Thursday, December 5, 2024
Homesliderநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்

நேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்

நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி

எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும்  அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் வெறுக்காமலும் தமது கருத்துகளை விட்டுக் கொடுக்காமலும்  பேசலாம்  என்பதற்கு இந்நேர்காணல் ஒரு சமீபத்திய சான்று.

உங்களுடைய நாவல்களில் ’கொரில்லா’, ’ம்’ ஆகிய இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பாக ‘ம்’ நாவல் மிக முக்கியமானது. ஆனால் இதன் பிறகு வெளியான ‘பொக்ஸ்’, ‘இச்சா’ ஆகிய இரண்டு நாவல்களும் வலிந்து உருவாக்கப்பட்ட பிரதியாகவே வாசிப்பில் எனக்குத் தோன்றுகிறதே?

நான் என்ன இறைதூதரா வானிலிருந்து அருள்வாக்கோ அசரீரியோ பெற்றுச் சுளுவாக  எழுதிவிடுவதற்கு. இலக்கிய உள்ளொளி, தரிசனம் போன்றவையும் எனக்கு வசப்படாதவையே. எனவே என் எல்லா நாவல்களையும் வலிந்தே எழுதினேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். தஸ்தயேவ்ஸ்கி கூட இப்படி வலிந்தும் அச்சத்தோடும் தன்னம்பிக்கையின்றியும்தான் ‘அசடன்’ நாவலை உருவாக்கினார் எனப் படித்திருக்கிறேன். அவரது அந்தப் புலம்பலைக் குறிப்பிட்டுத்தான் எனது ‘இச்சா’ நாவலைத் தொடங்கியிருந்தேன்.

‘பொக்ஸ்’ இறுதி இன அழிப்பு யுத்தக்கால கட்டத்தை வைத்து புனைந்திருந்தீர்கள். நந்திக்கடலின் இறுதி யுத்த காலத்தை எழுதினால்தான் சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் உங்கள் பெயரை தக்க வைக்க முடியுமென உங்களுக்குள்ளேயே ஒரு நிர்பந்தத்தை உருவாக்கிக் கொண்டீர்களா?

இறுதி இன அழிப்பை மட்டுமல்லாமல், தொடக்க இன அழிப்பையும் நான் எழுதியிருக்கிறேன். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோதே, போரை எதிர்த்தும் போர் புரிந்த தரப்புகளைச் சபித்தும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். யுத்தத்தின் இறுதிக் காலங்களில் வன்னியில் நடந்தவற்றில் ஓர் துளிதான் ‘பொக்ஸ்’ நாவல். யுத்த வெற்றி எக்காளங்களும் பொய்களும் வரலாறாகப் புனையப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை எதிர்கொள்ள அந்த நாவலை எழுதினேன். அதை ‘யுத்தத்தின் உப வரலாறு’ என்று குறிப்பிட்டேன்.

ஒரு நாவலை எழுதியெல்லாம், சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் யாருமே தங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. மொண்ணைத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை ஏமாற்றி விடுவது போலவெல்லாம் தீவிர இலக்கிய வாசகர்களை ஏமாற்றி விட முடியாது அகரன்.

தமிழ் தேசியத்தின் மீது உங்களுக்கிருக்கும் கசப்பையும் ஒவ்வாமையையும் நான் அறிவேன். மொண்ணைத்தனமான கருத்துக்களை பேசுபவர்கள் எல்லா சித்தாந்த – கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் ஷோபா. அதனால் மொண்ணை மார்க்சிஸம் பேசுவபவர்கள், மொண்ணை ரொஸ்கிசம் பேசுபவர்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். நான் கேட்ட கேள்வியை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் வாசகப்பரப்பில் இறுதிக்கட்ட யுத்த காலங்களைப் பற்றிய புனைவுகளுக்கு ஒரு பெரிய அவதானம் திரும்பியிருந்த சூழலில், அப்படியொரு களத்தை நீங்களும் தேர்ந்தேடுத்தீர்களா?

பரந்துபட்ட தமிழ் வாசகப் பரப்பில் கவனமும் பாராட்டுகளும் குவிக்க விரும்பி நான் எழுதினால், புலிகளின் அரசியலை நியாயப்படுத்தி எழுதுவதே அதற்கான குறுக்கு வழியாகும். அதை நான் செய்வதில்லை. இஸ்லாமியர்களைப் பழித்து எழுதினால் அதற்கும் ஒரு திடீர் வாசகப் பரப்புள்ளது. அதையும் நான் செய்ய மாட்டேன். எழுத்தில் சமரசம், சந்தர்ப்பவாதம், சந்தை நோக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழின் பெரிய பெரிய பதிப்பகங்களெல்லாம் என் நூல்களை வெளியிடத் தயாராக இருக்கும் போதும் நான் ‘கருப்புப் பிரதிகள்’ என்ற எளிய பதிப்பத்துடன் தான் தொடர்ந்தும் பயணிக்கிறேன். நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் ஒரு துளியை நாவலாக்குவதற்கு நீங்கள் கற்பிக்க முயலும் காரணங்கள் எதுவுமே தேவையில்லை. நெஞ்சில் ஈரமும் அறமும் கொஞ்சம் எழுதத் தெரிந்திருப்பதுமே போதுமானது.

தமிழ் தேசியம் என்ற அரசியல் கருத்தாக்கத்தின் மீது எனக்கு ஒவ்வாமையும் கசப்பும் உள்ளது என நீங்கள் எப்படியொரு முடிவுக்கு வந்தீர்கள் எனத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் என்றாலே ‘புலி அரசியல்’தான் என நீங்கள் எண்ணவும் தேவையில்லை. ‘மொண்ணைத் தமிழ்த் தேசியர்கள்’ என்று நான் வகைப்படுத்தும் போதே, கூர்மையான தமிழ் தேசியர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் நிலாந்தன், இராசேந்திர சோழன் போன்றவர்கள் அத்தகையவர்கள்.

புலிகளுக்கு முன்பும் தமிழ் தேசியம் இருந்தது, பின்பும் இருக்கிறது. என் வயதுக்கு எனக்கு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ மூலம்தான் தமிழ் தேசியவாத எண்ணமுண்டாயிற்று. திராவிட இயக்கம், சோசலிஸம் போன்றவை பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். அதன் வழியேதான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். புலிகளுக்குப் பின்னும், தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு விமர்சனங்களோடும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே’ கொடுக்கிறேன்.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மிகப்பலமாக ஆதரித்து எழுதுபவன் நான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து மழுப்பலாகப் பேசிக்கொண்டிருந்த Frontline Socialist Party-யை நான் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை நியாயப்படுத்தி ஒரு தொடர் விவாதமே செய்தேன்.

ஒரு பெருந்தேசிய இனம், சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கினால், சிறுபான்மையினர் தங்களது தேசிய இன அடையாளத்தை முன்வைத்து அரசியல் மயப்படுவதையும் அணியாவதையும் யார்தான் நிராகரிக்க முடியும்? அதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் அரசியல் பாதுகாப்பு இருக்கிறது?  இலங்கையில் தமிழ் இனவழித் தேசியவாதமும் முஸ்லீம் இனவழித் தேசியவாதமும் இவ்வாறுதான் நிலைபெற்றன. மார்க்ஸியத்தில் மட்டுமல்லாமல், முதலாளித்துவ சனநாயக நெறிகளிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஓர் முக்கிய கருத்தாக்கம். பாலஸ்தீனர்களினதும், திபெத்தியர்களினதும், காஷ்மீரிகளினதும் தேசியவாத அரசியலை ஓயாமல் ஆதரிப்பவர்கள், எப்படி ஈழத்தமிழ்த் தேசியவாதத்தை மட்டும் நிராகரித்து விட முடியும்!

என்னுடைய ஒவ்வாமையும் கசப்பும் ஈழத்தமிழ்த் தேசியவாதத்தைத் தவறான பாதையில் முன்னெடுத்தவர்களைப் பற்றியது தான். தேசியத்தின் பெயரால் ‘ஏக பிரதிநிதித்துவம்’ எனப் பிரகடனப்படுத்தி சனநாயக அரசியலை மறுத்தவர்கள் மீது தான். மாற்றுக் கருத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொன்று போட்ட பாஸிஸ்டுகளின் மீது தான். சகோதர இன அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றவர்கள் மீது தான். மக்களை மனிதக் கேடயங்களாக உபயோகித்தவர்கள் மீது தான். தங்களது தவறான அரசியல் வழிமுறைகளால் மக்களைக் கொண்டுபோய் நந்திக்கடலில் தள்ளியவர்கள் மீது தான். அப்படியானால் புலிகளின் அரசியலில் நல்ல அம்சங்களே இருக்கவில்லையா? இருந்தால் சொல்லுங்கள், உங்களுடன் சேர்ந்து நானும் அந்த அம்சங்களிலாவது அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறேன்.

நீங்கள் சொல்வதுபோல மொண்ணைக் கருத்துள்ளவர்கள் எல்லாக் கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மை. மார்க்ஸியம் பேசுபவர்களிலும் மொண்ணையானவர்கள் இருப்பார்கள். இவர்களைக் குறிக்கத்தான் மார்க்ஸியத்தில் வறட்டுவாதம், காட்சிவாதம், அனுபவவாதம் போன்ற கலைச்சொற்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

“மொண்ணை மார்க்ஸியர்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்” என நீங்கள் உரைப்பது உங்களுக்குப் பெருமையளிக்கும் விசயமல்ல அகரன். விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் பகுத்துப் பேச நீங்கள் பயில வேண்டும். ரங்கநாயகம்மாவின் ”சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்ற நூல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறதல்லவா. அந்த நூலை நீங்கள் படிக்கத் தொடங்கினால், இரண்டாவது பக்கத்திலேயே உங்களுடைய இருதயம் ‘மொண்ணை மார்க்ஸியர்’ என முணுமுணுக்குமென நான் உங்களுடன் பந்தயம் கட்டத் தயாராகயிருக்கிறேன்.

உங்கள் கதைகளில் வரக்கூடிய ‘பகிடி’ மற்றும் சில விவரணைகள் நேரடியாகவே தமிழ் இயக்கங்களை கடுமையாகச் சாடின. இதன் வழியாகவும் உங்கள் மீது வாசக கவனம் திரும்பியது. உங்களுடைய சிறுகதைகளில் இந்தச் ‘சாடல் கலை’ தொடர்ச்சியாக தன்னியல்பில் வருகிறதா? அல்லது தீர்மானமாக திட்டமிட்டு எழுதுகிறீர்களா?

தமிழ் இயக்கங்களையோ போராளிகளையோ கடுமையாகச் சாடி எழுதினால் வாசக கவனம் நம்மீது திரும்பும் என்பது மனப்பிரமை. நன்றாகக் கதை எழுதினால் மட்டுமே வாசகர் கவனம் உங்கள் மீது திரும்பும். சாடுகிறேன், சங்கறுக்கிறேன் என எதையாவது கேவலமாக எழுதி வைத்தால் நேர்மையான இலக்கிய வாசகர்கள் பிளந்துகட்டி விடுவார்கள். அப்படித்தான் சாத்திரியின் ‘திருமதி.செல்வி’ கதையும் உங்களது ‘சாகாள்’ கதையையும் வாசகர்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டன.

எந்தப் போராளிகளைக் குறித்தும் இல்லாத பொல்லாத பழிகளை நான் எழுதியதில்லை. என்னைச் சுற்றியுள்ள இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையேயும், அந்த எழுத்து அறம் மட்டுமே என்னைத் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது. எந்தக் கூட்டத்திலும், எந்தப் புத்தக சந்தையிலும், எந்த நேர்காணலிலும் எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியத்தை அந்த அறமே எனக்குக் கொடுத்திருக்கிறது. 

நிற்க; நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. எல்லாமே திட்டமிடல்தான். சம்பவங்களின் தேர்வு, அவற்றை வரிசைப்படுத்தல் அல்லது வரிசை குலைத்தல், திரும்பத் திரும்ப ‘எடிட்’ செய்தல் போன்ற எழுத்துத் தொழில்நுட்பங்களின் மூலம்தான் என் பிரதிகளை உருவாக்குகிறேன்.

இந்த எழுத்துத் தொழில்நுட்பத்தை உங்களின் ‘இச்சா’ நாவல் பெருமளவில் கொண்டிருக்கிறது. உங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிற வாசகனுக்கு இதுபோன்ற ஒரே தன்மையிலான தொழில்நுட்ப எழுத்து சலிப்பை ஏற்படுத்தாது என்று எண்ணுகிறீர்களா? மேலும் கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு உங்கள் எழுத்துக்கள் பயணப்படாமல் போய்விடுமல்லவா?

“கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு” என்ற உங்களது வார்த்தைகள் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்பது போன்ற ஒரு கவித்துமான வரி எனப் புரிகிறதே தவிர, எனக்கு வேறு எதுவும் புரியவில்லை. தயவுசெய்து அடுத்த கேள்விக்குப் போகலாம்.

இன்றைக்கு தமிழ் இலக்கியம் எனும் பொதுச்சொல்லில் ஈழத்தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. அதாவது போரிலக்கியப் பிரதிகளுக்கு. அவற்றில் குணா கவியழகன், சயந்தன், தமிழ்க்கவி, ஷோபாசக்தி, தமிழ்நதி, தீபச்செல்வன், வாசுமுருகவேல் போன்றோரின் நாவல்கள் அதிகமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. சக போரிலக்கியப் பிரதிகள் குறித்து உங்களுடைய மதிப்பீடுகள் என்ன?

இந்தப்போரிலக்கியம்’ என்ற வகை குறித்து எனக்குத் தெளிவில்லை. அது போரைக் குறித்து எழுதும் இலக்கியமா அல்லது போர் நிலத்திலிருந்து எழுதும் இலக்கியமா?

போரைக் குறித்து எழுதுவதே போரிலக்கியம் என்றால் ஜெயமோகனின் ‘உலோகம், டி.டி. ராமகிருஷ்ணனின் ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ போன்றவையும் போரிலக்கிய வகைக்குள் வருமா? போருக்குள் இருந்து போரைப் பற்றி எழுதுவதே போரிலக்கியம் என்றால் முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் எழுதுபவற்றையும் போரிலக்கியம் என்றுதானே சொல்ல வேண்டும்.  நீங்கள் கொடுத்திருக்கும் ‘போரிலக்கிய’ எழுத்தாளர்கள் பட்டியலிலுள்ளவர்கள் எழுத வருவதற்கு முன்பே, இந்த  முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் போரைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆர்.எம்.நௌஸாத், சர்மிளா ஸெய்யித் போன்றவர்களின் நாவல்களெல்லாம் பேசப்படாத நாவல்கள் என்றா சொல்லப்போகிறீர்கள்?

போரினால் அனுபவங்களைப் பெற்ற தமிழர்களால் எழுதப்பட்ட நாவல்களே போரிலக்கியம் என நீங்கள் ஒரு குறுகிய வரையறையை வைத்தால் கூட, உங்கள் பட்டியலில் தேவகாந்தன், மெலிஞ்சி முத்தன், விமல் குழந்தைவேல், நொயல் நடேசன், யோ.கர்ணன் போன்றவர்கள் ஏனில்லை?  நீங்கள் கொடுத்த பட்டியலிலுள்ளவர்களுடைய நாவல்களுக்குச் சமமாகவோ அல்லது சற்றே அதிகமாகவோ இவர்களது நாவல்களும் வாசிக்கப்பட்டு பேசப்படுகின்றனவல்லவா. போரிலக்கியம் என நீங்கள் குறிப்பிடுவது ‘போர்ப்பரணி’யை அல்ல என்றே நான் நம்புகிறேன் .

ஈழத்துப்போரைப் பற்றி எழுதியிருக்கும் இலக்கியப் பிரதிகளை எப்படி நான் மதிப்பிடுகிறேன் என்பதை வேண்டுமானால் சுருக்கமாகச் சொல்லலாம். ஓர் இலக்கியப் பிரதியை மதிப்பிடுவதற்கு எழுதும் கலை, இலக்கிய அழகியல் என்பவை முக்கியமானவை எனினும் இந்தத் திறன்கள் வாய்க்கப்பெற்ற ஓர் எழுத்தாளர்; சாதியை, மத அடிப்படைவாதத்தை, இனவாதத்தை, பாஸிசத்தை நியாயப்படுத்தி ஓர் இலக்கியப் பிரதியை எழுதினால், நான் அந்தப் பிரதியை நிராகரிக்கவே செய்வேன். நீங்களும் நிராகரிப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். ஏனெனில் அது அடிப்படை மனிதநேயத்துடனும் அறத்துடனும் சம்மந்தப்பட்டது. உச்சமாக இலக்கியத்திறன் வாய்க்கப்பெற்ற எஸ்.பொவின் ‘மாயினி’ நாவலை நான் இதனாலேயே நிராகரித்தேன். மிகச்சிறந்த கவியான கி.பி. அரவிந்தனின் கடைசிக் காலத்து எழுத்துகளையும் இந்தக் காரணங்களுக்காகவே நிராகரித்து எழுதினேன். இனப்படுகொலை செய்தவர்களையோ, சனநாயகப் படுகொலை செய்தவர்களையோ நியாயப்படுத்தி இலக்கியம் எழுதுவதும் போர்க்குற்றத்தின் ஒரு பகுதியே.

போரை எதிர்த்து இலக்கியத் தரத்தோடு பிரதிகளை உருவாக்கிய ஏராளமானவர்கள் நம்மிடையே உள்ளனர்.  சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்ததற்காகச் சில எழுத்தாளர்கள் தமது உயிரையும் எங்கள் மத்தியில்தான் இழந்தார்கள். யுத்தத்தை மறுத்தும் சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தும் எழுதப்பட்ட பிரதிகளே அறம் சார்ந்த பிரதிகள். சனநாயகத்தின் குரல்வளையை அறுத்துப் போட்டவர்களைக் கடவுளாகக் கொண்டாடியும், சிறார்களைப் போரில் கட்டாயமாக இணைத்ததை மழுப்பியும், சகோதர இனத்தவர்கள் மீதான படுகொலைகளை  நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட பிரதிகள் வெறும் காகிதக்குப்பைகள். நான்கூட என்னுடைய இருபத்தைந்து வயதுக்கு முன்னால், இப்படிச் சில குப்பைகளை எழுதியிருந்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஏனெனில் இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.

‘போரிலக்கியம்’ என்ற வகைப்பாட்டில் நீங்கள் குறிப்பிடும் ஈழ எழுத்தாளர்களை சேர்த்துக்கொள்ளலாம். நான் என்னுடைய வாசிப்பின் மதிப்பீட்டில் தான் சில பெயர்களைக் குறிப்பிட்டேன். அது அவ்வளவு தான் என்ற தீர்ப்பல்ல. நீங்கள் கூறுவதைப் போல சனநாயகத்திற்கான குரல் (உங்களுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் ஏனைய இயக்கங்களையும், இலங்கை அரச பயங்கரவாதத்தையும் லேசாக சாடுவது/தொட்டுக்கொள்வது) கொடுத்து எழுதப்பட்ட சமகால பிரதிகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

என்னுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டுவது, மற்றவர்களை லேசாகச் சாடுவது, என நீங்கள் சொல்வதை நான் பணிவுடன் மறுக்கிறேன்.

நான் உங்களை ஒன்று கேட்கிறேன். இலங்கை அரசின் இனப்படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் என்னளவுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், நடிப்பாகவும், பன்னாட்டு இலக்கியக் கருந்தரங்குகளாகவும், தொலைக்காட்சி – பத்திரிகை நேர்காணல்களாகவும் தமிழ் பரப்பில் மட்டுமல்லாமல் சர்வதேசச் சமூகத்திடமும் எடுத்துச்சென்ற இன்னொரு தமிழ் இலக்கிய எழுத்தாளனைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நான் முகநூலுக்குள்ளும் மொண்ணைத் தமிழ்த் தேசியர்களுக்குள்ளும் என்னைக் குறுக்கிக்கொண்டவன் கிடையாது. என்னுடைய தளம் சற்றே பெரிது.

பொக்ஸ், ம், இச்சா நாவல்கள் நீங்கள் படித்திருப்பதாகச் சொன்னீர்கள்.. இந்த நாவல்கள் இலங்கை அரசையா.. புலிகளையா முதன்மையாக விமர்சிக்கின்றன? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

மற்றைய தமிழ் இயக்கங்களைப் பற்றி என்ன எழுதிக் கிழித்தாய் எனக் கேட்டால் அதையும் போதுமானளவுக்குக் கிழித்திருக்கிறேன். மற்றைய முப்பது இயக்கங்கள் செய்த அராஜகங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தட்டிலும், புலிகள் தனியொரு இயக்கமாகச் செய்த அராஜகங்களை மறுதட்டிலும் வைத்து ஒரு தராசில் நிறுத்துப் பார்த்தால், புலிகளின் தட்டே தாழ்வதால் அவர்களைப் பற்றித்தான் அதிக விமர்சனங்கள் எழும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்க ஆசைப்படுகிறேன். மற்றைய தமிழ் இயக்கங்களது அராஜகங்களை மூடி மறைப்பதால் எனக்கு என்ன இலாபம்? நானென்ன அந்த இயக்கங்களது முன்னாள், இந்நாள் உறுப்பினரா? என்னுடைய எந்தப் புத்தகத்துக்காவது அவர்கள் ஏதாவது கூட்டம் கீட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா? என்னுடைய எழுத்துகளைப் பரப்பினார்களா? மாறாக விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய ‘மானுடத்தின் ஒன்றுகூடல்’ நிகழ்வில்தான் என்னுடைய ‘கொரில்லா’ நாவலைப் பற்றிப் பேசப்பட்டது எனக் கேள்விப்பட்டேன். டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாவோ, சித்தார்த்தரோ எனது ஏதாவதொரு புத்தகத்தைப் படித்தார்கள் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் பொட்டு அம்மானும் வே.பாலகுமாரனும் என்னுடைய வாசகர்கள் எனப் புலிகள் இயக்கத்திலிருந்த கருணாகரன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்து சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதிகள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். பாசாங்குக்கும், ஃபாஷனுக்கும் சனநாயகம் பற்றிப் பேசாமல், உண்மையான கரிசனையோடு எழுதப்பட்ட ஊழிக்காலம், உம்மத் நாவல்களும், கருணாகரனின் கவிதைகளும், செல்வம் அருளானந்தத்தின் ‘சொற்களில் சுழலும் உலகம்’ பிரதியும், யதார்த்தனின் கதைகளும், எப்போதுமே நான் விசுவாசிக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகளும் உடனே என் நினைவுக்கு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும், சமாதனத்திற்காக யுத்தம் செய்வதாக கூறி இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்காது “கதை” சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேரவாத பவுத்த சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதத்தின் இனப்படுகொலையை உலகம் மறந்து போயிற்று. தமிழ்த்தரப்பின் அரசியல் ராஜதந்திர தோல்வியாக இதனைப் பார்க்கலாமா?

நீங்கள் தமிழ் அரசியல் தலைமைகளின் இராசதந்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். சர்வதேசம் போர்க்குற்ற விசாரணையை நடத்தாது, இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்காது என்றெல்லாம் படிப்பறிவற்ற எனக்கே தெரியும்போது, சட்டங்களைக் கரைத்துக் குடித்த சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் அது தெரியாதா! அவர்கள் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, என்றெல்லாம் மனமாரப் பொய்சொல்லி, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான  இராசதந்திர நகர்வுகளை வெற்றிகரமாகச் செய்தார்கள். இப்போது அதைப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பேசக்கூடும்.

சிவசேனை சச்சிதானந்தன், காசி ஆனந்தன் போன்றவர்களுடையது ஆன்மீக இராசதந்திரம். ‘ஈழத்தமிழர்கள் இந்துக்களே’ எனச் சொல்லி இந்தியச் சங்கிகளின் ஆதரவைப் பெறுவது அவர்களின் திட்டம். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ன  செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழலுக்காகத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது ‘தர்மத்திற்கே தண்டனையா’ என ஓர் இராசதந்திர அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் என்பது மட்டுமே என் ஞாபகத்திலுண்டு.

சர்வதேச வல்லரசு நாடுகள், தமது அரசியல் மற்றும் மூலதன நலன்களுக்காக இலங்கை அரசுடன் நல்லுறவையே கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளும், இவற்றால் இயக்கப்படும் பொது நிறுவனங்களும் இலங்கைப் பிரச்சினையில் மனிதவுரிமை மீறலைக் கண்காணிப்பது என்ற எல்லையுடனேயே தங்களை நிறுத்திக் கொண்டிருக்ககிறார்கள். அதையும் அவர்கள் சரிவரச் செய்யவில்லை. இதைத் தாண்டி அவர்கள் இலங்கை இனப் பிரச்சினையில் தலையீடு செய்யப் போவதில்லை. முதலில் இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டோமா? இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள பத்து வருட காலங்கள் போதாதா? இனி இலங்கையில் நடக்கும் எந்த அரசுக்கொள்கை மாற்றமும் நாடாளுமன்ற அரசியல் வழியேதான் நடக்கும். அதை எதிர்கொள்ளச் சிறுபான்மை இனங்களுக்குத் தேவையானவை தமக்கிடையேயான அரசியல் ஒற்றுமையும் அணித்திரட்சியுமே. 

நாடாளுமன்ற அரசியல் வழியே இலங்கையில் அரசுக்கொள்கை மாற்றம் நிகழ்ந்துவிடுமென நீங்கள் கூறுவது உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது ஷோபா. எப்படி இத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான படுகொலைகளையும், வகைதொகையற்ற வன்முறைகளையும் எந்தவித ஆட்சேபணையுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இலங்கையின் நாடாளுமன்ற அரசியல் மூலம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு விடிவு கிடைக்குமென எண்ணுகிறீர்களா? அதற்கு உங்கள் அரசியல் அறிவில் என்ன உத்தரவாதம்?

நாடாளுமன்ற அரசியல் வழியாகத்தான் இலங்கையில் அரசினுடைய கொள்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? வேறெதாவது வழியில் இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு இப்போது நம்பிக்கையில்லை.

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடைந்து அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது அற்புதமான விஷயம்தான். அது நடந்துவிடும் என்றுகூட நான் நீண்ட நாட்களாக நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, ஒரு ட்ராட்ஸ்கியக் கட்சியோடு சில ஆண்டுகள் வேலையும் செய்தேன். ஆனால் அப்படி நடப்பதற்கான எந்த அகப் – புறச் சூழல்களும் இலங்கையில் கிடையாது. இயக்கங்களின் வழியில் ஆயுதப் போராட்டத்தை எங்கள் மக்கள் முன்னெடுப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை. தவிரவும் ஆயுதப் போராட்டத்தைக் காட்டிலும் நாடாளுமன்ற அரசியல் முறையே சிறந்தது என்றே நான் இப்போது நம்புகிறேன்.

இலங்கையில் புரட்சி வரும், எழுச்சி வரும், அய்ந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்றெல்லாம் யூ-டியூபில் கணக்குள்ள எவர் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைச் சொல்வதால் இவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை. இப்படிச் சொல்பவர்களில் ஏறக்குறைய முழுப்பேருமே இலங்கைக்கு வெளியே வாழ்பவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே.

இன்று இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற அரசியலில்தான் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்றன. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட ஒரு தேர்தல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற அரசியலில் சிறுபான்மை இனங்கள் இன்னும் முற்றாக வலுவிழந்து விடவில்லை. அவர்கள் ஓரணியில் நின்றுதான் மகிந்த ராஜபக்சவைத் தோல்வியடையச் செய்தார்கள்.  ‘தமிழர்களின் வாக்குகளாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என மகிந்தவே சொன்னார். இம்முறை சனாதிபதி தேர்தலில் இன்னும் அற்புதமான முறையில் சிறுபான்மை இனங்கள் ஒருங்கே நின்று கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தார்கள். மாகாண சபைத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னேயே திரண்டார்கள். இந்த ஒற்றுமை இன்னும் வலுப்பட வேண்டும். தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்க்கட்சிகள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்கள், தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாக மாறுவதால் மட்டுமே இலங்கை அரசியல் சாசனத்திலோ அரசுக் கொள்கைகளிலோ மாற்றம் கொண்டுவர முடியும். இது நடக்காதென்றால் முழு இலங்கையும் நீண்டகாலப் போக்கில் சிங்கள மயமாக்கப்பட்டு விடும். பெரும்பான்மை இனத்தின் கீழே சிறுபான்மை இனங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த எத்தனையோ நாடுகளில் கடைசியாக இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்.பொ, உங்கள் படைப்புக்களில் பாதிப்பைச் செலுத்துகிறாரா?

என்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் அவரின் பாதிப்பு நிச்சயமாக இருந்தது. எனினும் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு எனக்கான பாணியை உருவாக்கி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அப்பையா எஸ்.பொவும், தந்தை டானியலும், கு. அழகிரிசாமியும், டால்ஸ்டாயும், பாரதியும், மகா ஸ்வேதாதேவியும், ஜெயகாந்தனும் தங்கள் எழுத்துகள் வழியே எனக்கு வாழ்க்கையைக் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் என் ஆன்மாவை நிறைத்திருக்கிறார்கள். என் எழுத்தில் மட்டுமல்ல; என் தனிப்பட்ட வாழ்க்கையில், அன்றாடச் செயற்பாடுகளில், அரசியல் அறத்தில், காதல் வாழ்க்கையில், ஏன் செக்ஸில் கூட அவர்கள் கலந்திருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு தேடல் அவசியமானது என்கிற கருதுகோள் எனக்குண்டு. நீங்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டின் சித்திரங்களை உங்கள் புனைவுகள் இன்னும் தீவிரமாக வெளிப்படுத்த தொடங்கவில்லை. ‘வெள்ளிக்கிழமை’ சிறுகதையில் அது தொடப்பட்டிருக்கிறது. ஏன் நீங்கள் பிரான்ஸை உங்களின் அனுபவங்களுக்குள்ளால் இன்னும் படைப்புக்களில் முன்வைக்கத் தொடங்கவில்லை ?

ஏனென்றால் எனக்கு பிரான்ஸ் நாட்டோடு உணர்வுபூர்மாக எந்தப் பிணைப்பும் ஏற்படவில்லை. இந்நாட்டின் மொழியை, கலாசாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு எந்த உந்துதலும் ஏற்படவில்லை. மனம் முழுவதும் ஈழத்தைச் சுற்றியே அலைகிறது. நினைவுகள், கனவுகள், கற்பனைகள் எல்லாமே தாய்நாட்டைச் சுற்றியதுதான். இது ஏதோ எனக்கு மட்டுமேயுள்ள இயல்பாக நீங்கள் கருதத் தேவையில்லை. என் தலைமுறையில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினருக்கும் பொதுவான பண்பு இது. அதுவும் பழைய இயக்கக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் அறுபது வயதைக் கிட்டத்தட்ட நெருங்குகிறார்கள்… ஆனால் இன்னமும் எண்பதுகளின் ஈழத்திலும் வெலிகடைச் சிறையிலும் இந்தியாவின் சவுக்குமரக் காடுகளிற்குள்ளுமே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

புலம்பெயர் வாழ்வின் மிக முக்கியமான பிரச்சனையை பதிலாக  கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய இலக்கிய செயற்பாட்டினைக் கடந்து நீங்கள் இன்றைக்கு ஒரு திரைப்பட நடிகரும் கூட. நடிகராக உங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள்?

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம், மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். அப்போது மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக அடையாளப்படுத்துவதற்காக, இலங்கையில் தேசிய அடையாள அட்டைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்மையில் இந்தியாவில் கடும் எதிர்ப்புக்குள்ளான CAA -NPR போன்ற சட்டமேயது. அந்தச் சட்டத்தை எதிர்த்து எங்களது கிராமத்துப் பண்டிதர் க.வ.ஆறுமுகம் ‘அடையாள அட்டை’ என்றொரு நாடகத்தை எழுதி மேடையேற்றினார். அந்த நாடகம் ஓரளவு பிரபலமானது. யாழ் முற்றவெளி அரங்கில் கூட நிகழ்த்தப்பட்டது. அந்த நாடகம் நடத்துவதற்கு காவற்துறையினரின் இடைஞ்சலுமிருந்தது. அந்த நாடகத்தில் என் ஊரவர்களே நடித்தார்கள். என் அப்பாவும் நடித்திருந்தார்.

எங்களது கிராமத்தில் எல்லோருக்குமே நடிக்கும் ஆசை இருந்தது என்றால் ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாகயிருக்கும். கிராமத் திருவிழாக்களில் நாடகமோ கூத்தோ நடத்தப்படும்போது, அதில் ஒரு பாத்திரத்தை எப்படியாவது பெற்றுவிடுவதற்கு பல இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்வோம். பத்து வயதிலேயே காலில் சலங்கை கட்டிவிட்டேன். நடிப்பது குறித்த என் கனவுகள் பெரிதாகவேயிருந்தன

‘தீபன்’ படத்துக்குப் பிறகு, சிறிதும் பெரிதுமாக பத்து பிரஞ்சு, ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளேன். மேடையிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. நடிகராக எனக்குக் கிடைத்த வரவேற்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். பிழையில்லாமல் நடிக்கிறேன் என்றுதான் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். Cannes, César, INOCA, Helpmann விருதுகளுக்காக, சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரையாகியிருந்தேன். எனினும் மகா நடிகர்கள்  விருதைத் தட்டிச் சென்றுவிட்டார்கள். சிறந்த நடிகருக்கான International Cinephile Society விருது கிடைத்தது. இவையெல்லாம் மற்றவர்கள் எழுதிய கதைகளில் நான் நடித்ததற்காகக் கிடைத்தவை. நான் திரைக்கதையில் பங்களித்து நடித்திருந்த ‘செங்கடல்’ திரைப்படம் இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டதும், ‘ROOBHA’ திரைப்படம் பால்புதுமையினர் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உரையாடல்களை உருவாக்கியதும் எனக்கு எழுத்தாளனாகவும் மகிழ்ச்சியளிப்பவை.

ஜெயமோகன், ஒரு குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக நிறைய இடங்களில் உங்களை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக வருகிற பகிடிக்கலையை அவர் பாராட்டியுமிருக்கிறார். அவரின் புனைவுகளில் உங்களுக்கு இணக்கமான பிரதி என்றால் எதனைக் கூறுவீர்கள்?

ஜெயமோகனின் பிரதிகளிலே எது பிடித்தமானது எனக் கேட்டாலே சொல்லமாட்டேனா? எதற்கு இப்படிச் சுற்றிவளைத்துக் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் பிடிபடவில்லை.

‘ஏழாம் உலகம்’ நாவலைச் சொல்வேன். நுட்பமான அவதானிப்புகளும் சித்திரிப்புகளுமாக மானுடத்தின் இழிவை முன்வைத்து, மாபெரும் குற்றவுணர்வுக்குள் நம்மைத் தள்ளி நிலைகுலையச் செய்துவிடும் நாவலது. மானுட அறங்களுள் தலையாதது ‘குற்றவுணர்வு’ என்ற கருத்து எனக்குண்டு. உலகின் மகத்தான பல நாவல்களில் இந்தத்தன்மை இருப்பதை அவதானித்திருக்கிறேன். புத்துயிர்ப்பு, ஆரண்யக், Uncle Tom’s cabin என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏழாம் உலகம் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘நான் கடவுள்’ திரைப்படத்தில்; அகோரி, அஹம் பிரம்மாஸ்மி கொலைக் கூத்துக்களை அடித்திருக்காவிட்டால் அந்தத் திரைப்படம் உலகத்தரத்துக்கு உயர்ந்து நின்றிருக்கும். அந்த நாவலுக்கும், படத்தை இயக்கிய பாலாவுக்கும், இசையமைத்த இசைஞானிக்கும் அந்த உயரத்திற்குச் செல்வதற்கான வல்லமையுண்டு.

உங்களுடைய வாசிப்பில் எப்போதும் ஞாபகத்தில் நிற்கும் புத்தகம் எது? ஞாபகத்தில் நிற்பதற்கான காரணம் என்ன?

ஆர்.கே.நாரயணன் எழுதிய ‘Malgudi Days’ நூல் குறித்து, என் சிறுவயதிலேயே கேள்விப்பட்டிருந்தேன். அதைப் படிப்பதற்கு மிகவும் ஆர்வமாகயிருந்தாலும், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாததால் படிக்க முடியவில்லை. அந்நூல் பல்வேறு உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது, நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளெல்லாம் அந்நூலைப் புகழ்ந்தன எனக் கேள்விப்பட்ட போதெல்லாம், அந்நூலைப் படித்தாக வேண்டுமென வெறியே வந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் காத்திருந்ததன் பின்பாக, சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்தேன்.

ஆனால் அந்நூலில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை மிகச் சாதாரண கதைகளே. வீரகேசரி வாரமலர்களில் இவற்றைவிடச் சிறந்த கதைகளை நான் படித்திருக்கிறேன். எதைக்கண்டு வெளிநாட்டார் இந்நூலை வணக்கம் செய்தார்கள் என எனக்கு இன்னும் புரியவேயில்லை. இந்தப் புத்தகம் இனி எப்போதும் என் ஞாபகத்தில் நிற்கும். இனி ஒவ்வொரு புத்தகத்தை வாங்கும்போதும் இந்நூலின் வாசிப்பு அனுபவம் என்னை எச்சரித்து சாக்கிரதையாக வழிநடத்தும்.

உங்களுடைய புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இல்லை. ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ ஒரு கட்டுரைத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டாலும் அதே புனைவு மொழியே இருக்கிறதே ஏன்? இதனையுமொரு பின்நவீனத்துவ செயற்பாடென விளங்கிக்கொள்ளலாமா?

பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஏன் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். அறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ நூலில் கையாண்ட விமர்சன மொழி என்னை மிகவும் பாதித்திருந்த காலத்தில்தான் எனது முதல் நீள் கட்டுரையான ‘சோவியத் சினிமாக்களும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்ற கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையில் ‘கம்பரசம்’ பாணியையே அடியொற்றினேன். கதைச் சுவாரசியத்தோடேயே கட்டுரைகளையும் எழுதிவிடலாம் எனத் தெரிந்துகொண்டேன்.

புதிய ஜனநாயகம் – கலாசாரம் இதழ்கள் கையாண்ட மொழியின் பாதிப்பும் என்னிடருந்தது. அதனால் என் விமர்சன எழுத்துகளில் அப்போது ஒரு மூர்க்கத்தனமுமிருந்தது. இப்படியாகத்தான் இன்றைய என் அபுனைவு மொழி உருவானது. இதை உங்களால் நம்பமுடியவில்லை என்றால், கூட்டுப்புழுவிலிருந்துதான் பட்டாம்பூச்சி உருவாகிறது என்பதையும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.

கொரோனா கொள்ளை நோய்க்காலத்திற்கு பின்பான உலக அரசியலில் நிறைய நெருக்கடிகள் நிகழுமென எல்லோரும் கருதுகிறார்கள். இந்த நோயின் தாக்கம் நீங்கள் வாழக்கூடிய பிரான்சிலும் தற்போது அதிகமாகவே இருக்கிறது. இதன் பிறகான உலகம் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளுமென அச்சப்படுகிறீர்கள்?

எதிர்கொள்ளப் போகும் பாரிய பொருளாதரச் சரிவு, வேலையிழப்பு, மருத்துவக் கட்டமைப்பின் சீர்குலைவு எல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்கள்தான். அதிகமும் கவனம் குவிக்கப்படாத விஷயமொன்றைக் குறித்தும் நாம் அச்சப்பட வேண்டியிருக்கிறது.

போர், அரசியல் அச்சுறுத்தல்கள், இயற்கை அழிவுகள், வறுமை போன்ற காரணங்களால் அகதிகளும் குடியேற்றத் தொழிலாளர்களும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த அகதிகளதும் குடியேற்றத் தொழிலாளர்களதும் வருகையைத் தடுக்க பலநாட்டு அரசாங்கங்கள் கடுமையாக முயன்று கொண்டேயிருந்தன. இந்தப் பேரழிவைச் சாக்காக வைத்து, அகதிகளுக்கும் குடியேற்றத் தொழிலாளர்களுக்கும் கதவுகள் முற்றாகவே மூடப்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்.

எனக்கொரு ஆசையுமுள்ளது. கடவுள் நம்பிக்கையாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னால் அவர்களுடைய முட்டாள்தனத்தை நம்பவே முடியாமலிருக்கிறது. அதிலும் கற்றறிந்தவர்கள், இலக்கியம் பயின்றோர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எப்படித் தாங்கள் கற்ற அறிவுக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் கோயில்களிலும் சேர்ச்சுகளிலும் பள்ளிவாயில்களிலும் சடங்குகளிலும் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. சக மனிதர்களும் அறிவாயுதமும் குழந்தைகளும் கொடுக்காத அரவணைப்பையும் மனநிம்மதியையும் நம்பிக்கையையுமா கடவுள் என்கிற கற்பிதம் கொடுத்துவிடப் போகிறது? ஆகக் குறைந்தது கடவுளை வணங்குவதில் எவ்வளவு நேரமும், சடங்குகளில் பொருளும் வீணாகிறது என்று கூடவா யோசிக்க மாட்டார்கள்? இது பெரும் மூடநம்பிக்கை என்றால், சிறுதெய்வ வழிபாடு எனச்சொல்லி சிறு மூடநம்பிக்கையைப் பேசுபவர்கள் தனி. பண்பாடு, மரபு எனச் சொல்லி மதங்களைப் தூக்கிப்பிடிக்கும் அறிவுஜீவிக் கிரிமினல்களுக்கும் குறைவில்லை.

கடவுள் நம்பிக்கையே அற்ற முக்கால்வாசிச் சனத்தொகையைக் கொண்ட சுவீடன், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனிதர்களெல்லாம் என்ன கெட்டுவிட்டார்கள்? அவர்களிடமும் காதலும் உறவும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கலாசாரமும் மனித மாண்புகளும் இல்லையா என்ன! இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதுபோல, மதத்தின் பெயரால் சக மனிதனையும் பெண்களையும் அவர்கள் விலக்கியா வைக்கிறார்கள்? கொன்றா போடுகிறார்கள்?

புரட்சிகளின் பின்னாக மட்டுமல்லாமல், மனிதப் பேரழிவுகளின் பின்னாலும் கூட மக்கள் கூட்டாகத் தங்களது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னாக அய்ரோப்பாவில் சனநாயகம், தனிமனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வெகுவாக அதிகரித்ததையும், உலகம் முழுவதும் காலனித்துவத்துக்கு எதிரான எழுச்சிகள் உத்வேகம் பெற்றதையும் நாம் கவனிக்கலாம்.

கண்முன்னே நடக்கும் கொரோனா என்னும் பெரும் மானுட அழிவைப் பார்த்தாவது, மூடப்பட்டு இருண்டு கிடக்கும் வழிபாட்டுத்தலங்களைப் பார்த்தாவது, இந்தக் கடவுள் நம்பிக்கையாளர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விழித்துக்கொள்ள மாட்டார்களா, மதங்களை விட்டு வெளியேற மாட்டார்களா என்ற பேராசை எனக்குண்டு.

***

RELATED ARTICLES

4 COMMENTS

  1. இந்த நேர்காணலில் ஜெயமோகன் எந்த வகையில் முக்கியமானவர்? அவர் குறித்த கேள்வி தேவைதானா??

  2. எழுத்தில் சமரசம், சந்தர்ப்பவாதம், சந்தைத்துவம் அற்ற நண்பர் ஷோபாசக்தியின் படைப்புகள் எனை மிகவும் ஈர்த்துள்ளன.

  3. இந்த நேர்காணலில், ஷோபா சக்தியை ஒரு விடுதலைப் புலி இயக்கதிற்கு எதிரானவராக காட்ட முயன்று, தவிக்கிறார் அகரன். உதாரணத்தில் ஒன்று: புலிகளை அல்லது எல்லா போராளிகளையுமே எதிர்க்கும் ஜெயமோகன், ஷோபாவைப் பற்றிச் சொன்ன கருத்தைப் பிடித்துக் கொண்டு, அவரை மெல்ல நுழைக்கிறார் நேர்காணலில்; ஆனாலும், ‘பிடித்த நாவல் ஏழாம் உலகம்; அதையும் படமாக எடுத்து ஆன்மீகமாக மாற்றப்போய் அதன் பாதை மாறியதைச் சுட்டிக்காட்டி, நானொன்றும் ஜெ.மோவின் கூட்டாளி அல்ல எனும் விதத்தில் ஒதுக்கித் தள்ளுகிறார் ஷோபா சக்தி. அருமையான நேர்காணல்.

  4. நேர்காணலை முழுமையாகப் படித்தேன். வளமைபோல சோபா சக்தி தான்னுடைய நிலைபாட்டை பாசாங்கில்லாமல் நேரடியாகவே முன் வைத்திருக்கிறார். ஈழத்தைப் பொறுத்து சோபாசக்தியோ குணா கவியழகனோ கருணாகரனோ தீபச்செல்வனோ நிலாந்தனோ நானோ ஏனைய ஈழத்து முக்கிய எழுத்தாளர்களோ கவிஞர்களோ நேரடியாகவோ ஆதரவுப் பணிகளூடாகவோ போராட்டத்தின் வெவ்வேறு பக்கங்களை தரிசித்தவர்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் விவாதிக்கும் சூழலை மேம்படுத்துவது மட்டுமே நாளைய விடுதலைக்கான தேடலின் கதவுகளாகவும் சன்னல்களாகவும் உள்ளது.
    நாளைய நம் பிள்ளைகளின் விடுதலைப் பாதையை ஒளிரச் செய்கிற தலையாய கடமையும் குற்ற உணர்வும் எமக்கு உண்டு. உலக வரலாற்றில் வெற்றி பெற்ற எல்லா தேசிய இன போராட்டங்களும் பெரும் தோல்விகளை சந்திதிருக்கின்றன. அவௌ வெற்றியின் திசை வழியை விமர்சனம் சுய விமர்சனம் அடிப்படையிலான விவாதங்கள் மூலமும் ஐக்கிய முன்னணிகள் மூலமுமே கண்டடைந்தன. அரசியல் காரர்களும் இலக்கிய காரர்களும் விமர்சனம் சுயவிமர்சனம் சார்ந்து எழுதாமல் முதுகு சொறிவதால் மாற்றம் ஒருபோதும் நிகழகாது. இதை உணர்ந்ததால்தான் எனக்கு கவிஞர்கள் எழுத்தாளர்களில் தமிழ்நதியும் சோபாசக்தியும் கருணாகரனும் தீபச்செல்வனும் நிலாந்தனும் அமர் சண்முகம் சிவலிங்கமும் எஸ்.எல்.எம் ஹனீபாவும் சோலைக் கிழியும் நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள்.

    நாவல் இலக்கிய வெளியில் தமிழ்நதி தீபச்செல்வனில் இருந்து குணாகவியழகன் வரை பலரும் எதிரி மீதான விமர்சனத்தை முன்னிலைப் படுத்துகிறார்கள். சோபாசக்தி போன்ற ஒருசிலர் மட்டுமே சுய விமர்சனத்தை முன்னிலைப் படுத்துகிண்றனர். எங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் விடுதலை ஞானத்தேருக்கு இந்த இரு சக்கரங்களும் மேலும் மேலும் பலப்படுவது அத்தியாவசியமாக உள்ளது. எங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்போகிற ஞானச் சுடரை சுற்றிவீசும் தேசிய சர்வதேசிய புயல்களில் இருந்து எந்த ஒரு கரத்தாலும் தனித்து காப்பாற்றிவிட முடியாது.

    இந்த விமர்சன சுயவிமர்சன எழுத்தாளர்கள் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல. அதை சோபாசக்தி உட்பட பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எமக்கு இவர்கள் எழுதும் கதை புத்தகங்களை விட அவை வளர்க்கும் விவாதங்களே முக்கியம். அவைதான் எங்கள் பிள்ளைகள் வெற்றிகரமாக வரலாற்றுப் பாதையில் முன்செல்ல அவசியமான ஞானத்தை வளர்க்கும். அந்த வகையில் சோபாசக்தியில் இருந்து தீபச்செல்வன் வரையிலான எழுத்தாளர்களும் கவிஞர்களும் தோல்வியின் பின்னரான இருண்ட வரலாற்றுக் காலக்கட்டதைக் கடக்க தேவையான சரியான முரண்பாடுகளையும் மோதல்களையிம் விவாதங்களையும் அதன்மூலமாக வெளிச்சத்தையும் உருவாக்குகிறார்கள்.
    எதிரிபற்றியும் நாம் வந்த பாதைகள் பற்றியும் இன்னும் தொடரும் சாதிக் கொடுமைகள் பற்றியும் தமிழர் மலையகத் தமிழர் முஸ்லிம்கள் உறவுகள் பற்றியும் சிங்கள ஜனநாயக சக்திகள் பற்றியும் நாம் விவாதிக்க உள்ளது என்பதை எங்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ளவேண்டும்.
    ஈழத்து கவிஞர்களும் எழுத்தாளர்களும் வளர்க்கும் வரலாற்று முக்கியத்தும்பெற்ற உரையாடலை புரிந்து கொள்ளுங்கள், தொடர விடுங்கள்.

    சிறிய அளவிலேனும் அரசியல் போர்கள ஆய்வுகள் மூலம் விமர்சனம் சுய விமர்சன அடிப்படையிலான அழுத்தங்கள் மூலமும் போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்தவர்களுள் நானும் ஒருவன். அதனால்தான் நம் வரலாற்று நதியின் இருவேறு கரைகளிலும் நிற்கிற சோபாசக்தியோ கருணாகரனோ தமிழ்நதியோ தீபச்செல்வனோ என்னுடைய நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள். எங்கள் இலக்கியகாரர்கள் ஈழ வாலாற்று நதியின் எதிரும் புதிருமான இரு கரைகளிலும் சரியாகவே நிலை எடுத்து செயல்படுகிறார்கள். எதிர்க் கரையை எதிர் முரண்பாடாக கருதுகிறவர்களே நாழைய ஈழத்து மக்களின் வரலாற்றை பிந்தள்ளுகிறார்கள். ஈழத்து வரலாற்று நதியின் இருகரை கலைஞர்களும் சந்திதுக் கலந்துரையாடும் நாகரீகம் வளர்வதை தடுத்து விடாதீர்கள்.

    நமது இருப்புக்கும் நமது பிள்ளைகளின் இருப்புக்கு சர்வதேச ஆதரவுடனான போராட்ட அரசியலா சர்வதேச அழுத்தங்களுடனான நாடாளுமன்ற அரசியலா அல்லது இரண்டுமா அவசியம் என்கிற தேடல் வெற்றி பெற வேண்டும். அது ஒருபோதும் சாத்தியமில்லை இது மட்டும்தான் சாத்தியம் என ஊகங்களின் அடிப்படையில் இருதரப்பிலும் ஒருசிலர் முன்னிலைப் படுத்தும் மாறாநிலை வாத்ததை நான் எப்பவுமே நிராகரித்து வருகிறேன். மாறாநிலை வாதங்களை நான் எப்பவுமே நிராகரித்து வந்துள்ளேன்,
    இப்பநாம் போரில் விழுந்த மக்கள் எழ உதவ வேண்டும். வேண்டும். அடுத்து என்ன என்பதை வளரும் இளைய தலை முறை தீர்மானிக்கும். இனக்கொலையில் முடிந்த பெரும் தோல்வியில் இருந்து இப்பதான் நாங்கள் மீண்டெழுந்து வருகிறோம். நாம் பிரதான வீதியில் கவடு வைக்க நெடுங்காலமாகும். நமது பிள்ளைகளுக்காக எல்லா சன்னல்களையும் கதவுகளையும் திறந்துவைத்து மட்டும்தான் நாம் இப்ப செய்யக்கூடியது , நாளை எங்களது பிள்ளைகள் ஈழத்திலும் எழுவார்கள். சர்வதேச அரங்குகளிலும் எழுவார்கள். அவர்கள் நமது வரலாற்று நகர்வின் சரியான திசையை காண்பார்கள், அவர்கள் எழுந்து முன்செல்வார்கள்.

    எதிரியை விமர்சிக்கிறவர்களது வெளியை ஏற்றுக்கொள்வதுபோலவே எதிரிமீதான விமர்சனங்களுடன் தூக்கலாக சுய விமர்சனமும் வைக்கிற சோபாசக்தி போன்றவர்களது வெளியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அந்த இருதரப்பு வெளிகளும் சேர்ந்துதான் நாளைய ஈழம் அமையமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular