ரா.செந்தில்குமார்
”எப்படி, இதை தவறவிட்டோம்?” என்று தனக்குதானே சொல்லிக்கொள்வது போல் ஜப்பானிய மொழியில், முனகினார் கிகுச்சி சான். திரும்பத் திரும்ப அதையே பேசி அலுத்து போயிருந்ததால் தூங்குவதுபோல், கண்களை மூடிக்கொண்டேன். பாங்காக்கில் இருந்த அந்த விடுதியிலிருந்து, கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும், எங்கள் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு செல்ல, ஒரு மணிநேரம் பிடிக்கும். காலை வணக்கம் சொல்லிக்கொண்டபின், நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வேன், பாங்காக்கின் வாகன நெரிசலில் தப்பித்து, ஹைவேயில் ஏறியதும், தூக்கம் வந்தது. வேன் அடுத்தடுத்து எடுத்த திருப்பங்களில், தொழிற்சாலை வந்துவிட்டதை உணர்ந்து கண் விழித்தேன்.
அவசரமாக இறங்கி, இருவரும் உள்ளே சென்றோம். எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பட்டயா என பெயரிடப்பட்ட அறையில், ஏற்கனவே பிஸினஸ் ஆட்கள் சிலர் வந்திருந்தனர். புரொஜ்க்ட் லீடர்களுக்கான தரப்பில் நாங்கள் அமர்ந்தோம். எங்களுக்கு நேர் எதிரே, தாய்லாந்து சைட்டின் விநியோக சங்கிலியை பராமரிக்கும் சசிவீமன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறியை இயக்கி, நேற்றிரவு தயார் செய்து, தளத்தில் ஏற்றியிருந்த Root Cause Analysis பவர்பாயிண்ட் கோப்பை நோக்கினேன். மேலும், சில மாற்றங்களை கிகுச்சி சான் செய்திருப்பதை பார்க்க முடிந்தது.
ஜீவானந்தம் காத்தய்யா, காக்கி நிற கோட்சூட்டும் சிவப்பு நிற டையும் அணிந்து சிரித்தபடி அறைக்குள் நுழைந்தார். அறை பரபரப்படைந்திருந்தது. ஜீவானந்தம், எல்லா நாடுகளுக்குமான முழு விநியோக சங்கிலியை நிர்வகிக்கும் தலைவர். வயது ஐம்பதை தாண்டியிருந்தாலும், விளையாட்டு வீரனின் உடலமைப்பைக் கொண்டவர். சில வருடங்களுக்கு முன் எங்களது கம்பெனியில் சேர்ந்திருந்தார். மலேசியாவை பணியிடமாக கொண்டிருந்தாலும், மாதத்தின் பெரும்பாலான நாட்கள் தாய்லாந்து மற்றும், சைனா தொழிற்சாலைகளுக்கு பயணம் செய்பவர்.
சசிவீமன், தனக்கு அருகிலிருந்த நாற்காலியை சரிசெய்தாள். டேபிளில் பரப்பியிருந்த தனது நோட்டுபுத்தகங்களை ஒதுக்கி தனது பாஸுக்கு இடம் கொடுத்தாள். ஜீவானந்தம், இருக்கையில் அமர்ந்து, மைக்கை தன்பக்கம் திருப்பி தட்டிப்பார்த்துக் கொண்டார். பிறகு, ”இங்குள்ள அனைவருக்கும் என்ன நிகழ்ந்தது என்று தெரிந்திருக்கும். இந்த நிரல் பதினெட்டு மாதங்களுக்கு முன் நமது தகவல் தொழில்நுட்பத் துறையினரால் வடிவமைக்கப்பட்டு, தொடர்ந்து பல மாற்றங்கள் அடைந்து, தாய்லாந்து தொழிற்சாலையில் சென்ற மாதம் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை, நிரல் இயங்கி, ஒரு வருடத்துக்கு தேவையான உதிரிபாகங்களை திட்டமிட்டு, நமக்கு பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களுக்கு, அந்த திட்டத்தை அனுப்புகிறது. அதைக்கொண்டு அவர்கள் பொருட்களை ஒவ்வொரு நாளும், நமக்கு வினியோகிக்கிறார்கள்.” என்று சொல்லி நிறுத்தினார்.
போதிய அளவிற்கு கவனம் கூடியிருக்கிறது, என்று உறுதி செய்து கொண்ட பின், மீண்டும் தொடங்கினார். ”நேற்றிரவு நிரலை இயக்கியபோது, ஏதோ ஒரு பிரச்சினையால் மோட்டார் உதிரிபாகங்கள் மட்டும், உண்மையான தேவையை விட தவறுதலாக இரண்டு மடங்கு அதிகமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. நல்லவேளையாக, அந்த திட்டத்தை அனுப்புவதற்க்கு பொருள் தயாரித்து வழங்கும் நிறுவனத்துக்கு அனுப்புவதற்க்கு முன், கடைசி நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு, எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. இல்லையெனில், குழப்பம் நிகழ்ந்திருக்கும். இதுபற்றி விளக்கவேண்டுமென்று இந்த நிரலின் வடிவமைப்பாளர், ஜப்பான் சைட்டை சேர்ந்த ஐடி மேனேஜர் கிகுச்சி சானை கேட்டுக்கொள்கிறேன் ” என்று சொல்லி முடித்தார்.
கிகுச்சி சான், மெதுவாக எழுந்து திரை அருகே சென்றார். அவருடைய கணிப்பொறியில் இருந்த டாக்குமெண்டை நான் இயக்கினேன். திரையில் பவர்பாயிண்ட் தெரிந்தது. கையிலிருந்த லேசர் நடுங்கியது. மெல்ல விளக்க தொடங்கினார். நிரலில் கண்டுபிடிக்காமல் விடப்பட்டிருந்த பிழையைப் பற்றி சொன்னார். ”நேற்றிரவு எங்களது அணியை சேர்ந்தவர்களே இந்த பிழையை கண்டுபிடித்து, சரிசெய்தோம். இந்தப் பிழை சரிசெய்யப்பட்டு முழுவதுமாக சோதனை செய்யப்பட்டுவிட்டது.” என்றார்.
”நிரல் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டுதானே ஒரு மாதம் முன்பு நிறுவினோம்? பிறகு எப்படி இந்த பிழையை கண்டுபிடிக்கவில்லை? ”, என்று கேட்டார் ஜீவானந்தம்.
கிகுச்சி சான், “ இல்லை இந்த பிழையை சரி பார்ப்பதற்கான சோதனை டேட்டா சரியாக கொடுக்கப்படவில்லை” என்றார்.
”அப்படியென்றால், சசிவீமன் உங்களுக்கு ஒழுங்கான டேட்டா கொடுக்கவில்லை. அப்படிதானே?”, என்று சொல்லி சசிவீமனை பார்த்து சிரித்தார் ஜீவா. உடனே அறையில் அமர்ந்திருந்தவர்களும் இலகுவானார்கள். நேற்றைய தவறினால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நிம்மதி தந்திருப்பதை உணரமுடிந்தது.
”இல்லை. அப்படி சொல்லவில்லை. இது எங்களுடைய பிழையும்தான். ஆனால்.. இதை..இதை.. “ திடீரென்று திக்கத் தொடங்கினார் கிகுச்சி சான்.
கிகுச்சி சான் திக்கிப் பேச தொடங்கியதும், ஜீவானந்தம், பிழையை சரிசெய்வதற்கான வழிகளை பற்றி பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், மாறாக அவர் முகம் கடுமையடைந்தது, ஆச்சர்யத்தை கொடுத்தது. இதற்கு முன்பும், நிறுவப்பட்ட முதல் சில நாட்களில், இப்படி நிரல்களில் பிழைகளை கண்டடைந்துண்டு. இது போன்ற விஷயங்களுக்காவே, போஸ்ட் புரடெக்ஷன் சப்போர்ட் என்ற பெயரில், ஒரு மாதமாக இங்கு நானும் கிகுச்சியும் தங்கியுள்ளோம். ஒப்பீட்டளவில் நேற்று எந்த பின்விளைவுமின்றி பிழை சரிசெய்யப்பட்டு விட்டது.
”கிகுச்சி சான், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இரண்டு மாதம் சோதனை ஓட்டம் முடிந்தே, நிரலை நிறுவதற்க்கு அனுமதி கொடுத்தோம். இப்போது இப்படி பிழைகள் கண்டுபிடிக்கபடுமென்றால், பதினெட்டு மாதங்கள் என்னதான் செய்தீர்கள் என்று எனக்கு புரியவில்லை”, என்றார் ஜீவானந்தம்.
சசிவீமனின் முகத்தில் சிறிய நகைப்பு எட்டிப் பார்த்தது. அதை கண்டவுடன் வெறியேறியது. ”யாருன்னு நெனைச்சே அவரை? நாலு பேட்டர்ன்ஸ் கிகுச்சி சான் பெயரில் இருக்கிறது. அவரை பார்த்து சிரிக்கிற“ உள்ளுக்குள் உஷ்ணம் ஏறியது. தலையை அசைத்துக்கொண்டு சமன்படுத்திக் கொண்டேன். இது வெறும் அல்லக்கை. ஜீவானந்தத்துக்கு தெரிந்திருக்கும் கிகுச்சி சானின் முக்கியத்துவம். ஆனால் அவரும் திடீரென்று பதட்டபடுவது ஏன் என்று புரியவில்லை.
”இப்போதே நிரலை நிறுத்திவிட்டு, பழைய முறைக்கு செல்வோம். மீண்டும், ஒருமுறை முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு, தாய்லாந்து டீமின் அனுமதி வாங்கிய பின்தான் இந்த நிரலை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்” என்று சொன்னார் ஜீவானந்தம்.
கூட்டம் முடிந்துவிட்டதற்கான தொனியில், சசிவீமனிடம் திரும்பி ”உடனடியாக, ஒரு டீமை தயார் செய்து சோதனை ஓட்டம் செய்வதற்க்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்”, என்றார் ஜீவானந்தம்.
இப்படி ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. நிறுவிய பிறகு நிரலை தடை செய்வதில்லை. இது தேவையில்லாத வேலைகளையும், செலவையும் ஏற்படுத்தும். முக்கியமாக எங்கள் டீமுக்கும், அதன் தலைவரான கிகுச்சிசானுக்கும் கெட்ட பெயரை தரும். ஜீவானந்தம், ஏன் இப்படி கடுமையான முடிவை எடுத்தார்? என்று புரியாமல், சசிவீமனும் திகைத்தாள். கிகுச்சி சான், முழுவதுமாய் வேர்த்திருந்தார். இப்படி அவருடைய அனுபவத்தில் ஏற்பட்டதில்லை. திரும்பவும் ஸ்லைடை காண்பித்து நாங்கள் முன் தினம் செய்த பல வகை சோதனைகளை பற்றியும் விளக்க முயன்றார்.
”எப்படியிருப்பினும், எக்ஸிகியுட்டிவ் கமிட்டி கூடிதான் அடுத்த வாரத்துக்கான முடிவை எடுக்கும். இப்போதைக்கு உங்களது சோதனைகளை செய்யுங்கள்” என்றார், ஜீவானந்தம்.
2
அன்றிரவு, பாங்காக் விடுதிக்கு திரும்பியபோது, கம்பெனி எக்ஸிகியுட்டிவுக்கான காரில், ஜீவானந்தம் வந்திறங்கினார். புன்னகைத்தேன். பதிலுக்கு சிரித்தபடி உள்ளே சென்றார். வேனிலிருந்து கிகுச்சி இறங்குவதற்கு ஓரமாக நின்றேன். கிகுச்சி சான் தளர்வாய் இறங்கி நடந்தார். இருவரும் லிப்ட் அருகே சென்றவுடன், ”எத்தனை மணிக்கு சந்திப்போம்?” என்றேன். இல்லை எனக்கு பசியில்லை. நீ வெளியே சென்று சாப்பிட்டுவிடு காலை பார்ப்போம்”, என்றார். வருத்தமாக இருந்தது.
அறைக்கு சென்று, உடைகளை மாற்றிவிட்டு கீழே இறங்கி நடந்தேன். சுகும்வித் ரோட்டில், இரவு வாழ்க்கை தொடங்கியிருந்தது. ஒவ்வொரு பத்தடிக்கும், ஒரு பெண் கைப்பையுடன் நின்றிருந்தாள். பார்க்கும் ஆண்களில், காமத்தை சரியாக அடையாளம் கண்டு அவர்களை மட்டும் அணுகினார்கள். வயது முதிர்ந்த அமெரிக்கன் ஒருவன் அரைபோதையில், சிக்னல் அருகே நின்றிருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். இறுக்கமாக டிஷர்ட் அணிந்து, அரைக்கால் டிரவுசரில் அதை டக்இன் செய்திருந்தான். தொப்பை வெளியே நீட்டியிருந்தது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கூர்ந்து கவனித்தேன். என்னவிதமான சேவைகளை, அவள் செய்வாள்? என்று கேட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலும் இப்படி பேசிக்கொண்டிருப்பவர்கள், அத்துடன் திரும்பி விடுவார்கள். அன்றைய இரவின் கிறக்கத்திற்க்கு அந்த பேச்சே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
நடக்க ஆரம்பித்ததும் சொவ்காபாய்க்கு, அருகே இருக்கும் டீலக்ஸ் மது விடுதிக்கு போகலாம் என்று தோன்றியது. முழுதாக, முப்பது நிமிடம் நடந்ததும் நன்கு வேர்த்தது. எப்போது, டீலக்ஸ் பார் வந்தாலும், ஓடி வந்து கும்பிட்டு வரவேற்கும் ஸ்ரீரத்தை, வாசலில் காணவில்லை. வேறு வாடிக்கையாளர்கள் வந்திருக்ககூடும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது தான் ஜீவானந்தத்தை பார்த்தேன். ஸ்ரீரத், அவர் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நிச்சயமாய், இதுபோன்று ஒதுக்குபுறமாக அமைந்த ஒரு சிறிய பாரில், அவரை எதிர்பார்த்திருக்கவில்லை. ஜீவானந்தம், என்னை பார்த்துவிட்டு கைகளை ஆட்டி அழைத்தார். திரும்பவும், அவர் வேலை பற்றி பேசினால், மண்டை வெடித்துவிடும் என்று தோன்றியது. அவரை முன்பே உள்ளே பார்த்திருந்தால், அப்படியே வெளியே நடந்திருக்கலாம். இனி தவிர்க்க முடியாது. அவர், எதிரேயுள்ள நாற்காலியில் அமர்ந்தேன்.
”என்ன குடிக்கிறீர்கள்?”, என்று தமிழில் கேட்டார் ஜீவானந்தம். இத்தனை நாட்களில், ஒருபோதும் தமிழில் அவர் என்னிடம் பேசியதில்லை. அவருடைய மேஜையில் ரெஜின்ஸி விஸ்கி பாட்டில் இருந்தது. விஸ்கியே அருந்துவேன் என்றேன். ஸ்ரீரத், நீங்கள் இருவரும் நண்பர்களா ? என்று வியந்தாள். எழுந்து சென்று கிளாஸ் எடுத்து வந்து அதில் விஸ்கியை ஊற்றினாள். அவள் ஏற்கனவே காக்டெயில் குடித்துக் கொண்டிருந்தாள்.
ரெஜின்ஸி ஒரு மடக்கு குடித்ததும், கொஞ்சம் பரபரப்பு குறைந்ததுபோல் இருந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு என்னிடம் நீட்டினார். ”இல்லை ஜீவா சான், நான் புகைப்பதில்லை”, என்றேன். அப்போதுதான் தொலைகாட்சியை கவனித்தேன். Let it Be பாடல் ஓடிக்கொண்டிருந்தது. தொலைகாட்சியுடன் இணைப்பு கொடுக்கப்பட்ட கணிப்பொறியில், பீட்டீல்ஸ் ஆல்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது . நான் திரையை கவனிப்பதை பார்த்து, ஜீவானந்தம், ”இங்கு தமிழ் பாடல்கள் வேண்டுமானாலும் போடலாம்”, என்றார்.
”இல்லை. இதுவே இருக்கட்டும்” என்றேன்.
”எவ்வளவு நாட்களாக ஜப்பானில் இருக்கிறாய், ராம்?” திரும்பவும் ஆங்கிலத்துக்கு தாவியிருந்தார். ஜீவானந்தத்தின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியானது. அவரது மொழி மீதான ஆளுமை, தொலைபேசி கூட்டங்களில் நான் வியக்கும் ஒன்று.
”பத்து வருடங்களாக டோக்கியோவில் வசிக்கிறேன். நமது நிறுவனத்தில், எட்டு வருடங்கள். நான் சேர்ந்த போதிலிருந்து, கிகுச்சி சான் தான் எனக்கு மேனேஜர். ”
”ஓ..”
”நீங்கள் நமது நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் இருக்கும் இல்லையா, ஜீவா சான்? “
”ஆம். அதற்கு முன்பும் வேறொரு கார் தயாரிக்கும் நிறுவனம்தான். இதே ஊரில்தான் அந்த தொழிற்சாலையும் இருந்தது. எனவே ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும், ஓரிரு நாட்கள் மலேசியாவிலிருந்து, தாய்லாந்து வந்து செல்வேன்.”, என்றார் ஜீவானந்தம்.
ஒரு ஐந்து வருடங்கள் முன்பு வரை, நமது நிறுவனத்தில், மலையாக தேங்கிகிடந்த உதிரிபாகங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. அதை சரிசெய்தது கிகுச்சி சானின் வடிவமைப்பில் உருவான நிரல்தான். அந்த நிரல் நிறுவிய பின்பு, ஒரு வருடத்துக்கு ஆறு மில்லியன் டாலர், நமது நிறுவனத்துக்கு சேமிப்பானது. அந்த நிரலில் நானும் வேலை பார்த்தேன். அவரிடம் நான் கற்றுக்கொண்டது அநேகம்.
ஜீவா, என்னை கூர்ந்து பார்த்தார். ”உன்னுடைய குருவிடம் நான் கோபப்பட்டது உனக்கு வருத்தம் தருகிறது அல்லவா?”
”நீங்கள் அவரை கொஞ்சம் பேச விட்டிருக்கலாம்”.
கொஞ்சம் அதிகமாக அவரிடம் பேசுகிறோமோ என்று குழப்பமாக இருந்தது. தமிழில் பேசத்தொடங்கி, மீண்டும் ஆங்கிலத்துக்கு அவர் போனது, உரையாடல் வசதிக்காகவா அல்லது படிநிலையின் இடைவெளியை தக்கவைப்பதற்கா? என்று மனம் சஞ்சலமடைந்தது.
ஒன்றும் பேசாமல், மீண்டும் ஒரு டபுள் ரவுண்டுக்கான ரெஜின்ஸி விஸ்கியை கவிழ்த்து, பிளாஸ்கில் இருந்த ஐஸ் துண்டங்களை கிடுக்கியால் எடுத்து அதில் போட்டு கலக்கினார். கொஞ்சம் போல் நீர் விட்டு, ஒரு மடக்கு அருந்திவிட்டு வைத்தார்.
கிகுச்சி சான், எப்பவுமே இப்படி திக்கி தான் பேசுவாரா?.
இல்லை. ஜப்பானியமொழியில் அவர் திக்குவதில்லை. ஆங்கிலத்தில் பேசும்போது இப்படி திக்குவதுண்டு.
ஆழ்ந்து, புகையை இழுத்தார் ஜீவா.
”கிகுச்சி சான் திக்கிபேசும்போது, எனது அப்பாவை ஞாபகப்படுத்துகிறார்.“, என்றார்.
இப்போது பீட்டீல்ஸ் குழுவினர், நோர்வேஜியன் வுட்ஸ் இசைக்க தொடங்கியிருந்தனர். ரெஜின்ஸி விஸ்கி பாட்டிலில் பாதிக்கும் மேல் முடிந்திருந்தது. ஜீவா, நிதானமாக குடித்தார். ஜீவாவின் கிளாஸ் காலியானதை பார்த்து மீண்டும் விஸ்கியை ஊற்றி, ஐஸ்துண்டங்களை போட்டாள் ஸ்ரீரத். ஜீவா பேச விழைபவர் போல, சிகரெட்டை பாதியில் நசுக்கி அணைத்தார்.
”இங்கிருந்து நூற்றியிருபது கிலோமீட்டர் தொலைவில் காஞ்சனபுரி இருக்கிறது. என் வாழ்க்கையில் எப்போதும் செல்லகூடாது என்று நான் நினைத்திருந்த இடம் அது. ஆனால், அப்படி நினைத்ததாலயே, அந்த இடங்கள் பிடித்திழுப்பதிலிருந்து ஒருபோதும் மானிடர்களால் தப்ப இயலாது. அப்படி ஒருநாள் எனக்கு அது”, என்றார் .
ஒருமுறை வாரவிடுமுறையில் இங்கு தங்கவேண்டி வந்தது. காலை உணவு முடித்தபின் எங்கேயாவது செல்லலாமே, என்று எனக்கு எப்போதும் டாக்ஸி ஓட்டிவரும் சோரோவித்தை அழைத்தேன். சோரோவித் காரை இயக்கி வாகன நெரிசல்களிலிருந்து விலகி, ஹைவே ஏறியதும், எங்கு செல்லலாம் என்று கேட்டபோது, காஞ்சனபுரி என்று சொன்னது நிச்சயம் நானில்லை. அன்று சனிக்கிழமை. காலை முதலே சிறு தூறல் இருந்தது. இரண்டு மணிநேரத்தில் காஞ்சனபுரி சென்று விட்டோம்.
காஞ்சனபுரி ரயில் நிலையத்தின் எதிரே அந்த பிரமாண்ட போர் நினைவிடம் இருந்தது. நேரான வரிசையில் பெயர்கள் பொறித்த கிரானைட் கல்லறைகள். சிலவற்றில் புகைப்படங்களும் இருந்தன. இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த பிரிட்டிஷ், டச்சு மற்றும் ஆஸ்திரேலிய ராணுவவீரர்களுக்கான நினைவிடம். ஒவ்வொரு வரிசையாக பார்த்துக்கொண்டே நடந்தேன். டபிள்யு.ராபர்ட்சன், டன்லப், ஸ்டிவ், மேத்யூ, என்று அனைவரும் இருபதிலிருந்து, இருபத்தி ஐந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள். சிலர் அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் அந்தக் கல்லறையில் இருந்தது. இறந்தவர்களைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நினைவுக் குறிப்புகள். போர் கைதிகளாக ஜப்பானிய ராணுவத்திடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்கள். தாய்லாந்தின் சியாமிலிருந்து, பர்மாவுக்கான ரயில் பாதையை, காடுகளுக்குள்ளும், கடினமான பாறைகள் கொண்ட மலைகள் வழியாகவும் நிர்மாணிக்க பணிக்கப்பட்டவர்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய அந்த பணி, 43ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது.
பெரிய கனவுகளுடன் தேசத்திற்காக போரிட வந்தவர்கள், கொசுக்கடியிலும், மலேரியாவிலும் மாட்டிக்கொண்டு உயிரை விட நேர்ந்தது, எவ்வளவு பெரிய அவலம்? மொத்தம் 6900 பேருக்கான கல்லறைகள் அங்கு இருந்தன. அத்தனை பெரிய மைதானத்தில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று காலம் மீறிச்சென்று, அவர்களுடன் பாலம் கட்டுவதற்காக பெரிய மரத்தூணை தூக்கி சென்று கொண்டிருந்தேன். அவர்கள் நான் பார்த்த புகைப்படங்களிலிருந்து அலை அலையாக எழுந்து வந்தனர், அதே சிரிப்புடன். அந்த மைதானத்தின் 22வது வரிசையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு இளம் தம்பதி அவர்களது அழகான பெண் குழந்தையுடன் ஒரு கல்லறை முன் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த பெண் குழந்தைக்கு நான்கு வயது இருக்ககூடும். கைகளில் கொண்டு வந்திருந்த டூலிப் மலர்கள். கண்மூடி பிரார்த்தித்து, ”கிராண்பா” என்று உச்சரித்து அந்த கல்லறையில் போட்டாள். அந்த தம்பதியினருக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கக்கூடும். என்னை பார்த்து சிரித்தான் அந்த இளைஞன். இறந்துபோன ஹெச். வில்லியம்ஸின் பேரனாக இருக்கக்கூடும். தொடர்ந்து அந்த பெண்குழந்தையின் மகளும் இங்கு வரக்கூடும். இப்படி மலர்களை அள்ளியிட்டு, அவளது மூதாதையான ஹெச்.வில்லியம்ஸை வணங்கக் கூடும்.
உலகின், கடைசி மனிதனின் நினைவில் எஞ்சியிருக்கும் வரைக்கும், அந்த ஹெச். வில்லியம்ஸுக்கு சாவில்லை, ராம். சொல்லபோனால், அங்கு நடுகற்களாக எஞ்சியிருக்கும் அந்த 6900 பேரில் எவருக்கும் அழிவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நாட்டிலிருந்து, என்னைப் போல் ஒருவன் வந்து அவர்களின் பெயர்களை படித்து, நினைவுகளை சுமந்து திரும்பிக் கொண்டிருப்பான்.”
திரும்பவும், கிளாசில் டபுள் ரவுண்ட் ரெஜின்ஸியை ஊற்றினார். இந்த முறை எந்த கலப்புமின்றி அப்படியே ஒரு வாய் உறிஞ்சினார் ஜீவா. பிறகு தொடர்ந்தார்.
அந்த நினைவிடத்திலிருந்து, சற்று தள்ளி அமைந்திருந்த, மரண ரயில் பாதையின் நினைவகம் சென்றேன். போர்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் பொருட்கள், கைகடிகாரங்கள், நெளிந்த கோப்பைகள், மருந்து சீசாக்கள், மகளுடைய நினைவுகளை, ஒரு தந்தை எழுதிய கல் என எத்தனையோ பொருட்கள். காடுகளுக்கிடையே கிடைத்த பொருட்களை வைத்தே, ஜப்பானிய ராணுவத்துக்கு தெரியாமல், ரேடியோ அலைகளை உள்வாங்கும் கருவியை அவர்கள் வடிவமைத்திருந்தனர். ஜப்பானிய ராணுவத்தின் தோல்விகளை அவர்கள் அதன்மூலமே இறுதி நாட்களில் தெரிந்து கொண்டனர். சிலரின் எலும்புகூடு போன்ற புகைப்படங்கள். குகை போல் உள்ள அவர்தம் கூடாரங்கள். இப்படி மேலும் மேலும் படங்கள்.
இவற்றைத் தாண்டி சென்றேன். மொத்தமாக மரண ரயில் பாதை அமைக்க நிர்பந்திக்கப்பட்டு அந்த நரகத்தில் தினந்தோறும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேர். இதில் போர் கைதிகளாக மாட்டி இறந்த ராணுவத்தினர் இருபதாயிரம் பேர். மீதி? அந்த காலத்தில், அந்த இடத்தில் வாழ நேர்ந்ததை தவிர எந்த தவறும் செய்யாத அப்பாவிகள்.
அங்கு மாபெரும் மரப்பலகைகளில், ரயில் செல்லும் தண்டவாளத்தில் அடிக்கப்படும் பெரிய இரும்பு ஆணிகள் நடப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பலகை. அந்த பலகையில் அடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆணியும், ஐநூறு பேரின் இறப்பை குறிக்கும். விசித்திரமல்லவா? அப்படி அங்கு தொங்கிய பலகைகளில், அதிக ஆணிகள் இருந்த பலகை மலேசியா நாட்டுடையது. அந்தப் போரில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாமல், வயிற்றுப்பிழைப்புக்காக நாகபட்டினத்திலும், சென்னையிலும் கப்பலேறி மலேசியா வந்து தேயிலை தோட்டங்களில் பாடுபட்டு, விதியின் கரங்களில் மாட்டிக்கொண்டு உயிரை விட்ட தமிழர்களின் எண்ணிக்கை தான் அது. அந்த நரகத்தில் இறந்த மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை, ஏறக்குறைய அறுபதாயிரம் பேர். அவர்களின் பெயரோ, ஊரோ யாருக்கும் தெரியாது. அவர்களுக்கென்று ஒரு நடுகல் உலகில் எங்கும் கிடையாது. அவர்கள் நினைவாக இன்று எஞ்சியிருப்பது அந்த ஆணிகள் மட்டுமே.
வரலாற்றில் இரும்பு ஆணிகளாக மட்டும் எஞ்சியவர்களின் அவலம் உனக்கு புரிகிறதா, ராம்? மாட்டுவண்டியின் நுகத்தடி நடுவே ஆணியடித்து இருபக்கத்தையும் நிலைநிறுத்துவார்கள். இரு பக்கமும் இல்லாமல் நடுவே மாட்டிக்கொண்ட அவர்கள், அந்த நுகத்தடி ஆணிகளாக மட்டும் அங்கு எஞ்சியிருக்கின்றனர். அந்த பலகையில் தொங்கிய ஆணிகளில், எந்த ஆணி எனது மூதாதையரை குறிப்பது என்று தேடி நின்றிருந்தேன்.
ஜீவா சான், உங்களது தந்தை?
ஆம். நீ நினைப்பது சரிதான். உண்மையில், ஜப்பானிய ராணுவம் முதலில் வேலைக்கு ஆள் தேவையென்றே விளம்பரபடுத்தியிருந்தது. நல்ல உணவும், இருப்பிடமும், கூலியும் உண்டு என்று சொன்னதை நம்பியே, என் தந்தை தனது தம்பிமார்களுடன் அவர்களுடன் சேர்ந்தார். சரக்கு ரயிலில் மூட்டைகள் போல் அவர்கள் தாய்லாந்து கொண்டு வரப்பட்டனர். சரியானபடி ஆட்கள் கிடைக்கவில்லையென்றதும், கைது செய்து ஆட்களை இழுத்துச் சென்றார்கள். முதலில் உணவுப் பற்றாக்குறை. அரிசி கஞ்சி அரை கோப்பை, காடுகளில் கிடைக்கும் கிழங்கு இவைதான் உணவு. சில நாட்களில் பேதி ஆரம்பிக்கிறது. மக்கள் கொத்துகொத்தாக இறக்கின்றனர். எனது தந்தை தனது இரண்டு தம்பிகளையும் அதில் இழந்தார். 1943ம் வருடம் ஜூலை மாதம், அவர் பேதியில் இறந்துவிட்டார் என்று கருதி காட்டுக்குள் விட்டுச் சென்றனர். முறையான சவ அடக்கமெல்லாம் நின்று பல மாதங்கள் ஆகியிருந்தது. கொத்துகொத்தாக பிணங்களை குழிக்குள் தள்ளி மண்மூடிச் சென்று கொண்டேயிருந்தனர். எனது தந்தை,எப்படியோ தப்பி மலேசியா வந்தடைந்தார். ஜப்பான் ராணுவத்தின் தோல்விக்கு பிறகே பினாங்கு திரும்பி வந்தார். ஆனால், அதற்குள் பிடித்து செல்லப்பட்டவர்களில் ஐம்பது சதவீகிதம் பேர் இறந்திருந்தனர்.
இருபத்தி ஐந்து வயதில் திரும்பி வந்தவர், ஏறக்குறைய பாதி பிணமாக இருந்தார். நாற்பத்தி ஐந்து வயதாகையில் தோட்டத்தில் வேலை பார்த்த எனது அம்மாவை மணந்தார். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் சித்திரமே அவரைப் பற்றி எஞ்சியிருக்கிறது. சிறிய தவறுகளுக்கும் ஓடி வந்து மூர்க்கமாக தாக்குவார். கள்ளின் போதை மிதமிஞ்சுகையில், என்னை அவர் தம்பிமார் பெயர் கொண்டு அழைத்துக் கொஞ்சுவார். தினந்தோறும் மனிதர்களோடு படுத்து, காலையில் பிணங்களோடு எழுந்த ஒருவரின் வாழ்க்கை எப்படி சீராக அமைய இயலும்? அந்த தோட்ட பள்ளியில் ஆசிரியராக இருந்த ஆறுமுகம் ஐயா இல்லையென்றால் என் வாழ்க்கையும் இப்படி அமைந்திருக்காது.
ஜீவா கண்கள் முழுவதும் சிவந்து, நன்கு வேர்த்திருந்தார். கோப்பையில் மீதமிருந்த விஸ்கியை உறிஞ்சினார்.
”ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நெருங்கிவிட்டால் சாதாரண நாட்களை விட அதிகமாக குடித்துவிட்டு, அழுது அரற்றியபடி இருப்பார் எனது தந்தை”
”அவரை ஜப்பானிய ராணுவம் பிடித்து சென்றது டிசம்பர் மாதத்திலா, ஜீவா சான்?”
மெலிதாய் சிரித்தார் ஜீவா. ”போரில் ஜப்பான் வீழ்வதற்கு முன், ரயில்பாதைக்காக, மே கிளாங் ஆற்றில் கட்டப்பட்டிருந்த ரயில் பாலங்களை, 1944ம் வருடம் ஆங்கிலேய படைகள் வெடிகுண்டு வீசி அழித்தன. அந்த பாலங்கள் அழிக்கப்பட்டது டிசம்பர் மாதத்தில் தான்”, என்றார்.
மணி இரண்டாகியிருந்தது. ”நாம் செல்வோமா ராம்?” என்று கேட்டார். மெல்ல நடந்து சுக்கும்வித் ரோட்டின் ஏழாம் சொய்யில் அமைந்திருந்த விடுதி நோக்கி நடந்தோம்.
3
அடுத்த நாள், விடுதியில் காலை உணவு சாப்பிட வரும்போதே, கிகுச்சி சான் சரியான திட்டமிடலுடன் வந்தார். இது கிகுச்சி சானிடம் எதிர்பார்த்ததுதான். அவரிடம் இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது எந்த கட்டத்திலும் சோர்வடையாத மனநிலைதான். சோதனைக்காக மொத்தமுள்ள மூன்று சர்வர்களிலும், பன்னிரெண்டு விதமான சோதனை டேட்டாக்களை தயார் செய்ய சொன்னார். இந்தியாவில் உள்ள எங்களது டெவலப்மெண்ட் செண்டர் ஆட்களிடம் பேசி எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம். வெள்ளிக்கிழமை எக்ஸிகியூட்டிவ் கூட்டத்துக்கு பன்னிரெண்டு சோதனை ஓட்டங்களுக்கான முடிவுகளுடன் சென்றோம். ஜீவானந்தம் உட்பட யாரும் மறுக்க இயலாத சோதனை ஓட்டங்களுக்கான ஆதாரங்கள். எக்ஸிகியூட்டிவ் கமிட்டி, இப்போதைய நிலையே தொடரலாம் என்று முடிவெடுத்தது. ஆனால், நானும், கிகுச்சி சானும் மீண்டும் எங்களது பயணத்திட்டத்தை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து, அடுத்த வாரத்துக்கான ஓட்டத்தை கண்காணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
ஜீவானந்தம் திருப்தியடைந்தார் என்று தோன்றியது. கிகுச்சி சானிடம் வெகு சகஜமாக பேசினார். இருவரும் சிறிய நகைச்சுவைகளை கூட பரிமாறிக்கொண்டனர். ஜீவா, என்னிடம் சம்பிரதாயமான சொற்கள் மட்டுமே பேசினார். அன்றைய இரவுக்கு பின் அவர் எப்போதும் என்னிடம் தமிழில் பேசவில்லை. இதை உள்ளூர நான் எதிர்பார்த்திருந்தேன்.
***
ரா.செந்தில்குமார் – ஆசிரியர் தொடர்புக்கு senthil.rethan@gmail.com