Thursday, December 5, 2024

நியமம்

ஜா.தீபா

ந்தப் புன்னகையில் இருந்து வாசுகி தன்னை விடுவித்துக் கொண்டாள். பிளாட்ஃபார்ம் நடுவே நின்றுகொண்டு மின்சார ரயில் எழுப்பும் கனத்த ஓசையினூடே மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள். இப்போதும் அந்த புன்னகையின் சாரம் அப்படியே இருந்தது.

ஒரு விசேஷ நாளில் சுற்றமும் நட்பும் சூழ, மத்தியில் அந்த இளைஞன் இராமநாதன் இந்தப் புன்னகையைத் தந்திருக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இருந்தே தனியாக அவனைக் கழற்றி சுவர்களில் ஒட்ட வைத்திருக்கின்றனர். அவனது முகத்தை அந்தப் புன்னகையைக் கொண்டே நினைவில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் அது தனக்கு உதவியாக இருக்க முடியாது என்பதையும் தெரிந்து கொண்டாள்.
தேடப்படுபவர்களாக தன்னை மாற்றிக் கொள்கிறவர்கள் முதலில் செய்வது புன்னகையைத் தொலைப்பதுதானே என வாசுகி நினைத்துக் கொண்டாள். இராமநாதனின் முகம் ஒருவித அப்பாவித்தனத்தைக் கொண்டிருந்தது. வேறு ஒரு அடையாளமும் கூட வேண்டி இருந்ததால் அவள் இராமநாதனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“விடைத்த மூக்கு” என்பதில் கவனம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். தனக்கு எளிதில் அறிய முடிந்த ஒருவரின் மூக்கோடு அதனைப் பொருத்திக்கொள்ள முடிந்தது அவளால். சுவரொட்டியில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை அலைபேசியில் பதிவு செய்தாள். மின்சார ரயில் வந்து நின்றது. ஏறியதும் உட்கார ஜன்னலோர இருக்கைக் கிடைத்தது. அலைபேசியை கவனிக்க விரும்பிய ஒரு பயணியை அலட்சியம் செய்து பதிவுசெய்து வைத்திருந்த எண்ணை அழைத்தாள்.
அழைப்பு உடனடியாக ஏற்கப்பட்டது. “சென்னையிலேருந்து பேசறேன். என் பேர் வாசுகி. ரயில்வே ஸ்டேஷன்ல காணவில்லை நோட்டிஸ் பார்த்தேன்.

“இராமநாதனைப் பத்தி எதுவும் தகவல் கிடைச்சுதா?”

“நீங்க?” சிறு சொல்லுக்கும் அதிக மூச்சு வாங்கும் அறுபது வயதான பெண்ணின் குரல் அது.

“நான் வாசுகி. இராமநாதன் கிடைச்சிட்டாரா? எனக்கு அவரப்பத்தி எதுவும் தெரியாது. ஆனா ஏதாவது உதவி செய்யணும்னு விருப்பப்படறேன்.”

சிறு கேவல் எழுந்தது.

“நேத்து தான் இராமநாதனை அடக்கம் பண்ணோம்”

“ஓ! அது இராமநாதன் தானா?”

“என்னது?”

“நீங்க அடக்கம் பண்ணினது இராமநாதனைத் தானே? நல்லாத் தெரியுமா?”

எதிர்முனை திகைத்து அமைதியானது. வேறு யாரோ ஃபோனை வாங்கியிருந்தார்கள்.

“யாருங்க வேணும்?”

“சார்… இராமநாதன் காணவில்லை போஸ்டர் பார்த்தேன்…”

அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

வாசுகி அலைபேசியில் இராமநாதன் என்று பதித்திருந்ததை அதன் தொடர்பு எண்ணோடு சேர்த்து அழித்தாள். அலைபேசியை தன் பைக்குள் வைத்துக் கொண்டாள். கூடையில் இருக்கும் பாட்டிலில் இருந்து எஞ்சியத் தண்ணீரைக் குடித்தாள். பல்லாவரம் தொடங்கி கடந்துபோகும் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் இராமநாதன் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே வந்தான்.

வாசுகி எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கினாள். அங்கிருந்து அலுவலகம் செல்ல பதினைந்தே நிமிடங்கள் தான். இன்னமும் நேரம் இருந்தது. எல்லா நாட்களிலும் அவளுக்கு இந்த நேரங்கள் வாய்க்கின்றன. இந்தப் பொழுதுகளுக்காகவே தான் ஒவ்வொரு தினத்தையும் அவள் கழிக்கிறாள். அவளது வேலை ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தில். அவர்கள் தரும் தாள்களில் இருந்து எழுத்துகளைத் தட்டச்சு செய்து உரிய நேரத்தில் தரவேண்டும். கவனம் கூடுகிற வேலை பிசகக் கூடாது. இயந்திரத்தனமாக செய்யக்கூடிய வேலையும் தான்.

வாசுகி தனது கைப்பையினைத் திறந்தாள். ஜிப் கிழிந்துபோய் நாட்களாகியிருந்தன. சில காகிதங்களும் கொஞ்சம் சில்லறைகளையும் தவிர வேறொன்றுமில்லாத அந்தப் பைக்கு அவள் ஊக்குப்பின் தைத்து மூடியிருந்தாள். அதன் உள்ளேயிருந்து ஒரு சிறிய குறிப்பு நோட்டினை எடுத்து வைத்துக் கொண்டாள்.

அதில் “எக்மோர் ஸ்டேஷன்” என அவள் எழுதியிருந்த இடத்தில் “நூர் ஆபுதின்” என்ற பெயர் அழகாக எழுதப்பட்டிருந்தது. அவளுடைய கையெழுத்தின் நிதான வடிவம் அது. அதன் கீழ் வரிசையாக சில பெயர்கள், எண்களுமாக முத்துக்கோர்த்தது போல கிடந்தன. அவளுடைய விரல்களின் கோணல்களுக்கு மாறாக உருட்டிச் செதுக்கப்பட்ட எழுத்துக்கள்.

குழாயிலிருந்து தண்ணீரை தேவைக்குப் பிடித்துக் கொண்டாள். பிறகு நாளிதழ்கள், புத்தகங்கள் விற்கும் கடையின் முன்பாக போய் நின்றாள். சிறிய கூட்டம். அந்தக் கடை முன்பாக முழங்கால் படிய தரையில் அமர்ந்தாள். அவளுடைய செயலினால் அங்கு நின்றிருந்த ஓரிரண்டு வாடிக்கையாளர்கள் சற்றுப்பதறி விலகினார்கள். ஒருவர் அவள் செயலை அசிரத்தையாக கவனித்தார். அவள் தொங்கவிடப்பட்டிருந்த நாளிதழ்களின் போஸ்டர்களை விலக்கினாள். பின்புறத்தில் கடைச்சுவரின் அடியில் “நூர் ஆபுதின்” என்ற பெயரைத் தாங்கியிருந்த சுவரொட்டி மீது வெளிச்சம் பட்டது.

எழுபது வயதினைக் கொண்டிருந்த நூர் ஆபுதின் கூட்டத்தில் விலக்கப்பட்ட ஒரு குழந்தையின் பார்வையைக் கொண்டிருந்தார். அவரது கண்களைப் பார்த்தாள். அவை பல்லாங்குழிக்குள் கிடந்தன. மூக்கு வளைந்திருக்கிறது என்பதை மனக்குறிப்பில் வைத்துக் கொண்டாள். முன்பற்கள் எடுப்பானவை. முன்தினம் பார்த்தபோது கூட குறிப்பில் வைத்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. முடி கொட்டிப்போய் விட்டது. வைத்திருந்த காலத்தில் கோரைப்புல்லின் தூக்கல் கொண்டவையாக இருந்திருக்கலாம். உற்றுப் பார்த்தாள். நடுநெற்றியில் வெட்டு இருப்பது இப்போது தான் தேசலாய்த் தெரிகிறது.

வாசுகி கண்களை மூடிக்கொண்டாள். நூர் ஆபுதினை நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவானவை ஒவ்வொன்றாக நம்பிக்கைக்குள் வந்தன. கடைக்காரர் நின்று கொண்டிருந்தவருக்கு அவசியமானதைக் கொடுத்துவிட்டு குதித்து வெளிவந்தார்.

“என்னம்மா வேணும்? தெரிஞ்சவரா?” என்று கேட்டார்.

“இல்லை” என்பதை மட்டும் தலையாட்டிவிட்டு வாசுகி அங்கிருந்து நகர்ந்தாள். கடைக்காரர் ஒருமுறை குனிந்து நூர் ஆபுதினை பார்த்துவிட்டுப் போனார். காணாமல் போனவர்களின் முகங்கள் வாசுகிக்குப் பாடமாகியிருந்தன.

வாசுகி எக்மோர்ஸ்டேஷனின் மற்ற நடைமேடைகளுக்குச் சென்றாள். கூட்ட நெரிசல் குறைவாக இருக்கிற நேரம். ஒவ்வொரு முகமாக கவனத்துடன் பார்த்துக்கொண்டே நடந்தாள். தவிப்பும், கலக்கமும், அச்சமும், எதிர்பார்ப்பும், பூரிப்புமாக பலமாதிரி கடக்கும் முகங்கள் அவை. இதுபோன்ற நேரங்களில் வாசுகி மனிதர்களுக்கு சற்றுத்தள்ளி அமர்ந்து கொள்வாள். தன்னுடைய பார்வையை மட்டும் அகலாமல் வைத்திருப்பாள்.
இப்போதெல்லாம் “இவர்கள் காணாமல் போனவர்கள்தானா?” என்பதை நிமிடங்களிலேயேக் கூட தனது அனுபவத்தால் வாசகியால் கண்டு கொள்ள இயலுகிறது. சென்னையில் இப்படியாக இந்நான்கு வருடங்களில் எட்டு பேரை அவள் குடும்பத்துடன் அனுப்பியிருக்கிறாள்.

இப்படிதான் நரிக்குறவர் சமூகம் சார்ந்த நான்கு வயது சிறுமியை மீட்டுத் தந்ததில் அவளுடைய பெயர் ஒரு வார இதழில் வந்திருந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து ரயிலில் தனியே சென்னை வந்து சேர்ந்திருந்த அந்த சிறுமி வெகுநேரமாக அழுதபடி நின்றிருந்தாள். வீடில்லாத குழந்தை நினைத்த இடத்தில் அழ முடியும் என்று எல்லோரும் நினைத்திருக்கக் கூடும். வாசுகி அப்படி நினைக்கவில்லை. யாரும் பொருட்படுத்தாத அந்த நரிக்குறவச் சிறுமியின் அழுகை அவளை அன்று நகரவிடாது செய்தது.

பயணப் பெட்டிகளோடும், அவசரத்தோடும் மக்கள் அவரவர் பயணத்திற்குள் ஆழ்ந்திருந்தார்கள். பெற்றோர் யாரும் இல்லாத இடத்தில் ஒரு குழந்தை வீறிட்டு அழுவது கவனம் ஈர்க்க அல்ல, தன் கையறு நிலையின் உச்சத்தை வெளிப்படுத்த என்பதை வாசுகி யோசிக்காமலேயே புரிந்து கொண்டாள்.

தன்னிடமிருந்த பைசாவில் ஒரு ஆரஞ்சு மிட்டாயும், பட்டர் பன்னும் வாங்கிக் கொடுத்தாள். அது தனக்கு பிச்சை எதுவும் வேண்டாம் என்பது போல நின்றது. “எனக்குப் பசிக்குது” என்று பட்டர் பன்னை பிய்த்து ஒரு கடி கடித்தாள். சிறுமி அவள் அருகில் வந்தது. மீதமிருந்த பட்டர் பன்னையும் கூடவே தண்ணீரையும் குடித்த பிறகு சிறுமி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

விவரம் சேகரித்து சிறுமியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனாள். சிறுமி சொன்ன விவரத்தின்படி பெற்றோரிடம் ஒப்படைத்தாள். அவர்கள் பலவாறு நன்றி சொன்னார்கள். முந்தைய தினம் மாலையில் இருந்தே சிறுமியைத் தேடுவதாகவும், அவர்கள் கொடுத்த புகாரைக் காவல் நிலையம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் சொன்னார்கள்.

இன்றைய தினம் எந்த முகமும் காணாமல் போன முகமாக இல்லை. அவள் தன் அலுவலகம் நோக்கி நடந்தாள். நடக்கையில் சரஸ்வதி அம்மாளின் மகள் என்று பதிவு செய்யப்பட்டிருந்த எண்ணிற்கு ஃபோன் செய்தாள். இவளுடைய போனை எடுத்ததும் சரஸ்வதி அம்மாளின் மகள் “இப்பக் கூட அவரும் நானும் ஸ்டேஷனுக்கு போயிட்டுத்தான் வர்றோம்.” என்றாள். எந்த உபகார வார்தைகளுமற்ற உரையாடலாக இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தத் தேடல்.

“உங்கம்மா சாயல்ல யாரப் பார்த்தாலும் பக்கத்துல போய்ப் பாத்துட்டு தான் வர்றேன்… இன்னிக்குப் பாத்த ஒருத்தங்களுக்கு கூட உங்க அம்மா சாயல் கொஞ்சம் ஒத்துப் போச்சுது… ஆனா அவங்க இல்லை. உங்க அம்மாவுக்கு நல்ல மேட்டு நெத்தி இல்ல?” என்றதும் சரஸ்வதியின் மகள் விசும்பினாள். வாசுகி ஃபோனை அணைத்தாள்.

சாலையின் ஓரமாக வந்து பைக்குள் இருந்த காகிதக்கட்டில் சரஸ்வதி அம்மாளின் நோட்டிசைத் தேடி எடுத்தாள். மேட்டு நெற்றியும் கூர் மூக்கும் கொண்ட சரஸ்வதி அம்மாளை அவள் அந்தக்கால நடிகை ராஜகாந்தத்தின் சாயலோடு நினைவில் இருத்தியிருந்தாள்.

வாசுகிக்குக்குக் கூட நடிகை சினேகாவின் சாயல் இருப்பதாய் எப்போதும் சொல்வான் சிவகுரு. வாசுகி அதை நம்பியதில்லை. “வாசுக்கா நீ சிரிக்கும்போது பாரேன்… இப்படித்தான் இருக்கே…!” என்பான். கடைக்குப் போய்விட்டு வரும் வழியில் “ஆனந்தம்” பட போஸ்டரில் சிநேகா அவளைப் போல் சிரித்துக் கொண்டிருந்தார். “போடா அவங்க சிரிப்பு எவ்வளவு அழகு?”

“ஆமாக்கா.. நீயும்.!”

வாசுகி சிவகுருவின் கைகளைத் தன்னோடு இணைத்தபடி கடைத்தெருவில் நடப்பாள். சிவகுருவுக்கு கூச்சமாக இருக்கும். அவன் லேசாக விலகுவான். சிவகுரு சென்னைக்குப் படிக்கப் போகிறான் என்பதில் வாசுகிக்கு மிகுந்த பெருமை. சிவகுருவைவைப் பற்றி நினைக்கையில் எப்போதும் போல அம்மாவையும் நினைத்துக் கொண்டாள். வீட்டில் இருப்பாள் அவளுடைய அம்மா.

வாசுகியின் தொலைபேசி அழைத்தது. காசிநாதன் என்கிற எண்ணின் அழைப்பு அது. காசிநாதன் காணாமல் போய் பதினைந்து தினங்களே ஆகியிருந்தன. காசிநாதன் நாற்பது வயது உள்ளவர். கடன் தொல்லை காரணமாக காணாமல் போய்விட்டதாக நாளிதழ்களில் தெரிந்து கொண்டாள். கடனை எப்படியாவது அடைத்து விடலாம் என்றும் திரும்பி வந்து விடும்படியும் காசிநாதனின் மனைவியும் மகள்களும் நாளிதழ் விளம்பரங்களில் இறைஞ்சியிருந்தனர். வாசுகி அவர்களைத் தொலைபேசியில் அழைத்தபோது காசிநாதனின் மகள் சரியாகப் பேசவில்லை. கடன் கொடுத்த எவரோ பேசுகிறார்கள் என்றே நினைத்தாள்.

வாசுகி தன்னைப் பற்றி பலவாறாகச் சொல்ல வேண்டியிருந்தது. “அப்பாவோட சொந்த ஊரு எது?” என்று கேட்டாள். மதுரை பக்கம் ஒரு கிராமம் என்றும் அவர் அங்கெல்லாம் போக மாட்டார் என்றும் காசிநாதனின் மகள் உறுதியாக சொன்னாள். மதுரை போகும் ரயில்களில் எதற்கும் தேடிப் பார்க்கிறேன் என்று வாசுகி வாக்குறுதி தந்தாள். அந்த மகள் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. சொன்னபடியே தினமும் ஒருமுறை மதுரை வழியே போகும் ரயில்களைச் சுற்றி வரவும் செய்தாள்.
காசிநாதனுக்கு ஒல்லியான தேகம். கொஞ்சம் அகன்ற விழிகள். எதைக் கண்டாலும் அச்சம் கொள்ளும் பாவனையை கொண்ட கண்கள்.

புகைப்படத்தின் இந்த அடையாளம் போதும் என்றே காசிநாதனை வாசுகி தேடத்துவங்கினாள். இப்படியான அம்சங்களோடு தான் பல முகங்கள் அமைந்திருக்கின்றன என்பதை வாசுகி தன் தேடலின்போது கண்டிருந்தாள். காசிநாதன் என்கிற எண்ணிலிருந்து தான் இந்த தொலைபேசி அழைப்பு.

“அக்கா… நான் மஞ்சு பேசறேன்.. அப்பா வீட்டுக்கு வந்துட்டாருக்கா…”

“அப்படியா! ரொம்ப சந்தோசம்… நல்லாருக்காரா?”

“ஆமாக்கா… சரியா சாப்பிடாம… பாவம்கா அவரு” என்று அழுதாள்.

“உங்க அப்பாவை நல்லாப் பாத்துக்கம்மா.. அவரைத் திட்ட வேண்டாம்னு அம்மாக்கிட்ட சொல்லு”

“சரிக்கா… தினமும் நீங்க ஃபோன் பேசுனது பெரிய விசயம்கா… சென்னையில தான இருக்கீங்க… வீட்டுக்கு வாங்க ஒருநாள்”

“ஆகட்டும்மா… வச்சிடறேன்… அப்பா பக்கத்துலேயே கொஞ்சம் இருங்க” என்றவள் காசிநாதன் காணாமல் போன விளம்பர நாளிதழை எடுத்து கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டாள். காசிநாதன் பெயரில் பதிவு செய்திருந்த அலைபேசி எண்ணையும் அழித்தாள்.

இப்படி ஒருநாள் சிவகுருவும் வீடுவந்து சேருவான் என்று தான் அவளும் அம்மாவும் காத்திருக்கின்றனர். சென்னைக்கு அவனை பஸ் ஏற்றிவிட்ட நாளில் வாசுகிக்கு தம்பி இல்லாத வீட்டுக்குள் நுழையப் பிடிக்கவில்லை. வாசலிலேயே அமர்ந்திருந்தாள். வாசுகியின் அம்மாவும், அப்பாவும் கூட அவளருகில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. சிவகுருவும் அவர்களும் ஒன்றாக தருணங்களைத் தங்களுக்குள் தனித்தனியாக எண்ணிக் கொண்டிருந்தனர்.

வாசுகியின் அம்மா அவன் பிறந்தபோது தன்னருகில் கிடத்தப்பட்டிருந்த நொடிகளில் இருந்து நினைவை மீட்டுக்கொண்டிருந்தாள். அதன்பிறகு மீண்டும் அவனை அவர்கள் பார்க்கவேயில்லை.

சிவகுருவினை கல்லூரியில் சேர்த்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. சிவகுருவுக்கு சிறிய விபத்து என்றும் உடனே வரும்படியும் தகவல் சொன்னது. வாசுகியின் அப்பா கல்லூரியை அடைந்தபோது அவரைத் தகுந்த பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்து சென்ற வேகத்திலும், நிலவிய பேரமைதியிலும் அப்போதே அவர் தன்னை இழக்கத் தொடங்கியிருந்தார். கல்லூரி நிர்வாகம் வெகுநேரம் எடுத்துக் கொள்ளவில்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்தனர். சிவகுரு உயிரோடு இல்லை என்று அவனுடைய அப்பாவுக்கு உணர்த்தப்பட்டது. கல்லூரிக்குப் பின்னால் இருந்த குளத்தில் சிதைந்து கிடந்த அவனது உடல் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டதை சொன்னார்கள். அவன் அணிந்திருந்ததாய் சொல்லி நைந்த சட்டை ஒன்றை தந்தார்கள். அது அவனுடையதுதானா என்று போலிஸ் ஒருமுறை அப்பாவிடம் கேட்டுக் கொண்டது. “கல்லூரிக்கு செல்கிறான் என்றதும், எங்கள் ஊர் லயா கார்மெண்டில் எடுத்த சட்டை இது. நானும் அவனுமாகத் தான் போய் வாங்கினோம். அவனுக்கு இந்த நிறம் எடுப்பாக இருக்கும் என்று நினைத்து தான் வாங்கினேன்” என்றார் வாசுகியின் அப்பா.

போலிஸ் அது சிவகுருவின் சட்டை என்று மட்டும் குறித்துக் கொண்டது. நான்கு நாட்களாக ஏன் தங்களுக்கு தகவல் சொல்லவில்லை? ஏன் முகம் சிதைந்திருக்கிறது? இதை எப்படி தற்கொலை என்று சொல்லமுடியும் என்று வாசுகியின் அப்பாவின் தலைக்குள் ஏராளமான கேள்விகள் ஓடின. எவருக்கும் பதில் சொல்லும் திறனும் மனதும் இல்லை. தற்கொலை என்றே வழக்கினை முடித்தார்கள். ஊருக்கு எடுத்துச்செல்ல கல்லூரியும், காவல்துறையும் ஒரேடியாக ஒரே குரலில் மறுத்தது. ஒற்றை ஆளாய் வாசுகியின் அப்பா பரிதவித்துக் கிடந்தார். வாசுகியின் அம்மாவும், வாசுகியும் அழைக்கப்படாமலேயே அவசரக்கோலத்தில் தன்னிடம் தரப்பட்ட பொட்டலத்தை எரியூட்டினார்.

வெற்று மனதோடும் பதில்கள் அற்றுப்போயும் ஊர் திரும்பினார். உறவினர்களும், நண்பர்களும் கேள்விகளை மட்டுமே கேட்டபடி இருந்தனர். “அவனே போயிட்டான்” என்பதே அவரின் நினைவாக இருந்தது. வாசுகியினாலும் அவளுடைய அம்மாவினாலும் அவரின் மௌனத்தைக் களைய முடியவில்லை. சிவகுரு மறைந்த பதிமூன்றாவது நாள் அவன் அம்மாவின் கனவில் வந்தான். “நான் இருக்கேன்மா இங்கன தான் இருக்கேன்” என்றான். வாசுகியின் அம்மா அந்த நடுஇரவில் ஆவேசம் கொண்டு எழுந்தாள். சிவகுருவின் புகைப்படத்துக்கு போடப்பட்டிருந்த மாலையைக் கழற்றி வீசினாள். “அவன் இருக்கான்… உயிரோட தான் இருக்கான். என்னைத் தேடி வருவான்” என்றாள். திரும்பத் திரும்ப அதையே சொன்னாள். எவருடைய சமாதானமும் சந்தேகமும் அதன் பிறகு அவளிடத்தில் பேச்சற்றுப் போனது.

சிவகுருவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு காலங்குளம் ஜோதிடரிடம் சென்றபோது கூட சிவகுரு “எப்ப வருவான்?” என்கிற கேள்வியைத்தான் வாசுகியின் அம்மாவால் கேட்க முடிந்தது. அவர் பல கணக்குகளைச் சொன்னார். பிறகு அவன் ஆன்மா இன்னும் அழியவில்லை. ‘அவன் வருவான்’ என்றார். தலை நிமிர்த்தி திரும்ப வீடு வந்தாள் அம்மா. அவளுடன் போயிருந்த வாசுகியும் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டாள்.

வாசுகியின் அப்பாவை இந்த நம்பிக்கைக் குத்தியபடி இருந்தது. மூவரும் அவரவருக்கான வாழ்க்கையில் கிடந்தார்கள். வாசுகி அடிக்கடி சென்னை வந்து போலீசில் சிவகுருவைக் காணவில்லை என்று புகார் கொடுத்தபடி இருந்தாள். போலிஸ் மூடப்பட்ட வழக்கு என்றது. அதில் முனையளவு முனைப்பையும் காட்ட மறுத்தது.

இதற்காகவே சென்னைக்கு அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வந்தாள் வாசுகி. சொந்த ஊரில் தெருவில் இருந்த அத்தனை பேரிடமும் இவர்களது சென்னை முகவரி இருந்தது. சிவகுரு வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் என வாசுகியின் அம்மா ஒவ்வொரு வீடாகப் போய் சொல்லிவிட்டு வந்தாள்.

வாசுகி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். தட்டச்சு செய்ய வேண்டிய காகிதங்கள் எதுவும் இன்னும் வந்து சேரவில்லை. அங்கே கிடந்த அன்றைய தினச்செய்தித்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டாள்.

எப்போதும் போல அவளுடைய குறிப்பு நோட்டினையும் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அன்றைய தினம் காணாமல் போனவர்கள் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள் அதிகம் வருவதில்லை. வாட்ஸ்ஆப் வசதியைக் கொண்டிராத அலைபேசி என்பதால் வாசுகி இது போன்றவற்றை செய்தித்தாள்களிலேயே கண்டு கொண்டிருக்கிறாள். செய்தித்தாளை மூடப்போகும் ஒரு கணத்தில் தான் பார்த்தாள். காலங்குளம் ஜோதிடர் முந்தைய நாள் இரவு இறந்திருந்தார்.

அவர் மகன்களும், மகள்களும் அதற்காக கண்ணீர் அஞ்சலியை புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தனர். “உங்க பையன் திரும்பி வரலேனா… என்னை வந்து என்னனு கேளுங்க?” என்றிருந்தார் அவர். போய்சேர்ந்து விட்டார். வாசுகி அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். அம்மாவிடம் காலங்குளம் ஜோதிடர் குறித்து சொல்ல வேண்டாம் என்று தீர்மானம் கொண்டாள்.

மாதாந்திர பேருந்து பாஸ் பையில் இருக்கிறதா என்று ஒருமுறை சோதனை செய்து கொண்டாள். தண்ணீர் பாட்டிலை மீண்டும் நிரப்பினாள். மதியானம் வருவதாக அலுவலகத்தில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
நூர் ஆபுதினைத் தேடி எந்தெந்த தர்காக்களுக்கும் மசூதிகளுக்கும் செல்லலாம் என்ற யோசனையுடன் போய்க்கொண்டே இருந்தாள்.

***

ஜா.தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. திரைத்துறை சார்ந்த நூல்களும் ஐந்திற்கும் மேற்பட்ட தலைப்பில் வெளிவந்துள்ளன. இவரது மின்னஞ்சல் முகவரி– deepaj82@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. இப்படியான மனநிலை கொண்ட பெண்ணும் தொலைந்து போனவர்களுக்காக அவள் எடுக்கிறதான முயற்சிகளும் ஈடுபாடும் மனதைப் பிசைந்து அசைத்துப் பார்த்துவிடுகிறதுதான். இனி, நாளிதழ்களில்… சாலையோரச் சுவர்களில்..புலனத்தில் எங்கே காணவில்லை சுவரொட்டிகளைப் பார்த்தாலும் வாசுகி நினைவு வரக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular