Monday, September 9, 2024

தடை

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

த்தனை ஆண்டுகளுக்குப் பின் நினைத்துப் பார்த்தாலும் வேலப்பன் எங்கள் வீட்டின் வாசலில் வந்து நின்ற அந்தக் காலைவேளை வெள்ளையடித்துவிட்ட பழைய தொலைக்காட்சிப் பெட்டியின் திரையைப் போன்று மங்கலாக என் நினைவில் இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் காட்சி வடிவில் என் நினைவில் நிற்பது அது ஒன்றே என்றுகூட நான் சொல்லத் துணிவேன். எங்கள் வீட்டின் கேட்டை சற்று வேகமாகத் திறந்துவிட்டு உள்நுழைந்த வேலப்பன் எவ்வித தயக்கமுமின்றி வீட்டின் சிமெண்ட் முற்றத்தைத் தாண்டி வேகமாக முன்னேறி முன்வாசலைத் தாண்டி முன்னறைக்கு வந்து அங்கே சோபாவில் அமர்ந்திருந்த அப்பாவிடம் சொன்னான்.

“வோய் நேற்றைக்கு எனக்க பூமிய அளந்தாச்சி கேட்றா, பத்துரத்துல இருக்க கணக்குப்படி பாத்தா ஒரு அடியைக் காணல்ல, அது ஒம்ம அகர்த்திக்குள்ள தான் கெடக்கும். அதான் நீரு ஒம்ம மதில இடிச்சி ஒரு அடி கணக்கு பண்ணி தள்ளிக் கட்டித்தாரும் என”

“யாருல நீ வெங்கப்பயல, விடியுமுன்ன வீட்டுக்குள்ள ஏறி சில்லறை எடவாடு பேசுகா”

“வோய் அனாவசியமாட்டு வாய்ல வார்த்தையள விடப்புடாது கேட்றா, அடுத்தவனுக்கப் பூமியை அபகரிச்சு எங்கடே கொண்டுபோவப் போறிய”

“எவம்ல ஒனக்கப் பூமிய அடிச்சி மாற்றினது, ஒனக்க அம்மைக்க மாப்பிளைட்ட பேய் கேளுல, எவம்ல சர்வையரு மயிராண்டி, என்னத்த அளந்தான், தனக்க குஞ்சிக்க நீளம் அறியாதவனெல்லாம் சர்வைவரு, காலம் போற போக்கு”

வேலப்பன் கைகளை ஓங்கினான், பின் தாழ்த்திக்கொண்டான்.

“நான் எனக்க சொத்த விக்கப்போறேன், வாங்குயவன் இந்த வில்லங்கத்தை மாற்றிக் கேக்கான், அடுத்த வாரத்துக்குள்ள நீ மாத்தி தா, இல்லணா வேற மாரி ஆவும்”

“கைய ஓங்குயா என்ன சீக்குட்டிப் பயல, ஒரு மயிரும் இடிச்சி மாத்த முடியாது, ஒனக்க பூமியக் காணலணா, ஒனட்ட வித்தவனுட்டப் பேய் கேளுல, அல்லணா ஒனக்கு பங்கு வச்சி தந்த ஒனக்க அம்மைக்க மாப்பிளைட்ட கேளுல” என்றார் அப்பா.

அங்கு கைகலப்பு நிகழுமென்றும் அவ்வாறு நிகழ்ந்தால் நான் என்ன செய்யவேண்டுமென்பதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் வேலப்பன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சட்டென்று இறங்கிப் போய்விட்டான். சற்றே நடுங்கிக்கொண்டிருந்த அம்மா முன் அறைக்கு வந்து நாமும் ஒரு சர்வையரை வைத்து அளந்து பார்த்தால் என்ன கேட்டாள்.

“ஒவ்வொருத்தனும் பூமியக் காணலண்ணி சொன்னா அளந்து பிச்சிக் குடுக்குயதுக்கு நான் பஞ்சிமுட்டாய் யாவாரமா பாக்கேன்” என்றார்.

இரண்டு மாதங்களாக எவ்விதச் சலனமுமின்றிக் கழிந்தது. வேலப்பனை நான் அவ்வப்போது பார்ப்பதுண்டு ஆனால் அவன் என் முகத்தைப் பார்க்காமல் ஒருவித ஏமாற்ற முகத்தை வைத்துக்கொண்டு செல்வான். பின் ஒருநாள் நான் முக்கு டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் பொழுது தரகன் ராமச்சந்திரன் வேலப்பன் தனது பூமியை விற்பதற்கு ஆள் பார்த்துவிட்டானென்றும் இன்னும் ஒரு மாதத்தில் எடவாடு முடிந்துவிடுமென்றும் அருகிலிருந்த கிழவரிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அப்பாவிடம் சொன்னேன். அப்பா பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு “ஓத்திரமில்லை எவனுக்காம் வித்துட்டுப்போறான், நம்மகிட்ட வராம இருந்தா சரி” என்றார்.

ஆனால் அது அவ்வாறு முடியாமல் அப்பா பேச்சுவாக்கில் சொன்னது போல எங்களிடமே மீண்டும் வந்து நின்றது. ஒரு திங்கட்கிழமை அப்பா அலுவலகத்திற்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது வீட்டின் வெளியே ஒரு வெள்ளைநிற டொயோட்டா பார்ச்சூயுனர் கார் வந்து நின்றது. அப்பா இடுப்பில் கட்டிக்கொண்டிருந்த தன் பெல்ட்டை பாதியிலேயே தொங்கவிட்டுக்கொண்டு வாசலில் சென்று பார்த்தார். காரிலிருந்து தன் தாடியைத் தேய்த்தபடியே இறங்கினான் செல்வம்.

மிகத்தூய்மையான வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, வயிறு பெருத்து அவன் வயதிற்கு தொடர்பற்ற உடலமைப்புடன் இருந்தான். மாநிற முகத்தில் நன்றாக அமைப்புடன் வெட்டி அழகுபடுத்தப்பட்டிருந்த தாடி வைத்திருந்தான். சற்றே குள்ளமானவன். இளம்பச்சை நிற சட்டையொன்றை அணிந்திருந்தான். இரண்டு கைகளிலும் எல்லா விரல்களிலும் விதவிதமான நிறங்களில் மோதிரங்கள் அணிந்திருந்தான்.

செல்வத்திற்கு ஒரு முப்பத்திரண்டு வயதிற்குள்தான் இருக்கும். ஆனால் மிகச்சமீபமாக அரசியல் செல்வாக்கு பெற்றவன். அவன் சார்ந்த கட்சியின் மாவட்ட இளைஞர் அணித் தலைவராக வர வாய்ப்பிருக்கும் ஒருவனாக அறியப்படுபவன். அவனை அங்கு அப்பா எதிர்பார்க்கவில்லை என்பது அப்பாவின் உடலசைவுகளை வைத்தே தெரிந்தது.

அப்பாவின் கண்கள் மிரண்டு உடலில் லேசான குலுக்கம் வர, பெல்ட்டை போட முயன்றுகொண்டிருந்த கைகள் அதை விடுவித்துவிட அசையாமல் நின்றார்.

செல்வம் வேகமாக உள்ளே வந்தான்.

குமரி மேற்கு மொழியின் ராகத்தில் “தொரணி சொல்லகூடியது நீங்களா” என்றான்.

அப்பா “ஆமா நாந்தான் தொரை” என்றார்.

“எனக்கு கட்சியில அடுத்த மாசம் பதவி தருவினும், அதாக்கும் நான் இங்கின நார்ல ஒரு வீடு கட்டியதுக்கு எடம் பாக்கியன், வேலப்பன்ட்ட பேசி எடவாடு முடியப்போவுவு, பின்ன அவன் ஒங்களுக்கு கூட உள்ள வில்லங்கத்த சென்னாய்ன், அதான் நான் பேசி பாக்கியம்ணு அவன்ட்ட சொன்னைய்ன், நீங்க அத ஒன்னு இடிச்சி மாற்றி தருவியளா, இப்பம் வேண்டாய்ன் , ஒரு ரெண்டு மாசம் கழிஞ்சி பாத்தா போரும் கேட்டியளா” இவ்வளவையும் அவன் எவ்வித ஏற்றமிறக்கமின்றி ஒரே சீராகச் சொல்லி முடித்தான்.

அம்மா காப்பி கொண்டுவந்தாள்.

“நான் வரச்சில காப்பி குடிச்சிண்டுதான் வாறைய்ன். நீங்க ஒன்னு இடிச்சி மாற்றுங்க தாருங்க என்ன” என்றான். அம்மா மீண்டும் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.

அப்பா பதிலெதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தார். அவன் என்னை நோக்கி, “பிள்ள ஒனக்க அம்மைட்ட சொல்லணும் அவியளுக்க கெட்டுனவன் உயிரோடி வேணும்மெங்கி பெகளம் உண்டாக்காம செவுர இடிங்க” என்றபடி மிகமிகத் தாழ்ந்த குரலில் என்னை நோக்கிச் சொல்லிவிட்டு வெளியேறிப் போய்விட்டான். அப்பா கண்களைச் சுருக்கி அவன் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதற்கு மேல் எங்களுக்கு செய்வதற்கு இந்தப் பிரச்சனையில் எதுவுமில்லை என்பதுபோல் நிகழ்வுகள் உருண்டன. எங்கள் தலை மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருப்பதை எவ்வித பங்குமின்றி ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தோம். செல்வம் எங்கள் மதில் சுவரை ஒட்டி அவனின் மிகப்பிரமாண்டமான ஒரு வீட்டைக் கட்டத் துவங்கினான். அதைக் கட்டவந்த ஒப்பந்ததாரர் ஆசிர்வாதம் எங்கள் வீட்டு மதிலுக்கும் அவன் புதிதாய் கட்டும் வீட்டிற்கும் ஒரு அடி இடம் விடலாம் என்று அறிவுறுத்திய பொழுது, “அந்தக் கரைக்கு நம்ம பூமி ஒரு அடி கெடக்கு நீங்க எது செய்தாலும் அத கணக்காக்கிக்கிடுங்க என” என்றான். ஆசிர்வாதம் பரிதாபமான ஒரு பார்வையை மதிலுக்கு இந்தப்புறம் நின்று கொண்டிருந்த அப்பாவிற்குத் தந்தார். செல்வம் அந்த வீட்டின் ஒவ்வொரு இடுக்கையும் பார்த்துப் பார்த்து செதுக்கினான். அவனுக்கு கட்சியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வந்திருக்கிறதென்று அந்தப்பகுதியில் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஒரு மாதத்திற்கு முன் இந்தப்பகுதிக்கு சற்றும் அறிமுகமில்லாதவனாக இருந்தவன் இப்பொழுது அனைவருக்கும் தெரிந்தவன் ஆகிவிட்டிருந்தான்.

வீடு பாதிக்கும் மேல் வளர்ந்துவிட்டது. செல்வம் வீட்டின் கட்டிடப் பணிகளை கவனிக்க தினமும் வரத்துவங்கினான். காலையிலிருந்து மாலைவரை அவனின் கார் எங்கள் வீட்டின் எதிர்புறம் நின்றுகொண்டிருக்கும். அதைப் பார்ப்பதற்கு அஞ்சியே நாங்கள் வீட்டைவிட்டு வெளியே வருவது குறைந்துபோய் முடங்கிவிட்டோம். எங்கள் வீட்டின் முன்வாசற் கதவு எப்பொழுதும் பூட்டிக் கிடந்தது. ஆனால் இதில் எங்களைக் குழப்பிய விஷயம் என்னவென்றால் அன்று ஒருநாள் வந்து பேசிய பிறகு அவன் மீண்டும் எங்களிடம் வரவேயில்லை.

ஆனால் எங்கள் மதில் சுவரினுள் இருக்கும் ஒரு அடி இடத்தை அவனுடைய இடம் போல் நினைத்து அங்கு வரும் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருப்பான். அப்பா அலுவலகத்தில் தனக்கு தெரிந்த எல்லாரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டார். அனைவரும் சட்டரீதியாக அணுகச் சொன்னார்கள். கூடவே அவ்வாறு செய்தால் நாங்கள் செல்வத்தின் கையில் எவ்வாறு துன்புறுவோம் என்பதையும் அவர்களின் கற்பனையில் ஓட்டிப்பார்த்துச் சொன்னார்கள். அப்பா சலித்து உடல் இளைத்துவிட்டார். காலையில் அவன் கார் வருவதற்கு முன் அலுவலகம் சென்றுவிடுபவர் அவன் கார் எங்கள் வீட்டின் முன்னிருந்து புறப்படும் வரை வீட்டிற்கு வருவதில்லை. ஒரு பேரலை போல அந்த வீடு எங்கள் முன் எழுந்து வந்துகொண்டிருந்தது.

அந்த வீடு பேருருவாகிக்கொண்டிருந்த வேளையில் அப்பாவின் நடமாட்டம் எங்கள் வீட்டினுள் குறைந்துகொண்டேயிருந்தது. அடுக்களைக்குள் வருவதை நிறுத்தியவர், முன்னறை, படுக்கயறை என மெல்ல மெல்ல விட்டு கடைசியில் நாங்கள் அரங்குவீடாகப் பயன்படுத்திய ஒரு அறையினுள் முழு நேரமும் முடங்கத் தொடங்கினார். அரங்கு வீட்டினுள் மாமா பயிர்தோறும் கொடுத்துவிடும் நெல்மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். விடுமுறை நாட்களில் அந்த நெடியினுள் எவ்வாறு நாள் முழுக்க அமர்ந்திருக்கிறார் என்பது என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை.

ஆனால் அவர் அவ்வறையினுள் தன் நேரப்போக்கிற்காக விதவிதமான செயல்களைச் செய்தபடியிருந்தார். ஆசாரியின் கருவிகளை வாங்கிவந்து ஒரு நாற்காலி கூட்டினார்.

எங்கள் வீட்டின் பின்புறம் கிடந்த உரல் ஒன்றை அவ்வறையினுள் தூக்கிச்சென்று கைக்குத்தல் நெல் செய்தார். எல்லா செயல்களின் மீதும் சலிப்பு உண்டான ஒருநாளில்தான் அந்த அறையில் அவர் சிறுவயதில் பங்கேற்ற போட்டிகளில் பரிசாகக் கிடைத்து இதுவரை பிரித்துப் படிக்காமல் போன புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.

அந்தப் புத்தகம் கனகாம்பர நிற முன் அட்டையும் வெள்ளை நிற பின் அட்டையும் வெறும் நாற்பது பக்கமும் கொண்டது. முன் அட்டையில் வெள்ளை நிற கோட்டோவியத்தில் சிறு செடியொன்று வரையப்பட்டிருந்தது. ஆசிரியர் பெயர்களாக மோனிகா மற்றும் உமையம்மை என்று இருந்தது. அதன் ஆசிரியர் மோனிகா என்பவர் இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து குமரிமாவட்டத்திற்கு வந்து நாகர்கோயிலில் தங்கியிருக்கிறார். நாகர்கோயில் பள்ளிவிளை அருகே வயற்காட்டில் மயங்கிக் கிடந்த உமையம்மையைக் காப்பாற்றியிருக்கிறார். அப்பகுதியில் சற்றே பித்து கொண்டவராக அறியப்பட்ட உமையம்மை தன்னை காப்பாற்றிய மோனிகாவின் மேல் விலங்குகள் காட்டும் நன்றியுணர்வைப் போன்று மோனிகா இறப்பது வரை தோழியாக, ஏவல் வேலை செய்பவராக வழிகாட்டியாக அவருடனே வாழ்ந்திருக்கிறார். ஆசிரியர்கள் பற்றிய இந்தத் தகவல்கள் எல்லாம் புத்தகத்தின் பதிப்பாளர் அப்பகுதி மக்களின் வாய்வழிச் செய்தியில் இருந்து சேகரித்திருக்கிறார். புத்தகத்தின் உள்ளே இருந்த தகவல்கள் கூட மோனிகாவின் சேகரிப்பில் இருந்து கிடைத்த குறிப்புகளின் நேரடித் தொகுப்புதான். மோனிகாவும் உமையம்மையும் குமரியின் பல்வேறு பகுதிகளில் அலைந்து திரிந்து பெற்ற அனுபவங்களை மோனிகா எழுதிவைத்துள்ளார்.

குமரியின் கடற்கரைப் பகுதியில் மட்டுமே விளைந்த ஒருவிதக் கிழங்கை அதன் அபூர்வ ருசியின் காரணமாக உமையம்மையும் மோனிகாவும் அவர்கள் அப்பொழுது வசித்த மலையடிவாரப் பகுதியான பள்ளிவிளையில் விளைவிக்க முயன்றிருக்கின்றனர். அதனை வளர்க்க அவர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை பட்டியலிடுகிறது முதலாவது குறிப்பு.

அந்தச் செடி பள்ளிவிளையில் வளரவேயில்லை. அதன் வேரும் தண்டும் தொடர்பற்றது போன்ற ஒரு அமைப்பை அடைந்து பின் பட்டுவிடுகிறது. எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடியவே கடைசியில் அந்தக் கிழங்கு இயற்கையாகவே கிடைக்கும் கடற்கரைப் பகுதியில் ஒரு நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே பயிர் செழித்து வளர்ந்திருக்கிறது. அவை அனைத்தையும் அறுவடை செய்யும் நாளில்தான் மோனிகா ஒன்றை கவனித்திருக்கிறார். எல்லா பயிர்களின் வேரும் கடலின் எதிர்திசையில் வடக்கு நோக்கிச் சென்றிருந்தது. அதற்கேற்றாற்போல் அவற்றின் தண்டுகள் தெற்கு நோக்கி வளைந்திருந்திருக்கிறது. அந்த அறிதலைக் கொண்டு தான் கவனித்து உள்வாங்கியவற்றை பரிசோதிக்க எண்ணிய மோனிகா பள்ளிவிளை மலையடிவாரத்தில் உமையம்மையிடம் தோட்டத்தில் பெரிய குழியொன்றை வெட்டச் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்களில் உமையம்மை நான்கடி ஆழமான மிக அகலமான குழியொன்றை வெட்டி முடித்துவிட்ட பின்பு குழியில் நீர் ஊற விட்டிருக்கின்றனர். பின் கிழங்கு கன்றுகளை அந்தக் குழியின் வடக்கு பகுதியில் நட்டிருக்கின்றனர். மோனிகா எதிர்பார்த்தது போலவே பயிர் அனைத்தும் பட்டுவிட்டிருக்கிறது. உமையம்மையை அழைத்த மோனிகா பெரிய இறைவெட்டி போன்ற கருவி இரண்டை செய்யச் சொல்லியிருக்கிறார். உமையம்மை தெங்கம்பாளை கொண்டு மோனிகா கேட்டதைப் போன்ற கருவியை செய்திருக்கிறார். அதோடு சேர்த்து சில கமுகு இலைகளும் கொண்டு வரப்பட்டு இருவரும் அக்குழியின் அருகில் அமர்ந்து காலை இரவு என என்னேரமும் நீரை அளைந்து கடல் அலைகளின் ஓசையைப் போலி செய்திருக்கிறார்கள். தன் இயல்பான பித்தால் உமையம்மை வெகு இயல்பாக, மிகத் துல்லியமாக அலைகளின் ஓசையை குழிநீரில் கொண்டு வந்திருக்கிறாள்.

இம்முறை அவர்கள் நட்ட கிழங்குப் பயிர் அபாரமாக வளர்ந்திருக்கிறது. அவற்றின் வேர்கள் குழியின் எதிர்திசையில் வடக்கை நோக்கி வளைந்திருந்திருக்கிறது. கிழங்கு அற்புதமான ருசியையும் நல்ல நெருக்கமான சதையமைப்பையும் கொண்டிருந்திருக்கிறது.

“அது செழித்து வளருமாறு கிழங்கிற்கு நாங்களிட்ட கட்டளை, அதை அந்தப் பயிர் நிறைவேற்றியது, அது இயற்கையின் கட்டளை, அதை ஒருக்காலும் அது மீற முடியாது” என்று குறிப்பின் கடைசியில் எழுதியுள்ளார் மோனிகா.

அப்பா புத்தகத்தை படித்துவிட்டு வந்து என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

“சவுண்டுக்கு சக்தி உண்டும், கேட்டியா மக்ளே”.

செல்வத்தின் வீட்டு வேலைகள் பெரும்பாலும் முடிந்து பால் காய்ப்பிற்காக காத்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நண்பகல் வேளையில் நான் வெயிலில் அலைந்துகொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். செல்வத்தின் கார் எங்கள் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தது. நான் அதன்மீது இயலாமையும் கசப்பும் கலந்த ஒரு அலட்சியப் பார்வை ஒன்றை வீசிவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். எல்லாக் கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்ததால் வீடு ஒருவித விநோத அமைதியையும் இருளையும் கொண்டிருந்தது. அம்மா முன் அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள். நான் செல்வத்தின் வீட்டை ஒட்டியிருக்கும் எங்கள் வீட்டின் படுக்கையறையை லேசாகத் திறந்து பார்த்தேன்.

அந்த இருளுக்குள் நீண்ட ஒளியொன்று ஊடுருவி லேசாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னலின் வழியாக வந்துகொண்டிருந்தது. அப்பா அந்த ஜன்னல் திறப்பின் இடுக்கின் வழியாக தன் கண்களை கூர்மையாக செல்வத்தின் வீட்டின் மேல் தவழவிட்டு ஒரு பல்லியைப்போல சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவர் தன்வாயின் மேல் விரலை வைத்து சிறுபிள்ளைகளை மிரட்டும் தொனியில் அங்கிருந்து நகரச் சொன்னார். அச்சமும் குழப்பமும் நிறைந்தவனாக நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அரை மணிநேரத்திற்குப் பின் அப்பா நடு அறைக்கு வந்தார். என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளாமல் வெளியே கிளம்பிச் சென்றார். அப்பாவின் மாற்றங்கள் அந்தப் பகலிலிருந்துதான் தொடங்கியது என என்னால் உறுதியாகக் கூற முடியும். அன்றிரவு வெகுநேரம் கழித்து திரும்பி வந்தவர் அம்மா உறங்கிவிட்டதைப் பார்த்துவிட்டு தானே சோறு போட்டு உண்டுவிட்டு நடு அறையில் நான் அமர்ந்திருந்த சோபாவின் எதிர்புறம் கிடந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். நான் வெகுநேரத் தயக்கத்திற்குப் பின் மத்தியானம் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்டேன்.

“ஒன்னுமில்ல நீ கவலப்படாத நான் சும்மாதான் பார்த்துட்டு இருந்தேன்” என்றார்.ஆனால் அதன் பின் மிகக்கூர்மையான மாற்றங்கள் அவர் நடவடிக்கைகளில் ஏற்பட்டன.

அவர் பல்லிகளை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினார். பல்லிகள் வீட்டிற்குள் வராமலிருப்பதற்காக எங்கள் வீட்டின் காற்றுப்பாந்துகளில் அமைக்கப்பட்டிருந்த அடைப்புகளை நீக்கினார். அதன் பின்னர் பல்லிகள் மிகச்சாதாரணமாக எங்கள் வீட்டினுள் நடமாடத் தொடங்கின. அவற்றின் ஒவ்வொரு அசைவையும் அவர் கவனித்தார். அவை சுவரில் ஊர்வதையும் அவற்றிற்கிடையேயான உறவுகள் என அனைத்தையும் கவனித்தார். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் சொன்னதைக் கேட்காமல் விருப்பஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பின் வீட்டிலிருந்தபடியே அந்த ஜன்னல் இடுக்கையும் பல்லிகளையும் முழுநேரமாக கவனிக்கத் தொடங்கினார்.

இரண்டு மாதங்களில் செல்வத்தின் புதிய வீட்டில் மீதமிருந்த வேலைகள் எல்லாம் முற்றாக முடிந்துவிட்டது.

“பணத்த கட்டி வச்சிருந்தா ஒரு நாளையிலேயே வீடு கட்டலாம்” என்றார் அப்பா. அதற்கு அடுத்த மாதம் செல்வம் வீடு பால்காய்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்தன. நாள் நெருங்க நெருங்க எங்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாதவர்களாகவும் இருளினுள் அமர்ந்திருப்பவர்களாகவும் ஆனோம். அப்பா இரவில் வீட்டிற்குள் விளக்கு போடுவதைத் தவிர்த்தார். சுவரில் அலையும் பல்லிகளை மிகச்சிறிய எல்.ஈ.டி டார்ச் லைட் அடித்து பார்ப்பார். அவை உடலுறவு கொள்ளும் வேளையில் தொடுதலுக்கு முன் வெகுநேரம் தயங்கியபடியே பார்த்துக்கொண்டிருப்பது முதல் அவற்றின் எச்சம் கருப்பும் வெள்ளையுமாக அடுக்கிச் செய்யப்பட்டிருப்பது வரை எல்லாவற்றையும் அறிந்து கொண்டேயிருந்தார். ஆனால் செல்வம் எங்களை ஒரு பொருட்டாக மதித்ததாகத் தெரியவில்லை.

அவன் எங்கள் வீட்டை ஒருநாளும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. மீண்டும் ஒருமுறையேனும் கூட எங்களிடம் வந்து மதிலை இடிக்கும்படி சொல்லவில்லை.

அவனைப் பொறுத்தவரை அவனுக்கு தேவைப்படும் நேரம் எங்கள் மதிலை இடித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணம்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அம்மா மிகக்குழம்பிப் போனாள்.அப்பாவின் நடவடிக்கை வேறு அவளை துன்புறுத்தியது. அவள் மதிலை இடித்துவிடுமாறு அப்பாவிடம் வற்புறுத்திக்கொண்டேயிருந்தாள்.

அப்பா இடிப்பதைப் பற்றி துளிகூட எண்ணமற்றவராகத் தெரிந்தார். அம்மா சொல்வதை அவர் கேட்கிறாரா என்றே அம்மாவிற்கு சந்தேகம் வந்திருந்தது.

ஆனால் எல்லாம் ஒருங்கே கூடி தெளிவாகும் நாளொன்று வந்தது. செல்வத்தின் வீடு பால்காய்ப்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு அவன் வீட்டு மொட்டை மாடி வேலை முடிந்து, மொட்டை மாடியிலிருந்து வழியும் தண்ணீர் கீழே விழுவதற்கான குழாய் எங்கள் மதில் சுவரைத் தாண்டி எங்கள் அகர்த்திக்குள் நீட்டப்பட்டது. மொட்டை மாடி கழுவிவிட்ட சிமெண்ட் கலந்த அழுக்குத் தண்ணீர் எங்கள் வீட்டின் பின்வாசலில் சரியாக வந்து வழிந்தது. அது எங்களுக்கு செல்வம் விடுத்த கடைசி அபாயச்சங்கு.

அம்மா மிகவும் பயந்துவிட்டாள். அப்பாவிடம் வந்து மீண்டும் மன்றாடினாள். அந்தச் சுவரை இடித்து ஒரு அடி தள்ளி கட்டிக்கொள்ளலாம் என்றாள்.

அப்பா அவளை அமைதிப்படுத்தினார், “கவலைப்படாத” என்றார். “அது நம்ம பூமி” என்றார். பிரமாணத்தில் தான் பலமுறைப் படித்துவிட்டேனென்றும் தவறொன்றும் நம்பேரில் இல்லையென்றும் சொன்னார். நாங்கள் பின் வாசலை நிரந்தரமாக மூடிக்கொண்டோம். அழுக்கு நீர் கதவினை அறையும் ஒலி கேட்கும் பொழுதெல்லாம் அம்மா அச்சம் கொண்டு கட்டிலில் சுருண்டு கொள்வாள். அப்பா எந்தவித சலனமுமின்றி சுவரைக் கவனித்தவாறிருப்பார்.

செல்வத்தின் வீடு பால்காய்ப்பிற்கு முந்தைய நாளன்று காலை முதலே அப்பாவின் மிகமிக விசித்திர நடவடிக்கையின் காரணமாக நான் அப்பாவை வீட்டிற்குள் இருந்தபடியே என் கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தேன். மாலை வந்ததும் அப்பா ஒருவித தத்தளிப்பும் நிலையழிதலும் கொண்டிருந்தார். முன்னிரவில் தச்சு கழிப்பதற்காக ஆட்கள் வந்தனர்.

கொத்தனார் ஒருவரின் கையில் செவலை நிறச் சேவலொன்று இருந்தது. தச்சு கழிக்கும் சமயத்திற்கே உண்டான ஒரு ரகசிய அமைதியும் மனிதர்களின் தாழ்ந்த குரல் பேச்சும் கேட்டுக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விளக்கு அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்த எங்கள் முற்றத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த நான் வீட்டினுள்ளே ஓடிச்சென்று அப்பாவைத் தேடினேன். நான் விரும்பியிராவிட்டாலும் உள்ளூர கணித்திருந்தபடியே அப்பா படுக்கை அறையினுள் சென்று ஜன்னலின் பக்கம் நின்றுகொண்டிருந்தார். செல்வத்தின் வீட்டினுள் கேட்கும் மெல்லிய மனிதக்குரல்களைத் தவிர வேறு எவ்வித ஓசையுமின்றி சூழல் பேரமைதியில் மூழ்கியிருந்தது. தாத்தா கொத்தனார் என்பதால் தச்சு கழிக்கும் நிகழ்வை அப்பா துல்லியமாக அறிந்திருந்தார். எல்லாவற்றையும் தன் கூரிய பார்வையாலும் உடலின் கணக்காலும் அறிந்துகொண்டேயிருந்தவர் சரியாக உள்ளே கோழி அறுக்கப்படும் சமயம் தன் வாயைத் திறந்து நுனிநாக்கை கீழ்வரிசைப் பற்களுக்கு அடியில் வைத்துக்கொண்டு நடுநாக்கால் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் என்று பல்லியைப் போல தடை அடித்தார்.
என் இதயம் வேகமாகத் துடித்தது. ரத்தம் சட்டென முடுக்கத்துடன் பாய்ந்து உடல் முழுவதும் நிறைந்தது. சற்றே மயக்கமும் நிலைகுலைவும் ஏற்பட வாசல் நிலையை நன்றாகப் பிடித்துக்கொண்டேன். இரண்டு நொடிகளுக்குப் பிறகு கண்கள் லேசான தெளிவை அடைந்த பிறகு நான் ஒரு கையால் நிலையைப் பிடித்தப்படி இன்னொரு கையால் என் கண்களைக் கசக்கிவிட்டு பார்த்தபொழுது குழப்பமும் அப்பாவின் மீது அருவருப்பும் அடைந்தேன். ஆனால் அப்பா வேட்டைக்குத் தயராகும் ஒரு விலங்கின் கூரிய கவனத்தோடும் எச்சரிக்கையுணர்வோடும் ஜன்னல் இடுக்கைப் பார்த்தபடி தொடர்ந்து தன் நாக்கால் தடை அடித்தார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

செல்வத்தின் வீட்டிற்குள் சலசலப்புகள் கேட்கத் தொடங்கின. அதெல்லாம் ஒண்ணுமில்லணே என்று ஒரு கனத்த ஆண் குரல் கேட்டது. சலசலப்பு மெல்ல அடங்கி கரு அமைதி நிலவியது. அப்பா அவரின் முகத்தின் சதை மட்டுமே அறியுமளவு மெல்லிய அலட்சியச் சிரிப்பொன்றைச் சிரித்தபடியே வந்து, வாசலில் நின்ற என்னைக் கண்டுகொள்ளாமல் தாண்டிச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டார். நான் அருவருப்புடன் கூடிய அலட்சியப் பார்வையைப் பார்த்தபடி அவர் படுத்திருந்த கட்டிலின் அருகில் நின்றுகொண்டிருந்தேன். தன் கைகள் இரண்டையும் மடித்து தலையின் மீது வைத்து கண்களை மூடிப் படுத்திருந்தவர் சில நிமிடங்களுக்குப் பிறகு தன் கைகளை விலக்கி என்னைப் பார்த்தார்.

“யாம்ல அப்படி நிக்கா, பேய் படு”

“எப்பா, நமக்கு என்னத்துக்குப்பா இதெல்லாம்”

“போல, ஒனக்க வயசுல நான் இருந்தம்ணா அவன வெட்டி பூத்திருப்பேன், ஒனக்கு பீ பலம் இல்ல, போல, பேய் படுல”.

கப்பலிலிருந்து விடுவிக்கப்பட்ட நங்கூரம் போல் பாய்ந்து வந்த சொற்கள் என் இயலாமையைக் கொழுகி தற்கொலை எண்ணத்தை ஒரு நொடி எழச் செய்தது. நான் என்மேல் அருவருப்பும் அசிங்க உணர்வும் அடைந்தேன். அங்கிருந்து உடனே விலகி என் கட்டிலுக்கு வந்து படுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் விடியற்காலையில் செல்வத்தின் வீட்டில் “விநாயகனே வினை தீர்பவனே” பாடலின் ஒலியில் நான் விழித்துகொண்டேன். பத்து நிமிடங்கள் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தேன். பின் பாடலின் ஒலியும் பால்காய்ப்பிற்காகக் கட்டப்பட்டிருந்த குழல் விளக்குகளின் ஒளியும் சேர்ந்து என் தூக்கத்தை தொந்தரவு செய்யவே எழுந்து வெளியில் வந்தேன். முற்றத்தில் வந்து பார்த்தபொழுது செல்வத்தின் வீட்டுவாசலில் வாழை மரமும் உலத்தி குலையும் அலங்கரித்திருந்தது. வீட்டிற்குள் திரும்பி வந்த நான் இரவு படுத்திருந்த முன் அறைக் கட்டிலில் அப்பா இல்லாததைக் கண்டு திகைத்து படுக்கையறைக் கட்டிலைப் பார்ப்பதற்காக கதவைத் திறக்க எத்தனித்தேன். முந்தைய நாள் நடந்த நிகழ்வு என்னுள்ளே சட்டென்று ஒரு மின்னலைப் போல வந்துபோனது. என் கை மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு படுக்கையறைக் கதவைத் திறந்தது. அப்பா ஜன்னலின் அருகில் ஒட்டியபடி நின்றிருந்தார். செல்வத்தின் வீட்டு வெளிச்சம் நீண்ட ஒரு குழல் விளக்கைப்போல படுக்கையறை ஜன்னலின்வழி வந்துகொண்டிருந்தது. என் இதயம் ஒருநொடி நின்றுவிட்டது. ஒரு பல்லியைப் போல கைகள் இரண்டையும் சுவரில் அழுத்தி வைத்தபடி தலையை ஜன்னலில் பதித்து, காதுகளைத் லேசாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னல் இடுக்கிற்கு கொடுத்தபடி, இடது கால்முட்டியை தூக்கி கட்டிலின் மேல் வைத்தபடி, ஒற்றைக் காலில் நின்றார்.

என்னைத் திரும்பிப் பார்த்தவர் கைவிரலை வாயில் வைத்து பின் “போ” என்றவாறு சைகை செய்தார். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அப்பா ஒரு மணிநேரம் அசையாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். நேரம் வெளுக்கத் தொடங்கியது. செல்வத்தின் வீட்டிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. பால் பொங்கியதற்கான அறிகுறியாகக் குலவைச் சத்தம் கேட்டது. அப்பாவின் உடலில் மெல்லிய நடுக்கமும் அபாரமானதொரு கவனமும் தோன்றியது. குலவை ஒலிகளின் நடுவே மிகச்சரியாக நிகழ்ந்த ஒரு நொடி அமைதியில் அப்பா நாக்கைச் சுழற்றினார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

குலவை ஒலி நின்று விட்டது. நான் சட்டென்று வெளியேறி செல்வம் கவனிக்கின்றானா எனப் பார்ப்பதற்காக முன்வாசலுக்கு வந்து வாசலைப் பெருக்குவது போல நடித்தவாறு வந்து குறைகண் போட்டு அவனைப் பார்த்தேன். அவன் வெளியே வந்து வீட்டின் சுவரைச் சுற்றிப் பார்த்தான். அவன் பின்னால் அவன் தாயார் வந்து, “அது ஒன்னுமில்ல மக்களே, நல்லதுதான் கேட்டியா, நீ அகத்தே பேயி வந்திருக்கியவளுக்கு பாலூற்றி குடு” என்றாள்.

செல்வம் வீட்டிற்குள் சென்றவுடன் அவள் வானத்தை நோக்கி கும்பிட்டவாறு வீட்டிற்குள் போனாள்.

அதன்பின் செல்வத்தின் வீட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் அப்பா ஊடுருவினார். அவன் எங்கிருந்தோ அதிகாரத்தின்வழி அடித்துப் பிடுங்கிக் கொண்டுவந்த பெண்ணைத் திருமணம் செய்து வீட்டிற்கு வந்த அந்த பின்மத்தியான வேளையில், அந்தப் பெண் வீட்டிற்குள் கால் வைக்கும் நேரத்தில் அப்பா ஜன்னலோரமாக நின்றிருந்தார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

செவ்வம் அன்றுதான் வாய் திறந்து கத்தினான்.

“தள்ளைய ஓழிக்கது” என்றான்.

அவன் மனைவி வெகு விரைவிலேயே குழந்தை உண்டானாள். மெல்ல மெல்ல வளர்ந்துவிட்ட அந்த வயிற்றைத் தள்ளிக்கொண்டு அவள் வீட்டு வாசலில் நிற்பதைக் கவனித்தவாறு அப்பா இரவும் பகலும் அந்த ஜன்னலின் ஓரம் நின்றிருப்பார். அம்மா எத்தனைக் கெஞ்சியும் அப்பா அதைவிட மறுத்துவிட்டார். அப்பாவின் மீது எனக்கும் அம்மாவிற்கும் ஒருவித ஒவ்வாமை உருவாகி அது அருவருப்பாக மாறி அவருடனான பேச்சு முற்றிலும் நின்று விட்டது. அவர் பல்லிகளை கவனிப்பதையும் ஜன்னலோரம் நிற்பதையும் தவிர வேறு எந்த வேலைகளையும் செய்யாமலானார்.

ஒரு வெள்ளிக்கிழமை அப்பா என்னிடம் வந்து அந்த ஞாயிற்றுக்கிழமை நாகரம்மன் கோயிலுக்குப் போகலாமென்றார். அம்மா சந்தோஷமாகி விட்டாள்.

“ஏ நாரம்மோ உப்பும் மஞ்சளும் கொண்டு வாறேன், எனக்க கஷ்டத்த மாற்றித்தா” என வேண்டிக் கொண்டாள்.

அன்று மதியம் உடனடியாக அரிசி மாவு வறுத்து அச்சு முறுக்கு செய்தாள். நாங்கள் அந்த இரண்டு நாட்கள் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டோம். அம்மா அப்பாவிடம் சனிக்கிழமை இரவு சாப்பிட்டு முடித்தவுடன், “ஒளிஞ்சு போவுவு ஒரு அடி” என்றாள். “அவன் இது வர எடுக்க வரலலா, நம்ம சும்மா இருப்போம், எடுத்தாம்ணா எடுத்திட்டுப் போறான்” என்றாள்.

அடுத்த நாள் காலையில் நாங்கள் நாகரம்மன் கோயிலுக்குப் புறப்பட்டோம். கோயிலில் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபொழுது அந்தத் திடலில் சிறிய அரசியல் கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. நாங்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அப்பா எங்களை வலுக்கட்டாயமாக அந்தக் கூட்டத்தின் அருகில் அழைத்துச் சென்றார்.

அங்கே செல்வம் ஒரு நான்கு பெஞ்சுகளைக் கூட்டி செய்யப்பட்டிருந்த மேடையில் பேசி்க்கொண்டிருந்தான். நானும் அம்மாவும் அங்கிருந்து விலக முயன்றோம். அப்பா அம்மாவின் கைகளைப் பிடித்து நிறுத்தினார். நாங்கள் மூவரும் அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் வெளியே நின்றுகொண்டோம்.

செல்வம் பேசிகொண்டிருந்தான். அவன் வழக்கமாகப் பேசும் குமரி மேற்குத் தமிழின் சாயல் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தான்.

“இப்பொழுது நம் நாட்டிலே சூழியலாளர்கள் பகுத்தறிவாளர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது மிகப்பெரிய ஒரு முரணான விஷயமாகும். காரணமென்னவென்றால், எடுத்துக்காட்டாக பல்லி தடையடித்தால் அந்த செயல் நன்றாக அமையாது என்பது ஒருவித மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்வார்கள். ஆனால் ஒரு சூழியலாளன் அது இயற்கையுடன் மனிதன் கொள்ளும் மாபெரும் தொடர்பு என்றே விளங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இயற்கை நம்முடன் அவ்வாறு பேசும் நிகழ்வுகள் இல்லையென்றால் இயற்கைக்கும் நமக்குமானத் தொடர்பு அறுந்துவிடும். ஆனால் பகுத்தறிவுப் பார்வையில் இது முற்றான ஒரு மூடநம்பிக்கையாகும். ஆகவே பகுத்தறிவாளர்கள் ஒருபொழுதும் சூழியலாளர்கள் ஆகமுடியாது. எதிர் கட்சியினரின் இந்த இரட்டை வேடத்தைத்தான் நாங்கள் தோலுரிக்கிறோம்” என்றான்.

அப்பா சிரித்துக்கொண்டார். அவனின் ஒவ்வொரு நொடிக்குள்ளும் தான் வெற்றிகரமாக ஊடுருவி விட்டதை நினைத்து அவர் முகம் ஒருவித நழிச் சிரிப்பை வெளிப்படுத்தியது.

எங்களைக் கூட்டிக்கொண்டு நாகர்கோயில் குளத்து பஸ் ஸ்டாண்டிற்கு மணிமேடை சந்திப்பு வழியாக நடந்து வந்தார். குளச்சல் செல்லும் பேருந்தில் என் அருகில் அமர்ந்துகொண்டார்.

அவர் முகம் புன்னகையில் மிளிர்ந்து கொண்டிருந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தவர் என்னைப் பார்த்து “அவெனக் கண்டியா பல்லி இல்லாம ஒரு மேடையிலக் கூடப் பேசமுடியல”. பின் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார். நான் என் உடல் அவரை ஒட்டாத வண்ணம் தள்ளி அமர்ந்து கொண்டேன். அவர் இப்பொழுது அணியும் ஒருவித வெளிறிய பிஸ்கட் நிறம் அல்லது சிறிய பூக்கள் போட்ட சாம்பல் நிறச் சட்டைகள் எனக்கு பல்லியை நினைவுப்படுத்துவதனால் அவர் உடலைத் தொடுவதை நான் தவிர்த்துவிடுவேன். எப்பொழுதும் சிறிய கோடுகள் கொண்ட சட்டையை மட்டுமே அணியும் பழக்கமுள்ளவர் இந்த விசித்திர சட்டைகளை எங்கோ கண்டெடுத்து வாங்கி வந்திருந்தார். பேருந்து புறப்பட்டு கோட்டார் தாண்டிய பொழுது அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.

“மக்ளே நம்ம எதிரியத் தோக்கடிக்கணும்ணா அவனுக்க பலவீனத்த கண்டுபுடிக்கணும்ணி பொதுவாட்டு சொல்லுவாவ கேட்டியா, ஆனா அது சரி கெடையாது பாத்துக்க, அவனுக்கும் நமக்கும் உள்ள ஒரு ஒற்றுமைப் புள்ளியக் கண்டுபிடிக்கணும், அதாக்கும் முக்கியம், அந்தப் புள்ளிய கண்டுற்றம்ணா அயிக்கும் பொறவு அவன் செய்யதெல்லாம் நமக்கு தெளிவாட்டு தெரிஞ்சிரும், ஏம்ணா அவன் நம்ம என்னச் செய்வமோ அததான் செய்வான். நம்ம நம்மள எப்படித் தோக்கடிக்கணும்ணி அறிஞ்சா போதும்”.

அந்த மகிழ்வான நாள் மேலும் நீடிக்க போவதில்லை என்று நான் அப்பொழுதே ஊகித்துக்கொண்டேன்.

அப்பா செல்வத்தை ஒவ்வொரு அடியாகச் சரித்தார்.

“நம்ம பூமில ஒரு அடி அவனுக்கணி சொன்னாம்லா, அவனுக்க பூமிய ஒவ்வொரு அடியாட்டு சாய்க்கணும்”.

செல்வத்தின் மனைவி குழந்தை பெற்று அவள் அம்மா வீட்டில் இருந்தாள். செல்வம் அவள் வீட்டில் நடந்த சட்டிப்பானைத் தொடும் நிகழ்ச்சிக்கு செல்லும் நாள் படியில் இறங்கியபொழுது அப்பா சரியாக ஜன்னலின் பின்னால் நின்று தடையடித்தார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

செல்வத்தின் உடல் திடுக்கிட்டது. அவன் அம்மா தேற்றினாள்.

“மக்ளே நல்லதாக்கும் கேட்டியா”.

ஆனால் செல்வத்தின் மனைவி இரண்டே மாதத்தில் இறந்து போனாள். பேற்று வலி வந்து துடித்தபொழுது உற்றார், உறவினர்கள் எல்லாம் எதிர்த்தபொழுதும் அவ்வெதிர்ப்புகளையெல்லாம் தாண்டி அவன் சுகப்பிரசவத்திற்காகக் காத்திருக்க சொன்னான். மருத்துவர்கள் அவனை எத்தனை எச்சரித்தும் பிடிவாதமாக மறுத்துவிட்டான். மருத்துவர்கள் வரும் ஆபத்தை அறிந்தபொழுதும் அவனின் அரசியல் செல்வாக்கைக் கருதி அவன் பிடிவாதத்திற்கு எதிராக எதுவும் செய்யமுடியாமல் செயலற்றிருந்தனர். அவன் மனைவி வலியில் துடித்து அழுது கெஞ்சியும் அவன் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்காமல் கடைசியில் பிரசவத்தில் சிக்கல் வந்து குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது. செல்வம் குழந்தையைப் புதைத்துவிட்டு மொட்டைத் தலையுடன் மனைவி சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் வாசலில் கிடையாகக் கிடந்தான். ஒருவாரத்தில் அவசரச் சிகிச்சை அறையிலிருந்து பொது அறைக்கு வந்திருந்த அவன் மனைவி இரவு பன்னிரண்டு மணிக்கு செல்வத்தை எழுப்ப முயன்று தோற்று உயிர்விட்டாள். அவள் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு தரையில் படுத்திருந்த செல்வத்தை எழுப்புவதற்காக கட்டிலின் ஓரத்தில் ஒருக்களித்து வந்தவள் கீழே இறங்க முடியாமல் செல்வத்தின் மேல் சிறுநீர் கழித்திருந்தாள். அலைச்சலில் அசந்து உறங்கிக்கொண்டிருந்த செல்வம் சிறுநீர் பட்டுதான் எழுந்தான். அவன் செவிலியரை அழைத்து வருவதற்குள் அவள் இறந்துவிட்டாள். மனைவியைப் புதைத்துவிட்டு வந்த செல்வம் மனைவி இறந்த அன்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்ட அவன் தாயை அடித்தான். மகன் அடித்ததைத் தாங்க முடியாத அவன் தாய் ஒரு வாரம் கழித்து வீட்டின் உள்மாடிப்படி கைப்பிடியில் தூக்கில் தொங்கினாள். அவளைப் புதைத்துவிட்டு வந்து தனிமையில் அந்த வீட்டில் இருந்தவன் ஏதோ ஒரு நினைப்பில் மனைவி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களைத் தாக்கினான். மனைவி இறந்த ஆத்திரத்தில் மருத்துவர்களைத் தாக்கினான் என்பது பெரிய புகாராகி, கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தினான் என்று கட்சி மேலிடத்தில் இருந்து உட்கட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். அப்படியாக அவன் மனைவி இறந்த இரண்டு மாதத்தில் கட்சிப்பதவி பறிபோனது. கட்சிப்பதவி பறிபோனவுடன் உள்ளூர் எதிர்கட்சி ஆள் ஒருவர் அவனுக்கு கொடுத்திருந்த கடனுக்கு மாற்றாக அந்த வீட்டை எழுதித்தர அவனை நெருக்கினார்.

அன்று நான் தேனீர் கடையில் நின்றுகொண்டிருந்த பொழுது தரகன் ராமச்சந்திரன், செல்வம் அந்த வீட்டை விற்க ஆள் பார்க்கிறான் என்றான். மிகக் குறைந்த விலைக்கு விற்பதால் இடவாடு வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றான். நான் தேநீரை விரைவாகக் குடித்துவிட்டு ஓடிச்சென்று அப்பாவிடம் சொன்னேன். அப்பா சிரித்துக்கொண்டார். செல்வம் அந்த வீட்டில் வாழ்வதற்கான அனக்கம் இல்லாமல் ஆகியது. எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கடலில் விலகிச்சென்ற அலை திரும்பி வருவதைப்போல் வெள்ளமெனத் தழுவியது. அப்பா எடுத்திருந்த பல்லிநிறத் துணிகளை தூர எறிந்தார். செல்வத்தின் வீட்டை ஒட்டியிருந்த ஜன்னல் நிரந்தரமாக பூட்டப்பட்டது. வீட்டின் காற்றுப்பாந்துகள் அடைக்கப்பட்டன. பின்கதவு திறக்கப்பட்டது. பின்கதவை ஒட்டி அழுக்குத் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்த குழாயை அப்பா ஒரு கம்பைக் கொண்டு அடித்து உடைத்தார். எனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியது.

சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு லாரி வந்து செல்வத்தின் வீட்டுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றது. நாங்கள் எங்கள் வீட்டில் இருந்தவாறு அதைக் கவனித்துக்கொண்டிருந்தோம். லாரி சென்று சற்று நேரத்தில் செல்வத்தின் கார் வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்றது. அதில் இருந்து உடல் இளைத்திருந்த செல்வம் இறங்கினான்.

அவன் பக்கத்து வீட்டிற்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக எங்கள் வீட்டினுள் நுழைந்தான். எவ்வித ஆக்ரோஷமுமின்றி எங்கள் நடு அறையில் நுழைந்து சட்டென்று அப்பாவின் கழுத்தைப்பிடித்து சுவரில் தூக்கிப் பிடித்தான். இம்முறை எவ்வித தயக்கமோ சிந்தனையோயின்றி நான் அடுக்களைக்குள் ஓடிச்சென்று வெட்டுக்கத்தியை எடுத்து வந்தேன்.

அப்பா சுவரில் தொங்கியவாறு ஒன்றும் செய்யாதே என்று என்னைப் பார்த்து கை காண்பித்தார்.

இரண்டு முறை பெருமூச்சு விட்ட செல்வம் சொன்னான்.

“தள்ளயஓழி நீதாம்ணி தெரியும்ல, ஆனா அந்த தத்ரூபம் இருக்குவுல்லா”.

அப்பாவை இறக்கிவிட்டு செல்வம் வெளியேறினான்.

***

ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம் முருங்கவிளையில் பிறந்த இவர்
தற்பொழுது பணி நிமித்தமாகச் சென்னையில் வசித்து வருகிறார்.மின்னஞ்சல்: jeyangopalakrishnanv@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular