Tuesday, July 16, 2024
Homesliderதேவதா… உன் கோப்பை வழிகிறது..! - ஒரு பார்வை

தேவதா… உன் கோப்பை வழிகிறது..! – ஒரு பார்வை

சவீதா

கோப்பை வழிந்த பின்னும் நிறைத்தலென்பது பூரணத்துவத்தின் உச்சமும் போதாமையின் எழுச்சியும். இந்த முழுத்தொகுப்புமே அந்த இரண்டையும் நமக்குள் கடத்திக்கொண்டு போகும் பாவனையாய் நடாத்திச் செல்வது அதீதம். சிலசமயம் முடிந்து விட்ட ஆசுவாசத்தையும் தவிப்பையும் தருவதாக முற்றிலுமான வேறோர் திசையில் பயணி்க்கின்றன.

வேதநாயக்கின் கவிதைகள் எப்பொழுதுமே மிகமிகக் கூர்மையாய் அடுக்கப்பட்டவை. ஒரு புதிர் போல அடுக்கு பிரித்து அகம் மகிழ்தலில் வெகு சுகமான வாசிப்பனுபவத்தை உருவாக்குவதில் வித்தகர். இந்த நூலின் முழு கவிதைகளுமே வெவ்வேறு வகையான திசையில் நம்மை ஏற்றிக்கொண்டு பயணிப்பவை.

நடைமுறைக் காட்சிகளை வரிகளாக்குவதில் இருக்கும் தாத்பரியம் வியக்க வைக்கிறது. அன்றாடம் கவனித்தும் குறிப்பிடப்படாமல் கடந்து போகும் காட்சிகளை சற்றே நிறுத்தி ஸ்லோமோஷனில் கொண்டு போக எண்ணி ஆழமாய் அழுத்தி பின் மீளுருவாக்கம் செய்து விடுகின்றன.

அகக்கடலும் ஆன்மீகமும் தொக்கும் இடத்தில் சில கூர்மையான காமக்கத்திகளையும் அசாதாரணமாய் சொருகிவிட்டுப் போகிற சாமர்த்தியம் புருவ உயர்த்தலுக்கு வழிவகுக்கிறது. ஆன்மீகமும், ஆழ்ந்த தேடலும், சுயமறிதலும் மிகத்தேர்ந்த சொற்களில் மேன்மையான இரசனைகளைத் தாண்டி அடுக்கடுக்கான மடிப்புகளில் அமைத்திருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் காற்றுக்குமிழிகளின் ‘ப்ளக்’ சத்தத்துடன் ஆழ உள்வாங்கப்படும் போது மனம் விகசிக்கிறது.

குறிப்பிடவே முடியாத பல மன அவசங்களை படிக்க நேர்கையில் சந்திக்க நேர்கிறது. மேன்ஷனில் தவித்திருக்கும் ஆணின் அந்தரங்க மனதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே நம்மை நோக்கி அடைப்புக்குறிக்குள்ளேயிருந்து வீசப்படும் கூரிய அம்பின் முனைகள் நம் சமநிலையை அசைத்து சில்லு சில்லாய்த் தெறித்துப் போடுவதாய் அமைந்து விடுகிறது.

நாக்கில் ஒட்டிக்கொண்ட ஒரு துளியில் பிரபஞ்ச இனிப்பை ஒருசேர குவித்திருக்கும் தேனைப்போல சில சொட்டுகள் :

நெகிழாடைகள் மிகத் தயாரான முன் தயாரிப்போடு துருத்தாமல் தளர்வடைந்திருக்கிறது“…

-இப்படித் தொடங்குகிறது ‘சர்வாலங்கார பூஷிதே..’

உரூபிணி போதையேற்றும்
விதமாய் நின்றிருந்தாள்

நெகிழாடைகள் மிக தயாரான முன் தயாரிப்போடு
துருத்தாமல்
தளர்வடைந்திருக்கிறது

திருத்திய புருவத்தை
இடது சுண்டு விரலின் நீள்நகத்தால் இலேசாக சுரண்டி
கோடு முடிவடையுமிடத்தில்
லாகவமாக விலக்கி கொள்கிறாள்

உதடின் மேற்சாயமேற்றுவதற்கு முன்பு
பாதுகாப்பு களிம்பை பூசி
அனுமன் போல் உள்வாயில் காற்றுக்குமிழ் உருவாக்கி
அதரங்கள் ஒன்றோடொன்று நெருக்கி அணைத்தபடி
சிலவினாடிகள் இருத்தி
இடவலமாக அசைத்து பார்க்கிறாள்

நகப்பூச்சுக்கு தோதாக வளையணியை
இரு கரங்களிலும் மணிக்கட்டில் சேராமல்
சற்று
மேலேற்றி கொள்கிறாள்

முன் தனங்களையும்
பின்
பிருஷ்டங்களையும்
கண்ணாடியில் சரிபார்த்து தொட்டு நீவுகிறாள்

விரித்து நுனியில் சிறு முடிச்சிட்டு
தழைய விட்டிருக்கிறாள்
கார்குழலி

உக்கிரமான காதல் வெறியில்தான்
தன் நடையை பயில்கிறாள்
உள்ளறையில்

என் செய இறைவா..

நேற்றைய பொழுதின் இடை சம்பாஷணையில்
ஒரு சொல்லால் தைத்து முடித்ததும்
விலகிய எனது அகங்காரம்

அவளது வாயிலில் செருகப்பெற்றிருந்த
சிறுமலர் கொத்தை
நகர்த்தி

உள் நுழைய பலந்தருமோ..?

பெண்ணின் பெருமிதமான அலங்கரித்தலையும், ஊடே பயிலும் சிருங்கார பாவனைகளையும் நினைத்துப் பார்த்து கன்னத்தைக் குமிழ வைக்கக் கூடியது. உதட்டுச்சாயத்தைப் பூசுவதற்கு முன்பான வர்ணனை முழுமையான அவதானிப்பு. அவளது செயலின் அழகியலும் இவனின் பரிதவிப்பும் சந்திக்கும் புள்ளி வேறோர் பரிணாமம்.

அவளது வாயிலில் செருகப் பெற்றிருந்த சிறு மலர்கொத்தை நகர்த்தி உள் நுழைய பலந்தருமோ” என்கையில் இக்கவிதையின் முடிவிலான அதே மலைப்பு.

***

சமதளத்தில் புழங்குவதில்
என்ன நிகழ்ந்து விடப்போகிறது

சிறு சிராய்ப்பு ஒரு கீறல்
அல்லது விபத்து

அட அவ்வளவு ஏன்?
சுளுக்காவது..

சில சொற்களின் மேல் அழுத்தம்
எண்ணெய் குளியலுக்கு முன் நடக்கும்
தேகப்பிடிப்பு

பெருங் காரிருளில்

இரு உள்ளங்கைகளிடை
நசுக்காமல் காபந்து பண்ணும்
மின்மினியின் மினுக்காய்

பிழிந்து வைத்த ஈரத்துணியின் அடுக்கு
இடது கையில் மேலும் மேலும்
சேர்ந்த பின்
கம்பிக்கொடியில் காய வைக்க
எம்பி ஒன்றை போடுகையில்

தெரியாமல்
கனத்தால் நழுவும் துணியை
கனக்கச்சிதமாய் எப்படி வழுவாமல்
பிடித்தீர்களோ…

ஆங்…
அதே போல்

கனன்றுகொண்டிருக்கும் உள் நிர்வாணத்தை
கங்கின் சாம்பலாய்
போர்த்திக் கொண்டிருக்கும்
ஆடையை நெகிழ்த்துவது போலதாய்

இருப்பின் வெகு சிறப்பு

கொஞ்சம் பெண்ணியம் டிட்டோ ஆணியம்
இஸங்கள்
ப்ளா..ப்ளா-க்களை
ஒதுக்கி விட்டு

(நீங்கள் ‘ல்’ சேர்த்து
ஆணியத்தின் முன் வார்த்தையை
படித்தீர்கள் எனத் தோன்றுகிறது)

வழக்கொழிந்த காதைகளை காததூரம்
நகர்த்தி வைத்தபின்
சொல்லின் மூலக்கூறுகளும் முயக்கம் கொள்ள
கொஞ்சம் முன்விளையாட்டில்
ஈடுபடுத்திக் கொண்டால்

செய்கூலி சேதாரமின்றி
வார்த்தைக்கலவி சுகமென

உள்பட்சி கதறுவதை

கொஞ்சமேனும் செவிமெடுக்கலாம்

“சில சொற்களின் மேல் அழுத்தம் எண்ணெய் குளியலுக்கு முன் நடக்கும் தேகப்பிடிப்பு”
“கொஞ்சம் பெண்ணியம் டிட்டோ ஆணியம்
இஸங்கள்…”

நீண்டு குறுகிய வட்டப்பாதை’ எனப் பெயரிடப்பட்ட இக்கவிதையின் உள்ளே அடைப்புக்குறியில் நம் மனதை அவிழ்த்து எறியும் எள்ளலும் குதறிப்போடச் செய்யும் குரூரமும் நிரம்பி வழிகின்றன.

சற்றே யோசித்தால் சமநிலையிலேயே நிற்பதென்பது எத்துணை பதட்டத்தை தரக்கூடியது? மனிதனின் சமநிலை எங்கெங்கு சிதறக்கூடும் என ஆழ்மனம் தவித்துக் காத்திருக்கிறது. அதனை துணைக்கழைத்துக் கொள்ளும் இக்கவிதை என்னை மிகச் சலனமூட்டுகிறது. கம்பியில் காயப்போடும் துணியை சொல்லிவிட்டு பேசும் தொனியில் வம்புக்கிழுப்பது பிறகு நிர்வாணத்தை தரிசிப்பது என மேலுங்கீழுமான அலைவுறுதலாய்.

***

பெயரிலென்ன?
ஏதோ ஒரு மலர்

ஆம்
அப்படித்தான்

ஒவ்வொன்றினுக்கும்
குணமறிந்து இனமறிந்து
கொடி
தரு
புதர் வகையினங்களை வகை பிரித்து

உம்மிடம்
உலக நீதியை நிலை நாட்ட செங்கோல்
ஈந்ததாய்
இறுமாப்பு கொண்டு விதவிதமாய்
சூட்டுகிறாய்

அஃது ஒரு பூ தானே..?

ஆம் இப்படியும்தான் எனக்கொரு பெயருண்டு
அடையாளமும் கூட

இருந்ததற்கான சாட்சியம்
இருப்பில் மட்டுமே

பீநாறி மலராகினும்
நறுமண காந்தி விகசிப்பிலும்
மலர் மலரே தான்

ஊழ்கழிப்பல் மலரில்(களில்)
தனித்த ஒற்றை மலரும் கூட

கழிந்தபின் சுற்றிச் சுருண்டு
அடிப்புறம் மிதந்திறங்கி
பழுப்பின் காடுகளில் கலக்கும்
பாழுமாய்.

“பெயரிலென்ன? ஏதோ ஒரு மலர்”

கால நர்த்தனம்’ கவிதையில் வரும் காலம் தின்றுவிட்ட பல மலர்களில் ஒன்றாய் சுற்றிச்சுருண்டு அடிப்புறம் மிதந்திறங்கி பழுப்பின் கசடுகளில் கலக்கும் பாழாய் அவரையே உருவகப்படுத்தி இருக்கலாம் என்பதொரு யூகம்.

***

இறுதிச்சடங்கில்
விடமருந்தி நீலம் பாரித்து கன்னிமை காத்த
அவளது உடலத்தருகே

சூக்கும தேகத்தோடு
ஐந்தாவது கள்ளக்காதலியின்
கணவனால் கொல்லப்பட்ட அவனது
ஆவி

சுரக்கா உமிழ்நீரை நாவின் அடிப்புறமிருந்து
மேல்கிளப்பி கொண்டு வருவதாக

கற்பிதம் செய்தபடி

காம விவரணை செறிந்த நிசிப்பாடலை காற்றின்
இலயத்திற்கேற்றவாறு
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது

தமது படுக்கை விரிப்பின்மேல்
உடல் மலர்த்தி உறங்கிக் கொண்டிருக்கும்
இள மாதின் மீது போர்வை மூடுகிறது
இரண்டாம் வீட்டின் மேல்மாடி அறையில்
ஓர் அரூபம்

இரண்டாம் தெருவில்
வரவேற்பறைக்கு அடுத்த அறையில்
பொருள்வயின் பிரிந்த தலைவனது இல்லத்தில்
ஒரு பக்கம் திறக்கப்பட்ட
தனத்தின்
கூரிய கரிய காம்பிலிருந்து உறிஞ்சிய

பால் சொட்டுத் தாரையை

காய்ந்து உலர்வதற்கு முன்னம்
அக்குழந்தையின் உறைந்த உறக்கத்தை
கலைக்க மனமின்றி
துடைத்து அழிக்கிறது மற்றோர் உருவிலி

அகோர நகங்களை கண்களுக்கு மிக நெருக்கமாய்
காட்டியபடி
விழிகள் இருக்க வேண்டிய இடங்களில்
விரற்கடை அளவாழத்திலிருந்து கசியும் குருதியை
ஒழுக்கியபடி மேலழுத்துவதாய்
வீதியோர பிச்சைக்காரனொருவன் அலறிப்
புடைத்தெழுகிறான்

ஓர் அகால மரணத்திற்கு பிறகான
அவ்விரவின் நகர்தலில்
அரவின் அசை மினுமினுப்பு
தொடர் கண்ணிகளாக இன்னும் மீதமிருப்பதை
குரல் பெயர்ப்பாளனொருவன்
சுட்டிக்காட்டுகிறான்

அவை
எவரது கனவில் மீண்டெழும் என
அறிவிக்கக் கூடாதவனாக
அல்லவா அறியப்பட்டிருக்கிறேன்..

-‘வசீகரத்தின் விரல் இரேகைத்தடம்’
“ஓர் அகால மரணத்திற்கு பிறகான”

இந்த கவிதையின் கடைசி வரிகளுக்கு முந்தைய வரிகளெல்லாம் அலறிப்புடைக்கச் செய்யும் ரகம். லேசாய் கைவிட்டு இதயத்தை கண்முன்னே கசக்கி எதுவும் நடவாதது போல் அயர்ன் செய்து மடித்து உள்ளே திரும்ப வைக்கும் இலாவகம். இதேபோல படிப்படியாய் நிகழ்த்தும் பரிணாமங்கள் பல கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளது. படித்துப் படித்துத் தீர்க்க முடியாத கவிதை தொகுப்பு.

‘தூய்மை ஒதுக்கிய ஒழுங்குகள்’ எல்லாம்

துயரிலிருந்து ஒரு சொல்
இலாகவமாக பிரித்தெடுக்கப்படுகிறது

அந்தோ..

அதுவோ இரத்தச் சேற்றிலிருந்து
உருவி எடுக்கப்பட்ட பிரதான நரம்பின் பெயராக
அல்லவா உருக்கொண்டிருக்கிறது..?

நரர்கள் சூழ் பேருந்து நிலையத்தில்
நிறைசூலி ஒருத்தி சிறுநீர் கழிக்க
எல்லோரையும் விலக்கி நகர்கிறாள்
ஆமையாக

மனமோ பேயாக

பூரணத்தின் இறுதி சூத்திரத்திற்கு
விளக்கமெழுதி ஆசுவாசப்படுகிறான்
பண்டிதனொருவன்

வாசலில் நின்றழுது

பள்ளிக்கட்டண இறுதி நாளின்று வென நிற்கிறான்
இளைய பிள்ளை

நாய்கள் அலையும் நள்ளிரவில்
குருதி தோய் கந்தைத்துணி அறியும்
பாடென்பது
விக்டர் ஹியூகோ* விட
தனக்கு அதிகம் தெரியுமென

பந்தம் என்பது
நாரதனின் தாகத்திற்கு நீர் முகந்து ஊற்றிய
இளையவளின் பின் சென்றானே
அவனைக் கேட்பதைவிட அவளுக்குத்தான்
முழுமையாகத் தெரியும்

பிணைத்தவள் அவள்தானே
நாராயணன் என் செய்வான்
சொல்

எங்கு சுற்றி என்னவாகப் போகிறது
தன் கூட்டில்
கதகதப்பிற்கு பஞ்சுப்பொதிகளை
மறுத்து

பதிக்கப்பெற்ற வைரத்துணுக்குகள்
குத்தி கிழிக்கத்தான் உள்ளம்

*Victor Marie Hugo -Les Misrables

தூய்மை விலக்கிய ஒழுங்குகள்

இனி வருங்காலங்களில் பேருந்து நிலையத்தின் கர்ப்பிணியையும் பள்ளிக்கட்டணம் மறந்த சிறுவனையும் பார்க்க நேர்ந்தால் வேதாவின் துணையன்றி கழித்திட சாத்தியமில்லை.

நாய்கள் அலையும் நள்ளிரவில் குருதி தோய் கந்தைத்துணி

எப்பேர்ப்பட்ட குறியீடு?

***

இரவெழுக

ஆகச்சிறந்த முறிந்த கிளையொன்றிலிருந்து
தொங்கும் பனையோலை
சிலாம்பு காய்த்து
பருத்த தண்டை உரசுகையில்
அடிவயிற்றிலிருந்து
பயம் மேலேறி கவ்வுகிறது

அடர் தருவிலிருந்து

சட்டென இருகை விரிக்குமளவு
சிறகை பரத்தியபடி கோட்டான் செவிக்கருகே
காற்றை புயல் போலெழுப்பி
இருதயத்தை ஸ்தம்பிக்க வைக்கிறது

நெளிநெளியாய் நழுவியபடி
உடல் மினுக்கி நகர்கிறது
நச்சரவம்

தோழியொருத்தியின் சிரிப்பை கொண்டே
பற்களை யூகித்து
முகத்தை உருவகஞ் செய்ய ஆகிறது

சிறுநீர் கொப்பளிக்கும் கணங்கள் தோறும்
இடாகினியின் நினைவில்
தாழ்வாரத்திலேயே
பெய்துவிட ஆசை முட்டுகிறது

தூரத்தே கரும்பு தோட்டங்களில்
ஊளையிடும் நரிகளால்
வயிற்றில் ஊறும் பசியை லிங்கத்திற்கு கடத்தி
சிருஷ்டியை
நினைவுக்கு அனுப்பி
துணையை அழைக்க தூண்டுகிறது

மரணத்தில் பெரிய மரணம்
பகலொதுக்கி இரவு கவிந்த பின்
பெரிதும் காத்திருந்து
நிசி தாண்டி தனியே தற்கொலை புரியாமல்
சக்கையாக பிழியப்பட்டு

பல்வேறு தருணங்களில் கொல்லப்பட்ட எனது
தனித்தலையும் பிணத்தின் சிரம் துண்டித்து
யாரிடமும் பகிராமல்
புதைத்து

மண்ணள்ளி மேல் போட்டு
மூடிவிடுதலாங்
காண்

-‘இயந்திர கதிக்கு அப்பால்

தோழியொருத்தியின் சிரிப்பைக் கொண்டே பற்களை யூகித்து முகத்தை உருவகஞ் செய்ய ஆகிறது …

“இரவெழுக..”

இவ்வரிகளின் துணிவில் ஒரு அகோரியின் அந்தரங்கத்தை தரிசித்த தருணம். அய்யோ எனப் பீதியிலோ, சர்ரியலிசமாகவோ ஒடுங்கும் மனதைத் தந்துவிட்டு கல்லறையின் பின்பக்கமாய் உறைந்து நிற்கிறது. நச்சரவத்தின் விடாய் தீரா நகர்தல்கள் மேனியெங்கும் சலசலப்பூட்டுகிறது.

***

மன அவசத்தை துண்டித்து
எறிவதற்காக Fidget spinner-ஐ
நடுவிரலுக்கும் பெருவிரலுக்குமிடை
வைத்து சுற்றியபடியிருக்கும்
மகா கோபம் ஏறியவன் அவன்

கிளிஞ்சல்களை மிக நிதானமாக சேகரித்து
நடுவீட்டில் ஒழுங்குபட கொட்டி
வெறுங்காலால் ஓங்கி மிதித்து
துகளுற செய்பவன்
வேறொருவன்

முழு இரவையும் செலவிட்டு அடிவானம் நீலம் இழந்து
வெயிலில் வெளுக்கும் உதயங்களில்
சட்டென எச்சில் துப்பி
விடுவிடுவென நடக்கின்றவன்
மற்றொருவன்

சந்தை கூடுமிடங்களில்
அழுகிய முட்டை
பழ காய்கனிகளை நடைபாதைகளில் ஓங்கியடித்து
சிதற விடுபவன் இன்னொருவன்

ஆங்காங்கே புள்ளிகளால் உறைந்திருக்கிறது
நடுஇரவில் மேலே
அந்தரம்

நிலமும் நீரும் இணைவதற்கு சங்கோஜமுறும்
நிறமேறிய ஜலசந்திக்கருகே
மச்ச வாடையும் நரமாமிச வாடையுமுடைய

ஒரு கனத்த உடலை

தொட்டுப்பார்க்கவா வேண்டாமா என்றொரு
கேள்வியுடன்

காளியை புறமொதுக்கிய
ஜெயங்கொண்டாரின்
கூளி
விழிகளை உருட்டிக்கொண்டிருக்கிறது

என் கனத்த இருதய சதைப்பொதிக்குள்
தாறுமாறாய் யாரோ ஒருத்தியின்
இரத்தம்

சீற்றமாய்

மோதி
கொண்டிருக்கிறது

-‘துகள்களில் உறையும் பொன்னிறம்’

கிளிஞ்சல்களைத் துகளுறச் செய்பவன் வேறொருவன். இவனை நாள்தோறும் சந்திக்கிறோம். நினைவுபடுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆழ்படிமங்களில் ஒட்டியிருக்கும் ஒவ்வொன்றையும் நேரே நெஞ்சிலே படீர் படீரென எடுத்து எறிவது போன்றதோர் பிரமை. இறுதியில் பக்கத்தை புரட்ட முடியாமற் போவதின் சாபம்.

***

யாதொரு துரோகம் இழைத்ததாக
நினைவில்லை

நினைவிருக்கும் அனைத்தும்

ஏதோ செய்த நிறைவில்
அது அதன் போக்கில் தளும்பியிருக்கிறது

விழிநீர் ஒழுக்குகளை
அதனிஷ்டம் போல் தழைய விடுகிறேன்

விளையாட்டாய் மாட்டுவிட்டு கழற்ற இயலா
மோதிரத்தை
எச்சிலூற்றி முயல்கிறேன்

பின் குளியல் அறையில்
சவர்க்காரத்தையும் உடற்கழுவியையும்
கொண்டு
எத்தனித்து தோற்கிறேன்

மென்மையாய் உதடின் மேல் உதட்டை பொருத்தி
அந்தரங்கத்தை கிளர்ச்சியுற செய்து

பின்

அவளால் வெடுக்கென
அம்மோதிரத்தை உருவப்பெற்றேன்

நீங்களானால் என்ன செய்கிறீர்கள்..?

மாமிசம் மறுக்கும் என்னை
ஏய்த்து
பசியோடிருக்கும் எனைப் பொருட்படுத்தாமல்
பக்கத்து வீட்டில் குடியேறி

நன்கு கொழுத்த மீன்களை
வாணலியில் இட்டு
பொரித்தெடுக்க முனைகிறீர்

உங்கள் வீட்டு பெண் குழந்தையிடம்
மாங்காயை அம்மியில் வைத்து நசுக்கி
மிளகாயையும் உப்பையும் தடவி
என் வாசலுக்கருகே நடமாட விடுகிறீர்

நகர்வதற்காகவே நாட்களை மூச்சைப் பிடித்து தள்ளும்
என்னையெல்லாம்
பொருட்டாய் மதித்து நடக்கும் உங்களிடம்
மீதமாய் விரல் கணுக்களை நெட்டி முறிக்கும்
நேரத்துள்

நான் இவ்வுலகிலிருந்து
விடைபெற்றபின்

யாரிடம் உங்களின் தீவிரத்தை பரிசோதிப்பீர் என
கேட்கலாமெனில்
நீங்கள் செவிகொடுப்பதே இல்லையே
எப்போதும்

-‘ஏன் நகர்வதில்லை நரகம்?

விடையுறாக் கேள்விகளால் கட்டுண்டு கிடக்க வைக்கிறது. நகர மயமாக்கலையோ, பெண்ணின் கடந்து போகும் தன்மையையோ இயலாமையில் இறைஞ்சும் உள்ளத்தை படியெடுக்கிறது. உள்முக வாட்களால் வீரம் தெறிக்க போராடுபவனால் மலர் கொய்ய முடியாது போன இயலாமை. எள்ளும் மனிதர்களை விரல்நீட்டிக் குற்றம் சாட்டும் நோக்கில் விழுந்த வரிகள்.

***

சுடும் பாறையினோரம் முன்பொரு நேரத்தின்
தழைத்திருந்த பெயரற்ற
மலைச் செடியானது
வெம்மையில் இலைகளுதிர்த்து குச்சிகுச்சியாய்
நீண்ட முனையில்
ஒரு தும்பி
இறக்கைகளை அதிர்த்தபடி
வந்தமரும் ஒரு துளி சொட்டு

வேளை தவறிய உணவில் வயிறு சுருங்கியபடி
முடை நாற்றம்
மிகும்
மேன்ஷன் நடுமத்தியில்
ஆங்கில எஸ் வடிவத்தில் படுத்திருக்கும்
வேலையற்றவனின் சுவரில்
வினாடி முள் நின்று மீளும் கணங்களுக்கு
இடை அதிரும்
நேரத்தின் ஒரு துளி சொட்டு

வெகு உள் வனத்தில் ஒரு பறவையின்
‘ட்வீக்’கிற்கும் மற்றொன்றிற்குமான
கார்வையிலிருந்து ஒரு சொட்டு

மகப்பேறுமனைகளில் பிறந்ததும்
அழாமலிருக்க
செவிலி இரு கால்களையும் தூக்கி
பிருஷ்டத்தில் தருமறையில் வீறிட்டழ ஆகும்
ஓலத்தின் நிறுத்த வினாடியில்
தேங்கும் உயிர் துளிர்ப்பு ஓசையின்
ஒரு துளி சொட்டு

எனச் சிலவை கசிகிறது

பக்கத்து இருக்கையில் கடவுளுடன்
பயணிக்கையில்
அவனது ஹெட்போனிலிருந்து

திவலைகளின் கதை…

வெகு உள் வனத்தின் ஒரு பறவையின் ட்வீக்…

பக்கத்து இருக்கையில் கடவுளுடன்
பயணிக்கையில்
அவனது ஹெட்போனிலிருந்து…

திவலைகளாகவே நாக்கில் ஒட்டிக்கொள்கிறது மிக அழுத்தமாய்..

மொத்தமாய் பிரித்து அடுக்கினாலும் கட்டுரை தாமாகவே அதிகப்படியாக எழுதிக்கொள்ள முற்படுகிறது. தனித்தனியாய் விரித்தெழுத காலம் கனிய வேண்டும். தொகுப்பை படிக்கையில் வெகு ஆசையாய் இருக்கும் விரைந்து செல்ல… ஆயினும் ஆமை வேகம் மட்டுமே சாத்தியம். நின்று அசை போட்டு செரித்து பின் உணரும் மனநிலை சாந்நித்யம். ஆழ்மனதின் படிமங்கள் அலைவுற்றவாறே இருக்கின்றன. அலையில் மாட்டிக் கொண்டியங்கும் துரும்பு போல உயரத்திற்கும் தாழ்வுக்குமான ரோலர்காஸ்டர் அடிவயிறு இழுபட்ட பயணமாய் அமைகிறது. ஆங்காங்கு தேங்கிக் கொள்கையில் பூக்குவியலும் பல சமயம் ரத்தமும் சதையுமான நிணக்குவியலும். எல்லா அனுபவங்களுக்கும் வாசகனைத் தேர்ந்தெடுத்தல் சிறந்த உத்தி.

தொகுப்பை படித்து முடித்த பின்னும் மனதில் நின்றுழலும் சில வரிகள் :

பேருந்து நிலைய நிறைசூலி …
தகரக்கம்பியில் விழும் சடசடக்கும் மழை …
செருப்பில் கால் உறுத்தும் மணல்துகள் …
பாவாடை நாடாவை தளர்த்தி உண்ணும் சிறுமி …

இப்படி அநேகம்.

மிக முக்கியமான தவறவிடக்கூடாத கவிதைத் தொகுப்பு எனவும் சில வரிகளில் கடக்க முடியாதொரு தொகுப்பு என்றும் ஏன் சொல்கிறேன் என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. படித்து முடித்து விட்டேன் என யாரேனும் சொன்னால் அவர்களைப்பற்றி சற்று அதிகமாய் பெருமை கொள்ள சாத்தியம் இருக்கிறது. எப்பொழுதும் முடிவோ, முழுமையோ கொள்ள முடியாத மிகப்பல மடிப்புகளுடைய கவிதைகள் வேதநாயக்குடையது.

பல திடுக்கிடும் அசெளகர்யங்கள் வழி நெடுக உணர முடிகிறது. சில ஆச்சரியங்கள், மன பேதலிப்புகள், பகடிகள், அந்தரங்கத்தின் தரிசனம் காண நேர்ந்த அமர்வுகள், அத்யந்த நேசத்தின் பல்வேறு கூறுகள், தொன்மயமாக்கப்பட்ட பல கூறுகள், மேற்குலகின் பல நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்புகள், ஆன்மீகத்தின் அடிநாதங்கள் எனப் பரந்து விரிவாக்கப்பட்ட கிளைகளின் வழியே ஊடுருவிச் செல்கிறது. முன்னெப்போதுமில்லாத கேதங்கள் கவிதையெங்கிலும் பரவிக்கொண்டே இருக்கிறது. பகிர முடியா காமத்தின் நெருக்கடி அலைகழிய வைக்கிறது. நசிகேதனின் விளக்கங்கள் கூட சில வரிகளுக்கு போதாமையைக் கொடுக்கிறது.

ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் முழுமையுற்ற அல்லது முழுமை பெற முடியாத என இரு துருவங்களின் மத்தியில் நிற்பதான தோற்றம் வலிந்து உருவாக்கப்பட்டதா என ஐயம் மேலெழுகிறது. கடந்து போக முடியாத மரணம் சம்பவித்த வீட்டில் பிணம் தூக்கும் சமயம் வரும் மனவெழுச்சியை உண்டாக்குகிறது. ஒரு வரிக்கு பின் அடுத்த வரி உணர்வுகளில் நமது சமநிலைத்தன்மையை சற்றே அசைத்துப் பார்க்கிறது.

இதில் அடைய வேண்டிய தரிசனங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பாழடைந்த வீட்டில் எழும் வீச்சமும் மனோரஞ்சிதத்தின் மணமும் ஒருங்கே கொண்ட கலவையான மணம். சிலசமயம் ஆங்காங்கே தேங்கி விட நேர்கிறது.

விடையறியா பல தோற்றங்களான வாழ்வு நமக்கென மறைத்திருக்கும் ஆச்சர்யங்களைக் கண்சிமிட்டும் நொடியில் வெளிப்படுத்தி சடுதியில் மறைந்து விடும் மின்னலைப்போல சிலநொடிகளுக்கொரு முறை இந்த கவிதைத் தொகுப்பில் சில வரிகள் இடறிக்கொண்டே இருக்கின்றன. சிலசமயம் மண்புழு நெளிதலும், பட்டாம்பூச்சியின் இறகு சிலிர்த்தலும் ஒரே தருணத்தில் உங்களுக்குள் நடக்க அநேக சாத்தியங்களுண்டு..

பல நூறு படிமங்கள், பல அடுக்கிலான வார்த்தைகள், விழுங்க முடியா அவதானிப்புகள், இது கிட்டத்தட்ட விளையாட்டாய் 10 புத்தகங்களுக்குண்டான கவிதைகளாய் தரப்பட்ட கிடங்கு. ஞான செளந்தர்யத்தைப் பிய்த்து ஒரு தாமரை இலையில் சுருட்டி கொடுத்தாற்போல.. மொத்தமாய் ஒரே சுருளில். இன்னும் முழுமையாக உள்வாங்க பலநாட்கள் தேவைப்படுமென நினைக்கிறேன். அடுத்த கவிதைத் தொகுப்பை தாமதப்படுத்தவும் வேதநாயக். தயை கூர்ந்து…

***

தேவதா… உன் கோப்பை வழிகிறது..! (கவிதைகள்)
வேதநாயக்
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை – 200

-சவீதா

சேலத்தில் வசித்து வரும் இவர் ‘பிரிவின் நிமித்தம்’ என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். பல்வேறு பத்திரிக்கைகளில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி – savithavenkatakrishnanv@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular