Monday, September 9, 2024

நிறப்பிரிகை

கவிதைக்காரன் இளங்கோ

டிக்  –   டிக்  –   டிக் –   டிக்  –   டிக்  –   டிக்…

மெட்ரோநோம் ஒரு நிமிடத்திற்கு ஐம்பது துடிப்பாகக் குறைக்கப்பட்டிருந்தது. நிமிடத்திற்கு அறுபது துடிப்பு என்கிற வழக்கத்தை விட வேறொரு லயத்தில் அந்த ஆலோசனை அறையை அது நிரப்பிக் கொண்டிருந்தது.

இடது பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்த அவளுடைய உடலுக்குள் இதயம் நன்றாக அழுந்தியபடி திணறிக் கொண்டிருந்தது. அங்கே வெறும் லப் டப் லப் டப் லப் டப்.. மட்டுமே. அதில் பிரபஞ்சத்தின் அடர்ந்து படருகின்ற இருட்டு. அதனுள்ளே கருஞ்சிவப்பு நிறத்தில் சினைமுட்டையின் கவுச்சி வாடை. ஜனன வாயிலின் கடைசி யுகம். முரண்பட்டு குறைந்த வேகத்திலும் தம் ஆதாரத் துடிப்பை இழந்திடாத லப் டப் அது. வெளியே துடிக்கின்ற டிக் டிக் ஒலிக்கும் உள்ளே துடிக்கின்ற லப் டப்பிற்கும் உள்ள சம்பந்தத்தையோ அப்படி அது உருவாகக் காரணமாக இருந்த சந்தர்ப்பத்தையோ ஒரே ஒருமுறை நினைத்துப் பார்த்துக்கொள்ள ப்ரியப்பட்டாள் டிஜோ. இமைகள் கனத்து விடுபட முடியாத ஆழத்துக்குள் பாதங்கள் புதையப் புதைய கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருந்த சாம்பல் பூத்த புல்வெளியை ஆச்சரியத்துடன் அவதானித்தவாறே மிருதுவான குரலின் கட்டளைக்கு அடிபணிந்து மேலும் மேலும் புதையத் தொடங்கினாள். தாறுமாறான எண்ணக் கலவைக்குள் பிசுப்பிசுத்த வார்த்தைகள் வெளியேறும் வழியற்று எங்கெங்கோ முண்டின. மொழி அலமலந்து அர்த்தங்கள் நீர்த்துப் போயிருந்தன.

அதனாலேயே நினைத்துப் பார்ப்பதற்குரிய அச்சந்தர்ப்பங்கள் அவளுடைய புலனுக்குள் கலங்கின வண்ணத்திலான பிம்பங்களாக பின்னோக்கி அலைந்தபடி இருந்தன.

ஓர் அமர்வுக்கும் அடுத்த அமர்வுக்கும் போதிய அவகாசம் முக்கியம் என ஏற்கனவே  உளவியல் மருத்துவர் புவன மீனாளால் அறிவுறுத்தப்பட்டிருந்தாள். மொத்தமாக தொண்ணூறு நாட்களுக்குள் பதினான்கு அமர்வுகள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறாள் டிஜோ. அதில் ஏற்கனவே பதினோரு அமர்வுகள் முடிந்துவிட்டது. இந்நிலையில் அவளுடைய போக்கில் மாற்றங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறாள்.

ஒருக்களித்தோ குப்புறவோ படுக்கக்கூடாது. மலர்த்தின நிலையில் உடல் மல்லாந்து தான் இருக்க வேண்டும். கைகள் இரண்டும் மடிந்த நிலையில் மார்புக்கூட்டிற்கு கீழே இருக்க வேண்டும். விரல்களை இறுகக் கோர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது. தளர்வுடன் இருக்க வேண்டும். ஆனால்.. உடலிலோ சவ நிலை இருக்கவே கூடாது. மனோவசியம் மூலமாக சிகிச்சை அளிக்கின்ற உளவியல் மருத்துவர், சிகிச்சைக்கு உட்படுகின்ற வாடிக்கையாளரின் புத்தி பேதலிப்பையோ இதயத் துடிப்பின் மாற்றத்தையோ கூர்மையாகக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இது போன்ற எளிய விதிமுறைகள் மனோவசிய சிகிச்சைக்கு அவசியமானவை. உளவியல் மருத்துவர்களில் ஆள் ஆளுக்கு அதன் வரையறை மாறலாம். அதே சமயம் ஓர் உளவியல் மருத்துவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து மனோவசியத்திற்கு உட்படுபவர்கள், பிசகிடாமல் பின்பற்ற வேண்டிய முக்கியமான அடிப்படைகள் அவை.

ஆனால்.. அவற்றை மீறுவதற்கான அனைத்துக் காரணங்களையும் சிறு சிறு குறிப்புகளாக ஏகத்திற்கு எழுதி குவித்திருக்கிறாள் டிஜோ. புவன மீனாளைப் பொறுத்தவரை  அவ்வெழுத்துக்கள் வெறும் காரணங்கள் அல்ல.. ஆனால் காரணங்களாக வரித்துக்கொள்ள போதுமானவை.

சற்று நேரத்திற்கு முன்பு அமர்வு முடிந்து கிளம்பும்போது மேஜைமீது அவள் எடுத்து வைத்துவிட்டுப் போயிருப்பது பதிமூன்றாவது குறிப்புப் புத்தகம். வெறும் அறுபத்தி ஏழு நாட்களில் நூறு பக்க அளவிலான பதிமூன்று குறிப்புப் புத்தகங்கள் என்பது புவன மீனாளுக்கு இந்த உளவியல் துறையில் தன்னுடைய இருபது வருட சேவையில் முதல் அனுபவமாக உள்ளது.

அத்தனையுமே கைப்பட எழுதியவை. கோழி கிறுக்கல் இல்லாத நைச்சியமான பொடி எழுத்துக்கள். ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடையே விடப்பட்டிருக்கும் வெளி அளந்து வைத்தது போல மில்லிமீட்டர் கனத்தில் இருந்தது. ‘வாட் எ பெர்ஃபெக்ட்!’ என்று நினைத்துக் கொண்டார் புவன மீனாள். குறிப்புப் புத்தகத்தின் எந்தப் பக்கங்களிலும் தேதியையோ நேரத்தையோ குறிப்பிட்டிருக்கவில்லை. அந்தத் துல்லியம் மட்டும் ஏன் தவறுகிறது என்பது ஆச்சரியத்தை வரவழைத்தது. கேட்கவும் தூண்டியது.

ன் என்று கேட்டதற்கு அவள் பதிமூன்றாவது குறிப்புப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தைத் திறந்து வைத்துவிட்டுப் போனாள். அந்தப் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த பதில்தான் தற்சமயம் புவன மீனாளை இந்த இரவின் குளிர்ந்த தனிமையில் மூன்றாவது பெக் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. வெண்ணிற பகார்டி ரம்மும் மாதுளை பழச்சாறும் நான்கைந்து ஐஸ் கட்டித் துண்டுகளும் சுண்டுவிரல் உயரத்திற்கு லேஹர் சோடாவும் நிதானமாக கலந்தடிக்கப்பட்ட விகிதத்தில் இந்த மூன்றாவது பெக் சுறுசுறுவென புத்தி முழுவதையும் அக்குபங்சர் ஊசியாகக் குத்தி மென்மையாக ஒரு தூக்குத் தூக்கி அவல மனத்தை எங்கெங்கோ மிதவையிடச் செய்திருக்கிறது.

‘இன்று.. நாளையின் வசம் இருப்பதால்.. நேற்றின் சாட்சியங்களை நேற்றே பதிவு செய்கிறேன். அதனாலேயே இன்று என்பது அசைய மறுக்கிறது. அங்கு நேரத்திற்கே இடமில்லை எனும்போது  தேதிக்கு என்ன கேடு?’

டிஜோ அவற்றை மறதியாக விட்டுவிடவில்லை. பிரக்ஞையோடு தான் புறக்கணிக்கிறாள். உச்ச போதை இன்னுமொரு பிரபஞ்சத்துக்குள் நீல நிறமாகச் சுழற்றி ஊற்றியது புவன மீனாளை.

“கிரேஸி பிட்ச்” என்று சொல்லிக்கொண்டார் சிரித்தபடி.

****

பின்னிரவு மூன்றரை மணியிருக்கும்.

இருபது வருடங்களுக்கு முந்தைய தம் கடிதங்களையும் டைரிகளையும் பீரோவுக்குள் இருந்து வெளியே எடுத்து வைத்துக்கொண்ட புவன மீனாள் அவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டிக் கொண்டிருந்தார்.

போதை மட்டுப்பட்டிருந்தது. எப்போது படுக்கையில் விழுந்தோம் என்கிற பிரக்ஞை இப்போது இல்லை. சிஸ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ஏழுமணி நேர பிரபஞ்ச இசைத்தொகுப்பு முக்கால்வாசியைக் கடந்திருந்தது. ஸ்பீக்கர் வால்யூமை இன்னும் கொஞ்சம் கீழிறக்கி வைத்திருந்தார். பழுப்பு நிறத்துக்கு மாறிப் போயிருந்த கடிதங்களையும் டைரியின் பக்கங்களையும் மடியில் வைத்துக்கொண்டு அவற்றை நோக்கமற்று புரட்டிக்கொண்டிருந்தார். சம்பவ அடுக்குகளும் அந்தந்த காலத்தின் எண்ண ஓட்டங்களும் மனக்கண்ணிற்குள் வந்து வந்து போயின. புரையோடிவிட்ட புண் பொருக்குத் தட்டிய பிறகு நிரந்தரத் தழும்பாக மாறுவதற்கும் முன்னே வலி ஒன்று மிச்சம் இருக்குமே அப்படியிருந்தது.

பக்கத்து மேஜைமீது டிஜோவின் அனைத்து குறிப்புப் புத்தகங்களும் சீராக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பதிமூன்றாவது குறிப்புப் புத்தகம் மட்டும் தனியாக இருந்தது. அதன் கடைசிப் பக்கம் விரிந்து கிடந்தது. புவன மீனாள் அதை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டார். அவரிடமிருந்து ஒரு புன்னகை வெளிப்பட்டு மறைந்தது.

அவருடைய அபிப்பிராயப்படி இன்றையக் காலக்கட்டத்தில் எழுதும் பழக்கத்தை வெகுவாக குறைத்துக்கொண்டுவிட்ட இளந்தலைமுறை எப்பேர்பட்ட விஷயங்களை தவற விடுகிறார்கள் என்பதை அத்தனை லேசில் கூப்பிட்டுப் பேசி புரிய வைக்க முடியாது. தொடர்புச் சாதனங்கள் பெருகிவிட்ட இந்த வாழ்க்கை முறையில் எல்லாமே எளிதாக மாறிக்கொண்டு வருகிறது.

ஆனால் இந்தப் பெண் டிஜோ என்ற ஜோஸஃபின் டிஸோசா அப்படியல்ல. அவளைப் பழமைவாதி என்றும் முடிவு செய்துவிட முடியாது. உடன்பிறந்தார் யாரும் இல்லாமல் தனித்து வளர்ந்த யுவதி. நவீன உலகின் சில விஷயங்களை அவளுடைய மனம் வெகு தீவிரமாக நிராகரிக்கிறது. அதனால்.. நட்பு, காதல், குடும்ப உறவு என எல்லாவற்றின் மீதும் கறாரான ஒரு மாற்றுப் பார்வையைச் செலுத்துகிறாள். அவளின் குறிப்புப் புத்தகங்களின் வரிகளில் கிளைப் பரப்பி விரிந்துகிடக்கும் எண்ணங்கள், சம்பவங்கள், கனவுகள், அவதானிப்புகள் என ஒன்றுவிடாமல் அவற்றை சாட்சியப்படுத்துகின்றன. அவளுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. இதுவரையிலான அவளுடைய ஒப்புதலின்படி குழந்தைப்பருவ பாலியல் சிதைவுக்கான அடையாளம் கிஞ்சித்தும் இல்லை. அவ்வாறான தொந்தரவுகளை அடைந்திராத பால்யத்தை அவள் கடந்து வந்திருக்கிறாளா என்கிற கேள்வி புவன மீனாளுக்குள் எழாமலும் இல்லை.

இப்போதைக்கு அவள் ஒரு, Exploring the Inner world வகையறா என்கிற முடிவுக்கு வரவேண்டிய அவசியம் புவன மீனாளுக்கு இருந்தது.

ஆனாலும் இப்படியான உளவியல் ஆலோசனைகளின் அளவுகோளின்படி டிஜோவும் ஒரு நோயாளி தான். அந்த நூலைத் தவறவிட்டுவிடக் கூடாது. இல்லையென்றால் சரியான பாதையில் பகுப்பாய்வு பண்ண முடியாமல் போக நேரிடும். அதில் புவன மீனாள் கவனமாக இருந்தார். உளச்சிக்கல்கள் மட்டும் என்றென்றைக்கும் தம் ஆதார வடிவை மாற்றிக்கொள்ள மறுப்பவை என்பது அவரது பாலப்பாடம். அந்த ஆதார வடிவமோ வெவ்வேறு கோணங்ககளைக் கொண்டிருப்பவை. அதில் காலத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

டிஜோவுடைய பொருளாதார சுதந்திரம் அவளைச் சில முடிவுகளைத் தைரியமாகவும் தீர்க்கமாகவும் எடுக்க வைக்கிறது. இச்சமூக முன்னேற்றத்தில் இதுவொன்றும் புதிதல்ல. யாரையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயங்கள் இல்லாத புள்ளியில் இருந்துதான் இதுபோன்ற சுய மாற்றுப் போக்குகள் உற்பத்தி ஆகின்றன. அதன் காரணிகள் யாவற்றையும் உபப்பொருளென மனங்கொள்ள வேண்டிய அவசியம் தன்னைப் போன்ற உளவியல் ஆலோசகருக்கு நிச்சயமாக இருந்தாக வேண்டும். அதன் முக்கியத்துவத்தை தன்னுடைய தனிப்பட்ட சொந்த வாழ்விலிருந்தே கடந்துவந்திருக்கும் காலத்தின் வழியாக புவன மீனாள் நிறையவே அனுபவப்பட்டிருக்கிறாரும் கூட.

இதில் செல்ஃப் ஹிப்னாஸிஸ் எனப்படுகிற சுய மனோவசியத்தை செய்து பழகுவதற்கு புவன மீனாளைத் தொடர்ந்து நச்சரித்து சம்மதிக்க வைத்துவிட்டாள். டிஜோவின் விஷயத்தில் சிகிச்சைக்குரிய வாடிக்கையாளர் என்பதையும் தாண்டி ஏனோ அவருக்கு அவளைப் பிடித்துவிட்டது. விளைவாக அவருடைய வழிக்காட்டுதலில் ஏற்கனவே இரண்டு அமர்வுகளைத் தனியாகத் தொடங்கியும் விட்டாள்.

அக உலகின் அனைத்துவிதமான ஆபத்து விளிம்புகளையும் தொட்டுப் பார்த்துவிடத் துடிக்கும் அந்த இளம் பெண்ணிடத்தில் புவன மீனாள் அவ்வப்போது தன்னையே சில சமயங்களில் அடையாளங் கண்டதுமுண்டு.

அந்த வகையில் தொழில்முறையைத் தாண்டி.. டிஜோவின் புத்தகக் குறிப்புகளின் தொடர் வாசிப்பு புவன மீனாளை தம் இருப்பை, சூழலைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கச் செய்துகொண்டிருந்தது. தன்னுடைய கடந்த காலத்தின் மிச்சங்களை சற்றே திரும்பிப் பார்த்துக்கொள்ள ஓர் ஆவலைத் தூண்டியுள்ளது. ரொம்பவும் தனிப்பட்ட ஓர் உளத் தீண்டலாகவும் அமைந்திருந்தது.

புதுவகையான போதையாக மாறிவிட்டிருந்தது.

****

கடிதம் எண் – 1:

1995, நவம்பர் மாதம்.

டியர் மீனாள்!

ன்னையும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு நட்பின் அளவை நிர்ணயிப்பது எது என்பது எனக்குத் தெரியாது. உன்னைப் போல் அதை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு எனக்குத் திறனும் கிடையாது. நாளைய சமூகத்துக்கு நீ மிக முக்கியமான ஆள். அதை நாங்கள் ஒருங்கே உணர்ந்து இருக்கிறோம். உன்னைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். நீ ஓர் அபூர்வ பிரஜை.

தேவ், ஒன்றுவிடாமல் அனைத்தையும் என்னிடம் சொல்லியிருக்கிறான். நீ அவனுக்கு கொடுத்த முத்தத்தை மட்டும் அல்ல.. அவனுடைய வலது புஜத்தில் சிவந்து இருக்கும் லவ் பைட்டையும் காண்பித்தான். உன்னுடைய இரண்டு பல் தடங்கள் அதில் ஆழப் புதைந்திருக்கிறது. அதில், தேவ் மீதுள்ள உன்னுடைய ப்ரியம் தெரிந்தது. நிறைய பொறாமையாகவும் இருந்தது. அன்றைய இரவு அவனுக்கு லேசான ஜூரம் கூட வந்துவிட்டது. அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவொரு சிறு அனல் கொதி. ஒரே ஒரு பாரஸட்டமைல் கொண்டு மட்டுமே அந்த ஜூரத்தை ஏமாற்றிவிட முடியவில்லை. நான் அவனுக்கு உதவி புரிந்தேன். நாற்பது நிமிடங்களுக்கு ஒருமுறை நன்கு சுட வைத்த வெந்நீர் ஒரு டம்ளர் நிறைய குடிக்க குடிக்க அது ஜூரத்தை மெது மெதுவாக இறக்கியது. அதன் வீரியத்தை கட்டுப்படுத்தியது. ஹோமியோபதி மற்றும் அக்குபங்சர் இரண்டிலும் இந்த சுடுதண்ணீர் பரிந்துரை உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விஷயம் அதுவல்ல.

ஜூர அனத்தலில் அவன் என்னுடைய உள்ளங்கையை தன் உள்ளங்கையோடு கோர்த்துக்கொண்டு அவனுடைய மார்பின்மீது வைத்துக்கொண்டான். அரை கான்ஸியசில் போர்வைக்கு உள்ளே இழுத்துக்கொண்ட அந்த இணைக் கைகளில் அப்போதுதான் சில்லிடத் தொடங்கியிருந்த அவனுடைய உடலின் வியர்வையை நான் ஸ்பரிசித்த நொடியில் முழுமையாக உடைந்தேன். தேவ்வின் மேல் எனக்கு என்னுடைய முதல் ஈர்ப்பு அங்கே தொடங்கியது. அதை அந்நொடி கண்டுபிடித்தேன்.

மீனாள்.. எனக்குத் தேவ்வையும் பிடித்திருக்கிறது. அவனுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. வீ ஆர் இன் லவ். அவன் மனம் ஒரு முனை உன்னை நோக்கியும் இன்னொரு முனை என்னை நோக்கியும் பெண்டுலமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதை நீயன்றி வேறு யார் புரிந்துகொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை.

தேவ் தயங்குகிறான். ஆனால் எனக்கு உன்னிடம் சொல்லியாக வேண்டுமாக இருக்கிறது. இதனை நீ புரிந்துகொண்டாய் தானே?

காதலுடன்

ராகவ்

டைரியிலிருந்து..

கடிதத்தின் நகல் எண் – 2:

1996, ஏப்ரல் மாதம்.

அன்பு மாலினிக்கு..!

நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத ஒன்று நடந்திருக்கிறது. வலி என்றால் என்ன என்று துல்லியமாகத் தெரியும் எனக்கு. எலும்பு வரையில் தாக்கப்பட்டதை போன்ற வலி அது. மஜ்ஜை எல்லாம் நைந்து ரணமாகி லேசில் ஆறிட மறுக்கின்ற குணம் உள்ள வலி. அதை நீதான் எனக்கு வாழ்வில் முதன்முதலாக பரிசாகத் தந்தாய் அன்பே. கொடுமையானது.. இரவும் இரவில் தனிமையும். அதனினும் கொடியது மனம் பொத்தி வைத்து பாதுகாத்து நினைவூட்டுகிற ஆணின் வாசனை. எனக்கு ராகவ்வின்மீது நட்பைத் தாண்டி வேறு அபிப்பிராயங்கள் இருந்ததில்லை. உன்னை மீறி.. உன்னைத் தாண்டி.. தேவ்வை மட்டும் தான் நான் உளமார நேசித்தேன். வேட்கை கூடி மனம் இழைந்து உடலைப் பகிர்ந்துகொண்டேன். அது கொச்சை ஆகின்ற விஷயம் அல்ல. நீ அறிவாய். மனம் புடைத்து தவித்துக்கிடக்கிற காதலின் குவி மையம் அது. எனது ஆழ்ந்த மௌனத்தின் கதகதப்பு. அதை எழுதி மாய முடியாது மாலினி. பல கிலோமீட்டர் தாண்டி இருக்கிற உன்னைச் சொடக்கு போடும் நொடிக்குள் பார்த்திட முடியுமென்றால் உன் மடிக்குள் புதைந்துகொள்ள துடித்துக் கிடக்கிறேன் இங்கே.

அவர்கள் இருவரின் காதலுக்கு நான் எப்படி முட்டுக்கட்டையாக இருக்க முடியும்! ஆனால் மூவரும் ஒருவரென வலம் வர முடியாது அல்லவா. இச்சமூகம் அதற்கான இடைவெளியை இன்னும் உண்டுபண்ணவில்லை. அதற்கு மேற்கு உலகில் அல்லவா பிறந்திருக்க வேண்டும். அவையெல்லாம் இங்கே ஜஸ்ட் லைக் தட் நடந்திட அவற்றைப் பார்க்கவோ அல்லது அனுபவிக்கவோ இன்னும் முப்பது வருஷங்கள் தேவைப்படலாம். நிறைய உயிர் பலிகள் காலக்கணக்கில் சேர்ந்தாக வேண்டும். எனவே.. நான் விலகி விட்டேன்.

என் உடன்பிறந்துவிட்டதால் நீ எனக்கு வெறும் அக்கா அல்ல. உற்ற தோழி. நேசம் குழைத்து எனக்கு அனைத்தையும் ஊட்டம் கொள்ளச் செய்த என்னுடைய அந்தரங்க தாதி. எனக்கே என்னை, என் உடலை அங்கம் அங்கமாய் உணர்ந்திட உதவிய தேவதை. ஆனால் மாலினி! இப்போது இக்கணம்.. இந்தக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்ற இந்த இரவில் நான் அனைத்திலிருந்தும் என்னை விலக்கி கொண்டுவிட்டேன். என் பணி வேறு. பயணம் வேறு. இந்தக் கோடை என்னை சுட்டுப் பொசுக்கட்டும். நான் பாம்பே போகவிருக்கிறேன். இம்முறை நான் சென்னை வரப்போவதில்லை.

அடுத்த குளிர் காலம் தொடங்கும்போது உன்னுடைய அட்வான்ஸ்ட் ஹிப்னாஸிஸ் பிராக்டீஸ் மொத்தத்தையும் தூக்கி கிடாசிவிட்டு என்னை வந்து சேரு. எனக்கு நீ வேண்டும். நீ மட்டுமே வேண்டும் மாலினி. உன்னைப் போல் ஒருத்தி எனக்கு ஆயுசுக்கும் போதும்.

இனி நீ வேறு யாரையும் லவ் பண்ணிவிடாதே ப்ளீஸ்.

பேரன்பின் முத்தங்களுடன்

மீனாள்

*****

பிடிக்குள் சிக்காத காற்றாகப் போக்குக் காட்டி நழுவும் துளியூண்டு சில்லிடலை தேநீரின் ஆவி பறக்கும் எவர்சில்வர் டம்ளரின் விளிம்பில் ஒரு கணம் அனுபவித்தாள் டிஜோ. ஒரே ஒரு கணம் தான். மிக நுண்ணியது அது. ஜென் போல நழுவிக் கொண்டோடிவிட்டது.

மெட்ரோநோமின் டிக் டிக் ஒலி காதோர நரம்பு மண்டலத்துக்குள் நுணுக்கமாக ஒன்றை இசைத்துக்கொண்டே இருந்தது. அந்த ஒன்றை இன்று எட்டிப் பிடித்துவிட விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால் அதற்கான ஒத்திசைவு எவ்வளவு சாத்தியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதை அறியாள். அதில்தானே அதற்குரிய கிளர்ச்சி இருக்கிறது என்பதும் அவளுக்குத் தெரியும். அதனை அரைப் பூரணமாகவாவது அனுபவிக்கும் வழக்கத்துக்குள் உடல், மனம், ஆன்மா என மூன்றும் வந்துவிட்டிருந்தது. அவளுக்கு வெறுமனே ஓரிடத்தை நோக்கும்போதே திசைகள் மென்மையாகச் சுழன்றன.

காலி தேநீர் டம்ளரை மேஜையில் வைத்தாள்.

தன் படுக்கை அறையின் ஜன்னல் தாண்டி இறங்கிக் கொண்டிருக்கும் வெயிலின் கிரணங்களை வடிக்கட்டி அறைக்குள் அனுப்பிய அகன்ற திரைச்சீலையில் எம்பிராய்டரியால் தரித்த மலர்கள் நெளிந்தன. ஒரு பகலே நெளிந்ததைப் போலிருந்தது.

“அதெல்லாம் பாம்பு குட்டிகள் இல்லையா?”

“இல்லை”

புவன மீனாளின் குரல் மண்டையோட்டு பரப்பை ஊடுருவி மூளை மடிப்புகளின் அனைத்து மின்னோட்ட கணுக்களிலும் அலையலையாகப் படர்ந்தது. குட்டியூண்டு ப்ளூடூத் பட் அவளுடைய இரு காதுகளுக்குள்ளும் மடல்களின் மடிப்புக்குள் பாந்தமாக புதைந்து இருந்தன. டிஜோவின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து உதவிட புவன மீனாளின் குரல் அவளுக்குள் ஒத்திசைவாகிவிட்டிருந்தது.

மேஜையில் இருந்த மடிக்கணினியின் சிறிய திரையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது உளவியல் மருத்துவர் புவன மீனாளின் துல்லியமான பிம்பம். அதனூடே தெரிந்த அவருடைய தனி அறையின் பின்னணி இளநீல நிறத்தில் இருந்தது.

இந்த ஏற்பாடே ஓர் அபத்தம் தான் என்பதை அவரும் நன்றாகவே உணர்ந்திருந்தார். இது போன்ற தருணங்களில், அமர்வுகளில் எதிர்மறை குணாதிசியம் உள்ள எந்தவொரு மனமும் உடைவுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஒரு குற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. ஆனால் டிஜோவின்மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.

இப்படி சுயமாய் ஹிப்னாஸிஸ் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்ட டிஜோவின் அபரிமிதமான அறிவாற்றலுக்கு குறுக்கே நின்று தடுப்பதில் பிரயோஜனமில்லை என்பதை தனிப்பட்ட அனுபவத்தில் தெளிந்திருந்த புவன மீனாள் அவளுக்குரிய சின்னஞ் சிறிய உதவிகளை செய்யத் தீர்மானித்திருந்தார். தொழில்முறை குணத்திற்கும் அப்பாற்பட்டு ஏதோ ஒரு வகையில் அவருக்கும் இந்த அவதானிப்பு தேவையாக இருந்தது. அது தார்மீகத்தைக் கடந்த ஒன்று.

ஒரே ஒருமுறை மாலினியின் நினைப்பு மனத்துக்குள் மௌனமாக வந்து போனதில் அவரிடமிருந்து பெருமூச்சொன்று வெளியேறியது.

இன்றைய காலத்தின் நவ யுவதி ஒருத்தியை முழுமையாக அவதானித்துவிடுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல என்று பலத் துறை நிபுணர்களும் ஒப்புக்கொண்டுவிட்ட விஷயம். அதில் ஒரு மூத்த உளவியல் சிகிச்சையாளராக, ஆலோசகராக தன்னுடைய பங்கு என்னவென்று மனத்துக்குள் அவ்வப்போது மூளும் கேள்விகளுக்கான பதில் எப்போதும் பூஜ்ஜியம் தான். அவரைப் பொறுத்தவரையில் அனைத்து உளவியல் யூகங்களுமே பூஜ்ஜியத்தன்மையை தான் பூண்டுள்ளன. அதனாலேயே அவற்றால் இறுதி தீர்மானங்களை வழங்க முடிவதில்லை.

“ஆனா பாம்புகள் என்னை வளைச்சு நெரிக்கலை. தலையில என்னை இருத்தி வச்சு இருட்டுக்குள்ள ஒளியூட்டி அங்குமிங்கும் அலையுது. வசியத்துக்கு உள்ளே இருக்கும்போது எனக்கு எப்பவுமே எல்லாமே அசையுது”

“எல்லாமேன்னா?”

“எல்லாமே தான்.. இந்த அறை. அந்த நாற்காலி. திறந்திருக்கற ஜன்னல் இடுக்கு வழியா தெரியிற நகரம்.. இந்தப் பொழுது.. அதன் வண்ணம்ன்னு ஒட்டுமொத்தமாவே அசையுது”

“அவ்வளவு தானா?”

“உங்க குரலும் கூட அசையுது டாக்..”

புவன மீனாளின் கட்டளைக்குரல் ஒரே ஒரு வினாடி திகைத்தது. உடனே சுதாரித்துக்கொண்டு..

“நொடியின் வேகத்தை இன்னும் கொஞ்சம் குறைச்சி பார்ப்போமா?”

“ம்.. எவ்வளவு?”

“40-ல் வைச்சிக்கோ”

சொல்லிவிட்டு புவன மீனாள் அங்கே வாடிக்கையாளர் கோப்பில் குறித்துக்கொண்டார். இங்கே டிஜோ தன்னுடைய மெட்ரோநோமில்.. BPM -ஐ 40 ஆக மாற்றி வைத்தாள்.

இப்போது.. டிக்  –  டிக்  –  டிக்  –  டிக்  –  டிக்… ஒலியானது பிரம்மாண்டத்திற்கும் சற்று முன்னதாக எல்லைக் கிழித்து நின்றது போல அங்கேயே நொண்டியடித்தது. அதில் ஒரு தவிப்பு தொனிப்பதை உணர முடிந்தது. மெதுவாக ஓர் உஷ்ணம் ஆனால் இதமான உஷ்ணம் அந்த அறையின் ஏதோ ஒரு மூலையில் அதிரகசியமாக உருக்கொள்ளத் தொடங்கியது. அதை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை. அது ஓர் உணர்வு, அவ்வளவுதான் அதன் எல்லை என்பதைப் போல.

மடிக்கணினித் திரையில் புவன மீனாளை சிறிய சதுரத்திற்குள்ளாக்கினாள் டிஜோ. டக்கென்று மடிக்கணினியை எதிர்பக்கமாகத் திருப்பி வைத்துவிட்டாள். அதனால் புவன மீனாளால் டிஜோவை பார்க்க முடியவில்லை. இந்தப் பிரத்யேக சுய மனோவசிய அமர்வில் அவருக்கு அவளுடைய கண்களைச் சந்திக்க வேண்டுமாக இருந்தது. கட்டளைகள் கட்டுக்குள் இருப்பதற்கான வழி அது.

ஆனால்.. இம்முறை ஏனோ டிஜோ அதனைத் தவிர்த்துக்கொண்டாள். அவளுக்கோ புவன மீனாளின் குரல்வழி கட்டளைகளே போதுமானதாகத் தோன்றியது. இரண்டு மனங்களின் தனித்தனி தேவைகளை அந்தப்பொழுது முன்னும் பின்னும் அசைத்தும் அசைக்காமலும் இழுத்துப் பிடிப்பதைப் போல இருந்தது அச்சூழ்நிலை.

இந்த அதிஅற்புத டிஜோ தன்னோடான அமர்வுகளை முடித்துக்கொண்டு சீக்கிரமே காணாமல் போய்விடுவாள் என்பதை புவன மீனாள் யூகித்திருந்தார். ஓர் உளவியல் ஆலோசகர் – வாடிக்கையாளர் என்று பார்க்கும்போது அது இயல்பானதே.

ஆனால்.. ஆனால்.. தன்னுடைய அந்தரங்க மனத்துக்குள் ஒரு துடிப்பு புதிதாக உதயம் ஆகியிருப்பதை சமீபக் காலங்களில் அவதானித்திருந்தார். வாழ்வின் முக்கியமானத் தருணங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இப்போது தான் நின்றுகொண்டிருக்கும் நிலை என்ன என்கிற கேள்விகள் புதிய முகம் கொண்டு தனிமைகளில் தீ ஜூவாலையைப் போல மூள்கின்றன. அவற்றை எதிர்கொள்ள மனத்தளவில் நிறைய பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. தனி நபர் சார்ந்த ஒரு திறந்த உரையாடல் தேவைப்படுகிறது.

வேறு போக்கில்லாமல் அல்லாடலின் முடிவில் எப்போதும் மதுவே தஞ்சம் என்றே ஆகிவிடுகிறது. இல்லை அதுவல்ல பாதை. அப்படியல்ல அதற்குரிய பதில்கள்.

திருப்பி வைக்கப்பட்ட மடிக்கணினியின் லென்ஸ் புவன மீனாளுக்கு டிஜோவின் படுக்கை அறையின் ஜன்னல் திரைச்சீலையைக் காட்டிக்கொண்டிருந்தது. அத்திரைச்சீலையோ காற்றில் மென்மையாக அசைந்தவண்ணம் இருந்தது. அதன் அசைவையே வைத்த கண் எடுக்காமல், இமைக்காமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் மஞ்சள் நிற வெளிச்சப் பரப்பு நீளவாக்கில் மடிந்து மடிந்து அடர்த்தியான சாம்பல் நிற நிழல்களைக் கோடுகளாக்கி இருந்தது. அத்திரைச்சீலை, தன்னுடைய  பார்வையை மெல்ல மெல்ல ஓர் அழுத்தத்துடன் ஈர்த்துக்கொள்ளத் தொடங்கியதை உணர ஆரம்பிக்கும்போதே அதில் சிறிய பாம்புக் குட்டிகள் நெளிவதைப் பார்த்தார். ஏதோ சொல்ல நினைத்த நினைப்பு வார்த்தையாக வடிவம் பெற மறுத்தது. உறைந்திருக்கும் பார்வையை அதிலிருந்து அகற்றிக்கொள்ள முடியவில்லை.

டிஜோ தன்னை வசியம் பண்ணுகிறாளோ என்கிற சந்தேக எண்ணம் ஒன்று பட்டென்று  பிரக்ஞைக்குள் வந்து நின்றது. நின்ற வேகத்தில் மறைந்தது. மீண்டும் தோன்றியது. மீண்டும் மறைந்தது. அடுக்கடுக்காக போக்குக் காட்டியது.

அதன்பிறகு டிக் –  டிக் –  டிக் –  டிக் –  டிக்….  ஒலியின் காலவெளி எங்கோ இருள் மண்டிய பாதாளத்திற்குள் பிடித்திழுத்தது. நாற்பது நொடியின் துடிப்பிலுள்ள நிதானம் தாங்கவொண்ணா துயரத்தை அள்ளித் தெளித்தது. மனம் பொங்கியது. துக்கம் ஒன்று பாறாங்கல்லென ஆழத்திலிருந்து மேலேறி வந்து இதயத்தின்மீது மோதியது. பல முகங்கள் நுரைத்துப் பொங்கின. தேவ், ராகவ், மாலினி, சுகன், மைத்ரேயி, ஆண்டனி, சுதா, மாத்தையா, வீராக்குட்டி, சித்ரஞ்சன், மெர்லின் பாவ்லோ, ரஜீவன் மல்ஹோத்ரா, எட்வீன் மச்சோடா, அமர் ஹூஸைனி, அட்டி ஹக்கீய்ன், நளின் சித்தார்த், மாலிகா, ரீத்து, மனோஹர் புனித், ஹர்ஷினி தீப்தா, நீலிக் கண்ணன், தாட்சாயிணி, அம்பிகா, நிகில் சுரேஷ்…

திடீர் காற்று உப்பலில் திரைச்சீலை உயர்ந்து பாம்புக்குட்டிகள் அத்தனையும் தன்மீது சிதறி விழுந்து உடலெங்கும் ஊர்ந்து போவதை இமைக்காமல் உறைந்தபடி பார்த்திருந்தார் புவன மீனாள்.

“மேம்.. மேம்..!”

யாரோ அழைக்கிறார்கள். படுக்கையில் ஆடைகள் நீக்கப்பட்ட தன்னுடல் நிர்வாணமாக கிடப்பதை தெரிந்துகொள்ளும்போதே கண்களில் இருந்து கண்ணீர்த்துளி இரண்டு பக்கமும் வழியத் தொடங்கியது. நானே என்னைப் பார்க்கிறேனா என்கிற குழப்பம் எழுந்தது. கண்ணீர் வழிதல் நிற்காமல் பெருகியது. ஒளி மங்கிக்கொண்டே வந்து புலனுக்கு எதுவும் சிக்காத நிலை உருவாகி இருந்தது. காற்றை மட்டுமே உணர்ந்த உடல் லேசாக வியர்த்தும் இருந்தது. ஜன்னல் வழியே புகுந்து வந்த காற்று மேனியில் படப் பட வியர்வையும் அதற்கு ஈடாக உகுத்த வண்ணம் இருந்தது. இரண்டுமே ஓயவில்லை. மனம் ஊசாலிடியது. அழுகையும் நிற்கவில்லை. விசும்பல் எதுவும் இல்லாத, வாயே திறவாத ஓசையற்ற அழுகை. நினைவில் நிற்க மறுக்கிற அழுகை. காலத்தின் சரடுகளை முன்னும் பின்னுமாக உருட்டித் திரட்டி நைந்து போகச் செய்கிற அழுகை. பாம்புக் குட்டிகள் தலைக்கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறி முகத்தின் குறுக்கே நழுவி இறங்கி உடலையொட்டி கோடு வரைந்ததைப் போலச் சூழ்ந்து கிடந்தன.

“டாக்டர்.. டாக்டர்..! என்னைப் பாருங்க.. இங்கப் பாருங்க.. கேன் யூ ஹியர் மீ? மேம்..!”

டிஜோவின் முகம் மட்டும் அந்த இருளுக்குள் ஒளிர்ந்து சட்டென படுக்கையருகே தோன்றியது. அம்முகத்தில் இருப்பதென்ன? அப்படியொரு சாந்தத்தை இதுவரை எங்குமே கண்டதில்லையே. என்னே ஒரு பேரமைதி! இது அவள்தானா? அவளேதானா? அய்யோ அந்தப் புன்னகையின் கதகதப்பில் இந்த உயிரை விட்டுவிட்டால் தான் என்ன? எங்கிருந்தாய் இத்தனை யுகங்கள்? என்னைத் தேடி அலைந்தாயா பெண்ணே? நீ எனக்கான தேவதை அல்லவா? யூ ஆர் மை ஸ்வீட் பிட்ச் அல்லவா! இந்தப் பாம்புக் குட்டிகள் இதுகாறும் எங்கே மேய்ந்துகொண்டிருந்தன? எனக்காக நீ அள்ளிக்கொண்டு வந்தாயா? அவை என் உடல் முழுவதும் ஓர் இண்டு இணுக்கை விட்டுவைக்காமல் தீண்டித் தீண்டி என்னை மலர்த்துகின்றதே. நானறிந்திடாத எந்த பாதாளத்தின் ரகசியம் அவை? எப்பேற்பட்ட மௌனத்தை அவற்றுக்கு ஊட்டி வளர்க்கிறாய் சொல்? இத்தனை எளிமையாக உன் ஜன்னலின் திரைச்சீலைக்குள் ஒளிந்துகொண்டு அவை வெளிச்சத்தோடு சதா அசைந்துகொண்டே இருக்கின்றதே. அக்காட்சியைக் காட்டத்தான்.. காட்ட தான்.. என்னை அழைத்தாயா? என்னைத் தேடிக் கண்டுபிடித்தாயா? சொல் தாயே நீ தானே என்னை ஆட்கொள்ள வந்திருக்கும் எனது இனிய காமாக்கினி?

ட்டென எல்லாம் வெளிச்சமாகியது. அப்பழுக்கற்ற, நிர்மலமான வெண்ணிற வெளிச்சம். புவன மீனாள் வியர்வையில் குளித்திருந்தார். அவருடைய அறையின் குளுமை தோற்றுப் போயிருந்தது. திரையில் தெரிந்த டிஜோ மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக்கொண்டிருந்தாள். ‘ஆர்.. யூ ஓகே? மேம்! ஆர்.. யூ ஓகே?’ மெல்ல சுதாரிப்புக்கு மீண்ட புவன மீனாள் மனத்துக்குள் பித்தேறி அலைக்கழித்த தோற்றமாயைதனை உடனடியாகத் தொழில்புத்தியிலிருந்து புரிந்துகொண்டவிட்டார்.

மெட்ரோநோமின் டிக் – டிக்.. கட்டுக்குள் இருந்தது.

“ஐ’ம் நாட் ஓகே ஜோஸஃபின்.. எனக்கு உன் உதவி தேவை. இன்னைக்கு சாயந்தரம்  நீ என்னோட சென்டருக்கு வந்துட்றியா? எல்லா அப்பாயின்ட்மெண்ட்ஸயும் கேன்ஸல் பண்ணிடுறேன். இது நமக்காக.. ப்ளீஸ்”

எதிர்முனையில் காணொளி திரைக்குள் சற்றுநேரம் அமைதி காத்தாள் டிஜோ. மறுத்துவிடுவாளோ என்கிற சிறிய பரிதவிப்பு இங்கே புவன மீனாளிடம் இருந்தது.

‘ஓகே டாக்..’ என்று எப்போதும் போல் அவரைச் சுருக்கமாக விளித்து மையமாகத் தலையாட்டினாள் டிஜோ. அப்போது கோடளவு புன்னகை ஒன்று அவளது இதழ்க்கோடியில் உயிர்த்திருந்தது.

“தாங்க் யூ ஸோ மச்”

*****

டைரியிலிருந்து..

கடிதத்தின் நகல் எண் – 1:

1995, டிசம்பர் மாதம்.

ப்ரியம் நிறைந்த தேவ்..!

பிராக்டீஸ் பண்ண நான் பாம்பே போகிறேன். என்னைத் தேட வேண்டாம். டெல்லி குளிரின் கதகதப்பிற்கு நீ இருந்தாய். உனக்கோ நான் மட்டுமே இல்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். ராகவ் எல்லாவற்றையும் விபரமாக எழுதி இருந்தான். ரொம்பவே வலித்தது. இதயம் உடைவதை யார் தான் விரும்புவார்கள்? ஆனால் நேசத்தை அன்பை பங்குப்போட்டு கொள்வது என்பது எனது இயல்புக்கு ஒத்துவராத ஒன்று. சமயங்களில் நான் பாறையைப் போல இறுக்கமாகக் காணப்படுவதாக சில நேரங்களில் நீ சொன்னதுண்டு. அது எனது சுபாவம். அதனைக் கண்டு நீ பயந்துவிட்டாயோ என்னவோ. எனக்கது தெரியவில்லை. என்னுடைய மௌனத்தின் அடர்த்தியை எப்போதும் அறிந்தே வளர்கிறேன். அதன் வெளிப்பாடு உவப்பானதாக இருக்க வாய்ப்பில்லை தான். இதையெல்லாம் தானே நாம் விரும்பி படித்த சைக்காலஜியில் அறிந்து வைத்திருக்கிறோம். சுய பரிசோதனை என்றுமே ஒரு வதை தான் இல்லையா? எனக்கான இணையை இனி நான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அதற்கு முதலில் என்னுடைய பிராக்டீஸை உருப்படியாக முடித்தாக வேண்டும். முடிப்பேன். அதுவரை யாருமே எனக்கு நிரந்தரமாக வேண்டாம் என்றே தோன்றுகிறது. தெரியவில்லை. இந்த எண்ணம் பின்னாட்களில் மாறலாம். யாராவது என்னை ஈர்க்கலாம். உத்திரவாதங்களை நோக்கி கனவு காணக்கூடாது என்பதிலும் உறுதி அதிகமாகி இருக்கிறது.

ஆனால் தேவ்.. இந்தப் பாறைக்குள் கசிந்துருகும் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை. வற்றாது. அதனை நான் பாதுகாப்பேன். ஆனால் இனி நீங்கள் இருவரும் எனக்கு வேண்டாம். என்னைத் தேட வேண்டாம். என்னுடைய இருப்பிடம் தேடிவந்து என்னை கன்வின்ஸ் பண்ண முயல வேண்டாம். அடுத்து நான் ஆஸ்திரேலியா அல்லது லண்டன் போய்விடுவேன். நடுவே இந்தியாவுக்குள் எங்காவது செமினார்களில் அகஸ்மாத்தாக காண நேர்ந்தால் கூட ஜஸ்ட் கடந்துவிடவே விரும்புகிறேன். அதையே நீயும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ட்ரேன்ஜ் திங்ஸ் ஹாப்பன்ஸ் இன் ஸ்ட்ரேன்ஜ் வேஸ்.. இல்லையா..? இந்தக் கடிதத்திற்கு எந்த பதிலையும் எழுதி வைத்துக்கொண்டு தனியாக அல்லல்பட வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் அது ரொமாண்டிக்ஸில் வராது.

லெட்ஸ் க்ளோஸ் த புக்.

மனப் பாரங்களுடன்

மீனாள்

                டைரியை மூடிவைத்தார் மீனாள். முகத்தில் யோசனை ரேகைகள் மண்டிக் கிடந்தன. இந்தத் தனிமையில் அவருக்கு மதுவின் போதை தேவையாக இல்லை. இப்பகலின் வெளிச்சம் தன்னைக் குடித்துக் கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கைப் பார்த்திருந்தார்.

*****

டிஜோ தன்னுடைய தோள் வரையில் தொங்கிக்கொண்டிருந்த தலைமுடியை பாப் கட் பண்ணியிருந்தாள். ஒரு மதிய வேளைக்கும் இந்த மாலை நேரத்துக்கும் நடுவிலேயே எத்தனையோ மாற்றங்களை நடத்திக்கொள்ள ஒரு சுயம் அனுமதிக்கிறது. கணினி வழி நேரலை அழைப்பின்போது மதியம் அவளிடமிருந்த தோற்றம் இப்போது வேறாக இருந்தது. அவளுடைய உருவ அமைப்பின் பொருட்டு தன் காட்சிப்புலனில் ஒரு தொடர்ச்சியைப் பிடித்துக்கொண்டு பேச்சைத் தொடங்க சற்றே திணறினார் புவன மீனாள். இது வேறு யாரோ. புதியதாக வந்திருக்கிற வாடிக்கையாளர் அல்லது நோயாளி. இல்லவே இல்லை! இது டிஜோ என்ற ஜோஸஃபின் தான். இந்தப் பெண் என்னை என்னவோ செய்கிறாள்.

அவசரமாகக் கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். மீண்டும் வியர்த்துவிடுமோ என்கிற பயமும் நெஞ்சுக்குள் லேசாக அதிர்ந்தது. டிஜோ எப்போதும் போல சாவதானமாக உட்கார்ந்திருந்தாள்.

இவள் ஒரு புதிர்.

“ஏதோ உதவின்னு சொன்னீங்க டாக்..”

புவன மீனாள் சற்றே நிதானத்திற்குள் வர சிரமப்பட்டார். ஆனால் பரிவான அந்தக் குரல். அது பரிவு தானே!

“ஆர் யூ ஆல்ரைட் டாக்..?”

“ம்”

டிஜோ மேலும் அமைதி காத்தாள். அவளுக்கு நிறைய நேரம் கைவசம் இருப்பதான தோற்றத்தில் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவளது முதுகெலும்பு மட்டும் அச்சில் வார்த்தது மாதிரி நேர்க்கோட்டில் இருந்தது. ஆனால் உடற்தசைகள் தளர்வுடன் காணப்பட்டன. அணிந்திருந்த நவீன மேலுடையில் இறுக்கம் இல்லை. அது அவளுடைய உடலைப் பிடித்து வைத்துக்கொள்ளவில்லை. அடர் நீல நிறத்தில் ஒரு முக்கால் கை மேலுடை அது. வரிசையில் முதல் பித்தானை போட்டிருக்கவில்லை. வெண்ணிற கழுத்து கீழிறங்கி மார்பு பள்ளங்களுக்குள் ஓடி மறைந்தது. சீரான மூச்சின் ஏற்றத் தாழ்வில் குறைத்துவைக்கப்பட்ட மெட்ரோநோமின் லயம் போல இருந்தது.

“எனக்கு என்ன ஆச்சி டிஜோ?”

“மாலினி யாரு?”

இந்த எதிர் கேள்வியை புவன மீனாள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. சரசரவென ஒரு திணறல் உற்பத்தி ஆயிற்று. தலைக்குள்ளே சுரப்பிகள் கொப்பளித்தன.

“மா.. மாலினி!?”

“நீங்க அந்தப் பெயரைச் சொல்லி ஏதேதோ சொன்னீங்க.. அப்புறம் அழுதீங்க.. மாலினி யாரு?”

“வாட்! அழுதேனா?”

“டூ யூ மிஸ் ஹர்?”

“மை காட்.. மை காட்..! என்ன சொன்னேன் டிஜோ? என்ன சொன்னேன்? மை காட்”

“எனக்கு எந்தக் காரணத்தாலயும் நான் இப்ப ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கற செல்ஃப் ஹிப்னாஸிஸ நிறுத்தக்கூடாதுன்னு தோணுது டாக்டர். நீங்க சொல்லுங்க.. அப்படி ப்ராக்டீஸ் பண்றதுல சர்வ நிச்சயமா சிக்கல்கள் இருக்கு தானே? எனக்கு சிக்கல்கள் இல்லாத விஷயங்கள்ல நாட்டம் கிடையாது”

“அதை கவனம் பண்ணிக்க வேணாம். யூ கோ அஹெட். ஆனா.. நான் என்ன சொன்னேன்? ஏதாவது உளறலா இருந்திருக்கும். ஆனா.. நீ என்னைக் கட்டுப்படுத்தறன்னு செஷன் நடுவுலயே புரிஞ்சுக்கிட்டேன். என்னை நான் விலக்கிக்கலை. என் மனம் உன்னோட வசியத்துக்குள்ள சாய்ஞ்சிருச்சி. ஒரு கட்டத்துல நான் என்னை முழுமையா ஒப்படைச்சிட்டேன்ல..?”

“ம்.. ஆமா..  ஆனா.. உதவி கேட்டீங்களே”

“எனக்கு நீ அதை ஏற்கனவே ஓரளவு பண்ணிட்டன்னு நினைக்கிறேன் டிஜோ”

“எப்படி!?”

புவன மீனாள் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். அறையின் ஜன்னல் அருகே போய் மார்புக்கு குறுக்கே கைக்கட்டி நின்று கொண்டார். திரையை விலக்கி வெளியே பார்த்தார். தலைக்கு மேலேயிருந்து குளிர்ந்த காற்று வழிந்து இறங்கியபடி இருந்தது. இளநீல நிற திரைச்சீலை வெளிச்சத்தை வடிகட்டி அவர் மீது படர்ந்ததில் ஓர் ஓவியம் போல இருந்தார். அவருக்கு படபடப்பு சற்று குறைந்தது மாதிரி இருந்தது. மேஜையில் இருந்த டிஜோவின் நோட்டுகளில் ஒன்றை எடுத்துக் காட்டிவிட்டு அங்கேயே வைத்தார்.

“உன்னோட நோட்ஸ் வழியாவே நீ உன்னை முழுசா எனக்குள்ள இறக்கி வச்சிட்டன்னு நேத்து இரவு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு அப்புறம் எதையுமே புறக்கணிக்க வேண்டாம்னு பட்டுச்சி”

“இந்த மொமெண்ட்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டாக்..”

டிஜோ முதல் முறையாக அகலமாய் புன்னகைத்தாள். உதடுகள் விலகி அழகிய சீரான பல்வரிசை தெரிந்தது.

“ஹ்ம்ம்.. வாழ்க்கையோட ஒரு பெரும் பகுதி ஹ்யூமன் பிஹேவியரல் ரிசர்ச்ல போச்சி. மிச்சம் மீதி கொஞ்சம் சலிப்புல போச்சி. வண்ணமயமான நினைவுகளோட நிறம் பழுப்பேறி போயிருக்கறதை நேத்து ராத்திரி எடுத்துப் புரட்டிக்கிட்டிருந்தேன். மனம் நிலை கொள்ளல. அதுதான் எப்பேற்பட்ட காடு! அதுக்கான பாதைய உன்னோட நோட்ஸ் தான் போட்டுக் கொடுத்திச்சி.. தேங்க் காட்..”

“நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்”

“மாலினி என்னோட அக்கா. அவளை ரொம்ப நேசிச்சேன். டீப் லவ். இப்பவும் இருக்கு. பத்திரமா இருக்கு அந்தக் காதல். அவளோடயே ஒட்டிக்கிட்டு உலகம் பூரா சுத்தி சுத்தி ஒரு நாள் செத்துப் போயிடணும்னு நினைச்சிருந்தேன். ப்ச்..”

“ஏன்? என்னாச்சு?”

“அவ.. அவ.. ஒரு ஆளக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. சராசரி பொம்பளையா மாறி குழந்தை பெத்துக்கிட்டா. நார்மலான சிஸ்டத்துக்குள்ள மாட்டிக்கிட்டா. நான் அவளையும் விட்டு விலகி ஓடிக்கிட்டே இருந்தேன். இலக்குகள் இல்ல. நெஞ்சை அடைக்கிற துக்கம் இருந்திச்சி. ஆனா.. சில வருஷம் கழிச்சி அவ எப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு என்கிட்டேயே ஆலோசனை வேணும்னு வந்து நின்னா. பைத்தியக்காரி.. அப்பவும் அவளுக்கு என்கூட அட்டாச் ஆகிக்கணும்னு தோனல. யூ நோ.. சைக்காலிஜில அவ எனக்கும் சீனியர். அதுவும் ஹிப்னாடிக்ஸ்ல.. ப்ச்.. என்ன ப்ரயோஜனம்? ஏனோதானோன்னு ட்ரை பண்ணின செல்ஃப் ஹிப்னாஸிஸ்ல என்னமோ கோளாறு ஆகி.. வெளிய வரமுடியாம அதுக்குள்ளேயே சிக்கிக்கிட்டா..”

ஒரு கணம் நிறுத்தி அவருடைய தலை குறுக்கே அசைந்துகொண்டது.. பார்வை மேஜையின் மீது நிலைக்குத்தி இருந்தது. பின்.. நிதானித்து மேலே தொடர்ந்தார்.

“..இப்ப நான் உன்கிட்ட கேட்ட மாதிரி அவ என்கிட்டே ஹெல்ப் மீன்னு கேட்டா டிஜோ. ஒரு கட்டத்துல கதறினா.. பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்திச்சி. எப்பேற்பட்டவ! என்ன மாதிரியான ஆளு. ச்சே..”

டிஜோ அசையாமல் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இது ஆக்சுவலி ஒரு டையிங் ஆஸிலேஷன்.. லிவ்விங் எமோஷன்ஸ விட கொடூரமானது”

“எப்படிச் சொல்றீங்க?”

“லோன்லிநெஸ் ஒரு டெவில்னு சொல்லுவாங்க. யூ நோ தட்.. அங்கே ஆரம்பிக்கும் எல்லாமே. அதான் டவுன் ஃபால். ரொம்ப நிதானமா மில்லி மீட்டர் அளவுல பரபரப்பே இல்லாம ஒரு கணக்கைத் தொடங்கி வைக்கும். அழுத்தத்தையும் புழுக்கத்தையும் வெக்கையோட அனுபவிக்கிற வயசோட வீரியம் அது. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொன்னு. புதுசு புதுசா. வேற வேறயா அனுபவிக்கத் தவிக்கிற ஆர்வம் அது. சிலருக்கு குடி. சிலருக்கு வீட் மாதிரியான போதை வஸ்து. எனக்கு.. அப்போ செக்ஸ். ஹ்ம்ம்.. அதுலயும் இடிபஸ் காம்ப்ளக்ஸோட சல்லி வேர்.. த இன்செஸ்ட்.. என் உடன்பிறந்தாளோட உடல் மேல எனக்கிருந்த ஈர்ப்பும் வேட்கையும்.. அது புது மாதிரியா இருந்துச்சி.. அந்த ஈர்ப்பு மாலினிக்கு பிற்பாடு என் மேல இல்லாமப் போச்சி. அஃப்கோர்ஸ்.. அத அவத் தான் என்னோட பதின் வயசுல எனக்கு அறிமுகப்படுத்தினா.. உடலை ரகசியமா தீண்டி பார்க்கிறதுல இருக்கற சுகம்.. அப்போ அது வேற மாதிரியான போதையா இருந்துச்சி. படிப்பெல்லாம் அப்புறம் தானே? முதல்ல மனுஷன்.. ரத்தமும் சதையும்ங்கறத தாண்டி அதொரு உணர்ச்சி கிறக்கம். வெறும் விடலைத்தனமான விஷயமா மட்டும் அப்போ அத எடுத்துக்க முடியல.. ஆனா.. ஆனா.. அவ அவளோட இளமைப்பருவத்துக்கு சீக்கிரமா நகர்ந்திட்ட போது என்னை சட்டுன்னு நடு காட்டுல விட்டுட்டா. அப்படித்தான் பட்டிச்சி.. துரோகம் மாதிரி மனசு பூரா வலி. ரொம்பவே திணறிப் போயிருந்தேன். எனக்கு அப்போ மேற்படிப்பு வேற. தொலைவுல இருந்தேன்.. கம்ப்ளீட்லி நார்த் ரீஜன். டெல்லி. அதிகக் குளிர். அநியாயத்துக்கு தனிமை. அதை ஈடுகட்ட அதுக்காகவே வலுகட்டாயமா வரவழைச்சிக்கிட்ட ஒரு காதல் இருந்தது. புடிச்சுப் போயி தான் ஓகே பண்ணிக்கிட்டேன். சரியா ரெண்டு வருஷம் ரொம்ப நல்லாருந்தது. மாலினிக்கு எல்லாமே தெரியும். ஒன்னு பாக்கி வைக்கல அவகிட்ட.. எல்லாத்தையுமே பகிர்ந்துக்குவேன். எனக்காக அவளும் சந்தோஷப்பட்டா.. ஆனா அந்தக் காதல் கைவிட்டுப் போச்சி..”

டிஜோவின் பார்வையில் இமை தாழ்ந்த ஒரு சாந்தம் பெருகியது. புருவச் சுழிப்பில் கவனித்தலின் கூர்மை வெளிப்பட்டது. கண் முன்னே ஒரு சக உயிரியின் பெருவாழ்வு பரந்து விரிந்து தன்னுடைய புத்தியை ஆக்டோபஸ் போல வளைத்துப் பிடிப்பதை நொந்தவளாகக் காணப்பட்டாள்.

புவன மீனாளுக்கோ தனது செய்கை ஆச்சரியத்தைத் தந்திருக்கக் கூடும். ஆனால் அதையெல்லாம் யோசிக்கும் கட்டத்தை அவர் தாண்டிவிட்டிருந்தார். மனம் லேசாகிக் கொண்டே வருவதையும் உணர்ந்தார்.

இவள் ஒரு டெவில்தான். மடை திறந்துவிட்டதைப் போல ஒன்று விடாமல் எல்லாவற்றையும் இவளிடம் சொல்லுகிறோமே.. என்றிருந்தது.

“…தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்ல இங்கே எல்லோருக்கும் தேர்வு முறை இருக்குல்ல? பர்ஸப்ஷன்ஸ் இருக்கு. அதைத்தானே படிச்சோம். ப்ராக்டீஸ் பண்ணிணோம். அப்புறம் எதுக்கு அதோடேயே கிடந்து மல்லுக்கட்டணும்னு ஒரு நாள் யோசிச்சேன். அதுவொரு தூக்கம் கெட்ட இரவு. மனசுக்குள்ள எந்த முனைக்கு ஓடிப் போய் நின்னாலும் அங்க ஒரு முட்டு சந்து இருந்தது. கிளிஷேவான பொம்மை வாழ்க்கைய வாழ மனசு கடைசி வரைக்கும் ஒத்துக்கவே இல்லை. ஆனா மாலினிக்கு அதான் வேணும்.. அந்த எண்ணத்தை விட்டு அவளை வெளியே கொண்டு வர என்னால முடியல. அவளாலயும் தானா வெளியே வர முடியல. அட்லாஸ்ட் தற்கொலை பண்ணிக்கிட்டா.. ஹூப்ப்ப்..! குளியல் தொட்டிக்குள்ள மணிக்கட்டு நரம்புகளை ரெண்டு கையிலயும் வெட்டிக்கிட்டு சொட்டு சொட்டா தீர்ந்து போயிருந்தா.. இதெல்லாம் அதுலத்தான் போய் முடியும்னு தெளிவா தெரிஞ்சும் என்னால ஒன்னுமே பண்ண முடியல. அது ஒரு கொடூரமான நைட்மேர்.. பிரியத்துக்கு உரியவங்க அம்போன்னு சாவறத தடுக்க முடியாத கையாலாகத்தனம். அது தர்ற வலி. அது கிளர்த்துற வடு இருக்கே.. ப்பா.. தாங்கி மாளலை..”

அவருக்குள் கேவல் ஒன்று வெடித்து நினைவுகளோடு உள்ளுக்குள்ளே கசிந்தது. மனத்தின் புழுக்கம் ஆவேசமாக முடியாமல் பொங்கி அமுங்கியது. குமுற முடியாமல் தவித்துத் தளும்பியது.

“தப்புத்தானே ஜோஸஃபின்..? நீ சொல்லும்மா தப்புத்தானே?”

“தப்புத்தான்..”

“அவ என்னோட வந்திருக்கணும் தானே? மஹாராணி மாதிரி வச்சி பார்த்திருப்பேனே.. அந்த மாலினி.. என்னோட பாதி, என்னோட கதகதப்பு, என்னோட தாய், என்னோட குழந்தை, என்னோட உடம்பு, என்னோட மூப்பு.. அவ.. அவ.. அந்த நாயி.. அவ என்னோடவே வந்திருக்கணும் தானே டிஜோ..?”

டிஜோ மெல்ல தன் இருக்கையை விட்டு எழுந்து புவன மீனாளை நெருங்கி நின்றாள். அவளிடமும் லேசான ஓர் உதறல் இருந்தது. மெதுவாக அவருடைய வலது கையை எடுத்து தன் உள்ளங்கைக்குள் பொத்திக் கொண்டு அந்த இணைக் கைகளை தன் மார்பின் மீது கிடத்திக் கொண்டாள்.

“வந்திருக்கணும் தான் மீனாள். வந்திருந்திருக்கணும். இன்னும் கூட கொஞ்சம் சீக்கிரமாவே வந்திருந்திருக்கணும்”

அதிர்வே இல்லாமல் அவருடைய கண்களைப் பார்த்து மிக மென்மையாக அதைச் சொன்னாள்.

பெண்டுலம் ஒன்று முன்னும் பின்னுமாக சமநிலையைக் குலைத்துவிட்ட துடிப்பின் மோனத்தோடு அந்தச் சூழ்நிலையின்மீது எதிரொலித்தபடி இப்பிரபஞ்சத்தை கோலி குண்டாக்கி அடர்ந்த இருளுக்குள் அதைச் சுண்டிவிட்டது.

லப் – டப்…   லப் – டப்…  லப்  – டப்…  லப்  – டப்…

*****

விதைக்காரன் இளங்கோ – கணையாழியின் துணையாசிரியராகப் பணிபுரிகிறார். இவரது படைப்புகள்: பனிகுல்லா, மோகன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி, கோமாளிகளின் நரகம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும், திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: elangomib@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular