தமிழ் இலக்கியச் சூழலை சிலாகித்தல் என்கிற பெயரில் புகழ்பாடிக் கெடுப்பதற்கு ஆயிரங்கைகள் கொண்ட கார்த்தவீர்ய அர்ஜூனனாய் பெரும்பான்மையான எழுத்தாளர்களும், கவிஞர்களும் புகழ்பாடிக் கொன்று வருகின்றனர், பத்திரிக்கைகளோ மற்ற ஊடகங்களோ கேட்கவே வேண்டாம். இங்கே வெளியாகும் செய்திகளை விட வெளியாக்காத செய்திகளுக்கு தான் மதிப்பு அதிகம். ஆனால் நிலைக்கண்ணாடி வேறு எந்த கோணத்திலும் செய்திகளைச் சொல்லாது, அது பிம்பமாக இருந்தாலும் இதன் கோணம் என்றைக்கும் மாறாதது. புத்தகக்கண்காட்சிக்கு ஆள் வரவில்லை என்று ஒருவரோடு ஒருவர் குறைபட்டுக் கொண்டிருகையில், நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலை எத்தகைய போலியானது என்பதைத் துகிலுரித்துக்காட்டுகிறது. இந்த முகநூல் பதிவு, மலையாள எழுத்தாளர் திரு.அசோகன் சருவில் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் அளிக்கப்படும் மரியாதையை அப்பட்டமாக முன் வைத்திருக்கிறார். அசோகன் சருவில் – முகநூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது –
பிரபல மலையாள எழுத்தாளர் அசோகன் சருவில் அவர்களின் சென்னை புத்தகவிழா அனுபவம் .. அவர் முகநூலில் பதிவிட்டது (1 /08 /2017 ).
மிகவும் ரசிக்கத்தக்க ஓர் அனுபவம் . துளிகூடக் கற்பனையைக் கலக்காமல் எழுதுகிறேன்.
சென்னை புத்தக விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்னை மஹாநகரத்தில் சென்றேன் . வெளியே நல்ல சூடு . பகல் முழுதும் எழும்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வாசித்தும் முகநூலைப் பார்த்தும் நேரம் கழித்தேன். நம் முதலமைச்சர் திரு.பிணறாயி விஜயன் மஸ்கட் ஹோட்டல் அறையில் இருந்தும் ஊடக ஒளிப்பதிவாளர்களிடம் ” வெளியே போ” என்று ஆணையிட்டதுதான் நேற்றைய முக்கியச் செய்தி .
சாயங்காலம் ஐந்து மணிபொழுதில் புக் ஃபெயர் நடக்கும் ராயப்பேட்டை “வொய்.எம்.சி.எ” மைதானத்தைச் சென்றடைந்தேன். நூற்றுக்கணக்கான ஸ்டாலுகள் அணிவகுத்த மிகைவார்ந்த கலை-இலக்கிய உற்சவம். தமிழ் இலக்கியம் புத்தக-வெளியிடுதல் சிறப்பான ஓர் எதிர்காலத்தின் திருப்புமுனையில் என்பதை உணர்ந்தேன். “பாரதி புத்தகாலயம்” என்ற பதிப்பகம்தான் முன்னிலையில்.
நிகழ்ச்சி இனிதே தொடங்கியது . நிறைந்த அரங்கு . ஏராளமான எழுத்தாளர்கள் அரங்கில் கௌரவிக்கப்பட்டனர் . நாவலிஸ்ட் பிரபஞ்சன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர். அவர் என் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துபேசினார். தமிழில் மொழிபெயர்த்த என் சிறுகதைத்தொகுப்பு “இரண்டு புத்தகங்கள் ” அவரிடமிருந்தது .மலையாளமும் தமிழும் கலந்து நானும் கொஞ்சம் நேரம் உரையாடினேன். அதாவது பேசினேன் .
ஓ… இவரோட வீர சூரசெயல்களைச் சொல்லத் தொடங்கிட்டாரே .. என்று நினைத்து வாசிப்பதை நிறுத்திவிடாதீர்கள். இனிமேல்தான் சுவையான அந்நிகழ்வு வருகிறது.
அரங்கிலிருந்தும் நேராகக் கெஸ்ட் ரூமுக்கு சென்றேன். அங்கு நான்கைந்துபேர் என்னருகே வந்து பத்திரிகையாளர்கள் என்று தங்களை அறிமுகம் செய்தனர். எனக்குப் பெருமையாக இருந்தது. அதாவது மோசமல்லாத ஒரு சம்பவம் அல்லவா அது ? என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறினார்கள். பிரபஞ்சன் என்னைப்பற்றிக் கூறியவற்றைச் செய்தியாகப் போடப்போகிறோம் என்றனர். நானும் நன்றி சொல்லி அவர்களை வணங்கினேன்.
அதற்குப் பிறகும் அவர்கள் அங்கேயே தயக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்தனர். என்னிடம் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசவேண்டுமாம். ஒரு விபத்தின் நாற்றத்தை நான் உணரத்தொடங்கினேன். கேரளா முதலமைச்சரின் “வெளியே போ” என்ற விவாத பேச்சைப் பற்றியான கேள்வியோ ? எனக்குள் இருக்கும் அரசியல்வாதி திடீரென்று விழித்துக்கொண்டான். என்ன பதில் சொல்லலாம் ?
ஆனால் அவர்கள் சொன்னது மற்றொரு விஷயம். செய்தி நன்றாகப் போடுவதற்கான பிரதிபலனாக நான் அவர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டுமாம். இப்படியொரு ஏற்பாட்டைப் பற்றியான விபரத்தை நான் கேட்டதேயில்லை என்பதால் வியந்தேன். மிகுந்த அவமானம். உங்களின் விளம்பரம் எனக்குத் தேவையில்லை என்று கறாராகக் கூறினேன். ஆனால் அதில் ஒருவர் பவ்வியமாக வணங்கி, சொன்னார் “ஏதாவது கொடுங்க சார் , பயணக்கூலியாவது ..”
முன்பு அலுவலகத்தில் வேலைபுரியும் காலத்தில் என்னைப் பற்றித் தெரியாத சிலர் என் மேஜை மீது லஞ்சபணம் வைப்பார்கள். அப்போதெல்லாம் எனக்குப் பாதம் முதல் சிரஸ்ஸு வரை ஒரு நடுக்கம் வரும். வருடங்களுக்குப் பின் அதே நடுக்கம் இப்போது மீண்டும் . உச்சத்தில் அலறினேன் “வெளியே போ”
*
நிலைக்கண்ணாடியிலிருந்து