சிறியதொரு பிரகாசத்திலும்
தைல மரத்தின் நிழலுணர்கிறேன்
மூட்டுவலிக்கான எண்ணையை சற்றுமுன் திறந்தவர்கள்
அன்பளித்திருக்கிறார்கள்
நெடியதொன்றின் நிழலை பிரியத்துடன்
மருந்து வாசனையோடிருக்கும்
சாயல் தோற்றத்தில்
இறக்கைகள் உதறிக் கொள்வதையும்
இப்போது உணர
அதே வீட்டில் இன்னொருவரும்
கொஞ்சம் எண்ணையை
இரவலாகப் பெற்றுக்கொள்வதின் பொருட்டு
பேசிக் கொள்கிறார்
பார்க்க ஆவலாயிருப்பவனின்
கண்களுக்காக
இரவில் பறக்கும் கிளைகள் மெலிதாக அசைய
மரத்திற்கும் பறவைக்கும் வித்தியாசங்களழித்த மணம் மட்டும்
நீண்டு கமழ்கிறது.
*
யாசிப்பவன் வீதியாக
இது ஆன பின்பு வலிய கரங்கள் தள்ளுகின்றன
அந்நிய தன்மைக்குள்
இருப்பிடம் சார்ந்த உரிமையில்
பூமியை
சொந்தங் கொண்டாடும் வெள்ளொளியின்
தேர்ந்த அடிமை இன்னும் தூங்காமலிருக்கின்றாள்
இரவுக்கும் நிலவுக்குமிடையில்
சரணத்திலிருந்து
பாடலைக் கேட்பவள் முதலிரண்டு வரிகளுக்குள் வடிக்கிறாள்
எதிர்கால இரவின் கருப்பு உருவத்தை
தூர இருந்து கையசைக்கும்
வருங்காலம் தலையில்
மங்கிய குழல் விளக்கை வினோதமாகப் பொருத்தி
யாசிப்பவனின் தூரத்து உறவாக தூக்க கலக்கத்தில்
மீண்டும் ஒருமுறை
பார்த்துக் கொள்கிறது
குறைவுற்ற என் கனவின் கண்கள்
தன்னைக் கசக்கி கசக்கி..
*
வாதத்திற்கிடமானவற்றை நீக்கி உருவாகிய அறையிலிருப்பது
பதினாறு சலவைக்கற்களின் பரப்பு
முக்கியப் பொது வழக்குச்சொற்கள்
கடவுள்
நான்
நீ
ஒத்த உருமாதிரிகள்
விடியுமுன்பே நீக்கப்படுபவை அங்கு
மெல்லரவமுமின்றி வசிக்கும்
நிறைவுறு வளி
காக்கும் யட்சனாக வேடமணியும் அவ்வப்போது
புதுப்பாணியில் வசிக்கிறவன்
உறங்குவது
சாய்வு நாற்காலியில்
விலக்கப்பட்ட தத்துவங்களும்
நன்கு கால்நீட்டித் தூங்குமிடத்தில்
அடுத்தபொழுது உண்ணப்போகும்
ஊன் உணவில் இறைமை தவிர்த்தேதுமில்லை
கழுத்து நீண்ட வல்லூறாகி
ஆசை தளும்ப புசிக்கலாமதை
*
சிரமங்களிற் சிரமம்
முட்டைக்கோசுகள் விளைவிப்பவனை சரசத்திற்கழைப்பது
சற்றேனும் மாறுபடுவதில்லையவன்
காதலுக்கான காலம் கோடையென்பதிலிருந்து
கோசுகள் செழிக்கும் பனிக்காலத்தை
எதிர்நோக்கும் கண்களில் பருத்தவாறிருப்பது
கொத்திலைக்குள் மூடப்பட்ட
உருண்டைக் கனவுகள்
மூன்றாம் உழவை முடித்த அவன்
நிலத்தில் குளிர் நடக்க
எருப்புழுதியெழுந்து
நீண்ட கரை மேட்டிலிருந்து காணும்
காமத்தின் முகமப்பும்
நடுப்பட்டத்திலிருந்து பின்வரும்
இருகண் வேட்கையைக் காணாதவனின்
சொந்த பூமியோரம் வண்டலின் அமிலத்தன்மை
கூடிப் போகிறது
யாரும் காணாதவாறு
மெல்லிய காமத்தினை அறியாது
தவிர்க்கிறவனின் எண்ணமும்
பச்சை
அது அறுவடைக்கு நிற்கும்
அடுக்கு வரிசை இலைகள் மூடிய
பயிர் போலவே இருக்கும்
*
வரும் குறுஞ்செய்திகளில்
வளப்ப நிலத்தின்
சுவையும் மணமும் தெரியும்..
அருந்தும்
தேநீரின் மிடறில் வார்த்தைகளின் அர்த்தங்கள்
தொனிக்கும்
இடையிலிருக்கும் நானென்ற சுவாரஸ்யத்தை
அதிகம் பெரிதாக்குபவனை மன்னிக்கலாம்
நாய் மறியென நினைத்து யாரும்
நடுவே
உடலற்ற சமயம்
தேநீரோடு உரையாடும் சொற்களின்
நீண்ட புள்ளிகளோடான
கோட்டு அடையாளத்தில்
கடந்து போகும் பானத்தின்
ஆவி தவிரவும் மீதி ஏதிருக்கும்..?
*
ஆறும் செய்திகளில் தவறும் ருசி
நண்பகல் நெருங்கும்
பதினொன்றரை
வாசிப்பாளருக்காக காத்திருக்கும் செய்தித்தாள் பேரபத்தம்
போகன் வில்லாவின் சருகுகள்
மூடத்தொடங்க
எடுக்கப்படாத செய்தித்தாள்கள்
அமானுடம்
சீமானும் சீமாட்டியும் இல்லாத நாளிது
என யாரும் நினைக்கலாம்
யாதொரு அமைதிக்கும் பங்கமின்றி இருப்பவை
வளர்ப்புப் பிராணிகள் இல்லாத சூழல்
பற்களால் நகங்களால் குதறப்படாமல்
காற்றிற்கு ஐந்தாம் பக்கத்தை திறக்கிறது ஒரு பகுதி
காற்றிற்கும் மெல்லிய நகங்கள்
முளைக்கிறது
இரண்டு தேநீரோடு வழக்கமாக சுவைபடும் செய்திகள்
பகலைக் கடிகின்றன
அன்றைக்கான ருசி அன்றைக்கானது
நீண்ட தூக்கம் அல்லது நீண்ட பயணம் கொண்ட வீடுகள்
பழைய செய்திகளோடு தவறிய
புதிய தேநீரைக் குடிக்க வேண்டுமென்பது ஏலாது
*
மூடாக்கினை விலக்கிக்கொள்ளும்
தளர்ந்த உள் தேவாலயத்தின் மேற்புற சரளைக் கற்களில் நகரும்
முதுகின் ஓட்டுக்குள்
தலை இழுத்துக் கொள்ளும்
பழைய புன்னகைகள்
இரு தென்னைக்கருகில் கரையொதுங்கிய படகை
ஏறெடுக்க
கவிழ்ந்த பொழுதில் மிச்ச ஒளி
ஒன்றின் உருவ அளவை
ஒப்பிட்டுக் காண்பவர் ஏமாறுகிறார்
உருள் வடிவ
சிப்பி நண்டை நினைத்து
உப்பு நீரில் முகம் கழுவும் தளர்வு
சொட்டளவு நீரருந்த
இல்லாத தாகத்தினை ருசிக்கும்
கடலின் கிளைமொழியில்
நனையும்
தற்போது உமணர்களின்
பல இணை கால்கள்
*
முடக்கு வாதமுடைய சொற்களை
என்மீது இறக்கிய பின்
அவனுடைய
தளர்வடைந்த முகம் சற்று ஒளி கூடுகிறது
இனி ஊனமுற்ற வார்த்தைகளை
அவனிலிருந்து
மாறுபட்ட நானே தூக்கியலைய
வேண்டுமென்பது அவனெண்ணம்
கிடைத்தற்கரிய
பொருளென
அதை நான் வைத்துக் கொண்டாடி
அனைவரிடமும்
காண்பிக்கத் துவங்க
தகா சொற்கள் இம்மெய்க்குள் கூடடைந்து
பெரிய சுவாசப் பைகளில் காற்று
நசிந்து வெளியேறும்
காலச்சக்கரம் ஒரு சொல்லால் மட்டுமே
அமைந்த மனிதனை
யாருக்கேனும் அறிமுகம் செய்தால்
அழைக்கும் பெயர்ச்சொல்
ஒன்று அவனுடையது
இல்லை என்னுடையது
*