Wednesday, October 9, 2024

தெய்வங்கள்

நந்தகுமார்

னக்கு தெரிகிறதா, அது போதி சத்வன் தான்.

ஆனால் மழு இல்லை. மலரும் இல்லை. வெறுமனே அமர்ந்திருக்கிறான். அபய ஹஸ்தம் கூட இல்லை. அவன் இளைஞனாகவும் ஆகியிருக்கவில்லை. பாலகன் தான். ஆனால் பால்யம் தாண்டிய பருவம் அவனது உடலில் தெரிகிறது. அங்கு உள்ளது போலவுமில்லை. மிகப்பெரிய ஒரு ஒற்றை மனிதனின் முழு உருவத்தை வடித்திருக்கிறார்கள்.

சாஸ்தாக்கள் பெரும்பாலும் காவுகளில் தான் இருக்க வாய்ப்புண்டு. இந்த இடமும் ஒருகாவுதான். ஆனால் தரைக்கு மேலே உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் வழிப்பாதையில் தான் பழையாறு சென்றிருக்கக்கூடும். தடிமாடன் இதற்கு புறத்தே தான் இருக்கிறான். இதன் பழைய உருவத்தை நீ கண்டிருக்கிறாயா?

ஆம். இவன் மிக புதுப்பிக்கப்பட்ட உருவம் போல இருக்கிறான். பழைய உருவம் அந்த பொந்தந்தடியைத் தூக்கிக்கொண்டு நிற்கும் உருவமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வெறியாட்டு இங்கு நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

ஏன் எனக்கு இன்னும் புரியவில்லை.

எதைக்கொண்டு சொல்கிறாய் இது பழைய உருவம் இல்லை என்று?

நீ இங்கு மண்டல பூஜையன்று கற்பூர ஆழி பார்க்க வரவேண்டும். திரும்ப அந்த தெய்வங்கள் உருப்பெறும் நிகழ்வு அது. ஆம். அந்த பழங்குடித்தன்மை மீளும்பொழுது அங்கு நீ இருக்க வேண்டும். வருடாவருடம் கார்த்திகை மாத முடிவில் இங்கு இருக்கும் தெய்வங்களுக்குச் சம்மந்தமற்றவர்கள் அங்கு வருகை தருவார்கள். நடுவில் எரியும் ஆழி, வான் நோக்கி நா தழலும் நெருப்பினுள் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அந்தத் தெய்வங்கள் பாதாளங்களிலிருந்து முளைத்தெழுவதைப் பார்க்கும் பொழுதுதான் எனக்குத் தோன்றியது. இந்த போதிசத்வன் மிகப் பிந்தையவன். இதனுள் காத்துக் கொண்டிருப்பது ஒரு பழைய முளை. அது இருளைப் போல இங்கும் அங்குமாய் முளைத்துக் கொண்டிருப்பது. சில நேரங்களில் அவர்கள் இந்தக் கட்டுக்களின்றி ஒட்டுமொத்தமாக அந்த ஆழியினை சுற்றி உருவெடுப்பார்கள். வெடித்துச் சிதறுவதைப் போல அதனுள்ளிருந்து வெளிவரும் வெவ்வேறு உடல்களையும் தாளங்களையும் நீ காண வேண்டும்.

முக்கியமாக இந்த நாகர் சிலைகளை நாம் எந்தக் காவிலும் காண முடியும். எப்பொழுதும் ஒரு அரசைச் சுற்றி நாகர்கள் இருக்கும். இங்கும் அங்குமாய் கருப்பனும் கருப்பியும், பின்னால் புலமாடன், புல்லுவத்தி. முக்கியமாய் இந்தச் சிலையைப் பார். இது பிரம்ம ராட்சசன். இவனையும் இங்கு அமர்த்தியிருக்கிறார்கள்.

முன்னால் பார்த்தாயென்றால் பலி பீடத்தில் நாள்பட்ட ஊன் பலியின் வாடையை இப்பொழுதும் என்னால் உணர முடிகிறது. இவன் ஒரு பழங்குடித் தெய்வம். இந்த சாஸ்தாவினுடைய பழைய சிலையை நான் பாராத வரை இதை நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அவன் அமர்ந்த நிலையிலிருக்கும் ஒரு பேருரு. போர்க்கண்களுடன் ரத்த வெறியுடன் வெறுமனே அமர்ந்திருக்கும் ஒரு ஆண். போதி சத்வனாக இவன் ஆகிய பொழுது எப்படி இருந்திருக்கும்.

ஊனற்ற தெய்வங்களிடம் இறைஞ்ச என்ன எஞ்சியிருக்கிறது. மாடன்களும் மாடத்திகளும் ஒவ்வொரு முடுக்குகளிலும் முக்குகளிலும் அமர்ந்திருந்து எல்லை பரப்பிய வனமாகத்தான் இது இருந்தது. நீ இறச்சகுளத்தில் எருக்கலங்கொண்ட சாஸ்தா கோவிலுக்குச் சென்றிருக்கிறாயா?

அங்கு பெரிய பூதத்தான் சிலை உண்டு. பொம்மை போல ஆக்கி விட்டார்கள் இப்பொழுது. அது அல்ல நான் சொல்ல வந்தது. இரு. என் மொபைலில் அந்த இமேஜ் உண்டு. இங்கு பார் இதன் மேலே இருக்கும் இந்த தேவதைச் சிலைகளைப் பார். நீ இதை எங்கோ கண்டிருக்கிறாயா?

ஏதோ சமண மலைக்குன்றில் இது போல ஒரு ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன். சித்தன்ன வாசல் ஓவியங்களில் இதேபோல ஒரு ஓவியம் மலரைப் பறிப்பது போல. அட அதேதான். இங்கு இருக்கும் போதி சத்வனின் உருவம் இதுதான். வெறிக்கண்களுடனும், தடியுடனும் நின்றிருக்கும் பேருரு. பரி வேட்டையில் நம்பிரான் விளையாட்டில் இதேபோல இங்கிருக்கும் சத்வ தெய்வம் உக்கிரமெடுப்பதைக் காணலாம்.

பெரும்பாலும் இவன் எல்லை தெய்வம் தான். அய்யனாரும் சாஸ்தாவும் ஒன்றுதான் என்று கூட சொல்வதுண்டு. ஆனால் மெல்லிய வேறுபாடு தோன்றும். இங்கிருக்கும் பாலகனைக் காணும் பொழுதெல்லாம் தோன்றுவது அது.

இவர்கள் கணத்திற்கு கணம் உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள், சாஸ்தாக்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கருப்பன் ஏன் சாஸ்தாவிற்கு காவல் தெய்வமாகிறான் என்று தோன்றியது. இவர்கள் ஆடிபிம்பம் போல. இருமைகளின் இரு கண்ணிகள். ஒன்றின் உக்கிரம் இன்னொன்றில் சாந்தமாக்கப்படுகிறதா?

ஒன்றின் பிரம்மச்சரியம் இன்னொன்றில் கட்டற்ற காமமாக உருமாறுகிறதா?

பூதத்தான் என்று சொல்லப்படும் இந்த தெய்வத்தின் சிலையைப் பார். பூதங்களின் அதிபதி. இவர்கள் எல்லாமே நம் மூதாதை வெறிகொண்டு ஆடிய நிலத்தினுள் அமிழ்ந்திருப்பது போல ஒரு மயக்கு எனக்கு தோன்றுவதுண்டு. கனவுலகங்களில் மட்டுமே சாத்தியப்படும் நிகழ். நானும் இவர்களை மூன்று சீட்டுக்காரன் போல மாற்றி மாற்றிப் போட்டு விளையாடிப் பார்க்கிறேனோ என்று தான் இப்பொழுது நினைக்கிறேன்.

இவர்கள் நம்முன் வந்தமர்ந்திருப்பது எதற்காக?

ஆராட்டு நிகழ்வில் லெட்சுமண சித்தப்பா திடீரெனக் கீழே பதுங்கி முட்டிக்கொண்டே இருந்தார். நெற்றியிலிருந்து வழிந்து கொண்டே இருந்தது குருதி. அதற்கு நேர் எதிரே இரு தெருக்கள் தள்ளி இருக்கிறது பன்றி மாடன் கோவில். நையாண்டி மேளம் முழங்கத் தொடங்கியதும் வேறொன்றாக, உண்மையில் ஒரு பன்றியைப் போலவே அவர் இருந்தார். பன்றியை நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம் என்றேன் நான். அந்த மூர்க்கம் நிறைந்த கண்கள் சந்தனக் காப்பிட்ட பின்பும் அதே உக்கிரத்துடன் அருள் பாலித்துக் கொண்டிருந்தது.

தெரியவில்லை. இதனை அறிய என்ணியது. இப்பொழுது பெரிய தவறாக விட்டது. மிகப் பெரிய சுழலினுள் திரும்பத் திரும்ப அகப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல இருக்கிறது.

முன்னால் நாம் வெளிக்கிருக்கச் செல்லும் இடம் தெரியுமல்லாவா உனக்கு. அங்கு ஒரு இசக்கி உண்டு. வெறும் மொண்ணையான கல்லிற்கு மஞ்சளைத் தடவி பாவாடை உடுத்தியிருப்பார்கள். நம் தெருவில் வீற்றிருக்கும் சந்தன மாரிக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம். காலம் காலமாய் நம் குற்ற உனர்விலிருந்து பெருகியவைதான் இந்த பெண் தெய்வங்கள் என்று தோன்றியதுண்டு. அதே நேரம் நம்மால் கணிக்க முடியாததை, அப்பாற்பட்ட ஒன்றை ஒரு தெய்வமாக நாம் மாற்றிக்கொள்ளும் பொழுது உருவாகும் ஆசுவாசம் இருக்கிறதே.

அவர்களுக்கான நாளில் அவர்களாகவே மாறுதல் மூலமாய் நாம் நிகழ்த்துவதும் அதைத்தானே. மிகப்பெரிய கடந்த காலத்தினுள்ளிருந்து வெளிவரும் ஒன்றை மெல்ல அணைத்துக் கொள்ளுதல். எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அதற்குள் நம்மை சரணிடுதல். அதன் மூலமாக அந்த காலத்தினுள் நாமும் வாழ்ந்து விடுதல். சிக்கலான கண்ணிகள் கோர்க்கப்பட்ட அந்த சங்கிலிகளின் அரண்கள் உடைபடும் பொழுது முழுக்க முழுக்க தெய்வமாக உருமாறி விடும் ஒரு அதிமனிதனை நான் பார்க்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. சாத்தியப்பட்ட வழிமுறை என்ன என்று யோசிக்கிறேன். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அதற்குண்டான இசையும், பாடு முறையும், கதையாடலும், சொல்லாடலும், விளித்தலும் உண்டு. அதுவும் அந்தந்த காலத்தில் மட்டுமே நிகழ்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்று நம்புகிறேன்.

அதுவரை நம்பியிருக்காத ஒன்று எனக்கே நிகழும் பொழுதுதான் அதை நான் அறியவே முடியாது என்பதை உணர்ந்தேன். விடுமாடன் கொடை நிகழ்வில் எனக்கு சாமி வந்தது என்றார்கள். எனக்கு அது நிகழந்ததா. உச்சபட்ச முறுக்கேறுதலில் அந்த இசை, தப்பட்டையும் நாதஸ்வரமும் இணைந்து முயங்கிய நொடியில் அவனது கதைப்பாடலும் ஒலிக்க, எங்கோ ஒரு முக்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த என்னுள் அது நிகழ்ந்தது என்றார்கள். என்னால் இதனை மறுதலிக்கவே முடியவில்லை. அதுவரை அது ஒரு நாடகீயம், வெறுமனே ஒரு கதை நிகழ்வு அவ்வளவே தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது அது எனக்கு நிகழ்ந்தது.

நான் எல்லாவற்றையும் தவிர்க்க ஆரம்பித்தேன். இரவை இன்னும் இன்னும் தள்ளிப்போட்டேன். அந்த நாட்களை போதையில் முழுக்க நிரப்பி மூர்ச்சையுற்ற்றுக் கிடந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது தேடி வந்து கொண்டிருந்தது. ஒரு இணை உடல் போல என்னுடனேயே அது எப்பொழுதும் வாழ்ந்தது. இது ஒரு மனச்சிதைவு என்பது போலவே நானும் நினைத்தேன். நான் இசை கேட்பதையே முற்றிலுமாகத் தவிர்த்தேன். எந்த ஓசையும் நேரடியாக இன்றி மிகமிக மட்டுப்படுத்த முடியுமா என்று முயன்றேன். ஆனால் அவ்வளவு சாதாரணமாக இரவுகளை என்னால் கடக்க இயலவில்லை.

அதனால் ஒவ்வொன்றையும் மிக மிக நுணுக்கமாய் ஆராய ஆரம்பித்தேன். எல்லா தெய்வங்களுக்கும் உள் இருக்கும் பழங்குடி உருவம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியது. அதன் ஆதிரூபம் அத்தனை எளிதாக எங்கும் அழிந்து விடவில்லை.

செம்பட்டை நிறம் தீற்றலாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அறையின் நிசப்தத்தினுள்ளிருந்து மெல்ல மெல்ல அதனை நான் சந்தித்தேன். கண் பொருத்திக் கொண்டிருந்தனர். தீவட்டமாய் சுழலத் தொடங்கியது அறை. வேண்டாம் வேண்டாம் எனக்குள் எழுந்த பிதற்றல் தொண்டைக்குழியினுள் அடைப்பட்ட ஓலமாய் சிக்கிக்கொண்டு திமிறியது. பின் மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். திரட்சியான சிலந்தி வலையினுள்ளிருந்து எட்டிப்பார்த்தன அந்தக் கண்கள். உள்ளிருந்து குதிதெழுந்தான் மாடன். களப மணம் கலந்த வியர்வை நெடி.

நீ முகமூடி படம் பார்த்திருக்கிறாயா? உருமாறிக் கொண்டே இருக்கும் மனித மனத்தின் அலையெழும்பும் மேன்புள்ளியின் கிறுக்குத்தனம் பிடித்த இயல்புகளை உட்கிரகித்துக் கொண்டு அவன் உருவாக்கும் உலகம். இதுவும் அது போலத்தானா? தெரியவில்லை. கண் பொருத்தியவுடன் என்ன நிகழ்கிறது. ஒவ்வொரு முறையும் கொடையில் சாமி புகும் நொடிப்பொழுதில் அதிர்வுகளுடன் உருவாகும் திமிறல். அது சாமி என்கிறாய். அப்படியில்லை ஆழ்மனது முடிச்சிடும் தொலைதூர நீள்வட்டம். அது சுற்றிச்சுழன்று கொண்டிருக்கும் பிரதிகளின் பிரபஞ்சம் போல அந்தர வெளியில் மிதந்து கொண்டிருக்கும் நாத அலைகளின் வீரியம் கூடக்கூட ஒரு செல்போன் இணைந்து கொள்வது போலவே மனித மனமும் எங்கிருந்தோ இணையும் ஒன்று. நாம் இங்கு இந்த உலகத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இதே போலவே ஒரு இணை உலகம். இங்கு இதோ வீற்றிருக்கும் இந்த கோட்டை மாடனை நீ பார். பழையாற்றின் கரையில் தன்னந்தனியே இருக்கும் இந்த மண் பீடம். இது ஒரு விளைநிலக் கடவுள். மாடன்கள் மாட்டுடன் சம்மந்தப்பட்டவர்களா? மாடுகளை தெய்வமாக வணங்குகிறோமா. சாத்தியமில்லை, இவர்கள் ஊன் தெய்வங்கள். கொலை தெய்வங்கள். கொலைகளின் பொருட்டோ, வீரத்தின் பொருட்டோ, வன்மத்தின் பொருட்டோ, தீராப் பகையினிலிருந்தோ இவர்கள் வீதிகளெங்கும் முண்டுகளாய் முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை இப்பொழுது அருள் பொருந்திய, முக்கியமாய் சைவத்துடன் இணைத்துக் கொண்டிருக்கிறோம். கும்பாபிஷேகம் செய்கிறோம். அவர்களுக்கான திட்டமிடல்களில் எதுவோ ஒன்று அவிழ்ந்து அப்பால் சென்று அனுதினமும் காத்துக் கொண்டிருக்கிறது. வெறுமனே இவர்கள் இங்கு அமர்த்தப்பட்டிருக்கவில்லை. பின்னால் கழற்ற கழற்ற வெவ்வேறு முகங்களை நாம் காண இயலும். ஆனால் அதை வைத்து நீ எதை நிரூபிக்கப் போகிறாய். உனக்குள் உருவாகும் ஒன்றிலிருந்து நீ தொடங்கிப் பார். அது எதனுள் சென்று சேர்கிறது என்று. அதற்கு உனக்கு வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் கங்கணம் பொருத்தியவுடன், வேஷங்கள் இட்டவுடன் கணப்பொழுதேனும் இவர்களுள் சென்று காலம் அறுபடும் நொடியில் சட்டென்று அந்த அலையெழும்பும் மேற்புள்ளியில் உராசிக் கொள்ளும் அதிர்வுகளின் பெருக்கத்தை நான் உணரும்போது, என்முன்னே இங்கு நின்று கொண்டிருக்கும் அத்தனை திரளும் ஊன்களாக மட்டுமே என்னால் பாவிக்க முடிகிறது. கொடும் பசியினிலிருந்து மட்டுமே இந்த பாதாளங்கள் திறந்து விடப்படுகிறது. என்றோ ஏதோ ஒரு மூதாதை தனக்குள் உருக்கிக் கொண்டிருந்த சிதலிலிருந்து முளைந்தெழும் பல்லாயிரம் அரவங்கள் பெருகிக்கொண்டே இருப்பது போல.

அரவு நீள் சடையான். இது சோழற்கால தெய்வம். ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழைய லிங்கம். மண்டை சற்று உடைந்து போன குறி. அரவுகள் நீண்ட முடிக்கற்றைகளால் ஆனது இவனது காமம். நகரின் மையத்தில் காமத்தை உறைய வைத்தல் என்பது எப்படிச் சாத்தியமானது. இதனைச் சுற்றி இவனது பரிவாரங்களும் பூதங்களும் அமைகின்றன. கொம்மண்டை அம்மைக்கு இவன் நிவர்த்தம் செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. கோமந்தை இருந்த இடத்தில் இருத்தப்பட்ட தாய் தெய்வம் இவள். தன் முலைப்பாலினால் பசி போக்கிய தாய் தெய்வம்.

நீ எல்லாவற்றையும் குலைத்துப்பார்க்க விரும்புகிறாயா? இல்லை உனக்குள் நிகழும் அந்த ஆதி விளியை அறிய முற்படுகிறாயா?

சத்தியமாய் நான் ஒரு குழப்பத்திலிருக்கிறேன். என்னவென்றால் சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாக உருமாறியதா? இல்லை அவை தனிப்பட்ட தெய்வங்களா. ஒரு மலை அரசன் குமரனாக, முருகனாக உருமாறி பெருந்தெய்வப் பட்டியலில் அமர்வது போல. ஒரு கழுமாடன் ஏன் போய் அமைய முடியவில்லை. உண்மையில் இதுமட்டும் எனது தேடல் அல்ல. இது போலவே இந்த வெறியாட்டு ஏன் பெருந்தெய்வங்களிடம் இல்லை. அங்கு எல்லா சாந்தப்படுத்தலும் சத்வமாய் மட்டும் ஏன் இருக்க வேண்டும். ஒரு உக்கிரம் அங்கு ஏன் அமையவில்லை. அதே நேரம் இந்த தெய்வங்களேல்லாம் போர்த் தெய்வங்காவே இருக்கின்றன. ஆயுதங்களுடன் போர் வெறியுடனும் சாந்த முகத்துடனும் அருள் பாலிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

ஒரு தொலைதூரச் சங்கிலியில் ஆழம் காண இயலா திசை தூரம் கொளுத்தியிருப்பதைப் போல உணர்கிறேன். சில நேரங்களில் என் அருகிலேயே மிக நெருக்கமாய் என்னுள் இணைந்து விட முயலும், அலைக் கழிக்க விரும்பும் ஒன்றினைப் போலவும். நான் செல்லச் செல்ல அடைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உண்மையில் விடை தேவையில்லாத ஒன்றிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அது எனக்கும் தெரிகிறது. ஆனால் நான் நினைத்தது வேறு. நான் நிரூபணம் தேடிக் கொண்டிருக்கிறேன். பிண வாடையினுள் மோந்திக் கொண்டிருக்கும் சுடலையை நான் கண்டறிய முடியும் என்று இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறேன். அதற்கான சாத்தியங்களை நானே உருவாக்க முற்படுகிறேன். அவன் அங்கு நிச்சயமாய் இருக்க வேண்டும். இல்லையேல் இங்கு இந்தப் பீடம் இருப்பதன் அர்த்தம் என்ன. சூட்சும உடல்களினால் அவனை நான் அறிந்து கொள்வேன். அவனது கச்சையும், கண்களையும் அணிந்து கொள்ளும் ஒருவன் மூலம் அத்தனை வீரியத்துடன் அவனது உலகம் இங்கு இணைக்கப்படும் என்பதை நான் சந்தேகமின்றி சிலநேரம் நம்பி விடுகிறேன். ஆனால சிறு பிசகல் போதும் நான் பின்வாங்கி விடுகிறேன். பின் எல்லாமே வெறும் நம்பிக்கைதான் என்று சொல்லிக் கொண்டு கேலி செய்ய முனைகிறேன். இரு சாத்தியமான உச்ச நிலைகளுக்குள் மட்டும் என்னை தள்ளிக்கொண்டே இருக்கும் இந்த தெய்வங்களை நான் உண்மையில் வெறுக்கிறேன். அவர்களின் சிலைகளின் பாங்கில் அதில் உருப்பெறும் அந்தக் குறியீடு அதனுள்ளிருந்து நோக்கிக் கொண்டிருக்கும் அந்த முகத்தினை மெல்ல மெல்ல உரித்துக் கொண்டே இருத்தல் மட்டுமே எனக்கிட்ட பணி போல எண்ணிக் கொண்டு அணுகிப் பார்க்கிறேன். அப்படி செல்கையில், அதனுள்ளிருந்து என்னுள் இணைந்து கொள்ளும் ஒன்று அதனை என்னால் எங்கும் எதனுள்ளும் நிரூபிக்கவோ விளக்கவோ இல்லை அறிந்து கொள்ளவோ முடியாமல் காலத்திலிருந்து கழன்று எங்கோ ஒரு பிலத்தில் விழுந்து விடுகிறேன். அதை மிக சந்தோசமாக அனுபவிக்கவும் முடிகிறது என்பதை பின் தான் அறிந்து கொண்டேன். போதை வஸ்துக்களைப் போல திரும்பத் திரும்ப அது என்னை அழைக்கிறது.

மலைகளின் அசைவின்மையிலிருந்து பிரிந்து முயங்கிக் கொண்டிருந்தது இருளும் ஒளியும். வானம் மேற்கூரையற்று அந்தரத்தில் அலைந்து கொண்டிருந்த முகில்களினுள்ளிருந்து உற்று நோக்கியது. தெளிவாகவே கனவுகளுக்குள் இருப்பதும் வெளியில் இருப்பதும் ஒன்று போலவே உருவாகியிருந்தது. ஒளியின் சிறுதுண்டு ஒரு கூரிய ஆயுதம் போல என்னச்சுற்றி படம் எடுக்கத் தொடங்கியது. மெல்ல காலடிகள் எடுத்து வைத்து அதனுள் நுழைந்தேன்.

கேட்பாரற்றுக் குப்புறக் கிடந்த வங்கார மாடன் அருகில் முளைத்திருந்தது ஆல் செடி. பின்னால் களத்தில் முட்செடிகளும், புற்களுமாய் பச்சை விரித்திருந்தது. அப்பால் பழையாறு சாக்கடை நாற்றத்துடன் முனகியது. படித்துறையில் தன்னந்தனியே அமர்த்தி வைக்கப்பட்டிருந்த கிடைக்கல்லில் மஞ்சனை சாத்திய ரத்தச்சாந்தின் எச்சம், இடுப்பில் இருத்திய பாவாடையிலிருந்து வழிந்து சதுப்பாகியிருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் நாகப்படங்கள். ராட்சச விலங்கு போல சடை விரித்த கருங்கூந்தல் போல கிளை பரப்பிய அரசின் கீழ் உள்ள பலி பீடத்தில் தான் நான் அமர்ந்திருந்தேன்.

கழுத்து நரம்பில் எந்த நரம்பில் உயிர் நாடி துடிக்கிறது. மெல்ல மெல்ல ஆட்டின் கழுத்திலிருந்து பீய்ச்சும் ரத்தத்தை வாய்க்குள் வைத்து அகட்டி சப்பிக் கொண்டிருந்தான் சுடலை. மூன்றாவது ஆட்டின் பச்சை ரத்தத்தை மனிதன் முழுவதுமாய் குடிக்க வாய்ப்புண்டா. இது சுடலை. சுடலையே தான். பந்த ஒளியினுள்ளிருந்து துளிர்த்தெழும் குருதியின் வீச்சம் சூழலெங்கும் பரவத் தொடங்கியது. அறைக்குள்ளிருந்தேன். மூலைகளில் துடித்துக்கொண்டிருந்தது உயிர் நாடி. குமிழிக்குள்ளிருந்து பீறிட்டது குருதி வெள்ளம்.

மரணத்தின் மூலமே கடவுளை அறிதல் என்பதிலிருந்தே இவர்கள் உயிர்தெழுந்தார்கள். நானும் இவர்களுடன் அதன் பொருட்டே உழன்று கொண்டிருக்கிறேன். வேறு வேறு தருணங்களிலிருந்து நான் உருவாக்கிய கனவு வெளியில் காலம் என்ற ஒன்றை இல்லாமலாக்குவதன் மூலமாய் உருவாக்கும் நித்தியத்துவத்தில் மரணம் என்ற ஒன்று எண்ணற்ற போர்வைகளால் பொதியப்பட்ட வெற்று மூட்டை போல காட்சியளிக்கிறது. உரிக்க உரிக்க ஏதுமற்றதுதான் அது என்று சொல்லிக் கொள்ளும் பொழுதே மரணம் இறுக்கத் தொடங்குகிறது. நொடி நேர பதற்றம், இல்லை விலக்கம் இல்லையேல் நெருங்கிப் பற்றிக் கொள்கிறேன். ஆனால் அங்கு நான் யார்?

நான்
எண்ணற்ற ஒன்றுகளின் ஒற்றைப் பிணைப்பு
எண்ணற்ற நிகழ்த்துகைகளின் ஒற்றை எரி
எண்ணற்ற காலங்களின் ஒற்றைக் கனா
எண்ணற்ற விளிகளின் ஒற்றை அழுகுரல்
எண்ணற்ற காலப்பெருவெளியில் ஒற்றை விசும்பு

என்னுள்ளிருந்தே உன்னை உரிக்கிறேன். என்னைப் பலியாக்கும் வரை.

***


நந்தகுமார்
Nantha65@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular