கா. சிவா
இவ்வளவு தூரம் நடந்து வந்த சாலை இடதுபுறமாக வளைந்து செல்லும் இடம் வந்ததும், நேராக தெற்கில் இருக்கும் தன் ஊரை நோக்கிச் செல்வதற்காக சாலையைவிட்டு சரிந்து இறங்கிய ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தார் கர்ணன். இந்தப் பாதை வயல்களின் வரப்புகளை வாகனமாகக் கொண்டது. மார்கழி மாத வயல்களில் மஞ்சளும் கரும்பச்சையுமான நெற்பயிர்கள் பொன்னிறக் கதிர்களைச் சூடிய தலையை கிறக்கத்துடன் லேசாக அசைத்துக் கொண்டிருந்தன. பரந்து விளைந்திருந்த வயல்வெளியைப் பார்த்தவுடன் மனதில் ஏற்பட்ட ஏதோவொரு நிறைவில் கர்ணனின் கண்களில் நீர் துளிர்த்து இருதுளிகள் கன்னத்தில் சிந்தியது.
சூரியன் மறையப் போவதைப் பார்த்து கையிலிருந்த ஹெச்.எம்.டி கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்தரை ஆனது. பெருமாள் இறந்த செய்தியை ராமன் போனில் சொன்னவுடன் இருட்டுவதற்குள் ஊருக்குள் சென்றுவிடலாம் என்றுதான் முதலாளியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மனைவியிடம் சொல்லிவிட்டு திருச்சியிலிருந்து கிளம்பினார். பேருந்து தாமதமாக வந்ததால் இருட்டிவிடும் போலிருக்கிறது.
சம்பங்கியும் துளுக்கஞ்சாமந்தியும் கலந்து தொடுக்கப்பட்ட மாலையை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டார். இதோ வயற்காடு முடியப் போகிறது. நடுவில் இருக்கும் சிறு ஆற்றைக் கடந்துவிட்டால் கண்மாய்க்கரை கண்ணுக்குத் தெரிந்துவிடும். அதில் ஏறி மறுபக்கம் இறங்கினால் சுடுகாடு வந்துவிடும். அப்படியே மாலையைப் போட்டுவிட்டு ஊருக்குள் செல்ல வேண்டியதுதான் என தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தார். வழியில் எவருமே தட்டுப்படவில்லை. இப்பனிக் காலத்தில் வயல்களில் பெரிதாக எந்த வேலையுமில்லை. மயிலோ பறவைகளோ வந்தால் ஓட்டுவது மட்டும்தான். அதுவும் மதியத்தில் தான். பயிர்களுக்கு தண்ணீரும் தேவையில்லை. பொழியும் மார்கழிப் பனியினை உண்டு நெல்மணிகள் தானே பெருக்கும்.
சுடுகாட்டைத் தாண்டித்தான் ஊருக்குள் செல்ல வேண்டுமென்பதால் கர்ணன் எப்போதும் தனியாக மாலை நேரங்களில் ஊருக்கு வருவதில்லை. பெருமாள் இவனுடைய நெருங்கிய நண்பனென்பதால் ஒரு ஆவேசத்தில் கிளம்பிவிட்டார்.
தன் நாற்பது வருட வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நீர் ஓடிய ஆற்றின் மணலில் நடந்தார் கர்ணன். சூரியன் பனை மரங்களுக்குள் இறங்கி மறைந்துவிட மேகங்களில் லேசான செந்நிறத் தீற்றல்கள் மட்டும் தெரிந்தது. “ஊருக்குப் போற வழியில ஏன்டா சுடுகாட்ட வச்சானுங்க. கொஞ்சம் தள்ளி தூரமா வச்சிருக்கலாம்ல” என சிறிய வயதில் அருகிலிருக்கும் ஊருக்குப் போய்விட்டு வரும்போது நண்பர்களிடம் சத்தமாகக் கேட்டது நினைவுக்கு வந்தது. சிறு வயதில்தான் அப்படிக் கேட்க முடியும். சற்று வயதானவர்கள் கேட்டிருந்தால் ஒருவேளை வேறு இடத்திற்கு மாறியிருக்கக் கூடும். எல்லோர் மனதிலும் அந்த எண்ணம் இருந்தாலும் முதலில் கூறுபவரை பயத்தாங்கொள்ளி எனப் பகிரங்கப்படுத்தி ஏளனக் கதைகளுக்கு முன்மாதிரியாக்கி விடுவார்கள் என்பதால் யாரும் வாயைத் திறந்திருக்க மாட்டார்கள். இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். புதைத்துவிட்டு அப்படியே தலைமுழுகி விட்டுச் செல்வதற்கு வசதியாக இருப்பதால் இங்கே அமைத்திருக்கலாம். ஒருநாள் இம்மாதிரி இருட்டும் நேரத்தில் தன் மாமாவுடன் வந்தபோது, அவர் பழைய ராஜாக் கதைகளை சொல்லியபடி வந்தது, அவரின் அஞ்சித் துடித்த மனதை தைரியப்படுத்திக் கொள்ளத்தானோ என இப்போது இவருக்குத் தோன்றியது.
கண்மாய்கரையின் மேல் ஏற ஆரம்பித்தார். பனை மரங்களையும் வேலிக்கருவைகளையும் பின்னிப் பிணைத்திருக்கும் முள்ளடர்ந்த கொடிகளுடன் பதினைந்தடி உயரத்தில் நீண்டு வளைந்து செல்லும் கரையில், குறுக்காக நான்குபேர் நடக்கும் அகலத்திற்கு சிறு பாதையிருந்தது. கண்மாயில் நீர் குறைவாக இருக்கும் போது இதன் வழியாக ஏறிக் கடக்கலாம். நீர் அதிகமாக இருந்தால் சுற்றித்தான் செல்லவேண்டும். கரையின் மேல் நின்று பார்த்தார். முழங்கால் அளவுக்கு, லேசான மஞ்சள் நிறத்தில் தண்ணீர் கிடந்தது. கொஞ்ச தூரத்தில் புதிதாக புதைத்த தடம் சற்று உயரமாகத் தெரிந்தது. தூரத்திலிருந்து பார்த்ததால் அகலம் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. மணல் பகுதி என்பதால் சில நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தடம் காற்றிலும் மழையிலும் உருவழிந்து சமதரையாகிவிடும். அடுத்தமுறை வேறு ஒருவருக்காக வரும்போது மறைந்த அடையாளத்தை உத்தேசமாகக் கணித்து உறவினரைப் புதைத்தது இந்த இடமா, அந்த இடமா என விவாதித்துக் கொள்வார்கள்.
வானத்தின் நீலம் மெதுவாக கருமையாகத் தொடங்கிவிட்டது. யாருமே கண்ணில்படவில்லை. அரைமணி நேரம் முன்னதாக வந்திருந்தால் எல்லோரும் இருந்திருப்பார்கள். அவர்களுடனேயே சென்றிருக்கலாம். “எனக்கென்ன பயம். என்னுயிர் நண்பன்தானே. என்னை என்ன செய்யப் போகிறான்”. “அவன்தான் உயிர் நண்பனாயிற்றே. அவன் செத்தபின் உன்னை மட்டும் வாழ விடுவானா”. “எத்தனை முறை ஆபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றினான். இப்போது மட்டும் தீங்கிழைப்பானா”. “அது அவன் உயிரோடு இருந்த போது. இப்போதுதான் இறந்துவிட்டானே. உன்னை ஏன் வாழவிட வேண்டும்” என இரு தரப்பாக தனக்குள்ளேயே மோதியபடி புதைமேட்டிற்கு அருகே வந்துவிட்டார். நிமிர்ந்து பார்த்தபோது சற்று அதிர்ந்து விட்டார். அங்கே இரண்டு புதைமேடுகள் இருந்தன. அவற்றின் இரண்டு பக்கங்களிலும் சிதைக்கப்பட்ட பாடைகள் கிடந்தன. ஒரு புதைமேட்டில் ஒரு மாலை மட்டும் கிடந்தது. மற்றொன்றில் மூன்று மாலைகள் கிடந்தன. ஊரில் ஒரே நாளில் இரண்டு சாவா. போனில் சொன்னவன் இதைக் கூறவில்லையே. இன்னொருவர் தனக்கு நெருக்கமானவராக இல்லாதவராக இருக்கலாம் என்று சமாதானமானாலும் இதில் எது பெருமாளின் சமாதி என்று கணிக்க முடியவில்லை. இரண்டு சமாதிகளும் ஒரே அளவினதாகவே இருந்தன. கையில் இருப்பதோ ஒரே மாலை. இப்போது மாலையை மாற்றிப் போட்டால் பெருமாள் கோபம் கொண்டு பிடித்துக் கொள்வானோ. பெருமாளாவது பரவாயில்லை, என் நண்பன். இன்னொருவர் என்னை அடிப்பாரோ. அப்படி அடிக்க முடியாது. அதை என் நண்பன் அனுமதிக்க மாட்டான். பெருமாள் சற்று சோகையானவன். வாய்தான் நீளம், பலம் குறைவு. தெரியாத அவர் பலமான கோபக்காரராக இருந்தால்…. பயம் மேலும் அதிகமானது. கர்ணனால் முடிவு எடுக்க முடியவில்லை. இருட்டு வேறு உடலில் லேசாக படர ஆரம்பித்தது. அப்போது நாயின் கூரிய குரைப்பொலி தூரத்தில் ஒலித்தது. அல்லது ஒலித்தது போலத் தோன்றியது. சட்டென்று மனதிலொன்று தோன்ற, இரண்டு புதைமேடுகளில் ஒன்றின் மேல் மாலையை போட்டுவிட்டு “உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கையை தலைக்குமேல் குவித்து வணங்கிவிட்டு வேகமாக ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இன்னொருவர் யாராக இருக்கும். பெரிதாக நோயுடன் யாரும் ஊரில் இல்லை. யாருக்கேனும் விபத்து நேர்ந்திருக்குமோ. அல்லது அடிதடி முற்றி இறப்புவரை சென்றிருக்குமா. சேச்சே… அதுமாதிரி இந்த ஊரில் நடக்க வாய்ப்பில்லையே… என மேலோட்டமாக யோசித்தபடி பயத்தை உள்ளுக்குள் அழுத்திக்கொண்டு நாயின் குரைப்பொலியை மனதால் பற்றிக்கொண்டே வேகமாக நடந்து ஊருக்குள் நுழைந்து விட்டார்.
ஊருக்குள் செல்ல மூன்று சாலைகள் தொடங்கும் இடத்தில் பெருமாள் கோவில் இருந்தது. அதனை ஒட்டியே அரசுப் பள்ளிக்கூடமும் சர்க்கார் கிணறு என அழைக்கப்படும் பெரிய பொதுக்கிணறும் இருந்தது. பெருமாள் கோவிலில் மாலை பூசைக்கான ஏற்பாடுகளை தாசரி செய்து கொண்டிருந்தார். வெளியே ஆலமரத்தின் அடியில் சில சிறுவர்கள் கல்லா மண்ணா விளையாடிக் கொண்டிருந்தார்கள். தான் பறித்த சிறிய குழிக்குள் படுத்திருந்த நாய் தனக்குள் ஆழ்ந்திருப்பதான பாவனையுடன், இவரைக் கண்டுகொள்ளாமல் அவர்களின் விளையாட்டை நோக்கிக் கொண்டிருந்தது. நாயை சற்று நேரம் உற்றுப் பார்த்தவர், சுடலைக்கரையிலிருந்து நேராக வீட்டிற்கு செல்லக்கூடாதே என்பதற்காக கிணற்றிலிருந்து நீரிறைத்து குளித்துவிட்டு அதே உடைகளையே பிழிந்து போர்த்திக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
வெளியே, திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருந்த அண்ணன் அரவம் கேட்டு நிமிர்ந்து “வாடா தம்பி” என்று அழைத்து நலம் விசாரித்தபோது எப்போதுமிருக்கும் உற்சாகம் அவரிடம் இல்லை. கர்ணனைவிட அண்ணனுக்கு பத்து வயது அதிகம். கர்ணன் புன்னகைத்தபடி பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார். அத்தாச்சி அடுப்படியில் இருந்தார். அவர் கர்ணனுக்கு அத்தாச்சி மட்டுமல்ல, இன்னொரு அம்மாவும்கூட.
நடையோசை கேட்டு திரும்பிய அத்தாச்சி “வா கர்ணா. என்ன இன்னங் காணாமேன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்”
கர்ணன் வெறுமனே புன்னகைத்தார். “பொண்டாட்டிய கூட்டிட்டு வரலையா…. அதுசரி உன்ன விட்டதே பெருசு….” என்று குறுஞ்சிரிப்புடன் நோக்கினார். அதை ஆமோதிப்பதைப் போல இவர் தலையசைத்தார்.
“கூட்டாளி வீட்டுக்குப் போனியா”
“இல்ல அத்தாச்சி. துணிய மாத்திக்கிட்டுதான் போகணும்”
“துணிய மாத்திக்க. ஆனா அங்க போக வேணாம்”
ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்க அத்தாச்சியை கர்ணன் நோக்கினார். அத்தாச்சி எதுவும் சொல்லாமல் திரும்பி கிண்ணத்திலிருந்த காப்பியை மூன்று குவளைகளில் ஊற்றினார். அங்கேயே நின்றிருந்த கர்ணனை நோக்கியவர் “போயி மாத்திக்கிட்டு வா” என்று அதட்டுவது போல சொன்னதும், இவர் உள்ளே சென்று வேட்டியைக் கட்டிக்கொண்டு துண்டால் உடலைப் போர்த்தியவாறு வெளித்திண்ணைக்கு வந்தார்.
அண்ணன் காலிக் குவளையை கீழே வைத்துவிட்டு “வா உக்காரு” என்று இவரிடம் கூறினார்.
அத்தாச்சி நீட்டிய குவளையை வாங்கிக் கொண்டு அவர் முகத்தை நோக்கினார்.
“நீதான் அவன உங்கூட்டாளின்னு நெனச்சுக்கிட்டு இப்படி பறந்து வந்துருக்க. ஆனா அவனோ அவம் பொண்டாட்டியோ அப்படி நெனக்கல”
“ஏன் அத்தாச்சி… என்னாச்சு” என வேகமாகக் கேட்டபடி இறுக்கமாயிருந்த இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார்.
“அதை ஏண்டி இப்போ சொல்லிக்கிட்டு இருக்க” என்று மனைவியை அடக்கிய அண்ணன், இவரை ஆதுரத்துடன் நோக்கி “மனுசங்களோட மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு வயசுல நல்லதாத் தெரியிற விசயம் சில வருசத்துக்குப் பிறகு வேற மாதிரித் தெரியும். அது அவங்களோட தப்பு இல்ல. கூட இருக்கிறவங்க வேற கோணத்துல காட்டறபோது, அட ஆமால்ல இதுவரைக்கும் இப்படி பாக்கத் தோணலயேன்னு தோனும். அப்போதைக்கு இதுவரைக்கும் நல்லதா தெரிஞ்ச எல்லாமே தப்பாவோ துரோகமாவோதான் தெரியும்”
“பெருமாளுக்கும் அப்படித்தான். கடைசி காலத்துல எல்லாரையுமே தனக்கு எதிரா துரோகம் செஞ்சவங்கன்னு மனசுல நெனக்க ஆரம்பிச்சுட்டான். தான் நோயில கஷ்டப்படறப்ப மத்தவங்கல்லாம் நல்லா இருக்கிறத அவனால தாங்கிக்கவே முடியல. முக்கியமா இருவது வருசம் கூடவேயிருந்த நீ சந்தோசமா இருக்கிறது அவனுக்கு பெரிய வேதனையக் கொடுத்திடுச்சு. அந்த வலியில ஏதாவது சொல்லியிருப்பான். அதயெல்லாம் பெருசா நெனக்காத…” என்று கூறிவிட்டு “இவ வேற… அறிவில்லாம வந்ததும் வராததுமா அதப்போயி சொல்லிக்கிட்டு இருக்கா” என்றபடி மனைவியை முறைத்தார். வேகமாக எழுந்த அத்தாச்சி தவறு செய்யாமல் அடி வாங்கிய குழந்தையைப் போன்ற முகத்துடன் வீட்டினுள் சென்றார்.
“பெருமாள் குடும்பத்துல ஏதோ சொன்னதுக்கு நீங்க ஏண்ணே வருத்தப்படறீங்க” தனக்குள் பெருகிய தவிப்பை அடக்கியபடி சோர்ந்திருந்த அண்ணனிடம் கர்ணன் கேட்டார்.
“பெருமாள் பேசினதுக்காக வருத்தமில்ல. அவன் சொன்னதுனால நாம தப்பானவங்களா ஆயிடுவமாயென்ன… இது வேற விசயம்” என்றவர் அடுத்த வார்த்தை பேச தயங்கி நிறுத்தினார். தொண்டை வரை வந்த வார்த்தையை நாக்கால் தடுப்பது போல தாடை அசைந்தது.
தன்னிடம் பேசுவற்கு எப்போதும் தயங்காத, அப்பாவையே காணாத தனக்கு அப்பாவாகவே விளங்கும் தன் அண்ணன் இப்போது எதையோ சொல்ல முடியாமல் தவிப்பதைப் பார்த்து கர்ணன் திகைத்தார். எதுவும் கேட்காமல் உணர்வுகள் தளும்பும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருத்தார். நிரம்பிய பாத்திரத்திலிருந்து கீழே சொட்டப்போகும் முதல் துளியை எதிர்பார்ப்பது போன்ற பதட்டத்துடன் காத்திருந்தார்.
குனிந்து அமர்ந்திருத்த அண்ணன் நிமிர்ந்து கர்ணன் முகத்தை தீர்க்கமாக பார்த்தபோது சொல்வதற்கான வார்த்தைகளைத் தேர்ந்துவிட்ட உறுதி தெரிந்தது.
“தம்பி, இதுவரைக்கும் உன்கிட்ட இந்த விசயத்தை மட்டும்தான் மறைச்சிருக்கேன். முன்னாடியே சொல்லியிருக்கலாம், என் நிலமைய புரிஞ்சுக்குற பக்குவம் உனக்கு வந்திடுச்சான்னு உறுதியா தெரியாததால தான் சொல்லலை”
“ஆனா இன்னைக்கி சொல்லித்தான் ஆகணும்” என்று ஆரம்பித்தவர் இயல்பாக சுவரில் சாய்ந்து அமர்ந்தார். இப்போது அவரிடம் எந்த தயக்கமும் இல்லை.
“இந்த கந்தசாமி அய்யா இருக்காருல்ல… இல்ல இருந்தாரு” என்று அண்ணன் கூறியதும் “என்னாச்சுண்ணா அவரு போயிட்டாரா” என்று கர்ணன் ஆச்சர்யமாகக் கேட்டார்.
“ஆமா நேத்துதான். நாந்தான் எல்லாக் காரியமும் செஞ்சேன்”
“நீங்க ஏன் செஞ்சீங்க”
“வெளியூருக்குப்போன அவரோட ஒரே பேரனும் எங்கேயிருக்கான்னு தெரியல. அதுக்காக மட்டுமில்ல” என்றவர் கர்ணனின் தோளில் ஆதுரத்துடன் கையை வைத்தார்.
“நம்மளோட சின்ன வயசுலயே அப்பா போயிட்டாரு. எனக்குப் பின்னாடி ஒன் ஆச்சிக ரெண்டு பேரு. அப்புறம் நீ. எனக்கு அப்ப பன்னென்டு வயசு. அம்மாவுக்கு வீட்டு வேல மட்டுந்தான் தெரியும்”
“சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். நாங்க மூனுபேருமே வயல் வேலைகளுக்குப் போக வேண்டிய நெலமை. அன்னைக்கி ஒன் ஆச்சிக ரெண்டு பேரும் வம்பரம்பட்டி வேலாயுதத்தோட கொல்லைக்கு வேர்க்கடலை புடுங்க போயிட்டாங்க. அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியாம படுத்திருந்தாங்க. நான் மேலவீட்டு செந்திமாமா வயலுக்கு வேலைக்கு போயாகணும். ரெண்டு வயசுப் பயலாயிருந்த ஒன்ன வீட்ல விட்டுட்டுப் போக முடியாம நானே தூக்கிக்கிட்டுப் போனேன்”.
“தூக்குனா ஒரே அழுகை. பசியில அழுதியோ வேற எதுக்காக அழுதியோ புரியல. சாப்பிடவும் எதுவும் வீட்ல இல்ல. நீராரத் தண்ணி மட்டுந்தான் இருத்துச்சு. அத நீ வேண்டான்னு தள்ற. ஒன்னும் பண்ண முடியாம ஒன்னத் தூக்கிட்டு வயலுக்குக் கெளம்பினேன்”.
*
இரண்டு வயதுக் கர்ணனைத் தூக்கிக் கொண்டு தவசி மேல வயலை நோக்கி நடக்கிறான். பனிரெண்டு வயது பையனை நம்பி ஒரு குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்ட அப்பாவின் மேல் பெருங்கோபம் எழுந்தது தவசிக்கு. பத்து வயதிலும் எட்டு வயதிலும் இருக்கும் தங்கைகளை வேலைக்கு அனுப்ப வேண்டியதாகிவிட்டதன் ஆற்றாமை மனதைக் குடைந்தது. அம்மாவின் உடல்நிலை வேறு படுத்தியது. அம்மாவும் இல்லாது போனால் என்று எழுந்த எண்ணத்தால் கழிவிரக்கம் தோன்றினாலும், பயத்தில் உடல் ஒருமுறை சொடுக்கிக் கொண்டது. கர்ணனின் கனத்தால் கைகளில் உண்டான வலியைவிட அவன் அழுவது பெரும் துயரளித்தது. மணி பத்துக்கு மேல் இருக்குமே என்று எண்ணியபடியே வேகமாக நடந்தபோது ஒழுங்கையில் புழுதி எழுந்தது. எதிரில் கண்மாய் தெரிந்தது. அதில் கிடக்கும் இடுப்பளவு நீரில் இறங்கி நடந்து கரையிலேறி இறங்கினால், நாலாவது வயல் செந்திப்பிள்ளையின் வயல்.
எப்போது வயலை அடைவோம்… இந்தப் பயலை கீழே இறக்கிவிட்டு வயலில் இறங்கி களையெடுக்கத் தொடங்குவோம் என்று துடிக்கும் ஆவலாதியுடன் வேகமாக நடந்தான் தவசி. கண்மாய் நீரில் கால் வைக்கும்போது கரையிறங்கிக் கொண்டிருந்தார் ராமாயி ஆச்சி. செந்திப்பிள்ளையின் மனைவி. முகத்தின் இரண்டு பக்கமும் உண்டாக்கிய பெரும் துளைகளுக்கு கீழே பையின் கைப்பிடி போலத் தோன்றிய காதில், தோளைத் தொட எத்தனித்தபடி தொங்கிய தண்டட்டிகள் வேகமாக ஆடும்படி நடந்து வந்தார். தவசியைப் பார்த்ததும் அவர் முகம் மேலும் விகாரமாகிக் கருத்தது.
“இதுதான் வேலைக்கு வர்ற நேரமா. வேலைக்கு வர்றேனு முன்னாடியே நெல்லு வாங்குனாளே… ஒங்காத்தா. இப்பத்தான் அனுப்புனாளா. அதோட சின்னப் பயல வேற தூக்கிக்கிட்டு வந்திருக்கியே. வேலயப் பாக்க வந்தியா, இல்ல வெளயாட்டுக் காட்ட வந்தியா. வேலை மேல ஒரு மரியாத வேண்டாமா. எரும மாட்டு மேல மழ பேய்ஞ்ச மாறி நின்னாப் வேல ஆயிடுமா. ஒவ்வொருத்தரும் உச்சி வெயில் நேரத்துல வந்தா வேல கிலுகிலுன்னுதான் நடக்கும்…”
நிறுத்தாமல் வைது கொண்டேயிருந்தவரிடம் தவசியால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. அவர் இவனிடம் பதிலை எதிர்பார்த்த மாதிரியும் தெரியவில்லை. வாய் வலித்ததோ, வேறு வேலை நினைவுக்கு வந்ததோ கத்துவதை அப்படியே நிறுத்திவிட்டு அசைந்தபடியே சென்றுவிட்டார்.
மனதின் வேதனை உச்சத்தை அடைய கையின் வலியும் தாங்கமுடியாமல் ஆனது. நான்கடி தண்ணீருக்குள் நடந்தவர் கர்ணனை தொப்பென்று நீரின் மேல் போட்டான். தண்ணீர் குவிந்து உள்வாங்கி அவனை வாங்கிக் கொண்டது. விழுந்த வேகத்தில் உள்ளே அமுங்கியவனை மேலே எத்தியது. தவசி தான் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் கர்ணனை நீருக்குள் அமுக்கினான். தன்னுடலினுள் எழுந்த வேறொரு அரக்கனை தடுக்க முடியாமல், பயத்தோடு வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான். கர்ணன் அழுகையை நிறுத்திவிட்டு அண்ணனையே வெறித்துப் பார்த்தான். திகைப்பில் கைகால்களை உதறக்கூட இல்லை. நீருக்குள் முழுகியவுடன் கர்ணனுக்கு கண்களுக்குள் கருப்பாகவும் சிவப்பாகவும் வெளிச்சம் பாய்ந்தது. கண்கள் சொருகியது. கால்கள் அனிச்சையாக உதறிக்கொண்டது.
அந்தக் கணம் தவசியை எத்திவிட்டு கர்ணனைத் தூக்கினார் கந்தசாமி. அவன் தலையை தாழ்த்தி வாய் வழியாக நீரை வெளியேற வைத்தார். சிவந்த கண்களிலிருந்து நீர் வழிய இருமியபடி அண்ணனைப் பார்த்தான். எழுந்து நின்று நடந்த எதையுமே நம்ப முடியாமல் திகைத்து நின்றான் தவசி.
“தவசி… என்னப்பா ஆச்சு”
“அய்யா… என்ன நடந்துச்சுன்னே தெரியல. என்னன்னவோ நெனச்சுக்கிட்டு வந்தேன். இந்தப்பய வேற அழுதுகிட்டே இருந்தான். ராமாயி அத்தையும் ரொம்பத் திட்டிட்டாங்க. என்னவோ ஒரு ஆத்திரம் ஒடம்ப உலுக்குச்சு. என்ன நடந்துச்சுன்னே புரியலையா”
“சரி விடு. ஒவ்வொரு மனுசனுக்குள்ளேயும் ஒரு அரக்கன் இருக்கான். எப்ப எப்பன்னு காத்துக்கிட்டு இருப்பான். அவன் வெளிய வர்றதுக்கு நம்மளோட துளியளவு ஆசையோ விழைவோ போதும். ஆல விதை மொளச்சி பெருசா படர்ந்து பரவற மாதிரி எழுந்து வானத்த நெறச்சு எதிர்ல நிக்கும். பயத்தோட கையக்கட்டிக்கிட்டு ஓரமா நின்னு அது நிகழ்த்துறத வேடிக்க மட்டுந்தாந் நம்மால பாக்க முடியும்”.
“நல்ல வேள நான் வந்துட்டேன். விபரீதமா ஏதும் நடக்கல. இப்ப நடந்தத யாருக்கிட்டயும் சொல்லாத. இந்தப் பயகிட்டகூட. வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டா வீணா சங்கடம் வந்திடும்” என்று தோளில் தட்டிக் கொடுத்தவர் கர்ணனனையும் கொடுத்துவிட்டு “ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. ஒன்னும் சங்கடப்படாத” என்று சொல்லிவிட்டு நடந்தார்.
*
அண்ணன் கூறியதை மனதினுள் கண்ட கர்ணன் நீர் வழியும் முகத்துடன் இருந்த அண்ணனைப் பார்த்தார்.
“அதுக்கப்பறம் யோசிச்சு பாத்தப்ப தான் தெரிஞ்சது, அவரு செஞ்சது எவ்வளவு பெரிய காரியம்னு. ஒனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா நான் என்னவாயிருப்பேன். அப்பவே செத்திருப்பேன். இல்லைன்னா அதையே நெனச்சு பைத்தியமா ஆயிருப்பேன். நம்ப குடும்பம் ஒன்னுமில்லாம தண்ணியில கரைஞ்சி போயிருக்கும்.”
“நம்ம குலசாமி அவரோட ரூபத்துல அங்க வந்ததுன்னு நம்புனேன். ஆனா யாருக்கிட்டேயேயும் இதுவரைக்கும் சொன்னதில்ல. ஒன் அத்தாச்சிக்கி கூட இது தெரியாது” என்றபடி திரும்பி வாசலைப் பார்த்தார். அண்ணனின் கைகள் கர்ணனின் கைகளுக்குள் இருந்தன. கர்ணன் தன் கைகளால் அவர் கைகளை மெதுவாக தடவிக் கொண்டிருந்தார்.
“நேத்து சாயந்திரம் சும்மா படுத்திருந்தவர் எந்திரிக்கல. பக்கத்து வீட்ல இருக்கிற கமலாதான் வந்து சொன்னுச்சு. நாந்தான் ஊர் டிரஸ்டிக்கிட்ட பேசி எல்லாக் காரியத்தையும் செய்யறேன்னு ஏத்துக்கிட்டு செஞ்சேன்”.
“ஒன்னையும் வரச்சொல்லி போன் பண்ணலாம்னு நெனச்சேன். புதுப்பட்டிக்கு போயிதான் பேசணும். இத யாருக்கிட்ட சொல்லியும் பண்ணச் சொல்ல முடியாது. என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்ப தான் பெருமாளு செத்தான். எப்படியும் அதுக்கு வருவன்னு இருந்துட்டேன்”.
என்று நிறுத்தியவர் கர்ணனை நிமிர்ந்து நோக்கி “அவரு சமாதிக்கு போயி வணங்கிட்டு வந்திரு. அந்த ரெண்டுல…” என்று அவர் சொல்லும் முன்பாக கையை நீட்டித் தடுத்து “அதச் சொல்லாதீங்க. நான் அவரத்தான் வணங்கிட்டு வந்தேன்” என தீர்க்கமாக கூறிவிட்டு நகர்ந்த கர்ணனை திகைப்புடன் நோக்கினார் தவசி.
***