Sunday, July 21, 2024
Homesliderதல புராணம்: தொன்மம் துளாவும் நவீனப் படைப்பு

தல புராணம்: தொன்மம் துளாவும் நவீனப் படைப்பு

ஜோ.டி.குரூஸ்

மீபத்தில் வாசிக்கக் கிடைத்த எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் ‘தல புராணம்’ என்னை வெகுவாகவே சிந்திக்க வைத்து விட்டது. மேலோட்டமான வாசிப்பில் தொன்மம் சார்ந்த மற்றொரு கதையாகத் தெரிந்தாலும், உள்ளார்ந்த வாசிப்பில் இந்தக் கதை நாம் இதுகாறும் நம்பி வரும் தொன்மங்களின் மேல் வைக்கப்பட்ட ஆரோக்கியமான விமரிசனமாகவே படுகிறது. நவீன இலக்கியப் படைப்பாளி எதைச் சொல்கிறான், எதைச் சொல்லாமல் சொல்கிறான், எதைப் பூடகமாக உணர்த்துகிறான், அகம், புறமென அவன் அடுக்கடுக்காய் செல்லும், சொல்லும் விடயங்கள் தொன்மமாக இருந்தாலும், இக்கண நிகழ்வாக இருந்தாலும் வேறொரு கண்கொண்டு பார் என்கிறானே!  

வழக்கம்போல ஆசிரியரை அழைத்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால் போதுமா, கண்டிப்பாகப் போதாது என்று என் உள்மனம் எனக்குச் சொல்லியது. அமைதியாக இருப்போம் என மனதை இரண்டு நாட்கள் மெனக்கெட்டுக் கட்டிப் போட்டேன். ஆனால், கதையைத் திரும்பத் திரும்ப வாசித்தேன்.  ஒருவேளை இன்று முத்தையன் சாமி, குமராத்தா, லெச்சுமியோடு என் கனவில் வந்தாலும் வரலாம்.

இந்தக் கதையில் நான்கு விதமான கூறுகளை என்னால் உணர முடிந்தது.

அவிழும் முடிச்சுகள்

தென்பகுதியில் அய்யனார் வழிபாடுகள் மிகவும் பிரபலம். நானறிய முத்தையன் போன்ற அய்யனார்களை, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கும் மக்களும், பெயரக் கேட்டாலே பயந்து ஒடுங்கும் மக்களும் இன்றும் இருக்கிறார்கள். இந்த இருசாராரையும் தாண்டி, முத்தையன் வழிபாடு என்ற காலகாலமாய்த் தொடரும் நம்பிக்கை சார்ந்த கருத்தியலை உள்ளார்ந்து, ஊடுருவிப் பார்த்திருக்கிறது இப் படைப்பு. சரி, தவறு என்றில்லாமல் உண்மையை உரக்கச் சொல்லி, தொன்ம வழிபாட்டின் மேல் ஆய்வு செய்த நவீன இலக்கியமாய் உயர்ந்து நிற்கிறது.

பெண் அரசியல் –

வடநாடு, தென்நாடு என்றில்லாமல் இசக்கிகள் வழிப்பாட்டின் மூல ஆதாரமே வாழ்தலின் துயரம். செய்த கொடுமைகள் தம் தலைமுறையைப் பழிவாங்கி விடக்கூடாது என்பதற்கான தொடர் ஆற்றுப்படுத்தல். பெண் அடிமைத்தனம் சங்க இலக்கியமான ‘நற்றிணைக்கு’ முன்பிருந்தே இருந்த சமூகக் கொடுமை. அன்றும் இன்றும் பாதகங்கள் நடந்தேறும் வேளைகளில், கையெடுத்துக் கும்பிட்ட தெய்வங்கள், ஏனோ கண்மூடியே கிடக்கின்றன. முத்தையன்தான் கொடும்பாவி என்றால், அவரது மூத்த குடியாள் குமராத்தாள் துரோகத்தின் உச்சம். இவர்களின் கொடுங்குணம் அறம்சார்ந்து வெள்ளேந்தியாய் வாழும் பலவேசத் தாயாருக்கும், பச்ச மதலையான லெச்சுமிக்கும் தெரியாமல் போனது ஆச்சரியமில்லை தான்.

மொழி –

நாய் பெற்ற தெங்கம் பழம் போலத்தான் இன்றைய மொழிப் பயன்பாடு இருக்கிறது. தமிழ் என்ற பதத்தைக்கூட றமிழ் என்று உச்சரிப்பதில்தான் பெருமிதமடைகிறது, படித்துப் பொருளாதாரத்தில் முன்னேறிய இன்றைய சமூகம். தல புராணத்தில் மொழி அதன் பழம் வழமையில் மிளிர்வது கண்டு பூரித்துப் போனேன். செம்புலம், வலசை, சீர்பாகம், வேடுவம், சாம்பவம், சூலிக்குடம், மூளிப்பருந்து, கொட்டுமுழக்கு என அனைத்து உபதலைப்புகளுமே சமூக வாழ்தலின் அங்கதமான குறியீடுகள். கரைபுரண்டு ஓடுமம்மா கொத்தாளன் ஆளும்பூமி… அற்புதம்.

கதை சொல்லும் உத்தி –

தகப்பனான ஆண்டிநம்பியிலிருந்து, முத்தய்யா வரை, வாழ்வு குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த பாலையாக, அன்பின் பாலையாக நகர்கிறது. முன் பின்னாக கதை சொல்லுவது, ஒருவகை பழக்கமான உத்தியானாலும் சம்பவங்கள் அங்கங்கே நிகழ்த்திக் காட்டப்பட்டிருப்பதுதான் படைப்பின் வெற்றி. முன் முடிவுகள் ஏதுமில்லா ஒரு வாசகனை, அவன் கையைப் பிடித்து இழுத்து வந்து கதை நிகழும் உலகோடு ஊடாட வைப்பது என்பது யாருக்கும் எளிதில் கிடைக்கும் வரமல்ல. கதை ஆரம்பித்த ஒருசில வரிகளிலேயே பழி தீர்த்த சங்கையாவுக்கு இருந்த பதட்டத்தை வாசகனுக்கும் ஏற்படுத்தி விடுகிறார் கார்த்திக் புகழேந்தி எனும் தேர்ந்த கதை சொல்லி. கழுவக் கழுவ கரையாத சங்கையாவின் குறுவாள் ரத்தம், படுபாதங்கள் தொடரும் இந்தச் சமூக வாழ்வின் குறியீடு.   

முத்தையாவின் இப் பாதகச் செயலுக்குச் சூழலே காரணம் என்று நாம் சாதாரணமாக ஒதுங்கிவிட முடியாது. பெண்களைப் போகப் பொருளாய், நுகர்வுப் பொருளாய் பார்த்து, ரசித்துத் தூய்ப்பது அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் அவலம். கொடும் பாதகம் செய்தவனைப் பழிதீர்த்தவன் தலைமுறைகளால் சாமியாய் வழிபடப்படுவது மரபு. தல புராணத்தில் முத்தையன், சங்கையன், பலவேசத்தம்மள், லெச்சுமி என எல்லோருமே சாமிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. காலகாலமாய் நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த உள்ளடி ஆன்மீக அரசியலை யார் செய்திருப்பார்கள்?

ஆசிரியர், தான் எடுத்துக் கொண்ட கருவின் உண்மையை அதன் போக்கிலேயே நிகழ்த்திக் காட்டி, வாசக ஊகங்களுக்கும் வழிவிட்டு நிற்பது மனதளவில் பெரும் நிம்மதியைத் தந்தது. ஆனால், வெகுகாலமாய் அவர் வருந்திச் சுமந்த கருவின் பாரத்தை அப்பாடா என இறக்கி வைத்து, பின் விட்ட பெருமூச்சை, படைப்பில் உணராமல் இருக்க முடியவில்லை. கடந்த பல ஆண்டுகளாய் அவரது செயல்பாடுகளை அவதானித்ததில், பதிவில் வராத அடித்தள மக்களின் வாழ்வியல் பேசும் எத்தனையோ வாய்வழிப் பாடல்கள் ஆசிரியரிடம் கொட்டிக் கிடக்கும் என்றே எண்ணுகிறேன். அவற்றில் நம் கண்ணகி போல், தன் பழியைத் தானே தீர்த்து நிமிர்ந்த வீரப் பெண்களின் கதைகளும் இருக்குமே, அவர்கள் பற்றியும் இதே சுவையோடும், அக்கறையோடும் ஆசிரியர் வரும் காலங்களில் பதிவு செய்வார் என்றும் நம்புகிறேன்.

வாஞ்சையுடன்

ஜோ டி’ குருஸ்.

கட்டுரை ஆசிரியர், கன்யாகுமரி மாவட்டம் உவரியில் பிறந்தவர். சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஆழி சூல் உலகு, கொற்கை உள்ளிட்ட ஏழு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

தலபுராணம் கதையின் இணைப்பு..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular