Thursday, June 13, 2024

தலைமுறை

கார்த்திக் புகழேந்தி

துரை மாவட்டத்திலே, கம்பம் பள்ளத்தாக்கிலே, குமுளிப் பெரும் பாதையில் அப்போது மொத்தமே ஐந்து லட்சம் வரவு செலவுகொண்ட பஞ்சாயத்தான சின்னமனூரில் இருந்துதான் சிவகாமி ஆச்சியைக் கட்டிக்கொண்டு வந்தார் ஞானதிரவியம் பாட்டையா.

பாட்டையா ஞானதிரவியம் கணக்கஸ்தர். எதையும் இருப்பு, எண்ணிக்கை, விலாவரிகளோடுதான் சொல்லுவார். சின்னமனூரைப் பற்றி அவரிடம் யாராவது வாயாடினால், என்ன பெரிய ஊர், மொத்தமே ஐயாயிரம் வீடுகள், வீட்டுக்கு நாலுபேரென்று இருபதாயிரம் ஜனங்கள், கும்பிட மூணு கோயில், குடிக்க இருபது கிணறு, குந்திப் படிக்க பத்துப் பள்ளிக்கூடங்கள், நானூறு தெருவிளக்கு, அதுக்குக் கீழே உக்கார்ந்து படிப்பு சொல்லிக் கொடுக்கத் தெரிந்தது பதிமூணு வாத்திமார்கள். அதிலே, நம்மாளுக ஒருத்தர் மகதான் சிவகாமி. என்னைக் கட்டிக்கிடுறியான்னு அவுங்க ஐயன் கேட்டப்போ, பேதிலபோவா என்ன எளவுன்னே புரியாம ஆட்டும்னு தலையாட்டிருக்கா. இன்னியவரை அதுமட்டும் மாறல. “என்னட்டி நா சொல்லுதது சரிதான… ஏட்டி சின்னமனூர்காரி..”

”என் சீவன எடுக்காம உடமாட்டீரா.. வெறுவளாங் கெட்ட மனுசா” சிவகாமி ஆச்சி உள்ளறையில் இருந்து எதித்துக் குரல் கொடுப்பாள். வெளியாள் யாராவது பார்த்தால் பாட்டையாவுக்கும் ஆச்சிக்கும் எல்லாத்திலயும் ஏழாம் பொருத்தம் என்றுதான் தோணும். ஆனால், விசயம் அப்படியல்ல. இன்றைக்கும் பொழுது சாய்ந்தால், ரெண்டுபேரும் கழுத்தாமட்டையைக் கட்டிக்கொண்டு, தம் பேரன், பேத்திகள் முன்னால் கூச்சநாச்சம் இல்லாமல் அப்பியாசம் பேசுகிறவர்கள்தான். சிவகாமி ஆச்சி வெகுளியாய் சிரிப்பாள். பாட்டையா முள்ளிங்கியாய் கிணுகிணுப்பார். ரெண்டு பேருக்கும் அப்படியொரு ரசபாவம்.

ஆண், பெண்ணென்று வரிசைக்கிரமம் பெற்றெடுத்த மகன் மகளுக்கெல்லாம் நல்லபடி சம்பாதித்துப்போட்டு, படிக்க வைத்து, கல்யாணம் கட்டிக்கொடுத்து, வெளியூர், வெளிநாடு என்று அனுப்பி வைத்துவிட்டவர்களுக்கு, இப்போதைக்கு முடித்துக் கட்டவேண்டிய பெரும்பாடுகள் என்று ஏதும் இல்லை. அதனாலேயே, பழனி மலை அடிவாரத்தில் ஏர் பத்தாயிரம் என்று எப்போதோ வாங்கிப்போட்ட தோப்புக்குக் கீழ்புறத்தில் வீடு எடுத்துக் கட்டிக்கொண்டார் பாட்டையா. எல்லாம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், போடி என்று அலைந்து திரிந்துசெய்த தென்னை யாவாரத்தில் சேர்த்த காசு. நூதனமாய் சிக்கனம் பிடித்துப் போட்ட சீரெல்லாம் சிவகாமி ஆச்சிக்குத்தான் சேரும். 

அன்றைக்கு, பொழுதாண்ட நேரத்தில் பாட்டையா தோப்புக்குக் வடபுறம் செழித்தோடிய தண்ணீர் பாத்தியை மேல்புறம் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். இருட்டு மெல்ல கவ்விக்கொண்டு வந்ததும், பாத்தியிலே கைகால்களைக் கழுவிக்கொண்டு, கரையேறப் போனார். வீட்டு வாசல் நடையில் நின்று, சிவகாமி ஆச்சி, சிலுவர் போணியில் காப்பியை ஆத்திக்கொண்டிருந்தாள். “இன்னும் என்ன அங்க” என்று இருட்டுக்குள் குரலைத் தூது அனுப்பினாள். அவள் பேச்சுக்குக் கூட ஒரு பேச்சாக நாயும் இரண்டு முறை குலைத்து வாலாட்டியது.

“அதுக்குள்ளவாடி ஒனக்கு விளக்க அணைக்கணும், செத்த இரு வாரேன்” என்று காத்துக்குக் கேட்காமல் முணகினார். கழுத்தில் போட்டிருந்த பச்சைத் துண்டை உதறி, ஈரத்தைத் துவட்டிக்கொண்டார். முகவாயில் ஷேவிங் செய்த வெள்ளைத் தாடி, முள் முள்ளாய் நீட்டியிருந்தது. போன வாரம்தான், பெரிய பேரனுக்குப் மகள்வழிப் பேத்தியை முடித்து வைக்கலாம் என்று தன் மாப்பிள்ளையிடம் பேசிவிட்டு வந்திருந்தார்.

கேணியின் அடியாழத்தில் மோட்டார் கிண்’ணென்று இரைந்துகொண்டிருந்தது. இருட்டுக்குள் பூச்சிபொட்டு எதுவும் அங்குமிங்கும் தாவுகிறதா என்று டார்ச் லைட்டைப் பற்றவைத்து, பார்த்தபடியே மோட்டார் ரூமை நோக்கி நடந்தார் பாட்டையா. ஸ்விட்சை நெருங்கி அணைக்கப் போகிற நேரமும் மொத்த ஊருக்கும் மின்சாரம் போகவும் சரியாக இருந்தது.

*

”ஏங்க அப்பாவும் அம்மாவுக்கும் என்னமோ ஆகிடுச்சாம். பழனி தோட்டத்துக்கு ஆம்புலன்சு போலீஸெல்லாம் வந்திருக்காங்களாம். எனக்கு இப்பவே பதறுதுங்க. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.”

கூச்சல் கூப்பாட்டுக்கு மத்தியில் புருஷன் ஜெயராஜிடம் விஷயத்தைச் சொல்லி முடித்தாள் தங்கக்கனி. காலையில் அவளுக்குத்தான் முதல் போன் வந்தது.  “தோட்ட வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டான். ஆச்சியையும் பாட்டையாவையும் அடித்துப்போட்டு, களவாண்டு போயிருக்கிறான். அப்புவையும் ஆச்சியையும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. ஆள் யாரையும் உள்ள விடல” என்று பக்கத்துக் காட்டுக்காரர் மகன் சங்கர்தான் அவளுக்குப் போனடித்துச் சொன்னான்.

ஜெயராஜ் பழனிக்குப் பக்கத்திலே சினிமா கொட்டகை வைத்திருந்தான். ப்ளஸர் காரில் அடித்துப் பிடித்து வீடுவந்து சேர்ந்தவன் பொண்டாட்டியைக் கூட்டிக் கொண்டு, முதலில் தோட்ட வீட்டுக்கு விரைந்தான். அவர்களுக்கு முன்பாகவே, தங்கக்கனியின் தம்பி சேர்மக்கனி தோட்டத்துக்கு வந்துசேர்ந்திருந்தான். மூணு போலீஸ் ஜீப், மோப்பநாய் வண்டி, ஏழெட்டு பைக்குகள், கும்பலாய் ஊராட்கள் வாசல் கேட்டைச் சூழ்ந்து நின்றுகொண்டிந்தார்கள்.

”எம்மா எம்மா.. எப்பா எப்பா” என்ற அழுகைக் கச்சேரியோடு கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு, பிள்ளைகளைச் சேர்த்தணைத்து, தோட்டத்துக்குள் நுழையப் பார்த்தாள் தங்கக்கனி. பெரியவளை வீட்டில் விட்டுவிட்டு, பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட பிள்ளைகளை மட்டும் அரை யூனிபார்மில் அவளோடு கூடச் சேர்ந்து இழுத்து வந்திருந்தார். அதுகள் என்ன விபரம் என்று பிடிபடாமல் நடந்த களேபரத்தைப் பார்த்து, தாத்தா, பாட்டி என்று அரற்ற ஆரம்பித்திருந்தார்கள்.

காவலர் பழனியாண்டி ஜெயராஜையும் தங்கக்கனியையும் உள்ளே விடச் சொல்லி, அவர்களிடம் விவரம் விசாரிக்க ஆரம்பித்தார். சேர்மக்கனி ஒரே கத்தலாக அவள் கிட்டேவந்து, “எக்கா, அப்பாவயும் அம்மாவயும் கொன்னு போட்டானுங்கக்கா” என்று கதறினான்.

தங்கக்கனி மூச்சு நின்றுபோவதைப்போல, “சேர்மா, என்ன சொல்த, என்ன சொல்த” என்றபடி அவன் நெஞ்சுச் சட்டையைப் பற்றி இழுத்து மூர்ச்சை ஆனாள். ஜெயராஜ் முன்வந்து அவளைத் தாங்கிப்பிடித்து, வரப்புத் தரையில் உட்கார வைத்தான். பிள்ளைகள் இப்போது அம்மா அம்மா என்றார்கள். “ஏப்பா ஆள் யாராச்சும் தண்ணி கொண்டாங்க, பொம்பளையாள் மயங்கிவுழுந்துட்டா” என்று கூட்டத்துக்குள் சொல் பறந்தது. வேடிக்கை பார்க்க வந்தவர்களில் கூலிக்குப் போய்க்கொண்டிருந்த பெண் ஒருத்தி, தன்னிடமிருந்த பழைய கோலா பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.  

*

செல்வேந்திரன் மும்பையில் இருந்து புறப்பட்டிருந்தான். பாட்டையாவின் மூத்த மகன்வழிப் பெயரன். வேலையிலிருந்த நிறுவனத்தின் மீட்டிங்கைப் பாதியிலே முடித்துவிட்டு, கோயமுத்தூர் ப்ளைட் பிடித்து, அங்கிருந்து காரில் பழனிக்குப் புறப்பட்டபோது, பொழுது மசங்கியிருந்தது. சித்தப்பாக்கள், அத்தைகள், தம்பித் தங்கைகள், அவரவர் பிள்ளைகள் என்று எல்லாபேரும் பக்கத்துக் காட்டுக்காரர் வீட்டு முற்றத்தில் அவன் வருகைக்குக் காத்திருந்தார்கள்.  

“போஸ்ட்மார்டம் முடிஞ்சதும் நாளைக்கு உடலைத் தந்திடுவாங்க. புதைக்கிற முறை தானே. காட்டுக்குள்ள முதல்ல முடியாதின்னாங்க. பிறகு போலீஸ்ட்ட பேசி இடம் ஒதுக்கியாச்சு. மத்தமாதிரி விஷயத்துக்குல்லாம் ஆள் சொல்லியாச்சு. ஒங்க ஜெயராஜ் மாமா முன்ன நிக்காங்க. வீட்டாளுங்க எல்லாம் பக்கத்துக் காட்டுக்காரர் வீட்ல இருக்காங்க. அவங்களுக்கு முழுவெவரம் கொஞ்சம் முன்னதான் சொன்னோம். தோட்டத்துக்குள்ள காவலுக்கு போலீசும் நிக்காங்க. சந்தேகப்பட்ற மாதிரியான எல்லார்த்தையும் புடிச்சு விசாரிச்சுட்டு இருக்காங்களாம். பம்புசெட் ரூமுக்கிட்ட வச்சுதான் பாட்டையாவ…”

“சொல்லு..”

“கருக்கல்ல மோட்டார அணைக்கப் போன நேரமாப் பாத்து கரண்டு போயிருக்கு. பம்புசெட் உள்ள யாரோ ஒளிஞ்சி கிடந்திருக்கானுங்க. எப்படியும் ரெண்டு மூணு பேர் இருக்கணுமாம். சேத்துல காலடி கிடக்கு. அவருபோட்ட சத்தம் கேட்டு ஆச்சி ஓடி வந்திருக்காங்க. அவங்கள வீட்டு நடைலயே வச்சி வெட்டிருக்கானுங்க. வாசல் நடையெல்லாம் ஒரே ரெத்தம். வேலக்காரப் பிள்ள அவங்க ஊர்ல எதோ அக்கா பொண்ணுக்கு விசேஷம்னுட்டு போயிருந்திருக்கா போல. ஒரு நாளுதானன்னு தாத்தாவே செலவுக்குக் காசுங் கொடுத்து அனுப்பினாராம். அவள இப்போ ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க… கண்ணுங் காதுமிருந்தும் ஊராந்தரத்துல இப்படி நடந்துபோச்சு செல்வா.”

கோவையிலிருந்து பழனிக்கு வரும் வழியிலே, அட்வகேட் நண்பன் ராம்குமார், விசயங்களைச் செல்வேந்திரனுக்குச் சொல்லிக்கொண்டே வந்தான். வழியில் வண்டி எங்கும் நிற்கவில்லை. ஆய்ச்சல் பாய்ச்சலாக செல்வேந்திரனின் கார் பழனித் தோட்டத்தை அடைந்தபோது, கண்ணே மூச்சே என்றபடி அங்கு நின்றுகொண்டிருந்த சித்தப்பா ராஜ அலங்காரம் செல்வேந்திரனை ஓடிவந்து கட்டிக்கொண்டார்.

“ஒன்னய கண்ல காங்கணும்னு என்கிட்டேச் சொல்லிட்டே இருப்பாங்களே செல்வம். ஒங்கல்யாணத்த நல்லமுறையில நடத்திப் பாக்கணும்னு துடிச்சாங்களே. இப்படி ஈரக்கொலைய அறுத்துப்போட்ட மாதிரி ரெண்டு கெழங்க உசிரையும் சாச்சிட்டானுங்களே. கற்குளத்து ஐயனாரு கண்ணயும் காதையும் பொத்திக்கிட்டாரே, எஞ்செல்வம் நா என்ன செய்வேன்… நா என்ன செய்வேன்” என்று அரற்றினார். சுற்றி இருந்தவர்கள் யார் யாரைச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் கூடச் சேர்ந்து குமைந்தார்கள்.  

*

“வழக்கமா கொலை பண்ணிட்டு, கொள்ளையடிச்சுட்டுப் போற ஆளுங்க மாதிரி தெரியலை. ஒருமாதிரி அமெச்சூர் அட்டாக். ரொம்ப நேரம் க்ரைம் ஸீன்ல நடமாடியிருக்காங்க. ஃபுட் ப்ரிண்ட் கன்னாபின்னான்னு கிடக்குது. நாயை சாக்குல சுத்தி, அதுமேல கல்லப்போட்டுக் கொன்னுருக்காங்க. மோட்டார் ரூம்க்கு அந்தப் பக்கம் வேலி எதுவும் இல்லாததால அந்தப் பக்கமா தப்பிச்சுப் போயிருக்கானுங்க. பெரியவருக்கு தலையில வலதுபக்கம் சரியான அடி. மண்வெட்டியை யூஸ் பண்ணி இருக்கானுங்க. கைலயும் தோள் பட்டையிலயும் வெட்டுக்காயங்கள் இருக்கு. பாட்டியை கத்தில குத்திருக்காங்க. அவங்க பிழைச்சிடக் கூடாதுன்னு குத்தின இடத்தில, மண்ணைப் போட்டிருக்கானுங்க. அவங்க போட்டிருந்த நகைகள், பீரோல இருந்து பணமும், செல்போனும் மிஸ் ஆகியிருக்கு. உங்க வீட்டு ஆட்கள்கிட்ட கேட்டு லிஸ்ட் பண்ணியிருக்கோம். இதுல சிலது வெளில கசியாம பார்த்துக்கணும். இருந்தாலும் சொல்றேன். சேறு சகதியில கிடைச்ச ஃபுட் ப்ரிண்ட்ஸ்  வச்சுப் பார்த்தா இளவயசுப் பசங்களோடது மாதிரி தெரியுது. அக்கம் பக்கத்துல விசாரிச்சுட்டு இருக்கோம். உங்களுக்கு அப்படி யார் மேலயாச்சும் சந்தேகம் வர்ற மாதிரி இருந்தா கை காட்டி விடுங்க.”

பைபாஸ் சாலையில் விளக்கொளி மின்னிக்கொண்டிருந்த ஐயங்கார் பேக்கரி வாசலில், ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தனசிங், நடந்த விஷயங்களை வக்கீல் ராம்குமார், ஜெயராஜ், செல்வேந்திரன் மூவரிடமும் பக்குவமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சேர்மக்கனி காருக்குள்ளே அமர்ந்து ஆள் மாற்றி ஆள் அவன் போனுக்கு அழைத்தபோதெல்லாம் கம்மிய குரலில் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“நம்ம வக்கீல் சார் உங்க கூடவே இருக்காரு. மேற்கொண்டு என்ன பண்ணனும்னு அவரே உங்களுக்குச் சொல்லிடப் போறாரு. நிறைய பேரை விசாரிச்சுட்டு இருக்கோம். ஸ்டேஷன் தரப்புல உங்களுக்கு என்னென்ன உதவி செஞ்சுத் தர முடியுமோ அத்தனையும் செஞ்சுத்தர்றோம். இன்னும் ரெண்டு மூணு நாள்ல எஃப்.ஐ.ஆர் காப்பி நானே கொடுத்து அனுப்பச் சொல்றேன். எதுக்கும் சிரமப்பட வேண்டாம். என்ன வக்கீல் சார் போதுமா?”

“டாக் ஸ்குவாடு என்ன சார் சொல்றாங்க?”

“அவங்க என்ன சொல்றது. நான் சொன்னதையே அவங்க ஒரு தனி பாஷைல எழுதித் தரப்போறாங்க. உள்ளூருக்குள்ளே சுத்தி சுத்தி வந்துட்டு, டீசல் பேட்டா வாங்கிட்டுப் போய்டுவாங்க. நீங்க நடக்க வேண்டியதை பாருங்க சார். அக்யூஸ்ட்டைப் புடிக்க வேண்டியது எங்க பொறுப்பு.”

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுமுடித்த செல்வேந்திரன் மனதுக்குள் பொங்கி எழுந்த குமுறலை அடக்கிக்கொண்டு, அங்கிருந்து புறப்படத் தயார் ஆனான். வழியிலே ராம்குமாரும் ஜெயராஜும் ஆஸ்பத்திரியில் இறங்கிக் கொண்டார்கள். வீட்டில் இருப்பவர்களுக்குச் சாப்பாடு பார்சலில் வாங்கிக் கொண்டு, சேர்மக்கனியும் செல்வேந்திரனும் பக்கத்துக் காட்டுக்காரர் வீட்டு முற்றத்தை அடைந்தபோது, பிள்ளைகள் கூட உறங்காமல் கொட்டக் கொட்ட முளித்துக் கிடந்ததுகள்.

“எப்பா போலீசுல என்ன சொல்றாங்க, உடம்புகள எப்பத் தருவாங்களாம். முகத்தைக் கூடப் பாக்க முடியலையேன்னு உங்கத்தைங்க ஒவ்வொருத்தியும் கூப்பாடுபோட்டு அழுவுறாளுங்க. நான் ஒருத்தன் என்னன்னு பதில் சொல்லிட்டுக் கெடக்க முடியும். பெரியவங்க முகத்தையாச்சும் பார்த்தியா.”

“எல்லாம் பேசிட்டோம் சித்தப்பா. நாளைக்குப் பகல்ல தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. நீங்க தைரியமா இருங்க. நம்மளல்லாம் விட்டுட்டு அவங்க எப்படித் தனியா போவாங்க….” சொற்களும் வாக்கியமும் குழற செல்வேந்திரன் ஓ’வென்று அழத் தொடங்கினான். மொத்தக் குடும்பமும் அவனோடு சேர்ந்து மீண்டும் அழுதது. சந்திரா, முருகம்மாள், தங்கக்கனி என்று மூன்று பெண் மக்களும், மருமகள்களும் அவரவர்கள் பெற்ற பிள்ளைகளும் எழுப்பிய ஓலத்தில் அடிவாரக் காடே மனங்கலங்கி கம்மியது.

*

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் தேர்ப்பாடைக்குச் சொல்லியிருந்தார்கள். பிறகு, யாரோ அது வேண்டாம் என்று மறுத்தார்கள். வெட்டுபட்ட உடம்புகளை அப்படி ஊர் காணிக்கக் கொண்டுபோகக் கூடாது, அது பொல்லாப்பு என்றார்கள். பெட்டியில் வைத்துக் கொண்டு போறதுதான் சரி. அதுவும் ஆம்புலன்ஸில் இருந்து நேரே பெட்டிக்கு மாத்தி வைப்போம் என்றார்கள். மக்கமார்கள் முகம் பார்க்க வேண்டாமா, அம்மை அப்பன் உடம்பைத் தொட்டு அரற்றவேண்டாமா, என்னென்னவோ கேள்விகள் குழப்பங்கள்…

கடைசியில், தாத்தா பாட்டி உடம்பைக் கொண்டுபோக, மாட்டுவண்டி ரதம் வந்து சேர்ந்தது. உறவின்முறை சங்கத்தில் இருந்து ஏற்பாடு பண்ணிய ரதம். ஊர் முழுக்க கருப்பு வெள்ளை வால்போஸ்டில் ஆச்சியும் பாட்டையாவும் அழகாகச் சிரித்தார்கள். ‘அகால மரணம் அடைந்தார்கள்’ என்றது போஸ்டர் குறிப்பு. அவர்களின் நல்லடக்கம் கொலை நடந்த தோட்டத்தின் தெற்கு மூலையில் ஏற்பாடானது. அதிகம் பேரை உள்ளே விடமுடியாது என்பதால், ஊர்க் கச்சேரிக்குப் பக்கமுள்ள சாலைமேட்டில் வைத்தே மாலை மரியாதைக்கு ஏற்பாடானது. வணிகச் சங்கத் தலைவர்கள், விவசாயிகள் நலச்சங்கம், கட்சிக்காரர்கள் சிலபேர், அங்காளி பங்காளிகள், சின்னமனூரைச் சேர்ந்த ஆச்சி வகையறா உறவுகள், உள்ளூர் ஆட்கள் என்று திமுதிமு கூட்டம்.

மகன்மார் பேரன்மார்கள் நீர்மாலை எடுத்துவரும்போது, குடிமகன் ஆட்கள் ‘மாத்து’ விரிக்க முன்வர, ராஜ அலங்காரம் ஓடிவந்து தடுத்துவிட்டார். “எங்கய்யா பெரியார் கட்சியில இருந்தவரு. அவருக்கு இதெல்லாம் புடிக்காது, விட்டுருங்க” என்றார். மற்றவர்கள் அவர்கள் பாட்டுக்கு மற்றச் சடங்குகள் சரிவர நடக்கிறதா என்று பராமரிப்பு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேட்டும் பட்டாசும் இடி இடியென மேலேபோய் வெடித்துக்கொண்டிருந்தன.

மருமகன் ஜெயராஜ் குடும்பம் ரெண்டாவது தலைமுறையாக வேதத்துக்கு மதம் மாறியிருந்ததால், சில சடங்குகளின்போது பின்வாங்கிக் கொண்டார். ஆனாலும்,  தன் ஆண் பிள்ளைகள் தலை மழிக்க வேண்டும் என்று தங்கக்கனி பிடிவாதமாக இருந்தாள். அக்காள் தங்கச்சிகள் ஒவ்வொருத்தரும் தங்கள் வீட்டுக்காரர்களை இழுத்துப் பிடித்து முறைகளைச் செய்ய வைத்தார்கள்.

ஆச்சிக்கு முகம் மூளியாய் இருந்ததைப் பார்த்து, முருகம்மாள் தன் புருசனிடம் சொல்லி, அசப்பில் வைர மூக்குத்தி போல இருக்கும் ஒரு ஜதை கவரிங் மூக்குத்தி வாங்கிக் கொண்டுவந்து போட்டுவிடச் செய்தாள்.  சந்திரா தன் பங்குக்கு மகள் கழுத்தில் கிடந்த நகையை எடுத்து ஆச்சி கழுத்தில் மாட்டிவிடச் சொன்னாள். ராஜ அலங்காரம், ‘அதெல்லாம் வேண்டாம் விடு தாயி!’ என்றதும்  சற்றுத் தடுமாறியவளாக அமைதியானாள்.

”எப்பா செல்வேந்திரா, ஆட்கள் வந்துகிட்டேதான் இருப்பாங்க. வெயில் கீழ இறங்கும் முன்ன உடம்புகள எடுத்தாதான் காரியம் ஒழுங்கா நடக்கும். என் பேச்சு உனக்குப் புரியும்னு நினைக்கேன்” ஊர் பெரியவர் ஒருத்தர் கிட்டே வந்து சொன்னபோது, சாராய நெடி குப்பென்று அவன் நாசியில் ஏறியது.

செல்வேந்திரனுக்கு அவரை நன்றாக அடையாளம் தெரிந்தது. தன் அப்பா போத்திலிங்கம் உடல்நலிந்து மறைந்தபோது, இதே வார்த்தையைத்தான் தன் சித்தப்பாவிடம் சொன்னதும், சாதிச் சங்கத்தவர்களில் இவரும் ஏதோ முக்கியப் பொறுப்பில் இருப்பவர் என்பதும், தங்கள் வகையறாவில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதிலும் இவர் தலை தென்படுவது வரை அவன் நினைவில் இருந்தார் பெரியவர். 

*

வேட்டுச் சத்தம் செவுளைப் பிளந்துகொண்டிருக்கும்போதே, வெட்டிய குழிக்குள் இறக்கப்பட்டார்கள் ஆச்சியும் பாட்டையாவும். முதலில் ஆச்சியை இறக்கலாம். அப்போதான் சுமங்கலியாய்ப் போய்ச் சேர்ந்ததாகக் கணக்காகும் என்றார் குடிமகன். எல்லோரும் அதை ஆமோதிப்பதுபோல உச்சுக்கொட்டினார்கள். பெத்தவர், பேரன்கள், அங்காளி பங்காளிகள் என்று ஒவ்வொருத்தராக வந்து குழிக்குள் கைமண் அள்ளிப் போட்டார்கள். ஆச்சி மண்ணால் நிறைந்து, மங்கலமான முகத்தை ஒளித்துக் கொண்டாள். அவள் முகத்தின் பொலிவை மண் தன்மேல் அப்பிக் கொண்டதாக நினைத்துக் கொண்டான் செல்வேந்திரன்.

“உன்னைப் போய் வெட்டிக் கொல்ல ஒருத்தனுக்கு எப்படி மனசு வந்தது” என்று நினைத்து அழுதான். “என் செலுவப்பா அழக்கூடாது வா வா ஆச்சிகிட்ட” என்று அவள் கைநீட்டிக் கூப்பிடுவதுபோல கற்பனை பண்ணிக்கொண்டான். ‘அண்ணா, அண்ணா’ என்று அவன் காலைத் தழுவிக் கொண்டு நின்ற சித்தப்பா மகனைத் தூக்கி, ஆச்சியின் உடலைக் காட்டினான். ஆச்சி குழிக்குள் சகல பக்கங்களிலும் இடம் விட்டு, எப்போதும் தன் கட்டில் முனையில் உறங்குவது போலப் படுத்துக்கிடந்தாள்.

தாத்தாவை அடுத்ததாக குழிக்குள் இறக்கும்போது, மகன்மார்களுக்குச் சிரசு முடி மழிக்கப்பட்டிருந்தது. பெரிய பேரன்களுக்குப் புறங்கை மயிரை மழித்து விட்டாலும் போதுமென்றார்கள் முதலில். அதற்குள் சேர்மக்கனிக்கு யாரிடம் இருந்து போன் வந்ததோ, பேரன்மார்களுக்கும் தலைமுடி எடுக்கனும் என்று நிலையாய் நின்றான். அவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். மற்றவர்கள் எல்லாருமே கணிசமாக ஆண் ஒன்று பெண் ஒன்று வைத்திருந்தார்கள். அவரவர் மனத்துக்குள் எதேதோ கணக்குகள். தாத்தா வெள்ளைத் துணி சுற்றி இறுக்கிய  பொட்டலமாகக் குழிக்குள் அமிழ்ந்தார்.

*

சிவகாமி ஆச்சி அன்றைக்கு சுடுசோறும் தட்டாம்பயிறு போட்ட புளிக்குழம்பும், தொட்டுக்க பொன்னாங்கன்னிக் கீரையும் வதக்கி வைத்திருந்தாள். எடுபுடி வேலைக்குக் கூட்டிவந்து கூடே வைத்திருந்த மணிமேகலை, மத்தியான பஸ்சுக்கே தன் அக்காள் செவ்வந்திக்கு வளைகாப்பு என்று கன்னிவாடிக்குக் கிளம்பிப் போயிருந்தாள். கூலி ஆட்களுக்கும் பெருசாக வேலை இருக்கவில்லை அன்று. அப்படியே இருந்தாலும் பழனிச்சாமி வந்து காய்ந்த விறகை முறித்துப் போடவும், தொட்டித் தண்ணியை திறந்துவிட்டு, பாத்தியை மண்வெட்டியால் கொத்திவிட்டு, தனி ஆளாக மொத்த காரியத்தையும் முடித்துவிட்டு, ராவில் அங்கேயே காவலுக்குத் தங்கிவிட்டுப் போவான்.

ஊர்புறத்தடியில் ஒண்ணுக்கு ரெண்டாக குடியாண்டிகள் கூடாரம் வந்துவிட்ட பிறகு, எல்லாபேரையும்போல அவனும் குடிமட்டையாகிவிட்ட பிறகு, “நீ பகலிலே தெளிஞ்சி கிடக்கும்போது மட்டும் இங்கன வந்தா போதும்போ” என்று துரத்தி விட்டு விட்டாள் ஆச்சி. ஆக, தோட்டத்தில் எவரும் இல்லாத பொழுது அடிக்கடி வாய்க்கிற ஒன்றுதான். எப்போதும் நாய், கோழி, குருவி, குளவி என்று ஏதாவது ஒரு உயிர் நடமாட்டம் இருக்கிற இடத்தில் இது அவ்வளவு ஒன்றும் அந்நியமான விஷயமும் இல்லை.

பொழுது மசங்கி வந்தபோது, பாத்தியில் நின்ற பாட்டையாவுக்குக் குரல் கொடுத்துவிட்டு, நாயை அவிழ்த்துவிட்டாள் ஆச்சி. “இந்த நாய விட்டாதான் அந்த நாய் வரும்” என்று மெல்லமாக அவளும் முணகிக்கொண்டாள். கையில் இருந்த காப்பி போணியை சூடு ஆறாமல் இருக்க தம்ளர் போட்டு மூடி வைக்கும் போதுதான், கரண்டுபோனது, கூடவே பாட்டையாவின் அலறல் சத்தமும் கேட்டது.

முதலில் பக்கத்துக்காட்டில் குடித்துவிட்டு யாரும் அடித்துக் கொள்கிறார்களோ என்று நினைத்து, ஒருகணம் தாமதித்தவள், ‘சிவாமீ’ என்ற குரலைக் கேட்டதும் அடித்துப் பிடித்து ஓடிவந்தாள். அதற்குள் அவளைத் திண்ணைப் படிக்குக் கீழே இருந்து பாய்ந்த உருவம் ஒன்று அவளைத் தரையில் தள்ளிவிட்டு மேலே விழுந்து அமுக்கியது. அதன் கைகள், ஆச்சியின் புடவைத் தலைப்பை எடுத்து முகத்தை இறுக்கி மூடிக் கட்டியது. பிறகு வயிற்றில் சுருக்கென்று என்னம்மோ ஆழமாய் இறங்குவது போலவும், அடிமடியில் ஈரம் சூடாகப் பொங்கிக் கசிந்து நுரைத்துக் கொண்டிருப்பதும் கடைசியாக நினைவாக இருந்தது ஆச்சிக்கு.

பாட்டையா உண்ணி உண்ணி நகரப் பார்த்தார். அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அவர் உடம்பில் வெட்டு விழுந்தது. வாழைத் தாரை சீவுவதுபோல உடம்பில் அரிந்துகொண்டே இருந்தவன் முகத்தை பாதி மயக்கத்தில் பார்த்தார். இரண்டு பேர் அவரை இழுத்துக் கொண்டு போய் மோட்டர் ரூம் வாசலில் போட்டார்கள். ரத்தமும் சேறுமாக சுவரில்போய் விழுந்தார். இழுத்துக் கொண்டுவந்து போட்ட ரெண்டு பேரும் இளவட்டம்தான் என்பது அவர்கள் பிடியிலேயே தெரிந்தது. பாட்டையா மயங்கத்திலும் தளர்ச்சியிலும் குடல் சரிந்து கிடந்தார்.

அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

“டேய் சங்கரு நீயாடா… நீயாடா இப்படிப் பண்ண..”

*

“இங்கப் பாருப்பா செல்வேந்திரா, ஒங்க பாட்டையா காடும், அவுங்க காடும் அக்கம் பக்கம் இருக்கு. ஒரே சாதி சனத்துல இப்படி பெரிய தப்பு நடந்துபோச்சு. போன உசுரு ரெண்டும் சாதாரண உசிரில்ல. ஒங்களுக்குப் பெரிய இழப்புதான். ஆனா, செஞ்ச பயலுங்க யாருன்னு போலீசு காதுக்குவரைக்கும் வந்துருச்சு. உங்களுக்கும் விஷயம் என்னன்னு சொல்லிருப்பாங்க. நான் பேரச் சொல்ல விரும்பல்ல. அதை வெளியில கொண்டுபோய் அந்தப் பயலைப் புடிச்சு உள்ளற போட்டு, நாளைக்கு அதுவே பெரும் பகமையா வளரக்கூடாது பாரு.”

சாதிச் சங்கப் பெரியவரும் அவர் கூடே வந்திருந்த வெள்ளை வேட்டிகள் சிலரும் ஜெயராஜின் சினிமா கொட்டகை மாடியில் அரைவட்டமாக அமர்ந்திருந்தார்கள். எதிர்ப்பக்கம் செல்வேந்திரனும், சித்தப்பா ராஜஅலங்காரமும் ஜெயராஜும் அமர்ந்திருந்தார்கள். பெரியவர் சொன்னதுகேட்டு ராஜஅலங்காரம்தான் முதலில் துள்ளினார்.

”பகைமையா, என்ன பேசுறீங்க. ரெண்டு உசிரத் துள்ளத் துடிக்கக் கொடுத்துருக்கோம். விரல் சூப்புற பயலுவ தெரியாம செஞ்சிட்டானுவன்னு பேசுறியளே, மனசாட்சி இருக்காவே ஒங்களுக்கு”

 “ஏ அலங்காரம் பொறப்பா! அதான் பேசணும்னு வந்தாச்சில்லா. பொறுத்து நின்னு கேளு. வார்த்தைக்கு வார்த்தை அலை அடிக்கக்கூடாது.”

”மச்சான் கொஞ்சம் இருங்க அவங்க பேசட்டும்.” 

”எப்பா, தம்புள்ள செஞ்ச தப்புக்குத் தண்டமா, அவங்கப்பன் பக்கத்தால உள்ள மொத்தக் காட்டையும் எழுதி கொடுத்துட்டு, களவெடுத்த நகைநட்டையும் மேக்கொண்டு பத்து லச்சம் பணமும் ஈடாத் தர்றேம், எம்மவன் பேரை நீக்கிக் கொடுங்கன்னு கேக்கான். அவனுக்கு எதோ பெத்த பாசம்னு மட்டும் நினைக்க வேண்டாம். சாதியில அவனும் முக்கியமானவன். இந்தக் கெட்டபேரு அவனால அழிக்க முடியாது. நம்மாளயும் அழிக்கமுடியாது. இதே வேற சாதி சனத்தான்னா சங்கம் உங்கூடல்லா கண்ண மூடிட்டு நின்னிருக்கும். இப்பயும் உங்கூடதான் நிக்குது. போலீசும் மனசு வைக்குது. நீங்க கேக்காட்டி போனா எங்களுக்கு ஒண்ணுமில்ல. என்ன நம்ம மகமை பேருகெட்டு நாறிப் போவும். கண்டவன் பல்லுப் போட்டுப் பேசுவான். நம்ம புத்தி நாறப்புத்தின்னு சொல்லிக் காட்டி ஏசுவான். இனி நீங்க சொல்றதுதான் முடிவு. எப்பா அலங்காரம் உனக்கும் சேர்த்துதான் சொல்லுதேன்.”

“நா என்னத்தப் பேச, எந்தாயத் தள்ளிப்போட்டுக் குத்திக் கொன்னுருக்கானுவ. எந்தகப்பன வங்கொலையா வெட்டிப் போட்டிருக்கானுவ. இதச் செஞ்சவனுங்க சங்க கடிச்சிக் கொல்லனும்னு ஆத்தாமைல தான் துடிக்கேன். ஆனா கையக் கட்டிப் போட்டுல்ல உக்கார வச்சிட்டு நாம்பொறந்த கேடுகெட்டச் சாதியும் சங்கமும்.”

”இவன் ஆவமாட்டான், ஏப்பா ஜெயராஜு உம்பெரிய மச்சானக் கொஞ்சம் கையடக்கிவிடு. இது வெட்டு குத்துன்னு முடியணும்னு அலைஞ்சா நாமல்லாம் ஊரான ஊருக்குள்ள நல்லா இருக்குறதா வேண்டாமா. முதல்ல நீயும் உம் மாப்பிளையும் நாஞ்சொல்றதக் கொஞ்சம் நிதானிச்சுக் கேளுங்க.  இந்தக் கேஸ நடத்தி, தலைக்குத் தல முட்டிட்டு கிடந்தா யாருக்குப் புண்ணியம். பெரிய உசுருங்க போயிருச்சுங்க. ஊரும் சாதிசனமும் அவங்களுக்கு என்னமா மரியாதை காட்டுச்சுங்க. அதைக் கெடுத்துச் சீரழிக்கப் போறியளா. நாளைக்கு ஒங்களுக்கும் அந்த மரியாதை வேண்டாமா? நீங்களும் பெரிய ஆளு, எதுக்க நிப்பவரும் பெரிய ஆளு. அவன் புள்ளை புத்திகெட்டுப் போய் கூட்டாளிகளோடச் சேர்ந்து ஒரு வேலக்காரப் புள்ளையச் சீரழிக்கப் பார்த்ததும், அதப் பெரியவரு கண்டிச்சு அனுப்புனதுக்கு அவனுங்க இந்தப் பாதகத்தப் பண்ணுவானுங்கன்னு யாருதான் நினைப்போம். மேப்பேச்சு வேண்டாமப்பா. பயலக் காப்பாத்திக் கொடுங்கன்னு அவரு நிக்காரு. அதுக்கு இன்னின்னது ஈடு செய்தன்னு சொல்லுறாரு. மத்தது ஒங்க முடிவு. சங்கம் எல்லாருக்கும் பொது. ஒருபக்கம் சாஞ்சி நிக்காது. அதமட்டும் மனசுல வச்சிக்கிடுங்க.”

*

சினிமா கொட்டகை வாசலில் வெவ்வேறு நிற கார்கள் காத்துக் கிடந்தன. அதன்தன் டிரைவர்கள் கேண்டீன் கடை வாசலில் கூடி, தங்களுக்குள் தர்க்க ஞாயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். சேர்மக்கனி குடி கூட்டத்துக்குத் தேவையானதை எல்லாம் வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தான்.

ஜெயராஜ் தங்கக்கனிக்குப் போன்போட்டு, “இந்தா மருமவன் இருக்காரு பேசு” என்றான்.

லவுட் ஸ்பீக்கரின் கரகரத்தக் குரலில் அவள் அழுகையும் ஆவலாதியுமாக என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘இது ஒப்பேறாது’ என்று ஜெயராஜ் போனைக் கட் செய்துவிட்டு, “மாப்ள உங்க அத்தக்காரிய நான் வழிக்குக் கொண்டு வந்துருவேன். நீ என்ன சொல்ற” என்றான்.

செல்வேந்திரன் பதில் பேசாமல் சற்றுதள்ளி கூட்டத்தோடு நின்றுகொண்டிருந்த சித்தப்பா ராஜ அலங்காரத்தைப் பார்த்தான். அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு விடுவிடுவென அங்கிருந்து வெளியேறினார்.

சபை திரும்பக் கூடியது.

“காட்டை எங்க பேருக்கு எழுதிக் கொடுக்கறதா இருக்க வேண்டாம். எங்க மாமா அத்தை பேருல ஃபவுண்டேஷன் ஒண்ணு ஆரம்பிக்குறோம். அது பேருக்கு சொத்தா எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க. இப்போதைக்கு வக்கீல வச்சி அத்தாட்சி போட்டுக்கலாம். பெறவு, திருடுபோன பொருள் எதுவும் எங்களுக்கு வேண்டாம். அது எங்க ரத்த உறவுகள நாங்க வித்துத் தின்னதா ஆகிப்புடும். அதுக்கு ஈடா பணமாவோ, வேற காடு இருந்தாலோ கொடுக்கச் சொல்லுங்க. போலீஸ் கேஸ்ல நாங்க தலையிட மாட்டோம். ஆனா, கூடசேர்ந்து செஞ்ச மத்த பயலுங்க மாத்தி தலையாட்டிட்டா நாங்க பொறுப்பில்ல. அதையும் அவங்களே சரிகட்டிக்கட்டும். மத்தபடி சங்கத்துச் சொல்லுக்குக் கட்டுப்படுறோம். வேற என்ன மருமகனே மாமா சொல்ல வேண்டியத சொல்லிட்டேன், நீங்க என்னங்கிறீங்க…”

செல்வேந்திரன் அத்தனையையும் ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினான்.

***

கார்த்திக் புகழேந்தி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular