கண்ணதாசன் தங்கராசு
கீழ்த்தஞ்சை மண்ணின் நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்வினையும் சமகால வரலாற்றையும் அழகியலுடன் கூடிய சொல்லாடலுடனும், கதாபாத்திரங்களின் வழியான உரையாடல்களுடனும் எந்தவொரு சலிப்புமில்லாமல் பக்கங்களை புரட்ட ஏதுவாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
இந்நாவலில் வரும் எல்லா பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெகுநேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கதை மாந்தர்களாக வரும் பெண்களைப் பற்றிய வர்ணிப்பைக் குறிப்பிட வேண்டும். நானும் கீழ்த்தஞ்சை மண்ணிலிருந்து வந்தவன் என்பதால் இந்த நாவல் என்னுடன் நெருக்கமாக ஒட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் அன்றைய கிராமத்திலும், நகரத்திலும் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையினை தெரிந்துகொள்ள ஏதுவாகவும் இந்த நாவல் மிக ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நாகப்பட்டினத்தின் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தைக் கதைக்களமாக கொண்டு மையப்பாத்திரமான காமாட்சி என்ற பெண் இரண்டாம் தரமாக ஒருவருக்கு வாக்கப்பட்டு செல்வதில் தொடங்கி, அவளது மகனின் திருமணம் வரையிலான, அவளை சுற்றி நிகழும் இன்பம், துன்பம், ஏமாற்றம், தியாகம் என விரியும் வாழ்க்கையில் எந்தவொரு சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாமல் எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறாள் என்பதே இக்கதையின் கரு.
கிராமத்து அழகுத் தேவதையான காமாட்சிக்கு வயதுக்கு வந்த நாளிலிருந்து வரன் தேடி அலைகிறார்கள். ஜாதகம் சரியாக அமையாதலால் எந்த வரனும் கிடைக்காமல் வீட்டில் உள்ளவர்கள் கவலை கொள்ளும் சமயத்தில் ஒரு வரன் தேடி வருகிறது. அதுவும் அவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தையின் தந்தை. அவரின் மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டிருக்கிறாள். தான் இரண்டாம் தாரமாக வாக்கப்படப் போவதை எண்ணி முதலில் குமுறும் காமாட்சி பிறகு இதுதான் விதியென சம்மதிக்கிறாள். கல்யாணமும் கிராமத்து சடங்குகளுடன் முறைப்படி வெகுவிமரிசையாக நடந்து முடிகிறது.
காமாட்சி எப்போதுமே பின்னர் நடக்கப் போவதை முன்பே கனவினில் அறியக்கூடியவளாகவே இருக்கிறாள். இப்படி கனவு காணும் காமாட்சி தன் கனவில் வந்த இராஜகுமாரன் போலவே தன் கணவனும் இருக்கிறாரே என நினைத்து அளவில்லா மகிழ்ச்சியும் கொள்கிறாள். இப்படியே கடந்த கால எண்ணங்களை மறந்து புதுமண ஜோடிகள் தங்களுக்குள் மிகுந்த பாசத்துடனும் விதவிதமான என்ன அலைகளுடனும் இளமையின் மையலூட்டும் வசிகரத்துடனும் சந்தோசமாக வாழ்க்கையை பயணிக்கிறார்கள். இதன் விளைவாக காமாட்சியும் கருவுருகிறாள். பின்னர் ஒர் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். முதல் தாரத்து குழந்தை அவளது நாத்தனார்க்கு குழந்தையில்லாததால் அவர்களது வீட்டிலேயே நகரத்தில் வளர்க்கிறார்கள். அவ்வப்போது அந்த குழந்தையை கணவரோடு சென்று கவனித்தும் கொள்கிறாள்.
காமாட்சிக்கு இப்படியே மகிழ்ச்சியான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் சமயம் தன் கணவருக்கும், இன்னொருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் ஏற்பட்டு இப்போது ஒரு பண்டிகையின் போது இருவருக்கும் மேலும் தகராறு முற்றுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கணவரிடம் முதல் நாள் கண்ட கனவினை நினைத்துக்கொண்டு எப்போதாவது என்னை விட்டுப் பிரிஞ்சு போயிடுவீங்களா? என கேட்கிறாள். திக்கென்ற அவன் எந்த பதிலும் சொல்லாமல் உறங்கச் செல்கிறான். அவளும் களைப்பில் உறங்கிவிடுகிறாள். விடியல் காலையில் பார்க்கும்போது அவனை காணவில்லை. பதறியடித்து எங்கும் தேடுகிறாள். அதே சமயத்தில் அங்கு மர்மமான முறையில் ஒரு கொலையும் நடக்கிறது. இறந்தவர் யாரென்றால் தன் கணவரிடம் பகை கொண்டவர். இதை கேள்விப்பட்ட காமாட்சி மயங்கிக் கிழே சரிகிறாள். அதேசமயதில் அவள் இரண்டாவது தடவையாக கருவுற்றுமிருகிறாள். அவளுக்கு அது தெரிந்தும் கொஞ்ச நாளாக வீட்டுக்கு வரும் கணவனின் முகம் இருக்கும் இருப்பைப் பார்த்துவிட்டு அவனிடம் சொல்லாமல் தள்ளிப் போடுகிறாள். ஆனால் இப்போது உண்டாகி இருப்பதில் அவளுக்கு ஒரு வெறுப்பு ஏற்படுகிறது. அவனில்லாமல், தன் கணவனையும் காணவில்லை, கொலையும் நடந்திருக்கிறது அடுத்து என்ன நடக்குமோ என திகைக்கிறாள். ஊராரும் சிறு கும்பலாகக் கூடி குசுகுசுத்துக் கொண்டிருக்கின்றனர். இதே சமயத்தில் எல்லா இடத்திற்கும் ஆளனுப்பிப் தேடுகிறார்கள். எங்கும் அவனிருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை அவர்தான் கொலை செய்திருப்பாரோ என்ற கோணத்தில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறாள். அவர்களும் அவன் அப்படிப்பட்டவன் இல்லையென்று மறுக்கிறார்கள்.
இதனிடையே எற்கனவே தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததையும் அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை இருப்பதையும் கண்டு மனதுக்குள் பொங்கி வந்த குமுறலை அடக்கிக் கொண்டு அவர்களிடமும் எதுவும் கேட்காமல் தன் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியை போல உபசரிக்கவும் செய்கிறாள். அதன்பின் கணவர் காணாமல் போனதை அறிந்து பதறிய அவளின் அப்பாவும்,அம்மாவும் அங்கு வந்து சேருகிறார்கள். வந்ததை அறிந்த காமாட்சி குரல் எழாமல் வாய் பிதற்றாமல் குலுங்கி குலுங்கி அழுவ, தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என நினைத்து கலங்குகிறார்கள். பின்னர் காமாட்சியை பார்த்து இங்கு பிள்ளையை வயிற்றில் சுமந்துக் கொண்டு தனியாக இருந்து கஷ்டப்பட வேணாம் அங்கு வந்துவிடு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அழைக்கிறார்கள்.
ஆனால் அவள், “அப்பா.. நான் உங்க பொண்ணு. உங்ககிட்ட உள்ள உறுதி, தைர்யம்.. அம்மாகிட்ட கத்துக்கிட்ட பொறுமை இவைதான் நான் கொண்டு வந்த சீதனம். இதை நான் எப்போ இழக்கிறேனோ அப்பதான் ஊருக்கு வர்றத்தப் பத்தி நினைப்பேன். இப்ப என்ன நடந்தாலும் நடக்கட்டும் நான் இந்த ஊர விட்டு நகரமாட்டேன்” என பிடிவாதமாக மறுக்கிறாள். அடுத்தும் அவளுக்கு சோதனைக்கு மேல் சோதனையாக அவள் கணவனின் மீது சர்க்காருக்கு சந்தேகம் உள்ளதால் அவர் வரும்வரை அவர்கள் வீட்டுக்கு யாரும் உதவக்கூடாது வயல் வேலைக்கு போகக்கூடாது என உத்தரவிடப்படுகிறது. ஊர் கட்டுமானம் இறுகிக் கொண்டிருந்த போதிலும் இவர்கள் குடும்பத்திற்க்கு ஒத்தாசையாகவும் சிலர் இருக்கிறார்கள். கர்ப்பிணியாக இருந்தும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் துணிச்சலாக வீட்டுக்கும் வயலுக்குமாக வலிகளைப் பொறுத்துக் கொண்டு கவனிக்கிறாள். நிறைமாத கர்ப்பிணியாக அவள் தனியாக இருந்து படும் நிறைய அவஸ்தைக்களையும் தன் கணவன் ஊரைவிட்டு ஓடிப்போன பிறகு கர்ப்பம் உண்டானதை சிலர் வம்பு பேசுவதையும் எண்ணி உறங்காமல் கண்ணீர் விடும் காட்சியையும் படிக்கும்போது வாசகனை உருக்கமான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. காமாட்சிக்கு அடுத்து ஒரு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது.
இப்படியாக வாழ்க்கையில் ஏகபட்ட சோதனைகளுக்கும், சிக்கல்களுக்கும், ஏக்கங்களுக்கும் தனிமைப் போராட்டங்களுக்கும் மத்தியில் குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்ப்பதுமாக பதினைந்து வருடங்கள் கரைகிறது. ஒருநாள் தன்னைச் சந்திக்க வரும் தோழியின் நிலையைப் பார்த்து மனசும் உடம்பும் பதறியவளாக அவளை அரவணைத்து ஆலோசனை வழங்கி தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து கொடுக்கிறாள் காமாட்சி.
இதனிடையே இருபெரும் சோதனைகளுக்கு ஆளாகிறாள் காமாட்சி. ஒன்று அவளுடைய தம்பி தன்னை காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்துக்கொண்டு நிறைய போராட்டங்களுக்கு செல்வதும் அங்கேயே தங்கிவிடுவதுமாக இருப்பதும் இவர்களின் அப்பாவிற்க்கு பிடிக்காமல் மனம் வருந்தி போக காமாட்சிக்கும் சொல்லியனுப்புகிறார். இதையறிந்து கவலைப்பட்ட காமாட்சி அவனை தேடி ஆள் அனுப்புகிறாள். அங்கு அவன் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு அடிபட்டு, கையுடைந்து தன் அக்காவிடம் வந்துசேரும் போது தன் தம்பியின் நிலைமையை பார்த்து வருத்தம் கொண்டாலும் தன் தம்பி செய்துட்டு வந்திருக்கிற காரியம் பெருமைப்படக்கூடியது தானே என்றிருக்கிறது அவளுக்கு. மற்றொன்று தன் நாத்தனார் வீட்டில் தங்கி படித்து கொண்டிருந்த மூத்த மகன் வாத்தியாருக்கு பயந்து பள்ளிக்கு செல்லாமல் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் காணாமல் போவதைக் கண்டு அதிர்ச்சியுருகிறாள். அப்பா மாதிரி பிள்ளையும் தன்னை தவிக்க விட்டு சென்றுவிட்டானே.. எங்க போயி எப்படி இருக்கானோ எனக் கதறுகிறாள்.
அதேசமயத்தில் பதினாறு வருடங்கள் பின்னர் ஊருக்கு திரும்பும் கணவனைக் கண்டதும், ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றி ஏங்கிக்கொண்டிருந்த மனம் அப்போது எந்த பரபரப்புக்கும் ஆசாபாசத்துக்கும் இடம் கொடுக்காமல் அமைதியாகவே இருந்தது. அவனை ஒரு வெறும் மனிதனாகவே வைத்திருக்கிறாள். சில நாட்கள் கடந்தபின் அவன் வெளிநாட்டுக்கு சென்று அங்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு குழந்தைக்கு தந்தை என அறித்த காமாட்சி மனசு குமுறிக் கொண்டிருந்தாலும், அந்த குழந்தைகளின் தாய் இறந்து விட்டதை அறிந்து அவர்களையும் நல்ல முறையில் வளர்க்கிறாள்.
இப்படியாக காமாட்சி வாழ்க்கையில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எதிர்நீச்சல் போடுவதிலும், மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், வம்பு பேசுபவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும், காணாமல் போன கணவன் திரும்பி வரும்போது அவனை வெறும் ஒரு ஆளாக மட்டும் நடத்துவதிலும், தன் பெற்ற குழந்தைகளோடு, அவனுக்கு பிறந்த அனைத்து குழந்தைகளையும் வளர்ப்பதிலும், கடைசியாக தன் மூத்த மகனின் திருமண நிகழ்வின்போது அவன் காணாமல் போய்விட சம்மந்தி காலில் விழுந்து கதறும் காமாட்சியின் பாத்திரம் நாவலுக்கு பெரிய பலம்.
இந்த நாவலில் காமாட்சியின் கணவனாக வரும் சுப்புணி ஊரில் வசதியானவனாகவும், நல்லவனாகவும், மற்றவர்கள் மதிப்பவனாகவும் வலம் வருகிறான். அவனுக்கு எற்கனவே திருமணமாகி மனைவி பிரசவத்தின் போது இறந்துவிட இரண்டாவதாக கரம்பிடிக்கப்பட்டவள் தான் காமாட்சி. இவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் நல்ல முறையில் சென்றுக் கொண்டிருந்தாலும், அவனுக்கு இதற்குமுன்பு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக ஒரு குழந்தையும் இருக்கிறது அதேசமயத்தில் ஊரில் தகராறும் ஏற்படுகிறது இப்படியாக ஏதோ மனக்கவலையில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு வெளிநாட்டுக்கு செல்வதும், அங்கு சென்று கஷ்டப்பட்டு தங்க சுரங்கதில் வேலை பார்ப்பதும், அப்போது அங்கு ஒரு திருமணம் செய்துக்கொண்டு இரு குழந்தைகளுடன் பதினைந்து வருடங்கள் வாழ்வதும், பின்னர் சொந்த ஊருக்கு திரும்புவதும், தன் பார்க்காத மகளைப் பார்த்து பூரிப்பதிலும், ஆனால் அங்கு தன் மனைவிக்கு செய்த துரோகங்களினால் ஒருவித பயத்துடனே அவர்களோடு இருக்கப் பிடிக்காமல், நகரத்தில் சென்று தனியாக வாழ்வதுமாக சுப்புணியின் கதாபாத்திரம் ஒரு நல்ல கணவனாக இருந்து செய்ய முடியாததை எண்ணி வருந்துவதாக அமைகிறது.
இந்நாவலில் சுப்புணிக்கு நெருக்கமானவர்களாக எப்போதுமே உதவி செய்பவர்களாக வரும் மாணிக்கம் பிள்ளை, அவரது துணைவியார் கோகிலத்தம்மாள், பஞ்சாங்கக்கார அய்யர், காமாட்சியம்மாள், சுப்புணியின் அக்கா லட்சுமி, சுப்புணியின் மோகவலைக்கு சிக்கி அவனால் ஒரு குழந்தையை பெற்று மௌனியாக வரும் மீனாம்பா, வீட்டு வேலைக்காரன் அய்யாக்கண்ணு மற்றும் அவனது குடும்பம் என ஒரு கட்டத்தில் சுப்புணி வீட்டை விட்டு சென்றபோதும் கடைசிவரை அவனுடைய மனைவி காமாட்சிக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றனர். குறிப்பாக சுப்பிணியின் மூத்த மகன் வேலுவின் ரங்கூன் பயணம், அங்கு நடக்கும் போரினால் தப்பி, பிழைத்துவரும் போது நடக்கும் சம்பவங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. இப்படியாக எல்லா கதாபாத்திரங்களும் யதார்த்தமான உரையாடல்கள் மூலம் அப்படியே அழுத்தமாக பதிவு செய்திருப்பது நாவலின் பலம்.
குறிப்பாக இதில் வரும் காமாட்சி, மீனாம்பா, சீத்தாம்மா, கோகிலத்தம்மாள், லட்சுமி, அம்புஜம், அம்மாக்கண்ணு, சரசு, பாப்பா, சகுந்தலா, பார்வதி,காமாட்சியம்மாள், செல்லம்மா என எல்லா பெண் கதாபாத்திரங்களும் மிக யதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நாவலில் இடம்பெறும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கிராம மக்களின் வாழ்க்கை முறை, புழுதிப் படர்ந்த ஒத்தையடி பாதை, வண்டிப்பாதை, நீண்ட தூர மாட்டுவண்டிப் பயணம், வயல் வரப்புகள், செல்லப் பிராணிகள், காமன் பண்டிகை, திருவிழா, குடமுழக்கு, காவடியாட்டம் மற்றும் குறிப்பாக இதில் வரும் குழந்தைத் தாலாட்டுப் பாட்டு, காமன் பண்டிகையின் போது பாடப்படும் பாட்டு, முதலிரவுக்கு முந்தைய மணப்பெண்ணின் உள்ளத்தை வெளிப்படுத்துவதாக பாடப்படும் பாட்டு, வளைகாப்பு பாடல், மாடு மேய்பவனின் பொழுதுபோக்கு பாட்டு, ஒப்பாரிப் பாட்டு, ஆன்மிகப் பாட்டு என எல்லாவற்றையும் பதிவு செய்திருப்பது நாவலை மெருகூட்ட செய்வதுமட்டுமில்லாமல் வாசகனின் கற்பனையை பின்னோக்கி பயணிக்க வைப்பதற்கு உதவுகிறது.
போராட்டமான வாழ்க்கையில் எந்தவொரு சிக்கலிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்படியான பாத்திரங்களின் தொகுப்பு தான் இந்த நல்ல நிலம் நாவல்.
நல்ல நிலம் – பாவை சந்திரன் பக்கங்கள்: 838; விலை: 600/-; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் சென்னை-600017 தொடர்புக்கு:97910 71218
கண்ணதாசன் தங்கராசு kannadhasan.thangarasu83@gmail.com