Monday, December 9, 2024
Homesliderதீவிரவாதிகள்...!

தீவிரவாதிகள்…!

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

முடிவில்லாத ஓட்டமாக துரத்தலின் வேகம் இன்னும் அதிகரிக்க, அந்த சிறுவனும் பயத்துடன் இன்னும் வேகம் கூட்டி மூச்சிரைக்க ஓடினான். உயிருக்கு பயந்து ஓடும் சிறிய புள்ளி மானைத் துரத்தும் புலியைப் போல அந்த போலீஸ்காரர் புலியின் பாய்ச்சலில் அசுரத்தனமாய் வேகம் கூட்டி அவரும் மூச்சிரைக்க துரத்திக்கொண்டு வந்தார். அந்த சிறுவன் தன் கையிலிருந்த ரொட்டியை இன்னும் அழுத்திப் பிடித்துக் கொண்டான். உடல் நிலை சரியில்லாமல் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தன் தாயின் பசியைப் போக்க அந்த ரொட்டியை அவன் திருட வேண்டிய சூழ்நிலை. அம்மாவுக்குத் தெரிந்தால் இதை சாப்பிடக்கூட மாட்டார்கள். ஆனாலும் பொய் சொல்லியாவது அம்மாவை சாப்பிட வைக்கணும். சட்டென்று முதுகில் இடிபோல் விழுந்தது அடி. சிறுவன் தெறித்து விழுந்ததில், கையில் இருந்த ரொட்டி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது.

ஷாட் கட் ஆகி , அடுத்த நொடியில் பெரிய கால்கள் திரையில் ஓடியது. கொஞ்சம் கொஞ்சமாக ஜும் ஆகியது கேமரா. பின்னாடி போலீஸ் ஜீப். மெல்ல கேமரா மேலேறி அவன் முகத்தை குளோசப்பில் காட்ட, கதாநாயகன் ஆடியன்ஸ்சைப் பார்த்து சின்னப் புன்னகையுடன் கை அசைக்க , கரகோஷத்தால் தியேட்டர் அதிர்ந்தது.

“தமிழ்நாட்டு போலீஸூக்கு நா யாருனு காட்டறேன்..”

தன் ஸ்டைலில் பாடி லாங்க்வேஜுடன் ஏற்ற இறக்கத்துடன் அந்த வசனத்தைப் பேச இன்னும் அதிர்ந்தது தியேட்டர். திரையில் கதாநாயகர்கள் ஒண்ணு போலீசை உண்டு இல்லை என்று ஆக்குவார்கள். அல்லது அவர்களே உத்தம போலீஸாக வந்து நீதியை நிலை நாட்டுவார்கள்.

தன் நண்பனுடன் சேர்ந்து காதர் அலியும் கை தட்டினான். பிறகு, “நம்ம போலீஸின் லட்சணம் இப்பிடித்தாண்டா இரிக்கிது..” என்றான்.

“அது ஊருக்கே தெரிஞ்சதுதானே..கொள்ளையடிக்கிறவனையும், கொலை செய்றவனையும், வழிப்பறி செய்றவனையும், ஊரையடிச்சு உலைல போடுறவனையும் புடிக்கக் கையாலாகாது. காலைல அவசரமா டூ வீலர்ல வேலைக்குப் போறவனப்புடிச்சு நிறுத்தி லைசென்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கானு கேட்டு பணம் பறிப்பாணுங்க…..” என்றான் அஷ்ரஃப் எரிச்சலுடன்.

“முக்கியமான ஒண்ண விட்டுட்டியே..”

“என்னது….லாக்கப் கொலைகளா.. ?”

“அதவிட முக்கியமானது ! அப்பாவி முஸ்லிம்களப் புடிச்சு துன்புறுத்தி , தீவிரவாதிகளா முத்திரை குத்துறது…..!”

“ஒசாமா பின்லேடன்களை உருவாக்கிட்டு இருக்கிறதே ஜார்ஜ் புஷ்கள்தானே..! இது அவுங்க முக்கிய அஜண்டா அது இந்தக் கணக்குல சேராது.. அது தனிக் கதை…தமிழக ஸ்காட்லாந்தின் ஸ்பெஷல் சாதனை!” என்று காதர் அலி சிரிக்க , அஷ்ரப் பலமாகச் சிரித்தான்.

சிரித்துவிட்டு ,“தமிழக ஸ்காட்லாந்தின் ஸ்பெஷல்னு சொல்லாத ஒட்டு மொத்த இந்திய போலீசும் இந்த விசயத்துல இப்பிடி சதி செய்றதுல மட்டும் ரொம்ப ஸ்பெசல்தான்..!” என்றான்.


பசி வயிற்றைக் கிள்ளியது. தளர்ச்சியால் நடக்கக் கூட முடியவில்லை. அவன் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது. வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. அனல் காற்று தகித்துக் கொண்டிருக்க, வெக்கையாக உணர்ந்தான். தாகத்தால் தொண்டையும் வறண்டு விட்டது. முகம் கழுவி, கொஞ்சம் தண்ணீர் குடித்தால் கொஞ்சம் களைப்பு தீரும். காசிருந்தால்தான் ஒரு வாய் தண்ணீர் குடிக்கக் கூட குடிக்க முடியும். வீதியில் இருக்கும் குழாயைத் திருப்பினால் தாகம் தணிக்கலாம் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. ஒரு வாய் தண்ணீர் குடித்து தாகம் தணிக்க இப்போது பதினஞ்சு ரூபாய் வேண்டும். தவிச்ச வாயிக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுக்கக் கூட மனமில்லாது மனிதம் சுருங்கி விட்டது. உலகமயமாக்கலின் அசுர வளர்ச்சி ! அப்படியே அருகில் இருந்த திண்டின் மீது மடிந்து உட்கார்ந்தான் .

இப்போது அவன் இருக்கும் கோலத்தைப் பார்த்தால் போலீசுக்கு சந்தேகம் வரும். பேரைக் கேட்டதும் , மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இழுத்துக் கொண்டு போய்விடும். மீண்டும் சிறைக் கொடுமையை அனுபவிக்க வேண்டும். அவனை சிலர் சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தபடியே சென்றனர். அவன் நினைத்தது சரியாகிவிட்டது. இனியும் இங்கு உட்கார்ந்தால் ஆபத்து. எழுந்து நடக்க முயன்றான். முடியவில்லை. குடித்துவிட்டு போதையில் தள்ளாடுவதாகத்தான் நினைப்பார்கள். முதலில் உடனடியாகத் தண்ணீர் குடித்தாக வேண்டும். அப்போதுதான் இங்கிருந்து நகரவே முடியும். மயங்கி விழுந்து விடுவோமோ என்கிற பயம் ஏற்பட, உடல் நடுங்கியது.

என்ன ஒரு வேதனை. இப்படியொரு அவலமான நிலைமைக்கு வாழ்க்கை தன்னை கொண்டு வந்து விட்டதை நினைக்கும் போது மேலும் வலித்தது. தன்னையும் தன் குடும்பத்தையும் அவமானப்படுத்தி குடும்பத்தையே சிதைத்து தன் வாழ்க்கையை நாசம் ஆக்கி இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்ட போலீசை பழி வாங்க வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் இந்த நிலையிலும் இன்னும் கனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. போலீஸ் மீது ஏற்பட்ட கோபம்தான் அவனை இப்படி மாற்றி விட்டது. இருந்தும் அவனுக்குள் வெறுப்பும் அந்த வன்மமும் இன்னும் தீர்ந்தபாடில்லை. கொஞ்சமும் குறையவில்லை..!


காதர் அலியின் சினிமா மோகத்திற்கு அவன் நண்பர்களும் ஒரு காரணம். பட்டறையில் வேலை இல்லையென்றால், உடனே சினிமா கிளம்பிவிடுவான் தினேஷ். ஒரு போதும் அவன் தனியாக தியேட்டருக்குச் சென்றதே இல்லை. துணைக்கு யாராவது ஒரு நண்பன் வேண்டும். பெரும்பாலும், ராஜாதான் அவனுக்குத் தோதான நண்பன். அவன் இல்லாத போது காதர் அலி மாட்டிக் கொள்வான். இப்படியாக காதர் அலியும் ஒரு சராசரி சினிமா ரசிகனாக மாறிப்போனான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபட ஆரம்பித்தான். ரமலான் நோன்பு காலங்களில் அவன் நண்பர்களைத் தவிர்த்து விடுவான். இதை ஏன் தொடர்ச்சியாகக் கடைபிடிக்கக் கூடாது என்கிற சிந்தனை அவனை ஆட்கொண்டதில் மாற்றம் உண்டானது. அதன் பிறகு ஞாயிறுகளில் மட்டுமே நண்பர்களுடன் சினிமா என்றாக்கிக் கொண்டான்.

பாப்பநாயக்கன் பாளையத்தில் மோட்டார் பம்ப்செட் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் டர்னராக பணிபுரியும் காதர் அலி , அவன் வசிப்பிடமான அல்அமீன் காலனியிலிருந்து தினம் சைக்கிளில் சென்று வருவான். டவுன் ஹாலில் நடைபாதையோரம் சின்னதாய் பெட்டிக்கடை போட்டு ஆண்டாண்டு காலமாக ரெடிமேடு துணி வியாபாரம் செய்து வரும் வாப்பா சாகுல் அமீது தன் கடைக்கு பல முறை அவனை அழைத்தும் அவனுக்கு அந்த வியாபாரம் பிடிக்காததால் மறுத்து விட்டான். இதற்காக வாப்பாவிடம் தினம் திட்டு வாங்கியிருக்கிறான். உம்மாவும் தினம் அவனை நினைத்து சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது. சரி வாப்பா இப்படிக் கூப்பிடுகிறாரே வியாபாரத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் வாப்பாவுடன் கடைக்கு சென்றான்.

சாயங்காலமானால் போதும் மாமூல் கேட்டு வரும் போலீஸின் தொல்லை அவனுக்குப் பெரிய இம்சையாகத் தோன்றியது. ஏன் இந்த நடைபாதை ஏவாரிகள் இதை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருக்காங்க ! போலீசார் வருவதைக் கண்டதும் அவசரம் அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவதும் அல்லது ஓரம்கட்டி வைப்பதும் அவர்களிடம் பல்லிளித்துக் கெஞ்சுவதும் அவர்கள் பொருட்களைக் காலால் எட்டி உதைப்பதும் , கண்டபடி ஏசுவதும்…..ச்சே ! இதென்ன ஒரு பொழப்பு…….வெறுப்பாக உணர்ந்தான். இதற்கும் வியாபாரம் ஆனாலும் ஆகாட்டியும் தினம் மாமூல் பெற்றுக்கொள்கிறார்கள். காசையும் வாங்கிக் கொண்டு, பொருட்களை எட்டி உதைப்பதும் , லட்டியால் தட்டி விட்டு கடையை எடுக்கச் சொல்வதும் என்ன நியாயம்..? வாப்பா இதை எப்படி இத்தனை ஆண்டுகளாக சகித்துக் கொண்டிருக்கிறரோ…… அந்த சிறு வயதிலேயே காதர் அலி இதை ஒரு பெரிய அவமானமாக உணர்ந்தான்.

நடைபாதைக் கடைக்காரர்கள் மீது அனுதாபம் பிறந்தது. பாவம் அவர்கள்.! பிழைக்க வேறு எந்த வழியும் இல்லாததால்தானே வயிற்றுப்பாட்டுக்காக இப்படி தினம் மழையிலயும், வெயில்லயும் கிடந்து நாய் பிழைப்பு பிழைக்கிறார்கள்… சொந்தக் காசைப்போட்டு இப்படி போலீசிடமும் , பெரிய கடைக்காரர்களிடமும் ஏச்சும் , பேச்சும் வாங்கி அவர்கள் ஏவாரம் செய்ய வேண்டிய நிலைமைக்கு வருத்தப்பட்டான். இந்த ஏவாரத்தை வாப்பா நம்மையும் பண்ணச் சொல்கிறாரே… என்று கொஞ்சம் எரிச்சல் கூடியது. பொதுவாகவே எல்லா பொது இடங்களிலும் எல்லை மீறும் போலீஸின் அணுகுமுறையும் அவர்களின் அராஜகம் குறித்தும் அவனுக்குள் ஒரு உறுத்தல் எழுந்தது. போலீசின் மீது ஒரு வித வெறுப்பு இங்கிருந்துதான் அவனுக்குள் வேர் விட்டது.

சில நாட்களாக லேசாகப் புகைந்து கொண்டிருந்தது திடுமென ஒரு நாள் பற்றிக்கொண்டது வழக்கம் போல பெரும் நெருப்பாக ! அங்கே இங்கே என்று எங்கும் வெட்டு, குத்து, கொலை என்று நகரமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. நிம்மதியற்றுப் போய் மக்கள் தவித்துக் கொண்டிருந்தனர். வெளியே சென்றால் வீடு திரும்பும் வரை வீட்டில் உள்ளவர்கள் என்ன ஆச்சோ.. எதாச்சோ என்று பதை பதைத்தவாறு காத்துக்கொண்டிருக்க, குழந்தையைத் தொலைத்து விட்டு தவிக்கும் தாயைப் போல அமைதியை இழந்து தவித்துக் கொண்டிருந்தது நகரம்.

இருந்தாற்போல இப்படித்தான் திடும் என கிறுக்குப் பிடித்துவிட்டதைப் போலாகிவிடும் நகரம்.! மதக் கிறுக்கு ! இரண்டு பக்கமும் ஒரு பாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுத்தான் ஓய்வார்கள் ! அந்த நாட்களில் மக்களின்பாடு படு திண்டாட்டமாகி விடும். மக்களுக்கு நிம்மதியே இருக்காது. அதற்குத் தகுந்த மாதிரி நாளிதழ்களும் பிரச்சனைகளை ஊதிப்பெருக்கும். அதுவும் ஒரு பக்க சார்பாகவே செய்திகளைத் திரித்து வெளியிடுவதில் இந்த தினசரிகளுக்கு அவ்வளவு சந்தோஷம். பிரச்சனைகளுக்கு வழி ஏற்படுத்துவது மட்டுமல்ல, சின்னப் பிரச்சனைகளைக் கூட பெரிதாக்கி இரண்டு பக்கமும் மோதலை உண்டாக்குவதற்கும் இந்த ஊடகங்களும் ஒரு காரணம்!

கலவரம் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போனதால், நகரம் தன் இயல்பு நிலைக்கு கொஞ்சம் திரும்பியிருந்தது. எத்தனை நாட்களுக்குத்தான் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பது. இரவுக் காட்சி சினிமா போகலாம் என்று தினேஸும், ராஜாவும் காதர் அலியைத் தேடி வந்தார்கள். அந்த வாரம் ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. காதர் அலிக்கு விருப்பம் இல்லை. நிலைமை சரியில்லை என்று அவன் உள்மனம் எச்சரித்தது.

” வண்டியிருக்கல்ல…… போயிட்டு வருவோம்டா..” என்றான் அஷ்ரஃப்.

சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போது, “எங்க மொவனே இன்னேரத்துல…?” என்றது உம்மா.

” எங்கயுமில்லம்மா வந்துறேன்..”.

பின்னயும் பின்னயும் உம்மா எச்சரித்தது. “இன்னும் பிரச்சன தீர்ந்தபாடில்ல.. இன்னேரத்துல எங்கடா போறே…? நேரம் கெட்ட நேரத்துல கண்ட பக்கம் போகாதேனா கேக்கவே மாட்டயாடா நிய்யி…வாப்பா என்னத்தா திட்டும்.” உம்மாவின் பேச்சை அவன் கேட்கவில்லை.

கே.ஜி தியேட்டர் காம்ப்ளக்ஸ் இரவுக் காட்சிக்கு கூட்டமே இல்லாமல் காத்து வாங்கிக்கொண்டிருந்தது . “என்னடா படம் செம கடி போல…! கூட்டமே இல்ல.. வேற படம் போலாம்டா..” என்றான் காதர் அலி. நண்பர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் பேசியும், பாதி தூங்கியும் படம் பார்த்தான் காதர். எப்போதும் இரவுக் காட்சி சினிமா சென்றால், பாதிப் படம்தான் பார்ப்பான். மீதிப் படம் தூக்கத்தில் போய்விடும். நண்பர்கள் தட்டித் தட்டி எழுப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனாலேயே இரவுக்காட்சி செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவான்.

படம் முடிந்து திரும்பும் போது வின்சென்ட் ரோடு சந்திப்பில் வண்டி சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸிடம் மாட்டிக்கொண்டார்கள். தினேசையும், ராஜாவையும் விசாரித்துவிட்டு அனுப்பிய போலீஸ், காதர் அலியையும், அஷ்ரபையும் பெயரைக் கேட்டு, ஓரம்கட்டி நிறுத்தியது..!

நண்பர்களைப் போகச் சொன்னவுடன், “சார் ! நாங்க நாலு பேரும்தா சார் ஒண்ணா சினிமா போயிட்டு வர்றோம்……” அஷ்ரஃப் கெஞ்சும் தொனியில் சொன்னான். எரிச்சலுடன் அவனை நோக்கிய அந்த காவலர், “கொஞ்சம் விசாரிக்கணும்…. அப்பிடி நில்லு..” என்றார் மிரட்டும் குரலில்.

ஏற்கனவே நடந்த கலவரத்தில் கலவரக்காரர்களை கைது பண்ணாமல், சம்பந்தமே இல்லாத முஸ்லிம் இளைஞர்களைப் பெருமளவில் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது போலீஸ். அந்த கோபமும் இப்போது சேர்ந்து கொள்ள எரிமலை போல குமுறிக் கொண்டிருந்தான் காதர் அலி. அவன் முகக் குறிப்பு அஷ்ரப்க்கு இதை உணர்த்தியது. ஏதாவது பேசி காரியத்தைக் கெடுத்து விடுவானோ என்ற பயம் ஏற்பட , அஷ்ரஃப் மெல்ல அவனை நோண்டி குறிப்பால் உணர்த்தி எச்சரிக்கை செய்தான். குளிர் மிக அதிகமாக இருந்தது. நடுக்கத்தைக் குறைக்க கைகளைக் கட்டிக் கொண்டு அஷ்ரஃப் நின்றிருந்தான்.

“ஏண்டா….இவுனுகளுக்கு பயந்து கை கட்டி நிக்கிரியாக்கும்….?” கோபத்துடன் மெல்லக் கேட்டான் காதர்.

“குளுருதுடா….அதான்..” என்றான் அஷ்ரஃப்.

அந்த வழியாக வந்த எல்லா வண்டிகளையும் நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்த காவலர்கள் யாரையும் நிறுத்தி வைக்காமல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் . நாம் முஸ்லிம் என்பதால்தான் நம்மை இப்படி வேண்டும் என்றே நிறுத்தி வைத்து போலீஸ் அவமதிக்கிறது என்பதை உணர்ந்த காதர் அலிக்குள் சுர்ரென்று கோபம் கொப்பளித்தது. அது பின் விளைவுகள் எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் அவனிடமிருந்து சட்டென்று வெளிப்பட்டது.

“இன்னும் எவ்வளவு நேரம் சார் இப்பிடியே நிக்கிறது..?” போலீசைப் பார்த்து கடுப்புடன் கேட்க வைத்தது.

கோபம் பொங்கத் திரும்பிய அந்த காவலர், “ என்னடா எகத்தாளமா..ம்..?” என்றார்.

“பின்ன எங்கள மட்டும் ஏன் சார் நிறுத்தி வைச்சிருக்கீங்க..?”

“ஓ..! அப்ப நீ அந்த இயக்கத்துக்காரனா…? வாடா…இங்க….? ” மிகுந்த கோபத்துடன் அவனை அழைத்தார் அந்தக் காவலர்.

“டே சும்மருடா…! சார்…சார்…..நாங்க எந்த இயக்கத்துலயும் இல்ல சார். அவன் எப்பவும் இப்பிடித்தா சார்..” என்று கெஞ்சியபடி அஷ்ரஃப் முன் வந்தான்.

“எங்கட வேல செய்றீங்க….?”

“நா ஜவுளி ஏவாரம் செய்றன் சார். அவன் ஒர்க் ஷாப்ல வேல செய்யிறான் சார்.”

“ஏன் அவன் வாயைத் தொறக்கமாட்டானா..? டே இங்க வா..” காதர் அலியை அழைத்தார் அந்த குண்டான காவலர்.

காதர் மெல்ல வந்தான். “உன் லைசென்ஸ் கொண்டா..”

“வண்டி என்னது சார்….நான்தான் ஓட்டிட்டு வந்தேன் சார். என்கிட்ட லைசென்ஸ் இருக்கு சார்..” என்றபடி அஷ்ரஃப் லைசென்ஸை எடுத்து நீட்டினான்.

“டே ! நீதண்டா வண்டி ஓட்டிட்டு வந்தே…..லைசென்ஸ் எங்கடா..?” காதர் அலியைப் பார்த்து வன்மம் பொங்கக் கேட்ட அவர் உதட்டில் இளக்காரத்தனமான மெல்லிய சிரிப்பைக் கவனிக்கத் தவறவில்லை அவன்.

“இல்ல சார்.. எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது சார். இவன்தான் ஓட்டிட்டு வந்தான் சார்….” காதர் அலியின் வாயிலிருந்து பல சார்கள் வந்தது.

பையன் பயந்துட்டான்….ம்……அது…… என்கிற நினைப்பு அந்த காவலருக்குள் ஓடிக் கொண்டிருந்ததை அவரின் முகக் குறிப்பிலிருந்து அஷ்ரஃப் உணர்ந்தான்.

எப்படியோ ஆளை விட்டால் சரி…..என்று நினைத்துக் கொண்டு கெஞ்சல் பார்வையுடன் அந்தப் போலீஸ்காரரைப் பார்த்தான்.

“உங்க ரெண்டு பேத்தையும் சந்தேகக் கேஸ்ல புக் பண்ணலாமாடா..?” நக்கலாக அவனைப் பார்த்துக்கேட்டார்.

அஷ்ரஃப் அழும் நிலைக்கு வந்துவிட்டான்.” சார் ! பிளீஸ் சார்….மன்னிச்சு விட்டுருங்க சார்…. நாங்க எந்தத் தப்பும் பண்ணல சார்..” மிகப் பணிந்து கெஞ்சினான் அஷ்ரஃப். காதர் அலி இன்னும் அப்படியே விட்டேத்தியாக நின்று கொண்டிருந்தது அந்த குண்டு காவலரின் கோபத்தை தணிக்கவிடவில்லை. அஷ்ரஃப் அவனைப் பார்த்து கண்ணைக் காட்டினான். காதர் மெல்ல இந்தப் பக்கம் நகர்ந்து வந்து , “சார்…..சார்…” என்றான். பசி வேறு வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. அந்த எரிச்சல் வேறு.

“ஏற்கனவே கலவரம் கலாட்டானு சிட்டில ஒரே அக்கப்போரா இருக்கு. இன்னும் பிரச்சன தீர்ந்தபாடில்லை. நாங்க கெடந்து அல்லாடிட்டிருக்கோம். இந்த சமயத்துல துலுக்கணுக்களுக்கு செகண்ட் ஷோ சினிமா கேக்குது இல்ல..?” இருவரும் எதுவும் பேசவில்லை. காதர் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். இந்தப் போலீஸ்காரன் வேணும்னே எகத்தாளப்பேச்சு பேசிட்டிருக்கான். சப்பென்று ஒரு அறை அறைந்தால் என்ன.. அல்லது எட்டி ஒரு உதை. சினிமா கதாநாயகன் போல யோசித்தான் காதர் அலி.

இரண்டு மூன்று நாட்களாக காதர் அலி உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருந்தான்.. எவ்வளவு திமிர் ! நம் மீது எவ்வளவு வெறுப்பு இவுனுகளுக்கு….! அதன் பிறகும் எவ்வளவு நேரம் வேணும்னே நிற்க வச்சாணுங்க..! அதிகாரத் திமிர். இப்படியாக ஒவ்வொரு சம்பவங்களும் அவனுக்கு போலீஸ் மீது வெறுப்பைக் கூட்டிக் கொண்டேயிருந்தது. அன்று வீடு வரும் போது நள்ளிரவு மூணு மணியானது. உம்மா தூங்காமல் முழித்துக் கொண்டே இருந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டு, வாப்பா எழுந்து வந்து கண்டபடி திட்டிக்கொண்டே அடிக்க வந்தார்.

உம்மாதான் “சும்மருங்கணு…” என்று தடுத்தது. “ஏம் மொவனே இவ்வளவு நேரம்..?” உம்மாவின் முகத்தில் இன்னும் பதட்டம் இருந்தது. அவன் உண்மையை மறைத்து, “ வண்டி பஞ்சராயிருச்சுமா…..தள்ளிட்டே வந்தோம்..” என்றான்.

“காலங்கெட்டுக் கெடக்கு…. அப்படியென்னடா உங்களுக்கு சினிமா வேண்டியிருக்கு..?” நள்ளிரவு என்று கூடப்பார்க்காமல் வாப்பா கத்தினார். அவன் பதிலேதும் சொல்லவில்லை.

“சாப்பிட்டயா மொவனே..?” உம்மா வாஞ்சையுடன் கேட்டது. இல்லை என்று தலையாட்டினான். “ சாப்பிடாமக் கொள்ளாம அப்டி சினிமாக்குப் போணும். ஏண்டா..” மறுக்கவும் வாப்பா ஆரம்பித்தார். ஏதாவது பதில் சொன்னால் வாப்பா கத்திக்கொண்டே இருப்பார் என்பதால் காதர் அலி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.

“சரி உடுங்கணு….வா மொவனே சாப்புடு….வா..” அவனுக்கு சாப்பாடு போட அடுப்படிக்குள் நுழைந்த உம்மாவின் பின் அவனும் சென்றான்.

நகரில் மதக்கலவரம் நடக்கும்போதெல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் மட்டும் வேட்டையாடப்பட்டு கைது செய்யும் போக்கு தொடர்ந்து கொண்டேருந்தது. அமைப்புக்களில் இருந்தவர்களின் நிம்மதி பறிபோனது. போலீஸ் அவர்களை சீண்டிக்கொண்டே இருந்தது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வெறுப்பும் கோபமும் சுழன்று கொண்டேயிருந்தது. காதர் அலி குரூப் நண்பர்களில் ஒருவனான பெல்ட் வியாபாரியான அப்துல் காதர் என்கிற “பெல்ட் காதரை “ இப்படித்தான் சந்தேக கேசில் கைது செய்துவிட்டு , எங்கெங்கோ நடந்த குண்டு வெடிப்பு இவன்தான் காரணம் என்றும் அதற்கு மூளையாக செயல்பட்டவன் இந்த “பெல்ட் காதர்’ என்றும் “பெல்ட் பாம் “ தயாரிப்பதில் இவன் நிபுணராக செயல்பட்டு வந்ததால் “பெல்ட் காதர்” என்று அழைக்கப்படுகிறான் என்றெல்லாம் இஷ்டத்திற்கு பொய்த் தகவல்களை ஜோடித்து அப்பாவியான அப்துல் காதரை குற்றவாளியாக்கியது போலீஸ். மக்களும் அப்படியே நம்பினார்கள்.

பெல்ட் வியாபாரம் செய்வதால் நண்பர்கள் அடையாளத்திற்காக வைத்த பெல்ட்காதர் என்கிற அடைமொழிப் பெயரை அப்படியே திரித்து ‘பெல்ட் பாம் தயாரிப்பதில் வல்லவன்’ என்று அவனை குற்றவாளியாக்கி ஒட்டு மொத்த மக்களையும் நம்ப வைத்தது போலீஸ். ‘பெல்ட் பாம்’ இங்கே எங்கு எப்போது வெடித்தது…? சாதாரண குண்டைக் கூட கண்ணில் பார்த்திருக்காத ஒரு அப்பாவி பெல்ட் பாம் தயாரிப்பதில் எப்படி நிபுணர் ஆனார். என்றெல்லாம் எந்த ஒரு புலனாய்வு பத்திரிக்கைக்காரனும் கேள்வி கேட்கவில்லை. புலனாய்வு செய்யவில்லை. போலீஸ் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்து மேலும் பொய்த் தகவல்களைச் சேர்த்து பரபரப்பு செய்தியாக்கி, நெம்பர் ஒன் புலனாய்வுப் பத்திரிகை என்று விற்பனையைக் கூட்டி காசு பார்த்தார்கள். எப்போதும் இவர்களின் குறிக்கோள் இதுதான்.

இவனை எப்படி தேர்ந்தெடுத்து கைது செய்தார்கள் என்பது யாருக்கும் எதுவும் விளங்கவில்லை ! பிறகுதான் செய்தி மெல்ல வெளிப்பட்டது. தண்ணீர் பிரச்சனை தொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பாக சாலை மறியல் நடந்தபோது முன்னாடி நின்று கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தான் அப்துல் காதர். போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்தது. பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொஞ்சம் ஆவேசமாக கைநீட்டிப் பேசினான் அப்துல் காதர். போலீஸ் அடிக்கப் பாய்ந்தது. தடியடி நடத்த தயாரானது போலீஸ்.

மறியலில் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காதர் அலிக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கேறியது. பிரச்சனைக்காக போராடும் மக்கள் மீது வன்முறையை பிரயோகிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் இப்படித்தான் போலீஸ் அராஜகம் செய்கிறது. மக்கள் போராடினால். பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று அமைதியாக பேச்சு வார்த்தை நடத்துவதே இல்லை. அதை விட்டு உடனே தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பதுதான் அதன் முதல் வேலையாக இருக்கிறது. அதிகாரத் திமிர். யாரும் தட்டிக் கேட்பதில்லை. நாலு இடங்களில் மக்கள் திருப்பித் தாக்கினால்தான் இதற்கு விமோசனம் கிடைக்கும். அவனுக்குள் இப்படியாக எண்ணங்கள் ஓடியது . போலீஸ் மீது அவனுக்குள் இருந்த வன்மமெல்லாம் ஒன்று சேர எதையும் யோசிக்காமல் சட்டென்று கூட்டத்திற்குள் புகுந்து “அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க..” என்று போலீசைப் பார்த்து கத்தினான். சட்டென்று அவன் காலரைப் பற்றிப்பிடித்த ஒரு போலீஸ்காரர் அவனை இழுத்துக் கொண்டு சென்றார்.

காதர் அலி திமிறினான். பிடி இறுகியது. போலீஸ் ஜீப்பை நோக்கி அவனை இழுத்துச் செல்வதை உணர்ந்தான். இந்த நேரத்தில் கைது செய்தால் அவ்வளவுதான் விடமாட்டார்கள் எந்தக் கேஸில் வேண்டுமானாலும் சிக்க வைத்து விடுவார்கள் என்கிற பயம் அவனுக்குள் ஒரு துணிச்சலை ஏற்படுத்த,பலம் கூட்டி திரும்பி அந்த போலீஸ்காரரை தள்ளிவிட்டு தப்பித்து ஓடினான் காதர் அலி. எங்கும் நிற்காமல் சந்து பொந்து என்று மாறி மாறி ஓடினான். நல்லவேளை போலீஸ் துரத்தி வரவில்லை என்று அறிந்த பிறகுதான் நிம்மதி அடைந்தான்.

அதன் பிறகு போலீஸிடம் எல்லோரும் சேர்ந்து பெரிய வாக்குவாதம் செய்ய தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது போலீஸ். சிக்னலில் இருந்த சி.சி.டிவி கேமராவில் எல்லாம் பதிவாகிக் கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை. போலீஸ் கவனித்துக் கொண்டது. அதை வைத்து அடையாளம் கண்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் வீடு தேடிச் சென்று அப்துல் காதரை சந்தேக கேசில் கைது செய்து கொண்டு போனது போலீஸ். மற்ற நண்பர்களை விட காதர் அலி மிக வருந்தினான். உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது. போலீசுடன் வாக்குவாதம் செய்த ஒரே காரணத்துக்காக அப்பாவியான அப்துல் காதரையே இப்படி பொய்யான வெடிகுண்டு வழக்கில் கைது செய்த போலீஸ், அவர்களுடன் சண்டைக்குப் போனதும் இல்லாமல், அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிப்போன தன்னை சும்மா விடுமா.. என்று மிகப் பயந்து போனான் காதர் அலி. ஒரு வேளை தன்னைப் பிடிப்பதற்கு பதில் அவனைப் பிடித்து விட்டார்களோ. இன்னும் பயம் கூடியது.

அதன் பிறகு என்ன முயன்றும் அப்துல் காதரை வெளியில் கொண்டு வரவே முடியவில்லை. அவனை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. போலீஸ் அவர்களை அழைக்கழித்தது. அவன் பெற்றோர்கள் கதறி அழுதார்கள். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவும் முன் வரவில்லை. குண்டு வெடிப்பு கேஸ் என்றாலே சமூகம் பயந்து பின் வாங்கியது.

காதர் அலிக்கு போலீஸ் மீது வன்மம் இன்னும் கூடியது என்றாலும், பயமும் விடவில்லை .தன்னையும் போலீஸ் கைது செய்யலாம் என்கிற பயம் அவன் நிம்மதியைப் பறித்தது. வேலைக்குகூடச் செல்லாமல் இரவுகளில் வீட்டுக்கு வராமல் தலைமறைவாக சில நாட்கள் சுற்றிக் கொண்டிருந்தான்.

யாராவது வந்து விசாரித்தாலோ, இரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டாலோ, எழுந்து பயந்து பின்புறம் இருளில் பதுங்கிக்கொள்வான். இதனால் தங்கச்சியின் வாழ்க்கைக்கும் கூட இடைஞ்சல் வரலாம் என்று பயந்தான். இதிலிருந்து எப்படி மீள்வது.. எதுவும் புரிபடவில்லை வாப்பாவும், உம்மாவும் மிக பயந்து போனார்கள். “என்ன மொவனே இப்பிடிப் பண்ணிட்டே…” உம்மா கதறியது.

“இந்த மாதிரிப் பிரச்சனைக்கெல்லாம் போகாதேணு….பின்னயும் பின்னயும் நா உங்கிட்ட பல தடவ சொல்லியிரிக்கேன்….இப்பப் பாரு யாரு கெடந்து அவதிப் படுறது…?” வாப்பா கோபப்பட்டார்.

“நா என்ன வாப்பா தப்பு செஞ்சேன்….? போலீஸ் அவன அடிக்க கை ஓங்குனப்ப போய்த் தடுத்தேன்.. இதுக்குப்போயி என்னப் புடிச்சு தர தரனு இழுத்துட்டுப் போனான் ஒரு போலீஸ்காரன். பயந்து போயி தப்பிச்சு ஓடினேன். ” சொல்லிவிட்டு காதர் அலி குனிந்து கொண்டு அழுதான். உம்மாவும் சேர்ந்து அழுதது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி மறைந்து திரிவது..?

கொஞ்ச நாட்களுக்குப் பின் இனி பிரச்சனை எதுவும் இல்லை என்று இரவுகளில் பயமின்றி மனம் விட்டு கொஞ்சம் தூங்க ஆரம்பித்த நிலையில் , ஒரு நாள் திடுமென நள்ளிரவில் வீடு புகுந்து அவனை கைது செய்தது போலீஸ். “தேடிக்கொண்டிருந்த குற்றவாளி கைது ..” என்று மறுநாள் நாளிதழ்களில் செய்தி வந்தது. சிறையில் கொடுஞ் சித்ரவதை செய்தது போலீஸ். பிணை கிடைக்கவில்லை. மனம் வெதும்பி வாப்பா நோயுற்றார். சிறைக் கொடுமையை விட, தன் குடும்பம் சீரழிந்து போகும் நிலைக்கு வந்து விட்டதை அவனால் தாங்க முடியவில்லை. அழுவதற்கு கண்ணீர் கூட வற்றிவிட்டது ! என்ன செய்வது.. யோசித்தான். விடுதலை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. சிறையில் வாடும் முஸ்லிம்களின் நிலை அவ்வளவு கேவலமாக இருக்கு ! என்னைப் போல எத்தனை அப்பாவி முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது போலீஸ். வாழ்நாள் முழுக்க சிறையில் வைத்தே கொன்று விடுவார்கள். தப்பிப்பதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. ஒரு போலீசையாவது வஞ்சம் தீர்க்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சமாவது மனம் ஆசுவாசம் அடையும். ரவுடி போலீசை அடித்து துவம்சம் செய்யும் சினிமா கதாநாயகர்கள் மனதுக்குள் வந்தார்கள். இதற்காகவே தப்பிக்க வேண்டும். தருணம் பார்த்துக் காத்திருந்தான் காதர் அலி.

வாப்பாவின் மௌத்து அந்த சூழலை உருவாக்கியது. வாப்பா இப்படி குடும்பத்தைத் தவிக்கவிட்டுச் செல்வார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தான் சிறையிலிருக்க வாப்பாவும் இல்லாத தன் குடும்பம் எப்படி மீளும். உம்மாவும், தங்கச்சியும் நிர்கதியாகி விட்டார்களே. எங்கள் குடும்பத்தையே நிர்மூலமாக்கி விட்டதே இந்த போலீஸ். நினைக்க நினைக்க அவனால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. போலீஸ் புடை சூழ வீடு வந்தது. உம்மாவைக் கட்டிப் பிடித்து கதறி அழுதான். அழுது அழுது கண்கள் மட்டுமல்ல முகமும் வீங்கிப் போயிருந்தது. சுற்றிலும் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்க்கப் பார்க்க இன்னும் ஆத்திரம் அதிகமானது. அவன் மீது அனுதாபம் குறைந்து குடும்பத்தினர் அவனை மிக வெறுப்பாகப் பார்ப்பதை உணர்ந்தான். மௌத்தை அடக்கம் செய்து விட்டு வந்ததும் அவனை அழைத்துச் செல்ல போலீஸ் தயாரானது. எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தது என்றே தெரியவில்லை. ஒரு போலீஸ்காரர் கையிலிருந்த அந்தப் பெரிய துப்பாக்கியைப் பிடுங்கி இருக்கும் பலத்தையெல்லாம் திரட்டி மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டான் காதர் அலி. அந்த போலீஸ்காரர் ரத்தம் சொட்டச் சொட்ட திருகி விழுந்ததைக் கூட பார்க்காமல் ஓடினவன்தான். அதன் பிறகு போலீஸ் கண்ணில் படாமல் எங்கெங்கோ மறைந்து திரிந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தான்.

போலீஸ் அவன் வீட்டைக் கண்காணித்துக் கொண்டே இருந்தது. இதனால் நிரந்தரமாக ஒரே இடத்தில் வேலை கொண்டிருந்தான். வெளியிடங்களில் கிடைத்த வேலைகள் செய்து கொண்டு, உம்மாக்கு போன் செய்ய முடியவில்லை. இடம் மாறிக்கொண்டே இருக்க வேண்டியதானது. சிறையில் போலீஸ் அடித்த அடியின் பாதிப்பால் அடைக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் கவனிக்காமல் விட்டதில் இப்போது பெரிய பாதிப்பாகி விட்டது. மருத்துவம் பார்க்கவும் வழி இல்லை. நடை பிணமாக அலைந்து கொண்டிருக்கிறான். போலீசிடமிருந்து தப்பித்து ஓடியது தவறோ…என்றும் கொஞ்சம் வருந்தினான்.


ரொம்பநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தான் காதர் அலி. தளர்ச்சியில் அப்படியே மயங்கிப் படுத்துவிட்டான். “ஏய்.. எந்திரிடா…. யார்ரா நீ..?” யாரோ அவனை உலுக்கினார்கள். மெல்ல கண்களைத் திறந்தான். மங்கலாக காக்கி உருவம் தெரிந்தது. ”கேக்குறனல்ல….தெனாவெட்டாப் படுத்திட்டே இருக்கே..” அந்த போலீஸ்காரர் அவனை எட்டி உதைக்க உருண்டு விழுந்தான். உயிர் போகும் வலி. தடுமாறி மெல்ல எழுந்தான். “என்ன குடிச்சிருக்கியா..?’’.

அவன் பதில் சொல்லாமல் நின்றான். ”திருடனா….நீ..இல்ல பைத்தியமா.. ?” உம் பேரென்னடா.. ?”

காதர் அலி அந்த போலீஸ்காரரை முறைத்துப் பார்த்து விட்டு, ஓங்காரமாக கத்தியபடி “எம் பேரு காதரலிடா . நா திருடனல்ல.. பைத்தியம்டா… அதும் சாதாரணப் பைத்தியம் இல்ல.. உங்களால. தீவிரவாதியாக்கப்பட்ட பைத்தியம்டா..” என்று கத்திக்கொண்டே அந்தப் போலீசை தாக்க முற்பட்டான். அவர் சுதாரித்துக் கொண்டு ஓங்கி ஒரு உதை விட்டார். அப்படியே மல்லாந்து விழுந்தான் காதர் அலி.

கூட்டம் சேர்ந்து திகைத்து நின்றது – எதுவும் புரியாமல்.

மறுநாள் நாளிதழ்களில் பரபரப்பாக தலைப்புச் செய்தி இப்படி..! “போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய தீவிரவாதி பிடிபட்டான்.! நாட்டை சீர்குலைக்க அவன் தீட்டிய சதித்திட்டம் அம்பலம்.!”

. . ***

RELATED ARTICLES

2 COMMENTS

  1. இன்னும் கொஞ்சம் போலிஸின் வன்மம் பற்றி சொல்லியிருக்க வேண்டும். ஏன் முஸ்லீம்களிடம் மட்டுமே தங்களின் கைது வேட்டை..பாசிச கூட்டாளிகள் என்று.

  2. நல்ல அருமையான கதையில் ஏன் இத்தனை பிரச்சார நெடி. அதற்கு பதிலாய் காவலரின் சமூக விரோத குறிப்பாக முசிலீம் விரோத மனப்பாங்கை சிறு நடவடிக்கைகள் மூலச் சொல்லி இருக்கலாம். ஒரு சிறந்த சிறுகதை உலகப்பார்வைக்கு வைக்கப்பட்டதாய் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular