திலுகோத்தி சாலுமா

0

மணி எம்.கே மணி

லுபாத்தி பாலுமா, திலுகோத்தி சாலுமா என்று இசையமைப்பாளர் ரமணி சார் பாடிக் காட்டியதும் முதலில் அட, அட, அட, அட என்றவர் தெய்வா சார் தான். அவர் குரல் தனியாகக் கேட்கும். எல்லோரையும் பார்த்தார். அனைவருமே அந்த மெட்டை சம்மதிக்கிற மனநிலையில் தான் இருந்தார்கள். இது ஒன்றும் அதிசயமில்லை, ரமணி சாருக்கு உடனடியாக தனது டியூனை ஏற்க வைக்கிற அபார உத்தியிருந்தது. படம் பண்ணுகிறவர்கள் யாராக இருந்தாலும் உதாரணத்துக்கு அவர்கள் கொண்டு வருகிற எந்த மெட்டானாலும் அதைப் போலவே போட்டுக் கொடுத்து அசத்தி விடுவார். ஒருவேளை, அதையே கூட போட்டுக் கொடுத்து விடுவதுண்டு. சிருஷ்டி என்கிற பெயரில் அவர் அலட்டிக் கொள்வதில்லை. ஒரு கேச்சிங் வேண்டும், அவ்வளவு தான். அவர் பாடிக் காட்டாத பலுபாத்தி பாலுமா கிடையாது, திலுகோத்தி சாலுமா கிடையாது. மகி வெளியே வந்தான். அணைத்து வைத்த சிகரெட்டில் ஒரு துண்டு இருந்தது. பற்ற வைக்கும்போது உஷாராக மூக்கின் மீது பட்டு விடாமல் நேக்காக கொளுத்துவது இப்ப எல்லாம் அனாயாசமாக கைவசமாகிறது. எப்போ டிபன் தருவான்கள்?

வெங்காய போண்டா. அதே ஜிலேபி. ஒரு சக்கரைக் காப்பி. வயிறு தணிய இதெல்லாம் போதாதா? காலையில் இருந்து அவன் பாஸ்கர் கூட தான் இருக்கிறான். மதியம் அசைவ சாப்பாடு, பிரம்மாதம்.  வர சொல்லியிருந்தார். நடக்கிற படத்தின் புரொடியுசருக்கு தோஸ்த்து போட்டுக்கொண்டு தெய்வா சார் என்கிற நண்பர் தினமும் வருவதாகவும், தான் அறிமுகம் செய்யும்போது நீ ஒரு வணக்கம் வைத்து விடு என்றும் அவனிடம் சொல்லியிருந்தார். அறிமுகம் எல்லாம் காலை டீ டைமிலேயே முடிந்து விட்டது. பாசு சொன்னாம்பா உன்னப்பத்தி ! இரு போலாம் என்று காலையில் இருந்து உட்கார வைத்ததற்கு காரணம் புரிந்தது. டிபன் பிளேட்டுடன் தொப்பை முன்னே வர ஆனை நடை நடந்து இவர்கள் பக்கத்தில் வந்த தெய்வா சார் பாஸ்கரிடம் வாங்கிட்டியா என்று கேட்டார். பாஸ்கர் அவரிடம் தலையசைத்து விட்டு மகியின் தோளை அணைத்துக் கொண்டார். “ இன்னைக்கு பார், கீர் கிடையாது. உன் ரூமுக்குப் போவோமா? “

தெய்வாவின் காரை நிறுத்த ரொம்ப நேரம் அலைந்து திரிய வேண்டியிருந்தது.

உடல்நலமோ, மனநலமோ சமநிலையில் இல்லாமல் இருந்த தம்பியின் வாழ்வின் ஒரே நோக்கம் தொலைக்காட்சி பார்ப்பதுதான். மகியே அவனை நெருங்குவது கிடையாது. சுதந்திரப் புறா ! அவன் இருக்கிற அறையை வெளியே மூடிவிட்டு ஹாலில் வசதிகள் செய்து கொடுத்தார்கள்.  மரியாதை நிமித்தம் அவர் மட்டுமே தனியாகக் குடிப்பதை சகிக்க ஆகாமல் ஒரு சாக்கு கிடைத்ததும் சிக்கன் வாங்க மகியே படியிறங்கிச் சென்றான்,  துர்கா அக்கா பிசியாக இருந்தார்கள். அவனை அவர்களால் ஒரு கடைக்கண் பார்வை பார்க்க முடிந்ததும் ஒரு சிக்கன் என்று சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டான். ஒன்றிரண்டு பெண்கள் பிளாட்பாமில் வீடு போல வசதியாக உட்கார்ந்து கொண்டிருந்து சாப்பிட்டார்கள். மகியைப் பார்த்து ஒரு சொட்டு புன்னகை காட்டின அமுலு கையில் ஒரு தட்டை வைத்துக் கொண்டு பிச்சைக்காரி போல அக்கா அக்கா என்று சொல்லிக் கொண்டிருந்தாள். “ இருடி, தரேன் ! எனக்கு என்ன பத்து கையா இருக்கு? “ ஆனால் அவள் வேலை செய்வதை கவனித்தால் தெரியும், பத்து கைகள் தான் இயங்குகின்றன. அவளது கணவர் இலையை எடுத்துப் போட்டு பிளேட் கழுவி, காசை வாங்கிப் போடுகிறார் தான். போதாது. இந்த ராணி தெருவில் இந்தப் பிள்ளைகள் மற்றுமுள்ள குடும்பங்கள் அனைத்துமே காலையிலும் இரவிலும் பசியாற்றிக் கொள்ளுவது இங்கே என்றாகி விட்டது. ஒரு வியாபாரம் நடக்கிற கடை போல இல்லை என்பதை சற்று நேரத்தில் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொருவரும் தனது அதிகாரம் செல்லுபடியாகிற குடும்பமாக வந்து கலைந்து போவார்கள்.

இதற்கு முன்பிருந்த வீட்டில் வாடகை தொல்லை வந்து அதை காலி செய்து இங்கே வந்து பாத்திரங்களை இறக்கி முடித்த உடனேயே மகியும் ராஜாவும் தங்களிடம் இருந்த கடைசிப் பைசாவில் டிபன் வாங்கினார்கள். வேறென்ன? இட்லி தான் கட்டுப்படியாகும். கடை மூடப் போகிற நேரம். இவர்கள் சாப்பிட்டு கை கழுவும்போது பார்சல் பொதியைக் கொடுத்த அக்கா மகியைப் பார்த்து ஒன்று சொன்னதும் அவன் திடுக்கிட்டான்.

“ பணம் இல்லன்னா கூட பரவால்ல. என்ன வேணுமோ வாங்கிக்கோங்க. பணம் கெடைக்கறப்ப குடுத்துக்கலாம் ! “

மறுநாள் காலையிலேயே நான்கு பேருக்கும் கடனாகக் கிடைத்த பூரி, வடகறி அவ்வளவு அமிர்தமாக இருந்தது. இந்த மாதிரி ருசியில் டிபனெல்லாம் கடைசியில் எப்போது சாப்பிட்டோம் என்று பேசிக் கொண்டார்கள். அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நடுவில் கல்லூரி படிக்கிற சுதாகருக்கு அவன் வீட்டில் கொடுக்கிற பணம் வந்த போது கொஞ்சம் கொடுத்ததுடன் சரி. அவர்கள் கேட்பதில்லை. அவர்களின் கணவர் வந்து தலை சொறிந்தபடி ஏதாவது சொல்ல வந்தாலும் அவர்கள் அவரைக் கண்டித்து விடுவார்கள். மகி மற்றும் நண்பர்கள் என்றில்லை, இவர்களைப் போல எவ்வளவு பேரோ? இந்த நடனப் பெண்களுக்குமே கூட காசு வருவது எப்போதெல்லாமோ தான். மேற்படி தொழில் செய்யப் போகிற பெண்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம், அவர்களின் குழந்தைகள் தட்டு தூக்கிக் கொண்டு நேராக இங்கே வந்துவிடும்.

சிக்கன் ரெடி.

மகி சொல்ல மறந்து போயிருந்தாலும், பெப்பர் போட்டே செய்திருந்தார்கள்.

தெய்வா பல ஆங்கிளிலும் பல்டி போட்டுக் கொண்டு குடித்தார். புர்று புர்று என்று சிகரெட்டில் புகை விட்டார்.  தயிர் சோறு தின்பது போல அவர் சிக்கனைத் தின்றது விசித்திரமாக இருந்தது. இவற்றுக்கெல்லாம் நடுவில் சினிமாவைத் தாண்டி ஒரு விஷயத்தைப் பற்றிக் கூட அவர்கள் பேசவே இல்லை. சளைக்காமல் பாஸ்கர் ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். மகியிடம் கூட அவர்கள் பல சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக் கொண்டார்கள். உதாரணமாக சூளைக் கறுப்பன் எந்த சினிமா நடிகையின் ஒரு பக்க முலையை அறுத்துக் கொண்டு போனான், சிலோன் லைலா என்பது யார் போன்ற விஷயங்களில் மிகுந்த அபிப்ராய பேதங்கள் எழுந்தன. அக்காள் தங்கையை ஒரே நேரத்தில் வரவழைத்து அவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தாமல் சாட்டையால் மட்டுமே அடித்து திருப்பி அனுப்பின ஒரு தலைவரின் கதையைச் சொல்லும்போது அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்ட தெய்வாவிற்கு தொடர்ந்து பிடிக்க சிகரெட்டுகள் இல்லை. கீழே சென்று வாங்கி, ஒரு வீட்டின் காலி மதில் சுவர் அருகே நின்று பற்றவைத்து அந்த தலைவர் அருளிய நெக்லஸ்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர், துர்காவைப் பார்த்து விட்டார். அந்த நகையை எப்படி மாந்தரீகம் செய்து கொடுத்து அவள்களை அவர் கோடீஸ்வரர்களாக்கினார் என்கிற கதையை முழுமை செய்து முடிக்காமல் இடது பக்கக் கரத்தை சுவரின் மீது வைத்துக் கொண்டு வலது பக்கக் காலை ஆட்டத் துவங்கி ஒரே திசையை நோக்கி சிகரெட்டின் புகையை நெஞ்சு வரை இழுத்து, புர்ரென்று புகையை ஊதியது படு பயங்கரமாக இருந்தது. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து கொண்டு இதற்கெல்லாம் வெட்கப்பட்டுக் கொண்டு நழுவிச் செல்ல முடியுமா? என்றாலும் துர்கா அக்கா அவர்களை நோக்கி ஒரு துளி இடைவெளி விடாமல் துளைத்தவாறே இருந்த அந்தக் கொடூரமான மந்தகாசப் புன்னகை, அதை மன்னிக்கவே முடியாது.

கடை பூட்டுகிற நேரம். எல்லோரும் நச்சரிக்கிறார்கள். வேலை கிடந்து ஆட்டி வைத்ததில் புடவை கிடப்பதெல்லாம் ஒரு மாதிரி தான். வயிற்றையும் இடுப்பையுமா கவனிக்க முடியும். பக்கத்திலேயே எரிகிற மஞ்சள் பல்பின் வெளிச்சம் அவர்களுடைய கண்களில் உதடுகளில் மின்னியது. தெய்வ சிகாமணி இப்போது அவர்களை அப்படியே புரட்டிப் போட்டு அல்லது நிற்க வைத்து செய்வதைப் போலவே இருக்கிற முக பாவத்துக்குப் போயிருந்தார். குடிக்காமல் நிற்கிற யாரும் இதைக் கண்டுபிடித்து விட முடியும் என்பதை அவர் அறியவில்லை. கொஞ்சம் விட்டால் இடுப்பைப் போட்டு ஆட்டி விடுவார் என்று கற்பனை செய்து விட்ட மகி கத்தியே விட்டான்.

“ போலாமா? “

அவர் எதில் ஒன்றிலிருந்தோ தாவி, மண்ணுக்கு வந்து விழுந்து சுதாரித்து என்னவோ சொல்ல முயலுகையில் மகி முறுகினான். அங்கிருக்கிற சில பையன்கள் காரின் மொத்த டயர்களையும் அறுத்துப் போட்டு விடுவார்கள் என்பதாகச் சொன்னான்.

அவருடைய கண் அவனை வெறித்தது.

முழுவதுமாகத் திரண்ட அந்தப் பகையை தீர்க்கமாக ஏறிட்டு நின்றான் மகி.

இருவரும் தங்களுடைய பார்வைகளை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை.

மகியை ஒருமுறை பார்த்துக் கொண்ட பாஸ்கர் தெய்வாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போனார்.

அதற்குப் பின்னர் அந்த வீட்டுக்கும் பல மாதங்களாக வாடகை கொடுக்கப்படவில்லை. அட்வான்ஸ் பணம் தீருகிற அன்று வீட்டுக்காரருடன் கூட ஒரு ஐந்து பேர் படியேறினார்கள். மொத்த பொருட்களையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு போனார்கள். பொருட்களை பக்கத்து வீட்டின் அருகே இருந்த காலி இடத்தில் வைத்து விட்டு தம்பியை வேறு ஒரு தம்பி வீட்டுக்கு விட்டுவிட்டு வந்தார்கள். இரவு மாடியில்  படுத்தார்கள். மகி லண்டனில் இருக்கிற ஒரு நண்பனிடம் பணம் கேட்டிருந்தான். அது வந்து கொண்டிருக்கிறது. பேர் சொல்லித் தேடி வருவார்கள். கோட் வார்த்தை சொல்ல வேண்டும். பணம் கிடைத்து விடும். துர்கா அக்காவிற்கு பணத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பி விடலாம். மேலே நடந்ததை எதுவும் சொல்லாமல் அன்று கூட இட்லி வாங்கி சாப்பிட்டார்கள்.

மாடியில் நல்ல காற்று.

மனமும் உடலும் சோர்வு.

நல்ல உறக்கம்.

தட்டி எழுப்பி இதென்ன சத்திரமா என்று கேட்டு ஒரு கூட்டம் அவர்களைக் கீழே இறக்கியது. நள்ளிரவு. கடைகள் எல்லாம் சாத்தியிருந்தன. துர்கா அக்காவின் வீட்டில் ஒரு சிறிய விளக்கின் ஒளி தெரிவது போல, தெரிந்தது போல தோன்றியதும் விரைவாக நடந்தார்கள். கொடுக்க வேண்டிய தொகை, நான்கு பேர் டிபன் சாப்பிட்டது என்று சொன்னால் நம்ப முடியாதது. அவர்கள் ஏதாவது ஒரு பெரிய விஷயத்துக்கு இந்தப் பணத்தை நம்பிக் கொண்டிருக்கக் கூடும். என்ன நினைப்பார்கள் என்பதை மகியால் கற்பனை செய்ய முடியவில்லை.

மறுநாள் லண்டன் நண்பனை போனில் பிடிக்க முடியவில்லை.

மகியும் ராஜாவும் ரோட்டில் சுற்றி பார்க்குகளில் படுத்து ஒவ்வொரு நாளும் தேர்வு செய்த பல இடங்களிலும் இரவு தங்கி அவமானத்தில் உழன்ற கதையை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். யார் யாரோ தங்களால் முடிந்த அளவில் சோறு போட்டு உயிரைக் காப்பாற்றினார்கள். மகி தனக்கு சினிமா தெரியாது என்று நினைத்துக் கொண்டான். தனக்கு அதெல்லாம் வராது என்று நினைத்துக் கொண்டான். தொடர்கள் எழுதப் போனதும் காசு கிடைத்தது. மகி நினைத்திருந்தால் அந்தக் கடனை கொஞ்சம் கொஞ்சமாகக் கூட அடைத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஒருவிதமான தயக்கம் அதில் நுழைந்தவாறு இருந்து, நாட்களை தள்ளிப் போட்டான். அந்தக் கதை எப்போதேனும் நினைவில் வரும்போது ஒரு நிமிட மௌனம் வரும். அதைத் தாண்டிச்  செல்லுவது தவிர வேறு வழி? ஆனால் ஒருநாள் ஒரு தேநீர் கடையில் யாரோ ஒருவர் தோளின் மீது கரத்தைப் போட, திரும்பிப் பார்த்தவன் திடுக்கிட்டான்.

பயத்தில் மூத்திரமே முட்டிவிட்டது.

அசோக் அவனது பெயர். சந்தேகமென்ன? துர்கா அக்காவின் மகன். அப்போது ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தவன் இல்லை இப்போது. கல்லூரி முடித்து விட்டிருக்கலாம். கல்யாணம் கூடத்தான். திகுதிகுவென்று இளமை முறுக்குடன் பளிச்சென்று இருந்தான். தோளின் மீது போட்ட கரத்தை எடுக்கவில்லை. அது வலுவாக இருந்தது. அவனது கண்களைப் பார்த்துக் கொண்டு மகி என்னென்னவோ சொல்ல முயன்றான்.

அவன் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை.

“நல்லா இருக்கீங்களா சொல்லுங்க? “ என்றான்.

“ ம்”

“அவ்ளோ தான். அது போதும். அம்மா கேட்டா சந்தோஷப்படுவாங்க.“ என்றான்.

மகி மீண்டும் பல விஷயங்களை சொல்லிப் போகும் போது அதை நிறுத்தி குழல் பணத்துடன் வந்தவர்கள் உங்களைத் தேடினார்கள் என்றான். நீங்கள் பார்க்கிலும் பீச்சிலும் படுத்துக் கிடப்பதாக பலரும் சொன்னார்கள் என்றான். நீங்கள் யாருமே ஏமாற்றுகிற பிள்ளைகள் இல்லையென்று அம்மா சொல்லுவார்கள் என்றான். அவங்க நல்லா இருந்தா போதும், நம்ம காசெல்லாம் வேணா என்று தனது அம்மா சொன்னதை அவன் சொன்னபோது மகி தனது கண்ணீரை மறைக்க அப்படிப் போராட வேண்டியிருந்தது.

அப்பா திடீர் என்று ஒருநாள் இறந்து விட்டார், அம்மாவிற்கு மிகவும் வயதாகி விட்டது. கடை இன்னும் நடக்கிறது என்றான். தங்கையும், தங்கை புருஷனும் அதில் தான் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படித்தானே? இப்பவும் சினிமா இருக்கிறது. சோத்துக்கு சூத்து காயும் சினிமா மக்கள் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் குடல் வெறிக்கு எதையாவது எடுத்துப் போட ஆட்கள் வேண்டாமா?

ராணி தெருவிற்கு இதற்காகவே தஞ்சம் அடைகிற தரித்திரவாசிகள் இருக்கக்கூடும்.

கனி இந்தக் கதையை என்னிடம் சொல்லி முடித்த போது இருவரும் கொஞ்சம் மௌனமாகவே இருந்தோம்.

“ சரி, விடு ! “ என்று முடிக்கவே முயன்றேன்.

“ துர்கா அக்காவை மனசால பலவந்தம் செஞ்ச ஒரு பணக்கார தடியனை எல்லாம் உனக்கு ஆதாயம் இருந்தும் நீ விரோதம் பண்ணிக்கலையா? உன்னால் முடிஞ்சதெல்லாம் நீ பண்ணியிருக்க “ என்றேன்.

அவன் இல்லையென்று தலையசைத்தான்.

“ தெய்வ சிகாமணி வந்துட்டுப் போன மறுநாள் நான் அவங்க கிட்ட பார்சல் வாங்கி திரும்பறப்ப, அவங்க இதுவரை நான் பாத்திருக்காத சிரிப்போட அந்த குண்டன் யாருன்னு கேட்டாங்க. சொன்னனே, மிஷின் மாதிரி இல்லன்னா தெய்வம் மாதிரி எல்லாருக்கும் பசி தீக்கற அன்ன பூரணி அப்ப அவங்க மொகத்தில இல்ல. அப்படியே தன் அழகைப் பூரா தன்னோட மொகத்துக்கு கொண்டு வந்துட்ட ஒரு சாதாரணப் பொம்பிள ! “

நான் அவனை ஏறிட்டேன்.

“ என்னால அது முடியாமப் போனா கூட, எதுக்காக நான் அவங்கள வெறிக்காம இருந்தேன், எதுக்காக அவங்கள ரசிக்காம இருந்தேன், எதுக்காக உங்களைப் பாக்கறப்போ எனக்கு மோகம் வளந்துகிட்டே இருக்குன்னு என் பார்வையால சொல்லாம இருந்தேன்னு நெனைக்கறப்ப தான் எனக்கு கஷ்டம் ஜாஸ்தியா இருக்கு ! நான் சொல்றத உன்னால புரிஞ்சுக்க முடியுதா? “

“ டிரை பண்றேன் ! “

“ ரொம்ப பண்ணிக்க வேணா. முடியலன்னா விட்ரு. இந்த மாதிரி ஏதாவது புரியாமப் போவும்போது நான் ஒரு பாட்டு பாடிக்கறது வழக்கம் “

இருவரும் சேர்ந்து பலுப்பாத்தி பாலுமா, திலுகோத்தி சாலுமா பாடினோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here