Monday, September 9, 2024
Homesliderநிச்சலனத்திற்கான தவம் - சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை முன்வைத்து.

நிச்சலனத்திற்கான தவம் – சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை முன்வைத்து.

ப்ளூமராங் பக்கங்கள் – 01

ஜீரோ டிகிரியை எப்படி மதிப்பிடுவது? 1998 ஆம் ஆண்டு இந்நாவல் முதல் பதிப்பு கண்டுள்ளது. ஏறத்தாழ இருபத்தியிரண்டு வருடங்களுக்கு பிறகு அதாவது இந்நாவலுக்கு மூன்றாம் தலைமுறை வாசகனாக இதை நான் அணுகுகிறேன்.

சாருவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு  எதுவுமே தெரியாது. பெரும்பாலான எழுத்தாளர்களின் வாழ்வு குறித்து நமக்கு என்ன தெரியும்? வாசித்து முடித்தபிறகு சிலரைப் பற்றி தேடி ஆர்வத்துடன் தெரிந்து கொள்வோம். மேலும் இலக்கிய பிரதியில் எழுத்தாளரின் வாழ்க்கை அந்தரங்கத்தை தேடுவது வீண் வேலை. எழுத்தாளர் இப்படிப்பட்டவர் என கண்டடைய இலக்கியப்பிரதி வாசிக்கப்படுவதில்லை. மகாமுனியோ, குள்ள சித்தனோ, உத்தம தமிழ் எழுத்தாளனோ, ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையோ முனியாண்டியோ அவந்திகாவோ பிரதிக்கு வெளியே யாரைக் குறிக்கிறது என்பது எனக்கு ஒரு மேலதிக ஆர்வமாக மட்டுமே இருக்க முடியும். இந்நாவலை மதிப்பிடவும் ஆழ்ந்து புரிந்துகொள்ளவும் அவை உதவப்போவதில்லை. எழுத்தாளரின் புனைவற்ற எழுத்துக்கள் உதவும். அவற்றில் எழுத்தாளரின் அக்கறைகள், கேள்விகள், ஆர்வங்கள், ஆளுமை வெளிப்படும். அவற்றின் நீட்சியாகவோ அல்லது அவற்றை மறுத்தோ உரையாடும் களம் என புனைவை புரிந்துகொள்ள முடியும். கலைஞன் கட்டற்றவன். கலைஞனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு என்ன? இதுவே சாருவின் மிக முக்கியமான கேள்வி என புரிந்து கொள்கிறேன். பழுப்பு நிற பக்கங்கள் போன்ற ஒன்றை எழுத இதுவே அவரை தூண்டியிருக்க வேண்டும். 

ஜீரோ டிகிரியை எழுத்தாளரின் ஆளுமையை துண்டித்துவிட்டு பிரதியாக மட்டும் அணுக முடியுமா? எந்த ஒரு பிரதியும் எழுத்தாளரின் ஆளுமையின் தொடர்ச்சியும் பிறழ்வும்தான். பாரதியின் கவிதைகள் பாரதி எனும் ஆளுமையுடன் இணையும்போதே பெரும் எழுச்சியை அளிக்கவல்லவையாக உள்ளன. ஜெயகாந்தன் எனும் ஆளுமையுடன் சேர்த்தே அவருடைய கதைகளும் பொருள் கொள்ளப்படுகின்றன. எழுத்தாளர் ஒரு கட்டமைப்பாக உருவாகும்போது அவர் வழி வெளியாகும் படைப்புக்கு அவருடைய ஆளுமையுடன் சேர்த்தே மதிபபிடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக கலக எழுத்தாளர்கள், பித்து நிலையை வெளிப்படுத்துபவர்கள், கட்டற்ற எழுத்துமுறை கொண்டவர்கள்-  ஆன்மீக ஞானி- இது போன்ற  ஆளுமைகளை முன்வைப்பவர்களின் ஆக்கங்கள் அதன் நீட்சியாகவே மதிப்பிடப்படும். சொல்லப்போனால் அவர்களுடைய புனைவு  எழுத்தாளரின்  வாழ்க்கைமுறை அறியாத வாசகர்களால் அவர்கள் வாசிக்கப்படும்போது எப்படி பொருள் கொள்ளப்படுவார்கள்? சாரு எனும் ஆளுமையை இயன்றவரை இப்பிரதியை மதிப்பிட நான் கணக்கில் கொள்வதை தவிர்க்கிறேன். அதேப்போல் பின் நவீனத்துவத்தின் உதாரண நூல் என கோட்பாட்டு ரீதியாக என இந்நாவல் குறித்து சொல்லப்படுவது உண்டு. பின் நவீனத்துவ வரையறையை விளக்குவதும் என் நோக்கம் அல்ல. ஆகவே அழகியல் விமர்சகனாக, ரசனை மதிப்பீட்டை கொண்டே இந்த நாவலை அணுகுகிறேன்.

ஜீரோ டிகிரி தமிழ் இலக்கிய வரலாற்றில் இரு தளங்களில் ஒரு முன்னோடி படைப்பு. என்றே கருதுகிறேன். மொழியிலும் வடிவத்திலும் பெரும் உடைவை ஜீரோ டிகிரி ஏற்படுத்தி இருக்கிறது. அகவயமான இறுகிய மொழியிலிருந்து முற்றிலும் இலகுவான ஆற்றோட்டமாக ஒழுகிசெல்லும் துள்ளல் நடை. ஜீரோ டிகிரியின் முதன்மை பலம் என்பது அது அளிக்கும் வாசிப்பின்பம்.  பொதுவாகவே வாசிப்பின்பம் அளிக்கும் ஒன்று நவீன இலக்கியமாக கருதப்படக் கூடாது என்றொரு வரையறை உண்டு. இது சிற்றிதழ் வெகுஜன இதழ் என இருவேறு துருவங்களாக இலக்கிய ஊடகம் பிரிந்து செயல்பட்டபோது தனது தனித்துவத்தை பேணுவதற்காக எடுத்துக்கொண்ட நிலைப்பாடு என்றவகையில் சரி.  இது ஒரு கறாரான அளவுகோலாக ஆகும்போது படைப்பூக்கத்திற்கே எதிரானதாகவும் ஆகிவிடுகிறது. . 

இரண்டாயிரத்தின் மத்தியிலிருந்து நவீன இலக்கியத்தின் இணைய யுகம் தொடங்குகிறது.  சிற்றிதழ் வெகுஜன இதழ் எனும் ஊடக பாகுபாடு பொருளற்று போகிறது. பெரும் ஜனநாயகமயமாக்கம் நிகழ்கிறது. பல புதிய வாசகர்கள் புதிய எழுத்தாளர்கள் உருவாகி எழும்போது அவர்களுக்கான முதன்மை ஆதர்சங்களில் ஒருவராக சாரு ‘ஜீரோ டிகிரி’ வழியாக ஒரு பாதையை வகுத்து அளிக்கிறார். இலக்கிய எழுத்தின் வரையறையை நெகிழ்த்தி பல்வேறு சாத்தியக்கூறுகளை நிகழ்த்திக் காட்டியது அவருடைய முக்கியமான பங்களிப்பு. ஒருதலைமுறை எழுத்தாளர்கள் உருவாக்கத்தில் ஜீரோ டிகிரி முக்கிய பங்களிப்பு ஆற்றியுள்ளது. மற்றொரு கோணத்தில், இது சில சிக்கல்களையும் உருவாக்குகிறது.  மொழி நடை மட்டுமே இலக்கியம் என நம்பும் ஒருதரப்பு  உள்ளீடற்ற கதைகளை உருவாக்குகிறார்கள்  எனச்சொல்லப்படுவது  ஒரு முக்கியமான விமர்சனம்தான். ஆகவே இப்போது எழுதப்படும் உள்ளீடற்ற  எழுத்துக்களுக்கும், இதற்கு முன்னர் வெகுஜன பரப்பில் எழுதப்பட்டவற்றுக்கும் சாருவின் எழுத்துக்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?  சாரு நவீன இலக்கியவாதி ஆகவே அவர் எழுதுவது நவீன இலக்கியம் என்றொரு பதிலை சொல்ல முடியாது. இரண்டு பதில்களை சொல்லலாம். சாருவின் கதைகளில் வெளிப்படும் புனைவு நேர்மை மற்றும் துணிவு. புனைவு நேர்மை என்றால் என்ன? வாசகருக்கும் எழுத்தாளருக்குமான நம்பிக்கை அடிப்படையிலான ஒப்பந்தம் என இதை சொல்லலாம். இதை புறவயமாக வகுத்துக்கூற எனக்கு தெரியவில்லை. ஆனால் ஜீரோ டிகிரி நாவலில் இருந்து ஒரு இடத்தை சுட்ட முடியும். முனியாண்டியின் ‘டெலிபோன்’ நாவலின் சரச உரையாடல்கள் ஒருபக்கம் உள்ளன. இதில் மறுபக்கம் முனியாண்டியை அறிந்துகொண்ட வாசுகி அவனுடன் அதே விளையாட்டை இயைந்து விளையாடுகிறாள். அவளுடைய கூற்றாக வரும் ஒரு அத்தியாயம் வழியாக மொத்த நாவலும் தலைகீழாக்கம் பெறுகிறது. ‘உண்மையில் பார்த்தால் எந்தச் சமூக மதிப்பீடுகளை அவன் மறுக்கிறானோ அதே சமூக மதிப்பீடுகளைத்தான் அவன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்… அவன் பேசும் எதிர்க் கலாச்சாரத்தையும் கலாச்சாரமானது உப கலாச்சாரமாக உள்வாங்கிக்கொண்டுவிடவில்லையா. இது ஏன் அவனுக்கு தெரியவில்லை.’ என கேட்கிறாள் வாசுகி. பாவனைகளை கிழித்து எறியும் இந்தக் கூர்மையையே மற்றொரு உதாரணத்தை சுட்டலாம் என்றால் தாயுமானவன் விசாரணையில் தமிழ்செல்வனுடன் பங்கேற்கும் முனியாண்டியின் பகுதி. புனைந்துகொள்ளும் ஆளுமையை தலைகீழாக்கி கேள்விக்குட்படுத்துவது. இந்தத் தன்மை சாருவை அவருடைய சமகால, அல்லது அவருக்கு முற்கால வெகுஜன எழுத்துக்களிடம் இருந்தும், உள்ளீடற்ற எழுத்துக்களிடம் இருந்தும் தனித்து நிறுத்துபவை. 

ஜீரோ டிகிரியின் வடிவம் மற்றுமொரு மிக முக்கியமான பங்களிப்பு. பொதுவாக வடிவ சோதனை எழுத்துக்களை நோக்கி, பெரும்போக்கு யதார்த்தவாத வெளிப்பாடு கொண்ட தமிழ் இலக்கிய சூழலில் ‘ஆனால், ஏன்? (but why?)’ என்றொரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. இதை நேர்கோட்டில் சொல்லியிருக்கலாமே. தனித்தனியாக சொல்லியிருக்கலாமே. தனித்தனி சிறுகதைகளாக எழுதி இருக்கலாமே. இத்தனை விதமான மொழிபுகள் தேவையா? இந்த பகுதியை கட்டுரையாக்கி இருக்கலாமே. இப்படி பல ‘லாமே’க்கள். உண்மையில் இந்த ‘but, why?’ கேள்விக்கு விடையே இல்லை. செய்திருக்கலாம் தான்.  ஒரேயொரு பதில் கேள்வியை மட்டுமே but, why? க்கு பதிலாக படைப்பாளி திரும்பி கேட்க முடியும். ‘why not?” என் கூடாது?  

இப்போது இங்கிருந்து வேறொரு கேள்விக்கு செல்லலாம். படைப்பின் வடிவம் சார்ந்த நம்பிக்கை எழுத்தாளருக்கு எங்கிருந்து உருபெறுகிறது? எழுத்தாளர் எழுத்திற்கு அந்தரங்கமாக என்ன நோக்கத்தை கற்பிக்கிறார் என்பதில் இருந்தே. நோக்கமற்ற களியாட்டின் வெளிப்பாடே தன் எழுத்து என ஒருவர் நம்புவார் எனில், வாழ்வையும், பிரபஞ்சத்தையும், அதன் இயக்கத்தையும் அப்படியாகவே காண்கிறார் எனில், அதுவே அவருடைய வாழ்க்கை பார்வையாக இருக்கும் எனில், அவருடைய படைப்பின் வடிவ வெளிப்பாடும் இந்த நம்பிக்கையையே பிரதிபலிக்கும். இந்த ஓர்மை ஜீரோ டிகிரியில் கூடி வருகிறது. இதற்கு முரணாக படைப்பிற்கு சில நோக்கங்கள், இலக்குகள் இருக்கும்போது பிற நோக்கங்களுடன் முரண்கொள்ள கூடும். இவற்றில் ஒரு நோக்கம் சிறந்தது அல்லது இழிந்தது என சொல்வதற்கில்லை.

 ஒரு பகவத் கீதை வரியிலிருந்து   ஜீரோ டிகிரி தொடங்குகிறது. ‘புத்தி, ஞானம், அறிவு, சகிப்புத்தன்மை, சத்யம், உணர்வுகளையும் மனத்தையும் கட்டுப்படுத்துதல், சுகம், துக்கம், பரிணாமம், அழிவு, பயம், பயமின்மை, அஹிம்சை, சமத்துவம், திருப்தி, துறவு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி- உயிர்களின் இப்படியான பல்வேறு குணங்களும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன.’ இந்த வரிகளின் வழியாகவே நாவலின் கட்டற்ற வடிவம் கோடிட்டு காட்டப்படுகிறது. நன்மையையும் –தீமையும், மேன்மையும் கீழ்மையும் குரூரமும் பேரன்பும் என எதிரெதிர் துருவங்கள் ஒன்றின் வெவ்வேறு முகங்களாகின்றன. ஒரு பெண்டுலத்தின் விசையை போல். சமநிலையை நோக்கி வர அது மறுபக்கம் செல்கிறது. இப்படி ஆடி ஆடி அசைவின்மையில் அடங்குகிறது. இந்த ஊசலாட்டம் சூனியத்தில் முடிவதே இந்நாவல். சுழியத்தில் உருவாகி முரண்பட்டு சுழியத்தில் கரைத்து கொள்கின்றன. ஜீரோ டிகிரி என்பது முன்னூற்றி அறுபது டிகிரி சுழன்ற பின் வருவது. அதுவே சுழற்சியின் தொடக்கமும் கூட. மற்றொரு கோணத்தில் குளிர்ந்தால் திடப்பொருளாகவும் இளகினால் நீராகவும் மாறும் இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளி என்பதே ஜீரோ டிகிரி. யாவும் சங்கமிக்கும், யாவும் பிரியும் புள்ளி. சுழியம் எல்லாவற்றையும் பிறப்பிக்கும் யோனியாகவும் நாவலில் உருவகப்படுத்தப்படுகிறது. ‘அதே பொருள் சூன்யமாகவும் சிருஷ்டியின் குறியீடாகவும் இருப்பது எப்படி?’ என்றொரு வரி நாவலிலேயே வருகிறது.  பிரபஞ்ச சூனியம் என்றால் என்ன என்றொரு கேள்விக்கு அளிக்கப்படும் பதிலை இங்கே பொருத்திக்கொள்ள முடியும்.    

பறவைகளை தேடி செல்லும் பறவையியலாளன் அரிய சைபீரிய பறவையையே உண்கிறான். முனியாண்டி எழுதும் டெலிபோன் நாவலின் பகுதிகள் என விவரிக்கப்படும் சரச உரையாடல்கள் அவந்திகாவின் வாழ்க்கை கதையுடன் சமன் ஆகிறது. நாவலின் தொடக்க பகுதிகளில் தாயுமானவன் எனும் காவல் அதிகாரியின் விதவிதமான இம்சை முறைகளும், டூட்சி ஹூத்தூ வன்முறை வரலாறும்,ஃபக்ருன்னிஷா நீனா ஷிரின் ஆகியோரின் வன்முறையும் அவலமும் நிறைந்த வாழ்க்கை கதைகள் நாவலின் இறுதி பகுதியில் இறந்து பிறந்த மகளின் பொருட்டு எழுதப்படும் உணர்வெழுச்சி கொண்ட கவிதை வரிகளில் சமன் அடைகின்றன. பெருவெடிப்பு, நட்சத்திர மண்டலங்கள் பற்றிய விவரணைகள் கூட முற்பகுதியின் குரூரங்களுக்கு எதிர்வினையான அத்தியாயங்கள் தான். ஜெனீக்கு எழுதும் கடிதங்களில் ஓரிடத்தில் ‘மொத்த மனித வர்க்கமே காதலையும் அன்பையும் புறக்கணித்துவிட்டு பேரழிவில் ஈடுப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.’ என்றொரு வரி வருகிறது. இந்த ஒருவருக்கு சாட்சியமே நாவலின் முந்தைய பகுதிகள். முனியாண்டி ஒரு பெண்ணை கொன்று வீசுகிறான், அவந்திகாவின் அண்ணன் சாலை விபத்தில் கூழாகி கிடக்கும் மனைவியின் காதிலிருந்து ஜிமிக்கியை வெட்டி எடுக்கிறான்.  

சாருவின் மொழியில் சில அபாரமான இருண்ட நகைச்சுவைகள், கிண்டல்கள் தெறிக்கின்றன. குறிப்பாக நாவலின் தொடக்க பகுதிகளில் இவை நிறைய உள்ளன. ஆர்த்தி, அவந்திகா, ஜெனிசிஸ் கடிதங்களுக்கு வரும்போது முற்பகுதியின் துடுக்குத்தனங்களும் சமன் செய்யப்படுகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை அத்தியாயம், சொர்ணமுத்து பிள்ளை, wendy, விவசாயி – கன்றுகுட்டி கதை. போன்ற பாலியல் துணுக்குகள், மொழிபெயர்ப்பு ஆசான் கோட்டிக்குப்பனை நினைவுகூரும் பகுதி, எகிப்தாலங்கானத்து மண்கொண்ட லெமூரியன்- ஆப்கானத்துக் கல்வென்ற வேஞ்சிணன் கதைகளை இட்டுக்கட்டி சொல்லும் பகுதி, போன்றவை சட்டென நினைவுக்கு வருகின்றன. செத்த மூளை எழுதிய விமர்சனத்தில் ஒருவரி ‘குஷ்ட ரோகிகளையும் விபச்சாரிகளையும் கண்டு மூக்கைச் சிந்தி சிந்தி அந்த மூக்குச் சளியையே முற்போக்கு எழுத்தாக வெளிக்காட்டி பிரபல்யம் பெற்றுவரும் முனியாண்டி’. இதன் தொடர்ச்சியாக சாலிக்கிராமத்தில் ஒரு வேசியிடம் ந. பிச்சமூர்த்தி படித்திருக்கிறாயா  என கேட்டு அவள் முனியாண்டியின் கைப்பிரதிகள் மீது மூத்திரம் பெய்கிற இடமும் கூட அவருடைய துடுக்குத்தனம் மிளிரும் இடம்தான். பிளாக் மிர்ரரின் முதல் பகுதியில் ஆங்கிலேய பிரதமரை பொதுவெளியில் பன்றியை புணர சொல்லி மிரட்டும் ஒரு கதை வரும். இந்நாவலில் காவல்துறை அதிகாரி தாயுமானவன் அவனுடைய வதையின் ஒருபகுதியாக பன்றியை புணர சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொல்லுதடி என அதைக் கட்டிப்பிடித்து பாட சொல்வது இருண்ட நகைச்சுவையின் உச்சம்.  

நாவலுக்குள் சில விமர்சனங்களுக்கும் பதில் சொல்லப்படுகிறது. அவையும் துடுக்குத்தனம் நிறைந்தவைதான். ஒருவகையில் இந்த இயல்பே சாருவின் எழுத்திற்கு ஒரு தனித்த நிறத்தையும் குரலையும் அளிக்கிறது. ‘உங்கள் கதைகள் ஆபாசமாக இருப்பதாக சொல்லப்படும் குற்றசாட்டுக்கு உங்கள் பதில்- மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியத்தைப் பார்த்த ஒருவன் சொன்னான்னாம்..ஏன்யா இவ்வளவு வரையத் தெரிந்த அந்த ஆளுக்கு கோமணமோ ஜட்டியோ வரையத் தெரியாம போச்சு. புடுக்கெல்லாம் தெரியுதே.’  வேரற்ற எழுத்து என்று சொல்லப்படுவதற்கும் நாவல் பதில் அளிக்கிறது. தான்சானியாவில் ஆதிமனிதனின் எச்சங்கள் கிடைத்துள்ளது. உண்மையில் வேர் ஆராய்ச்சி செய்பவர் இங்குதான் வரவேண்டும் என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. மற்றொரு இடத்தில் கடவுளற்ற உலகில் வாழ்வதால் கதாப்பாத்திரங்களை உருவாக்க முடியவில்லை என்று சொல்கிறது.

சாமுண்டியின் வயிற்றில் பெரிய தேள் இருப்பதை காணும்போது கோடிக்கணக்கான பெண்களின் வரலாற்றை சொல்வது போல் இருக்கிறது என எழுதுகிறார். ஜீரோ டிகிரி ஒருவகையில் ஃபக்ருன்னிஷா, நீனா, ஆர்த்தி, அவந்திகா, ஜெனிசிஸ் என பெண்களின் கதை என சொல்லலாம். நாவலின் கதை பகுதியை உருவாக்குபவர்கள் இந்த கதை மாந்தர்கள்தான். ஆர்த்தி- அவந்திகா கதை கிட்டத்தட்ட இமையம், பூமணி கதைகளின் பாணியில் முழுக்க யதார்த்த தளத்தில் சொல்லப்படுகிறது. நாவலின் பலவீனமான பகுதியும் இதுதான் எனத் தோன்றியது. முக்கியகாரணம் யதார்த்த சித்தரிப்புகளில் உள்ள ஒற்றைப்படைத்தன்மை, மிகைகூறுகள் ஏதோ ஒருவகையில் கதையின் அமைப்பை குலைக்கிறது. எனினும் கதைகூறும் தன்மையில் உள்ள இந்த மிகையும் அது உருவாக்கும் குலைவும் நாவல் எடுத்துக்கொண்ட அழகியலுக்கு நியாயம் செய்வதாக உள்ளது.

கசர்மீனியர் கார்மேனியர் கதை யூத நாஜி தொடர்பை நினைவுறுத்தின. ஒரு செய்தி இதழில் வடிவத்தில் உள்ள இவ்வத்தியாயம் நடிகை வளர்க்கும் பன்றி பற்றிய செய்தியும் நக்சல் போராளிகள் கொல்லப்படும் அரச வன்முறையின் சித்திரமும் இணையான முக்கியத்துவடன் வெளியிடப்படுகிறது. பின்னர் மற்றொரு அத்தியாயத்தில் இரண்டு செய்திகளும் ஊடுகலந்து வருகின்றன. முக்கியமான சமூக விமர்சனம். முந்தைய அத்தியாயம் ஊடகம் இரண்டையும் சமமான நுகர்வு பொருளாக பாவித்து வாசகனுக்கு பரிமாறுவதை குறிக்கிறது. இது காரணம் எனில் காரியம் என்ன? நுகர்பவன் எந்தவொரு செய்தியையும் ஆழ அறிய முடியாத, யாவற்றையும் அள்ளி புசிப்பவனாக இருக்கிறான். இந்த இரண்டு பார்வை கோணங்கள் வழியாக இவ்விரு அத்தியாயங்களையும் புரிந்துகொள்ள முடியும்.

நாவலின் சிக்கல்கள் என இதிலுள்ள மிகையான வன்முறை, மிகையான நெகிழ்ச்சி போன்றவற்றை சுட்டலாம் என்றால் நாவலின் வடிவம் அதற்குரிய நியாயத்தை வழங்குகிறது. வெறும் பெயருதிர்ப்புகள் என்று சொன்னால் அதுவும் ஒரு புனைவு உத்தியாக கையாளப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். முனியாண்டி- மிஸ்ரா- சூரியா- என கதைசொல்லிகள், கதை மாந்தர்கள் வரையறுக்கப் படவில்லை, கதை மாந்தர்களாக நம்முள் வளரவில்லை என்றால் நாவல் அத்தகைய கலைவையே உத்தேசிக்கிறது என்பதே சரியான பதில். ஆக நாவலின் மீதான விமர்சனம் என்பது பின் நவீனத்துவ அழகியலின் மீதான விமர்சனமாகவே இருக்க முடியும். பெரும்பாலும் அவ்வழகியல் வாசகருக்கு பரிச்சயமில்லை என்பதால் எழும் விமர்சனங்களும் கூட. நாவலின் எல்லை என்பதும் பின் நவீனத்துவ அழகியலின் எல்லை தான். அவை தனியே விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. இந்த நாவலை பற்றிய வாசிப்பு கட்டுரை எனும் வரம்பிற்குள் நிறுத்த முடியாதது.  

நாவலில் ஆங்காங்கு பல தொன்மக்கதைகள், நாட்டார் சாயல் கண்ட கதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாருவின் மொழியில் அவற்றை வாசிக்க சுகமாக உள்ளது. கும்பகர்ணனின் கதை, வால்மீகியின் கதை,  அசுவம்-விருச்சிக கதை,  சீயஸ் மனிதர்களை பாதியாக ஆக்கி தொப்புழில் முடிச்சிட்ட கதை  கல்யாண வீட்டிற்கு செல்லும் யமன் அங்கே எலியை கண்டு குழம்புவதும், அதை கவனித்த எலி ஒரு பருந்தின் உதவியுடன் தொலைதூரத்திற்கு தப்பிச் செல்வதும், அங்கு யமன் அதன் உயிரை எடுப்பதும் கச்சிதமான நாட்டுபுற கதையின் வடிவம். முனியாண்டியின் பாத்திர வார்ப்பே ஏறத்தாழ ஒரு சுடலைமாடனை போல ஒரு நாட்டார் வார்ப்பு கொண்டதுதான் என எனக்கு தோன்றுகிறது. அங்கே எல்லா மிகை கூறுகளும் சாகசங்களும் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அவனுடைய பாலியல் கூற்றுகள், வீர சாகசங்கள், பயண சாகசங்கள் என இவை யாவும் துடியான மாடனுக்கு சொல்லப்படும் நாட்டார் புராண கதை மொழிபை கொண்டுள்ளது. நூற்றாண்டுகாலத்தனிமை போன்ற நாவலில் இருந்து ஒரு கதை சொல்லப்படுகிறது, வெவ்வேறு எழுத்தாளர்களின் மேற்கோள்கள், ஆங்கில பத்திகள் என கலவையான வடிவம் நாவலுக்கு வலுசேர்க்கிறது. திலோத்தமைக்கு பெயர் விளக்கம் அளிக்கும் இடமும் அதை  ஜெனீயுடன் பொருத்தி பார்க்கும் இடமும் மிக முக்கியமானது. திலோத்தமையை போல் உன்னதங்களால் உருவாக்கப்பட்டவளே ஜெனீயும். எனக்கு தாஸ்தாவெஸ்கியின் ஒரு மேற்கோள் நினைவுக்கு வந்தது. ‘மானுடகுலத்தை மொத்தமாக நேசிக்க நேசிக்க தனிமனிதனின் மீதான நேசம் குறைந்தபடி இருக்கிறது.’ இந்த முரண் கலைஞர்களின், தீர்க்கதரிசிகளின், மாபெரும் மக்கள் தலைவர்களின் முரண். இந்த முரணை புரிந்துகொள்வதே ஜீரோ டிகிரியை புரிந்துகொள்வதும் கூட. ஜெனீ ஒரு உண்மையான ஒரு மனிதராக இருந்திருந்தால் அவளால் இத்தனை அன்பை தாங்கிக்கொள்ள முடியுமா?  ஜீரோ டிகிரியை கடவுளற்ற நாவல் என சொல்லலாம் ஆனால் தத்துவமற்ற  நாவல் அல்ல.  

ஒருவகையில் இந்த கவிதை அந்த தத்துவ கேள்வியின் சாரத்தை வெளிப்படுத்துவது என சொல்லலாம்.

இந்த நட்சத்திரம் 
இந்தக் கணத்தில் இருக்கிறதா 
இல்லையா 
இது இறந்து எத்தனை காலமிருக்கும் 
இருப்பதும் இல்லாததுமான 
முரணில் 
நீ இருக்கிறாயா 
புனைவுச் சுடரின் 
நிஜ நிழலில் 
சிக்கித் தவிக்கும் 
எனதுயிரின் துடிப்பைக் 
கேட்கிறாயா 

-ப்ளூமராங்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular