Monday, October 14, 2024
Homeநூல் விமர்சனம்தீ உறங்கும் காடு - வாசகப் பார்வை

தீ உறங்கும் காடு – வாசகப் பார்வை

ஒரு வாசகனாக என்று சொல்வதை விட ஒரு ஆண் வாசகனாக இது போன்ற கவிதைகள் குறித்து எழுதுவது அல்லது பதிவது ஒரு அகமகிழ்வைத் தருகிறது. ஏனென்றால் பெரும்பாலும் நான் வாசிக்கின்ற கவிதைகளில் அல்லது எழுத முயற்சி செய்கின்ற கவிதைகளில் எல்லாம் கள்ளச்சிரிப்போடு மறைந்து செல்பவளாகவும், காதலில் தோற்று வாடுவதை கண்டு கொள்ளாதவளாகவும் அல்லது இன்னொருத்தவனிடம் போய் ஆப்பிள் கேட்பவளாகவும் பெரும்பாலும் அவள் இருந்து வருகிறாள். ஒரு ஆணின் தகிப்பை, தனிமையை, காமத்தை தாண்டி, ஒரு பெண்ணின் காதலை அவள் தனிமையை, தகிப்பை, படர்க்கையை, ஆற்றாமையை, நம்பிக்கையை, காமத்தினைக் காணக் கிடைப்பது புதிதானது இல்லை, அது சங்க காலத்தின் அக இலக்கியங்களில் விரவி இருந்தாலும். இன்றைய மொழியில் தன் காதலை நுட்பமாகக் கட்டமைத்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

அது என்ன நுட்பமாக என்று கேட்கிறீர்களா?? சக்திஜோதி தன் காதலை கட்டமைத்திருக்கும் விதமாக நான் காண்பது இயற்கையின் வடிவங்களைத் தான் நுட்பம் என்று சொல்ல வருகிறேன், எளிமையாக அவர் கவிதைத் தொகுதிகளின் தலைப்பினையே அதற்கு எ.கா-ஆக சொல்லலாம். முதல் கவிதையில் வரும் கடல் பயணத்தில் தெரியும் நீல வண்ணம் யாவுமே காமத்தின் குறியீடாகத் தென்படுகிறது, இது நவீன ஓவியங்களில் வெறும் வண்ணங்களை மட்டுமே பயன் படுத்தி கோடுகள் தேவைப்படாத சித்திரங்களின் நீல வண்ணச் செய்தியை ஒத்திருக்கிறது.

// அந்தக் கப்பல் நீலக் கடல் மேல், நீல வானத்திற்குக் கீழ்
மிதந்துக் கொண்டிருந்தது
  நான் மீண்டும் நிலம் சேரலாம்,
அல்லது கடலில் மூழ்கலாம்
நீல வானை மிதந்தும் கடக்கலாம்

 எதனையும் அறியாமல் அவன் பெயரைஉச்சரித்தபடி
மன அறை புகுந்து துயிலத் துவங்கினேன்// இங்கேயே கவிதை வலியை தந்துவிட்டு நிறைவாகிறதாக எனக்குத் தோன்றினாலும் இன்னும் நீண்டு அவள் துஞ்சிய பின்னும் கவிதையில் மிதந்து கொண்டிருக்கிறது கப்பல்.
//கப்பல் மிதந்தவாறு இருந்தது
காமம் மிதந்த உடலென//…..

//ஒற்றைச் சொல்// எனும் கவிதையில் ஒரு சொல்லுக்காக ஏங்கும் தனிமையின் வாதை எனக்கு பரிதாபம் தரவில்லை மாறாக அவள் மீது மையல் கொள்ளச் செய்கிறது. இருந்தாலும் என்னாலும் அவ்வளவு விலையுயர்ந்த அல்லது விலைமதிப்பற்ற சொல்லை தேடிக் கண்டுபிடிக்க முடியுமா ? என்பதும் தெரியவில்லை.

//இப்போதும் நான் விரும்பும் ஒற்றைச் சொல்லை நீ சொல்வாயெனில்
அச்சொல்லில்
தேவதைகளும் பேரழகிகளும் கரைந்து போக ஆவாரம்பூ மாலையென் உன கழுத்தை அலங்கரிப்பேன்//

ஒரு கவிதையில் மீன் பிடிக்கிறார், அது சிறிய வண்ண மீன் பின்னர் அதைச் சமைக்க முற்படுகிறார். (வண்ண மீன்களை சமைப்பதா?? வண்ண மீன்களை சமையல் செய்யும் இவர் உண்மையில் அசைவம் உண்பவரா, இல்லை புதிதாகக் கற்றுக் கொண்டவரா??. எல்லாவகை புலால் உண்ணும் சமுதாயங்களுக்கும் புலால் உண்ணக் கூடாத நாட்கள் என்கிற பட்டியல் வரும், அது என்னமோ தெரியவில்லை நான் கண்டவரை வீட்டிற்குத் தெரியாமல் புலால் உண்ணும் சைவமான்களுக்குத் தான் வரைமுறையே கிடையாது)

இக்கவிதையின் இறுதியில்

// அந்தச் சிறிய மீன் உயிர் நீங்கும் போது மன்றாடவே இல்லை,
அது சுதந்திரத்தை என்னிடம் தந்துவிட்டு கனவுகளோடு ஆற்றில்
கரைந்துக் கொண்டிருக்கிறது//

அது காதலின் மிக உயரிய ஒப்புமையாக கையாளப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். நம் தனிமையில் நினைவுகளாக நீந்தும் மீன் கூட அப்படி வந்தது தான். இந்தக் கொலைக்கு எல்லாம் பாவக் கணக்கு வந்துவிடாது என்பதும் என் முடிவு.

இத்தொகுப்பில் வரும் “அவன்” அநேகமாக அவன் ஒருவன் தான், அவன் அவளோடு சேர்ந்து, பழகி, தழுவி, முத்தமிட்டு, வினையின் காரணமாக பிரிந்து செல்கிறான். அவனுக்காக இவள் காத்திருக்கிறாள், ஏங்குகிறாள், நினைவில் பூரித்துக் கொள்கிறாள், தீரா நெருப்பில் தகிக்கிறாள். ஆனால் இவள் என்பவள் ஒருத்தி மட்டுமில்லை, அவள் இந்தக் கவிஞராக இருக்கிறாள், நாளை காதலிக்கப் போகும் சிறுமியாக, கரிசல் மண் தேவதையாக, மலைவாழ் கொடிச்சியாக, நெய்தல் நிலத்து சக்தியாக, நிலாவைப் பார்க்கிறாள், போதாமையில் வாழ்கிறாள், நீந்திக் கொண்டே இருக்கிறாள். கவிஞர் எத்தனைப் பெண்களின் சாயலில் இருந்து பார்த்தாலும் அவள் பார்வையில் ஒருவன் தான் தென்படுகிறான். அதனால் தான் இங்கு அவன் எந்தப் பெண்ணையும் பாலியல் சித்திரவதை செய்யவில்லை, ஏமாற்ற வில்லை, பெண் என்று பரிகசிக்கவில்லை, அடிமைப் படுத்தவில்லை, பயந்தும் ஓடவில்லை.

ஏன் காதலை மட்டுமே தன் இயங்கு தளமாக பெரும்பான்மையான கவிதைகளில் வைத்திருக்கிறார் என்ற கேள்வியைக் கேட்கவே எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் ஐரோம் சர்மிளாவை சாட்சிக்கு அழைக்கிறேன் ஐரோம் சர்மிளாவின் அரசியல், போராட்டம், கொள்கைக்கு பொது எதிரியாக ஒரு சக்தி வாய்ந்த அணி இருக்கின்றது, ஆனால் அவர் அணியில் இருக்கும் சகாக்களே அவர் காதலுக்கு எதிரியாக இருப்பதை கொள்கை சார்ந்த விஷயமாக நியாயம் கற்பிக்க முடியாது அல்லவா?? அது டெஸ்மாண்ட் கூட்டின்ஹோவின்(desmond coutinho) தவறென்றும் கூற முடியாது. காதலில் வீழ்ந்தது தான் மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் முதல் படி, அதை பைபிள் கூட ஒத்துக் கொள்கிறது.

//நதி நீரில் நீந்திக் கடல் சேர்ந்தேன்
கடலில் நீத்திக் கொண்டே இருந்தேன் – அது பெரும் ரகசியம்
கண்டேன் காணவும் இல்லை// இப்படி அவர் காதலின் ஆழம் மெரினா ட்ரென்ச் போல் உள்ளே சென்று கொண்டிருக்கிறது. பின்னே எப்படி ஒரு வாசகனாக அவள் மீது மையல் கொள்ளாமல் இருக்க முடியும், இல்லை குறுக்கு வழியில் நான் என்னை அவனாக நினைத்தும் பார்க்கிறேன். இது பெரும் காதல் கதை தான், ஆனால் அவள் நாஸ்தென்கா போல் குழம்பி, குலைந்து நமக்கு வலி தருபவளும் அல்ல, ஸ்திரமாய் இருக்கிறாள் ஒரு கட்டத்தில் சொல்லாத வார்த்தைகளின் துயரில், பெண்ணின் பிரதிநிதியாக தன்னை பார்க்கின்றாள். அப்பொழுது சொல்கிறாள்.

//பல வேளைகளில் இந்த ஆணை ஏன் சுமக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
என் இருப்பை விரும்பாத ஆணை, என்னைச் சுமக்க விரும்பாத ஆணை
நான் விலக்கிடவே விரும்புகிறேன்//

பொதுவாக இந்தக் கவிதைத் தொகுப்பில் பல பெண் முகங்களில் தோன்றினாலும் மேற்சொன்ன ஒரு கவிதை தவிர ஒரு பெண்ணின் பிரதிநிதியாக தன் குரலை அவர் மற்ற கவிதைகளில் கொடுக்கவில்லையே என்ற கேள்வி எழலாம். தன் வாழ்க்கையில் அவர் சமூக செயற்பாட்டாளராய் இருந்தும், அதுவும் கிராமங்களில் தன் பணியினை பெரும்பாலும் செய்து வ்ந்தாலும், அவர் தொடர்ந்து காதல் கவிதைகள் எழுதுவதால் ஏன் தன் படைப்புகளில் தன்னை ஒரு பெண் சமூகத்தின் பிரதிநிதியாக நிறுத்திக் கொள்ளவில்லை எனும் விமர்சனம் எழுந்து கொண்டு தான் இருக்கும். ஆனால், என் பார்வை இதை அவர் தன் குடும்ப அமைப்பில் இருந்தே எடுத்துக் கொண்டு கையாள்கிறார் என்று சொல்லத் தோன்ருகிறது, ஒரு சிறுமி என்று சொல்வதற்கு பதிலாய் தன் மகள் என்கிறாள்.

   வலியின் ரகசியம்

என்னைப் போலவே
என் மகளும்

எனக்கு எப்படியோ
அப்படியே அவளுக்கும் வலி துவங்குகிறது
என்றாலும்
அவளுக்கு இந்த வலி
ஒரு ரகசியம் என்று தெரியாது

அவளிடம் நானும் கூடச் சொல்லிக் கொள்வதில்லை
என் தாய்
என்னிடம் சொல்லிக் கொள்ளாத
ரகசியத்தின் வலியை
தாங்கவே இயலவில்லை

என் மகள் அயர்ந்து உறங்குவதைக் காண்கையில்
அவள் வயதில்
நானும் இவ்விதம்
தளர்ந்து உறங்கிய நாட்களில்
என் தாயும் கசிந்திருக்கலாம்
அவளின் தாய் போலவே

நானும் இந்த வயதில்
அவ்வளவையும் தாங்கிக் கொள்கிறேன்
இந்த ஜீவிதத்தின் பொருட்டு

என் மகள் உறங்குகுகிறாள்
என்னைப் போலவே
வலியின் ரகசியங்களோடு
அதனை அறியாதபடி.

நிற்க. இக்கவிதையில் கவிஞர், யாரையும் blame செய்யவில்லை, தாங்கிக் கொள்கிறாள் ஜீவிதத்தின் பொருட்டு  இது அவள வலிமையைக் காட்டுகிறது, அதே சமயம் இந்த இடரினை, வலியினை அவள் ரகசியமாகவே காண்கிறாள் , அவளிடம் பகுத்துப் பார்க்கும் அறிவிருக்கிற்து –ஆனால் திறக்கப்படா பேழையாகவே பார்ப்பதை விரும்பாமல் விரும்புகிறாள். அது தான் அவளது வலிமை.

Madness is divine – Ignorance is beauty என்று சொல்வார்கள்

கவிதைக்கும் கூட Madness ஒரு பார்வையாக உதவுகிறது, ஆனால் இந்த தொகுப்பில் கவிஞர் அதற்கு இடம் கொடுக்கவில்லை, பேதமை என்பதை பெண்ணின் கருப்பொருளாக சொல்லி வந்ததாலோ என்னவோ மிகத் தெளிவாக இரண்டிலும் இருந்து விலகியே இருக்கிறார். இந்த அம்சம் குறித்து நான் கண்ணுறும் போது இத் தொகுப்பு ஒரு நிறைவைத் தருகிறது என்பது உண்மை.

மேற்சொன்ன அந்தக் கவிதையில், உண்மையில் யாரோ ஒரு சிறுமியினையும் தன் மகளாகப் பார்த்திருக்கலாம், அவருக்கு மகளும் இருக்கிறார், ஆனால் பிரச்சினை முன் வைக்கப்படுகிறது அது தான் பிரதானம்.

சென்னை எனும் நகர் தன்னை நீட்டிப் பெருக்கும் பூகோள வசதியைப் பெற்றிருக்கிறது. நாளை விழுப்புரம் கூட சென்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம்.இருந்து விட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா? தன்னை இப்படி விரிவு படுத்த முடியாத கொல்கத்தா, மற்றும் பழைய மும்பை நகரங்களின் குடும்ப வாழ்வும், சென்னையின் குடும்ப வாழ்விற்குமான வித்தியாசம் உங்களுக்குப் புலப்படுகிறதா?? அந்நகரங்களில் இருக்கும் குடும்பங்களுடைய நபர்களுடைய எண்ணிக்கையும், சென்னையின் நுயூக்ளியர் குடும்ப அமைப்பாக இருப்பதற்கே வாய்ப்பு இருப்பதில் வித்தியாசம் புலனாகிறது அல்லவா!! அப்படியென்றால் அவர்களின் (கொல்கத்தா போன்ற நகர வாழ் மக்களின்) வாழ்க்கைத் தரம், நுகர்வுப் பண்பு, விழாக்கள், காதல், காமம், பொருளாதாரம், நெருக்கடி என்ற அளவில் எனறெல்லாம் வித்தியாசம் வருமல்லவா? இங்கே சென்னையில் தான் மூன்று பேருக்கு மேல் ஒன்றாக வாழ்வது என்பது நெருக்கடியான வாழ்க்கையாக மாறிவிட்டது போன்ற மாயை இருக்கிரது, ஆனால் சற்று தொலைவில் உள்ள நகரங்களிலோ ஒன்றாக இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வரை சேர்ந்து வாழ்வது புத்திசாலித்தனமான அல்லது பொருளாதாரச் சமரசத்திற்கான அணுகுமுறையாக நடுத்தர வர்கத்தில் கருதப்படுகிறது. இது மாறாத நமது குடும்ப அமைப்பு என்று எடுத்துக் கொண்டாலும் சரி தான். இல்லை புதிய வழிமுறை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு இடத்தில், குடும்பங்களாலேயே நமக்கு இடைஞ்சல், பிரச்சினை, உடைத்து வர வேண்டிய நாகரிக, அறிவின் நிர்பந்தம் ஏற்படுகிறது என்றும் சொல்லலாம். வேறு ஒரு இடத்தில், அதே குடும்பங்களால் மற்ற நெருக்கடிகளில் இருந்து, வாழ்வியல் சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்கும் சமுதாய, பொருளாதார மற்றும் சூழலியல் நன்மைக்கான நவீன யுக்தியாகக் கூட குடும்பங்களின் அமைப்பு உதவுகிறது என்று சொல்லும் புதிய/பழைய பார்வைகள் உலகமயமாக்கலுக்கு மாற்றாக ஒலிக்கின்றது (மேலை நாடுகளிலும் கூட). ஒரே கோட்பாட்டை மேற்கோளிட்டு இங்கு ஏன் நீ நிற்கவில்லை (அமைப்பினை உடைத்து) என்று ஒரு நவீனவாதி சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த வகையில் Old wine in new bottle தான் இந்த தொகுப்பு….

 

– ஜீவ.கரிகாலன்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular