Monday, October 14, 2024
Homesliderதெப்பம்

தெப்பம்

தனா

”கழுகு மல உச்சில ஒரு எடம் இருக்காம். அங்க ஒரு பொந்து. அதுக்குள்ளகூடி ஒரு எலுமிச்சம்பழத்த போட்டா கீழ கொகக்குள்ள இருக்க முருகன் காலடில வந்து விழுகுமாம்” என்று செல்லத்திற்கு அந்தக் கருவறையைப் பற்றிச் சொன்னவள் அவன் அம்மாதான். செல்லம் முருகனின் காலடியை எக்கிப் பார்த்தான். எலுமிச்சம் பழம் எதுவுமில்லை. 

“வள்ளி தெய்வானை சமேத முருகன். கழுகுமலை குகைக்குள் வீற்றிருப்பதால் கழுகாசல மூர்த்தியார் என்று நாமகரணம்” கருவறை இருட்டிற்குள் அர்ச்சகர் மிக வேகமாக ஆரத்தி தட்டை மூன்று முறை முருகன் சிலை முன் சுற்றிவிட்டு முருகன் முகத்தருகேயும் வள்ளி தெய்வானை முகத்தருகேயும் காட்டிவிட்டு ஒருஆள் உயரத்தில் இருந்த கருவறையின் கற்படிகளில் இறங்கி வந்தார். செல்லம் திரும்பிப் பார்த்தான். அவன் அம்மா அங்கு இல்லை. பிரகாரத்திற்குள் வரும்போது பின்னால்தான் வந்து கொண்டிருந்தாள். செல்லம் அங்கிருக்கும் சிலைகளையும் தூண்களையும் தொட்டு பார்த்துக்கொண்டே வந்தான். அம்மா சிலைகளை நின்று பார்க்கவில்லை. எதையோ யோசித்தபடி வந்தவளை இப்பொழுது காணவில்லை.

அவள் வெளியே போயிருப்பாள். அங்கே பெரிய தெப்பத்திற்கு அருகே இருக்கும் மண்டபத்தில் மற்ற உறவுக்காரர்களுடன் சேர்ந்து அமர்ந்திருப்பாள்.

செல்லம் வெளியே ஓடி வந்து பார்த்தான். மண்டபத்தில் குடும்பம் குடும்பமாக ஐம்பது பேருக்கு மேல் இருந்தார்கள். ராசுக்காளை ஒரு ஐஸ் வாங்கி தின்று கொண்டிருந்தான். செல்லம் அவனிடம் ஓடிச்சென்றான்

“எங்கம்மாவ பாத்தியாடா?”

“இல்ல. நான் ஐஸ் வாங்க எங்கப்பா கூட வெளிய போய்ட்டேன்” என்றான் ராசு.

“எங்காம்மாவும் ஐஸ் வாங்க காசு தர்றேன்னு சொல்லுச்சு. காணோம். ஒரு கடி தார்றியா”

ராசு குச்சி ஐஸை நீட்ட செல்லம் அதை பெரிய கடியாக கடித்தான். வாய் முழுவதும் ஐஸ் நிறைந்து சில்லிட்டது. துப்பிவிடுவோம் என்று பயந்து செல்லம் வாயை கைகளால் பொத்திக் கொண்டான்.

ராசு “வென்ன. எதுக்குடா இம்புட்டு கடிச்ச?” என்றான்.

செல்லம் வாய்பொத்தி சிரித்தான். உள்ளே ஐஸ் பற்களை கூசச்செய்தது.

வேகவேகமாக ஐஸைக் கடித்து விழுங்கினான். “தெப்பக்கொளத்த பாத்தியா? என்றான் ராசு

இருவரும் மண்டபத்தைக் கடந்து இடுப்பளவுள்ள தடுப்புச்சுவரைக் கடந்து தெப்பக்குளத்தின் சுற்று மேடை மேல் நின்றனர். மிகப்பெரிய தெப்பக்குளம் கழுகுமலை அடிவாரத்தை தொட்டுக்கொண்டு நின்றது.

“கருங்கட்டாங்குளத்த விட பெருசுடி” என்றான் ராசு

குளத்தின் நடுவில் சிறு மண்டபம் இருந்தது.

“இங்கருந்து நீச்சலடிச்சுப் போயி அந்த மண்டபத்த தொட முடியுமா?” என்றான் செல்லம்.

“முத்துக்காளண்ணே அடிச்சு போயிரும். எங்க கிணத்தில மேல இருந்து கல்லப் போட்டம்னு வையி. அது முங்கு நீச்ச அடிச்சுப் போயி எடுத்துட்டு வந்திரும்”

தெப்பத்தின் இரண்டு பக்கமும் படிகள் இருந்தன. நிறைய பெண்கள் கூட்டமாக படிகளில் இறங்கிச்சென்று நீர் மொண்டு கொண்டிருந்தனர். செல்லம் தெப்பத்தின் பின்னால் இருந்த கழுகுமலையைப் பார்த்தான். ஒற்றைப் பெரும்பாறையாக நின்றிருந்தது. மரங்களோ செடிகளோ இல்லாமல் பெரும் கல்லாக நின்றது.தெப்பத்தில் இருந்து வெளியே வந்து அந்த மலையைச் சுற்றி மறுபக்கம் சென்றால் மலை மேல ஏறிச்செல்ல பாதை உண்டு. அதில் ஏறிச்சென்றால் மலையின் நடுபாதியில் பெரிய அரசமரம். அம்மலையில் இருக்கும் ஒரே மரம். அங்குதான் சன்னாசிக்கும் ராக்காயிக்கும் கோயில் இருக்கிறது.

நாளைக்காலை விடியலில் கிளம்பி கூட்டமாக எல்லோரும் மலையேறுவார்கள். சன்னாசிக்கும் ராக்காயிக்கும் பூசை வைப்பார்கள். அணத்தலை தாத்தனக்கு சாமி வரும். அவர் ஆணி வைத்த செருப்பை காலில் மாட்டிக்கொண்டு ஒரு பிரம்பை கையில் பிடித்தபடி சாமியாடுவார். அவர் வாயிலிருந்து தட்பட்தட் தட்பட் புட் என்றுதான் வார்த்தை வரும். அதை வேகமாக வேறு வேறு “ட்டு”களில் சொல்வார்.

ஊரில் சன்னாசிக்கு பெட்டி வைத்து சாமி கும்பிடும் போது அணத்தலை தட்புட் என்று சாமியாடியதை செல்லம் பார்த்திருக்கிறான். அதை பட்டாணி பாஷை என்று அம்மா சொன்னாள்.

“சன்னாசியும் ராக்காயியும் தட்டுபுட்டுன்னுதேன் பேசிக்கிருவாங்களா? என்று செல்லம் கேட்டதற்கு “மனுசனுக்கு புரியாத பாசைலதான சாமி பேசிக்கிரும்” என்றாள் அம்மா.

கழுகுமலையில் இருக்கும் அந்த ஒற்றை அரசமரத்தின் விழுதுகளில் கிடாயை வெட்டி காலில் கயிறு கட்டி தலைகீழாகத் தொங்க விட்டு உறிரிப்பார்கள். அந்த இடமே ரத்தம் சிந்தி நொசநொசவென்று இருக்கும். அங்கேயே ஒரு பகுதியில் சமையல் செய்து படையல் வைத்து பூசை செய்து கறிச்சோறு சாப்பிட்டுவிட்டு கீழே இறங்க மாலையாகி விடும்.

குலசாமியைக் கும்பிட வருடா வருடம் சிவராத்திரிக்கு சின்னமனூரில் இருந்து பங்காளி குடும்பத்தார்கள் எல்லாம் சேர்ந்து லாரி அமர்த்திகொண்டு கழுகுமலைக்கு வருவார்கள். மாலையில் வந்துசேரும் அவர்களுக்காக கழுகாசல மூர்த்தி கோவிலின் உள்ளே இருக்கும் மண்டபம் திறந்துவிடப்படும். எட்டயாபுரம் ஜமீன் அதற்கு அனுமதி அளித்திருந்தார். அந்தப் பழங்கால நடைமுறை இன்றும் தொடர்கிறது.

பங்காளிக் கூட்டம் மண்டபத்தில் இருந்து கொண்டு பூசைக்கும் சமையலுக்கும் தேவையான சில்லறைப் பொருட்களை கழுகுமலை கடைவீதியில் வாங்கி சேர்த்து வைப்பார்கள். இரவு இட்டிலியோ பொங்கலோ அனைவருக்குமாகச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு விட்டு மறுநாள் அதிகாலை மலையேறுவார்கள்.

“போன வாட்டி வந்தப்ப இந்த மேட அளவுக்கு தண்ணி இருந்துச்சு. இப்ப கீழ போயிருச்சு” என்றான் ராசு.

செல்லம் கீழே எட்டிப் பார்த்தான். மேடையிலிருந்து நான்கு ஆள் மட்டத்திற்கு கீழே தண்ணீர் கிடந்தது. தண்ணீருக்கு அடியில் பாறைகள் இருளுக்குள் கிடந்தன. 

“நான் சின்னபிள்ளையா இருக்கப்ப மொட்டடிச்சு காது குத்த என்னய கூட்டி வந்திருக்காங்க. அதுக்கப்பறம் இப்பத்தேன் வர்றேன்” என்றான் செல்லம்.

“எலேய். அங்கிட்டு எங்கடா போயி நிக்கிறீங்க. அகராதி புடிச்சவங்யளா இங்கிட்டு வாங்கடா” என்று மண்டபத்தில் இருந்து அணத்தலை தாத்தா கத்தினார்.

ராசுவும் செல்லமும் தடுப்புச்சுவர் ஏறி குதித்து மண்டபத்திற்கு வந்தனர்.

“தெப்பக்கொளம் என்ன தாத்தா இத்தாம் பெருசாருக்கு” என்றான் ராசு.

அணத்தலை “அதுக்குள்ளதாண்டா தேவான முருகெ கூட சண்ட போட்டு வந்து ஒக்காந்திருந்தா”என்றார். என்னத்துக்காம் சண்ட? என்றான் செல்லம்.

தாத்தா இடுப்பில் இருந்து பொடி மட்டையை உருவி அதைப் பதமாகப் பிரித்து கட்டை விரல் மற்றும் நடுவிரல் கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து கையை உதறி ஆள்காட்டி விரலை உடுக்கை அடிப்பதுபோல் நடுவிரலில் இருமுறை அடித்துவிட்டு மூக்கில் வைத்து உறிஞ்சினார். பின்னர் தோளில் இருக்கும் துண்டை மண்டபப் படிகளில் விரித்து “யப்பேய்” என்று  அனத்தியவாறு உட்கார்ந்தார்.

செல்லம் மறுபடியும் “எதுக்கு சண்ட போட்டாங்களாம்?” என்றான்..

“அவுக குடும்ப பெரச்சன. அந்தாளு வள்ளி பொச்சு பின்னாடியே திரிஞ்சிருப்பியான். என்ன இருந்தாலும் காட்டுச்சிறுக்கி ஒடம்புல.. தேவானைக்கு கோவம் வந்திருக்கும். நான் எங்கிட்டாவது போறேன்னு சொல்லி கெளம்பிட்டா”

“அப்பறம்?” என்றான் ராசு

தாத்தா “அப்பறம் என்ன அப்பறம்… நம்மாளுக்கு ரெண்டு பக்கமும் கால போட்டு படுத்து பழக்கம்ல.. எப்டி தூக்கம் வரும்? பொண்டாட்டியத் தேடி கெளம்பிட்டியான்”என்றார்.

“நான் எங்கம்மா மேல கால் போட்டுதேன் தூங்குவேன்” என்றான் செல்லம்.

தாத்தா “தேவான நேரா அவுகப்பன் வீட்டுக்கு போனாளாம். இந்திரெ சொல்லிட்டானாம். இங்காவாரு மகளே. அடிச்சாலும் புடிச்சாலும் புருசன்
வீட்லதேன் கெடக்கனும். இங்கிட்டெல்லாம் வரக்கூடாது பாத்துக்கன்னு”

செல்லமும் ராசுவும் அணத்தைலயின் காலடியில் அமர்ந்து கொண்டார்கள்.

“ச்சீய்யின்னு ஆகிப்போச்சு தேவானைக்கு. அவுசாரி மகென் நூறு கூத்தியாள வச்சிகிட்டு பெத்த மகளுக்கு ஒரு மூல எடம் இல்லம்ட்டானே.. இப்டி போக்கெடம் இல்லாம போய்டட்டோமேன்னு ஒரே அழுவ. எங்கிட்டு போறதுன்னு தெரியாம இந்த தெப்பத்துக்குள்ள வந்து உக்காந்துகிட்டா”

செல்லம் “தண்ணிக்குள்ளயா?” என்றான்.

“ம்கூம். அப்ப இது பெரிய பொடவு. உள்ள ஆயிரம் அடி கொக. அதுக்குள்ள போயி ஒக்காந்துகிட்டா. முருகென் தேடுறியான் தேடுறியான். ஒலகம் புல்லா தேடுறியான் மயிலுமேல ஏறி. எங்கயும் தேவான ஆப்படல”.

‘ஓலகம் சுத்தி வந்தது மாம்பழத்துக்குல” என்றான் ராசு

“அது வேற கத. இது வேற கத. நீ போயி உங்கப்பங் கிட்ட தாத்தாக்குன்னு சொல்லி ரெண்டு வாழப்பழம் வாங்கிட்டு வா” என்றார் அணத்தைல. ராசு எழுந்து மண்டபத்துக்கு மறுபக்கம் ஓடினான்.

“முருகென் சாமில்ல? தேவானைய யானக்கண்ணால பாத்து கண்டுபுடிச்சிருவார்ல” என்றான் செல்லம்

“தேவானையும் சாமில்ல.. அதுவும் பொம்பள சாமில்ல.. அவுகப்பென் பரமசிவன் வந்தாலும் கண்டுபிடிக்க முடியுமா?

ராசு ரெண்டு வாழப்பழத்தை கொண்டு வந்து தாத்தாவிடம் குடுத்துவிட்டு மூச்சு வாங்கியபடிகியபடி “கத அங்கனக்குள்ளேயேதான நிக்கிது?  நான் போனதுமே இவன்கிட்ட சொல்லலைல? என்றான்.

“அங்கனக்குள்ளதேன் அங்கனக்குள்ளதேன்” என்றார் தாத்தா.

“எங்கிட்றா போனா இவன்னு முருகென் தேடிட்டு திரியும் போது ஒரு கழுகு வந்து சொல்லுச்சாம். அவ இங்க பொடகுக்குள்ள இருக்கான்னு. நேரா முருகென் பொடகுக்கு வண்டிய விட்டியான். பொடகு மேல நின்னுகிட்டு தேவான தேவானன்னு கூப்டுறியான். அவ மசிஞ்சி குடுக்கல. நீ அந்த காட்டு சிறிக்கியவே கட்டிகிட்டு திரி. ஒனக்கென்னத்துக்கு நானுங்குற மாதிரி உம்முன்னு உள்ளுக்குள்ளவே உக்காந்துகிட்டா”

ராசு “பொடவு இருட்டா வேற இருக்கும்” என்றான்

“அப்றம் முருகென் உள்ள எறங்கிப் போயி கெஞ்சி கதறி வாடின்னானாம். அவ வரமாட்டேம்னுட்டா. நீ வரலாட்டினா நானும் போக மாட்டேன் இங்கனக்குள்ளயே இருந்துக்குறேன்னு அவ கூடவே இருந்துகிட்டானாம்”

“ரெண்டு பேரும் உள்ளயா இருக்காங்க” என்றான் செல்லம்

“ஆமா உள்ள புள்ள குட்டி பெத்து வளக்குறாக. கதயக்கேள்றா” என்றார் தாத்தா.

“அம்பது நூறு வருசமா உள்ளயே பேச்சு வார்த்த இல்லாம கெடக்காக ரெண்டு பேரும். அப்பறம் கையக்கால ஆட்டி சைகைல பேசிக்கிட்டாக.. அப்பறம் ஒத்த வார்த்த ரெண்டு வார்த்த.. பொறவு ஒரு சிரிப்பு.. கைபட்டா கால்பட்டா சிணுங்கலு. அப்பறம் ஒண்ணு கூடிட்டாக”

செல்லம் “பழம் விட்டிக்கிட்டாக” என்று சிரித்தான்.

“கொஞ்ச நாள்ளயே ரெண்டு பேத்தையும் தேடிகிட்டு வள்ளி வந்துட்டா. எங்க எம்புருசென் எங்க என் சக்களத்தின்னு அவ கழுகு கிட்ட கேக்க கழுகு பொடக காட்டி றெக்கைய  ஆட்டுச்சு.

“இப்டி இப்டி” என்று ராசு தன் கையை சிறகு போல ஆட்டினான்.

“வள்ளியும் பொடகுக்குள்ள போய்ட்டா. அங்க புருசனும் பொண்டாட்டியும் ஒத்துமையா இருக்கத பாத்ததும் இவளுக்கு ஏறிகிருச்சு. அப்பறம் ஒரே சண்டக்காடு.. முருகென் கோமணத்த அவ ஒரு பக்கம் இழுக்க தேவான ஒரு பக்கம் இழுக்க பெரிய ரவுசா போச்சு. பொறவு கழுகு வந்து சொல்லிச்சாம்.. மறுபடியும் முருகன ஆண்டியாக்கி பழனிக்கு பத்தி விட்டிறாதீகன்னு. முருகனும் ஆமாமா நான் இந்தா கெளம்பிட்டேன்னு எந்திரிச்சிட்டியான். அப்றம்தேன் சக்களத்திக சமாதானமானது” என்று கதையை முடித்தார் அணத்தலை.

“அந்த பொடகுதேன் மழ பேஞ்சு தண்ணி எறங்கி இப்டி தெப்பமாச்சு”

அணத்தலை வாழைப்பழத்தை உரித்துத் திங்க ஆரம்பித்தார். பின்னால் ஆட்களின் கரைசலான பேச்சொலிகள் இரைந்தது. சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சரசு சித்தி குழந்தை லட்சுமிக்கு பால் ஆற்றிக்கொண்டிருந்தாள். செல்லம் தாத்தாவையும் ராசுவையும் விட்டு விட்டு அம்மாவை தேடிச்சென்றான். அவள் எங்கும் தட்டுப்படவில்லை. கழுகுமலை கடை வீதி கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. இரவில் எல்லா கடைகளிலும் மஞ்சள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. நிறைய விளையாட்டு சாமான் கடைகள் இருந்தன. செல்லத்திற்கு தண்ணி துப்பாக்கி வாங்க வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. வீதியில் பெரும்பாலும் அவன் சொந்தக்காரர்களே இருந்தனர். குடும்பம் குடும்பமாக ஏதோ ஒரு கடையில் எதையோ வாங்கிக் கொண்டிருந்தனர்.

சர்பத் கடையில் பாப்பாத்தி பெரியம்மா குடும்பம் நின்றிருந்திருந்தது. ரத்தச்சிவப்பில் சர்பத்தை வாங்கி குடித்துக் கொண்டிருந்தனர்.

“எங்கடா உங்கம்மா? என்றாள் பாப்பாத்தி.

“தெரியல. அம்மாவத்தேன் தேடிட்டு இருக்கேன்”

அப்பொழுது அப்பா சிறு தோள் பையுடன் நடந்து வருவதை செல்லம் பார்த்தான். சென்னையிலிருந்து நேராக கழுமலைக்கு வந்துவிடுவார் என்று அம்மா நேற்று சொன்னாள். செல்லம் அப்பாவை பார்த்து ஆறு மாதங்களுக்கு மேலாக இருக்கும். அப்பா சென்னையில் வாழைக்காய் வியாபாரம் செய்கிறார். வருடத்திற்கு ஆறுமுறை சின்னமனூர் வருபவர் இந்த வருடத்தில் ஒருமுறை மட்டுமே வந்திருந்தார். ஆனால் மூன்று நாட்களில் கிளம்பி விட்டார். அதில் ஒருநாள் காப்பியை சூடு தாங்காமல் கீழே கொட்டியதற்கு செல்லத்தை தேங்காயைக் கொண்டு முட்டிக்கு கீழே அடித்தார். ஒரு வாரம் வீக்கமிருந்தது.

“என்னா பால்சாமி இப்பத்தேன் வர்றியா?” என்றாள் பெரியம்மா.

அப்பா “ஆமாம் மதினி. வெள்ளன பஸ்ஸேருனேன். கோயில்பட்டி வந்து மாறி வர்றேன்” என்றார்

செல்லம் அப்பாவையே பார்த்தபடி நின்றான். அப்பா “உங்காத்தா எங்கடா?” என்றார்

செல்லம் என்ன சொல்வதென்று தெரியாமல் மெல்ல மண்டபத்தை நோக்கி கைகாட்டினான. அப்பா அவனைக் கடந்து சென்றார். செல்லம் கடைவீதியை ஏக்கத்துடன் சுற்றிவிட்டு மண்டபத்திற்கு வரும் பொழுது அங்கே கூட்டமும் சலசலப்புமாக இருந்தது. பரசிவம் சித்தப்பா அப்பாவைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அப்பாவின் கையில் தலைமுடி சிக்க அம்மா தரையில் விழுந்து கிடந்தாள். அப்பா சித்தப்பாவைத் தள்ளிவிட்டு அம்மாவை ஓங்கி உதைத்தார்.

“ஒன்னய கொண்ணு இங்கயே பொதச்சிட்டு போறனா இல்லையா பாரு” என்று அம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கழுத்திலேயே அறைந்தார்.

“லே மயிராண்டி சாமி கும்புட வந்து எடத்தில வந்து சண்டய போட்டுக்கிருக்க.. பித்தும் பீக்கொடலும் இல்லாத பயலே” என்று அப்பாவை அரட்டினார் அணத்தலை தாத்தா.

“கேள்வி மயிரா கேக்குறா எங்கிட்ட” அப்பா கத்தியபடி அம்மாவை அடிக்கத் திமிறிக்கொண்டு வந்தார். இரண்டு மூன்று ஆண்கள் அவரை பிடித்து இழுத்து தள்ளிக்கொண்டு போனார்கள். அம்மா தரையில் குப்புற விழுந்து கிடந்தாள். அப்பாவை அமுக்கிப் பிடித்து மண்டபத்தில் உக்கார வைத்தார்கள். அவர் மூச்சிரைத்துக் கொண்டிருந்தார். சட்டை பட்டன்களெல்லாம் தெறித்துப் போயிருந்தது. சட்டை பாக்கெட் முழுதும் கிழிந்து தொங்கியது. நெஞ்சில் அம்மாவின் நகக்கீறல் ரத்தத்திட்டுகளாய் தெரிந்தது. அப்பா அம்மாவைக் காறி உமிழ்ந்து உட்கார்ந்தவாறே கைநீட்டி கெட்ட வார்த்தையால் ஏசினார்.

தரையில் கிடந்த அம்மா அலங்கோலமாக எழுந்து உட்கார்ந்தாள். சரசு சித்தி கீழே கிடந்த அம்மாவின் சீலை முந்தானையை எடுத்து அம்மாவின் தோளில் போட்டு விட்டாள். கூட்டத்தில் சலசலப்பாக பேசிக்கொண்டார்கள். யாரும் எதிர்பாராத சமயத்தில் அப்பா விருட்டென எழுந்து வந்து அம்மாவின் வயிற்றில் ஓங்கி மிதித்தார். அம்மா அப்படியே மல்லாக்க விழுந்தாள். ஆனால் உறுமியபடி எழுந்து வந்து அப்பாவின் சட்டயைப் பிடித்து இழுத்து அடித்தாள். கூட்டம் அவர்களைப் பிடித்து விலக்கி இழுத்து சென்றது.

“அந்த முண்டைய வெட்டிக் கொள்ளாம விடமாட்டேன்.. நீ வெலகுடா வெண்ணமகனே” என்று அவரை பிடித்திருந்த பரமசிவம் சித்தப்பாவை அப்பா அறைந்தார். ஆனாலும் அவரை இழுத்து தள்ளிக்கொண்டு போனார்கள். அம்மா அப்பாவையே மூச்சிரைத்தபடி கண்ணீர் பொங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு நின்றாள். செல்லம் மண்டபத்தின் தூணில் ஒட்டி நின்று அம்மாவை பார்த்தான். அழுகையாக வந்தது அவனுக்கு. அங்கு நிற்க முடியவில்லை. கோவிலுக்குள் ஓடிச்சென்றான்.

முனிவர் தவம் செய்யும் சிலை வடிக்கப்பட்ட தூணின் கீழே போய் உட்கார்ந்து கொண்டான். அழுகையை அடக்க முடியவில்லை. சுற்றிலும் நிறைய பேர் நடந்து கொண்டிருந்தார்கள். செல்லம் கண்ணீர் வழிய வழிய துடைத்துக்கொண்டே இருந்தான். ஒரு பெண் வந்து அவனுக்கு தேங்காயையும் மாவிளக்கு ஏற்றிய மாவுருண்டையும் நீட்டினாள். செல்லம் அதை வாங்காமல் அங்கிருந்து எழுந்து மண்டபத்திற்கு ஓடி வந்தான். அங்கே இட்டிலி சுட்டு எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். செல்லம் அம்மாவைத் தேடினான். அம்மா எங்கும் தட்டுப்படவில்லை. சரசு சித்தியிடம் போய் நின்றான்.

சித்தி “இட்டிலி வைக்கவாடா?” என்றாள். “அம்மா எங்க சித்தி?”

சரசு சுற்றிலும் பார்த்தாள். “இங்கதே உக்காந்திருந்தா. எங்க போனான்னு தெரியல” என்றாள்.

செல்லம் தயங்கியபடி “அப்பா?” என்றான். சரசு சித்தி தண்ணீரைத் தொட்டுக்கொண்டு இட்டிலியை விரலால் குத்தி எடுத்து சட்டியில் போட்டபடி “ஒரு நாள்தேன் டயம் குடுத்து அனுப்பிச்சிருப்பா போல சக்காளத்தி. அதேன் வந்ததும் அடிச்சமா முடிச்சமான்னு கெளம்பிட்டாப்ல. இந்நேரம் கோயில்பட்டில இருந்து பஸ்ஸேறிப்பாப்ல மெட்ராசுக்கு” என்றாள்

செல்லம் மண்டபத்தையே சுற்றி சுற்றி வந்தான். எங்கும் அம்மா தென்படவில்லை. அவனுக்கு மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் அருகே நின்று இருட்டில் கிடந்த தெப்பத்தைப் பார்த்தான். இடதுபக்கம் மேடையில் தெப்பத்தைப் பார்த்தபடி சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் அம்மா. செல்லம் தடுப்புச்சுவரை ஏறிக்குதித்து அம்மாவிடம் போனான். அவள் கால் நீட்டி அமர்ந்திருந்தாள். செல்லம் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் மடியில் படுத்துக் கொண்டான். அவர்களுக்கு பின்னே மண்டபத்தில் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த சத்தம் கேட்டது. முன்னால் தெப்பம் கனத்த அமைதியுடன் உறைந்திருந்தது. செல்லம் அப்படியே உறங்கிப் போனான்.

கனவில் ஒரு கழுகு அவனை ஒரு பொடகுக்குள் தூக்கிச் சென்றது. இருட்டில் பாறை விளிம்புகள் மட்டும் தெரிந்தன. கழுகு எதிலும் இடிபடாமல் வளைந்து வளைந்து பறந்தது. குகை முடிவடையாமல் நீண்டு நீண்டு சென்றது. முற்றிலும் இருட்டிற்குள் அவன் நுழைகையில் விழித்துக் கொண்டான். அம்மா மெதுவாக அவனையும் இழுத்துக்கொண்டு சுற்றுமேடையின் முனைக்கு வந்து மேடை விளிம்பில் காலைத்  தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தாள். செல்லம் அவள் இடுப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டான். அம்மா இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்ந்தாள். செல்லம் கண் திறந்து பார்த்தான். கீழே தண்ணீர் தெரிந்தது.

செல்லம் “ம்மா. வேண்டாம்மா” என்று விக்கினான். அம்மா செல்லத்தின் தலையை இருமுறை தடவிக் கொடுத்தாள். பின் தன் உடலை அவனோடு சேர்த்து முன்னே உந்தினாள்.

  • ***

தனா – இவர் ஒரு திரைப்பட இயக்குனர். தொடர்ந்து நல்ல சிறுகதைகளை எழுதி வருகிறார்.

RELATED ARTICLES

1 COMMENT

  1. கதையின் காட்சி கண் முன்னால் விரிகிறது. கதையை நகர்த்திய விதம் அருமை. அம்மாவை தேடும் சிறுவனும், கதை சொல்லும் தாத்தாவின் வாயிலாக சிறுவனின் தாயாரை நாம் சந்திக்கும் இடமும் மீதி கதையை நமக்கு சொல்லி விடுகிறது.

    பொடகு (பாறை குகை) கடவுளுக்கு அடைக்கலம் அளிக்கிறது இல்லற சிக்கலை தீர்க்கிறது. சாமானியர்கள் அடைக்கலம் தேடும் பொடகு கண்ணீரால் நிறைகிறது.

    என்றோ ஒருநாள் வரும் அப்பாவுக்கு பிள்ளை மேல் பாசம் இல்லை. சுற்றம் சூழ இருந்தாலும், பிள்ளையை தனித்து விட தாய்க்கும் மனம் இல்லை. சோகமான முடிவே.

    தாயை சுற்றி கதையோட்டம் இருந்தாலும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அழுத்தமாக வாசகர் முன்பு வருகிறாள்.
    தாயார் கதாபாத்திர வடிவமைப்பு அருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular