Monday, October 14, 2024
Homesliderதமிழ்ப்பண்பாட்டின் புத்தெழுச்சிக்காலம்: கிரியா ராமகிருஷ்ணனின் பங்களிப்பு

தமிழ்ப்பண்பாட்டின் புத்தெழுச்சிக்காலம்: கிரியா ராமகிருஷ்ணனின் பங்களிப்பு

ப. சகதேவன்

தமிழ்த்தாய் எல்லாக் காலத்திலும் நவீனமாகத்தான் இருந்திருக்கிறாள். மட்டுமல்லாமல் அவளைப்போல தாராளவாதியையும் பார்க்க முடியாது. சங்க இலக்கியத்தைப் போல எல்லாச் சிந்தனைகளுக்கும் இடமளிக்கக் கூடிய, எல்லா வகைப்பட்ட மனிதர்களையும் அரவணைக்கக் கூடிய ஓர் இலக்கியம் உலக இலக்கியத்தில் காண்பதரிது. பரங்கியர் என்பதற்காக தத்துவ போதக சுவாமிகளையும், வீரமாமுனிவரையும் அவள் வாசலுக்கு வெளியே நிற்கச் சொல்லவில்லை. ஆனாலும் அவ்வப்போது தமிழ்த்தாயை முக்காடு போட்டு வீட்டுக்கு உள்ளே இருத்தி வைத்திருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. அது காலத்தின் நிர்ப்பந்தம். மத்திய காலத்திலிருந்து ஐரோப்பியர் காலம் வரை பரவியிருந்த காலனியாதிக்கம் தமிழ்ப்பண்பாட்டை ஒரு கூண்டுக்குள் அடைத்தது. தமிழ் மொழியும் பண்டிதர்களின் ஏட்டுச்சுவடிகளில் கூடுகட்டிக் கொண்டது. 1970-கள் வரை நிலவியிருந்த இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கியது. இந்தக் காலத்திற்கு ஒரு பெயர்கொடுத்துப் பார்க்கலாம்

நமது மொழி, நமது இலக்கியம் என்பவை போற்றப்பட வேண்டியவை தான். அதே சமயம் மொழி என்பது நமது வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாகவும், இலக்கியம் என்பது நமது விமரிசிப்பதற்குரிய வடிவமாகவும் கருதப்பட வேண்டும். விடுதலைக்குப்பின் ‘எழுத்து’ ‘இலக்கிய வட்டம்’ என்கிற சிறுபத்திரிகைகள் இதற்கு அடித்தளமிட்டன. அதற்கு முன் ‘மணிக்கொடி’ பத்திரிகை முன்னோடியாக இருந்தது. 1970-க்குப்பின் இந்த அணுகுமுறையில் மேலும் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது. இடதுசாரிச்சிந்தனைக்கு ஆட்பட்டிருந்த ஜெயகாந்தனிலிருந்து தொடங்கிய இந்த அணுகுமுறைக்கு பலர் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். இலக்கியம் என்பது பண்பாட்டின் பல அம்சங்களில் ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதனோடு நாடகம், திரைப்படம், ஓவியம், சிற்பம், இசை என்பவற்றையும் சேர்த்துப் பார்க்கும் இந்த முயற்சியில் ‘சிறுபத்திரிகை இயக்கம்’ ஈடுபட்டிருந்தது. இந்த இயக்கத்தில் தீவிரமாக இருந்த பலர் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி வெங்கட்சாமிநாதன், ஞானக்கூத்தன், நா.முத்துசாமி, சா.கந்தசாமி என்று வந்து இப்போது க்ரியா ராமகிருஷ்ணனையும் இந்த நூற்றாண்டில் இழந்திருக்கிறோம். போன நூற்றாண்டு க.நா.சு.வையும், சி.சு.செல்லப்பாவையும் எடுத்துக் கொண்டது. ஒரு வரலாற்றுப் பின்னோக்கில் இவர்களது பங்களிப்பை அறுதியிடலாம்.

1970 ஒரு முக்கிய பண்பாட்டு வரலாற்று மைல்கல். காங்கிரஸ் இயக்கத்தின் வீழ்ச்சி, திராவிட இயக்கத்தின் தட்டிக்கேட்க முடியாத செல்வாக்கு, வெகுசன வாசிப்பின் அசுரத்தனமான வளர்ச்சி, வணிக சினிமாவின் மாயத்தாக்கம் என்ற அம்சங்களோடு போராட முடியாமல் தமிழ் நாகரிகம் தடுமாறிய நேரம். காலம் காலமாக தமிழ் நாகரிகத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செய்து கொண்டிருந்த பிராமணர்களின் படைப்பாற்றல் முழுதும் வெளிப்பட முடியாமல் ஓரங்கட்டப்பட்ட நிலைமை. காலத்துக்குத் தகுந்த தேசீயவாதம் என்பதை பொதுவெளியில் விவாதிக்கக் கூட முடியாத சூழல் என்பவற்றைப் பார்த்து இதற்கு ஓர் இணைக்குரலை எழுப்ப வேண்டும் என்ற தேட்டம் தான் தனிமனிதர்கள், சிறுசிறு குழுக்கள் என்கிற வடிவங்களில் வெளிப்பட்டது. அப்படித் தோன்றிய குழுக்களில் ஒருவராகத்தான் ராமகிருஷ்ணன் வந்தார். இது தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல. கேரளம், கர்நாடகம் முதலிய சூழல்களிலும் எழுந்தது. ஐயப்பப் பணிக்கர், அடூர், அரவிந்தன், சங்கரப்பிள்ளை, பி.வி.காரந்த், கிரீஷ் கார்நாடு, கிரீஷ் காசரவள்ளி என்ற ஆளுமைகள் அவரவர் நாகரிகத்தை நவீனப்படுத்தின.

மக்களின் மலினமான ரசனக்குத் தீனிபோடுகிற வெகுசனப்பத்திரிகைகள் தங்களது படைப்புகளை வெளியிடாத போது பல எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளை நாடிப்போனார்கள். அல்லது அவர்களே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள். தரமான எழுத்துக்களை வெளியிட பதிப்பாளர்கள் முன்வராதபோது அவர்களது எழுத்துக்களை ஒரு பதிப்பகம் ஏற்படுத்தி இவர்கள் வெளியிட்டார்கள். இவர்களது பொறுப்பு பெரும் பொறுப்பாக இருந்தது. இவர்களது கதைகளை நாடகமாகவோ, படமாகவோ ஆக்குவதற்குரிய துணிச்சலுள்ளவர்கள் இருக்கவில்லை. எனவே இந்த எல்லாப் பொறுப்புகளையும் இவர்கள் தலைமேல் சுமந்தார்கள். ராமகிருஷ்ணன் பதிப்புத்துறையை எடுத்துக் கொண்டார். தனது படைப்பாற்றலை தியாகம் செய்துதான் இதை மேற்கொண்டார். இவர் பங்குகொண்ட பண்பாட்டுப் புத்தெழுச்சி அகண்ட தமிழ்நாட்டைச் சென்றடைந்ததா என்பது விவாதத்துக்குரியது தான். ஆனால் முயற்சியின் தணல் இன்னும் தணியாமல் இருக்கிறது என்பதோடு பரவிக்கொண்டும் இருக்கிறது என்பது ஓர் ஆறுதல்.

தமிழ்ப்பண்டித உலகத்தின் இறுக்கத்தை உடைத்தது இந்தக் குழுவின் சாதனை. கல்லூரித் தமிழ்த்துறையினை நோக்கிய சி.சு.செல்லப்பாவின் இடையறாத பயணம் இதைச் சாதித்தது. பேராசிரியர்கள் ஜேசுதாசன், முத்துச்சண்முகம், கனகசபாபதி போன்றோர் பண்டித இறுக்கம் உடைந்து வெளிப்பட்ட முதல் தலைமுறையினர். கல்விப்புலத்தில் இவர்களிலிருந்து தொடங்கிய பண்பாட்டுப் புத்தெழுச்சி முயற்சிகள் மீராவின் ’அன்னம்’, ‘அகரம்’ பதிப்பகங்களின் மூலமாகத் தொடர்ந்தது. தமிழ் வாத்தியார் ஒரு வேடிக்கைப் பொருள் என்ற நிலைமையை இது மாற்றியது. கூண்டில் சிறைப்பட்டிருந்த தமிழ்க்கவிதை ’வானம்பாடி’ யை விடுவித்தவர்களும் இவர்கள் தான். ஒரே வித்தியாசம்: ’க்ரியா’ வின் ‘சூப்பர் டிலக்ஸ்’ பதிப்புகளோடு ‘அன்னம்’ போட்டி போட முடியவில்லை. ஆனாலும் உண்மையான ‘தமிழ்க்குரல்’ ‘அன்னத்’தின் மூலமாகத்தான் வெளிப்பட்டது. இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

ராமகிருஷ்ணனும் அவரது கிளை நதியான திலீப்குமாரும் பாலமைப்புப் பணியில் ஈடுபட்டவர்கள்.. தமிழ்ப்புத்தகங்கள் உலகமெங்கும் சென்று சேர்வதற்குப் பல பத்தாண்டுகளாக உதவியவர்கள். மட்டுமல்லாமல் தமிழிலக்கியம் என்பதைத் தாண்டி தமிழர் வரலாறு, சமயம், நாட்டார் வழக்காறு முதலிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருக்கும் அயலகத்தைச் சார்ந்த தமிழர் மற்றும் தமிழரல்லாத ஆய்வாளர்களுக்கு ஒரு தகவல் மையமாகவும் இருந்தவர்கள். இது பொதுவாக பல்கலைக்கழகம் சார்ந்த வேலை.

‘க்ரியா’ வெளியிட்ட ஆங்கிலப்பு த்தகங்கள் இந்த பாலமைப்புப்பணியில் கணிசமான பங்களிப்பைத் தந்தவை. யூஜின் இர்ஷிக்கின் ‘1930-களில் தமிழ் மீட்புவாதம்’ (Tamil Revivalism in the 1930s (1986) ) தியடோர் பாஸ்கரனின் ‘செய்தி கொண்டு வந்தவர்கள்’ (The Message Bearers (1981) ஏலன் டண்டீஸின் ‘நாட்டாரியல் கட்டுரைகள்: கோட்பாடுகளும், பயிற்சிமுறைகளும்’ ( Essays in Folkore: Theory and Method-(1990) போன்ற புத்தகங்களோடு ஐராவதம் மகாதேவன் தொகுத்த ‘ஆரம்பகாலத் தமிழ்க்கல்வெட்டியல்’ (Early Tamil Epigraphy –(2003) போன்ற நூல்கள் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்குப் பெரிதும் உதவுபவை.

படைப்பிலக்கியத் துறையில் தனது வெளியீடுகள் மூலம் எழுத்தாளர்களுக்குப் பெருமை சேர்த்தது ‘க்ரியா’. சுந்தர ராமசாமி, சி.மணி, நா.முத்துசாமி, சா.கந்தசாமி, பூமணி, மு.தளையசிங்கம் என்று இது ஒரு நீளமான வரிசை.. இதில் இமயத்தையும் இழுத்துச் சேர்த்தது ராமகிருஷ்ணனின் ஜனநாயகப் பண்பு. அவரே சொன்ன மாதிரி இமயம் என்கிற வைரத்தைப் பட்டை தீட்டினார்.

பதிப்பகம் என்ற முறையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றமடைய வைத்த முயற்சிகளும் உண்டு. அதில் முதலில் வருவது ‘தற்காலத்தமிழழ்அகராதி’ கொல்லன் பட்டறையில் ஊசி விற்க வந்த முயற்சி இது. தமிழர்களுக்கே தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிற இந்த யோசனையை யார் ராமகிருஷ்ணனுக்குச் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. அகராதிக் குழுவிலிருந்த இ.அண்ணாமலை, பா.ரா. சுப்பிரமணியம் போன்றோர் சிறந்த கல்வியாளர்களாக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு என்ன தேவை என்ற பெரும் உண்மையைப் பார்க்கத் தவறி விட்டார்கள். தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அகராதி தமிழறிந்தவர்கள் தங்களது ஆங்கிலப்புலமையை வளர்த்துக் கொள்ளுவதற்காகவும் பயன்பட வேண்டும். அப்படியானால் தமிழ் விளக்கங்களை விட ஆங்கில விளக்கங்கள் அதிகமாக இருக்க வேண்டும். இங்கே ஆங்கில விளக்கங்கள் ’பொசுக்’ கென்று முடிந்து விடுகின்றன. தமிழ் விளக்கங்கள் கூட கிராமத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது.

‘ஆனந்தவிகடன்’ பத்திரிகை 1930-களில் சித்திரப்போட்டி என்ற ஒரு போட்டியை நடத்தியது. அதில் கலந்து கொள்பவர்களுக்கு உதவியாக ‘ஆனந்தவிகடன் சித்திரப்போட்டி அகராதி’ என்ற ஒரு அகராதியை 1935-ம் ஆண்டு வெளியிட்டது. 2040 பக்கங்கள் கொண்ட இந்த தமிழ்-தமிழ் அகராதி கிட்டத்தட்ட ஒரு லட்சம் சொற்களைக் கொண்டது. அவ்வளவு பெரிய முயற்சியில் அதைத் தொகுத்தவர் பெயர்கூட இல்லை.

இன்னொரு ஏமாற்றம் ‘க்ரியா’ முன்னிறுத்திய நூலாசிரியர்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரை. இவர் ஒரு சித்தாந்தவாதியா, செயல்பாட்டாளரா, கலாச்சார விமர்சகரா, மொழித் தேசீயவாதியா என்பது இதுவரை பிடிபடாத விஷயம். மேலைத் தத்துவத்தில் எந்த அறிமுகமும் இல்லாதிருந்த அந்தக்காலத்திய வாசகர் கூட்டத்திற்கு ‘எக்ஸிஸ்டென்ஷியலிசம்’ ‘அந்நியமாதல்’ போன்ற கருத்தாக்கங்கள் புதியவை தான். ஆனால் நமது வரலாற்றோடும், பண்பாட்டோடும் எந்தவிதமான ஒப்பீடும் செய்யப்படாமல் வெறும் தகவல் குவிப்புகளாகவே அவை இருந்தன. பண்பாட்டு விமர்சனத்திற்கு ஒரு அடிப்படை தரவாகவே அப்புத்தகங்கள் பயன்படக்கூடும். இன்றைய விரல் நுனித்தகவல் சூழலில் அதுகூடச் சந்தேகம் தான்.

எழுபதுகளின் மத்தியப்பகுதியில் அக்னிபுத்திரனுடன் ராயப்பேட்டை ’க்ரியா’ அலுவலகத்திற்கு நான் போயிருந்தேன். ‘ஜே ஜே:சில குறிப்புகள்’ நாவலின் அட்டை தயாராகிக் கொண்டிருந்தது. ஓர் அட்டை ஒரு கால்பந்தாட்டக்காரனின் காலையும், பந்தையும் காண்பிப்பதாக இருந்தது. அட்டை எப்படியிருக்கிறது என்று ராமகிருஷ்ணன் எங்களிடம் கேட்டார். நான் அந்த வயதுக்கே உரிய ஆணவத்துடன் ‘கேனத்தனமாக இருக்கிறது’ என்று சொன்னேன். சற்று அதிர்ச்சியடைந்த அவர் பிறகு சுதாரித்துக் கொண்டு ‘ஓ’ என்று மட்டும் சொன்னார். அவரது பெருந்தன்மைக்கு இது ஒரு சுட்டல். புத்தகம் வெளிவந்த போது அந்த அட்டை மாற்றப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் தற்போது கோலோச்சிக் கொண்டிருக்கும் இரண்டு பிரிவினருக்கு ராமகிருஷ்ணன் கொஞ்சம் தருமசங்கடத்தைக் கொடுக்கக் கூடும்.

ஒன்று சுத்தத் தமிழ்த் தேசீசியவாதிகள்.. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராமகிருஷ்ணன் தமிழுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரே? தாங்கள் சொர்க்கத்துக்குப் போகும் புஷ்பக விமானத்தில் இவரைச் சேர்த்துக்கொள்வதா வேண்டாமா? என்று யோசிப்பார்கள்

இரண்டு: தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தி… ராமகிருஷ்ணனது அளப்பரிய பணியை மிகத்துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் முதலமைச்சர் இப்போதாவது இவருக்கு ஏன் எந்த அரசு அங்கீகாரமும் தரப்படவில்லை என்று தனது ஐம்பெருங்குழுவையும், எண்பேராயத்தையும் கேட்பாரா?

***

ப.சகதேவன் (P.Krishnaswami)
Bangalore
Mobile: 9845165940

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular