Thursday, June 13, 2024
Homesliderதிரு திருக்குமரன் கவிதைகள்

திரு திருக்குமரன் கவிதைகள்

1. ஐம்புலனும் மறவாத அந்நாள்

இன்றும் பூக்கள் மலர்கிறது
வாசம் காற்றில் அவிழ்கிறது
ஆனாலும்
சுவாசத்தில் மட்டும் இன்னமும் மாறவேயில்லை
நாசிக்குள் நின்று விட்ட
கந்தக வாசம்

நிறையப் பாடல்களும், பேச்சுகளுமாய்
அறை நிறையக் கிடக்கிறது இற்றை,
ஆயினுமெம்
செவிப்பறை கிழிந்து வழிந்த
குண்டின் ஓசைகளோ
காலவெளிகளைத் தாண்டி
இன்னமும் காதுகளில்

கட்டிடம் மேவினாலும்
காட்சிகள் மாறினாலும்
சாட்சியாய் இன்றும் கண்ணில்
காட்சிகள் உண்டு, வெண்மண்
செம்மண்ணாகி ரெத்தச் சேறாகி
புகையாயெம்
கனவு மேலெழுந்து கலைந்த காட்சி ஒன்றே
என்றைக்கும் கண்முன்னால் எப்பொழுதும்..

சுவை நரம்பறுந்ததா, சுவையிலா அமுதிதா?
எதுவும் தெரியாத உணவு, கரை நெடுக
பேச்சறுந்து போய் பெரும் மெளனம்
வெறும் வாயால்
ஆச்சரியம் ஏதும் ஆகாதென்றறிவு
வீச்சாக நின்றவர் விடைதந்து
வேகமாய் நாட்களும் ஓடிற்று
ஆனாலும் கூட அறிக, உமையென்றோ
நான் மறந்தாலும் கூட
‘நா’ மறக்காது நாயகரே

தெய்வத்தால் ஆகாத தீராத கவலையிற் தான்
மெய்யிலும் உணர்வுற்று
மெய் வருந்த வழி அமைத்தோம்
உய்வோம் என்றெண்ணித்தான்
உயிரையும் கொடுத்து நின்றோம்
கை நழுவிப் போய்விடுமா கனவு?
எதுவெனினும்
பொய்யில்லை எங்கள் போராட்டம்
என்றைக்கோ
மெய்யுணர்வே மெய்யாகி மீண்டெழுவோம்

ஐந்து புலனும் அவிந்து அடங்கி
சிந்தை மரிக்கும் நேரம் வரைக்கும்
அந்தா நிகழ்ந்த இனப்படுகொலையை
வெந்து எரியும் போதிலும் மறவோம்
எந்த நாளில் எம்முடை விடுதலை
எந்தையர் மண்ணில் பரணியைப் பாடுதோ
அந்த நாள் வரும்வரை ஆவியில் கூட
சொந்தமண் வாசமே சுற்றி வருமடா..

***

2. முடியும் இடத்தில் தொடங்கும்..

இழப்பும், எது செய்தும் மீண்டெழலும் இன்றுவரை
தழலாய், நினைவுகளாய் தகிக்கிறது கண்களுக்குள்

கண்களை மூடினும், திறப்பினும் கண்மணிக்குள்
மண்ணின் விடுதலையே மனக்கொழுந்தாய் ஒளிர்கிறது

ஒளிரும் கொழுந்துக்குள் ஓராயிரங் கதைகள்,
களித்திருந்த வாழ்வும் கந்தகப் புகையாக

புகையும் மேகமாய் கலைந்தெங்கோ போயின்று
பகை மறந்து அரணையாய் போனோமா.?

போனோர் கனவென்ன? போனோரேன் போனார்கள் ?
ஏனவர் மனதுவந்து இத்தனையும் கொடுத்தார்கள்?

கொடுத்ததில் இருந்த கொள்கை இந்நாளில்
எடுத்தாளப் படுகிறதா எவராலும்? விடையுண்டா..?

விடையைக் காண்கின்ற வெளிச்சமுண்டா கைகளிலே?
தடை இருக்கும் அதைத் தாண்டாமல் விடுதலையா..?

விடுதலைப் பயணமென்றும் நெடிதுதான் நாளைக்கே
சடுதியாய் எண்ணுதல் போல் சாளரத்தால் மலராது

மலர்வதற் கென்றுமோர் நாளுண்டு அந்நாளில்
பலர் வந்து தடுத்தாலும் பாரே பிளந்தாலும்

பிளந்து நிலஞ்சிவக்க பிறக்குமெம் தேசத்தில்
கலந்துகொள் ஒரு கையும் கொடு, விடியுமடா..

திருக்குமரன் – ஈழத்தைச் சேர்ந்த இவர் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இவரது சமீபத்திய நூல் “விடைபெறும் வேளை”. அண்மையில் இவரது கவிதைகள் யெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular