாழ்வரத்தை உற்றுப் பார்த்து பேசியவரின் முகத்தைப் பார்த்தான். அது  கன சதுரமாகவும் மூக்கு சற்று தட்டையாகவும் இருந்தது.  அவர் மூக்கு எப்போதோ பார்த்த மீன்கொத்தி பறவையை நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் மீன்கொத்திக்கு மூக்கு மட்டும் நீளம் என்பது பெரிய விஷயமில்லை.  இருபது அடி உயரத்தில் பறந்து கொண்டே நீரில் நீந்தும் மீனைக் குறிபார்த்து விடும். சில வருடங்களாக மீன்கொத்தியை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. கரகரப்பு குரலில் பேசிக்கொண்டிருக்கும் நீள மூக்குக்காரர்.

வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். நெற்றியில் சந்தனத்தில் திலகமிட்டுருந்தார். ஆனால் தலையில் ஒரு முடியில்லை. பரந்த வழுக்கை. அந்த வீட்டுக்கு எதிரேயிருந்த இலைகள் அடர்ந்து நிழல் பரப்பிய புங்கமரத்தில் வந்து ஒதுங்கினான். முகத்தில் மெல்ல கசிவு கொண்டிருந்த வியர்வையை இடது கையால் துடைத்துக் கொண்டான். நல்ல மதியம் நேரம். அனல் கக்கும் வெயில். அந்த மனிதரின் வார்த்தைகள் சூடாகியிருந்தன. அவர் பெண்ணின் பாலின உறுப்புகளை கேவலமாக விமர்சிக்கும் வார்த்தைகளை தேடியெடுத்து மஞ்சுளா மீது வீசிக்கொண்டிருந்தார். அது பெருகியது. மஞ்சுளா மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையும் அவமானம் கொள்ளச் செய்யும் வகையில் வார்த்தைகளைப் பெருக்கினார். அதனைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு அவனால் நிற்க முடியவில்லை. திரும்பி நடக்கத் தொடங்கினான். அவர் யாராக இருக்கக் கூடும்? அந்தக் கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தன.

பச்சையான அருவெறுப்பு மிக்க சொற்களைக் கேட்டு கண்கள் கலங்கின. ஆறுமுகம் நடந்தான்… மதிய கால பூஜைக்கு முன்பாக தியாகராஜர் ஆலயத்தில் இருந்து சிவத்தொண்டர் பெரிய புராணத்திலிருந்து ஒரு பாடலை மென்மையான ராகத்தில் பாடினார். அந்த ராகம் துயர் நிரம்பிய நெஞ்சை மயில் இறகால் வருடுவது போலிருந்தது.

இந்த தேவர்கண்டநல்லூருக்கு வந்து சேர்ந்து இன்றோடு ஆறுமாத காலம் ஆகிவிட்டது. பூக்காரன் மூர்த்தி வீட்டில் தங்கி தேடி வந்த ஆட்காட்டியை தேடியாகி விட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனக்காவலர்களிடமும் விசாரித்துப் பார்த்து விட்டான். வனக்குறவர்களையும், பறவைகள் குறித்த ஆய்வாளர்களையும் கேட்டாகி விட்டது. அவர்கள் சிலர் தெரியவில்லை என்றும், சிலர் குழப்பமான பதில்களையும் தெரிவித்தனர். ஆனால் கழிமுகத்துவார வேட்டைக்காரர்கள் விரைவில் உயிரோடு பிடித்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.

சிலநேரங்களில் ஆக்காட்டியை பிடித்து தருவதாகச் சொல்லி அழைத்து செல்லும் ஆட்களுடன் லகூன் தீவுகளில் அலைந்து சாரயமும், வறுத்த மீனும் தின்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அம்மாவுக்கு புற்று முற்றிவிட்டது என்று கோரிமேடு மருத்துவர்கள் கைவிட்டபோது அப்பா குலுங்கிக் குலுங்கி அழுவதை முதன்முறையாகப் பார்த்தான் ஆறுமுகம். அம்மாவின் நோயை விடவும் அப்பாவின் அழுகை அத்தனை துயர் நிரம்பியதாக இருந்தது.

அம்மாவுக்கு நோய் முற்றிய நிலையில் முகம் களையிழந்து உடம்பெங்கும் வெண்புள்ளிகள் படர்ந்து வேரறுந்த தாவரம் போல் நிலையற்று தத்தளித்துக் கொண்டிருந்தாள். அடிவயிற்றில் தொடங்கியிருந்த நோய் உடலெங்கும் பரவிக் கொண்டிருப்பதாகவும், இனி எந்த மருந்து மாத்திரையும் வேலை செய்யாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர் மருத்துவர்கள். அவர்கள் மேலும் அம்மாவுக்கு நாளும் குறித்து விட்டனர்.

அம்மாவும்-அப்பாவும் மனம் உடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்த அவனுக்கு நிலைகொள்ளாத துக்கம் பெருகியது. தெரிந்தவர்கள்-அறிந்தவர்கள் என அம்மாவின் நிலையைச் சொல்லி தீர்வு தேடி களைத்த போதுதான் நண்பரின் நண்பரான உலகநாதன் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் ஞானசாமி பண்டிதர் பற்றி தெரிவித்தார். அவர் தொண்டிக்கு அருகே ஆலபெருமழை என்றும் கிராமத்தில் இருப்பதாகச் சொன்னார். அவரைப் போய் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நம்பிக்கையளித்தார்.

காரில் அம்மாவை அழைத்துக்கொண்டு ஆலபெருமழைக்கு சென்றடைந்தபோது இந்தியப் பெருங்கடலுக்கு மிக அருகில் அமைந்த இடமாக இருந்தது அது.. அவரது இருப்பிடம் துவங்கும் இடத்தின் முகப்பிலே ஞானசாமி பண்டிதர் வைத்தியசாலை என எழுதப்பட்டு இருந்தது. வைத்தியசாலை தொடங்கும் இடத்தில் ஒரு பெரிய முகப்பு மண்டபமும் அதனைச் சுற்றி பனையோலையால் வேயப்பட்ட சிறுசிறு குடில்கள்.

அதில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கும் வகையில் செய்நேர்த்தியோடு அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் அந்த முகப்பு மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில் ஞானசாமி பண்டிதர் மழைக்கான பூஜையில் இருந்தார். அங்கு அவரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரை சாமி என்றே அழைத்தார்கள்.  வருடத்துக்கு ஒருமுறை மழை யாகம் செய்வது அவரது வழக்கம் என்றார்கள். ஆலபெருமழையில் அவரது மழை பூஜைக்கு பிறகுதான் கருமேகங்கள் சூழும் என்றும் பேசிக்கொண்டர்கள். இவையெல்லாம் ஆறுமுகத்துக்கு வியப்பாகவும் புதிதாகவும் இருந்தது.

நீண்ட நேரம் வெட்டவெளியில் அமர்ந்து மழை குறித்த சுலோகங்களையும் இடையே பாடல்களையும் கணீர் குரலில் பாடி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தார். பாடல் பாடும் சில நேரங்களில்… மழையே… வாடா… வா.. என  கனத்த குரலில் ஒலி எழுப்பினார்.  வானை நோக்கி அவரது பாடல்கள், கோரிக்கைகள் பாய்ந்தன. அவரது குரல் அதிக ஒலியுடன் யாகத்தின் நிறைவை நோக்கிப் செல்லத் தொடங்கிய நேரத்தில் வானம் இருள் கொள்ளத் தொடங்கியது. தொடர்ந்து அதிவேகக் குரலை எழுப்பி மழையை இறங்கிவரச் சொன்னார்.

அந்த நேரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தவர்… இப்போது எழுந்து நின்று கையில் இருந்த தடியைப் பற்றியபடி  வானை நோக்கி முகத்தை காட்டி ‘விழுக… துளியே.. உயிர் வளியே’ என்றார்…..கையில் இருந்த தடியை அந்தரத்தில் நிறுத்திவிட்டு இரண்டு கரங்களையும் கூப்பி சூரியநமஸ்கார நிலையில் நின்றார். இருள் கொண்டிருந்த வானம் சடசடவென்று இறங்கியது.  திரண்டிருந்த மக்கள் கரகோஷங்களை எழுப்பி சாமியாருக்கு நன்றியை தெரிவித்தனர். வானமே இடிந்து விழுவது போல ஒன்றரை மணிநேரம் பெருமழை கொட்டியது. மழையில் நனைந்தபடி சாமி ஒய்வு அறைக்கு சென்றுவிட்டார். இனிமேல் இரவு 9 மணிக்குத்தான் நோயாளிகளைப் பார்ப்பார் என்றார்கள். மழையோடு சிலர் போய்விட்டிருந்தனர். மீதியிருந்த ஜனங்களுக்கு மிளகும் பூண்டும் அடர்த்திக்கூட்டிய ‘கடல் நண்டு சூப்’ வழங்கப்பட்டது. பெரிய அண்டாக்களில் நிரப்பட்டிருந்த வாழைப்பூ சோறு இரவு உணவாக தங்கு தடையின்றி அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டது..

சாமியார் வெளி நோயாளிகளைப் பார்க்க வந்தபோது வானம் துயில் கொள்ளத் துவங்கியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் இருந்தது ஆறுமுகத்துக்கு..

சாமி முன்பாக அமர்ந்தார்கள். அவரை மிக அருகில் ஆறுமுகம் பார்த்தான். அவர் முகத்தில் தங்கத்தின் மினுமினுப்பு. கழுத்தில் பவள மகுடம் சூடிய ருத்ராட்ச மாலையை அணிந்திருந்தார். இரண்டு கண்களும் வெண்மை நிற தாமரை போல விரிவு கொண்டிருந்தன.  அதில் ஒரு காந்தம். அதில் ஒரு மின்னல். அதில் ஒரு ஈர்ப்பு. இப்படி எத்தனையோ. அவர்  உதடுகள் சிவந்து போய் பழுத்த கோவைப்பழம் நிறம் காட்டின. அவர் தேகம் ஒரு சிற்பியால் செதுக்கியது போல இருந்தாலும் அவர் சராசரிக்கு மிகக்குறைவான உயரத்தில் இருந்தார்.

அதே நேரத்தில் உடல் மாநிறத்தில் இருந்தது.  வலது கரத்தில் ‘நமச்சிவாய’ என்னும் அட்சரம் பொறித்த செப்புக்காப்பு போட்டிருந்தார்.

அம்மாவை அவர் முன்பு அமர வைத்தபோது உற்றுக் கவனித்தவர்… “விஷயத்தை சுருக்கமாக சொல்லுங்கள்” என்றார்.

ஆறுமுகமும் அவனது தந்தையும் சொல்லியதைக் கூர்மையாகக் கேட்டார். பிறகு சாமி, அம்மாவின் கையைப் பற்றி நாடியை பரிசோதித்தார். சில நிமிடங்கள் யோசித்தவர் பிறகு எழுந்து உள்ளறைக்குச் சென்றார்.  கஷாயம் நிரம்பிய மூன்று பாட்டில்கள் மற்றும் லேகியங்கள், சூரணப்பொடிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். ஆறுமுகத்தைப் பார்த்து “தம்பி அம்மாவ அங்கே இருக்க வெச்சிட்டு வா” என சைகை காட்டினார். அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு எதிரேயிருந்த மண்டபத்துக்கு போனார்.

உள்ளறையில் சாமியார் முன்பு நின்றான் ஆறுமுகம். “தம்பி இன்று முதல் மூன்று மண்டலம் நான் கொடுத்திருக்கின்ற மருந்துகளை அம்மாவுக்கு கொடுக்கணும். மருந்தை தேன், காய்ச்சின பாலில் கலந்து கொடுங்க. அப்புறம் இந்த மருந்து சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு போகும் கவலைபடதீங்க. இன்னொரு முக்கிய விஷயம் இந்த மருந்து சாப்பிடும்போது அம்மாவுடன் கட்டாயம் ஒருவர் உடன் இருக்க வேண்டும். இந்த நோய் இந்த மருந்துக்கு எதிரா செயல்படும். அதுவும் இந்த மருந்து சாப்பிடும் நோயாளிக்கு குறிப்பா தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கும் கவனம்….” அவர் சொல்லுவதை ஆறுமுகம் மனதில் ஏற்றிக்கொண்டே வந்தான்.

“நான் சொல்றதை மட்டும் நீ செய்துட்டா உங்க அம்மாவை விட்டு இந்த நோயை விரட்டிபுடுவேன். செய்விய்யா தம்பி”

“செய்யுறேன் சாமி…. நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்”.

மூன்று மண்டலத்துக்குள்ள நான் சொல்ற பறவையை நீ உயிரோடு பிடித்து வந்து தரணும். அது பேரு ‘நீலநிற ஆக்காட்டி’. ஒரு பேப்பர்ல குறிச்சுக்க. அதனைக் கொண்டு வந்தா அதன் குருதியை எடுத்து புடம்போட்டு பெரிய மருந்து செய்யணும். நீலநிற ஆக்காட்டி கடலோர கழிமுகத்துவாரத்துல வாழ்ற ஜீவன். சைவ பட்சி. பழங்கள் தான் தின்னும். சிவபறவை. அவ்வளவு சீக்கிரம் எவர் கண்ணிலும் படாது. வேட்டையின் சூது கற்றது. சிவராத்திரி அன்று ஒத்தை கால்ல நின்னு கயிலாயம் நோக்கி தவம் புரியும். அதனைப் பிடித்து இடது காலினை அறுத்து கொஞ்சம் குருதியை எடுத்துகிட்டு உயிரோடு விட்றணும்.

அது போயி சிவன் கோயில் முன்னே தவம் செய்து, யாருக்கு குருதி கொடுத்துச்சோ அவுங்களுக்காக தவம் இருக்கும்.  இப்ப அந்த இனம் அழிஞ்சுட்டதா சொல்றங்க. அதை தேடிக் கண்டுப்பிடிக்கிறது  உன்  சமார்த்தியம். நீ அதை கண்டுபிடிச்சு கொண்டாந்திய்ன்னா உங்க அம்மாவை நான் பிழைக்க வெச்சுடுவேன் ஆமா.. புரியுதா..? நான் சொல்றதை நீ நல்லா புரிஞ்சுக்க அது சிவபறவை அது அவ்வளவு சீக்கிரமா உன் கையில சிக்காது. உங்க அம்மா உயிர் அந்த பறவையிடம் தான் இருக்கு.”

அவரை மிரட்சியுடன் பார்த்தான் ஆறுமுகம்.

அவர் தொடர்ந்தார். “புரியுதா… வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதிகள் தான் அதிகமாக அது வலசைப்போடும் என்று எங்க ‘குரு’சாமி சொல்வாங்க. இதைப் பத்தி குருவிக்காரங்க கிட்ட கேளு அவுங்க சொல்வாங்க. முடிந்தால் பிடித்தும் கொடுப்பாங்க. அதுக்கு முன்னாடி வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யஸ்வரர் கோவிலுக்கு போய் நெய்தீபம் ஏற்று. நான் சொல்றது உனக்கு விளங்குதா? இன்னும் சுருக்கமாக சொல்லணும் அப்படின்னா உங்க அம்மா உயிர் உன் கையில் தான் இருக்கு. புரியுதா… நீலநிற ஆக்காட்டி… சரி கருத்தா கிளம்பு” என்று சொல்லிவிட்டு காத்திருக்கும் நோயாளிகளைப் பார்க்க சென்றார். ஆறுமுகம் கொடுத்த பணத்தை வேண்டாம் என மறுத்து விட்டார்.

காரில் வரும்போது சாமி என்ன சொன்னார் என்று அப்பா குடைந்து கொண்டே வந்தார். அவர் சொல்லியதை அவரிடம் கூறியபோது கேட்டவர் வியப்பாக இவனைப் பார்த்தார். அவர் கண்களில் நம்பிக்கை துளிர் விட்டிருந்தது.  வீடு வந்து சேர்ந்த போது ஒரு பகலும் இரவும் முடிந்து இரண்டாவது நாள் தொடங்கி கதிரவன் துயில் களைந்திருந்தான்.

மாமாவும் அக்காவும் குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்திருந்தனர். நீண்ட நாட்களாக அம்மாவைக் காணாத செவலைப்பசு பெரும் குரலில் அம்மாவின் வருகையை ஆமோதித்தது. தெருவில் இருந்தவர்கள் நலம் விசாரிக்கக் கூடிவிட்டார்கள்.  அக்கா அம்மாவைப் பார்த்து கண்ணீர் விட்டபடியிருந்தாள். சாமியார் சொன்ன விஷயங்களை சொன்னபோது கதறிய அக்கா இரண்டு ஐந்நூறு ரூபாய் கட்டுகளை மாமாவுக்கு தெரியும்படி கொடுத்தார்.

“தம்பி எப்புடியாச்சும் அந்த பறவையை பிடிச்சுகிட்டு வந்திடுடா” என்று சொல்லி அம்மாவின் உயர்ந்த பண்புகளை எடுத்துச் சொல்லி தெருக்கார பெண்களையும் தன்னுடன்  அழும்படி செய்தாள்… “டேய் பணம் பத்தாட்டி கவல படாதே… நாங்க இருக்கோம்.” என்றாள். அப்போது மாமா அக்காவிடம் ஏதோ சொல்ல முயன்றார்.

2

அப்பாவின் பங்காளி உறவு வகையில் உறவினர் கணேசன் அளித்த தகவல் அடிப்படையில் தான் தேவர்கண்டநல்லூர் பூக்காரன் மூர்த்தி வீட்டுக்கு ஆறுமுகம் வர நேர்ந்தது. எந்த அடிப்படையில் இந்த ஊருக்கு வந்தான் என்பதற்கு பின்னால் பூக்கோள ரீதியாக மட்டுமல்ல அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அடிப்படையிலும் சில தொடர்புகள் இருக்கத்தான் செய்தன. அப்பா திருமணத்துக்கு முன்பு இங்கு தங்கி வருவாய்துறையில் சிலகாலம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் என்றும் அப்போது பூக்காரன் மூர்த்தியின் அம்மா பாரிஜாதம் தான் அப்பாவுக்கு மூன்று வேளை உணவு சமைத்துக் கொடுத்து பார்த்துக் கொண்டாராம்.

மூர்த்தியின் அப்பா எந்த வகையில் உறவு என்று கேட்டால் சற்று தலைசுற்றும் அளவுக்கு தூரத்து தூரத்து சொந்தம் என்று கணேசன் சொன்னார். அதனால் மேலும் விளக்கம் பெற ஆறுமுகம் விரும்பவில்லை. மேற்கொண்டு இது குறித்து எதுவும் விசாரிக்காமல் நீலநிற ஆக்காட்டியைப் பிடிக்கக் கிளம்பியிருந்தான்.

அந்த சனிக்கிழமையின் அந்திப்பொழுதில் ஆறுமுகம் வந்திறங்கியபோது தேவர்கண்டநல்லூரில் அந்தி வெயில் மிதமாக காய்ந்து கொண்டிருந்தது. வைகாசி மாதம் என்பதால் காற்று மென்மையாக வீசியது. விசாரித்துக் கொண்டு மஞ்சுளா பூக்கடைக்கு வந்து சேர்ந்தபோது அழுக்கு கைலியும், முண்டா பனியனும் அணிந்திருந்த ஒருவன் வதங்கிய மலர்களுக்கு தண்ணீர் தெளித்து உயிர்ப்பை மீட்டெடுத்துக் கொண்டிருந்தான். அவனிடம் வந்து “அண்ணே மூர்த்தி அண்ணன் பூக்கடை தானே” என்றான்.

”என்ன வேணும்”

“அப்ப இவரு தான் மூர்த்தி” என்று சுதாரித்துக் கொண்ட ஆறுமுகம்.

“அண்ணே, கீழையூரில் இருந்து வர்றேன். கணேசன் மாமா அனுப்பி வெச்சாங்க. தாசில்தார் சிவபுண்ணியத்தின் மகன்” என்றான்.

“ஒ… அப்புடிய்யா… தம்பி நல்லாருக்கிய்யா.. பத்து வயசுல உன்னை பார்த்தது. அப்பா, அம்மா, அக்கா, மாமா எப்படி இருக்காங்க.” என்று படபடவென கேட்டுக்கொண்டே… ‘உட்கார்’ என சொல்லி மர நாற்காலியை எடுத்துப் போட்டான்.

அமர்ந்து தான் வந்த விஷயத்தையும் அம்மா நிலையும் மிக நிதானமாக விவரித்தான் ஆறுமுகம். மூர்த்தி பதட்டத்துடன் கேட்டான்.

“சரிப்பா சொல்லு… நான் என்ன செய்யணும்”.

“நான் இங்கு தங்கிதான் அந்த பறவையை தேடணும். அதற்கு நீங்க உதவணும். நான் தங்கிக்கொள்ள ஒரு அறை வேணும். இந்த பக்கத்து வேட்டைக்கார ஆட்களை நீங்க எனக்கு அறிமுகப்படுத்தி விடணும்”

’சரிப்பா…’ என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு, போனை எடுத்து யாரையோ அழைத்தான். பத்து நிமிடத்துக்குள், இருபது வயது இருக்கலாம் ஒரு வாலிபன் வந்து நின்றான். அவனிடம் மூர்த்தி “நேசமணி கடையை பார்த்துக்க தம்பியை கூட்டிட்டு பெயிட்டு ஒரு வேலையிருக்கு முடிச்சிட்டு வர்றேன்” சொல்லியபடி மூர்த்தி நடந்தான். அவனைப் பின்பற்றி ஆறுமுகம் நடந்தான்.

கடைவீதியின் முக்கில்  நிறுத்தியிருந்த ஆட்டோவை அழைத்து இருவரும் ஏறி அமர்ந்தார்கள். ஆட்டோக்காரனைப் பார்த்து “விளமல் முத்துமாரி லாட்ஜ்க்கு போ…” என்றான் மூர்த்தி. ‘தம்பி… உனக்கு எதுவேண்னாலும் கூச்சபடமா என்கிட்ட கேளு… சரிய்யா…” என்று ஆறுமுகத்தைப் பார்த்து சொல்லிவிட்டு பெருமிதம் பொங்க ஒரு பார்வைப் பார்த்தான். வெள்ளையும்.. கறுப்புமாக இருந்த தனது தாடியை தடவிக் கொண்டான். சில மீட்டர் தூரம் கடந்த நிலையில், ஆட்டோக்காரனைப் பார்த்து… தம்பி கடைக்கு விடு வண்டியை…” என்றான் அதட்டலுடன்.

ஆறுமுகம் நடப்பவற்றை மிக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான். வண்டி டாஸ்மார்க் கடையில் நின்றது. “தம்பி…கொஞ்சம் இரு.. ஒரு கட்டிங் போட்டாத்தான்… மூளை வேலை செய்யும்” என்று இறங்கினான். அவனிடம் 500 ரூபாயை எடுத்து நீட்டினான் ஆறுமுகம். ‘வேண்டாம்பா’… என்கிட்டே இருக்கு என்று ஒரே ஓட்டமாக ஒடி கடைக்குள் புகுந்தான். சில நிமிடங்களில் திரும்பி வந்தான். முத்துமாரி லாட்ஜ் வாசலில் ஆட்டோ நின்றது. அறை எண் 13க்கு அன்வான்ஸ் கொடுத்துவிட்டு, கிளம்பும்போது, ‘முடிந்தால் இரவு கடையை கட்டிவிட்டு வருகிறேன். இல்லையென்றால் காலையில் கடைக்கு வந்துவிடு” என்று சொல்லிவிட்டு வந்த ஆட்டோவில் மூர்த்தி கிளம்பினான்.

ஆறுமுகம் அறையில் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொண்டு விட்டு குளித்தான். அப்போது அவனையறியமால் ’நீலநிற ஆக்காட்டி’ என்று சொல்லிக்கொண்டான். அப்போது அந்தப் பறவை குறித்து விநோதமான உணர்வுகள் அவனை உற்சாகம் கொள்ளச் செய்தன. சில நிமிடங்களில்  நோய் முற்றிய அம்மாவின்  துயர்மிக்க முகம் வந்து போனது. அறையை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினான். பொழுது ஏறிவிட்டது. நல்ல இருள். வானில் கருமேகங்கள் கூடியிருந்தன. செல்போனை ஆன் செய்து அக்காவிடம் பேசலாம் என்று நினைத்தான். பிறகு இரவு பேசலாம் என தனக்குத்தானே மறுப்பு சொல்லிக் கொண்டான்.

விளமல் மிகச்சிறிய ஊர் என்றே தோன்றியது. ஆனால் கடைத்தெருக்கள் அதிகம். குடியிருப்புகளும் வளர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது. வடக்கும் தெற்குமாக கடைகள் இருந்தன. வளரும் ஊருக்கு உரிய அத்தனை அம்சங்களும் காணப்பட்டன.

கடைத்தெருவில் எதிரே நடந்து வந்த இரண்டு பேரிடம்… கடை எங்குள்ளது என்று விசாரித்தான் கிழக்குப் பக்கம் சுட்டிக் காட்டினார்கள். நடந்தான். பெரிய திடலில் பரந்து விரிந்த நிலையில் அமைத்திருந்தார்கள். திருவிழா கூட்டம் போல் ஆட்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தார்கள். மேஜையில் அமர்ந்து தனக்கு பிரியமான ரம்மை ஆர்டர் செய்தான். எதிர் இருக்கையில் 56 வயது மதிக்கத்தக்க ஒருவர் மிதமான போதையில் யாரிடமோ போனில் கொஞ்சிக் கொண்டிருந்தார். அவர் பார்வை அடிக்கடி இவனை நோக்கி வந்தது.

அவரிடம் பேசுவதற்கான சொற்களை எப்படி தொடங்குவது என தெரியாமல் குழப்பமாக அவரைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். சர்வீஸ் செய்பவர் “சயிடிஸ் என்ன சார் வேணும்” என்றார்.

’என்ன இருக்கு…’

”காடை, மடையான் இருக்கு சார்…”

“மடையான் இருக்கா… அது ஒரு பிளேட்டு சொல்லுப்பா…”

எதிரேயிருந்தவர் இவனைப் பார்த்து, சிறிய புன்முறுவல் பூத்தார்.

மடையான் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனால் சாப்பிட்டதில்லை. ஊரில் இருக்கும்போது மாதம் ஒருமுறை தான் அசைவம் இருக்கும். அம்மாவைப் போல் அப்பாவும் சைவப்பிரியர். ஆனால் அக்கா ஒருவேளை கவுச்சி இல்லையென்றாலும் முகம் சுழிப்பாள். சிலநேரங்களில் அவளுக்காவே தனிச்சமையல் நடக்கும். குறைந்த பட்சமாக ஒரு கருவாடாவது சுட்டு வைக்க வேண்டும். ஆறுமுகம் சென்னையில் தங்கிப் படித்தபோது ஆஸ்டல் சாப்பாடு. அதிலேயே பெரும் நாட்கள் ஓடிவிட்டன.

அப்பாவுக்கு மீன் உணவில் விருப்பம் அதிகம். அதுவும்  விரால்மீன் என்றால் விலையே கேட்க மாட்டார். நாட்டுக்கோழியைத் தவிர வேறு பறவைகளை வீட்டில் சமைத்தது கிடையாது. இவன் படிப்பு முடிந்து  சென்னையிலேயே ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் அமர்ந்து கொண்டான். அங்கு ஏற்பட்ட ஒரு காதல் தோல்விக்கு பிறகு திருமணம் குறித்த எண்ணமின்றி இருக்கிறான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அக்கா மடையான் கறி கேட்டபோது, பட்சிகளைக் கொல்வது பாவம் என்றாள் அம்மா. அதற்கு அக்கா, “கொன்னா பாவம் தின்னா போச்சு” என்றாள். அது ஏனோ இப்போது ஆறுமுகம் நினைவுக்கு வந்தது.

இரண்டு கிளாஸ் குடிக்கும் வரை மடையான் கறி வரவில்லை. வறுகடலையை கொறித்தான்.  ஆவிப்பறக்க வந்து மேஜையில் அமர்ந்தது நேற்று வரை வான்வெளியில் மிதந்த மடையான். எதிரே குடித்தவர் இவனைப் பார்த்து, தம்பி என்ன ஊரு என்றார். தேவர்கண்டநல்லூர் என்றான். இதனைக் கேட்டதும் “மழ வர்ற மாதிரியிருக்கு நான் கிளம்புறேன்” என அவர் கிளம்பினார். வெங்காயமும் மிளகும் அதிகம் தூவப்பட்ட மடையான் தனது முன்பாக இருப்பதை வியப்புடன் பார்த்தான்.

சடசடவென ஏறும் தன்மை கொண்டது ரம். அது தனது பணியை செவ்வானே செய்யத்தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. அதன் சுழலலில் ஒரு துண்டை எடுத்து சுவைத்துப் பார்த்தான். இறைச்சியின் மணம் தொண்டைக்குள் ஏதோ செய்தன. கறியை வெளியே தூப்பினான். அப்போது அவன் முன்னாள் காதலி கயல்விழியுடன் ஒருநாள் ‘காஃபி டே’ வில் மோசமான காஃபியை இவன் குடித்துவிட்டு வாந்தியெடுத்தது நினைவுக்கு வந்தது. அப்போது கயல்விழி ஆத்திரம் பொங்க இவனை திட்டித்தீர்த்தாள். அது ஒரு மோசமான நாள்.

மூன்றாவது கிளாசை குடிக்கத் தொடங்கினான். மடையான் கூட்டம் கூட்டமாக அக்டோபர், நவம்பர் மாதங்களின் மழைக்காலப் பொழுதுகளில் அணிவகுத்து பறந்து வருவதும், அதே போன்று கொக்குகள், நாரைகள் அணி அணியாக வந்து சம்பா வயல்களில் நத்தைகள் பிடித்துத் தின்னும் காட்சிகளும் மாறிமாறி வந்து போயின. ஒரு பாட்டிலை முடித்து விட்டு இன்னொரு பாட்டிலை வாங்கி இடுப்பில் சொருகினான். வறுத்த முந்திரி பருப்பை சாப்பிட்டுக்கொண்டே பாரிலிருந்து வெளியே வந்தான்.

முன்பை விடவும் வானம் கருங்மேகங்கள் சூழ்ந்து பெரும் மழைக்கான அறிகுறிகளுடன் துலங்கின.  கயல்விழியின் நினைவுகள் ஆக்கிரமிக்கும் நேரங்களில் கட்டாயமாகக் குடிக்கும் மனநிலைக்கு சமீப காலங்களில்  வந்திருந்தான். ஆனால் இன்று அப்படியில்லை. புதிய இடமும், சூழலும், அம்மா குறித்த கவலைகளும் இன்று அதிகம் குடிக்கும்படி செய்து விட்டிருந்தன.

கயல்விழி உடன் உறவை முறித்துக் கொண்ட இரண்டு வருட காலங்களில் தான் ‘பீயர்’ குடிப்பதை நிறுத்திவிட்டு ’ரம்’ குடிக்கத் தொடங்கியிருந்தான். அவள் இவனது தோழியாக வரும்வரை நல்லபிள்ளை தான். அவளின் நம்பரை எடுத்துப் பார்த்தான். டயல் செய்யலாம் என்று தோன்றிய கணத்தில் வானில் இருந்து துளிகள் விழத்தொடங்கின. காற்று பலமாக அடித்தது. புழுதி கடைவீதியெங்கும் பறந்தன. சிறு தள்ளாட்டத்துடன் நடந்தான்.

 3  

செல்போன் நாலைந்து முறை குரல் கொடுத்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சட்டென்று எழுந்து கதவைத் திறந்தான். அறை வாசலில் மூர்த்தி நெற்றியெங்கும் திருநீறு மணக்க சிரித்த முகத்துடன் நின்றான். ஆறுமுகம் பதட்டமாக குளியலறையில் புகுந்தான். தலை இடது பக்கமாய் வலித்தது. கிளம்பி அறக்க பறக்க மூர்த்தியுடன் நடக்கத் தொடங்கினான். வாசலில் ஆட்டோ நின்றது. இருவரும் ஏறினார்கள்.

தேவர்கண்டநல்லூர் பூக்காரத் தெருவுக்கு கால் மணிநேரத்துக்குள் ஆட்டோ வந்து நின்றது. தெருவே பலவகை பூக்களின் மணத்தால் நிரம்பி வழிந்தது. மூர்த்தி ஆட்டோவில் இருந்து இறங்கினான்.

“இறங்கு தம்பி இதுதான் நம்ம வீடு” தலைவலி சற்று கட்டுக்குள் வந்தது போலிருந்தது.  விதவிதமான மலர்களின் வாசனை. எந்த பூவுக்கு என்ன வாசம் என நுட்பமாக உணர முடியவில்லை. இருவரும் மாடி வீட்டின் முகப்பில் நின்றார்கள். “தம்பி உங்க அப்பா இங்க வேலை பாக்கும்போது எனக்கு வயசு ஐஞ்சு இருக்கும். அப்போ இது பெரிய ஒட்டு வீடு. உள்முற்றம் வேறு. பதினைஞ்சு ரூம்க. இப்ப மாதிரியில்ல. நாலைந்து குடும்பம் வாடகை இருந்தாங்க. அப்படி வந்தவங்க உங்க அப்பா. மூனா வருஷம் தான் அதனை இடிச்சுப்புட்டு இந்த வீட்டைக் கட்டினோம்.

எங்க அப்பாவும், அம்மாவும் இறந்தப்போ கூட உங்க  அட்ரஸ் தெரியாம செய்தி சொல்ல முடியல்ல… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள் மஞ்சுளா. அவளைப் பார்த்த அந்த கணம் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.  உலராத கூந்தலுடன்… பச்சைநிறப் புடவையை அணிந்திருந்தாள்.

“மஞ்சு… தம்பி பறவை தேடி வந்திருக்கப்புள்ள… பெரிய படிப்பு படிச்சுட்டு மெட்ராஸ்ல வேலைப் பார்த்த புள்ள. அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு இப்படி வந்திருக்கு. எப்ப வந்தாலும் சோறு தண்ணி போடுறது உன் பொறுப்பு..”

மூர்த்தி சொல்லியது இவனுக்கு சங்கடமாய் இருந்தது. இங்கேயிருந்து கிளம்ப வேண்டும் போல் ஒரு அவஸ்தை. அவளுடன் இயல்பாக முகம் கொடுக்கவில்லை. ஒருவகை நடுக்கம். உடனே கிளம்ப வேண்டும் போல் ஒரு உந்துதல்… அவள் பார்வை உள்ளுக்குள் ஏதோ செய்தன. நாற்காலியில் உட்கார முடியவில்லை. சில நிமிடங்களில் சூடான காஃபியுடன் வந்து நின்றாள். குழந்தைகள் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார்கள் நாளை வந்து விடுவார்கள் என்றாள். அவள் நீட்டும்போது அவள் விரல்கள் பட்டுவிடுமோ என்று பயந்தான். மூர்த்தி பக்கத்து அறையில் கொட்டிக் கிடக்கும் மலர்களை அள்ளி ஈர சாக்கில் திணித்துக் கொண்டிருந்தான்.

“காஃபி எப்பிடியிருக்கு”

“நல்லா இருக்குங்க..” வார்த்தைகள் உடைந்தன.

“வாங்க.. போங்க… வேண்டாம்… மஞ்சுன்னே கூப்பிடுங்க”

4

ஆறுமுகத்திடம், கடைவீதியில் வைத்து மூன்று வேட்டைக்காரர்களை அறிமுகம் செய்து வைத்தான் மூர்த்தி. அவர்கள் இன்று உடனே போனால் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுதுறையில் அந்தப் பறவையை பார்க்கலாம் என்றார்கள். இந்த பருவநிலையில் அது அந்தப் பகுதியில் நிறைய காணப்படும் என்றார்கள். உடனே ஒரு வாடகைக்கு கார் பிடிக்கப்பட்டது. மூர்த்தி காரின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான்.  பின்னிருக்கையில் நான்கு பேரும் அமர்ந்து கொண்டனர்.

நாகை சாலையில் இருந்து கார் வேதாரண்யம் சாலையில் செல்லத் தொடங்கியபோது பகல் பணிரெண்டு. வேட்டைக்காரர்கள் தங்கள் வேட்டையின் சாகசங்களைச் சொல்லி பெருமையடித்துக் கொண்டே வந்தார்கள். கார் மிதமான வேகத்தில் ஒடிக்கொண்டிருந்தது.  சாலையின் இடதுபுறத்தில் இருந்த மதுக்கடையை பார்த்தவுடன் மூர்த்தி, “வண்டியை நிறுத்துப்பா…. ஒரு கட்டிங் சரக்கு போட்டாத்தான்.. நமக்கு மூளையே வேலை செய்யும்”… என்றான். வண்டியை நிறுத்தியதும் வேட்டைக்காரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். “தம்பி கவலைபடாதீங்க… நாளைக்குள்ள ஆக்காட்டியை எப்படியும் பிடிச்சுட்டுத்தான் திரும்ப்போறம்” ரூ 500 எடுத்து மூர்த்தியிடம் நீட்டினான். “தம்பி உனக்கு…” வேண்டாம் என மறுத்தான்.

செல்போனை எடுத்து அக்காவிடம் பேசி தனது முயற்சிகளை தெரிவித்தான் ஆறுமுகம். அக்காவின் அருகில் இருந்த அப்பாவிடம் பேசி ஆறுதல் கூறினான். அப்போது புதிய எண் ஒன்று உள் நுழைந்தது. “நான் மஞ்சுளா பேசுறேன்… அவரு உங்களோட இருக்காரா. அவரு போனையும் இங்க வெச்சுட்டு போய்ட்டார். அழைப்பு மேல அழைப்பு வருது. ஏதோ கோயில் விசேஷத்துக்கு மாலைக்கு ஆர்டர் வாங்கிட்டாராம். மாலை இன்னும் வந்து சேரலன்னு சத்தம் போடுறாங்க. அவர்கிட்ட கொஞ்சம் கொடுங்க.” இடைவிடாமல் பேசிக்கொண்டே போனாள். அவள் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

“ஒரு நிமிஷத்துல கூப்பிடுறேன்… வெயிட் பண்ணுங்க”

சில நிமிடங்களில் குடித்து விட்டு வெளியே வந்தார்கள். விஷயத்தைச் சொல்லி மூர்த்தியிடம் போனை கொடுத்தான். “எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்..நீ.. போனை வை”….என்று மூர்த்தி போனை கட் செய்தான். கார் கிளம்பியது ஆறுகாட்டுத்துறையில் போய் இறங்கியபோது… நல்ல வெண்மையும்… நீலமும் கலந்த வண்ணத்தில் ஆகாயம் காட்சியளித்தது.

மூன்றாம் துண்டில் முள் வளைவில், விரிந்து பரந்து கிடக்கும் வங்களாவிரிகுடா கடலில் மிக குறைவான அலைகள் கரைக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்தன. கடற்காகங்கள் முற்பகல் பொழுதில் துள்ளி வரும் அலையில் குளிப்பதும் பறப்பதுமாக இருந்தன. வேட்டைக்காரர்கள் கடற்கரையில் இருந்து பிரியும் மருதராஜன் ஆற்றின் கரையில் நடக்கத் தொடங்கினார்கள். மிதமான போதையோடு அவர்கள் இருந்தார்கள். மூர்த்தி அவர்கள் பின்னால் நடந்து கொண்டிருந்தான்.

கடைசியாக ஆறுமுகம் நடந்தான். அலையாத்தி மரங்கள் ஆற்றின் கரைகளில் அடத்தியாக வளர்ந்திருந்தன. ஒற்றையடிப் பாதையாக அவை நீண்டன. வேட்டைக்காரர்களில் விஷயம் தெரிந்தவர் போலிருந்த ராமசாமி சொன்னார். “தம்பி இது பாரஸ்ட் ஏரியா, அவுங்க யாராச்சும் வந்து  கேட்டா. ஆவரம்பூ பறிக்க வந்தோம்முன்னு சொல்லுங்க. ஏன்னா அது காமாலையை போக்குற பூ. இங்கு அது ஜாஸ்தி.   “சரி”யென்று தலையாட்டினான்.

அவர்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். கொஞ்ச தூரத்தில் கிழக்கிலிருந்து மேற்காக நடந்தார்கள். அடர்ந்த வனத்துக்குள் நடப்பது போல் இருந்தது.  ஆற்றின் படுகையில் ஆறுமுகம் புதிய புதிய தாவரங்களைப் பார்த்தான்.  வேட்டைக்காரர்கள் அதன் இலைகளைப் பறித்து முகர்ந்து அதன் மருத்துவ குணங்களை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆறுமுகம் “ஒரு பறவைங்கயும் காணல” என்றான்.

“தம்பி இது உச்சிக்கு பிறகான நேரம். அசமடங்கியிருக்கும்…. இன்னும் ஒரு நாழிகைக்கு பிறகு பாருங்க…” மூர்த்தி, அந்த சாமி பறவை எப்படிங்க இருக்கும் என்றான். அதற்கு, ராமசாமி, நீலநிற ஆக்காட்டின்னு சொல்றது விநோதமான பறவைங்க. அது குரல் எடுத்து கூவியதுன்னு வையுங்க. மிருகங்களே வாலைச் சுருட்டிக்கிட்டு படுத்துடும்.  அவ்வளவு வன்மை மிக்கதுங்க. ஆனா கண்கள் சிவப்பு நிறத்துல இருக்கும். காட்டுலோயோ மேட்டுலோயோ ஆட்களை பார்த்துட்டா… மிக கடுமையா குரலிட்டு ஆர்பாட்டம் பண்ணும்.” என்றார்.

ராமசாமியைப் பார்த்து ஆறுமுகம் கேட்டான்…அது நீலநிறத்திலயா இருக்கும்.

“இல்ல தம்பி.. அது கலர் வந்து… அத்திப்பழம் நிறத்துல இருக்கும், அதன் குரல் நாலு பேடைக்குயிலுங்க ஒரே நேரத்துல ஒரே மாதிரி கூவுன்னா எப்படியிருக்குமோ அப்படியிருக்கும்”.

ஒரு கணத்தில் ஆறுமுகம் குழம்பி போனான்.” நீலநிற ஆக்காட்டின்னு தானே சாமி  சொன்னனார். பிறகெப்படி அது அத்திப்பழம் நிறம்முன்னு சொல்றாங்க. அத்திபழம் நிறம் எப்படியிருக்கும்…” என்றான் குழப்பத்துடன்.

சூரியன் மெல்ல சுருங்கத் தொடங்கியது.

கொஞ்ச தூரம் நடந்த பிறகு பெரும் வனப்பரப்பு முடிவுக்கு வந்தது. அலைகள் மினுங்க இருந்த பெரிய ஏரியில் மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. அதனை ‘கலங்கல் ஏரி’ என்றார்கள். நான்கு புறமும் அலையாத்தி மரங்களும் கருவேல மரங்களும் கொன்னை, கொன்றை மரங்களும் நின்றன. அதில் ஒரிரு கொக்குகள் அமர்ந்து ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தன. மூர்த்தி கடுப்பானான் “ஏன்ய்யா.. ராமசாமி, கொக்க காட்டுறத்துக்கா இம்புட்டு தூரம் அழைச்சிட்டு வந்தே…”

”இல்லிங்க… பொழுது மசமசன்னு ஏறும்போது வரும் பாருங்க… கொஞ்சம்… காத்திருக்கலாங்க….” – வேட்டைக்காரர்களின் இரண்டு கைகளிலும் எம்ஜிஆரை பச்சைக் குத்தியிருந்தவன். ஏரியின் கரையோரத்தில் வளர்ந்து நின்ற பெரிய நாலைந்து சேமை இலைகளைக் கொய்து வந்து “இதப் போட்டு உட்காருங்க சார்” என்று ஆறுமுகத்திடம் கொடுத்தான். ஏரி கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிந்தது.

“சார் அதோ தெரியுது பார்ங்க தெற்கு பக்கம் அங்கே இந்த ஏரி தண்ணியின் கசிவுல இருந்து உப்பு வயலுங்க ஆரம்பிக்கிது” என்றார் ராமசாமி.

பரந்த நீர்ப்பரப்பில் சில பறவைகள் நீந்துவதும் பறப்பதுமாக இருந்தது. அதனைப் பார்த்த வேட்டைக்காரர்களில் மூன்றாவதாக இருந்த சேகர்  “அருமையான நீர்கோழி மாமா… குச்சிவிட்டுமா” என்றான். அது சரிடா கூர்கத்தியும்… நரம்பும் எங்கடா…” பத்தரமா இந்த இடுப்புல வெச்சிருக்கேன்.

“சரிடா கொஞ்சம் போய் ஆவரம்பூ பறிச்சுக்கிட்டு சீக்கிரம் வா. ஆக்காட்டி இன்னிக்கி இந்த பகுதியில சுத்துறதை பார்த்தா.. நாளை காலையில… ‘தட்டு’ போட்டுவோம், அப்புறம். ‘விரி’ கட்டிடுவோம். அதிலேயும் சிக்காட்டி… பாரஸ்ட் ஆளுங்களுக்கு காசு கொடுத்துட்டு “குதிரை வல” போட்டுக்கலாம்” என்றார்.

காத்திருக்கத் தொடங்கினார்கள். மரங்களை உற்றுக் கவனித்தபடி இருந்த ராமசாமி, “பேசினால் பறவைகள் நம் பார்வைக்கு படாது மறைந்து விடும். மவுனமாக இருங்கள்’ என்றார். மரங்களைப் பார்த்தபடி காத்திருக்கத் தொடங்கினார்கள். பொழுது மெல்ல இருள் கொள்ளத் துவங்கியது.  பருந்துகள்… கழுகுகள்.. காகங்கள்… மரங்களில் அடங்கின. ஆவரம்பூ பறித்து வந்தவன் இதுவரை தான் காணாத பறவையொன்றைப் பார்த்தாகவும் அது ஒருவேளை நீலநிற ஆக்காட்டியாக இருக்கலாம் என்றும் ராமசாமியிடம் கூறினான், பருந்துகளைத் தாண்டி புதிய பறவை எதுவும் வரவில்லை என்றதும் கடுப்பான மூர்த்தி “கிளம்பலாம்.. ராமசாமி” என்றான்.

இருள் சூழ்ந்த வனத்தில் அடிக்கடி மூர்த்தி செல்போனிலிருந்து வரும் மிஸ்டு கால்களைப் பார்த்தவாறு நடந்தான் ஆறுமுகம். இரவுப்பூச்சிகள் முணுமுணுக்கத் தொடங்கின. ஆற்றிலிருந்து வரும் விநோத மணம். கடலின் இரைச்சல். வானில் சுடர்விடும் நிலா… பரவலாக சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்கள்.. காட்டு மலர்களின் ஏகாந்த வாசனை… தாவரத் தழைகளின்… மினுமினுப்பு…. இவற்றின் ஊடே ராமசாமி முன்னே நடக்க பேச வார்த்தைகள் இல்லாதவன் போல் நடந்து கொண்டிருந்தான் மூர்த்தி.

காரில் ஏறும்போது மணி ஏழே முக்கால் ஆகியிருந்தது. ஆறுமுகம் “அண்ணி மிஸ்டு கால் கொடுக்குறாங்க” என்று மூர்த்தியிடம் போனைக் கொடுத்தான். இப்போது மூர்த்தி போனை வாங்கி “சொல்லு மஞ்சு இன்னும் ஓரு மணிநேரத்துல வீட்டுல இருப்போம். எனக்கும் தம்பிக்கும் சாப்பாடு ரெடி பண்ணு” என்றான். ‘…ம்’ என்று ஒரே பதிலுடன் தொடர்பு கட்டாகியது.

மூர்த்தி “டிரைவரே… வேகமாக வண்டிய எடுப்பா, கடையை வேற விட்டுட்டு வந்துட்டேன். என்னாச்சோ தெரியல. பரவாயில்ல அதை பாத்துக்கலாம். தலைய வலிக்குது மொதல்ல நல்ல கடையைப் பார்த்து விடு,”  “கடைன்னா எந்த கடைண்ணே’ என்றான் டிரைவர். அட ஒன்னும் தெரியாத மாதிரிதாண்டா பேசுவீங்க.. சாராயக்கடைக்கு தான்டா” மூர்த்தியின் குரல் தடித்தது. டிரைவர் தனது கோபத்தை காரில் காட்டினான். மூர்த்தி சொன்ன இடத்தில் கார் நின்றது.

தள்ளாடும் அளவுக்கு குடித்திருந்தான் ஆறுமுகம். செல்போனை எடுத்து தன்னுடன் பணியாற்றும் நவீனிடம் பேசினான்… ஆக்காட்டிப் பற்றி விவரித்தான். இருவரும் மச்சான், மாமா என்று பேசிக்கொண்டதை வேட்டைக்காரர்கள் போதையிலும் நிதானம் காட்டி ரசித்தார்கள். அதிக போதையில் மூர்த்தியின் தலை துவண்டது. அவ்வப்போது கடையில் வேலை பார்க்கும் பையனை திட்டினான். எதற்கு இப்படி திட்டித் தீர்க்கிறான் என்று தெரியாமல் பார்த்தார்கள்.

விளமல் வந்து காரை நிறுத்தினான் டிரைவர். போதையிலும் மூர்த்தி எழுந்து, ஆறுமுகத்திடமிருந்து வேட்டைக்காரர்களுக்கு சம்பளத்தைக் கொடுத்து விட்டு அவர்களைப் பார்த்து, “பறவையை மட்டும் பிடிக்காதீங்க. காசு மசுரு மட்டும் கூசாம வாங்குங்க”.   கெட்ட வார்த்தையில் திட்டினான். அவர்கள் பதிலேதும் சொல்லாமல் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு போனார்கள்.. தேவர்கண்டநல்லூருக்குள் கார் நுழைந்தபோது ஊரே அமைதியாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு இருவரும் தடுமாற்றத்துடன் நடந்து போனார்கள். அப்போது தெருநாய் ஒன்று இவர்களைப் பார்த்து குரைத்தது.

கதவைத் திறந்தாள் மஞ்சு. ஆறுமுகத்துக்கு குப்பென்று வியர்க்கத் தொடங்கியது. “மஞ்சு…என்ன செஞ்சு வெச்சிருக்க…”  தடுமாற்றத்தை குறைத்துக் கொண்டவனாக. “வவ்வால் மீன் குழம்பு, இட்லி வறுவலும் ரெடி” என்றாள் மஞ்சுளா. ஆறுமுகத்துக்கு இப்போது தான் ஒரு உண்மை விளங்கியது. அவள் முகத்தை உற்றுக் கவனித்தான். கிட்டதட்ட கயல்விழியின் முகத்தைப் போலவே தோன்றியது மஞ்சுவின் முகம். அதனால் தான் இத்தனை தடுமாற்றம். பாத்ரூம் சென்று செல்போனை ஆன் செய்து கேலரிக்குள் சென்று கயல்விழியின் பல்வேறு   நிழற்படங்களைப் பார்த்தான். மஞ்சுளாவின் முகத்தையும் பார்த்தான் ஒன்று போலவே இப்போது தோன்றியதும் மூர்த்தி இருந்த அறைக்குள் மவுனமாக நாற்காலியில் அமர்ந்தான்.  

வறுவலை கொண்டு வா… என்றான் மூர்த்தி. மஞ்சு முறைத்தாள். “சீக்கிரம் கொண்டு வா… தம்பி பாவம். காட்டிலேயும் மேட்டிலேயும் ஓரே அலைச்சல்… ஒரு தட்டு நிறைய வறுத்த துண்டங்களைக் கொண்டு வந்து வைத்தாள். மீனின் மேலிருந்த மசாலாவின் வாசனை தூக்கலாய் இருந்தது. சிறுவன் ஒளித்து வைத்திருந்த பந்தை எடுப்பதைப் போல இடுப்பிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து பெஞ்சில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்று, இரண்டு கண்ணாடித் தம்ளர்களை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தான் மூர்த்தி. ஆறுமுகத்துக்கு குடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

ஆனால் மூர்த்தியிடம் இதைச் சொன்னால் அதை ஏற்கும் நிலையில் அவன் இல்லையென்று தோன்றியது. லைட் வெளிச்சத்தில் தங்க நிறம் காட்டி மினுங்கியது திரவம்.  குடிக்கத் தொடங்கினார்கள். ஆறுமுகம் மறுத்தும் அவன் விடவில்லை. மூர்த்தியின் மீது கொண்ட எச்சரிக்கையுணர்வால் போதையிலும் கவனமாகப் பேசினான். மீன்களைத் தின்பதும் குடிப்பதுமாக இருந்தார்கள். ஆக்காட்டி குறித்தும் பேசினார்கள்… பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் பேச்சு ரஷ்யாவின் ஸ்டெப்பி புல்வெளியில் வலசைக்குப் போகும் பறவைகள் வரை நீண்டது. இருவரையும் மஞ்சு நாலைந்து முறை சாப்பிட அழைத்துப் பார்த்துவிட்டு, சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு உறங்கப்போய் விட்டாள்.

இருவரும் உச்சக்கட்ட போதையில் இரவை சலனப்படுதுதும் குறட்டைகளை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்தார்கள்….. அப்போது அவன் கனவில் கயல்விழியின் வியர்வை வாசம் அறையெங்கும் பரவியிருப்பதைப் போல பிரம்மை. சட்டென்று திடுக்கிட்டு எழுந்தவன் அறையில் பேன் வேகத்துடன் சுழன்று கொண்டிருந்ததை மிரட்சியுடன் பார்த்தான். ஒருசில நிமிடங்கள் யோசித்தவன், செல்போனை எடுத்து ஆன் செய்ய முயன்றான் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. தன்னுடன் படுத்திருந்த மூர்த்தியைக் காணவில்லை. எழுந்து போயிருந்தான். அடிவயிறு முட்டியது. எழுந்து கழிவறையை நோக்கி நடந்தான். அப்போது ஒரு விசித்திரமான குரல் கேட்டது. அது எங்கேயோ கேட்ட பறவையின் குரல். அது ஏற்றம் இறக்கமாக… மெலிந்தும் வளைந்தும், உயர்ந்தும் தாழ்ந்தும் வேடனின் வலையில் சிக்கிக்கொண்ட கருங்குயில் போல… மிக கவனமாக தன் புலன்களைக் கூர்மைப்படுத்தினான். அது பறவையின் குரல் தான். இங்கே எப்படி அறைக்குள்… கால்களை மிக கவனமாக வைத்தான். மஞ்சுளாவின் அறையில் இருந்து தான்… கதவோரமாக காதுகளை… வைத்தான்… சட்டென்று பொறி தட்டியது. அது மஞ்சுவின் குரல்.. வீட்டிலிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கினான்.

5

உழவர்கள் ஏர் கலப்பையை தோளில் சுமந்து கொண்டு அந்த அதிகாலைப் பொழுதில் வயலுக்குச் செல்கிறார்கள். எருமை மாட்டுத் தோலைத் உரித்து காயப்போட்டது போல் கருப்பும், லேசான வெள்ளையாக வானம் துலங்குகிறது. வாய்க்கால்களில் பெருக்கெடுக்கும் நீரில் கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. மெல்லிய குளிர் காற்றில் மரங்கள் அசைகின்றன. கரும்பு வயல்களில் இருந்து நரிகள் ஊளையிடுகின்றன. காவிரி ஆற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீர் பல பாசன ஆறுகளில் நுங்கும் நூரையுமாகப் பாய்கின்றன. சிறுவர்கள் தூண்டிலிட்டு மீன்கள் பிடிக்கின்றனர். நடவுப் பெண்களின் பாடல் வெளியெங்கும் மிதக்கின்றன. பாட்டிகள் பாட்டனுக்கு பிரியமான வயல் நண்டுகளைப் பிடித்து வருகின்றனர்.  

மேற்கே நீண்டு கிடக்கும்…சம்பா… குறுவை வயல்கள். வயலோரங்களில் வளர்ந்து நிற்கும் மரங்கள். காற்றும்… மழையுமாக… சாரலும்… ஈரமாக… கரிசிட்டான் ஏதோ பறவையை தூரத்தி செல்கின்றன. அது தனது இணையுடன் அப்படியும்.. இப்படியுமாக அலைகின்றன. காகங்கள் கரைகின்றன. தூரத்து ஆற்றோரங்களில் இருந்து யாரோ மணல் லாரிகளை வேக வேகமாகப் புழுதியடித்து ஓட்டிச் செல்கின்றனர். யார் வீட்டிலிருந்தோ பசு மாடுகள் அம்மா… என பெருங்குரலில் கூவி அழைக்கின்றன. அக்காவ்… அக்காவ்… ஆற்றில் போன தனது உறவைத் தேடி ஒற்றைக் குரலில் மன்றாடுகின்றன. ஒன்று தனது உறவை அழைத்துபனை மரங்களில் தொங்கும் கூடுகள் காற்றில் மிதந்து ஊஞ்சல் போல அசைந்து தூக்கணாங்குருவிகள் மெல்லுறக்கம் போடுகின்றன. தவிட்டுக் குருவிகள் குறுவை வயல்களில் தாழும் நெல் மணிகளை கொறித்து மகிழ்கின்றன. சிட்டு குருவிகள்… மேலும் கீழுமாக காற்றின் அலைவரிசையில் மிதக்கின்றன. நாவல் மரங்களில் அலைந்து திரியும் கிளிகள்…, மாமரங்களையும், அழிஞ்சைப் பழங்களையும் தேடியலையும் செண்பகங்கள் அதீத இசையை மீட்டிச் செல்கின்றன. களத்து மேட்டில் சுற்றித் திரியும் கவுதாரிகள்.., கோவில் மாடங்களில் முட்டையிடும் வெண்புறாக்கள், குளங்களில் நீச்சலடிக்கும் நீர்கோழிகள்.., காக்கா கூட்டில் முட்டையிடும் கருங்குயில்கள்…, நள்ளிரவில் இருளைப்பாடும் வானம்பாடிகள், வீட்டு வாசலில் கோலம் போடும் நார்த்தைக் குருவிகள்., வெகு தொலைவுக்கு அப்பால் இருந்து சம்பா அறுவடைக்கு வரும் செறவிகள்., வாய்கால்களில் சுற்றித்திரியும் மீன் கொத்திகள்…,  பெருமரங்களில் தவில் வாசிக்கும் மரங்கொத்திகள்..,  நள்ளிரவில் பாடும் ராக லீலாக்கள்.,  குறுவை வயல் எலிகளை தேடும் பருந்துகள்., நீர் குறைந்த ஒடைகளில் நத்தைகள் தேடும் செங்கல்நாரைகள்., வீட்டு முற்றங்களில் சுற்றி வரும் கல்லுக்குருவிகள்., வைக்கோல் போர்களில் முட்டையிடும் காடைகள்., மூங்கில் காடுகளில் பதுங்கி வாழும் கானங்கோழிகள்…, திடல் கரைகளில் நிற்கும் கின்னிக்கோழிகள்., தனது நீண்ட ஒற்றை வாலை ஆட்டி கூக்குரல் இடும் வால்குருவி., அதற்கு போட்டியாக பங்காளிச் சண்டையில் இறங்கும் இரட்டைவால் குருவி., கடலோர நன்னீர் குளங்களில் மீன் வேட்டையாடும் உள்ளான்கள்., மயிலுக்கு போட்டியாக இறக்கை விரிக்கும் நீளவால் குருவிகள்., வரப்போரங்களில் இரைத்தேடும் கடாப்புறாக்கள்., கருங்குயிலுக்கு காதல் சொல்லும் வரிக்குயில்கள்.,  இறைச்சியைத் தேடியலையும் கழுகுகள்., வட்டமாய் நோட்டமிட்டு கோழிகுஞ்சுகளை தூக்கிச்செல்லும் பருந்துகள்., இலுப்பை பழங்களையே அதிகம் விரும்பி உண்ணும் பழந்தின்னி வவ்வால்கள்., இரவில் வேட்டைக்கு கிளம்பும் கோட்டான்கள்.., இரவை சலனப்படுத்தும் ஆந்தைகள்., வேட்டைக்கு என்று பிறந்த வல்லூறுகள்….இப்படி எத்தனையோ பார்வைக்குள் சிக்காமல் பறந்து  போனவை இவை எல்லாம் இந்த டெல்டாவில் தான் ஒரு காலத்தில் றெக்கை விரித்தன.  

6

வேட்டைக்கார ராமசாமி வனக்குறவன் கொத்தலியை அழைத்துக்கொண்டு வந்து லாட்ஜ் வாசலில் காத்திருந்தார்.. ஆறுமுகம் இருவரையும் அறைக்கு அழைத்து வந்தான். கொத்தலியைப் பற்றி பெருமை பொங்கச் சொன்னார் ராமசாமி. வனத்துறை அதிகாரிகள், புத்தகம் எழுதும் ஆசாமிகள், ஆராய்ச்சியில் ஈடுபடும் பேர்வழிகள் போன்றவர்கள் இவரிடம் வந்து ஆலோசனையும் பறவைகள் குறித்த தகவல்களையும் பெற்று செல்வர்கள் எனவும் சில பறவைகளின் பாஷைகள் இவருக்குத் தெரியும் என்றும் சொன்னார். கொத்தலி உயரமாகவும்..ஒரு நைந்து போன வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். இரண்டு காதுகளிலும் பெரிய துவாரம் தெரிந்தது. முகம் வட்டமாக இருந்தது. அவரின் கண்கள்  கோட்டானின்  கண்களைப் போல பெரிது பெரிதாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. அதில் நீர் கோர்த்திருந்தன. ஆனால்  உடல் மெலிந்து போய்  இருந்தார்.

அவரைக் கையெடுத்து கும்பிட்டான். நீலநிற ஆக்காட்டி பற்றி சொன்னான். பிடித்துக் கொடுத்தால்.. இரண்டு லட்சம் பணம் தருவதாக ஆறுமுகம் தெரிவித்தான்.

இதனைக் கேட்டதும் கொத்தலி விழுந்து விழுந்து சிரித்தார். ஆறுமுகத்துக்கு கோபத்தில் முகம் சிவந்தது. அவரை அடித்துத் தூக்கி ஏறிய வேண்டும் போல் தோன்றியது. அடக்கிக் கொண்டான். அதனை முகத்தில் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

கட்டிலில் கிடந்த செல்போன் முணுமுணுத்தது.   அதனைக் கண்ட சடுதியில் ஆறுமுகத்தின் கோபம் மாசி மாத கடைமடை பாசன வயலைப் போல சடுதியில் வடிந்து போனது. “மதியத்துக்கு சாப்பிட வாங்க.. நாட்டுக்கோழி குழம்பு. சீக்கிரமே வந்துடுங்க. குரலில் அத்தனை குழைவு கூடியிருந்தது. “ம்’ என்று சொல்லிவிட்டு ஒருவித மகிழ்வில் பொய்யாக போனை விட்டெறிந்தான். அன்று அவள் பறவையை போன்று முனகியது நினைவுக்கு வந்தது. அதனை மல்லுக்கட்டி தவிர்த்துவிட்டு,

‘சொல்லுங்க.. கொத்தலி, ஆக்காட்டி பற்றி’ என்றான்.

அவர் முகம் இறுகியது… அவர் மவுனத்தை உடைத்துகொண்டு பேசத் தொடங்கினார்.

“இதப்பாருங்க தம்பி நீங்க ரொம்ப சின்ன பையன் அதுவும் என் கண்ணுக்கு விளையாட்டு பையனா தெரியிறீங்க.. உங்க ஊரு வடக்கு பக்கம் நீங்க டெல்டா பத்தி அறிஞ்சிருக்க மாட்டிங்க. இங்குள்ள எங்க வாழ்க்கை ரொம்ப போராட்டமானது. அந்த போராட்டத்த அப்படி நுணுக்கமாக சொல்ல முடியாது. இங்கேயிருந்து நீங்க அனுபவிக்கணும். உங்கள மாதிரி  ஆட்களை பார்த்த எனக்கு கோபம் தான் வருது. அந்த பறவை தெரியுமா.? இந்த பறவை வேணுமுன்னு வர்ற ஆட்களுக்கு இந்தப் பகுதி மக்கள் இப்ப எதிர் கொண்டிருக்கிற பிரச்சனை என்னான்னு தெரியுமா? ஒரு காலத்துல இந்த டெல்டா பகுதிங்க பாதுகாப்பா இருந்துச்சு. இப்ப அந்த பகுதியெல்லாம் பாதி அழிஞ்சுகிட்டு. இன்னும் கொஞ்சமும் அழிமானத்துல இருக்கு. இதைப் பத்திய   உணர்வு உங்கள்ல யாருக்காச்சும் உண்டா?  மூனு போகம் விளைஞ்ச பூமி இது. இன்னக்கி.. ஒரு போகம் கூட விளையல. அறுபத்தஞ்ச்சுக்கு பிறகு  பசுமைப்புரட்சின்னு ஏதோ சொன்னாங்க. புதிய உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை கொடுத்தாங்க. இதுல மண்ணு மட்டும் மலடா போகல… இந்த வயல்ல பறந்து புழுப்பூச்சிகளை உணவா சாப்பிட்ட எத்தனையோ பறவைங்க செத்துப் போய்டுச்சுங்க. தானியங்கள சாப்பிட்டவையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழியத் தொடங்கிட்டு,”

அவர் பேசுவது இவனுக்கு புதிதாக இருந்தது. கொத்தலி பேச்சில் குழப்பம் அடைந்த ஆறுமுகம், ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்து தனது பிராண்ட்டை ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்து ராமசாமியை கடைக்கு அனுப்பினான். .

கொத்தலி.. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார், “நான் சொல்றது பெரிய விஷயம் இந்த வளம் பொருந்திய பகுதியை அழிக்கிற வேலையை தொடங்கிட்டாங்க. என்னக்கி எண்ணைய் எடுக்குறோம். வெண்ணெய் எடுக்குறோமுன்னு சொல்லி இந்த பூமியை தோண்டி வாயுவை அங்கங்க எரியவிடத் தொடங்கினாங்ளோ அப்பயிலிருந்து மழையே பொய்த்து போய்ட்டு. இன்னக்கி மழை வரணுமுன்னு வையுங்க புயல் உருவாகுனும். அப்பத்தான் வரும்.  நம்ம உட்கார்ந்திருக்கமே இந்த கட்டிடம் இதுக்கு கீழே இருக்கே நிலம் இதுக்கு ஒரு காலத்துல மாப்பளை சாம்பா வயல்ன்னு பேரு. ஆனா இந்த இடத்துல இன்னக்கி லாட்ஜ் கட்டிபுட்டான் பாத்திய்யா தம்பி…. எனக்கு தெரிஞ்சு இந்த ஊர்ல பத்தடியில உப்பில்லாத நல்லத்தண்ணி வரும்.  இப்போ நீர்மட்டமே கீழே கீழே போய்ட்டு என்னச் செய்ய… ”

“கொத்தலி  நீங்க சொல்றது சரிதான்..,. இங்க மட்டுமல்ல இன்னக்கி நாடு முழுக்க இதே பிரச்சனை தான்… என்ன செய்யிறது….”

“தம்பி நான் சொல்றது உனக்கு புரியல. கழுகை வீட்டுல வளர்த்தவன், மயிலை வளர்த்தவன் இந்த ஊருக்காரன் தம்பி. பறவைங்க மேல அம்புட்டு சினேகம் அவனுக்கு. இதை நீங்க வேற எங்கேயும் பார்க்க முடியாது. தன்னை சுத்தி இருக்கிற செடி, கொடிங்க, பறவைங்க, மிருகங்க அத்தனையும் நேசிச்சு வாழ்ந்தவன்…”

ராமசாமி…. பாட்டில்களோடு வந்தார். லாட்ஜ் பையனை அழைத்து சைடிஸ் வாங்கி வரச்சொன்னான். மீண்டும் செல்போன் குரல் கொடுத்தது. அப்பா அழைத்தார், அம்மாவின் நிலவரம் குறித்து கேட்டான். ஞானசாமி பண்டிதர் கொடுத்த மருந்துகளை  தொடர்ந்து அம்மா சாப்பிட்டு வருவதால் முகத்தில் பொலிவு ஏற்பட்டு இருப்பதாகவும், நல்ல உறக்கம் கொள்வதாகவும், அடிக்கடி இவனைக் கேட்பதாகவும் சொன்னார். கடைசி வார்த்தையாக எப்படியாவதும் “அந்த பறவையை புடிச்சிட்டு வந்துடுப்பா” என்று சொல்லி தொடர்பை துண்டித்தார். அப்போது அடிவயிற்றில் சொரசொரப்பு எழுந்து அடங்கியது.

போனை வைத்துட்டு டீப்பாயில் வைக்கப்பட்டு இருக்கும் பாட்டில்களைப் பார்த்தான். செல்போன் மீண்டும் சிணுங்கியது. மூர்த்தி அழைத்தான், கோழிக்கறி சீக்கிரம் வா… என்றான்.  இவன் கொத்தலியிடம் பேசும் விவரம் பற்றி சொல்லவும். இதோ வருகிறேன் என்று போனை கட் செய்தான். அடுத்த சில நொடிகளிலேயே புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “மஞ்சு பேசுறேன்.. சமையல் முடியப்போகுது.. குழந்தைங்க வந்துட்டாங்க.. உங்களப் பார்க்கணும் அப்படின்னு சொல்றாங்க. அன்னக்கி நீங்க வர்ல. நான் சாப்பிடல தெரியுமா.. இன்னக்கி நீங்க வராட்டி நான் சாப்பிட மாட்டேன்” இணைப்பு துண்டிக்கப்பட்டது. பதிலேதும் சொல்லாமல் போனையே சில நிமிடங்கள் பார்த்தான்.

சைடிஸ் மற்றும் கண்ணாடி குவளைகளுடன் லாட்ஜ் பையன் வந்தான். குடித்து ஒரு வாரகாலம் ஆகியிருந்தது. மூன்று குவளைகளிலும் திரவத்தை ஊற்றினான். அவர்கள் இருவரிடமும் தேவையான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தான். வறுத்த வேர்கடலையை கொறித்து கொண்டே மடமடவென்று இரண்டு குவளைகளைக் குடித்தான். திரவம் உள்ளிறங்கிய சில நிமிடங்களில் வியர்வை அரும்பத் தொடங்கியது. கொத்தலியும் இரண்டு தம்ளர்களை குடித்து விட்டு, “தம்பி நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே… இந்த ஊரோட நெலமை இதுதான். உலகத்துல நீங்க எந்த ஊர்லயும் வாழ்ந்திடலாம். ஏன்… பாலைவனத்துல கூட ஆனா.. இங்கே வாழ்றது கஷ்டம்… நான் ஒரு காலத்துல இந்த ஊர்ல செல்வாக்கான ஆளா இருந்தேன்… இஞ்ச இருக்கிற, இருந்த பண்ணை மகாணங்களுக்கு நான்தான் ஆஸ்தான வேட்டைக்காரன் எல்லாமே தலைகீழாப்போச்சு…”

மூர்த்தி, சில நிமிடங்களில் அறைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் ராமசாமி எழுந்து நின்றார். கொத்தலியைப் பார்த்து, என்ன தெரியுதா? என்றான்.. அதட்டும் தொனியில்.  ஆறுமுகத்தின் தம்ளரை  எடுத்து திரவத்தை ஊற்றி ஒரே மூச்சில் குடித்தான். உரையாடல் அறுந்து போயிருந்தது. மேஜை மீதிருந்த முறுக்கு, கடலை மிட்டாய்களை சாப்பிட்டார்கள் பேசாமல்.

“கொத்தலி உன்னால நீலநிற ஆக்காட்டியை பிடிக்க முடியுமா.. அது எந்த பகுதிகள்ல இப்போ நடமாடுதுங்க சரியா சொல்ல முடியுமா?….” என்றான் மூர்த்தி..

“அவ்வளவு எளிமையில்லிங்க… லகூன் தீவு பக்கம் தான் போகணும்… வாரக் கணக்குல காத்திருக்கணும்.. குறைஞ்சது பத்து பேராவது போகணும்… கடல்ல இருக்கிற அந்த தீவுல தங்கியிருக்க… வனத்துறை அதிகாரிங்கக்கிட்ட பெர்மிசன் வாங்கணும்… செலவு நிறைய ஆவும்…” என்றார் கொத்தலி

“எவ்வளவு ஆனாலும் பரவயில்ல… நாளைக்கே கிளம்புங்க.” என்றான் ஆறுமுகம். நெற்றியில் அரும்பிய வியர்வையை துடைத்துக் கொண்டே.

”சும்மா இரு ஆறுமுகம்… நான் சொல்றதைப் கேளு… நான் சில விவரமான ஆளுங்கக்கிட்டே  விசாரிச்சேன். அப்படி ஒரு பறவை இல்லைன்னு சொல்றாங்க…” என்றான் மூர்த்தி

பதிலேதும் சொல்லாமல் ஆறுமுகம் மூர்த்தியை பார்த்தான்.

கொத்தலி குறுகிட்டு, “யாருங்க சொன்னாங்க.. நான் பார்த்து இருக்கேன். யாரோ உங்கள குழப்பிவிட்டு இருக்காங்க.” என்றார்.    

“அப்படின்னா எத்தனை நாள்ல பிடிச்சு கொடுப்பே… கொத்தலி.. சொல்லு… வேற ஏதாச்சும்… நீல கலர்ல ஒரு பறவை புடிச்சு கொடுத்துட்டு… ஆக்காட்டின்னு ஏமாத்திட மாட்டியே. அன்னக்கி.. இந்த ராமசாமி… ஆறுகட்டுதுறைக்கு அழைச்சிட்டு போயி பருந்துங்கள காட்டிப்புட்டு திருப்பி அழைச்சிட்டு வந்தான். இன்னக்கி  ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிட்டு, எத்தனையோ ஆளுங்க… பிடிக்க முடியலன்னு.. கைய விரிச்சுட்டானுங்க. உன்ன எப்படி நம்புறது கொத்தலி…” என்றான் காட்டமாக மூர்த்தி.

கொத்தாலி ராமசாமியைப் பார்த்து கடகடவென்று சிரித்தார். ஆறுமுகம் மூர்த்தியை பார்த்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான். இப்போது மூர்த்திக்கு போன் வந்தது. “இரு வர்றோம்” என்று போனை கட் செய்தான்.

“கொத்தலி உங்கள நான் நம்புறேன்.. உங்க பேச்சு எனக்கு பிடிச்சிருந்தது. உங்க மனசில உள்ளத சொன்னிங்க. அதைப் பத்தி நான் விவாதம் செய்ய நான் வர்ல. எங்கம்மாவ காப்பத்தணும். அதுக்கு இந்த பறவை வேணும். சொல்றது புரியுதா… ரும்பவும் சொல்றேன்.. உங்கள நான் நம்புறேன்… இங்க வந்து கிட்டதட்ட இரண்டரை மாசம் ஆயிட்டு இன்னும் பதினைஞ்சு நாள் தான் இருக்கு அதுக்குள்ள புடிச்சாகணும்….” மிகத் தெளிவாக பேசினான் ஆறுமுகம்.

“எனக்கு நம்பிக்கையில்ல. இருந்தாலும் தம்பி ஆசைபடுது. கடைசி முயற்சி எப்பிடியாச்சும் புடிச்சு ஆகணும் கொத்தலி. ஆளை ரெடி பண்ணு… என்றான் கோபத்துடன் மூர்த்தி.

“பெளர்ணமிக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. வசந்த பஞ்சமி ஆரம்பிக்க போகுது.. பறவைங்களுக்கு இதுதான் வசந்த காலம்..” என்றார் கொத்தலி.

7

மூர்த்தி சாப்பிட்டுவிட்டு கடைக்கு போய்விட்டான். குழந்தைகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் ஒருமாத காலமாகவே மஞ்சுவை அன்று ஒருநாள் நள்ளிரவில் அவளிடம் கேட்ட பறவையின் குரலை தனக்கு ஒருமுறை ஒலித்துக் காட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டேயிருந்தான். அதற்கான தருணம் இது இல்லையென்று பல தடவை தெரிவித்திருந்தாள். ஆனால் இன்று மூர்த்தி அறையில் இவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது மஞ்சு எழுப்பினாள். எழுந்து அமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் குரல் உடைந்து போயிருந்தது. அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தன. மெல்லிய குரலில் ஒரு பச்சைக்கிளிப் போல் கிரீச்சிட்டாள்.  தன்னை ஒரு அக்கா குருவி என்றாள். எனக்கு டிஸ்கவரி சேனல் பிடிக்கும் உனக்கு என்றாள். இவனுக்கு தூக்கம் கலைந்து போனது. சில நாட்களுக்கு பிறகு மிக மிக அருகில் அமர்ந்திருந்தாள். “உன் கயல்விழி என்னை விட அழகா என்றாள். இவன் அவள் என் கயல்விழி இல்லை. வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டாள் என்றான். போன வாரம் ஏன் என்னை கயல்விழி என்று அழைத்தாய் என்றாள்.  எப்போது என்பது போல பார்த்தான். நீ என்னைத் தேடித்தானே வந்தாய். இல்லை என்பது போல பார்த்து விட்டு, பதிலேதும் சொல்ல முடியாமல் தவித்தான். ஊருக்கு போனால் என்னை மறந்து விடுவாயா? என்றாள்.  மாட்டேன் என்றான். என்னை எவ்வளவு பிடிக்கும் என்றாள். நிறைய என்றான். ஊருக்கு போனால் குடிப்பாயா? என்றாள். மாட்டேன் என்றான். மெல்ல மெல்ல நெருங்கத் தொடங்கினாள். இப்போது உனக்கு பிடித்த பறவை போல் பாடுகிறேன் கேட்கிறாயா என்றாள். பதிலேதும் சொல்லாமல் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அழ வேண்டும் போல் இருந்தது. உடையும் கணத்துக்கு அவன் நெருங்கியபோது… மெல்ல மெல்ல படர்ந்து இவனை மேலே கிடத்தத் தொடங்கினாள்.. தனது றெக்கைகள் இதுதான் என்று தனது கால்களையும், கைகளையும் அசைத்துக் காண்பித்தாள். என் மீது படுத்து றெக்கை விரித்து பற நான் குயிலாகிறேன் இல்லை..இல்லை நீலநிற ஆக்காட்டி நான் என்றாள். சில நிமிடங்களில் மெல்லிய குரலை உயர்த்தி, இயங்கிக் கொண்டே பறக்கலாம் என்றாள். கால்கள் இரண்டையும் அந்தரத்தில் உயர்த்தி இரண்டு புறமும் அசைத்து மேலே மேலே பறந்து கொண்டிருந்தாள். இப்போது அவளிடமிருந்து இப்போது இதுவரை கேட்டிராத வினோத பறவையின் குரலை கேட்டான். அது வீட்டைக் கடந்து காற்று வெளியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. இருவரும் யாருமற்ற காற்று வெளியில் மிதக்கத் தொடங்கினார்கள்….

                         8     

ஆறுமுகம் லகூன் தீவுக்கரையில் கொத்தலி உள்ளிட்ட ஆட்களுடன் அமர்ந்திருந்தான். மடையான்களும் கொக்குகளும் வான் வெளியில் பறப்பதும் மரங்களில் அமர்வதும், கூட்டமாக எழுவதுமாக இருந்தன. அலையில்லாத கடல். சில இடங்களில் அலையடிக்கும் கடல். பார்க்கப் பார்க்க அலுப்பு தட்டவில்லை. பசியில்லை. இங்கே தான் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் மஞ்சுவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் செல்போனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. தீவினிலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருந்தார்கள். மரங்களில் வலை விரித்தார்கள். நாலைந்து நாட்கள் ஆகிவிட்டன. ஒரிரு புதிய பறவைகளைக் காட்டினார் கொத்தலி. இந்த பறவை வந்தால் நிச்சயம் நீலநிற ஆக்காட்டி வரும் என்று நம்பிக்கையளித்தார். ஆறுமுகத்தால் தீவில் படுக்க முடியவில்லை. கூடாரத்தில் உறக்கமே வரவில்லை. மஞ்சுவின் நினைவும், அம்மாவின் ஞாபகமும் மாறி மாறி வந்தன. சமயங்களில் மூர்த்திக்கு துரோகம் செய்கிறோம் என்று ஒரு வலி ஏற்படும். ஆனால் அடுத்த கணமே அது உடைந்து போகும். கயல்விழி செய்த புறகணிப்பும், அவமானமும் எழுந்து அடங்கும். ஆனால் கடலலையின் பேரோசையைக் கடந்து மஞ்சுவின் நினைவலை உடம்பில் நாதமாகவும்… மனதில் சங்கீதமாவும் ஒலிக்கத் தொடங்கியது. ஐந்தாவது நாள் கொத்தலியிடம் சொல்லிவிட்டு மஞ்சுவைப் பார்க்க கிளம்பி விட்டான்….

8

லகூனிலிருந்து வந்து அந்த அதிகாலைப் பொழுதில் கடையில் மூர்த்தியை  வந்து பார்த்தபோது, அப்போது தான் கடையை திறந்து வேனில் வந்த பூக்களை இறக்கி ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தான். முகம் சுண்டியிருந்தது. சரியாக பேசவில்லை. இவன் தான் பேசினான். எல்லாவற்றிக்கும் மூர்த்தி ‘ம்’ போட்டான். “அண்ணே வாங்கிட்டு வாங்கண்ணே” பணத்தைக்  கொடுத்தான். வேண்டாம் என்பது போல மறுத்தான். மல்லுக்கட்டி கொடுத்துவிட்டு, அறைக்கு வந்தான். குளித்து படுத்தான். ஆனால் இருப்பு கொள்ள முடியவில்லை. ஒரு ஆட்டோவைப் பிடித்து மூர்த்தி வீட்டுக்கு வந்தான். கதவைத் திறந்ததும் இவன் நிற்பதை பார்த்ததும், ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் கதவை அறைந்து சாத்தினாள். இவன் மஞ்சு, மஞ்சு என்று கதறினான். செல்போனை எடுத்து அவள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சித்தான். அவள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தாள்.

அறைக்கு வந்து படுத்து கிடந்தான். மூர்த்தி வருவான் என்று எதிர்பார்த்தான். மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது.  நெஞ்சை அறுப்பது போலிருந்தது. உடனே கிளம்பி விடலாம் என்று ஒரு எண்ணம் வந்து மறுகணமே மஞ்சுவை விட்டு செல்வது எளிதாக இல்லை.  பெரும் வெறியுடன் குடித்தான். அன்ன ஆகாரமின்றி படுத்துக் கிடந்தான். அழுதான். கயல்விழியையும், மஞ்சுவையும் மாறி மாறி திட்டிக் கொண்டேயிருந்தான். பொழுது மெல்ல நகர்வது போல உணர்ந்தான். இரவில் எழுந்து குடித்துக்கொண்டே மூர்த்தி இருக்கும் கடைவீதிக்கு சென்று அவனைப் தேடிக்கொண்டே அலைந்தான். பகற்பொழுதுகளில் மஞ்சுவைத் தேடி தேவர்கண்டநல்லூர் தெருக்களில் அலைந்தான்.. நினைவு வரும்போது லகூன் தீவில் இருக்கும் கொத்தலியிடம் பேசி ஆக்காட்டி பற்றி விசாரித்தான்… மஞ்சு மஞ்சு என்று பிதற்றினான். அவளிடம் தொடர்பு கொள்ள எது வேண்டுமானலும் செய்யவும் ரெடியாக இருந்தான். போதை அதிகமாகும் நேரங்களில் மூர்த்தியின் எண்ணுக்கும் போன் செய்து பார்த்தான். மஞ்சு எண் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

9

நீலநிற ஆக்காட்டி கிடைத்து விட்டது. எடுத்துக் கொண்டு ஒடுகிறான். வானத்தின் நீலநிறத்தை போல அந்த பறவை அப்படியொரு நிறத்தில் மிளிர்கிறது. அதைக்காண பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. ஞானசாமி பண்டிதர் அந்த பறவையை வைத்து பெரும் மருந்து தயாரிக்கிறார். பிறகு பறவையை வானில் பறக்க விடுகிறார். மருந்தை அம்மாவுக்கு ஒரு மண்டலம் கொடுக்கச் சொல்லித் தருகிறார். மருந்தைக் கொடுக்கவும் அம்மாவுக்கு முகம் மாறிப்போகிறது. நோய் போய்விட்டது முற்றிலும் என்கிறார் அப்பா. தனது சிறு வயதில் பார்த்த அம்மா… இரண்டு காதுகளிலும் தோடு.. ஒற்றை கல் வைத்த மூக்குத்தி சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறாள். அப்பாவிடம் பொய்ச்சண்டைப் போடுகிறாள். நடுவீட்டில் அமர்ந்து மல்லிகைசழ் சரங்களைத் தொடுக்கிறாள். அம்மாவைத் தேடி யார் யாரோ வருகிறார்கள். கார்களில், ஆட்டோக்களில் வருகிறார்கள்.. புதுப்பெண் போல காரில் வைத்து ஊர்வலமாய் அழைத்து செல்கிறார்கள் அம்மாவை. வீட்டில் பந்தல் போட்டு மைக் செட் கட்டி பாடல்களைப் பாட விடுகிறார்கள். அம்மா முதலில் எம்ஜிஆர் ரசிகை.  ஆனால் அவர் பிறகு கமலுக்கு பரம ரசிகை ஆகிப்போனாள். அதனால் கமல்  பாடல்களையே போடுகிறார்கள். அம்மா சிரித்த முகத்துடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.  மேளம் வாசிக்கும் ஆட்கள் வந்தார்கள். அவர்கள் நாதஸ்வர கச்சேரியை திண்ணையில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். ஆறுமுகத்துக்கு திருமணம் என்று இவன் காதுபடவே சிலர் பேசினார்கள். இவனுக்கு குழப்பமாகி விட்டது. பெண் யார் என்று இவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. கயல்விழியா? மஞ்சுவா? என்று பதட்டமாகியது. நிச்சயமாக மஞ்சுவாக இருக்காது தனக்கு தெரியாமல் வேறு பெண்ணைப் பார்த்து இருக்கிறார்கள். சிரித்துக் கொண்டான். தன்னிடம் பெண்ணைக் காண்பிக்காமல் எப்படி திருமணத்துக்கு முடிவெடுத்தார்கள். அப்பா பட்டு சட்டை வேஷ்டி அணிந்தபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். யாரோ ஏன் திருமணத்துக்கு மண்டபம் பிடிக்கவில்லை என்று அப்பாவிடம் கேட்கிறார்கள். விருந்துக்கு மட்டும் தான் மண்டபம். திருமணம் இங்கே தான் என்று வாதிடுகிறார். அக்கா புதிய பத்திரங்களை வீட்டு அறையில் அடுக்கி வைக்கிறாள்… அழகான பெண்கள் அம்மாவைச் சுற்றி நிற்கிறார்கள்… மணப்பெண் எங்கே என்று இவன் அக்காவிடம் கேட்கிறான்… கூட்டம் கூடிக்கொண்டே போகிறது. யாரோ அழைக்கிறார்கள்.. கதவு தட்டும் ஒசை கேட்கிறது. திடுக்கிட்டு போய் எழுகிறான்… அறையின் கதவை தட்டுகிறார்கள்…. வியர்த்துப் போன உடலுடன் கதவை திறக்கிறான் கொத்தலி சோர்வாக வாசலில் நிற்கிறார்…

10

“தம்பி.. மூனு நாளா போன் போடுறேன்.. நீங்க… எடுக்கல.. அதான் கிளம்பி வந்துட்டேன்.  இனிமே மெனக்கெடுவது வீண். நாங்க எல்லா வித முயற்சியும் செஞ்சு பார்த்துட்டோம். ஆளுங்களும் சோர்ந்து போயிட்டாங்க. எனக்குத் தெரியும் அதான் அன்னக்கி உங்களுக்கு நான் மறைமுகமாக சொன்னேன். சூழல் மாறிப்போய்ட்டு, இந்த பகுதிகள்ல வாழ்றதுக்கான தகுதி மெல்ல குறைஞ்சு வருது.. நீங்க என்ன பண்ணுவீங்க பாவம். அம்மாவை காப்பற்ற நீங்க முயற்சிப் பண்ணுறீங்க.. இங்கே இயற்கைக்கு எதிரா நடக்குற ஒவ்வொரு விஷயமும் தாவரம், புல் பூண்டுங்க, பறவைங்க எல்லாத்தையும் அழிக்கிறது. தயவு செய்து மன்னிச்சுக்கங்க… இந்த பத்து நாளைக்கும் கடுமையா செலவு செஞ்சிருக்கிங்க. பலன் இல்லை.  உங்க காசு எங்களுக்கு வேண்டாம். இந்தாங்க.. நீங்க கொடுத்த பணத்துல செலவு செஞ்சது போக மீதி. கூலி வேணாம்” கொத்தலி பணத்தை இவன் படுத்திருந்த கட்டிலில் போட்டுவிட்டு இறங்கிப் போனார்.

மேலும் பதட்டம்  அதிகமாகியது. தொடர்ந்து குடித்திருந்ததால் உடல் நலிவடைந்து போயிருந்தான். சாப்பிடாமல் கிடந்ததால் ஒரு நடுக்கம் நிலவியது. நாட்களை எண்ணிப் பார்த்தான்.. மயக்கம் வருவது போல இருந்தது. குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கினான். நடுக்கத்தை குறைக்க குடிக்க வேண்டும் போலிருந்தது.

11

குடித்து விட்டு பாரிலிருந்து கிளம்பும்போது மாமா பேசினார். நம்ப முடியவில்லை. இது நடக்கும் என்பது போல் மனம் உறுதி கொண்டு விட்டது. அழுகை வரவில்லை. மிகத்தெளிவாக இருந்தான். கார் வாடகைக்கு பிடித்தான். மூர்த்தி பூக்கடையில் போய் நிறுத்தி மாலை வாங்கினான். அவன் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் தன்னுடன் ஆறுதலாக வருவான் என்று எதிர்பார்த்தான். தனிமை பயணம். ஆறுதலாக மஞ்சுவோ, கயல்விழியோ பேசினால் நல்லத்தான் இருக்கும் என்று நினைத்தான்.  அம்மாவை கூலர் பாக்ஸில் வைத்திருந்தார்கள். அக்கா இவனைக் கண்டதும் ஒடி வந்து அணைத்துக் கொண்டாள். ஒரு சொட்டு நீர் வரவில்லை. அப்பாவைத் தேடினான். பறவையைத் தேடி போயிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அம்மாவுடன் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஞானசாமி பண்டிதர்… தொடங்கி அத்தனை பேர் மீதும் கோபமும் எரிச்சலும் வந்தது. கண்களில் இருந்து நீர் சொட்டிக் கொண்டேயிருந்து அப்பாவுக்கு. சர்வமும் அடங்கிப் போயிருந்தார். உறவினர்களுடன்  அம்மாவை நல்லடக்கம் செய்துவிட்டு வந்து அமர்ந்திருந்தான். இரவு வந்திருந்தது. நாலைந்து முறை செல்போன் குரல் கொடுத்தது. புதிய எண்ணாக இருக்கவும் எடுக்க யோசித்தான். சென்னையில் இருந்து நண்பர்கள் யாராவது பேசுகிறார்களா? அருகில் இருந்த அப்பா போனை எடுத்து பேசச் சொன்னார்… எடுத்தான். எதிர்முனையில் இருந்து மூர்த்தி பூக்கடையில் வேலை செய்யும் நேசமணி பேசினான்,

“அண்ணே மஞ்சு அக்காவுக்கு றெக்கை முளைச்சுட்டு, அவுங்க பறவையா மாறிட்டாங்க… அவுங்க உடம்பு நீல கலர்ல மாறிட்டு… கூ..கூன்னு கூவிட்டு இருக்காங்க… ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போக போறோம். ஊரே கூடி வேடிக்கை பாக்குது. பேப்பர்காரங்க வந்து போட்டோ புடிச்சிட்டு போறாங்க. இதை மூர்த்தி அண்ணன் உங்ககிட்டே சொல்ல சொன்னாரு” என்றான்    

அப்பா என்னவென்று கேட்டார்.

மஞ்சு பறவையாக ஆகியிருப்பதை கற்பனை செய்து பார்த்தான். பயத்தில் உடல் நடுங்கியது. “என் நீலநிற ஆக்காட்டியே” என்று பெருங்குரலில் அழத் தொடங்கினான்.  

—————-        

நன்றி : கணையாழி

சிவகுமார் முத்தையா     – நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியன வந்துள்ளன. தொடர்புக்கு -muthaiyasivakumar@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here