Sunday, February 25, 2024
Homesliderதேநீர் நேரக் கதைகள் - 01

தேநீர் நேரக் கதைகள் – 01

விக்ரமாதித்யர்களின் டொக்கு கத்தி

மணி எம்.கே மணி

ஜப்பானின் பழைய திரைப்பட இயக்குனர் ஓசுவின் பிரேம்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அதில் இருக்கக்கூடிய அப்பாவித்தன்மை எத்தனைத் தீவிரம் கொண்டது என்பதை வர்ணிக்கும்போது அது பூதாகரமாக வளர்ந்து வந்தது தான். ஆனால் எதிர்தரப்பு ஆள் வளைத்து வளைத்து விஷயங்களை ஓட்டியதில், அது தேய்ந்து கடைசியில் அந்நாட்டின் நீலப்படங்களில் கூட இருக்ககூடிய கதை அம்சத்தில் வந்து நின்றது. கத்ரீனா என்கிற புனை பெயரை வைத்துக் கொண்டிருக்கிற ஒரு நடிகையான, இளம் பெண்ணை அறிந்து கொள்ளுமாறு அவன் வற்புறுத்தினான். இறுதியாக அவனை சமாதானம் பண்ணி, செல்லை விட்டு வெளியேறி ரோட்டிலிருந்து வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் ஹாலில், நிரந்தரமாக ஒரு பாய் தலையணையுடன் படுத்திருக்கிற தம்பி எழுந்து என்னை அறைந்தான். அது எப்போதுமே வலுவான அறையாக தான் இருக்கும். அடிபட்ட கன்னத்தைப் பற்றிக் கொண்டு அவனையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டு நின்றேன். வழக்கம் போல ’ உள்ளம் ‘  நடுங்கிக் கொண்டிருந்தது. தன்னை தொகுத்துக் கொள்ள ஆகாத ஒரு மனநோயாளியை எதிர்கொள்ள முடியாத பீதி கனத்தது. இன்னொரு முறையும் அவன் அடிக்கலாம். பேசக் கூடாது.

“ இப்ப டைம் என்ன? டீ வாங்கிக் குடுக்க சொல்லாம போன் பேசப் போயிட்டே? வயித்துக்குள்ள எரியுதுடா ! ”

நான் அமைதியாக நின்றேன்.

“ ஏண்டா என்ன சித்ரவத பண்றீங்க? நேரத்துக்கு சோறு போட முடியலன்னா என்ன ஏண்டா உங்க கூட வெச்சுக்கிட்டுருக்கீங்க ? என் அம்மா மஹாலஷ்மி. தாய்லாந்துல இருக்கா. அவள தேடுங்கன்னு சொன்னனா இல்லையா? அவகிட்ட என்ன கொண்டு போயி விட்டுட்டா நான் அங்க சந்தோஷமா இருக்க மாட்டேன்? ”

மேலும் அமைதியாக நின்றேன். எல்லாவற்றிலிருந்தும் துண்டுபட்டு விட்டவனின் கற்பனை இப்படியெல்லாம் தான் இருக்கும். அம்மாவைக் கூட என்னை அறைந்தது போல அறைந்து எனது அம்மா எங்கே என்று அவளிடமே கேட்டிருக்கிறான்.

“ இங்க பார் ! இவன் சிரிக்கிறான் பார் ! ”

இரண்டு சுவர்கள் சேருகிற ஒரு மூலையைக் காட்டுகிறான். அவன் என்ன சொல்வான் என்று தெரியும். அவன் சுட்டிய திசையை வெறித்தவாறு கேட்டேன். “ யாரு ? ”

“உனக்கு தெரியாதா? ”

அடிக்க வந்தவன் எனது கண்களில் பார்த்தான். அசையாமல் தான் இப்போதும் நின்றேன். நான் அசைந்தால் அவனுக்கு பயம் வந்து விடும். பலமாக தாக்கத் துவங்கி விடுவான்.

“ கடவுள் இங்க தானடா இருக்கான்? அவன் ஏன் கூட தானே இந்த மூலைல இருக்கான்? எப்பவும் என்னப் பாத்து சிரிக்கறது தானே அவன் வேலை? ”

எனக்கு என்னவோ பண்ணியது. தலை சுற்றுவது போலவும் கூட.

“  நீ பொறுக்கி நாய். கெட்டவன். பிரெண்ட்ஸ் கூட சேந்து கூத்தடிப்பே. சிகரெட் புடிப்பே. பிராந்தி குடிப்பே. பொண்ணுங்க சூத்து பின்னால போவே. நான் அப்பிடியா? நான் நல்லவன்டா. யாருக்கும் தீங்கு பண்ணாதவன். இந்தக் கடவுள் என்னை காப்பாத்தறானா, பாத்தியா? உன்ன மாதிரி, இந்த ஒலகத்துல இருக்கற அத்தன ஆளுங்க மாதிரி இந்த மயிராண்டியும் ஒரு துஷ்டன். துஷ்டனக் கண்டா என்ன பண்ணனும்? தூரப் போவணும். ஆனா பாரு, இந்த துஷ்ட ஜந்து ஏன் பக்கத்திலேயே வந்து படுத்துகிட்டு இருக்கு! ”

“ சரி. நிறுத்தறியா? நான் காசு எடுத்து குடுத்தாதான் அவன் டீ வாங்கப் போவான்.”

“ போ. போ. கூட ரெண்டு பட்டர் பிஸ்கட் வாங்கிட்டு வர சொல்லு. நமுத்து போவாம இருக்கணும். டீ ல சக்கர கரெக்டா இருக்கணும். இல்லன்னா ரெண்டு பேர் மூஞ்சி மேலயும் ஊத்திருவேன்! ”

பல்லை நறநறத்துக் கொண்டு கழட்டிப் போட்டிருந்த பான்ட் பாக்கெட்டில் சில்லறைக்குத் துழாவினேன். நல்ல வேளையாக தேறியது. நண்பன் அப்போதுதான் கக்கூசிற்கு சென்றிருக்கவே, மற்றொரு தம்பி பாபு படுக்கையை சுருட்டி வைத்து விட்டு எழுந்து வந்தான். காசை வங்கிக் கொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு ஒரு செம்பை எடுத்தவாறு போனான். மிகவும் அயர்ச்சியுடன் உட்கார்ந்தேன். தம்பி  ஒரு நடிகையின் கிளிவேஜ் இடைவிடாமல் தெரிந்தவாறு இருக்கக் கூடிய ஒரு குடும்பப் படத்தின் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு விதமான வேதனையை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த மூலையில் இருக்கிற கடவுள் அவனுடைய மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஒரு நிம்மதியாக மாறினால் என்ன?

பாபு வந்தான். தம்பியின் முன்னால் டீ செம்பை வைத்து விட்டு என்னை உள்ளே வருமாறு கண்களால் சொல்லிவிட்டு உள்ளே போனான்.

அதற்குள் நண்பனும் வந்து விட தன்னுடைய வயிற்றுப்பகுதி பக்கமாக சட்டையைக் கண்பித்தான். நாங்கள் இருவரும் அருவெறுப்பாகப் பார்த்தோம். பான்பராக் போட்டுத் துப்பப்பட்டது. டீ வாங்க கடைக்குள் ஏறும்போது சரேலென திரும்பிய ஒருத்தன் அகஸ்மாத்தாக செய்தது தான் இது. பாபு திடுக்கிட்டு தன்னை பார்த்துக் கொள்ளும்போது அவனும், கூட இருவருமாக சிரித்திருக்கிறார்கள். பாபு தாங்க முடியாமல் என்ன இது, ஆட்கள் வருகிற இடம்தானே? பார்த்து செய்திருக்கக் கூடாதா என்று கேட்கவும் செய்திருக்கிறான். அவனுடைய சட்டையைப் பிடித்திருக்கிறான் தடியன். அப்படித்தான் துப்புவோம், ஆட்டி விடுவாயா என்று கேட்டிருக்கிறார்கள். குடித்திருக்கிற அவர்களை எதிர்க்க முடியாது என்பதால் இவன் பாட்டுக்கு டீயை வாங்கிக் கொண்டு படியிறங்க அவனது முதுகைப் பிடித்து தள்ளியிருக்கிறார்கள். செம்பு கீழே விழாமல் சமாளித்துக் கொண்டு வந்தேன் என்றான் கலவரமான முகத்துடன். நானும் நண்பனும் போனோம். அவர்கள் இருந்தார்கள்.

எனக்கு அவர்களையும், அவர்களுக்கு என்னையும் தெரியாமல் இருக்காது. அது ஒரு ஏரியா. பரஸ்பரம் பார்த்துக் கொள்கிறவர்கள் தான்.

ஏன் இப்படி என்று கேட்க முயன்றோம். அதே ஜெர்க். தடியனைப் பார்த்தேன். அவன் எனது நண்பனின் சட்டையை அதற்குள் பிடித்து விட்டிருந்தான். ஒண்ணு போடுண்ணா என்கிற பாலகனையும், கடைக்காரர் பிடித்துக் கொள்ளத் திமிறுகிற நெட்டையனையும் புரிந்து கொள்ள முடிந்தது. இரவெல்லாம் குடித்திருக்கலாம். மிச்சமிருப்பதை காலையில் குடித்திருக்கலாம். நேரம் கெட்ட நேரத்தில் மப்பு திணறுகிறது. டீக்கடை ஒரு பொதுவெளி. பத்துபேர் பார்த்து நிற்கிறார்கள். ஒரு நாடகம் நடத்த விரும்புகிறார்கள். பார்க்கிற யாருமே இப்போது இவர்களுடைய துணிச்சலை மலைக்க வேண்டும். நான் மிகவும் பதமாக தடியனின் கரத்தை பிடித்து நண்பனின் சட்டையிலிருந்த பிடியை நாசூக்காக விலக்கினேன். அதற்காக நான் இதை சொல்ல வேண்டியிருந்தது. “ சரி ஜோ. நாங்க உங்கள கேக்க வந்தது தப்புதான். விட்ருங்க போயிர்றோம். உங்ககிட்ட சண்ட போடற அளவுக்கு எங்களுக்கு தெம்பே கிடையாது!”

“ இல்ல, போட்டுத்தான் பாருங்களேன்!”

“ சாரி. இல்ல. வேணா. கெளம்பறோம் ! ”

“ ஏண்டா, இப்டி பொட்ட கூ ங்களா இருக்கீங்க? போயி சாவக் கூடாது ? ”

 “ அதான் போறோம் ல்ல. அப்றம் எதுக்கு? விட்ருமா ! ”

நான் சற்று வேகமாகவே நண்பனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். வீட்டின் வாசலில் தனது வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்தார் அவுஸ் ஓனர். வாடகை கழித்துக் கொள்ள ஆரம்பித்து இரண்டு மாத வாடகை பாக்கி. சினிமா ஆள், எதையோ எழுதுகிறேன், பணம் வந்து விடாதா என்று நம்பிக் கொண்டிருக்கிறவர். சற்றே பதுங்கி, அவர் போனதும் வீட்டுக்குள் வந்து கதவை சாத்திக் கொண்டோம். மிக சிறிய வீடு. நோஞ்சலான கதவுகள். சமையல் செய்து முடித்தோம். வைத்த சோற்றை தம்பி சாப்பிட்டு முடித்த பிறகு மற்றவர்கள் பகிர்ந்து உண்டோம். எம் ஜி எம் சானலில் டாக்டர் ஷிவாகோ ஓடிக் கொண்டிருந்தது. அதை இருபதாவது முறையாக பார்ப்பதால் சற்று சரிந்து கொண்டு மயங்கினேன். சற்று நேரத்தில் கதவுகள் தட்டப்பட்டன.

கதவைத் திறந்தேன்.

அவர்கள் தான். மூவரும் கதவை உந்திக் கொண்டு நான் பகுதியே திறந்த கதவின் இடைவெளியில் என்னுடைய மூஞ்சிக்குப் பக்கத்தில் இருந்தார்கள். சந்தேகமின்றி மேலும் குடித்திருந்தார்கள்.

“ நீ என்ன ஒரு மாதிரியா பேசிட்டு போன? பருப்பா? ”

“ ஜோ. இதெல்லாம் வேணான்னு நெனைக்கிறேன் ! ”

“ என்ன வேணான்னு நெனைக்கற? ”

“ எனக்கு நெறைய பிராப்ளம்பா. வீட்டு வாடக குடுக்கல. தம்பிக்கு ஒடம்பு சரி இல்ல. நான் உங்க கிட்ட சண்ட போட்டுக்கிட்டு இருக்க முடியுமா? அன்னாடம் இங்க சாப்பாட்டுப் பிரச்சின. அத சமாளிக்கவே எனக்கு நேரம் பத்தல. விட்ருங்களேன், ப்ளீஸ்? ”

“ இல்ல,  நீ வெளிய வா ! ”

“ சாரி. வேணா. நீங்க கெளம்புங்க. ”

“ அப்ப நீ பொட்ட தான்னு ஒத்துக்க ! ”

“ சரி, ஓகே, அதான் ! போங்க ! ”

சட்டென்று அந்த பாலகன் கத்தினான். “ டேய். எங்களுக்கு போவத் தெரியுண்டா. ஒத்தா, போ போ ன்ற? நீ சொன்னா நாங்க போவணுமா ? ” என்றவன் கதவை எட்டி உதைத்தான். இருவரும் என்னைக் கையைப் பிடித்து வெளியே இழுப்பதற்குள்ளேயே பல பயங்கள் எழும்பி வந்தது. இப்போதுமே நான் என்னை இழுத்துக் கொண்டு சமரசம் பேசுவதற்குள் எனக்குப் பின்னால் இருந்தான் ஏன் தம்பி. நான் பயந்தது அதைத்தான். அவன் எனக்கு ஒன்று என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டான்.

“ யார்ரா, இவனுங்க எல்லாம்? ஒத்தா, யார்றா நீங்க? ”

“ ஏய் ! “

ஓடிச் சென்று கத்தியை எடுக்க முயன்ற தம்பியை தடுத்து நிறுத்தி மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி கதவை மூடிக் கொண்டேன். மேலே வீட்டு உடைமையாளரின் வீட்டுப் பெண்கள் பால்கனியில் இருந்து எட்டிப் பார்ப்பது தெரிந்தது. விறுவிறுவென சந்திலிருந்து ரோட்டுக்கு நடந்தேன். அவர்கள் தொடர்ந்தார்கள். நின்ற என்னையே பார்த்தார்கள். நான் அவர்கள் யாரையும் ஏறிட்டுப் பாராமல், “ சாயந்திரம் ஒரு ஆறு மணிக்கு வரேன் ! ”

“ என்னாத்துக்கு? ”

“ அதான், வர சொல்றீங்களே? அதுக்கு தான் ! ”

“ ஓ . சர்தான். அண்ணன் வரேன்றாரு ! வந்து என்னா பண்ணுவ? சண்ட செய்வியா? ”

“ எனக்கு அதெல்லாம் வராது. இருந்தாலும் வரேன் ! ”

“ எங்க வருவ ? ”

“ std பூத்தாண்ட !”

“ மாசா? ”

“ மாஸ் ! ”

அந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது? ஆறு மணிக்கு முன்பே மறுபடியும் வந்தார்கள். நான் சொன்னதையே சொன்னேன். நீ வரவில்லை என்றால் நாங்கள் வருவோம், கத்தியை தூக்கின அந்த மென்டலை இழுத்துப் போட்டு அடிப்போம் என்றான் பாலகன். எனக்கு அப்புறம் வேறு வழியே இல்லாமல் போயிற்று. வீட்டுக்கு வந்த ஒரு சின்ன வயசுப் பையனிடம் நண்பர்களிடம் சொல்ல சொன்னேன். தம்பிக்கு மீண்டும் ஒரு சாயந்திர டீயை வாங்கிக் கொடுத்து விட்டு மிகவும் அமைதியாக சொன்ன ஸ்பாட்டுக்கு வந்தோம். ஆறு மணியாவற்குள் நண்பர்கள் வந்து விட்டனர். சதீஷிடம் இருந்த கத்தியை வேண்டாம் என்று சொல்லி அதைப் பதுக்கி வைத்தேன். நால்வர் வந்தனர்.

நான் அவர்களை இன்னார் என்று சொல்லாமல் அமைதியாகவே நின்றேன்.

நண்பன் தன்னையறியாமல் தடியனை நோக்கி பாய்ந்து, இடைவிடாமல் அவனுடைய கன்னத்தில் அடித்தான். காலால் எட்டி உதைத்து அவனை வீழ்த்துவதற்குள் மற்ற நண்பர்கள் புகுந்தனர். கையில் அடித்தே மூவருடைய வாயிலும் முகத்திலும் ரத்தம் வர வைத்தனர். அவர்களுக்கு திருப்பி அடிக்க கை எழவே இல்லை. மின்னல் நேரத்தில் அவர்கள் எதிர்பாராத ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. சரியான ஒரு பிடியில் முழி பிதுங்கிக் கொண்டிருந்த பாலகனை விடுவித்து தனியாய் நிறுத்தி விட்டு நம்முடைய பயல்களை முடிந்த வரையில் கட்டுப்படுத்தி முடித்தேன். நண்பர்கள், மூவரையும் ஓட சொன்னார்கள். ஒருவன் எதற்கும் ஆகாமல் பம்மிக் கொண்டிருந்தான். அவனை போக சொல்லிவிட்டு, தடியனை மற்றும் நெட்டையனைப் பார்த்தேன்.

“ உன் பேரு என்ன? “

“ கைலாஷ் ! ”

“ நீ? ”

“ சவுந்தரு ! ”

“ ரெண்டு பேருக்கும் சொல்றேன். எங்க கண்ல நீங்க தட்டுப்படவே கூடாது ! இப்ப நீங்க ஒரு எடத்துல நிக்கறீங்க. தற்செயலா நாங்க அங்க வரோம் . அப்ப நாங்க உங்கள பாக்கவே கூடாது. சட்டுனு பாஞ்சி நீங்க எங்கேயாவது ஓடிபோயி ஒளிஞ்சிரணும் ! ”

இருவரும் தலையாட்டினார்கள்.

“ சப்போஸ், அங்க ஒளியறதுக்கு எடம் இல்ல, என்ன பண்ணுவீங்க ? ”

அவர்கள் விழித்தார்கள்.

“ நின்ன இடத்துல அப்டியே மூஞ்சி மேல கட்சிப் போட்டுக்கணும் ! ”

சரி என்பதாக அதற்கும் தலையசைத்தார்கள்.

அவர்களை போக சொல்லி விட்டு நகர்ந்த பாலகனை தடுத்து நிறுத்தினேன். மூக்கு வழியே இறங்கிக் கொண்டிருந்த குருதியை துடைத்துக் கொள்ள சொல்லிவிட்டு, முதுகை தட்டிக் கொடுத்தேன்.

“ வீட்டுக்குப் போ. அம்மா மடில படுத்துக்கோ. பாலு குடி. அப்டியே தூங்கிரு. இது சண்ட. இதுக்கெல்லாம் சூத்தாட்டிகிட்டு நீ வரக்கூடாது, தெரியுதா? மறுபடியும் நான் உன்ன எங்கேயாது பாத்தேன்னு வெச்சுக்கோ, உன்னைக் கொண்டு போயி நர்சரி ஸ்கூல்ல சேத்து வுட்ருவேன். இல்லன்னா டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயி ஊசி போட்டு வுட்ருவேன் ! ஓடு.

நண்பர்கள் சூழ, அவர்களின் காசில் வைன் ஷாப்பில் மிகுந்த தெறுப்பான போதையில் இருந்த போது அடிதடி சம்மந்தமாக பேச வியாபாரிகள் சங்கத்தின் ஆள் ஒருவர் வர, அவர்கள் மறுபடியும் அடிபடுவார்கள் என்று எச்சரிக்கை செய்தேன். ஒரு சினிமாவில் நிகழ்ந்தது போன்ற சம்பவத்தால், எனது குரலில் மிகுந்த மிரட்டல் இருக்கவே மறுநாள் எவரும் வரவில்லை. அப்புறம் வந்த நாட்களில் சந்தேகமில்லாமல், அடி வாங்கின இடியட்டுகள் எங்களைப் பார்த்ததும் ஒதுங்கிக் கொண்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவருக்காக திருமணம் ஆயிற்று. என்னோடிருந்தவனுக்கும் பாபுவிற்கும் ஆயிற்று. நானும் தம்பியுமாக இருந்தோம். நிறைய பணம் தேவைப்பட்டவாறு இருந்தது. அதனால் காசு வராத சினிமாவை விட்டுவிட்டு ஒரு சாரமும் இல்லாத தொடர்களில் இருந்து காசு பொறுக்கி அவனைக் காப்பாற்றியவாறு நானுமே புத்தகங்கள் கேசட்டுகள் வாங்கி திரைப்பட விழாக்களுக்கு ஊர் சுற்றி ஐம்பது வயதில் ஒரு சம்சார வாழ்வைத் துவங்கினேன். அவனை பராமரிக்க எனக்கு ஒரு இடம் தேவைப்பட்டு, பணம் கட்டி அவனை அங்கே தள்ளி விட்ட போது, சொற்ப நாட்களில் தம்பி இறந்து போனான்.

எனது வாழ்வில் நான் அது போன்ற ஒரு நிம்மதியை அடைந்ததே கிடையாது.

ஒரே நேரத்தில் இருவரும் விடுதலை அடைந்திருக்கிறோம்.

ஒரு மரணம் நமக்கு அதிர்ஷ்டம் போல வந்ததை வியந்து சந்தோசம் கொள்ளும்போது அதைக் கொணர்ந்த இந்த வாழ்வைப் பற்றி சொல்ல என்ன உண்டு?

நான் எனது சினிமா வாழ்வை மீண்டும் அடைந்தேன்.

வழக்கம் போல அது என்னை சுழட்டிக் கொண்டிருகிறது.

இருந்தாலும், ஆற்றில் நீந்தியவாறு இருக்கிறேன். மூழ்கிப் போக வேண்டியதில்லை. எனது எழுத்து என்னை ஒரு இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. முடிந்த வரையில் எல்லோரும் எழுதுவதையே எழுதி இழவு எடுக்காமலிருக்கிறேன். பின்னொரு நாள் இதன் முக்கியத்துவம் எல்லோருக்கும் புரியும் என்கிற நம்பிக்கை எனக்கும் உண்டு. நான் மண்டையைப் போட்ட பிறகு அது எப்படி போனால் என்ன என்கிற அதிதீவிர வெறுப்பும் உண்டு.

என்னை வஞ்சகம் செய்த எவ்வளவோ பேர், அவர்களுடைய வஞ்சகங்களுடன் பிரம்மாதமாக இருக்கிறார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்புகளும் கூடாது என்பது படிந்து விட்டது. முக்கியமாக நான் எந்த திக்கிலாவது உத்தமனாக இருந்திருக்கிறேனா?

இன்று காலையில் கடைதெருவில் ஒரு சிகரெட் வாங்கித் திரும்பும்போது எனக்கு தெரிந்த அண்ணாச்சி ஒருவர் என்னை வெறித்துக் கொண்டு நின்றார். நான் அவரை நெருங்கி அவருடைய கைகளை பற்றிக் கொள்ள முந்தினேன். உதறினார். நான் சற்றே திடுக்கிட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய கொஞ்சம் தொகையை நினைவு கூர்ந்தேன். அது ஒரு பெருந்தொகையான கடனைக் கொடுத்து விட்டு மிஞ்சின சிறு தொகை. உண்மையில் அதை நான் கொஞ்சமேனும் ஏன் மனதில்  பொருட்படுத்தியிருக்கவில்லை. பணம் வரும்போது எல்லோருக்கும் செட்டில் செய்து விடலாம் என்கிற நம்பிக்கை தான். பேச்சு வாக்குவாதமாயிற்று. முடிவில் அவர் என்னை அறைய வருகையில், வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருக்கிறவர்களில் யாரோ ஒருவர் தடுக்க, பதிலுக்கு அவரை அறையாமல் நான் தப்பித்தேன். அப்படி அடி வாங்கியிருந்தால் இப்போதும் என்னால் ஆட்களைக் அழைக்க முடியும். அந்த மனிதனைப் பஞ்சு பஞ்சாக பறக்க விட்டிருக்க முடியும். தாஸ் அண்ணா, நீங்க போங்க என்று என்னைத் தெரிந்த ஒரு இளைஞன் என்னை அனுப்பி வைத்தான்.

“ நீயும் உன் குடும்பமும் கடன் வாங்கி, கடன் வாங்கி ஒத்துத் தின்னும்போது நல்லா இருந்திச்சா? ” என்று அண்ணாச்சி கூட்டத்துக்கு நடுவில் கூச்சலிட்டதை கேட்டுக் கொண்டிருந்தவாறு வீடு வந்து சேர்ந்தேன்.

எதையாவது ஒரு படத்தை பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.

ஒரு மனிதன் தன்னை சிதற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவன் கடமையல்லவா? கத்ரீனா என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற அந்த ஜப்பானிய பெண் இப்போது பெண்மணியாகி விட்டாள். நான் இந்த மாதிரி தருணங்களில் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். வித்தை தெரிந்தவள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நமது முழு கவனத்தையும் அவளால் இழுத்துக் கொள்ள முடியும் என்றும் வைத்துக் கொள்ளலாம். கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு நான் என்னைக் குவிக்க முயலும்போது கத்ரீனாவின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கலாம் என்பதை இம்முறையும் வேதாளம் ஏறுகிறேன்.

அவளை ஃபோகஸ் பண்ணிக் கொண்டு ஒரு சிறுகதை எழுத வேண்டும்.

*****  

மணி எம்.கே. மணி – தொடர்புக்கு [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular