Wednesday, April 24, 2024
Homesliderநல்லதோர் வீணை

நல்லதோர் வீணை

சுஷில் குமார்

ந்தக் கொண்டை ஊசி வளைவுகள் முதல் முறையாக எனக்கு தலைசுற்றலைக் கொடுத்தன. ஒவ்வொரு முறை இந்தக் கிளைக்கு வரும்போதும் அளவற்ற உற்சாகமும் மகிழ்ச்சியும் என்னில் இருக்கும். அதற்குப் பிரதானமான காரணம் திருநாவுக்கரசன். அந்த மலைப்பிரதேசக் கிளையின் தமிழ் ஆசிரியர். என்னைப் பொருத்தவரை நான் செய்திருக்கும் பணியில் என்னை நீடித்திருக்கச் செய்யும் ஓர் உந்துசக்தி. இவனைப் போல நான் ஏன் இருக்க முடியவில்லை என பலமுறை என்னை யோசிக்க வைத்த கவி, கலைஞன், ஞானி அவன். இந்தப் பயணம் அப்படியே நீண்டுகொண்டே செல்லாதா? அவனுடனான இந்தச் சந்திப்பை எப்படியாவது நான் தவிர்த்துவிட முடியாதா? எனத் தோன்றிக் கொண்டேயிருந்தது.

திருநாவுக்கரசன் இப்படிச் செய்திருப்பான் என்பதை என்னால் நம்ப முடியவேயில்லை. ஆனால், எதுவும் உறுதியாகத் தெரியும் முன் நான் ஏன் அவன் இப்படிச் செய்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்? நாங்கள் பேசிய விசயங்களும் சேர்ந்து செய்த காரியங்களும் எவ்வளவு உன்னதமானவை! சாப்பாட்டிற்குக் கூட வழியற்ற இந்த ஏழைக் குழந்தைகளுக்கு உலகத்தரத்திலான அறிவுப்பரப்பை எற்படுத்திக் கொடுத்ததில் சொல்லப்போனால் என்னை விட அவனுக்குத்தான் பங்கு அதிகம்.

ஆனால், இப்படியொரு புகார் அவன்மீது வந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. ஒருவேளை அவன் இதைச் செய்திருந்தால் நான் அவனை என்ன செய்யப்போகிறேன்? இருக்காது, அவன் இதைச் செய்திருக்க மாட்டான்.

      நான் கூட கல்விப்பணியை ஓர் நல்ல வருமானம் வரக்கூடிய ஒரு வேலையாகத்தான் செய்கிறேன். ஆனால், திருநாவுக்கரசனுக்கு இது ஒரு வெறி, உயிர், கடவுள், எல்லாம். சென்ற மாதம் அழைத்திருந்தபோது கூட தனது மாணவர்களில் இருபது பேர் அத்தனை திருக்குறள்களையும் மனப்பாடம் செய்துவிட்டதாகக் கூறினான். எந்தக் குறளின் பொருள் கேட்டாலும் உதாரணத்தோடு விளக்கிவிடுவார்களாம். கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் இவ்வளவு கூர்மையாக இருக்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பள்ளி இருக்கும் கிராமத்தை நெருங்கிவிட்டேன். வழக்கமாக நிறுத்தி தேநீர் அருந்தும் கடைக்காரர் என்னைப் பார்த்ததும் கை காட்ட, ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்துமாறு சொன்னேன். எனக்கும் அந்த இடைவெளி தேவையாக இருந்தது. திருநாவுக்கரசனிடம் என்ன பேசப்போகிறேன்? அவனது முகத்தை எப்படிச் சந்திக்கப் போகிறேன்? அவன் மேல் வந்திருக்கிற குற்றச்சாட்டைப் பற்றி அவனிடம் சொல்லிவிட்டார்களோ இல்லையோ? அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் உடனடியாக என்னை அழைத்துத் தன் தரப்பைச் சொல்லியிருப்பானே? ஒருவேளை தவறு செய்ததால்தான் என்னை அவன் அழைக்கவில்லையோ?

“வாங்க சார்..ரொம்ப நாளாக் காணோம்…டபிள் ஸ்ட்ராங் தான?” என்று சிரித்தார் தேநீர்க் கடைக்காரர்.

“ஆமா தலைவரே, மத்த ஊருக்கெல்லாம் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்..நீங்க எப்பிடியிருக்கீங்க?”

“நமக்கென்ன சார்? குளிரு இருக்க வரைக்கும் கட நல்லா ஓடும்..சம்மர் வந்தா அப்டியே லெமன் சோடா போட்ரலாம்னு பாக்றேன் சார்…”

“அதும் நல்ல யோசனதான்…ஆமா, நம்மாளு வந்தாரா இந்தப் பக்கம்?”

“யாரு சார்? நம்ம தமிழ் வாத்தியா? அவர கொஞ்ச நாளாக் காணுமே? நாகூட நேத்து யோசிச்சேன், மனுசன் சொந்த ஊருக்குப் போயிருப்பாரோன்னு..”

இதே தேநீர்க்கடையின் முன்னால்தான் திருநாவுக்கரசனை முதல்முறை சந்தித்தேன். வழக்கம்போல தேநீர் அருந்த வண்டியை ஒதுக்கியபோது குறுக்காக வந்து விழுந்தான் திருநாவுக்கரசன். பதறி இறங்கிப் பார்த்தேன். நல்ல வேளையாக பெரிய அளவில் காயமேதுமில்லை. கீழே விழுந்ததில் அவனது மூக்குக்கண்ணாடி உடைந்துவிட்டது. கையில் இலேசான சிராய்ப்பு. அவனைத் தூக்கிவிட்டு சட்டையிலிருந்த மண்ணைத் தட்டியபோதுதான் அவனை சரியாகக் கவனித்தேன். அவனது உடல் முழுதுமே தீப்புண் தழும்பைப் போன்ற வெள்ளைத்தோல். தலைமுடி அமெரிக்கக்காரர்களைப் போன்ற நிறத்தில் இருந்தது. முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள்.

எழுந்து நின்றவன் ஒரு கண்ணைச் சுருக்கி மறு கண்ணால் என்னைக் கூர்ந்து பார்த்தான்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. நான்தான் தவறாக வந்து விழுந்துவிட்டேன். தங்களது வாகனம் வந்ததைக் கவனிக்கவில்லை.” என்று சொல்லி என் கையைப் பிடித்து அழுத்தினான்.

ஒருநொடி என்னையறியாமலேயே அருவருத்து கையை வெடுக்கென உதறிவிட்டேன். இதை உணர்ந்தவனாக, “இது ஒரு தோல் வியாதிதான் ஐயா. ஏதோ சத்துக்குறைபாட்டினால் வருகிற நோயென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். என்ன, மருந்துதான் கிடையாது…தொற்று நோயென்று பயந்து விட்டீர்களோ?” என்றான்.

“சாரி சார்… சாரி…” என்று சொல்லி மீண்டும் அவனது கையைப் பற்றிக்கொண்டேன். “வேற அடி ஒண்ணும் படலல்ல சார்?”

“இல்லையில்லை…ஒன்றும் பிரச்சினையில்லை. எனது மூக்குக் கண்ணாடியை கொஞ்சம் எடுத்துத் தர முடியுமா?”

அப்போதுதான் கவனித்தேன். அவனுக்கு இடது கண் இல்லை. வெறும் இமைகளால் மூடிய வெற்றுக்குழிதான் இருந்தது. மூக்குக் கண்ணாடியை எடுத்துக் கொடுத்தவாறு, “சார்…ஒங்க கண்ணு?” என்றேன்.

“அது பிறவியிலேயே இப்படித்தான் ஐயா. வலது கண்ணால் பார்க்க முடியும். ஆனால், பகல் வேளைகளில் கொஞ்சம் கூசுவதால் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்ப்பேன். அவ்வளவுதான். வேறொன்றும் பெரிய பிரச்சினையில்லை. என்ன, வாரம் ஒருமுறை இப்படி விழுந்து சாலைகளில் அங்கப்பிரதட்சிணம் செய்கிறேன்..ஹாஹஹா..”

அவனுக்கும் தேநீர் வாங்கிக்கொடுத்து, “தப்பா நெனைக்காதீங்க, அதென்ன, நீங்க செந்தமிழ்ல பேசுறீங்க?” என்று கேட்டேன்.

“சிலராவது பேசித்தானே ஆக வேண்டும் ஐயா. நமது மொழி அல்லவா? அது மட்டுமில்லாமல் நான் தமிழ் பயின்றவன். கேட்பதற்கும் இனிமையாகத்தானே இருக்கிறது?”

“கண்டிப்பா…ஆமா, என்ன வேல செய்றீங்க?”

“இப்போதைக்கு வேலை தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். சில பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் தோற்றம் குறித்த புகார்களாலோ, அல்லது எனது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டியோ என்னை வெளியே அனுப்பிவிடுகிறார்கள். வேறு எங்கு வேலை தேடிச் சென்றாலும் பத்து, இருபது ரூபாய் நோட்டுகளைக் காட்டி திருப்பி அனுப்புகிறார்கள். என் கவிதைப் புத்தகங்களை விற்றா நான் பிழைக்க முடியும்? தமிழ் நாட்டில் ஓர் கவிஞன் புத்தகம் விற்றுப் பிழைத்துவிட முடியுமா என்ன?”

“நீங்க கவிஞரா சார்? நா பெருசா புக்ஸ்லாம் படிக்கிறதில்ல….நான்ஃபிக்சன் கொஞ்சம் வாசிப்பேன்..”

“மகிழ்ச்சி…சரிங்க ஐயா..மிக்க நன்றி..” என்று சொல்லியவாறு எழுந்தான்.

“சார்..ஒரு நிமிசம்…நீங்க ஏன் எங்க ஸ்கூல்ல ஒரு இண்டர்வியூக்கு வரக்கூடாது?” என்று கேட்டேன்.

மகிழ்ச்சியாகத் தலையை ஆட்டினான் திருநாவுக்கரசன்.

தேநீர் அருந்திவிட்டு கடைக்காரரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். திருநாவுக்கரசன் தினசரி வரும் கடை அல்லவா? ஏன் ஒரு வாரமாக வராமல் இருக்கிறான்? விசயம் வெளியே யாருக்கும் தெரியாது என்றுதானே தலைமை ஆசிரியரும் சொன்னார்.

பள்ளி நிர்வாகிகளும் தலைமை ஆசிரியரும் முதலில் எனது யோசனையை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோதும் திருநாவுக்கரசனுக்காக ஒரு நேர்முகத் தேர்வை நடத்த ஒப்புக்கொண்டனர். அந்த மனிதன் எங்களை ஆச்சரியப் படுத்தி விட்டான்.

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ…” என்று அவன் ஆரம்பித்த நொடியே எனக்குப் புல்லரித்து விட்டது. அப்படி ஒரு கம்பீரம், உச்சரிப்பு, உடல் மொழி..கம்பனே எங்கள் முன் வந்து நின்று பாடியது போல உறைந்திருந்து கேட்டோம்.

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?” என்றவாறு அறையின் அங்குமிங்கும் நடந்துகொண்டே வேழமாகித் தமிழ் உரைத்தான்.

தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ?” என்றவன் சொல்லித் திரும்பியபோது அவன் கண்ணில் நீர் நிறைந்து விட்டது.

ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?” என்று சொல்லி மண்டியிட்டு குகனாகவே மாறி நின்றான். அடுத்த சில நிமிடங்கள் அவன் அச்செய்யுளை விளக்கிய விதம் கண்டு மலைத்துப் போய்விட்டோம். எனது அனுபவத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் நாங்கள் எழுந்து நின்று கை தட்டியது அன்று மட்டுமே. என்ன ஒரு ஆசிரியன் அவன்!

ஐந்து வருடத்தில் எத்தனை சாதனைகள்! எத்தனை புதுமைகள்! ஒரு தமிழ் ஆசிரியனுக்கு இதெல்லாம் சாத்தியமா என்று திரும்பிப் பார்க்க வைத்துவிட்டானே!

பள்ளி அன்று விடுமுறை. வெறிச்சோடிக் கிடந்த மைதானத்தையும் புல்வெளியையும் தாண்டித் தலைமை ஆசிரியர் அறைக்கு நடந்தேன். அறை வாசலிலேயே நின்றிருந்த அவர் நேராக என்னை அடுத்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார். தூரத்தில் சந்திப்புகளுக்கான அறையின் வெளியே திருநாவுக்கரசன் தனியாக உட்கார்ந்திருந்தான். நாங்கள் நெருங்கிச் செல்ல, எங்கள் காலடிச் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்து நின்றான். இதே அறையில்தான் தனது தமிழ்ப்புலமையால் எங்களை வீழ்த்தினான்.

எனது குரல் கேட்டு ஒரு நொடி அவன் நடுங்கியதாக எனக்குத் தோன்றியது. அவனருகில் சென்றதும், “ஐயா..நீங்கள் தான் வந்திருக்கிறீர்களா? எவ்வளவு நாட்களாயிற்று பார்த்து? நலம்தானே ஐயா?” என்று கேட்டான்.

“நல்லாருக்கேன் திரு…” என்று சொல்லி அவன் தோளில் தட்டிவிட்டு உள்ளே சென்றேன்.

மனிதவள நிர்வாகி, தலைமை ஆசிரியர் ஆகியோருடன் கலந்தாலோசித்து என்ன செய்யலாம் என ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். திருநாவுக்கரசனுடனான விசாரணையில் நானும் மனிதவள நிர்வாகியும் இருப்பதாக முடிவு. தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசனை உள்ளே அனுப்பிவிட்டுச் சென்றார்.

“வா திரு. ஒக்காரு…”

எங்கள் மேசையின் முன் இரண்டடி தூரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான். அவனது முகத்தில் நான் எதிர்பார்த்த மாதிரி எந்தவித பதற்றமும் இல்லை. மிக இயல்பாக ஒரு புன்னகையுடன் எங்களைப் பார்த்தான்.

இந்த மாதிரி விசாரணைகளில் கடைபிடிக்க வேண்டிய படிநிலைகள் இருக்கின்றன. மனிதவள நிர்வாகி அதன்படியே அவனிடம் அவனது பணி சார்ந்த பொதுவான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவனும் மிகச் சாதாரணமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு எவ்வளவு சீக்கிரம் இதை முடித்து விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை முடித்து விட வேண்டும் என உள்ளுக்குள் படபடப்பு. அவனில் ஏதேனும் ஒரு சிறு சலனம் தெரிகிறதாவென நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு சிறு சலனம் தெரிந்திருந்தால் கூட அடுத்த நொடி அவனது சட்டையைப் பிடித்து உண்மையை வெளிக்கொண்டுவந்து விடுவேன்.

மனிதவள நிர்வாகி ஓர் இடைவெளி விட்டு என் முகத்தைப் பார்த்தார். நான் தலையாட்ட, திருநாவுக்கரசனை நோக்கி, “திருநாவுக்கரசன், இன்னிக்கி உங்கள வரச் சொன்னது எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“இல்லை ஐயா..” என்று என்னையும் நிர்வாகியையும் பார்த்தான் திருநாவுக்கரசன்.

“உங்க மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் வந்திருக்கு திருநாவுக்கரசன்..என்னன்னு தெரியுமா?”

“என் மேல் புகாரா? என்ன புகார் ஐயா?” இப்போதும் அவனது முகத்தில் ஒரு சிறு பதற்றம் கூட இல்லை.

“பசங்க கூட நீங்க பொதுவா ரொம்ப நெருங்கிப் பழகுவீங்களோ?”

“ஆமாம் ஐயா…எனக்கு மாணவர்கள் என்றால் உயிர்..என்னைப் பார்த்ததுமே ஓடி வந்து என் தோளில் துள்ளி ஏறிவிடுவார்களே! ஐயாவுக்கு நன்றாகத் தெரியுமே! ” இதைச் சொல்லும்போது அவன் என் கண்களைத் தவிர்த்தான்.

எனக்குள் ஒருவித பயம் சட்டெனத் தோன்றியது. அவனது இரண்டு தங்கைகள், தம்பி மற்றும் அம்மாவின் முகம் என் மனதில் வந்து சென்றது. அந்தக் குடும்பத்தின் அச்சாணியே இவன்தான். அதை ஒடித்துவிட்டால் என்ன செய்து பிழைப்பார்கள்? அம்மா வேறு உடல்நலமில்லாதவர். தங்கைகள் தேயிலைத் தோட்டத்திற்குச் செல்கிறார்கள். அங்கு என்ன பெரிதாகக் கிடைத்து விட முடியும்? அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து அவர்கள் குழந்தைகளை மடியில் போட்டுக் கொஞ்ச வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பானே?

ஒருநாள், “என்ன திரு, ஒனக்கொரு பொண்ணு பாக்கலாமா?” என்று கேட்டேன்.

“அடச் சும்மாயிருங்கள் ஐயா..இந்த ஜென்மத்தைப் பார்த்துக்கொள்ள இன்னொரு உயிரை வேறு துன்பப்படுத்த வேண்டுமா? எனக்கு என் மாணவர்கள் இருக்கிறார்கள், தமிழ் இருக்கிறது, போதாதா என்ன?” என்று சொல்லிச் சிரித்தான்.

அவன் சொன்ன வார்த்தைகளே இப்போது என்னைச் சுற்றியோடிக் குழப்பின. ‘எனக்கு என் மாணவர்கள் இருக்கிறார்கள்!’.

நிர்வாகி தொடர்ந்தார், “திருநாவுக்கரசன், சுத்தி வளச்சிப் பேச வேண்டாம்…சிக்ஸ்த் ஸ்டேண்டர்ட் பாய்ஸ நீங்க மாலஸ்ட் பண்ணதா கம்ப்ளெய்ண்ட் வந்திருக்கு…”

“என்ன? என்ன ஐயா சொன்னீர்கள்? மாலஸ்ட்டா? அப்படியென்றால்?” என்று அவரது முகத்தைப் பார்த்தான். அவன் நடிப்பது எனக்கு உறுதியாகிவிட்டது.

“அவங்கள தனியா அழச்சிட்டுப் போயி தகாத இடங்கள்ல தொட்டதாக சொல்லிருக்காங்க…என்ன சொல்றீங்க?”

“ஐயா…என்னைப் பார்த்தா அப்படிச் சொல்கிறீர்கள்? யார் சொன்னது? என் முன் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்துங்கள்..என் முன்னால் வந்து அவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம்…வேடிக்கை மனிதரைப் போல வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று தினசரி உரக்கச் சொல்லி வாழ்பவன் நான்..இந்தப் பணி என் உயிர் போன்றது தெரியுமா உங்களுக்கு? யார் சொன்னது, வரச் சொல்லுங்கள், நான் கேட்கிறேன்…”

“மிஸ்டர் திருநாவுக்கரசன், எவிடென்ஸ் இல்லாம நாங்க உங்கள விசாரிக்கக் கூப்பிடல…அதுவுமில்லாம கார்ப்பெண்ட்ரிக்கு யூஸ் பண்ற பசைய போதைப்பொருளா நீங்க யூஸ் பண்ட்றதாகவும் பசங்கள அதயே செய்ய வச்சி நீங்க மாலஸ்ட் பண்ணதாகவும் தெளிவான எவிடென்ஸ் எங்க கிட்ட இருக்கு…என்ன நடந்துச்சின்னு நீங்களே சொல்லிட்டீங்கன்னா நல்லாருக்கும்…இல்லன்னா, நாங்க லீகலா போக வேண்டியிருக்கும்…”

சற்று நேரம் அமைதியாக இருந்த திருநாவுக்கரசன், “ஐயா…இல்லவே இல்லை. இதெல்லாம் யாரோ செய்கிற சதி…என் தமிழ் மேல் ஆணையாக நான் அப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும், தேவையும் எனக்கில்லை..” என்று உறுதியாகக் கூறினான்.

“தேவையில்லன்னா என்ன மயிருக்கு பசங்கள சயின்ஸ் லேபுக்கு கூட்டிட்டுப் போனீங்க? தமிழ் வாத்தியாருக்கு அங்க என்ன வேலன்னு கேக்றேன்? அதுவும் லஞ்ச் ப்ரேக்ல…நானும் பொறுமையா கேட்டுட்ருக்கேன், ரொம்ப ஓவரா டயலாக் அடிக்கிறீங்க..” என்று கத்திய நிர்வாகி என்னைப் பார்த்து, “சார், இதெல்லாம் சரி ஆகாது, இவன மாதிரி ஆளுங்கள எல்லாம் போக்ஸோல உள்ள போட்டு லாடம் கட்டுனாத்தான் சரி ஆகும்…சிம்பதி க்ரியேட் பண்ணி வெளையாடுறான் சார் இந்தாளு..நல்லா ஏழு வருசம் ஜெயில்ல கெடந்து சாகட்டும்..” என்றார்.

திருநாவுக்கரசன் எழுந்து, “ஐயா, நீங்கள் மரியாதைக் குறைவாகப் பேசுகிறீர்கள்..என் தரப்பை நான் கூறிவிட்டேன்..இதுவரை நான் செய்த  ஆசிரியப்பணியையும் மீறி என் மீதான உங்கள் நம்பிக்கை இவ்வளவுதான் என்றால், உங்களிடம் சாட்சியங்கள் உள்ளதென்றால், என்னை இங்கிருந்து அனுப்பி விடுங்கள்…இதற்குமேல் இங்கே வேலை செய்வது எனக்குச் சரியாகப் படவில்லை..நானே எனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிடுகிறேன்..என் வாழ்க்கையை நீங்கள் முடித்துவைத்ததாக இருக்கட்டும்..” என்று சொல்லி விட்டு மிக இயல்பாக நின்றான்.

நிர்வாகி எரிச்சலோடு என்னைப் பார்க்க, அவரைக் கொஞ்சம் வெளியே இருக்குமாறு நான் சைகை செய்தேன்.

திருநாவுக்கரசன் இப்போது இலேசாக உணர்ச்சிவசப்பட்டு, “என்ன ஐயா இது? என்னைப் போய் இப்படிச் சொல்கிறார்களே? உங்களுக்குத் தெரியாதா ஐயா என்னைப்பற்றி? இந்த மாணவர்களுக்காக நான் எவ்வளவு சிரமப்படுகிறேன், இரவு பகலாக உழைக்கிறேன், இவர்களில் நிறைய பேரை தினசரி வகுப்பிற்கு அழைத்து வருவதே எனக்குப் பெரிய வேலை ஐயா..என் சொந்தக் குழந்தைகள் மாதிரி அல்லவா இவர்கள்..என்னைப் போய் இப்படிச் சொல்கிறார்களே!”

நான் எதுவும் பேசாமல் அவன் பேசுவதையெல்லாம் பேசட்டும் என்று இருந்தேன்.

“ஐயா, இத்தனை வருடச் சேமிப்பில் இப்போதுதான் முதல் தங்கைக்குத் திருமணம் கூடி வருகிறது. இன்னும் எவ்வளவு சுமைகள் இருக்கின்றன எனக்கு, நான் எப்படி ஐயா இப்படி ஒரு காரியத்தைச் செய்வேன்? என்ன ஐயா, நீங்கள் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்? நீங்களும் என்னைச் சந்தேகப் படுகிறீர்களா? இதற்குமேல் நான் இருந்து பயனில்லை..எங்காவது விழுந்து செத்துப்போகிறேன்..” என்று எழுந்தான்.

“திரு, கார்பெண்ட்ரிக்கு என்ன கம் யூஸ் பண்ணுவாங்க தெரியுமா?” என்று அவனது கையைப் பிடித்து இழுத்தேன்.

“என்ன, என்ன? என்ன கேட்டீர்கள்?” என்று திணறினான் திருநாவுக்கரசன். அடுத்த சில கேள்விகளில் எனக்கு உண்மை தெரிந்து விடும். அவனது கம்பராமாயணமும் கவிதைகளும் எல்லாம் இதற்குத்தானா?

“திரு, நா கேட்டது ஒனக்கு நல்லாவே கேட்டுச்சு..என்ட்ட நீ நடிச்சிர முடியும்னு நெனைக்கிறியா?”

திருநாவுக்கரசன் ஒன்றும் பேசவில்லை.

“ஏண்டா, இந்தப் பசங்களுக்கு நம்மள விட்டா யாருடா இருக்காங்க? எத்தன நாளக்கி டா இவங்க இப்படித் தேயிலத் தோட்டத்தில கெடந்து சாவணும்? ஆனா, ஆவன்னா தெரியாத ஒவ்வொருத்தனயும் திருக்குறள், கம்பராமாயணம் சொல்ல வச்சவன்டா நீ..அவங்க அப்பா அம்மால்லாம் ஒன்னச் சாமி மாதிரிதானடா பாக்குறாங்க? நீ எனக்கே ஒரு இன்ஸ்பிரேஷன் டா திரு…என்னவா இருந்தாலும் என்ட்ட சொல்லு டா…இந்த நாளக் கடந்து போயிரணும்னு நா எவ்ளோ துடிச்சிட்டே வந்தேன் தெரியுமா ஒனக்கு? இப்பக்கூட ஒம்மேலத் தப்பில்லன்னு ஆயிடாதான்னு இருக்கு டா..”

திருநாவுக்கரசன் இன்னும் சிலையாகத்தான் நின்று கொண்டிருந்தான்.

“டேய் திரு…யோசிக்காம என்னன்னு சொல்லுடா. இது எதுவுமே நடக்கலன்னு சொன்னாலும் கேட்டுட்டுப் போறக் கூட்டந்தான்டா இந்த மக்கள்லாம்…அவங்களுக்காக பேச வேண்டியது நாம தான டா? தப்பே செஞ்சிருந்தாலும் பரவால்ல, என்ட்ட சொல்லு நீ, எம் மொகத்தப் பாத்துச் சொல்லு நீ…நாம வேற எங்கயாம் எதாவது வேல பாத்துக்கலாம் டா..நா இருக்கண்டா ஒங்கூட..சொல்லுடா…”

திருநாவுக்கரசன் என் முகத்தைப் பார்த்தான். என் கண்களை வெறித்துப் பார்த்தான். தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

“டேய் திரு..நம்ம தங்கச்சிங்க வாழ்க்கையப் பாக்க வேண்டாமா டா? விசயம் வெளிய தெரிஞ்சி மீடியாக்குப் போனா என்ன ஆகும்னு யோசிச்சிப் பாரு..நீ என்ட்ட சொல்லு..இங்கயே முடிச்சுக்குவோம்…மேனேஜ்மென்ட்ல நா பேசுறேன்….கேஸ் ஏதும் போடாம நா பாத்துக்குறேன்..எல்லாத்தயும் மறந்துட்டுப் புதுசாத் தொடங்கலாம் டா…”

இன்னும் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன டா நீ, நா இவ்ளோ சொல்றேன், பதில் பேச மாட்டேங்கிற? எல்லாத்தயும் விடுடா…ஒன்ட்ட நா சொன்னதேயில்ல, இப்பச் சொல்றேன்…எம் பொண்ணக் கூட ஒன்ட்ட விட்டுத்தான் தமிழ் படிக்கச் சொல்லணும்னு நெனச்சிருக்கேன்….” என்று நான் சொல்லியதும் சட்டென நெடுஞ்சாண்கிடையாக என் காலில் விழுந்தான்.

“ஐயா..ஐயா…ஐயா..ஐயா…” என்று கதறிக் கொண்டே கிடந்தான்.

சத்தம் கேட்டு உள்ளே வந்த மனிதவள நிர்வாகி, “நா தான் சொன்னேன்ல சார்…இவந்தான் பண்ணிருப்பான்னு…இப்ப அழுது நடிக்கிறான் பாருங்க…இவன நீங்க இன்டர்வியூக்கு கூட்டிட்டு வந்தப்பவே நான் சொன்னேன்ல சார்…இது சரிப்பட்டு வராதுன்னு…சரி, தெறமை இருக்குன்னு வாய்ப்பு குடுத்தா இப்ப நம்ம மடிலயே கைய வச்சிருக்கான் பாருங்க சார்…கொஞ்ச நாள் விட்டிருந்தா போதைல இந்தப் பசங்கல்லாம் பைத்தியமாயிருப்பாங்க சார்…இந்த நாய்க்கு வேணும்னா எங்கயாம் போயிருக்கலாம்ல சார்? கை, கால அடிச்சி ஒடச்சிரலாம்னு வருது சார்….நா ஸ்டேஷனுக்கு கால் பண்ட்றேன் சார்…ராஸ்கல், இவனல்லாம் சொசைட்டில நடமாட விடக் கூடாது…” என்று கத்தினார்.

“சார்…கொஞ்சம் இருங்க…” என்று அவரை அமைதிப்படுத்தி திருநாவுக்கரசனைத் தூக்கிவிட்டேன்.

“இங்கப் பாரு திரு…எனக்கு நீ பதில் சொல்லியாகணும்…நீ ஏன் அப்படிப் பண்ண?”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“சொல்லு…எனக்குத் தெரிஞ்சாகணும்…”

திருநாவுக்கரசன் பேச ஆரம்பித்தான். “என்னத்தச் சொல்ல? எல்லாம் நாந்தா பண்ணேன்…நல்லாத் தெரிஞ்சிதான் பண்ணேன்…ஆனா, ஏன் பண்ணேன்னு எனக்கேத் தெரில…அதான் நெஜம்…நா செத்துருக்கணும்…செத்துருவேன்…என்னால இருக்க முடில…செத்துருவேன்..ஒங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்..என்னோட தமிழுக்கு துரோகம் பண்ணிட்டேன்…எங் கம்பனுக்கு துரோகம் பண்ணிட்டேன்…எம் பாரதிய மறந்துட்டேன்…என்ட்ட இருந்த எல்லாத் திருக்குறளும் போயிடுச்சி…இப்ப நா வெறும் பொணம்…நா செத்துருவேன்…செத்துருவேன்…எல்லாமே வேஷம்ல? நா பேசுன தமிழும் பொய்யா? என்னப் பாத்தா எனக்கே அருவருப்பா இருக்கு…என்ன நல்ல அடிச்சிடுங்க..அடிச்சிக் கொல்லுங்க…இங்கயே இது முடியட்டும்…என்னால வெளிய தலகாட்ட முடியாது…நா செத்துப் போயிரணும்…”

நிர்வாகி கோவத்தில் அவனைச் சட்டையோடு சேர்த்துப் பிடித்துச் சுவற்றில் நெரித்து, “ராஸ்கல்…எம் முன்னாடியே எப்படில்லாம் நடிச்ச நீ? நீ சாகல்லாம் மாட்ட…இன்னும் அனுபவிப்ப பாரு…ஆனா, ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..வேற எந்த வேலைக்கி வேண்ணாப் போ..இல்லாட்டி கோயில் கோயிலாப் போயி பிச்சையெடு…மவன, இனிமேல் டீச்சர் வேலைக்கின்னு ஏதாவது ஸ்கூல் வாசல மிதிச்சன்னு வையி, ராஸ்கல் ஒன்னத் தேடி வந்து கொல்லுவேன்…மனசில வச்சுக்கோ…” என்று கத்திவிட்டு வெளியேறினார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு…

காரிலிருந்து நான் இறங்குவதைப் பார்த்த அம்மா என்னருகே வந்து, “வாங்கய்யா..வாங்க…” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

“எப்டி இருக்கீங்கம்மா? திரு இல்லையா?”

“அத ஏன்யா கேக்றீங்க? எம்புள்ளக்கி என்னமோ ஆயிடுச்சிய்யா…வேல போனதுலேந்து வீட்டுக்குள்ளயே மொடங்கிக் கெடக்கான்ய்யா…யார்ட்டயும் ஒரு வார்த்த பேச மாட்டேங்கிறான்…வேற வேலைக்கும் போறதில்ல…நீங்க ஒரு வார்த்த சொல்லுங்கய்யா…”

அம்மா தண்ணீர் எடுத்துவர தாகம் தீரக் குடித்துவிட்டு வீட்டிற்குள் சென்றேன். 

திருநாவுக்கரசன் ஒரு கயிற்றுக் கட்டிலில் கம்பளிக்குள் புதைந்து கிடந்தான். அவனது வீடு முழுவதும் இருள் நிறைந்து நின்றது. சட்டரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவரின் பெற்றோரையும் சமாளித்து ஒருவழியாக வேலை நீக்கத்தோடு முடித்து வைத்திருந்தேன்.

கட்டிலின் அருகே சென்று, “டேய் திரு? ஒன்ட்ட பேசணும்..” என்றேன்.

ஒருதரம் என் முகத்தைப் பார்த்துவிட்டுத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

நான் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தபடியே நின்றேன். அந்த அறையின் உஷ்ணம் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது.

“திரு…மொதல்ல எந்திரி நீ….”

கட்டிலிலிருந்து தன்னைப் பிய்த்துக்கொள்வது போல எழுந்து நின்றவன் என் கையைப் பிடித்துத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்தான். பலநாள் பட்டினி கிடந்தவன் போல வாடிப்போய், முகம் கருத்து நடுங்கி நின்றான். அவனது கண்கள் எதிர்ச்சுவற்றில் நிலைகுத்தியிருந்தன. அந்தச் சுவற்றில் அவன் கடந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வாங்கிய புகைப்படம் தொங்கிக்கொண்டிருந்தது.

அவனது கட்டிலைச் சுற்றிலும் ஏராளமான காகிதங்களும் புத்தகங்களும் சிதறிக் கிடந்தன. தச்சுவேலைக்கான பசை உறைகள் கிழிந்து கிடந்தன. எனக்கு அவனைப் பார்த்து அருவருப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. ஏதும் சொல்லாமல் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். பள்ளியிலிருந்து நான் கொண்டுவந்திருந்த அவனது நல்லாசிரியர் விருதை என் பையிலிருந்து எடுத்து அவனது கால்மாட்டில் வைத்துவிட்டு வெளியேறினேன்.

திண்ணையில் அழுதுகொண்டிருந்த அம்மாவின் கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்துவிட்டு விறுவிறுவென்று நடந்தேன்.

“அண்ணே, டீ குடிச்சிட்டுப் போங்கண்ணே…” என்றவாறு எதிரே வந்தாள் சிறிய தங்கை.

***

சுஷில் குமார் நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். கிராமப்புற மாணவர்களின் மாற்றுக் கல்வி சார்ந்த ஆசிரியப் பயிற்சி மற்றும் பள்ளிகள் மேலாண்மைப் பணிகளை கோவையில் இருந்து செய்து வருகிறார். தொடர்புக்கு [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular