Saturday, February 24, 2024
Homesliderதொற்று

தொற்று

சித்துராஜ் பொன்ராஜ்

ன்று எப்படியாவது இணையதள வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று சபரீசன் நினைத்தார். படுக்கையின் மறுமுனையில் கலைந்து கிடந்த போர்வையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த அவருடைய பாதங்களில் சன்னல் வழியாக அறைக்குள் பொழிந்து கொண்டிருந்த காலை நேரத்து வெயில் ஆழமான குளத்தில் மிதக்கும் மிகச்சிறிய வெள்ளைப் பூக்களாய் ஒட்டிக் கொண்டிருந்தது.

இந்தப் படுக்கையறை உயரமும் அகலமும் வாய்ந்த செவ்வகமான மீன் தொட்டி. காலைச் சூரியன் மூடிய கண்ணிமைகளுக்குப் பின்னால் இளஞ்சிவப்பாய்ச் சிரிக்க கறுப்பான தனது நீண்ட நெடிய மேனி முழுவதும் சிறிய வெள்ளை மலர்ச்சரங்கள் புரண்டு கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு மெத்தையின் கதகதப்புக்குள் புதையப் போனவர் பெயரில்லாத ஏதோ ஒரு சிந்தனை குறுக்கிடப் பதறிக்கொண்டு எழுந்தார்.

இப்போது படுக்கையின் இடது புறமாய்த் தரையில் கசங்கிய போர்வை, படுக்கையுறை, சில்லறைத் தலையணைகளோடு தூக்கமும் கிடந்தது. அவை அனைத்தையும் ஒரே எட்டில் தாண்டிக் கொண்டு சபரீசன் மடிக்கணினி திறந்தே வைக்கப்பட்டிருக்கும் சிறிய மேசையில் போய் அமர்ந்தார்.

குளியலறையிலிருந்து மெல்லிய சோப்பு மணத்தோடு கோமதி வெளியில் வந்தாள். பளிச்சென்று சிவப்பு வண்ணம் பூசிய கனமான அதரங்களும், இடது தோள்பட்டையிலிருந்து சற்றே விலகி உள்ளாடையின் வெள்ளை நிறப் பட்டை கண்ணுக்குத் தெரியும் விதத்தில் நழுவியிருந்த ஆடையும், கழுத்தின் மேல்புறம்வரை கத்தரித்து இளம்பழுப்பு வண்ணம் பூசிய தலைமயிர்க் கற்றைகளில் நடுங்கும் நீர்த்துளிகளும், உடலைப் பிடித்தபடி இருந்த தொடைநீள ஆடையின் பின்பக்கத்தில் உடம்பின் கனத்தால் தூக்கி நிற்கும் பிருஷ்டச் சதையுமாக.

சபரீசன் கோமதியின் ஆடையின் பின்புறத்தில் பறவையின் விரிந்த சிறகுகளின் வடிவத்தில் பதிந்து கோமதி இப்படியும் அப்படியும் திரும்பும் போதெல்லாம் பட்டவர்த்தனமாகத் தெரிந்த அவளுடைய உள்ளாடையின் வடிவத்தை மிகுந்த சுவாரசியத்தோடு ஓரக்கண்ணால் பார்த்தபடியே மடிக்கணினியை விரல்களால் தட்டிக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்களாய்ச் சவரம் செய்யப்படாமல் விடப்பட்டிருந்த சாம்பலும் வெண்மையும் கலந்த நரைகள் நிறைந்த அவருடைய கன்னமேடுகளில் லேசான உஷ்ணம் ஏறி அடங்கியது. ஆனால் சபரீசன் அருகில் நின்றிருந்த தனது மனைவியை நோக்கி நாற்காலியிலிருந்து எழுந்து நகர முற்படவில்லை.

தரையில் விரித்து வைத்த சிறிய கைக்குட்டை போல முப்பது டிகிரி கோணத்தில் கிடந்த அந்த அறை முழுவதும் கோமதி நகர்ந்து கண்ணுக்கு மை எழுதும் பென்சில், டிஷ்யூ தாள்கள்,  தலைமயிரைக் கட்டும் ரப்பர் ஸ்கரஞ்சி என்று சின்னச்சின்னப் பொருள்களைப் பொறுக்கித் தோள் பைக்குள் போட்டாள். பின்பு படுக்கையறையின் இந்த ஓரமாய் சபரீசன் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே நின்று கொண்டாள். அணிந்திருந்த ஆடையின் இடுப்புப் பகுதியை இரண்டு பக்கமாகவும்  கைவிரல்களால் இழுத்துவிட்டபடியே அறையின் எதிர்பக்க மூலையில் சுவரோடு பதிக்கப்பட்டிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை ஆவலோடு பார்த்தாள். இடுப்பில் ஆடை சரியாக அமராமல் சதை பிதுங்கி நிற்பதைக் கண்டு உதடு சுழித்தாள். கொஞ்சம் பின்னால் நகர்ந்து பார்த்தால் தனது உருவம் மெச்சப்படுமோ என்ற எண்ணத்தால் சற்றே பின்னால் நகர்ந்து போனாள். சபரீசன் கட்டிலை விட்டு இறங்கியபோது தரையில் விழுந்த தலையணை குதிகாலில் தட்டியது.

கோமதிக்கு வேலை இல்லாத நாள்களில் காலை வெகுநேரம் வரை போர்வைக்குள் புதைந்துபோகும் பெரும் தூக்கங்களும் தன்னைச் சுற்றிச் சிறுசிறு தலையணைகளும் மார்போடு கட்டிக்கொள்ள நீளமான திண்டும் பிடிக்கும். மெத்தை முழுவதும் பல்வேறு நிறங்களில் சின்னச்சின்னத் தலையணைகளைக் கோமதி சேகரித்து வைத்திருந்தாள்.

குதிகாலில் தலையணை தட்டுப்பட்டதும் அதைச் சிறிய வன்முறையோடு தூர எத்திவிட்டுக் கோமதி சொன்னாள்.

“இதையெல்லாம் அப்புறமா ஒழுங்கா எடுத்து வச்சிருங்க சொல்லிட்டேன்.”

கோமதி அப்படிப் பேசியபோது தட்டையான முனைகளை உடைய கத்திரிக்கோலால் வெகு ரசனையோடு பறிக்கப்பட்டிருந்த பிறை போன்ற அவளது மெல்லிய புருவங்கள் மேலும் வளைந்து மேலேறின. எதிரிலிருந்த நிலைக்கண்ணாடிக்கும் சபரீசனின் நரை பூத்திருந்த முகத்துக்கும் மாறி மாறிப் பார்த்ததில் அவள் கண்கள் பளபளத்தன. அவள் மூக்கின் விளிம்புகள் விடைத்து அடங்கின. கோமதிக்கு லேசாய் மூச்சு வாங்கியதாகச் சபரீசனுக்குத் தோன்றியது. வீடடங்குக் காலமான இந்தச் சில மாதங்களில் கோமதி நிறைய எடை போட்டிருந்தாள். மதர்த்த அவள் தேகம் படுக்கையறை, இந்த அடுக்குமாடி வீடு, இந்த வீடமைப்புப் பேட்டை, இந்தப் பெருநகரம், இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் பரவி அவற்றை விழுங்கிவிடாதவாறு அவளது ஆடைகளின் கண்ணுக்குப் புலப்படாத கண்ணிகள் மிகுந்த சிரமத்தின் பேரில் இழுத்து வைத்துக் கொண்டிருந்தன.

சபரீசனின் முகத்தில் மீண்டும் அனல் பரவிக் குளிர்ந்தது.

கோமதி சின்னப் புட்டிக்குள் இருந்த வாசனைத் திரவத்தை விரல்களில் தட்டி அதை இரண்டு விரல்களால் அக்குளில்களில் தடவிக் கொண்டாள். பின்பு மீண்டும் திரவத்தை விரல்களில் கொட்டி மார்புகளின் இடையில் ஊதா நிழல்களாகப் பொங்கித் திரண்டு நிற்கும் பிளவுக்குள் பூசினாள். மேசையின் ஓரமாக கைப்பிடிகள் விறைத்தபடி வைக்கப்பட்டிருந்த தோள்பையை எடுக்கப்போனவள் சபரீசனை நிதானமாக உற்றுப் பார்த்தாள்.

“வேலைக்கு எழுதிப் போட்டிங்களா, இல்லையா?”

உயிர்ப்புப் பெற்றிருந்த கணினியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சபரீசனின் முகத்தில் அதன் வெளிச்சம் தெறித்திருந்தது. இம்முறையும் அவர் முகத்தில் ஒருவிதமான வெப்பம் ஏறி அடங்கத்தான் செய்தது. ஆனால் இதற்கு அர்த்தம் வேறு.

சபரீசன் எந்தப் பதிலும் சொல்லாதது கண்டு கோமதி மீண்டும் மிருதுவான தொனியில் பேசினாள். ஆனால் வார்த்தைகள் மிகுந்த ஆழமும் வீரியமும் வாய்ந்த கோபத்திற்கு அணைபோடும் கரையின் திடத்தோடும் சீர்மையோடும் அமைந்திருந்தன.

“கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லாம இப்படி அலட்சியமா உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? வேலைக்கு முயற்சி பண்ணுறிங்களா இல்லையா? இல்ல நாள் பூராப் பாட்டுப் பாடிகிட்டும் ஃபேஸ்புக்குல அரட்டையடிச்சுக்கிட்டே இருந்துரலாம்னு பார்க்குறிங்களா? வீட்டுச் செலவுக்கும் குழந்தை படிப்புக்கும் நானேதான் கெடந்து சாகணுமா?”

மனிதர்களின் உரையாடல்கள் அனைத்துமே மிகுந்த வன்முறைகள் நிறைந்தவை. அன்பாகப் பேசிக் கொள்கிறவர்கள்கூட பிரியத்தால் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கொண்டு ஜெயித்து முன்னேறத்தான் பார்க்கிறார்கள். பேச்சு என்று வந்துவிட்டாலே மனிதர்களுக்கு இயல்பிலேயே ஒருவித மூர்க்கம் சேர்ந்துவிடுகிறது. பேச்சுக்கு மௌனம் உத்தமம். கொடுக்கலும் வாங்கலும் இல்லாத இடத்தில் மாத்திரம்தான் மனிதனால் வன்முறையைக் கழற்றி வைத்துக்கொள்ள முடிகிறது.

சபரீசனுக்குச் சினிமாப் பாடல்களைப் பாடப் பிடிக்கும். வேலை போனதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏதேனும் இரண்டு மூன்று பாடல்களைப் பின்னணி இசையோடு பாடி இணையத்தில் பதிவேற்றி வந்தார். சமூக வலைதள நண்பர்களிடமிருந்து அப்பதிவுகளுக்கு மிகுந்த வரவேற்பும் விருப்பக் குறிகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. வீடடங்குக் காலக் கிழத்தோற்றத்தை மீறியும் பாடும்போது அவர் முகத்தில் வேலையில் இருந்த போது இல்லாத பொலிவும் சாந்தமும் ஞான தீட்சண்யமும் கூடியிருப்பதாகச் சபரீசனுக்குத் தோன்றியது. கோமதியும் குட்டியும் அலுவலகத்துக்கும் பாலர் பள்ளிக்கும் போன பிறகு  வரவேற்பறையில் வெளிச்சம் நிறைந்த இடத்தில் அமர்ந்து காதில் ஒலிப்பெருக்கியை மாட்டிக்கொண்டு முகத்துக்கு முன்னால் அரையடி தூரத்தில் சபரீசன் பாடல்களைப் பதிவு செய்வார்.

அப்போது அவர் தலைக்குப் பின்னாலிருந்த வெள்ளை வெளேர் என்ற சுவரிலிருந்து வெள்ளைக் சேலையுடுத்தி, வெள்ளைப் பனி பூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்தபடியே சரஸ்வதி தேவி அருள் பாலிப்பதாகவே சபரீசன் உணர்ந்திருக்கிறார்.

அம்பிகையின் இந்த ஆசீர்வாதங்கள் இல்லாமல் என்றுமில்லாத அளவுக்கு முகநூலில் இத்தனை விருப்பக்குறிகள் கிடைப்பது அரிது என்று சபரீசனுக்குத் தெரிந்திருந்தது. பலபேர் அவர் பாடல் பதிவுகளைப் பகிரவும் செய்தார்கள். அவர் பதிவுகள் பகிரப்பட்டன என்று சமிக்ஞை வரும் போதெல்லாம் சபரீசனின் தோள்கள் பூரித்தன. பன்னிரண்டு ஆண்டுகளில் ஒருமுறை பூமியிலும் மனிதர்களின் ஜாதகத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்படுமாம்.

நாற்பத்தெட்டாவது வயதில் வாழ்வில் புது வசந்தம் என்று சபரீசன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இணைய நண்பர்கள் அவருக்குப் ‘பாடும் இணைய நிலா’ என்று பட்டம் தந்து பெருமைப்பட்டார்கள்.

தெய்வானுக்கிரகம் நிறைந்த அமிர்த மயமான அந்தப் பாடல்கள் பிறந்த அதே இடத்திலிருந்து இப்போது மிக லேசான எரிச்சலோடும் அதைவிட பல மடங்கு தயக்கத்தோடும் சபரீசனுக்குள்ளிருந்து சின்ன ஆரோகணங்களாக வார்த்தைகள் பிறந்தன.

“வேலைக்குப் போகலனு யார் சொன்னா? நானும் பல விதமான வேலைகளுக்கு அப்ளிகேஷன் போட்டுகிட்டுத்தான் இருக்கேன். அதே சமயம் இணையத்துலயும் ஏதாவது வியாபாரம் தொடங்கலாமானு பார்க்குறேன்.”

“இணையத்துல வியாபாரம்னா?”

கண்களைக் குறுக்கியபடிக் கோமதி கேட்டாள்.

“எதாவது உபயோகமான பொருள்கள வாங்கி இணையத்துலேயே விக்குறது. சீனாவுலேர்ந்து மலிவான விலையில உடுப்பு, சப்பாத்து, முகத்துக்குப் போடுற ஒப்பனை பொருள்னு வாங்கி இங்க சப்ளை செஞ்சா நல்ல லாபம் வருது தெரியுமா? இப்ப லாக்டவுன்ல எல்லாரும் இணையத்துலதான திங்கறது, உடுத்துறது எல்லாத்தையும் வாங்கிறாங்க. ஒரு புடி புடிச்சா லாபம் பார்க்கலாமாம். இல்லைனா இணையத்துலேயே யோகா, டியூஷன், வியாபார நுணுக்கங்கள்னு எதையாவது சொல்லித் தந்து காசு பார்க்கலாம். அதுக்கும் நல்ல மவுசு.*

சொல்லும்போதே தனது வார்த்தைகள் வேகமாகி நெஞ்சு படபடவென்று துடிப்பதைச் சபரீசன் உணர்ந்தார். வலுக்கட்டாயமாகத் தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. மடிக்கணினியைச் சுற்றி பத்தொன்பது நாட்களுக்கு முன்னால் இணைய தள அமைப்பு பற்றியும் இணைய வர்த்தகம் பற்றியும் நூலகத்திலிருந்து அவர் இரவல் வாங்கி வந்திருந்த கனமான புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளோடு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதுவரை அவற்றைச் சபரீசன் பிரித்துக் கூடப் பார்க்கவில்லை. நாளை பார்க்கலாம் என்று நாள்களைக் கடத்தி வந்தார். இப்போது அவற்றைப் பார்க்கின்ற நேரத்தில் கசப்பான திரவம் ஒன்று அடிவயிற்றிலிருந்து மேலேறி அவர் நாக்கின் அடி வேரில் வழவழப்பான இதழ்களையுடைய கறுப்புத் தாமரைப் பூவாக மலர்ந்து நின்றது.

சபரீசன் சொன்னதைக் கேட்டுக் கோமதி உள்ளுக்குள் ஏளனமாகச் சிரித்திருக்க வேண்டும். அவளுடைய கண்களிலும், பளபளக்கும் செழுமையான கன்ன மேடுகளிலும், சிவப்பாய்ப் பூரித்து நிற்கும் உதடுகளிலும், உள்ளாடைப் பட்டை தெரியச் சரிந்திருக்கும் பழுப்பு நிறத் தோள் சரிவிலும் கனமான மார்பகங்களின் குலுங்கலிலும் சிரிப்பே தொற்றியிருப்பதாய்ச் சபரீசனுக்குத் தோன்றியது.

கண்ணிமைகளில் ஒட்டியிருந்த நீளமான போலி மயிரில் மாட்டியிருந்த தூசை விரல்களால் பிடுங்கி காற்றில் விசிறிவிட்டுக் கொண்டே கோமதி பேசினாள்.

“இந்த இரண்டையும் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் பிரசித்தி வாய்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளனாகச் சபரீசன் வேலை பார்த்து வந்த காலங்களில் கோமதியை அடிக்கடி ‘மக்கு முண்டம்’ என்றே அழைப்பார். கோமதி கப்பல் நிறுவனத்தில் சாதாரண எழுத்தர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். தொற்று நோய்க்கு முன்னால் இந்த நகரம் கண்காட்சிகளின் அனைத்துலக மையமாக இருந்தது. கண்காட்சிகளில் பங்கு கொள்ளூம் பிரதமர்கள், அமைச்சர்கள், தொழில் பிரமுகர்கள், நடிகர்கள், பாடகர்கள் என்று சபரீசனுக்கு அடிக்கடி தொடர்பு ஏற்பட்டு வந்தது. தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கும் மனிதர்களின் அருகில் நின்று பேசும் வாய்ப்பு என்பது யாருக்கும் அதிக போதையை வழங்கக் கூடிய காரியம்.

தொற்று நோயால் கண்காட்சிகள் வற்றிப் போய் முடங்கும் நிலையிலிருந்த நிறுவனம் சபரீசனுக்கு இளஞ்சிவப்பு நோட்டீஸைத் தரும் நாள்வரை அவருக்கு என்ன தெரியும் என்று கோமதி கேட்டது இல்லை.

கப்பல் நிறுவன வேலை அத்தியாவசியம் என்று கருதப்பட்டதால்  கோமதிக்கு மட்டும் வீடடங்கு காலம் முழுவதும் வேலைக்குப் போய் வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

வீட்டுக்கு வெளியே இருந்த சாலையில் பேருந்து ஒன்று இருமிக்கொண்டு முன்னேறியது. படுக்கையறை கதவின்மீது மத்தளத்தில் விழும் பிரட்டலைப் போன்ற சத்தம். பதிலுக்குக் காத்திருக்காமலேயே கதவைத் திறந்து ஆறு வயது தினேஷ் பள்ளிச் சீருடையில் உள்ளே வந்து கோமதியின் வயிற்றை முடிந்தமட்டும் கைகளால் பின்னிக் கொண்டான்.

ஆடை அலுங்காமல் இருக்கக் கோமதி தினேஷைத் தன்னிடமிருந்து தள்ளி வைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன இது கண்ட நேரத்துல வந்து கட்டிகிட்டு,” என்று அடிக்குரலில் கோமதி உறுமினாள்.

தினேஷுக்குப் பின்னால் வந்திருந்த குருப்ரீத் திறந்திருந்த படுக்கையறைக் கதவின் நிழலில் நின்றிருந்தாள். வீட்டு வேலைக்காகவும், சபரீசன் கோமதி இருவரும் வேலைக்குப் போன பிறகு தினேஷைப் பார்த்துக் கொள்ளவும் மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சீக்கியப் பணிப்பெண். சாயம் போன டீ சட்டையிலும் மெதுவோட்டம் பயிலப் பயன்படுத்தும் இடுப்பிலிருந்து பாதங்கள்வரை இரட்டைக் கோடுகள் போட்டிருக்கும் பழைய நீலநிற முழுக்கால் சட்டையிலும்கூட உடம்பு முழுவதும் பொங்கி நிற்கும் செந்நிறமாய் மதர்த்து திரண்ட உயரமும் அகலமும் வாய்ந்த உடம்போடு அழகிய போர்க்குதிரையின் வாளிப்போடு குருப்ரீத் இருந்தாள்.

முதுகுவரை வளர்ந்திருக்கும் கருநீல நிறமான அவள் கூந்தலிலும் அவள் காதுகளின் பின்னாலும் சதா வீசும் பச்சை டின்னிலடைத்த பழுத்த வனஸ்பதி நெய் வாசம் சபரீசனுக்கு நினைவுக்கு வந்தது.

உள்ளாடை அணியாமல் ஒற்றை லுங்கியோடு மார்பில் மயிர் புரள அந்த இளம்பெண்ணின் பார்வை படும்படி அமர்ந்திருப்பது சபரீசனுக்கு தொப்புளுக்குக் கீழே இனம்புரியாத குறுகுறுப்பை ஏற்படுத்தியது. தோள்களை நன்றாகப் பின்னுக்கிழுத்து மார்பை முன்னால் வீசிக்கொண்டு சபரீசன் மடிக்கணினியின் கட்டைகளைத் தட்டிக் கொண்டிருந்தார். அவரது ஓரக்கண் பார்வை மொத்தமும் குருப்ரீத், தினேஷ், கோமதி என்று மாறி மாறி வந்தது. ஆனால் இருபத்திரண்டு வயது குருப்ரீத் சபரீசனைச் சட்டை செய்யவில்லை.

அவள் கண்கள் கோமதியின் முகத்தில் மட்டுமே பதிந்திருந்தன.

தன்னைத் தூரமாய் வைத்தபடி பிடித்திருந்த கோமதியை எம்பிப் பிடிக்கப் போவதுபோல் கைகளை உயரத் தூக்கித் தாவிக் கொண்டே ‘கூல், கூல்’ என்றான் தினேஷ்.

கோமதியிடமிருந்து ஆழமான பெருமூச்சு.

“சரி, நானே வேலைக்குப் போற வழியில இவனப் பள்ளிக்கூடத்துல விட்டுடுறேன். அப்புறமா அவனைக் கூட்டிகிட்டு வந்திருங்க, என்ன? மூனு டஜன் முகக்கவசமும் வாங்கிட்டு வந்திருங்க. எனக்கும் குழந்தைக்கும் துணியால செஞ்ச முகக்கவசம் ஒத்துக்கல.”

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது வாசல் மணிச்சத்தம் கேட்டது. தினேஷை அறையிலிருந்து துரத்திக் கொண்டிருந்த கோமதி அப்படியே நின்றாள். இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு உட்கூரைப் பார்த்துத் தலையை நன்றாகப் பின்னுக்குச் சாய்த்தபடி மீண்டும் பெருமூச்சு விட்டாள்.

“மறந்தே போச்சு. ஏர் கான் சர்வீஸுக்காக சர்வீஸ்காரனை வரச் சொல்லியிருந்தேன். வந்துட்டான் போலிருக்கு. ராத்திரி ஒரே புழுக்கம். தூங்கவே முடியல.”

தலையை நன்றாகப் பின்னுக்குச் சாய்த்தபடி நெற்றி, கண்ணிமை, தாடை, கழுத்து என்று வியர்வையும் வெளிச்சமும் பளபளக்க நிற்கும் கோமதி இப்போது வாளிப்பான சவாரிக் குதிரையல்ல. பல குட்டிகளை ஈன்று அவற்றையும் அதன் கூட்டத்தையும் சிங்கங்களிமிருந்தும் செந்நாய்களிடமிருந்தும் பாதுகாக்கும் மூர்க்கமும் பெருவலிவுமுடைய சினமுள்ள காண்டாமிருகம். நல்ல தீனியின் மீதும் அடித்துப் போட்டாற்போன்ற தூக்கத்தின் மீதும் பெரும் விருப்பமுள்ளவள்.  வேலைக்குப் போய் வரும் குடும்ப மனுஷி.

“சர்வீஸ் முடிஞ்சதும் கொடுக்க வேண்டிய பணத்த சாமிப்படத்துக்கு முன்னால வச்சிட்டுப் போறேன். மறக்காம ரசீது வாங்கிடுங்க.”

பைகள், சரசரக்கும் ஆடைகள், சின்னச்சின்னக் காலைநேரக் கலவரங்கள் என்று கோமதியும், தினேஷும், குருப்ரீத்தும் படுக்கையறைக் கதவைச் சாத்திவிட்டுக் கடந்து போனார்கள்.

வரவேற்பறையில் குளிரூட்டும் சாதனங்களைப் பராமரிக்க வந்திருந்த பணியாளனிடம் கோமதி ஏதேதோ பேசுவது கேட்டது.

மனித சம்பாஷணைகள் பல்வேறு வாத்தியங்கள் சேர்ந்து இசைக்கும் இசைக்கச்சேரிக்கு ஒப்பானவை. அவற்றிற்கு என்று தாள கதியும், ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அடிநாதமும் உண்டு. வரவேற்பறையிலிருந்து வந்து கொண்டிருந்த பேச்சுக் குரல்கள் தீடீரென்று கால அளவைகளுக்கு மீறியும் அடங்கிப் போகவே மடியில் நிற்காமல் வழிந்து போன லுங்கியை கொத்தாய்க் கையில் பிடித்தபடியே சபரீசன் படுக்கையறைக் கதவை சத்தம் போடாமல் ஒரு கீற்றளவே திறந்து எட்டிப் பார்த்தார்.

தினேஷும் குருப்ரீத்தும் வாசல் கதவுக்கு வெளியே நின்றிருந்தார்கள். தினேஷ் கைகளை ஆட்டிக் குருப்ரீத்திடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தான்.  

வரவேற்பறையின் நடுவில் கோமதி குளிர்சாதனங்ளைப் பராமரிக்க வந்தவனிடம் தாழ்ந்த குரலில் எதையோ பேசிக் கொண்டிருந்தாள். வந்திருந்தவன் இளைஞன். நல்ல கட்டான உடலும் உயரமும்  உடையவன். தோற்றத்தில் மலாய்க்காரனைப் போல இருந்தான். ஆனால் செழித்து வளர்ந்திருந்த சுருட்டை தலைமயிரிலும் மூக்கின் கூர்மையிலும் இந்தியத்தனம் தெரிந்தது. கையில் தொழிலும் திறமையும் இருந்த நிறைவும் கர்வமும் அவன் முகத்தில் வெளிச்சமாகப் பரவியிருந்தன. அதன் பலனாகக் கோமதி சொன்னதெற்கெல்லாம் அடிக்கடிச் சிரித்தான். புன்னகைத்தான். இறுக்கமான உடையில் இருந்த கோமதியின் உடலை அவன் கண்கள் விழுங்கிக் கொண்டிருந்தன.

கோமதியும் தன்னைவிட உயரமாக இருந்த இளைஞனை ஏறிட்டுப் பார்த்து உடம்பின் இருபுறமும் கைகளை உயர்த்தி விரித்து வைத்துச் சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்தாள். கோமதிக்கு அன்றிலிருந்து இன்றுவரை அழகான வெள்ளை நிறப் பல்வரிசை.

சபரீசன் ஓசையெழாமல் படுக்கையறைக் கதவைச் சாத்திவிட்டு மீண்டும் கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து கொண்டார். அவர் மடியில் லுங்கி குளிர்ந்த நீராய் வழிந்து கொண்டிருந்தது.

கணினிக்குப் பக்கத்திலிருந்த புத்தகங்களைப் புரட்டிவிட்டுச் சபரீசன் கணினியில் சில கட்டளைகளைப் புகுத்தினார். அவர் எதிர்பார்த்த எதிர்வினைகள் உருவாகாமல் கணினித் திரையில் வாசகங்கள் அவர் கைக்குள் சிக்காமல் நழுவிப் போயின.

வெளியே கோமதி கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டின் ஒரு மூலையில் மடித்து வைத்த ஏணி விரிக்கப்பட்டு நேராக நிறுத்தி வைக்கப்படும் சப்தம் கேட்டது.

சபரீசன் ஏதேனும் பாடலைப் பாடிப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அது சர்வீஸ் செய்ய வந்தவன் வேலை முடித்துக் கிளம்பிய பின்னால்தான் சாத்தியமாகும். அதுவரை சபரீசன் காத்திருக்க வேண்டும்.

சபரீசன் சித்திரங்கள் மாறி மாறித் தோன்றும் கணினித் திரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். ஏதோ ஒரு மாய விசையின் உந்துதலால் திரையில் மாறி மாறி விழுந்து கொண்டிருந்த கோடுகளைக் கண் கொட்டாமல் சபரீசன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறியதும் பெரியதுமாக முன்னூற்று இருபது அடுக்குமாடிகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டிருந்த இந்தப் பன்னிரண்டு மாடிக்கட்டிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஏதேனும் கதை நிகழ்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

“இது இப்படித்தான்,” என்று தனக்குத்தானே சபரீசன் முணுமுணுத்துக் கொண்டார். “இப்படி நடப்பது இயற்கைதானே. யாரும் இதைத் தடுத்துவிட முடியாது.”

இப்போது அவர் உடல் அரையிருட்டில் மூழ்கியிருந்த படுக்கையறையைப் போலவே குளிர்ந்து போயிருந்தது.

***

சித்துராஜ் பொன்ராஜ்  சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular