Wednesday, April 17, 2024

தெய்வமே!

மணி எம்.கே. மணி

வெண்ணிலா என்பதற்கே இப்போதுதான் அர்த்தம் கிடைத்தது போலிருந்தது. என்ன ஒரு வெண்மை? பதட்டம் கூடிய இந்த நேரத்தில் எந்த ஆராய்ச்சிக்கும் இடமில்லை என்ற போதிலும் அந்த பால் வெண்மையை மூளை துழாவியது. சந்தோசம் கொள்ள முயன்றான். இப்போது இந்தக் கணமே இதை யாரிடமோ சொல்ல வேண்டுமென்று பட்டது. காத்திருக்க முடியாதபோது மனம் துடிப்பது தாங்காமல் தான் அவன் அண்ணாந்தான். அது மேகம் விலகிய நேரம். நிலா சட்டென வெளிப்பட்ட அதிர்ச்சி தான் அவனை மலைக்க வைத்திருக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு முன்பு கூட பௌர்ணமியைக் கொண்டாட ஒரு பாட்டில் விஸ்கியுடன் ரயில்வே கோட்டர்சுக்குப் போயிருந்தான். எல்லாம் அருணா சம்மந்தப்பட்ட வலி தொடங்கியதில் இருந்து தான். வெகுநேரம் அதைப் பார்க்க முடிவதில்லை. மனம் உடனடியாக வெளிறியது. இதயத்தின் துடிப்பு வெளியே கேட்பது போலிருக்கவே, ஒரு நகைப்பு தோன்றியது. தலையை சொறிந்து கொள்ளும்போது அவன் நின்றிருந்த குளியலறையின் கதவு சிறிய அளவில் டொக் என்றது. இவன் திறக்கும்போதே அவள் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை மூடிக்கொண்டாள்.

அவனது தோள்களில் கைகளைப் போட்டுக்கொண்டு, அவனுக்காக முகத்தை ஏந்தி நின்றாள். உதடுகள் பிரிந்திருந்தன. கண்கள் அவனது முகத்தைப் பார்த்திருந்தது. அவன் அவளில் குனிந்தான். இருவருக்கும் நீண்ட முத்தம் பழகி விட்டிருந்தது. அவன் அவளுடைய ருசியை அறிந்திருந்ததும், அவன் தன்னை அருந்துவதை அவள் விரும்புவதும் நிரந்தரமாகி நின்றது. அவள் அவன் தலையை வருடிக் கொண்டிருந்து இப்போது அழுத்தம் தந்தவுடன் அவன் இதழ்களைப் பிரிந்து மார்புகளில் புதைந்தான். அவள் எப்போதுமில்லாமல் அவனை இறுக்குவது தெரிந்தது. அவன் என்ன என்று கேட்பதற்குள் அவள் அவனை நசுக்கினாள். அவ்வப்போது தோன்றியிருப்பது தான் இப்போதும் வந்தது, இவளுக்கு இவ்வளவு வலுவா? தெய்வமே என்று முனகிவிட்டு அவள் ஒருகணம் பிடியை நெகிழ்த்தி அசையாமல், மூச்சுவிடாமல் கூட நின்றாள்.

சட்டென்று கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

இவன் கைவிடப்பட்டவன் போல கொஞ்ச நேரம் நின்றிருந்து ஆடைகளைக் களைந்து தண்ணீரை வேகவேகமாக தலையில் ஊற்றிக் கொண்டான். குளிரைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ள முடியாத மனநிலை. விட்ட இடத்தில் இருந்து தொடங்க முடியுமா என்பது போல நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். காட்சி நெஞ்சில் படியவில்லை. அருணா அவள் இஷ்டத்துக்கு நடந்து கொண்டாள் என்பது எரிய ஆரம்பித்தது. வருவதென்ன, அவள் இஷ்டத்துக்குப் போவதென்ன? தன்மீது அவளுக்கு ஒரு மரியாதையும் கிடையாது என்று நினைத்தான். மேலே எண்ணங்கள் பெருகுவதற்குள் மேலும் தண்ணீரை ஊற்றிக்கொண்டு குளிக்க ஆரம்பித்தான்.

அறைக்குத் திரும்பி வந்து, இரவு தூங்க முடியவில்லை.

அவள் இதழ்களை எப்படி ஏந்தினாள் என்பதும், பின்னால் அவளை அவளை தான் உண்ட முறையையும், அவள் எப்படி வழங்கினாள் என்பதையும் திரும்பத் திரும்ப ஒர்மையில் நெருடி, வலி பெருகியது. ஒன்றுமே சொல்லாமல் அவள் பாட்டுக்கு கதவைத் திறந்துகொண்டு சென்ற அந்தக் கணம் அதன் அசைவுகளுடன் அப்படியே உறைந்து விட்டிருந்தது.

அவன் யாரையாவது அடித்துப்போட விரும்பினான். காலையில் இவனுக்கு இருமுடி கட்டுவதற்கு முன்னால் மாமா குடும்பத்தார் வந்து விட்டார்கள். அருணா தனது மகனை அணைத்துப் பிடித்துக்கொண்டு, குருசாமிக்கு முன்னாலிருந்த விளக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகம் கொண்டிருந்த அந்த தீவிரம் அவ்வளவு அழகாக இருந்தது. மக்களின் சரணவிளிகளுக்கு அவள் உள்ளுக்குள் பதில் சொல்லிக் கொண்டிருப்பது உதட்டின் அசைவில் தெரிந்தது. ஒருமுறை அவளுடைய கண்கள் இவனைப் பார்த்து விலகும்வரைக் காத்திருந்து, அவன் தன்முறை வரவே பலகையில் உட்கார்ந்தான்.

அருணாவின் மகன் ஸ்ரீக்கு எட்டு வயதிருக்கலாம். அவனுக்கு ஒரு நெய் தேங்காய் நிரப்ப வேண்டியிருந்தது. இவனுடைய மடியில் உக்கார வைத்துதான் அதை நிரப்பினார்கள். பையனின் கையைப் பிடித்துக் கொண்டு தேங்காயில் நெய்யை நிரப்பும்போது ஒருமுறை இவன், அரவிந்த் அருணாவைப் பார்த்தான். கை தொழுது நின்று கொண்டிருந்தாள். கண்கள் மூடியிருந்தன. அவள் யாரோ என்று பட்டதில், இவனுக்குள் என்னவோ பிசைந்தது.

கிளம்பும் நேரத்தில் ஸ்ரீ அரவிந்தின் பாதங்களைத் தொட்டு எதோ பணம் கொடுத்து விட்டு நகர்ந்ததும், அருணாவும் தொட்டாள். அவளுடைய கைகள் ஜில்லென்றிருந்தன. அந்தத் தணுப்பு இவனுடைய உடம்பு முழுவது ஓடி முடித்தது. அவள் பையனை அழைத்துக் கொண்டு போவது போலவே மெலிய குரலில் சொன்னாள். “எனக்கு நேத்து ரொம்ப சேட்டிஸ்பேக்சனா இருந்திச்சு. குளிச்சிட்டுதான் படுத்தேன். “அரவிந்த் அவள் அவசரமாக வெளியேறிப் போனதை நினைத்துக் கொண்டு கோடிட்டப்பட்டிருந்த இடத்தைப் பூர்த்தி செய்து புன்முறுவலிப்பதற்குள் அவள் குடும்பத்தாரிடம் இணைத்து கொண்டாள். கோவிலில் இருந்து ரெயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல ஆட்டோக்கள் வந்தன. நண்பர்களின் வரிசையில் இணைந்து நகர்ந்து தேங்காயை உடைத்து விட்டு ஆட்டோவில் ஏறும்போது அபர்ணாவை ஒருமுறை பார்த்துக் கொண்டான். அவன் இவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் மாமாவின் அருகில் நின்றிருந்த வேணு அவளை இடித்துக்கொண்டு நின்றிருப்பதாகப் பட்டது.

ஸ்டேஷன் வந்து சேர்ந்தபோது புகைவண்டி வருவதற்கு இன்னும் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக நேரம் இருந்தது.

இந்த விரதகாலம் சற்று குணங்கள் அவிழ்ந்தது. தன்னை கசங்காமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற மும்முரம் கிடையாது. எங்கே வேண்டுமானாலும் உட்காருவதற்கு படுப்பதற்கு தயார் தான். அப்படி வருவதும் போவதுமான ஜனங்களுக்கு நடுவே, எதையும் பார்க்காமல் தங்கள் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் ஒட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள். முக்கியமாகக் குமாரை. அவனுடைய பயபக்தி பற்றின கேலிகள் ஓடிக் கொண்டிருந்தன.

இப்போது ஒரு பாறாங்கல்லை நகர்த்தியாக வேண்டும். விடுபட்டு சிரித்துக் கொண்டிருக்கிறவர்களுடன் இணைத்துக் கொண்டால்தான் பயணம் ஒத்துழைக்கும். மூச்சுத் திணறிவிடக் கூடாது. யாரிடமும் தன்னைக் காட்டிக்கொண்டு விடக்கூடாது. அரவிந்த் தன்னை கவனிக்கக் கூடியவன். என்ன நடக்கிறது என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிற புத்தி இருக்கிறது. அவன் தன்னை விட்டுப் போவதையும் இப்போதெல்லாம் பார்க்க வேண்டி வருகிறது என்கிற விபரீதத்தை தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. சும்மா ஒருமுறை சிரித்து வைத்தான். அப்புறம் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை ஊன்றி கவனித்தான். அப்படி கவனிக்கும் போதே தான் நகர்வது தெரிந்தது. அருணாவின் ஒரு பார்வையை நினைவு கூர்ந்தான். அது வெள்ளமாகப் பெருகினால் அது தன்னை அடித்துக் கொண்டு செல்ல தான் மனம் தள்ளியது.

ரூபன் நீட்டிய பீடியை வாங்கிக் கொண்டு தொடர்ந்து நான்கு முறை இழுக்கும்போது கவுதம் நிதானமாக ஒரு கெட்ட வார்த்தைப் பாட்டை பாடத் துவங்கினான். நாலும் நாலும் மொத்தம் எட்டு வரிதான். குமாருக்கு சிரிப்பு வருகிறது. மேலும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாட்டு முடியும் தருணத்தில் காதைப் பொத்திக் கொள்கிறான். “என்ன தாஸ் சாமி? இதெல்லாம் கேக்க மாட்டியா? டேய், குருசாமி, நீயாவது அவன்கிட்ட சொல்டா!”

தாசன் பீடி புகைப்பதில் மூழ்கியிருந்தான்.

குருசாமி என்று அழைக்கப்பட்டவன் கூட இவர்களில் ஒருவன்தான். பெயர் பிரகாஷ். வீட்டில் கொடுத்து அனுப்பிய முறுக்குகளை எல்லோருக்கும் கொடுத்தவாறு குமாரிடம் “காது மேல இருந்து கைய எடுக்காத” என்றுவிட்டு கொடுக்க வேண்டிய முறுக்கை அவனுடைய வாயில் சொருகினான்.

கவுதம் தாசனிடம், “நெஜமா ஏட்டா. எங்க பழைய குருசாமி எப்பவும் சொல்வாரு. தலைல இருமுடி ஏர்ற வரைக்கும் நாம ஆசாமிங்க தான். அதுக்கு அப்புறம் சாமிங்க. என்ன வேணுன்னா செய்யலாம், என்ன வேணுன்னா பேசலாம்! யூ டிசைட், யுவர் பாத்!”

“உன் குருசாமி உன்ன மாதிரி ஒரு லூசுகூ..வா தானே இருப்பான்?” என்றான் ஜார்ஜ் ராபர்ட்.

“மேன், அதில ஒரு பிலாசபி இருக்கு தெரியுமா?!”

“லவடா பிலாசபி. போயி சப்ப சொல்லு!”

“லிசன் டா மச்சான், ஐ வில் எக்ஸ்ப்ளெயின் யூ!”

“ஓத்தா. சும்மா இரு. அடிபடுவே!”

சபரி ஸ்பெசல் சாயந்திரம் புறப்பட்டு செல்லுவது. அரவிந்த் முகம் நினைவுகளாலும், முகத்தில் மோதின ஒளியினாலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு எதிரே கூடவே வந்து கொண்டிருந்த அஸ்தமன சூரியன். ஒரு கட்டத்தில் அது ஒரு குன்றின் மீது நின்று ஒளிர்ந்தது. வானம் தன்னை வர்ணங்களால் பிழிந்து கொண்டிருந்தது. அவன் அருணாவிடம் தான் பார்த்ததைச் சொல்லுகிற சொற்களில் இருந்தான். மானசீகமாக தான் அவளிடம் பேசியவாறு இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை தான். ஆனால் திரும்புவதற்கு வழி புலப்படுவதில்லை. பல நேரங்களில் அவன் அவளை வெறுக்கிறான் என்பது அவனே அறிந்தது தான். அப்படி வெறுக்கக் கூடாது என்று புத்தி சொல்லிக்கொண்டு படபடக்கும்போது அவனுக்குள் இருந்து அந்த ஆழ்ந்த தாபம் எழும். தோள்களில் அவளை சாய்த்துக் கொள்ளுவது போல ஒன்று மின்னலடித்துப் போகும். அவள் தன்னுடைய கணவனைப் பறிகொடுத்து நின்ற அந்த நாளில் யாருமே எதிர்பாராமல் அவனுடைய தோளில் சாய்ந்து அழுத அந்த நிமிடங்களின் விதும்பல் இப்போதும் அவனுக்குள் திமிறும். அது நினைவை விட்டுப் போகாது, அன்று இருவருமாக சேர்ந்து கடவுளை என்னமோ கேட்டார்கள்.

இரவு சாப்பாட்டுக்கு முன் ஒரு கச்சேரி வைக்கலாம் என்று முடிவாயிற்று.

பிரகாஷ் துவங்கினான். தாசன் இணைந்து கொண்டான். எல்லாம் பஜனை டோன் தான். நெருக்கமான ஒரு வட்டம் போட்டு அமர்ந்து, ஒவ்வொருவரும் மற்றவர் முகம் நோக்கி சிறிய நடன அசைவுடன் பாடிக்கொள்வது வெறித்தனம் தான். ஒருவரை மற்றவர் மீறினார்கள். ஆனந்தனின் பாங்கூஸ் முறுக்கியது. ரயிலின் தாளம் கூட்டுசேர கைகளால் தட்டிக்கொள்கிற சப்தம் அதைக் கடக்க முந்தியது. சிரமமான வரிகள் வரும்போது மூச்சுவிட்டுக் கொள்ளாமல் தாசனும் பிரகாஷும் அப்படியே குனிந்து தப்பிவிடாத குரலுடன் எழும்போது ரூபன் அவர்களுடன் இணைந்து சமநிலை செய்வான். அரவிந்த் தன்னை மறந்து பின்பாட்டு பாடினான். கோரஸின் தாளநிலை அவனைப் பித்தாக்கும் போதெல்லாம் அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அருணாவை நினைக்காமல் இருப்பதாக நினைப்பிருந்தது. அது ஒரு வீரமணி பாட்டு. இவர்கள் அதை ஒரு வேகத்துக்கு மாற்றிக் கொள்வார்கள். கன்னி மூல கணபதிய வேண்டிகிட்டு என்கிற அந்தப் பாடல் முடியும்போது எல்லோரும் வியர்த்துப் போய், மூச்சிரைப்பில் இருந்தார்கள். மாறிமாறி வாங்கி தண்ணீர் குடித்தார்கள். அக்கம் பக்கம் பெட்டிகளில் இருந்து வந்து சூழ்ந்த சாமிமாரை எப்படி திருப்பி அனுப்பவது என்று தெரியவில்லை. அவர்கள் எல்லாம் அடுத்த பாடலுக்கு காத்திருக்கிறார்கள். ஓரிருவர் கும்பிட்ட கைகளை எடுக்கவில்லை. தங்களுக்குள் பார்த்துக் கொண்டு இருந்து சட்டென்று தாசன் “அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் டெலிபோனு வயரு, உங்கக்கா சாமான் புல்லா மயிரு” என்கிற வரியைத் துவங்கியதும் ஜனம் எகிறியது.

கோட்டயத்தில் மூன்று மணி அளவில் இறங்கி அங்கேயிருந்த ஒரு கோவிலைத் தேடிச்சென்று ஆற்றில் குளித்து, தாசன் சிபாரிசு செய்த பழம்பொரியைச் சாப்பிட்டு பேருந்தில் ஏறினார்கள்.

விடிய விடிய மேடுகள் ஏறுவது பிரம்மாதமாக இருந்தது.

ரப்பர் மரங்கள் இடைவிடாமல் தொடர்ந்தன.

சில நீர்நிலைகளில் பெண்கள் குளிப்பது பார்க்க முடிந்தது.

கவுதம் குமாரிடம், “சேச்சி கண்டா சேச்சி? பாச்சி கண்டா பாச்சி?” என்றான்.

“ஐயப்பா, இவனால மொத்த பஸ்சையும் கவுத்து வுட்ராத!”

எருமேலியில் கூட்டமே இல்லை.

வாடகைக்கு விடுகிற ஷெட்டுகள் எல்லாம் வாடகை வசூலிக்கிற ஆட்கள் கூட இல்லாமல் காலியாக கிடந்தன.

மண்டலகாலம் முடிந்து சபரிமலை நடை பூட்டப்பட்டிருப்பதால், அது திறக்கும் நேரத்துக்கு சமீபமாகத்தான் காட்டுப்பாதையில் செல்ல முடியும் என்றார்கள். அப்போதுதான் ஜனம் வரும். இப்போது சென்றால் மிருங்கங்களின் தொல்லை இருக்கக்கூடும் என்றார்கள். இவர்களால் ஒருநாள் தான் பொறுக்க முடிந்தது. மறுநாள் சாயந்திரம் நடை துவங்கி அன்று இரவே அழுதா ஆற்றின் ஓரத்தில் பல்வேறு சப்தங்களுக்கு பயந்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துப், படுத்து தூங்கினார்கள். நெடிய தேக்குமரங்களின் அசைவையும், நட்சத்திரங்கள் பயப்பட வைத்த வானத்தையும் பார்த்துக்கொண்டு அரவிந்த் எப்படித் தூங்கிப் போனான் என்று தெரியாது. மறுநாள் அழுதையில் குளித்து அங்கேயே இருப்பதாகத் தீர்மானித்தார்கள். காலையில் உப்புமா செய்து பழம் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டார்கள். மதியம் சோறு வடித்து, சாம்பார் செய்து, கப்பா வறுத்து, அப்பளம் பொரித்து விருந்து போல சாப்பிட்டார்கள். மற்ற நேரமெல்லாம் மீன்களாக நீந்திய அழுதாவில் அவைகளுக்கு சப்பாத்திகளை பிய்த்துப் போட்டுக்கொண்டு அதிலேயே ஊறிக்கிடந்தார்கள். ஒரு தம்மடிக்கிற இடைவெளியில் ஈரத்துடன் அத்தனை பேரும் ஒரு பாறையில் ஏறி அமர்ந்தபோது, ரூபன் “அருகில் வந்தாள், உருகி நின்றாள், அன்பு தந்தாளே! அமைதி இல்லா வாழ்வு தந்தேன், எங்கு சென்றாளோ” பாடினான். அவன் ஈழத்துப் பையன். இயக்கத்தில் பயிற்சியில் இருக்கும்போது, அவனுடைய அம்மா அவனைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டாள். அவன் பிபி ஸ்ரீனிவாஸ், ஏ எம் ராஜா குரல்களில் பாடும் பழைய பாடல்களுக்கு மட்டுமல்ல, அவனது அபிநயங்களுக்கு உருகாதவர் மனிதராக இருக்க முடியாது. அரவிந்த் தன்னுடைய கண்ணீரை மறைத்துக் கொள்ள ஆற்றில் குதித்தான்.

பிரிவாலே மோதும் துயர் போதும், போதுமே!

கொஞ்சம் பக்தர்களின் நடமாட்டம் தெரிந்ததும் இரவே கிளம்பி நடப்போம் என்று முடிவு செய்தார்கள். பகலில் நடப்பதைக் காட்டிலும் இரவுநேரம் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ, அதைக் கடந்து விடுவோம் என்றான் தாஸ்.

இதோ, இதோ என்று கிளம்புவதற்கு இரவு ஏழு மணிக்கும் அதிகமாகி விட்டது.

ஒரு ஏற்றம் முடிவதற்கு முன்னேயே அந்தக் கொடும் குளிரில் வியர்த்து வடிந்தது. இன்னம் கொஞ்சம் போனதும் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை எல்லாம் அவிழ்க்க வேண்டி வந்தது. ஓய்வெடுக்க உட்கார்ந்து ஒரு பீடியைப் பற்றவைத்து அதை அடித்து முடிப்பதற்குள் குளிர் வந்து சூழ்ந்து எழுப்பித் துரத்தியது. அவரவர் வைத்திருந்த டார்ச் வெளிச்சத்தைத் தவிர காடேன்றே ஒன்றை அறியமல் பாதையை மட்டும் பார்த்துக் கொண்டு வெகுசீராகச் சரணம் சொல்லிக் கொண்டு நடந்தார்கள். ஒரு பாதையின் திருப்பத்தில், காடு பற்றி தெரிந்தவனும், முன்னால் நடந்தவனுமான ரூபன் நின்றான். பின்னால் தொடர்ந்த அனைவரும் நின்றாகள். ஒரு யானை நின்று கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். பீதியுடன் வெளிச்சத்தை அடித்துப் பார்க்க அது ஒரு பெரிய கற்பாறை.

இப்போது அந்தப் பாதை அந்தப் பாறையை சுற்றிக்கொண்டு போயிற்று.

கொஞ்சம் பயம் விலகின பிறகு எல்லோரும் கொஞ்சம் சிரித்துக் கொண்டார்கள். கவுதம் எப்போதும் அதிக சப்தத்தில் வாய்விட்டுச் சிரிப்பவன். “ஏட்டா, குமாருக்கு அள்ளு விட்டுருச்சு. பயத்துல தலைவர் குசு வுட்டுட்டாரு”

“யோவ், அது யான மாதிரியே இருந்திச்சுய்யா!”

“மாதிரி என்ன மாதிரி? சேச்சியும் பாச்சியும் எல்லாரும் தானே பாத்தோம்? நாம போற ரூட்ல டயனோசரே வரும்.”

அறிந்தும் அறியாமலும் செய்த பிழையெலாம் என்று குமார் துவங்க அத்தனை பேரும் அந்தச் சொற்றொடரை கூச்சலாகச் சொல்லி, அப்புறம் வாய்விட்டுச் சிரித்தார்கள். எல்லோருக்குள்ளும் ஒரு இலக்கற்ற அச்சம் இல்லாமலில்லை. அதைக் கடப்பதற்கு இப்படியெல்லாம் அமைந்து விடுகிறது. அடுத்தமுறை விரதகாலம் வந்தவுடன் மாலையிட்டு, பயண திட்டங்களைப் போட ஆரம்பித்து விடுவதெல்லாம் இந்த திகில் உண்டாக்கக் கூடிய சுவாரஸ்யமாக இருக்கலாம்.

ஜார்ஜ் இந்த வருடம் தான் முதல்முறையாக வருகிறான். அவன் அரவிந்தை கவனித்திருக்க வேண்டும். எல்லோரும் முக்கிமுனகி கூட்டம் பிரிந்து செருப்பில்லாத கால்களுடன் அங்கே இங்கே இடித்துக்கொண்டு பாதங்களின் எரிச்சலுடன் மேடுகளில் ஏறும்போது அவன் சர்வ சாதாரணமாகக் கடந்து சென்று மற்றவர் வந்து சேரும்வரை எங்காவது அமர்ந்து காத்திருப்பது தொடர்ந்து நடந்தது. ஜார்ஜ் மிகவும் ஆச்சரியமாக, “டேய், எப்படிடா?” என்று கேட்டான்.

ஒரு சாலை விபத்தில் அருணாவின் கணவர் உயிரை விட்ட பிறகு அவளைச் சூழ்ந்த வாழ்க்கை அவள் அதுவரை கற்பனை கூட செய்யாதிருந்த அவலம். பலரும் பல திட்டங்களைச் சொன்னார்கள். அவளும் இழுக்கப்படுகிற திசைகளில் முட்டிமோதி விழித்து கடைசியாக மாமா வீட்டில் ஒதுங்கினாள். அவருடைய மனைவிக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தம். கொஞ்சநாள் துணி துவைத்து, பாத்திரம் கழுவி, பையனை ஸ்கூல் சேர்க்கிற வரை ஒருமுறையாவது நிமிர்ந்து யாருடைய முகத்தையாவது ஏறிட்டுப் பார்த்திருப்பாளா? ஒரு விதவை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற படிப்பை ஒரு புத்தகத்தில் படித்து யாரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவள் மெதுவாகத் தன்னை ஒரு மனிதப் பிறவியாக வெளிப்படுத்திக் கொண்டது மாமாவின் மருத்துவமனைக்கு அவருடைய உதவியாளராக வந்த பிறகுதான்.

அவளுக்கு இருந்த அலுவல்கள் அவளைத் தலைநிமிர வைத்தது. அதற்குப் பிறகு அவள் சிரிப்பதற்கு எல்லாம் பலரும் வியந்து கொண்டார்கள். எப்போதாவது தனது சினிமா தேடல்களுக்கு நடுவே அரவிந்த் மருத்துவமனைக்குப் போகும்போது சந்திக்க நேரக்கூடிய தருணத்தில் அருணாவைப் பொருட்படுத்த வேண்டியிருக்கவில்லை. அவளை ஆண்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஜோக் அடிக்கிறவன், நேரடியாகப் புகழ்கிறவன், சகோதரி என்கிறவன், அவளுடைய பிள்ளைக்கு ஜென்மாந்திரக் கடன்பட்டவன் என்று எவ்வளவு கோமாளிகள்? ஒரு புருஷனின் அன்பை இழந்தவள் ஊரில் இருக்கிற மொத்த ஆண்களையுமே தன்னை சுற்றிக் கொண்டிருக்கிற சரசத்தை தூவிக்கொண்டிருக்கிறாள் என்பது தான் எரிந்து கொண்டிருந்தது. உன் லிஸ்டில் நான் வரமாட்டேன் என்பது அவனுக்குள் சுழன்ற சவால். முடிந்தவரையில் திரும்பிப் பார்க்காமல் இருந்தான். ஏதாவது கேட்டால் அலட்சியமாக பதில் சொன்னான். மாமா கூப்பிடாமல் போவதில்லை என்றெல்லாம் இருந்து பார்க்க முயன்று, அது அவனால் முடியவில்லை. எனினும் ஒரு காரணமாகவே வந்தேன் என்பதை நிறுவ முடியாதா என்ன? உண்மையில் எதுவோ கம்பிகளுக்கு அந்தப் பக்கமிருந்து, யாரும் பார்க்காமல் அவன் பதறிக் கொண்டிருந்தான்.

முதல் தடவையாக அரவிந்தும் அருணாவும் மருத்துவமனையில் உள்ள ஒரு பூஜையறையில் முத்தமிட்டுக் கொண்ட ஒருநாளில் தான் அவள் அவன்மீது கொண்டிருந்த பதற்றத்தைச் சொன்னாள். அந்த வியாதி அவனுக்கு வருவதற்கு முன்பே அவள் அனுபவித்துக் கொண்டு இருந்திருக்கிறாள். மனம் நடித்த மொத்த நாடகங்களையும் அவர்கள் பரஸ்பரம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டார்கள். மருத்துவமனைகளுக்கு டிமாண்ட் தோன்றிய ஒரு காலத்தில் கணக்கு வழக்கு பார்க்க உதவி செய்ய முடியுமா என்பதாக அவனை மாமாவே கேட்டதை எல்லாம் ஒரு விதியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தங்களை உரித்து வைக்கிற உண்மைகளைப் பேசிப்பேசி வந்திருந்தது கடைசியாக அவர்கள் கூட்டத்தில் இருந்து தனித்து நின்றார்கள்.

இருவருக்கும் நடுவில் என்னவோ இருக்கிறது என்பதையறியாத ஒரு குஞ்சு குளுவான் கூட அந்தப் பிரதேசத்தில் இல்லை. அது என்ன என்பது பற்றிய என்கிற டிஸ்கசன் சென்று கொண்டிருக்கிறது எனலாம்.
எல்லோரும் முடிந்த வரையில் ஒன்றாக மலையேறிச் சென்று கொண்டிருந்த கட்டம் முடிவடைந்து விட்டது. பீடி புகைக்க உட்கார்ந்த தாசன் இவனிடம் பல சினிமாக்கள் பற்றிப் பேசத்துவங்கியதில் மற்றவர்கள் ஒவ்வொருவராகப் போனார்கள். அசோக் உள்ளிட்ட மூவர் பின்தங்க வேண்டியதாயிற்று. அவ்வப்போது சில சாமிமார்களின் கூட்டம் போயிற்று. காட்டில் எந்தப் பக்கமிருந்தோ கோஷங்கள் கேட்டவாறு தான் இருந்தது. அசோக் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் சுள்ளிகளைப் போட்டு, அதை ஒதுக்கிவிட்டுக் கொண்டு, ஊதிவிட்டுக் கொண்டு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். தாசன் பேசுகிற சினிமா அநேகமாக அவனுக்குத் தேவையில்லை. முகங்களில் மீசை பொசுங்குகிற தீ எரிந்தாலும், முதுகு சில்லிட்டு கூசிக் கொண்டிருந்தது.

“படத்தோட மொதல் காட்சி, ஹீரோ மெட்ராசுக்கு வரான். லாஸ்ட் சீன் அவனை விழுந்து, விழுந்து ஸ்நேகிச்ச அவனோட லவ்வர் அவனை தூக்கி எறிஞ்சுட்டு மெட்ராசை விட்டுப் போறா. இதுக்கு நடுவில என்ன நடந்திச்சு? இதுதான் நம்ம படம்!” என்று தாசன் பேசத்துவங்கிய படத்தின் கதை தொடர்ந்து கொண்டிருந்தது.

அது என்னதான் சமூக நிலைகளைச் சுற்றி வந்தாலும் வெகு ஆழத்தில் யாரையும் அசைக்கக் கூடிய ஒரு காதல் இருந்தது.

படத்தின் நாயகி கல்லுரி விட்டுத் திரும்பும் வழியில் நாயகன் ஒரு ட்ரை சைக்கிளில் சிமெண்ட் மூட்டைகள் வைத்து ஓட்டிக்கொண்டு வருகிறான். ஆகவே அவன் கோலம் கலைந்து போயிருக்கிறான். அவன் எடுத்து செல்லுகிற மூட்டைகள் அந்த ஏரியாவின் மாபியா சந்தானம் புதிதாக கட்டிக் கொண்டிருக்கிற வீட்டுக்காக. தாழ்வு மனப்பான்மை அவனைத் தள்ளுகிறது என்றான் தாசன். அது எதையும் செய்ய வைக்கும் தெரியுமா? மேலும் இத்தலைநகரத்தில் பிறந்து வளர்ந்த யாரும் அவசரத்துக்கு, ஆத்திரத்துக்கு ஆட்பட மாட்டார்கள். தூக்கக் கலக்கமாக இருப்பார்கள். பிழைக்க வந்தவர்கள் அப்படியா? நாயகன் எவ்வளவோ சாகசங்கள் செய்கிறான், வஞ்சகம் துரோகம் உட்பட. அவன் போன தூரம் பயங்கரமாக இருந்தது என்பவை பற்றி கதை சென்று கொண்டிருக்கையில் நிறுத்தி எழுந்து கொண்டான்.

கட்டுகளைத் தலையில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.

சற்று நேரத்தில் மூவரும் ஒன்றாக இல்லை.

குறிப்பிட்ட ஒரு ஏற்றம் முடிந்த பின்னர் அரவிந்த் ஒரு இடம் தேடி உட்கார்ந்தான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அடேங்கப்பா, எவ்வளவு வியர்வை வெள்ளம்? டார்ச்சை அணைக்கத் தோன்றினாலும், அதைச் செய்யவில்லை. முடிந்த வரையில் காட்டை நோட்டமிட முயன்ற போது உள்ளம் அதில் செல்லவில்லை. தனக்கு முன்பெல்லாம் இருந்த அந்த பயம் வந்து உதிக்கவேயில்லை என்கிற எண்ணத்தினால் ஒரு கணம் திகைத்தான். ஆமாம், சொல்லுவதற்குக் கூச்சமாக இருந்தாலும் அவனுக்கு இப்போது சாவை நினைத்தால் பிடிக்கிறது. இந்த மலையேற்றம் இவ்வளவு சாதாரணமாக முடிந்து கொண்டிருப்பதற்கு கூட அடிப்படை காரணம் அதுதான். மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு பெரிய குடி விருந்துக்கு அப்புறம், இவனைக் காட்டிலும் போதையாக இருந்த ஒரு நண்பனைக் கூட்டிக்கொண்டு சிகரெட் தேடிப்போனான். நண்பன் தன்னுடைய முழு தீரத்தையும் காட்டும் விதமாக பைக்கை முறுக்கிக் கொண்டு போக நகரம் குஷிக்கு ஜிமுக்கியது. அரவிந்த் உள்ளே ஒரு பலூன் வெடித்து கூச்சலிட்டான். தன்னை எங்காவது கொண்டு சென்று நொறுக்கித் தூளாக்க தாகம் போல ஆசை முள் குத்தியது. ஓட்டுகிறவனிடம் சொன்னான். “டேய் மச்சான். கண்ண மூடிக்க. அப்டியே விடு!” எவனோ ஒரு பெண் விவகாரத்தில் மனம் வழுக்குவதற்கு, அவனுடன் அவனுக்கு சம்மந்தமில்லாதும் சேர்ந்து சாக வேண்டுமா என்று இப்போது யாருக்கும் தோன்ற வேண்டும்.

அரவிந்துக்கு அப்போது தோன்றவில்லை. அன்று என்ன காலநேர வர்த்தமான சூழல் இழவோ? எதிரே வந்த வண்டிகளில் மோதிக் கொள்ளவில்லை. அல்லது அவர்கள் விலகிக்கொண்டு போயிருக்க வேண்டும். இப்போதுகூட பக்கவாட்டில் இருந்து அந்த மரத்தின் மீதிருந்து ஒரு சிறுத்தை பாயுமானால்? பாயட்டும். அவன் அந்த டார்ச் லைட்டை அணைத்தான். ஒரு கணம் மனம் அரண்டு மறுபடி ஒளியைத் திரும்பினான். அருணா என்று வந்தது நெடுமூச்சு.

அன்று அது ஒரு சாயந்திரம்.

உண்மையில் அரவிந்த் மிகவும் பாதிக்கப்பட்ட காலம் அது. சினிமாவில் மிகவும் சகஜமான வெட்டி காலங்கள் என்கிற ஒன்று உண்டு. ஏதாவது பற்றுவதற்கு முன்னால் தேமேயென்று இருப்பது. அரசியல் பண்ணி யாரையாவது கவிழ்த்துக் கொண்டிருப்பது. எவனுடைய சோற்றிலாவது மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, தன்னுடைய சோற்றுக்கு இரந்து கொண்டிருப்பது. சம்மந்தமில்லாத பிரம்மாண்டங்களுக்கு வயிறெரிந்து கொண்டிருப்பது. இவைகள் எல்லாம் காலம் காலமாக கிளம்பி வந்து கொண்டிருக்கிற சிலுமிஷங்கள் தான் என்றாலும், அருணா வாழ்வில் நுழைந்து கொண்ட பிறகு பொறுமையாக எதையும் வேடிக்கை பார்க்க ஆகவில்லை. அந்த கணம் புறப்பட்டு செல்ல விரும்பினான். ஒரு பொய்யை எறிந்து, அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தபோது அருணா அட்மினில் இல்லை. புற நோயாளிகளைப் பார்க்க மாமா வருவதற்கு நிறைய நேரமிருந்தது. எங்கே? அவனுக்கு இது பிடிக்கவில்லை. அலட்சியமாக இருப்பது போல பலரிடமும் சிரித்து, செருப்பை தேய்த்துக்கொண்டு சப்தமெழுப்பி தன்னை ஒளித்தவாறு, இல்லாமல் போனவளைத் தேடும்போது, அவள் லாபில் இருந்தாள். வேணு சொல்லித்தான் காப்பி வந்திருக்கும். இருவரும் உட்கார்ந்து பேசியவாறு இருந்தார்கள். முகம் மாறியது. அது இவனுடைய முகம் மாறியதால் கூட இருக்கலாம். உட்காருவதற்கு நாற்காலியைக் காட்டினாள். அவன் கண்ணாடிப் பேழையில் உள்ள குழந்தை எலும்பைப் பார்த்து நின்று கொண்டு சீட்டியடித்து விட்டு வேணுவைப் பார்த்தான்.

“சார், நீங்க சைக்கோ படம் பாத்து இருக்கீங்க?”

“ஹிந்தியா?” என்று கேட்ட அவளைப் பார்க்கவில்லை. வேணுவை ஊடுருவி கொண்டு, ஒரு கணம் யோசனையில் இருந்தான். வேணுவை நல்ல ஒரு அழகனாகக் கொள்ள முடியும்.

“இல்ல, இங்கிலீஷ். ஹிட்ச்காக்-னு ஒரு டைரக்டர். ஒர்த்தன் அம்மா, அம்மான்னு சொல்லிட்டிருப்பான். ஒரு ஆளு இருக்கற மாதிரியே இருக்கும். கடசில போர்வை வெலகும்போது பாத்தா அது ஒரு வெறும் எலும்புக் கூடு. அந்த சீன் நமக்கு அற விடுறா மாதிரி இருக்கும்னு வெச்சுக்கோங்களேன். நம்ப பெர்க்மன் அந்த மாதிரியே ஒரு படம் எடுக்கணும்னு சொல்லிகிட்டிருக்கான். சொல்ல முடியாது, அதையே எடுத்தாலும் எடுப்பான். அந்த மாதிரி எலும்புக்கூடு எல்லாம் எங்க கிடைக்கும்? “

ஒரு கலை இயக்குனரிடம் சொன்னால் காலையில் பத்து கூடுகளை தயார் செய்துகொண்டு வந்து வைப்பார்கள் என்பது அரவிந்துக்கு தெரியும்.

அந்தப் பேச்சு நீண்டு போயிற்று.

அருணா எழுந்து போனாள்.

அப்புறம் அவள் இருக்கிற இடத்திற்கு போனபோது அவள் பேசவில்லை. இவன் அவளிடம் என்ன என்று சர்வ சாதாரணமாகக் கேட்கவும் முடிந்தது.

அவள் தனது வேலைகளை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவனுக்குள் இருந்த கோபங்கள் மறைந்து, ஒருவிதமான வதை துவங்கியது.

எழுந்து போவது போலச் செய்தபோது அவள் கண்டுகொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து சும்மா அப்படி இப்படி நடந்தான். மறுபடியும் அவளுக்கு முன்னால் உட்கார்ந்தான். இன்னொரு முறை இதற்கு மேல் எழுந்து கொள்ளவும் முடியாது.

இப்போது நான் சண்டை போடுவதற்கு முயலுகிறேனா, இல்லையெனில் அவளை சமாதானம் செய்வதற்கு முந்துகிறேனா என்பதையே அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

“என் மனசில ஒன்னுதான் படுதுங்க அருணா. எப்படியோ தெரியாம ஒட்டிகிட்டோம். இப்ப உங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அதாவது உங்களுக்கு என்ன பிடிக்கல. அதான் இருக்கற உண்ம!”

நிமிர்ந்து பார்த்தாள்.

இவன் வேறுபக்கம் பார்த்தான்.

“கண்டுபுடிச்சிட்டீயே? சும்மாவா? கத எல்லாம் எழுதி, வசனம் எல்லாம் எழுதி சினிமா எல்லாம் எடுக்கப் போறவனாச்சே?”

இவன் அமைதியாக இருந்தான்.

அவள் ஏதோ அலுவலாக ஒருமுறை போய்விட்டு வந்தவள், அங்கிருந்த சில பூஜைப் பொருட்களைத் தட்டில் வைத்து தொகுத்துக் கொண்டிருந்தாள்.

இவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கண்களில் கண்ணீர் சேர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டு, “இந்த ஆஸ்பிட்டல்ல என்னப் பாத்தாலே யாருமே உன்னப் பத்தி தான் பேசுவாங்க. அப்பிடி மானம் காத்துல பறக்க ஆரம்பிச்சு எவ்வளவோ காலமாச்சு., உன்னைப் பத்தி பேசினா நான் அவங்க கூட உக்காந்து கத பேச ஆரம்பிச்சுருவேன். இப்ப இல்ல. அப்ப கூட, வேணு சார் அப்படி உன்னப்பத்தி கேட்டாரு. நீ அப்டி, நீ இப்டின்னு வாய்க்கு வந்தத எல்லாம் ஆச ஆசயா பேசிகிட்டுருந்தேன். நீ இல்லாத நேரத்துல எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் தெரியுமா?” என்று உட்கார்ந்தாள்.

அரவிந்த் தன்னை வெறுத்த நிலைக்குப் போனான்.

“நீ சொன்னது சரிதான். எனக்கு ஒருவிதத்துல இதெல்லாம் ஏன் நடந்துச்சின்னு இருக்கு. பாத்ரம் பண்டம் கழுவிகிட்டு இருந்தப்ப நல்லா இருந்தேன். அப்புறம் கூட நல்லா இருந்தேன்!”

“அருணா!”

இப்போது அவள் அழுது கொண்டிருந்தாள்.

“அருணா ப்ளீஸ்? சாரி.”

அது தொடர்ந்தது.

அரவிந்த் அவளுடைய அழுகை தன்னை உசுப்பேற்றுவதை அறிந்தான். சற்று ஒருமுறை சுற்றிலும் பார்த்துக் கொண்டு “தயவு செஞ்சு எல்லாத்தையும் விட்ருவோமா? எவ்ளோ நாளா உங்கள நான் கெஞ்சிக்கிட்டுருக்கேன். இன்னைக்கு எனக்கு வேணும்!”

அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.

“கொழந்த மாதிரி பண்ணிக்கறே அரவிந்த்”

“விடு. கொழந்த தான். எனக்கு வேணும். இப்பவே வேணும்!”

அவள் பாட்டுக்கு எழுந்து போனாள். மாமா வருவதற்கு முன்னால் விளக்கு செட்டப் இருக்க வேண்டும். யாரும் கவனிக்கவில்லை என்கிறவரைக் காத்திருந்து இவன் பூஜையறைக்குள் நுழைந்த நிமிடம், அவனது தோளில் கைகளை போட்டுக்கொண்டு அவள் தன்னுடைய உதடுகளைத் தந்தாள். சுதாரித்துக் கொண்ட பின்னர் அவளில் சுரந்த ருசியைத் தொட்டான். விலகின போது அவள் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதுபோல எதையோ உளறினாள். முத்தம் தொடர வேண்டிய அழைப்பிருந்தது. அதைக் காட்டிவிட்டு, அவளுடைய அனுமதி அதற்கு மேலும் இருந்தது. தன்னுடைய முகத்தின் மீதிருந்த அவனது ஒருபக்கக் கரத்தை இறக்கி, முலையை பற்றிக் கொள்ள செய்தாள்.

அன்று பேசிக்கொண்டிருந்த போது அவன் அவளது மார்பைப் பற்றியபோது உண்டான தவிப்பைச் சொன்னபோது, அவள் தன்னுடைய மார்பகங்களின் பெருமை பற்றி சொன்னாள்.

இவனுக்கு முகம் சிவந்து விட்டது.

“என்ன?”

“ஒருநாள் பாக்கணும். அது மட்டும் இல்ல. எனக்கு அது வேணும்!”

“எல்லா கஷ்டத்தையும் நான் கடவுள் கிட்ட சொல்லிகிட்டுதான் இருக்கேன். அவர் இத புரிஞ்சுக்க மாட்டாரா? சான்ஸ் கெடைக்கறப்ப கண்டிப்பா தரேன், ம்ம்?”

அழுதையேற்றம் முடிந்து கல்லிடும் குன்றில் அத்தனை பேரும் சந்தித்து அழுதையில் எடுத்த கல்லைப் போட்டுவிட்ட பிறகு வெகுநேரம் உட்கார்ந்திருந்தார்கள். தாசன் பாடினான். அது ஒரு பாட்டு. “கல்லிட்டு மூடு, கல்லிட்டு மூடு, அசுரப் பிணக்குழியை. கல்லிடுங்குன்றத்தில் நன்றி சொல்லு அந்த மணிகண்டனின் வில்லுக்கு” என்கிற நான்கு வரிகள் அப்பாட்டில் உண்டு. பாட்டை கவனித்துக் கொண்டு இப்போது சுற்றிலும் கொஞ்சம் சாமிமார் கூட்டமிருந்தது. பாட்டு முடிந்து, பீடிக்கட்டை எடுத்ததும் பலரும் விலகினார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றுக்கு இரண்டு பீடி புகைத்தார்கள். பிஸ்கெட்டுகள் சாப்பிட்டார்கள். கௌதமும், ஜார்ஜும் வழக்கம் போல பட்டை சாக்லேட்டுகள்.

இரண்டு

அது ஒரு மழைக்காலம்.

ஆதி தன்னுடைய அழகான ஊருக்கு வந்து சேருகிறான். எதிர்பாராத துயர்கள் சூழ்ந்து முற்றுகை போட்டதைத் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்த அவன், மூன்று வருடங்களாக மூடிக்கிடந்த தன்னுடைய வீட்டைத் திறக்கிறான். அவனைக் காட்டிலும் வயதில் குறைந்த அந்த ஊரின் இளைஞர்கள் சிலர் வந்து சேருகிறார்கள். வெளியே இறங்கிப்போக முடியாத இந்த மழைக்காலத்தை எப்படி கடப்பது என்று வரவே ஒரு நாடக ஒத்திகை துவங்குகிறது. வெண்ணிற இரவுகள். ஆமாம், தஸ்தேய்வ்ஸ்கி தான். ஆதி எழுதிய நாடகப் பிரதியில் நடிக்க பக்கத்து ஊரில் இருந்து வருகிற அபர்ணா ஒரு கூத்துக் கலைஞரின் மகள். ஒத்திகை நகர்ந்து செல்ல, செல்ல அந்த நாடகத்தின் நிகழ்வுகள் அனைத்தும், நிஜத்திலேயும் நடக்கிறது. மழைக்காலம் முடிந்து வெயில் வர, நாடகம் நடத்தப்பட்டு அது முடியும் நேரத்தில் அபர்ணாவின் முறைப்பையன், முழ்கிக் கொண்டிருந்த அவளுடைய துயர்களில் இருந்து எழுப்பித் தூக்கிவிட வருகிறான். அபர்ணா ஆதியிடம் இறுதிவிடை வாங்கிக்கொண்டு செல்லுகிறாள்.

மறுபடியும் வீட்டைப் பூட்டிவிட்டு ஆதி அங்கிருந்து வெளியேறிச் செல்லுகிறான்.

இதுதான் தாசன் சொல்லி வந்த அவனுடைய திரைக்கதை.

அரவிந்துக்கு கொஞ்ச நேரம் எந்த அவஸ்தைகளும் இல்லாமல் நேரம் போயிற்று. தன்னை மறந்து கேட்ட மாதிரி இருந்தது. அதிலும், பெண்பிள்ளைகள் இருக்கிற அபர்ணாவின் வீட்டில் கலைஞனை போஷிக்கிறோம் என்கிற சாக்கில் நடக்கிற அத்துமீறல்கள் அந்த கூத்துக் கலைஞனைப் போட்டுப் பிழிகிறது. நாடகங்களில் பெண் வேஷங்கள் அணிந்து தன்னுடைய கலை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இக்கதையில் தன்னுடைய ஆடைகளைக் களைந்தவாறே அபயம் கிருஷ்ணா என்றவாறே தெருக்களில் ஓடுகிறார். மனநல விடுதியிலும் கூட கம்பிகளுக்குப் பின்னால் அவர் நிர்வாணமாகவே இருக்கிறார். தாசனும், அரவிந்தும் இக்காட்சிகள் எப்படி எடுக்கப்பட வேண்டுமென்பதைத் தங்களையறியாமல் பேசினார்கள்.

கரி மலை ஏற்றம் அது. ஏறக்குறைய மலையின் உச்சிப்பகுதி. டார்ச்சை அடித்துக் கொண்டு தாசனும், அரவிந்தும் வெகு சகஜமாக கதைபேசிக் கொண்டு நடந்த பாதை அப்போதைக்கு சமதளமாகவே இருந்தது. அதனால் குளிரவும் செய்தது. ஒருவருடைய மூச்சொலி மற்றவருக்குக் கேட்டது. பாதங்களில் பழக்கம் நேர்ந்து இப்போது யாருக்கும் வலி தெரியவில்லை என்றாகி விட்டது. மற்றவர்கள் காத்திருப்பார்கள் என்கிற எண்ணத்தால், வேகமாகவே நடந்தார்கள். முன்பு யானை என்று திடுக்கிட்டது மாதிரி, வழியை மறித்துக்கொண்டு என்னவோ இருந்தது. கரடியா என்று கேட்டான் தாசன். இவனுக்குத் தெரியவில்லை. இருவரும் நின்றார்கள். டார்ச் அடிக்கலாமா என்று தெரியவில்லை. ஓரளவுக்கு இருள் பழகிய பிறகு அந்த உருவத்தின் முனகல் கேட்டார்கள். அது ஐயப்பனை வேண்டி விளிக்கிற விளி தான். மெல்ல நெருங்க, நெருங்க ஒரு ஆள் தலையில் இருமுடி வைத்துக் கொண்டு குத்தவைத்து உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. பக்கத்தில் நெருங்கிப் பார்த்தால் அவன் ஒரு இளைஞன் தான். தலை நிமிராமல் இவர்கள் நடப்பதற்கு கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு, அவன் பாட்டுக்கு சொன்னதை சொல்லிக் கொண்டிருந்தான்.

அரவிந்த் “என்ன விஷயம் சாமி? ஒடம்பு சரியில்லையா?” என்று கேட்டான். அவன் இருவரையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

“சொல்லுங்க. என்ன ஆச்சு?”

“நடக்க முடியல சாமி. கூட வந்தவங்க விட்டுட்டுப் போயிட்டாங்க!”

“அவங்க எங்கயாவது இருந்து உங்களுக்கு காத்துகிட்டிருப்பாங்க . கைத்தாங்கலா இருந்து நாங்க கூட்டிக்கிட்டுப் போறோம். வர்றீங்களா?”

அவன் இல்லையென்று தலையசைத்தான். “என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. காலு ரெண்டும் செத்துப் போச்சி.”

“இது காடு. இங்க எல்லாம் இப்படி தனியா இருக்கக் கூடாது!”

“தெரியும். என் விதி இதுதான். செத்துப் போறேன். நீங்க போங்க!”

தாசன் தன்னுடைய இருமுடியை இறக்க, அரவிந்தும் இறக்கினான். அதை ஒரு ஓரமாக வைத்தார்கள். “சாமி, நீங்க ஏன் உங்க முடியை ஏறக்கல?”

“குருசாமி போயிட்டாரு. நானே எப்டி ஏறக்கறது? நான் கன்னி சாமியாச்சே?”

தாசன் அதை இறக்கி வைத்ததும் அவன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். “சரியா, நல்லா கால நீட்டி உக்காருங்க!”

மூவரும் ஒரே மாதிரி அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

அரவிந்த் அவனுக்கு முதலில் கொஞ்சம் குளுக்கோஸ் கொடுத்தான்.

அவனாக அப்புறம் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டான்.

தாசனும் அரவிந்தும் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

“எங்க இருந்து வர்றீங்க?”

அவனுடைய ஊர் பெங்களூர். பெயர் கண்ணன். அப்பா அம்மா தம்பி தங்கை மட்டுமல்ல. சமீபத்தில் திருமணமாகி ஒரு குழந்தை கூட இருக்கிறது. ஓசூரில் வேலை. எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற சுரத்தில்லாமல் தன் பாட்டுக்கு இருக்கிறவன் தான். தனக்குள் இருக்கிற கடவுள் பக்தி என்னவென்றே அவனுக்கு தெரியாது. கற்பூரத்தட்டை நீட்டினால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது தெரியும். எதையும் லட்சியமாகக் கொள்கிற மனப்பாங்கு இல்லை. வேலை செய்கிற கம்பெனியில் இவனைக் காட்டிலும் பாந்தமான சந்திரன் என்கிற நபரோடு ஒருவிதமான தோழமை இருந்திருக்கிறது. வேலை நேரத்தில் அவரைக் கைதுசெய்ய ஒருநாள் போலீஸ் வந்தது. எல்லோரும் வேடிக்கைப் பார்த்திருக்க, அவரைக் கை விலங்கிட்டு அழைத்து சென்றார்கள். பிரமித்துப் போன முகத்துடன் அவர், “நான் ஒரு தப்பும் செய்யலையே சார்?” என்று சொல்லியபடியே அவர்களுடன் சென்றார். கம்பபெனியில் இருந்து கண்ணனுடன் செல்வாக்கான ஓரிருவரும் ஓடியிருக்கின்றனர். ஓடினய வேகத்தில் திரும்பி வரவும் வேண்டியதாயிற்று. சந்திரன் மேஜராகக் கூட இல்லாத தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மகளே தன்னுடைய பள்ளியில் சொல்லி அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் மூலமாக போலீசுக்கு சொல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

கண்ணனுக்கு தலை சுழன்றவாறு இருந்திருக்கிறது.

அவனுக்கு அந்தக் குழந்தையைத் தெரியும், எந்த நேரமும் சந்திரன் வாய்விட்டு மனம்விட்டு உரத்த குரலில் பேசுவதாக இருந்தால், அவளைப் பற்றி மட்டுமே இடைவிடாமல் பேசிக்கொண்டே இருப்பார். அவருடைய பேச்சால் கண்ணனுக்கே கூட அவள்மீது இனம் தெரியாத பாசம் தோன்றியிருக்கிறது. என்ன மாதிரி உலகம் இது, என்ன மாதிரி மனிதர்கள்? கண்ணனுக்கு காமத்தின் விஸ்வரூபம் பற்றி என்ன யோசித்தும் பிடிபடவில்லை. சந்திரனின் குழந்தை போன்ற முகம் நினைவில் வரும்போதெல்லாம் சீ என்று வந்தது. மற்றும் கடவுளே என்றும் வந்தது.

சந்திரனின் மனைவி யாரோ ஒரு வக்கீலை வைத்துக்கொண்டு முட்டி மோதுவதாகச் சொன்னார்கள்.

அது பற்றிய குழப்பம் வரும்போது, அந்தப் பெண்மணியே கண்ணனுக்குப் போன் செய்தாள்.

“நீங்க கூட அவரை தப்பா நெனச்சுகிட்டீங்களா?”

“இல்ல. நான் வந்து…”

“அவரைப் பாக்கப் போவும் போதேல்லாம், அவர் என்ன அதையே தான் கேட்டார். கண்ணன் என்ன தப்பாவா நெனச்சுட்டானான்னு கேட்டு கேட்டு மாளல அவருக்கு. ஒருதடவை அவரைப் போயி பாக்கறீங்களா?”

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தது.

முதலில் அந்தப் பெண் தனது அம்மாவிடம் நான் தவறு செய்து விட்டேன் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறாள். அப்பா என்னை எதுவும் செய்யவில்லை. அப்புறம் என்ன தான் நடந்தது? வயது சிறிதாக இருந்தாலும் அது சூட்டிகையான பெண். மிகவும் பாய்ச்சல் கொண்டவள். பாட்டு, டான்ஸ், ஓவியம், கதை, எழுத்து என்று எல்லா பக்கமும் ஒரு விதமான பதட்டத்துடன் ஓடிக்கொண்டேயிருப்பாள். அவளுடைய உணர்வுகளும் அதே வேகத்துடன் தானிருந்தன. அப்பா அம்மா அண்ணனைக் கொண்டாடிக் கொண்டிருந்த எழுச்சியாகட்டும், அல்லது அந்த ஊராருடன் அவள் வைத்திருந்த வயதை மீறின அக்கறைகளாகட்டும் சகலருக்கும் அது ஒரு வியப்பூட்டும் காரியமாகவேத்தான் எப்போதுமிருந்தது. கொஞ்சம் சினிமாவில் வருவது போன்ற கதாநாயகியாக தன்னைக் கற்பிதம் செய்துகொள்கிற பொறியில் சிக்கும்போது, அடுத்தது என்ன, யாரையாவது ஒரு பையனைக் காதலிக்க வேண்டும் அல்லவா? ஒரு பைங்கிளிக் கதை காதலுக்கு அந்தப் பையன் சரியாகவே இருந்திருப்பான். நூற்றுக்கணக்கான கடிதங்கள், சந்துமுனை சந்திப்பு, இன்னபிற. சந்திரன் ஒருநாள் போயிருந்த கல்யாண வீட்டில் மனைவி மகனை விட்டுவிட்டு ஓசூருக்குக் கிளம்ப பெட்டி எடுக்க வந்தால், பையன் வீட்டின் முற்றத்தில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு காப்பி குடித்துக் கொண்டிருந்தான். இவள் அவன் குடிக்கிற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சந்திரன் மிக சாதாரணமாக “உன் ஸ்கூல் பிரெண்டா?” என்று கேட்டுவிட்டு, பெட்டியை எடுக்க உள்ளே போகும்போது, அவள் இதை சொன்னாள். “ஐயோ, இல்லப்பா… நாங்க லவ்வர்ஸ். பியுச்சர்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோம்!”

சந்திரன் தன்னுடைய மகளிடம் உனக்கு அதற்கு உரிய வயது வரவில்லை என்பதைப் புரிய வைக்க முயன்றான்.

அவள் யார் நினைத்தாலும் எங்கள் காதலைத் தடுக்க முடியாது என்றாள்.

ஒருநாள் எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து டிவி-யில் ஏக் துஜே கேலியே படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் அவனுடைய போட்டோவை நெருப்பு வைத்துக் கொளுத்தி, அதைக் காப்பியில் கலந்து குடித்துவிட்டு எல்லோரையும் பார்த்தாள். மற்றொரு நாள் தோட்டத்தில் இருந்த அவளைப் பார்க்க வந்த பல தோழிகளும் ஆவலுடன் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நடத்தை எல்லாம் யாரோ சிறைக்கைதியைப் பார்க்க வந்தது போல இருந்தது. சந்திரனை அட, கொடுமைக்காரா என்பது போல வெறித்துக்கொண்டு போனார்கள். அந்தப் பையனும் ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டிக்கொண்டு வீடு இருக்கிற சாலையில் வந்துபோய் கொண்டிருந்தார்கள். பதினான்கு வயதுகூட ஆகாத அவளுக்கு சந்திரன் வாய் திறப்பதே பிடிக்கவில்லை. இதற்கு நடுவே இந்தச் சம்பவம் முறுகினால், ஒரு சாதிக்கலவரமே கூட நடப்பதற்கு வாய்ப்பிருந்தது. கோபம் தாங்காமல் “நான் அந்தப் பையனை வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்கு போவப் போறேன். அப்பதான் நீ அடங்குவே!” என்று கூறிவிட்டு சந்திரன் ஓசூருக்கு கிளம்பி வந்தது தான் பிரச்சினை.

அவள் ஒரு பள்ளிநேரத்தில், தன்னுடைய அப்பாவினால் கொல்லப்படப் போகிற காதலனை நினைத்துக் கண்ணீர் உகுத்திருக்கிறாள். எல்லோரும் என்னவென்று கேட்டு உலுக்கியபோது அவளுக்கு தோன்றிய ஒரு உபாயம் தான் இது.

இதுவும் ஒரு சினிமாவில் பார்த்தது தான்.

சந்திரன் ஜெயிலில் இருந்தார். ஜாமீனில் வந்தார். மகளே எழுதிக் கொடுத்திருந்தாலும், கோர்ட் கேசை முடிக்க சில சம்பிரதாயங்கள் இருக்கவே, சந்திரன் கம்பனி பக்கம் இருந்து வீட்டுக்குப் போகவில்லை. போகக்கூடாது. எல்லா நேரமும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டார். விடுமுறைகளில் தூங்கியவாறு இருந்தார். எல்லோருக்கும் ஒருவிதமாக உண்மை புரிந்து அவரை வெறுப்பது நிறுத்தியவரை அவர் கடந்த அவமானங்கள் சொல்லத் தகுந்ததில்லை.

கண்ணன் கேட்டிருக்கிறான்.

எப்படி இவைகளையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வது?

“கம்பெனிக்கு வந்து என்ன கொண்டு போனதில இருந்து, நான் திரும்பி வர்ற வரைக்கும் போலீசு, கோர்ட்டு, ஜெயிலு எங்கயுமே, யாருமே என்னை அவமரியாதையா நடத்தினது இல்ல. அவங்க கேள்விகளுக்கு பதில்கூட சொன்னது இல்ல. என்னோட மகளை நெனைச்சாலே எனக்கு கண்ணீர் மட்டும் தான் வரும்!”

மறுபடியும் சொன்னார்.

“ஆமா, கண்ணா. அந்தக் கண்ணீர அத்தன பேரும் புரிஞ்சிகிட்டாங்க. கடவுள் ஏன் கூடவே இருந்தான். ஒவ்வொரு நிமிஷமும் ஏன் கூடவே இருந்து, என்ன காப்பாத்திகிட்டே இருந்தான்!”

சந்திரன் சொன்னதில் கண்ணனுக்கு அதிகமாக உறைத்தது இந்த விஷயம் தான். கடவுள் என்பதை புதிதாக சிந்திக்கத் தலைப்படுவதால், அந்தப் புதிர் அவிழ்ந்து முடியாமல் திரௌபதி சேலை போல வந்து கொண்டேயிருந்தது. இந்தப் பயணமே கூட அவனுக்கு இதில் ஒருபகுதி தான். எவ்வளவோ வாழ்க்கைப் பாடுகளில் இந்தக் குழந்தைகளும், முதியோர்களும் எத்தனை நம்பிக்கைகளுடன் இப்படி மலையேறிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற நெகிழ்வில் தளர்ந்து போனேன் என்பதாகச் சொன்னான். எனக்கு அது வரவே இல்லை. அது வளர்ந்து, வளர்ந்து ஒரு கட்டத்தில் இனி நடக்க முடியாது என்று பட்டுவிட்டது என்றான்.

“கொழந்தைங்க, முதியோர்னு சொன்னீங்க இல்ல, அவங்க கடவுளை உங்களாலே புரிஞ்சுக்க முடியாது. உங்க நண்பர் சந்திரன் இருக்காரே, அவரோட கடவுளையும் தான்!” என்றான் தாசன். “கடவுளை ஒழிக்க நெனக்கறவங்க எல்லாம் கூட போட்டு தள்ளிகிட்டு இருக்கறது அவங்கவங்க கடவுள்களைத்தான்!”

“ஓஹோ?” என்றான் கண்ணன்.

அரவிந்த் கொட்டிய குளுக்கோசை உள்ளங்கையில் வாங்கி ஆசையுடன் சப்பிக் கொண்டிருந்தான்.

சிறுநீர் கழிக்க வேண்டிய எண்ணம் முட்டியதும், அரவிந்த் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது வாரிப்போட்டது. மனசு மட்டும் என்னவோ ஒரு கூச்சல் போட்டு விட்டது. இவர்கள் நடந்து வந்த பாதையில் ஒருபக்கம் மரங்கள் நெடுக வளர்ந்து நின்று வானம் காட்டினாலும் அடுத்த பக்கத்தில் புதர்கள் இருந்தன. ஒருவேளை யானைகள் இறங்கக் கூடிய சவுக்கு வாயில் வழியாக பெரும் பள்ளத்தாக்கு இருப்பதை அரவிந்த் பயத்துடன் பார்த்தான். அடிவாரமெங்கும் பரந்து விரிந்த மரங்களின் தலைப்பகுதிகள் தெரிந்தன. காற்று அவைகள் மீது கடந்து சென்றதில் நிலா வெளிச்சம் அலைகளைப் போல ஓடிக்கொண்டிருந்தது. இதென்ன சொர்ண அலங்காரமா? அவனால் நிலாவையும் அடிவாரத்தின் இடைவிடாத தளுக்கலையும் பார்க்க முடியாமல் மூச்சுத் திணறியது. மரணபயம் போல என்னவோ வந்து நெருக்கியதில், மற்ற இருவரிடமும் கிளம்பலாம் என்கிற சைகை செய்து, தன்னுடைய கட்டை எடுத்து தலையில் வைத்துக் கொண்டான். அவனுடைய முகத்தை அவர்கள் கவனிக்காத விதத்தில் திரும்பி நின்று கொண்டான். தாசன் மற்றவனுக்கு கட்டை எடுத்து தலையில் வைத்துவிட்டு வாயில் போட்டு சப்பிக்கொண்டு வர ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தான். ஒரு சிறிய இறக்கம் முடிந்து, நான்கு வளைவுகள் முடிவதற்குள், கண்ணனோடு வந்தவர்கள் கண்ணனுக்காக காத்திருந்தார்கள்.

தாசனும் அரவிந்தும் ஒரு கட்டத்தில் பேச்சில்லாமல் நடந்தார்கள்.

அரவிந்துக்கு மனதில் திடீர் என்று தாக்கிய பயத்தின் மிச்சம் இருந்து கொண்டிருந்தது.

காடு எதற்கு தனக்குத்தானே ஒரு திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறது?

தன்னில் உறையும் ஒரு கடவுளை சந்தோஷப்படுத்துகிறதா?

தாசனின் கடவுள் பற்றிய அபிப்ராயங்களை தொகுத்துக் கொள்ள முயன்றான். பழக்கமான காலத்தில் இருந்தே அவன் பல கோணங்களில் பேசியிருக்கிறான். எல்லாம் ஆங்காங்கே கிடந்து தட்டுப்படுகின்றன. சில சமயங்களில் அதிர வைப்பதும், சில நேரங்களில் பேச்சுக்கு அந்தப் பக்கம் தள்ளி விடுவதும் சகஜமாக நடக்கும். யாரும் இதை எல்லாம் பொருட்படுத்தக் கூடியவைகள் தான் என்று கருதுவது கிடையாது.

தாசனுக்குமே அதில் எவ்வளவு தூரம் நம்பிக்கையிருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் இவ்விஷயங்களில் வாதித்து ஜெயிக்க விரும்பி ஒரு நண்பன் பாட்டில்களோடு வருவான். அத்தனை பேரும் படுக்கைக்கு போன பின்னரும் அவர்கள் இருவரும் கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள். தாசன் அந்த நண்பன் இல்லாத நேரங்களில் எங்களிடம் அவன் சொல்வது எல்லாம் தான் உண்மை, நான் சும்மா தர்க்கத்துக்கு பேசிக் கொண்டிருந்தேன் என்பான். எனது கடவுளை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமில்லையா என்பான். இன்னொரு ரகசியம் இருக்கிறது, அவன் எதிர்காலத்தில் மிகப்பெரிய பக்தனாக இருப்பான், அப்படி நடக்காவிட்டால் நான் எனது தலையை அறுத்துக் கொள்கிறேன் என்றான் ஒருமுறை ததும்பி வழிந்த போதையில்.

பொழுது விடிந்தவாறு வந்து காடு மினுங்கியது.

கரிமலைக் காட்டில் மழை பெய்திருக்க வேண்டும்.

யானைகள் இருந்து எழுந்து போன தடங்களைப் பார்க்க முடிந்தது.

ரூபனும் பிரகாஷும் கறுப்பு காப்பிப் போடுவதற்கு சுடுநீர் கொதிக்க வைத்தார்கள். மற்ற அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க, குமாரை வெறுப்பேற்ற கவுதம் வசைப்பாடல் பாடிக் கொண்டிருந்தான். வெயில் எட்டிப்பார்ப்பதில் எல்லோர் மீதும் ஆவி பறந்தது. வாயைத் திறந்து ஊதிக் கொண்டிருந்த குமார் முகம் முழுக்க புன்னகையும், சந்தோஷமும் தான்.

சில சொற்களுக்கு எல்லாம் அதிர்ந்து, தன்னையறியாமல் ஐயப்பா என்றான். அது முடிந்து ஜார்ஜ் அல்லேலூயா என்பதின் அரும்சொற்பொருள் கூற அது பயங்கரமாக இருந்தது. சக்கரை அதிகமாகக் கலந்த காப்பி. கடித்துக் கொள்ளுவதற்கு பப்படம் சுட்டார்கள். கரிமலை இறக்கம் முடியும்போது தான் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும் என்பதால் நன்றாகவே சாப்பிட்டார்கள். அரவிந்த் தனது முலைகளைப் பற்றி அருணா பெருமை கொண்டு சொல்லும் சொற்களில் நகர்ந்து அவனுடைய மனம் பதைத்துக் கொண்டிருந்தது. இந்த நிமிடம் இதுபற்றி நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுவது நடக்கவேயில்லை. அவளுக்குப் பல தோழிகள், சொந்தக்கார பெண்கள் இருக்கிறார்கள். பலரும் ஆடையுடுத்திக் கொள்ளும் வேளையிலோ, குழந்தைகளுக்கு பால் புகட்டுகிற நேரத்திலோ பலமுறையும் பல பெண்களின் மார்புகளை அவள் பார்த்திருக்கிறாள். “செல்லா, நீ என்ன தப்பா நெனச்சுக்க மாட்ட தானே? கடவுள் சாட்சியா சொல்றேன், என் மொலைங்க லைட் மஞ்சள் கலர் மேங்கோஸ் மாதிரி அவ்ளோ தெறுப்பா இருக்கும். காம்பஸ் போட்டு வரைஞ்சா மாதிரி லைட் பிரவுன் சர்க்கிள்சா, அதுக்குள்ளே நிப்பிள்ஸ் மீடியம் ஷேப், சாக்லேட் பிரௌனி. இவ்ளோ அழகா யார்தும் நான் பாத்ததே இல்ல, தெரியுமா? ஒருநாள் நீயும் பாக்கத்தானே போறே?”

இப்போது நினைத்தாலும், அந்தச் சொற்களினால் பீதியுடன் காமம் எழும்புவது உண்மை தான், மறுக்க ஒன்றும் கிடையாது. ஆனால் அவனுக்கு அதில் ஒரு பெருமை துருத்தும். எவ்வளவு நெருக்கத்தில், எவ்வளவு அந்தரங்கமாக இவைகள் சொல்லப்பட்டன. வேறுயாரும் அறியாமல் நமக்கே நமக்கு என்று இருக்கிற ரகசியம். அரவிந்த் இந்த பெருமிதங்களினால் மேலும், மேலும் வதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சொல்ல வேண்டும்.

“அரவிந்த்!”

“ம்!”

“கவனிக்கறியா, இல்லையா?”

“கவனிக்கறேம்பா. நீ ஸ்டார்ட் பண்னு!”

“அது ஒரு கடைக்கோடி கிராமம்னு வெச்சுக்கலாம். பழனிக்கு சராசரிப் பொழைப்பு. ரெண்டு தங்கச்சிகளுக்கு கல்யாணம் காட்சி செய்து முடியறப்ப, அவன் மனசுல கல்யாண ஆசையே இல்ல. இத்தனைக்கும் அவன் பொம்பளை சொகம் பாக்காதவன். அப்டியே வாழ்ந்துட்டுப் போயிடலாம்னு நெனச்சுகிட்டு இருந்தப்ப, ரொம்ப தற்செயலா அவன் அந்தப் பொண்ண பாக்கறான். உடனடியா ஒரு ஆவேசத்தோட அவளை கல்யாணம் பண்றான். அந்தப் பொண்ணு யாமினி ரொம்பவே சாதாரணப் பொண்ணு. ஆனா என்னதான் அவளை ஆண்டு அனுபவிச்சாலும் அவகிட்ட பழனிக்கு ஒரு மரியாத இருக்கு. ஒரு தினுசான பயம்! அவளை அவனால சாதாரணப் பொண்ணா நெனைக்க முடியல. அவ எவ்ளோ தடுத்தும், அவளை வசதியோட வெச்சுக்க ஆசைப்பட்டு வெளிநாடு போறான். எப்பவும் பழநியைப் பத்தியே பேசிகிட்டு இருக்கிற, பழனியால போஷிக்கப்பட்ட குமார் யாமினி கர்ப்பமா இருக்கறதால உதவி செஞ்சு விட்டதெல்லாம் சரி, அவளை அவனால விட்டு விலக முடியல. இவனுக்கு முன்னால அவளுக்கு அவன் மேல வாஞ்சை விழுந்துருச்சி. ஒருநாள் இந்த லவ்வர்சை அவங்க வீட்டுக்குள்ள வெச்சு ஊர் பூட்டு போட்டுடறாங்க. பழனி வர்றான். அவளை ஆறுதல் செஞ்சு தட்டிக் குடுத்து அவளுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சு, போனது போவட்டும், அவனை மறந்துரு ன்னு சொல்றான். அவள் சரின்னுதான் சொல்றா. அதில அழுத்தம் இல்ல. பழனிக்கு குமாரை கொல்றதைத் தவிர வேறு வழியில்ல. மரணம் ரெண்டு பேருக்குமே பக்கத்தில வந்து வந்து போவுது.”

தாசன் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான்.

யாரும் ஒன்றும் பேசவில்லை.

“பயங்கரமா அடிச்சுக்கறவங்க ஒரு புள்ளில சமாதானமாயிடறாங்க. மனசுவிட்டு பேசறாங்க. ரெண்டு பேரில் யாருக்குமே முழுசா எட்டாம தள்ளி நின்னு ஆட்டிப்படைக்கிற அவளோட மோகினி வேலைகளை பேச பேச அவ பாட்டுக்கு விஸ்வரூபம் எடுக்கறதை ரெண்டு பெரும் பயப்படறாங்க. அவளை ரெண்டு பேருமா சேந்து கொல்றதா முடிவு பண்றாங்க!”

“இதுதான் கிளைமாக்ஸா? என்கிறான் ராபர்ட்.

“அப்படி நெனைச்சு தான் எழுத ஆரம்பிச்சேன். திரைக்கதை அதில நிக்கல. அவங்க மூனு பேருமா சேந்து வாழறாங்க. புள்ளக் குட்டிங்களோட. சந்தோஷமா.!”

மூன்று

அந்த வருடம் தான் கடைசி. பின்னால் வந்த காலங்களில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் யாரையும் சந்நிதான வட்டாரத்தில் அனுமதிப்பதில்லை. இவர்கள் அன்று இரவு பக்கவாட்டில் உள்ள படிக்கட்டுகள் வழியாக ஏறிச்சென்று மூடிகிடந்த சந்நிதானத்துக்கு அருகே, அதன் கதவுகளைப் பார்த்துக் கொண்டு பனிரெண்டு மணி வரையில் காத்திருந்தார்கள். அந்த நேரம் வந்ததும் ஒரு ஆத்மார்த்தமான சரண விளியை முடித்துக் கொண்டு ரூபனைப் பாட வைத்தார்கள். அந்த இரவு, அந்த இடம், அந்த குளிர், அந்த பக்தி எல்லாமே ஒருசேரச் சுற்றி வளைத்து முற்றுகைப் போட்டதில் அனைவருக்குமே கண்ணீர் பெருகியது. அது முடிந்து ஒரு நாடன் ஹோட்டலில் அனைவரும் மசாலா தோசை சாப்பிடும்போது கூட, அதன் சந்தோஷங்கள் மிச்சமிருந்தன.

மறுநாள் மாலை வேளையில் சந்நிதானம் திறக்கப்பட்டது.

கூட்டம் என்று வந்துவிட்டால் அது பக்தர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? மூர்க்கம் கொண்டு தள்ளினார்கள். குழந்தைகள் பிதுங்குவதை, முதியவர்கள் அல்லல் கொள்ளுவதை யார் பார்த்தார்கள் அங்கு? எல்லாமே பலமுள்ளவனின் ராஜ்ஜியம் தான். எப்படியோ வரிசையில் நின்று முன்னேறி சாமி தரிசனம் பார்த்தார்கள், அதைக்கூட தாசன் சரிவரப் பார்க்க முடியாமல் எங்கே என்று தேடுவதற்குள் போலீசார் பிடித்துத் தள்ளி விட்டார்கள் என்றான். அதனால் பரவாயில்லை என்று தன் பாட்டுக்கு போனான். கவுதம், ஜார்ஜ், குமார் எல்லாம் இவ்விஷயத்தில் படு கண்டிப்பு. இத்தனை நாள் விரதமிருந்து, இத்தனை கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, காடுமேடுகள் தாண்டி வந்துவிட்டு தரிசனம் கிடைக்காமல் போவதா? போலீசாரைத் தள்ளிவிட்டு, ஏமாற்றிக் கொண்டு புகுந்து ஒருமுறைக்கு இருமுறை பார்த்துவிட்டு வந்து தாசனைத் தங்களுடன் வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் அலட்டிக் கொள்ளவில்லை. விடுங்கடா டேய் என்றான்.

பம்பையில் இறங்கி, பஸ் பிடித்து இடுக்கி வந்து சேர்ந்து அறையை போட்டுவிட்டு, குளித்து ஒரு கோவிலுக்கு சென்று மாலையைக் கழட்டினார்கள்.

பாட்டில்களை எல்லாம் வாங்கிக் கொண்டு பார்ட்டிக்கு தயாராகும் போது அரவிந்த் ஹோட்டல் போனில் தனது வீட்டுக்குப் பேசினான். பரஸ்பரம் குசல விசாரிப்புகளுக்கு அப்புறம், கோவில் விசேஷங்களை எல்லாம் பேசி முடித்தற்கு அப்புறம் ஒரு செய்தி சொன்னார்கள். அருணாவும், வேணுவும் திருமணம் செய்து கொண்டார்கள். வேணுவுடன், குழந்தையோடு அருணாவும் லிபியாவிற்குப் போகிறாள்.

அடுத்த வருடம் விரத காலம் வருவதற்குள் பலருக்கும் திருமணமாகி விட்டது.

விளையாட்டாக ஆறு ஏழு வருடங்கள் பயணம் போன தொடர்ச்சி அறுந்து போயிற்று.

எப்படியோ ஆறு மாதத்திற்குள் உடைந்திருந்த அரவிந்த் தேறிக் கொண்டான். அவனுடைய எழுத்தில் ஆழம் கூடியதை எல்லோருமே அறிந்தார்கள். தாசன் அரவிந்திடம் அருணா எதற்காக உன்னை கைவிட்டுச் சென்று, ஒரு பாதுகாப்பான வாழ்வில் தன்னை ஒளித்துக் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு லாஜிக் சொன்னான். அது ஒரு மூன்றாம் தர சினிமா போல இருந்தாலும் எல்லோருக்கும் உவப்பானதாக இருந்தது. ஒரு கதாநாயகி, கதாநாயகனின் எதிர்கால வாழ்வின் பொருட்டு தியாகம் செய்வது அது. அப்படிப்பட்ட சமாதானங்கள் சரியானவை. அல்லது சரியானவை தான் நம்மில் சமாதானங்களாக வருகின்றன. அப்புறம், அரவிந்தின் இந்தக் காதல் கதையை தாசன் எழுதப் போவதாக சொன்னான்.

அது ஒரு பெரிய நாவல்.

அதன் முதல் பகுதி, வேணுவிற்கும், அருணாவிற்கும் உண்டாகிற சமூக பந்தம். ஒருநாள் அவள் பணிபுரிகிற இடத்தில் அதன் முதலாளி அவளது கையைப் பிடித்து இழுக்கிறார். அவருக்கு சம்மதிக்காமல் தெருவிற்கு வந்துவிட்ட அவள் அந்தத் தருணத்தில் யார்? ஒரு அபலையல்லவா? வேணு ஒரு பெரிய பாதுகாப்பு அரண். அருணா காலாகாலத்திற்கும் சௌகர்யமாக ஏச்சுபேச்சு கேட்காமல், குழந்தையின் எதிர்காலத்தை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக வாழ முடியும். வேணுவிற்கு அவள் போற்றிக் கொண்டு வந்த அரவிந்தின் காதல் பற்றி எதுவும் தெரியாது. அவள் அவனை ஒரு தம்பியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறாள்.

அடுத்த பகுதி, அரவிந்தின் காதல் வலி. அவனுக்கு வேணுவின் மீது சிறிய சந்தேகம் இருந்தாலும், அதைக் கேட்டதற்கு கதறிக் கண்ணீர் பெருக்கி அவனை நொறுக்கி விட்டு, அவர் ஒரு அண்ணனைப் போல என்று அடித்துக் கூறி விடுகிறாள். ஆனால் அரவிந்த் அதைச் சரியாக நம்பவில்லை.

மூன்றாம் பகுதி, இறுதி. லிபியா வாழ்கை விசேஷமாகப் போனாலும் அது சிலகாலம் தான். அருணாவிற்கு இன்னொரு குழந்தை உண்டாகி அதைப் பராமரித்து வந்தாலும், அவளுக்கு முன்னால் ஒரு வெறுமையின் சுவர் எப்போதும் நிற்கிறது. வாழ்க்கை சலித்து விட்டது என்பதை மட்டுமே சொல்ல வேண்டும். வழக்கமான ஒரு புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு அப்புறம் அவள் தன்னை முடித்துக் கொள்ளப் போகும்போது ஒரு போன் அடிக்கிறது. நல்லா இருக்கீங்களா? கேட்கிறான் அரவிந்த். வற்றிப் போயிருந்த மொத்த ரத்தமும் ஊறிக்கொண்டு புதிதாக ஓடி, முகம் மலர்ந்து வெடிக்கிறாள். “நீ என்ன மறக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்!”

தாசன் கதை சொல்லுவது புதியது அல்ல.

அவன் அவைகளை எழுதப் போகிறேன் என்பதும் அப்படித்தான்.

அரவிந்த் அதை எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் சினிமாவில் பிசியாக இருந்தான். பலபேரைப் பார்த்து உறவுகள் கொண்டதில், பெண் மோகம் குறைந்து கொண்டு வந்துவிட்டது. அருணாவை இழந்தது பற்றி பல கோணங்களிலும் திருப்தியே மேவியது. இருந்தாலும் ஒருநாள் தாசனின் கதை உண்டாக்கின ஒருவிதமான குறுகுறுப்பில் தொலைபேசி எண்ணைத் துழாவி அறிந்து அதற்கு தொடர்பு கொண்டபோது அருணாவே எடுத்தாள்.

“தெய்வமே!” என்று ஒரு சொல் சொன்ன மாதிரி இருந்தது.

பிறகு ஒன்றுமில்லை.

***


மணி எம்.கே. மணி – இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள் உள்ளிட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular