மணி எம்.கே மணி
நாளை மறுநாள் இரவு இந்த நேரத்துக்குள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எதுவும் சாப்பிட்டு வரக்கூடாது என்பதையும் தான். முழு உடலுக்கும் பரிசோதனை முடிந்த பிறகே அவர்கள் என்ன சாப்பிடலாம் என்று சொல்லுவார்கள். மீனு ஆபரேஷன் மீது தனக்கு பயம் இருக்கிறதா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டாள். இல்லை என்றே பட்டது. தூக்கம் வரவில்லை. நாளை மதியம் சென்னைக்கு கிளம்பியாக வேண்டும். பொதுவாக அம்மாவும் தம்பியும் எல்லாம் ஒன்பது மணிக்கே சாப்பிட்டு இருளில் அடைந்து கொள்ளுவது வழக்கம். சென்னையில் அப்படியா? எப்போது பதினொன்று ஆகும் என்று சபித்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தாள். தூங்கி விடக் கூடாது. பத்து நாற்பத்தி ஐந்துக்கெல்லாம் சிறுநீர் கழித்து விட்டு சோப்பினால் தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டிய ஒரு கடமை இருப்பதை மறந்து விடக் கூடாது. தூங்கி விடுவோம் என்கிற பயமெல்லாம் துளி கூட இல்லை. தூங்கிக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்து ஒரு சிறிய மறைப்பு உண்டுபண்ணி மொபைலைப் பார்த்தாள். வாசு சார் வாட்சப் அனுப்பியிருந்தார்.
வழக்கம் போல கவிதை.
என்னடி ரோஜா கோபம்
என் எண்ணம் முழுதும் தாபம்
பூக்களில் நீ எந்த பாகம்
புரியாமல் இளைத்தது தேகம்
பம் பம் கம் கம். அவளைப் பற்றி அவர் எழுதுகிற அவரது எல்லாக் கவிதைகளும் அவளுக்குப் பிடிக்கும். ஒருமுறை வேறு ஒன்றை எழுதி இருந்தார் இல்லையா, அது அவளுக்கு மனப்பாடமே கூட.
கேணிக்குள் ஏனடி தோணி
இது புரியாதோடி கலைவாணி
நித்தம் கொதிக்குது மேனி
இவன் பித்தம் பிடித்த நல்ஞானி !
அவர் ஞானி மாதிரி தான். வயது ஐம்பது இருக்கும். ரொம்ப கூன் போட்டிருப்பார். அவள் துணி எடுக்க, கொடுக்க அப்படி இப்படி போகும்போது மிகவும் கூர்மையாக தன்னைப் பார்ப்பது பற்றி வியந்திருக்கிறாள். முதலில் கண் பார்வை குறைபாட்டால் அப்படி பார்க்கிறார் என்றுதான் நினைத்திருந்தாள். அவளது கணவன் வண்டியைப் போட்டுக் கொண்டு துணிகளைத் தேய்க்கும் மரநிழலுக்கு வந்து துணிகளை உன்னிடம் கொடுக்கப் போகிறேன் என்றிருக்கிறார். அவன் தான் ரோஸ் பிளாட்ல நம்பர் பதினாலுக்குப் போ என்று அனுப்பி வைத்தான். ஓ, இவரா? ஒரு பயம். ஆனால் வாழ்வில் யாரொருவரும் கொடுக்காத மரியாதையைக் கொடுத்தார். வாங்க போங்க என்றார். அடுத்தமுறை போனபோது ஒரு கவிதை பாருங்க என்றார். போனில் படித்துக் காட்டினார்.
பாவை அவளொரு வேதம்
பாடி நடந்தேன் பல காதம்
செத்துப் போயின பல மாதம்
பித்துக் காதலில் என் பிடிவாதம் !
அவளுக்கு சிரிப்பாக வந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவைகள் வாட்சப்பில் வந்தன. நான் உருகும் தேவதை நீதான் என்றும் நேரில் ஒருநாள் சொல்லி முடித்து விட்டார்.பெற்ற பிள்ளைகள் எதுவும் கூட இல்லை. மனைவியையும் இழந்து விட்டவர். அப்படியெல்லாம் தானே இருக்கும். ஒருமுறை பையனோடு அவனது பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும்போது அவன் என்ன படிக்கிறான் என்று கேட்டார். எட்டாவது என்பதற்கு ஆசீர்வாதம் பண்ணினார். இவனுடைய படிப்பு சம்மந்தமாக ஏதாவது உதவிகள் வேண்டுமெனில் என்னிடம் கேட்கலாம் என்று சொன்னது அவளுக்கு மிகவும் இஷ்டப்பட்டது.
அவளது புருஷன் அவ்வப்போது அவரிடம் பேசுவதை கவனித்து விட்டு ஒருமுறை அவரிடம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் கேட்டுப் பார்க்க முடியுமா என்று கேட்டான். ஒரு முறைப்புக்கு அதை சட்டை பண்ணாமலும் போனான். அவனுக்கு யாரிடமும் எந்தப் பிடிப்புமில்லை. வேலை முடிந்தால் தனியாகவே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அந்த மரத்துக்கு கீழேயே உட்கார்ந்து கொண்டிருப்பான். நான்கு பேர் கூடி கட்சி விஷயம், ரியல் எஸ்டேட் எல்லாம் பேசினாலும் இவன் கடமைக்கு உம் கொட்டுவது தெரியும். கோபம் வந்தால் நேராக வந்து இவளை ஒரு அறை விட்டு எந்தக் காசையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவான். பையனும், மகளும் அவனோடு ஓரிரு வருடங்களாகவே பேசுவதில்லை என்பது அவனுக்கு தெரியுமா என்று கூட தெரியாது. அநேகமாக அவனுக்கு நினைப்பெல்லாம் அவனுடைய அக்காள் மீதுதான். ஒருவிதத்தில் அவளது நிழலில் தான் இவன் வளர்ந்தான்.
வேலை, வேலை என்று அலைந்து திரிந்து குடும்பத்தைக் காப்பாற்ற அலைந்ததில் அவள் ஒரு ஆணைப் போலவே வடிவு பெற்று இங்கிதம் இழந்தாள். தாமதமாகவே அவளுக்கு அமைந்த கல்யாண வாழ்க்கை சப்தமின்றி விட்டுப் போயிற்று. பல வியாதிகளை வரவழைத்து ஏற்றுக் கொண்டாள். தூக்கத்தில் இருந்து விழிக்கும் போதெல்லாம் சாப்பிட்டு அங்கேயே பாத்திரத்தில் கை கழுவிக் கொண்டாள். படுக்கையில் இருந்து எழாமல் இருந்து சலிந்து போனாள். கடைசியாக கிட்னி ஒன்று செயலிழந்து அதன் சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல வேளையாக அந்த குடும்பத்தில் காசு குறைச்சல் ஒன்றுமில்லை. இல்லையென்றால் இந்நேரத்துக்கு அந்தப் பொம்பளை உயிரோடு இருந்திருக்க முடியாது. இப்போதும் அவளைப் பார்க்க போகும்போதெல்லாம் அவள் தனது புருஷனுக்கு காசு தருவது இவளுக்கு தெரியும்.
இங்கேயும் காசு வருவதில் குறைவுண்டா என்ன. அது எங்கே போகிறது என்பதே கஷ்டம். சுற்றியிருக்கும் மூன்று தெருக்களின் துணிகள் பூராவையும் இங்கே தான் சலவை செய்ய கொடுக்கிறார்கள். பொழுது விடிந்து விடுவதில் மெல்ல மெல்ல வளரும் பணி அப்படியே ஆளை மூடும். அமிழ்த்தும். மூச்சைப் பிடித்துக் கொள்ள செய்யும். என்றாவது ஒருநாள் தனது எலும்புகள் முறிந்து கொள்ளப் போகிற தருணத்துக்கு அஞ்சியவண்ணம் தினங்கள் போகின்றன.
வேலையில் அகப்பட்டு அதற்குள்ளேயே உழலுகிற மனசை கூட அப்படி இப்படி நகர்த்த முடியாது.எப்போதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் படம் போடுகிறார்கள், பார்க்கலாம் என்று பிள்ளைகளுடன் உட்கார்ந்தால் அப்படியே தூக்கம் தள்ளிக் கொண்டு போகும். சில நாட்களில் பொழுது விடியும்போது வாய் விட்டே அழுது இருக்கிறாள் கூட. ஒருநாள் அதைப் பார்த்து விட்டு அவளது புருஷன் என்ன பழைய நெனப்பா என்றான். அதாவது கல்யாணம் ஆவதற்கு முன்பு புழக்கத்தில் இருந்த உன் ஊர்க்காரன் குருபரனை நினைத்து அழுகிறாயா என்று அர்த்தம். அவன் தான் இப்போது பதினோரு மணிக்கு வரப் போகிறவன்.
மீனு சோப்பின் நறுமணத்துடன் வெளியேறி வந்து கதவை பதமாக மூடி வைத்துவிட்டு பக்கவாட்டில் இருந்த படிகளில் ஏறினாள். மேலே முன்பு எப்போதோ போட்ட கூரை முற்றிலும் சரிந்து அலங்கோலமாக சிதைந்து கிடந்தது. ஆனால் இப்போதும் அது ஒரு மறைப்பும், பாதுகாப்பும்தான் என்பதில் சந்தேகம் கிடையாது. ஒரு ஓரமாக இருந்த பாய் தலையணையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். சுற்றிலும் மரங்கள் தான். நல்ல நிலாவிருந்தது. சென்னையில் இருந்து பார்ப்பதில் இருந்து தெரிகிற நட்சத்திரங்கள் பத்து மடங்கு அதிகமாக இருந்தன. மனதின் கிளர்ச்சியைப் பிடித்து நிறுத்த முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்தவாறு இருந்த போதிலும் ஒன்றில் கூட நிலைக்க முடியவில்லை. குருபரன் வந்து அவளை எடுத்துக் கொள்ளும்போது அவன் மடியில் துவண்ட தனது உடலை பார்த்துக் கொண்டாள். வாசு சார் சொல்லியிராத பட்ஷம் அவள் தனது வனப்புகளை அறிந்திருக்க மாட்டாள். அதன் உள்ளோடியிருந்த தாகங்களை வரிவரியாகப் படித்திருக்க மாட்டாள். குருபரன் நினைவு வந்து அவனைத் தேடியடைந்து இருக்க முடிந்திருக்காது. எத்தனை வருடங்கள் போனபிறகு இந்த உடம்புக்குள் அசலான ஆசையுடன் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது? அவளது மனம் அவருக்கு நன்றி சொல்லியவாறு இருக்கும்போது நினைவு தப்பிக் கொண்டிருந்தது.
ஒருமுறை கண்திறந்து ஆபரேஷன் தியேட்டர் என்கிற போர்டைப் பார்த்ததாக நினைவு.
எல்லோரும் சென்று ரத்தப் பரிசோதனை செய்தபோது இவளது ரத்தம் அக்காவின் ரத்தத்துடன் பொருந்தி இருக்க யாரேனும் யாரிடமாவது எதையேனும் கேட்டார்களா என்ன. அவளை கண்ணே மணியே என்று கொஞ்ச ஆரம்பித்தார்கள். புருஷன் ஒரு பை நிறைய பழங்களை வாங்கி வந்து தின்னு தின்னு என்றான். உறவு வட்டங்களில் இவளது அனுமதியில்லாமலே இவளுக்கு தியாகி என்கிற பட்டம் சூட்டி அவர்களுக்குள் மகிழ்ந்து கொண்டார்கள். உன்னைப் போல வருமா என்று கேட்டார்கள். அப்புறம் மருத்துவமனை, டாக்டர்களின் பாராட்டு, மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் வெகு சாதாரணமாக சென்று முடிந்தன. உனது கிட்னியை நாங்கள் எடுத்துக் கொள்ளுவது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்கிற ஒரு பார்வை கூட அமையாத அந்தக் கும்பலின் மீதிருக்கிற கோபத்தை விலக்கி நிறுத்தி தனது புருஷனிடம் அவள் ஒன்று மட்டும் தான் கேட்டாள், “ நான் ஊருக்கு சென்று நான்கு நாள் தங்கி விட்டு வருகிறேன், அப்புறம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.” அவர்களுக்கு அவள் தனது உடம்பை தேற்றிக் கொண்டு வருவதில் என்ன ஆட்சேபனை இருக்க முடியும்.
சரியாக கண் விழித்து ஆகாரம் எடுத்துக் கொள்ள இரண்டு நாட்களாகின.
யார்யாரோ வருவதுதான். போவதுதான்.
பிள்ளைகள் பெரும்பாலும் பக்கத்திலே இருந்து கொண்டன. பையனின் கண்களில் அவ்வப்போது தென்பட்டுவிடுகிற ஆம்பிளைத்தனம் அவளுக்குப் பிடித்தது. அது நான் உன்னைப் பார்த்துக் கொள்வேன் என்பதை சொல்லாமல் சொல்வது. மகள் அப்படியே வேறு ஒன்று. பயந்து கொண்டிருக்கிற ஒரு குட்டிப் பறவை. கண்களில் தான் எவ்வளவு அச்சம்? அவள் வளர வளர சொல்ல வேண்டும். இல்லை. பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. நமக்கு நாம் போக வேண்டிய வழிகளை அறிந்து கொள்வோம். மீனு தான் நினைப்பதை தொகுக்க முயலாமல் களைத்து தூங்கிக் கொண்டாள்.
வாசு சார் வந்து பார்த்து விட்டுப் போனார்.
அவள் எண்ணியதைக் காட்டிலும் அதிகமான பணத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.
உனது மறுபிறப்பை வரவேற்றுக் காத்திருக்கிறேன் என்று கவிதை சொல்லிவிட்டுப் போக மறக்கவில்லை.
புருஷன் மிகவும் சந்தோஷமாக இருப்பது தெரிந்தது. வந்த கூட்டத்தில் பலரும் பணம் கொடுத்திருப்பார்கள். காரியங்கள் சுகமாக சென்று கொண்டிருக்கும். அக்கா உனக்கு நன்றி சொல்ல சொல்லி வாய் விட்டு கதறி அழுதார்கள் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் சொன்னான். பாவம், நன்றாக இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஒருவேளை இந்த பிரச்சினை எனக்கு ஏற்பட்டிருந்தால், என்னைக் காப்பாற்ற நீங்கள் யாருமே வந்திருக்க மாட்டீர்கள் என்பதையும் நினைத்துக் கொண்டு. தனக்கு கோபமே வரவில்லை என்பதை வியக்கும்போது அவளது உதடுகளை உண்ட குருபரன் முகம் நினைவில் வந்து போயிற்று.
இன்னும் ஒரு காரியம் செய்ய வேண்டும்.
வாசு சார் கொடுத்த பணத்தை கணவனிடம் கொடுத்தாள். குடித்து குடித்து சவக்களையில் இருந்த அவனது முகம் ஒரு விதமான ஆத்திரத்துடன் மலர்ந்தது பார்த்தாள். அவனால் நம்ப முடியாது. எனக்கே எனக்கு இவ்வளவு பணமா? ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள். இதை அவன் நிற்க நேரமில்லாமல், உணவு உண்ண இஷ்டமில்லாமல், மற்றொருவருக்கு கூட வாங்கிக் கொடுத்து விடாமல் முழுவதுமாகக் குடித்துத் தீர்ப்பதற்குள் மண்டையைப் போட்டு விட வாய்ப்பிருக்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை?
மீனு தனது மகளிடம் படுக்கையை ஒட்டியிருந்த சன்னலை திறந்து விட சொன்னாள்.
***
மணி எம்.கே. மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத் தொகுப்பு, வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பு அண்மையில் மதுர விசாரம் எனும் நாவல் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com
.
கதையின் ஆன்மா அவ்வளவு மென்மையோடு நகர்ந்துச் செல்கிறது. இந்திரா கோஸ்வாமியின் நாவல்களில் வரும் அசாமியப் பெண் கதாபாத்திரங்கள் மனத்திரையில் வந்து போகிறார்கள்.
2004ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு அதுவும் சென்னையில் பல்வேறுபட்ட உழைக்கும் பெண்கள் தங்கள் சிறுநீரகங்களை தானம் கொடுக்க நேரிட்டதை அறிந்து (பின்னாளில் புலனாய்வுப் பத்திரிகைகள் மூலம்) பத்திரிகையில் இருந்த காலத்தில், அப்படி வலிந்து சிறுநீரக தானம் அல்லது விற்பனை செய்த பெண் ஒருவரை நேரே சந்திக்க மணலியிலுள்ள ‘கிட்னிவாக்கம்’ சென்றிருந்தேன். அவரின் கதையை ஓர் சிறுகதையாக எழுத முயன்று கைவிட்டதும் உண்டு.
உங்களது இந்தச் சிறுகதை மிகநல்ல வாசிப்பனுபவத்தைத் தந்தது. நான்கைந்து மூவ்களுக்குள் விஸ்வநாதன் ஆனந்த் ஆட்டத்தை முடித்துவிட்டு எழுந்துவிடுவது போல நல்ல செய்நேர்த்தி.
சலவைத் தொழிலாளர்கள் இன்னும் பழமை மாறாமல் இருப்பது நகரங்களில் தான். கிராமங்களில்.. இப்பவும்.. தவசம் (தானியம்) அல்லது வருஷத்துக்கு ‘ஆயிரம்’ வாங்கிக் கொண்டு வெளு..என்றால்.. யார் வெளுப்பார்கள் ? விவசாயம் செய்வது..ஆடுமாடுகள் வளர்ப்பது என தொழிலை மாற்றிக் கொண்டு விட்டார்கள். எஞ்சியவர்கள் தான் நகரங்களில் கலந்து விட்டவர்கள். இவர்களுக்கு நகரத்தின் பாதிப்புகள் தொற்றாமல்…இருப்பதற்கு இவர்களின் இடைவிடாத பணிகள் ஒரு காரணம். நகரத்தின் தெருக்களில் பிரிக்கமுடியாத அடையாளமாக இருக்கும் இவர்களில்.. பெண்கள்..நகரத்தின் மதிப்பு மிக்க வாழ்க்கை மீது தீராத ஏக்கம் கொள்வதும், ஆண்கள்.. இடைவிடாத வேலை ஏர்ப்படுத்தும் சோர்வினால் மதுமயக்கம் கொள்வதும்.. பெரிதும் காணக் கிடைப்பவர்களின் வாழ்க்கை. மணி அதை அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார்.
காட்சி மாற்றங்களிலும்.. கதையின் முடிவிலும்..வழக்கம்போல் மணியின் முத்திரை.