தடி

0

லட்சுமிஹர்

அத்தியாயம் ஒன்று: வலஞ்சுழல்

ப்படி நடந்தேறும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் இச்செயலை அவன் செய்திருப்பான் என்று ஒரு நொடியும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. வேண்டி உருகிநின்ற இடத்தில் தன்னை இழத்தல் எவ்வளவு பெரிய கொடுமை. அப்படி திசைகளை மறந்து பேதலித்து செய்திருப்பான் என்றும் தோன்றவில்லை. தனது சுய நினைவினால் மட்டுமே அதை செய்திருக்க முடியும். எண்ணற்ற நம்பிக்கைகள் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் போனதை பலிகொடுத்திருக்கிறான். அதில் தன்னையும் அவன் இழந்திருக்கிறான் என்பதே உண்மை.

எனக்கும் குலசேகருக்குமான அறிமுகம் எப்போது நிகழ்ந்தது என்று நினைவுபடுத்துகிறேன். எப்படி நான் அதை மறந்திருக்க முடியும். இன்று அவனை அந்த ரூபத்தில் பார்த்துவந்தது முதல் மனதிற்குள் அவனைப் பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தது. என்னை அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்றுகூடத் தெரியவில்லை. அவன் என்னை நினைவுகூர்ந்திருந்தால் நான் அவனைக் கண்டுகொண்டதையும் அறிந்திருப்பான். என்ன நடந்திருக்கும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படியா குலசேகரனைப் பார்க்க வேண்டும். அவன் என்ன நினைத்திருப்பான், ஒன்று நான் உண்மையை சொல்கிறேன் அவனென்று தெரிந்த பின்னரே அவனது பாதங்களில் விழுந்தேன். ஏனோ பழைய விசயங்களைப் பேச மனம் ஒத்துழைக்கவில்லை.

இரவு அனைத்தையும் விழுங்கிகொண்டிருந்த நேரம் வானில் ஒருவன் மட்டும் இவ்வுலகத்திற்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அந்த முழு நிலவு நாளில்தான் குலசேகரனை முதன்முதலில் பார்த்தது. அவன் என் வாழ்நாளில் நான் மறைமுகமாகத் தேர்ந்தெடுத்த குருவாக ஆவான் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

குலசேகரனை கல்லூரி விடுதியில் வைத்துதான் பழக்கம். எங்கள் குழுவிலேயே அவனுக்குத்தான் பக்தி அதிகம். அதனாலேயே என்னவோ எல்லோரிடமிருந்தும் ஒருவித விலகுதல் குலசேகரனுக்கு இருந்தது. அந்த விலகுதல் பலவகையில் அவனை பற்றியான அக்கறையில் நேரத்தைச் செலவிட உதவியது. பெரும்பாலும் எங்களின் போதை என்கிற நித்திய நிலையிலிருந்து பெரும் விடுதலையையே கொடுத்தது. இந்த முறை அவனது குரல் கேட்கிறது. அதை தனது குரல்வளையிலிருந்து வெளியேற்றும் உருவத்தைத்தான் இப்போது தேடவேண்டியிருந்தது. நேற்றிரவு நடந்த பெரும் மது போதையிலிருந்து இன்னும் மீள முடியாமல் தத்தளிக்கும் என்னை பலமுறை அவனது குருவிடம் அறிமுகப்படுத்துகிறேன், அவர் உங்களுக்கு வேண்டியதை தங்களின் உடலை கெடுக்காத வண்ணமே கிடைக்க அவரின் எல்லையை ஒருமுறை மிதித்து பாருங்கள் என்று போனமுறை அவன் கூறியதை நினைவுபடுத்தாமலேயே என்னுள் சுழன்றுகொண்டிருந்தது. அவன் இதுவரை சொல்லிய விசயங்களுக்கு என்மூலம் நானே பலவாறு அவருக்கு உருவம் கொடுத்திருக்கிறேன். என்னால் முடிந்தளவு குலசேகரன் சொல்லும் கதைகளை காதுகொடுத்துக் கேட்டிருக்கிறேன். மற்றவர்கள் இவன் பேச ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்து அலறி அடித்துக்கொண்டு அறையை காலிசெய்து ஓடிவிடுவார்கள். அதையெல்லாம் குலசேகரன் பொருட்படுத்தியது கிடையாது. அவனுக்குச் சொல்ல நிறைய கதைகள் இருந்தது.

பேசாத குழந்தையை அவரின் குரு பேச வைத்தது, நோயுடன் வந்தவர்களை பூரண குணமாக்கி அனுப்பியது, குழந்தைபேறு என இன்னும் இன்னும் அவனிடம் சொல்ல எக்கச்சக்கக் கதைகள் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

எனக்கு குலசேகரனை சந்திப்பதற்கு முன்பு பெரும் நம்பிக்கைகள் எதன்மீதும் இருந்ததில்லை. இத்தனை வருட காலம் இந்த உலகம் என்னை எப்படி தள்ளிவிட்டதோ அந்த திசையில் தலை நிமிராமல் காதுகொடுத்து எதையும் கேட்காமல் ஓடிவந்திருந்தேன். குலசேகரனின் இப்படியான கதைகள் முதலில் ஈர்க்கவில்லை எனினும் போகப்போக இதன்மேல் அவனுக்கு இருந்த ஆர்வமும் நம்பிக்கையும் தான் என்னை காதுகொடுத்துக் கேட்க அமர்த்தியது.

கடைசியாக வெட்டுச்சாமி குடியிருந்த வீட்டின்முன் இருக்கும் ஆலமரம் தனது கிளைகளை பரப்பி கால்கடுக்க வேண்டுதல்களை ஏற்க நிற்கும் மரத்தினில் மனதிற்கு நினைத்ததை எழுதி அந்த வேர்களில் முடிந்தால் கண்டிப்பாக நிறைவேறும்.. அப்படி ஒருநாள் தனக்கு வேண்டியதை எழுதியிருக்கிறான்.. அது நடந்தேறிதான்… முழுவதுமாக அவனை ஈர்த்துள்ளது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அது அப்படியே நடந்தது.

“நீ அதற்கு நம்ப வேண்டும்..” என்றான் குலசேகரன்.

“எப்படி.. எதைக்கொண்டு.. எதனால்..” என்று கேட்டுகொண்டே சென்ற என்னிடம் குலசேகரன் எனக்கு எப்போதும் புன்னகையை மட்டுமே ஒரே பதிலாய் வைத்திருந்தான்.

குலசேகரன் எப்போதும் பௌர்ணமி அன்று தன்னுடைய குருவின் ஜீவசமாதி அடைந்திருக்கும் மான்வாடிக்குச் சென்றுவிடுவது வழக்கம். நள்ளிரவு பனிரெண்டு மணி பூஜையை அங்கிருந்து முடித்துவிட்டு தான் தங்கும் விடுதிக்கு வருவான்.

அவன் சொல்வான் இறந்த ஒருவரை தேடுவதைத் தவிர்த்து வாழும் ஒருவரைக்கூட குருவாய் தேர்ந்தெடுத்துக்கொள் என்று கூறும் அவனிடம் கேட்க என்னிடம் பல கேள்விகள் இருந்தது. அப்படி நமக்கு ஒரு குரு கண்டிப்பாக தேவையா என்று மறந்திராமல் கேட்டும் இருக்கிறேன். அதற்கான பதிலையும் உன்னுடைய குருதான் சொல்ல வேண்டும் என்று சிரித்துக்கொண்டான்.

ஆறுவழிச் சாலைக்கு இடையூறாக நின்ற அந்த ஆலமரத்தை எடுக்க அரசாங்கம் முயன்றபோது அதற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு வந்த இரவில் அங்கு நடந்தவற்றைப் பற்றியே கூறிக்கொண்டிருந்தான. அந்த ஆலமரத்திற்குபின் இருக்கும் கதையை அங்கு வந்த முதியவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டதாக அதை என்னிடம் அப்படியே சொன்னான். சொன்னவருக்கு வயது சுமார் எழுபதிற்கு மேல் இருக்கும், வெட்டுச்சாமியை நேரில் பார்த்தவரும்கூட என்று சொன்னான். இப்படி அவன் அங்கு செல்லும்போதெலாம் ஒருவரைச் சந்தித்து அவரிடமிருந்து பழைய கதைகளைக் கேட்டுவருவதும் தொடர்ந்து நடந்துவந்தது. அவரிடமும் அன்றிரவு திருநீறு வாங்கிவிட்டு எனக்கும் கொண்டுவந்திருப்பதாக பையிலிருந்து எடுத்தவன் அதை தனக்கு கொடுப்பவராக ஒரு நிமிடம் மாறி எனக்குப் பூசிவிட்டான்.

இப்படி வெறும் ஆளாகச் சுற்றிகொண்டிருந்த என்னுள்ளும் குலசேகரனின் கதைகள் விருட்சம் கொள்ளத்தொடங்கியது. என் வீட்டிலும் என்னுடைய மாறுதல்களை கவனிக்காமல் இல்லை. சாமி கும்பிட கோவிலுக்கு வாடா என்றாலும் எட்டிப் பார்க்காதவன் இன்று அவர்களுக்கு யாரென்றே அறிமுகம் இல்லாத பச்சை வேட்டித்துண்டு போட்டிருந்த ஒருவரின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுவந்து வீட்டின் ஹாலில் மாட்டுகிறான் என்று முதலில் பயந்தவர்களுக்கு குலசேகரனை வீட்டிற்கு அறிமுகப்படுத்தினேன். அவனுடைய் பேச்சுக்கள் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்திருந்தது. அவனை அமரவைத்து சாப்பாடும் பரிமாறினார் அம்மா. ‘இத்தனநாளு கூட்டிட்டு வந்ததுலையே இவன் மட்டும்தான் உருப்படுற மாதிரி தெரியிறான்..’ என்று அம்மா சொன்னாள்.

இனி என்ன, எல்லையை மிதிக்க வேண்டியதுதான் என்று அடுத்த பௌர்ணமிவரை காத்திருக்காமல் இன்றே போகலாம் என்று சொன்னேன். சரி என்று உடனே வண்டியில் இருவரும் கிளம்பிவிட்டோம். கரிசல்காடு வயல் நிலங்களுக்கு நடுவில் அந்த ஆலமரத்தை குலசேகரன் எனக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நான் கண்டுபிடித்துவிட்டேன். அதன் கிளைகள் யாவிலும் முடிந்திருந்த வேண்டுதல்கள் அவ்வளவு பெரிய மரத்தை மறைத்துக்கொண்டிருந்தது. இன்று கூட்டம் அவ்வளவு இல்லை. அங்கும் இங்கும் என சில தலைகள் நடமாடிக்கொண்டிருந்தது. அங்கு பேப்பர் விற்றுக்கொண்டிருந்தவரை தெரிந்தது போல கைகாட்டி அவரிடம் நலம் விசாரித்து அவரிடமிருந்து அவனுக்கும் எனக்குமாக இரண்டு பேப்பர்களை எழுத வாங்கிக்கொண்டு வந்தான். என்னிடம் ஒன்றை நீட்டி எழுது என்று கொடுத்துவிட்டு அவன் எழுதத் தொடங்கினான்.

எனக்கு பேப்பரை வாங்கியபின் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இவ்வளவு தூரம் இங்கு வந்துவிட்டு என்ன எழுதுவது என்று தெரியாது விழிக்கும் என்னை என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. என்னளவில் எனக்கு எல்லாம் கிடைத்தது போலதான் இருந்தது, இதில் என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். குலசேகரன் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தான். நான் எழுதுவதை விடுத்து அவன் எழுதுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களைப் போலவே அங்கு பலர் தங்களின் வேண்டுதல்களை எழுதிக்கொண்டிருந்தனர். அவர்களின் வேண்டுதல்களை அறிய ஏனோ மனம் ஆசைப்பட்டது. அதை அறிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம், இத்தனை இத்தனை வேண்டுதல்களுக்கு நடுவில் அமைதியாக எதையும் எழுதாமல் அமர்ந்திருந்தேன். அருகிலிருந்த குலசேகரன் எழுதிட்டியா என்று கேட்டவனிடம் எழுதிவிட்டேன் என்று எழுதாமல் இருந்த பேப்பரை மடித்து அவனிடம் நீட்டினேன். நீயே கட்டு என்று அவன் கிளையில் கட்டிக் காண்பித்தான். இருவரும் வெட்டுச்சாமி வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு அவரின் ஜீவசமாதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அவன் வழிநெடுக இதற்குமுன் இங்கு வந்த அனுபவத்தைச் சொல்லிக்கொண்டே வந்தான். ஜோசியம் பார்ப்பவர்கள், டீலக்ஸ் மிட்டாய் வண்டிகள், தண்ணீர் பாட்டில் விற்பவர்கள், முடி காணிக்கை செலுத்துபவர்கள், வெட்டுச்சாமியின் புகைப்படங்களை விற்பவர்கள், ஐம்பது ரூபாய் கொடுத்து மாடு, கன்றுக்கு புல் வாங்கிப்போடுபவர்கள் என ஆட்கள் தங்களின் அன்றாடத்தை செய்துகொண்டிருந்தனர். ஆலமரம் அருகில் வேண்டுதல்களை எழுத பேப்பர் கொடுப்பவர்கள் காசிற்கு விற்பவர்கள் கிடையாது அதுவும் ஒரு நேர்த்திக்கடன் என்று தெரிந்துகொண்டேன்.

ஒற்றையடிப் பாதையை விரிவுபடுத்தியது போன்ற மண் தரையில் நடந்துவந்து ஜீவசமாதியை அடைந்தோம். ஜீவசமாதிக்கு முன் பெரிய வரிசையிருந்தது. அந்த வரிசையில் போய் நின்றுகொண்டோம். எப்படியும் அருகில் செல்ல அரைமணிநேரம் எடுக்கும். குலசேகரன் சொன்ன கதைகளின் கதாபாத்திரங்கள் அங்கும் இங்கும் என அலைந்து திரிவதையும் என்னால் பார்க்க முடிந்தது. இதுவே முதல் முறை என்பதாலோ என்னவோ குலசேகரன் சொன்ன கதைகளில் வரும் கதாபாத்திர நித்தியை என்னால் அடைய முடியவில்லை. அங்கிருந்த ஒருவித அமைதி என்னுள் வந்தது. மனிதர்களும் காலமும் நின்று நிதானித்துச் சுழல்வதுபோலத் தெரிந்தது. கண்களை மூடி என்ன வேண்டுவது எனத் தெரியாமல் பெரிதாக மாட்டப்படிருந்த அவரின் போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எத்தனை முறை குலசேகரன் சொல்லும்போது இந்த முகத்தை கற்பனை செய்திருக்கிறேன். அந்த கற்பனைகளிலிருந்து துளியும் மாறுபடாது இருப்பது பெரும் ஆச்சரியத்தையே கொடுத்தது. அதே வடிவம்தான் நான் நினைத்த அதே மனித வடிவில்தான் அங்கு அவர் காட்சியளித்துக்கொண்டிருந்தார். அதை அவனிடம் பகிர்ந்துகொள்ள ஏனோ மனம் ஒப்பவில்லை. ஜீவசமாதியை ஒருமுறை சுற்றிவந்து அமர்ந்தோம். குலசேகரனை அடையாளம் கண்டுகொண்ட சாமியிடம் என்னையும் அழைத்துக்கொண்டு சென்றான். என்னை அவரிடம் அறிமுகம் செய்துவைத்தான். என்னை நோக்கியவராய் ‘இனி உனக்கு நல்ல காலம்தான்’ என்று அவரின் கைகளை ஆசி வழங்குவதுபோல என் தலையில் வைத்தார் . குலசேகரனிடம் ‘இனி இவனுக்கு உன் தயவு தேவைப்படாது’ என்று சொல்லி அவனுக்கும் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டார். இப்படியாக எனக்கு முதல் அனுபவம் முடிந்தது என்று சொன்னால் அது பொய்தான் இனிமேல் நடந்ததுதான் அடுத்துவந்த காலங்களைத் தீர்மானிப்பதாய் அமைந்தது.

அந்த நாளில் குலசேகரன் அங்கு யாரென்று தெரியாத ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் போய் முடிந்தது. அவன் அவரை நன்றாகத் தாக்கினான். அந்த முதியவருக்கு கண்டிப்பாக எண்பது வயதிற்கு மேல்தான் இருக்கும். இதுவரை நான் குலசேகரனை அப்படி பார்த்ததே கிடையாது. அவன் அன்று மூர்க்கத்தின் உச்சகட்டத்தில் யாரின் தயவுமின்றி நடந்துகொண்டது போல இருந்தது. அவன் அடிக்கும் அந்த முதியவர் இவனை தடுக்கக்கூட இல்லை. எதையோ முனகிக்கொண்டேதான் இருந்தார். அவர் என்ன முனகினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக குலசேகரனுக்கு அது கேட்டிருக்கும் என்றுதான் தெரிகிறது. எதனால் அப்படி நடந்து கொண்டான் என்று அவனிடம் கேட்கவேண்டும் போலிருந்தது. எதனால் அப்படி நடந்துக்கொண்டாய் என்றும் அவனிடம் கடைசிவரை கேட்கவில்லை. அங்கிருந்து விடைபெற்று வந்தது முதல் குலசேகரனின் முகம் வாடிப்போய் இருந்தது. விடுதி வரும்வரை என்னிடம் அவன் பேசவில்லை. சாமி சொன்னது என் மண்டையில் மட்டுமில்லாமல் அவனுக்குள்ளும் ஓடிக்கொண்டுதானே இருக்கும் என்று யோசித்து கொண்டதால் இதைப்பற்றி அவனிடம் கேட்கவில்லை. அவனும் அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை. அதற்கு பிறகு அவரவர் பாதையில் எனக்கும் குலசேகரனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்தச் சாமியார் சொன்னது போலவே இந்த நாட்களில் குலசேகரனின் தயவு இல்லாமல் வெட்டுச்சாமி சமாதி என்னை இழுத்தது. முதலில் பௌர்ணமி அன்று வந்துகொண்டிருந்த நான் வாரம் இருமுறை வர நேர்ந்தது.. இப்போதெல்லாம் அவரின் அனுமதியோடுதான் எந்தக் காரியங்களையும் தொடங்குகிறேன்.. அவரின் நித்தியத்தை அறிந்தவனாய் உணரும் நோக்கோடு வாழ்வு முன்னேறத் தொடங்கியது. இது என்னுடைய ஒருபக்கம்தான். குலசேகரனின் மௌனத்திற்கு என்ன காரணம் என்று என்னால் சொல்ல முடியவில்லை .

அத்தியாயம் இரண்டு: இடஞ்சுழல்

ப்படி என்னதான் எழுதுனான் அவனுக்கு இவ்வளவு கொடுக்குற’ என்று கத்தி கூப்பாடு போட்டேன் அந்த ஆலமரத்தின் அடியில் நின்றுக்கொண்டு. எப்படி இது நிகழ்தேறியது. இன்றுவரை சிவ..சிவா என்று சுற்றித் திரிந்துகொண்டிருந்த என்னை ஒருபொழுதும் கவனித்திராது நான் எழுதியது அனைத்தையும் உதாசீனப்படுதினாய். இப்படி அலைவதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று எப்படி உன்னால் சொல்ல முடியும்.. எப்படி சொல்ல முடியும் என்று கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த என்னைச்சுற்றி திரிபவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் தெரியுமா? அதையும் நான் உனக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்படி எப்போதும் கத்தி திரியும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் தோற்றத்தை பார்த்து ‘சாமி ஏன் இப்படி கத்துது’ என்று கவனித்தும் நிராகரித்து சென்றனர்.

‘ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி’ என்று அருகில் வருபவர்களுக்கு என் கையில் வைத்திருக்கும் தடியால் அடி கொடுத்தேன். இப்போதெல்லாம் இப்படி வந்துகேட்டு என்னிடம் அடிவாங்கும் எண்ணிக்கைகள் கூடிவிட்டன. என்னிடம் அடிவாங்கினால் யோகம் என்றும் புலம்புகிறார்கள் பைத்தியங்கள்.

நான் சிவனே என்று சுற்றித் திரிவதுகூட இவர்களுக்குப் பிடிக்கவில்லை போலும். காலில் பல நாட்களாக இருந்த ஆணி இப்போது நடையை முடக்கி இருந்தது. பாதத்தில் சீழ் வேறு எந்நேரமும் வழிந்துகொண்டிருந்தது. எப்போதும் இந்நேரத்திற்கு சாப்பாடு வந்திருக்கும். இன்று ஏனோ இவ்வளவு நேரம் ஆகியும் சாப்பாடை கொண்டுவந்து கொடுக்காமல் எங்குபோய் தொலைந்தானோ இந்த குள்ளன், வந்துவிடுவான் என்று மனம் வயிற்றை சமாதானப்படுத்திகொண்டிருந்தது.

இன்று பௌர்ணமி. வெட்டுச்சாமி சமாதியில் கூட்டம் அலைமோதியது. சீழ் வலியைத் தாங்கிக்கொண்டு இவ்வளவு நேரம் பிச்சையில்தான் பொழுது போனது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கை நிரம்பிக்கொண்டுதான் இருந்தது. சிலர் என்னிடம் அதிகம் பேசி அடி பெற்ற மகிழ்ச்சியில் சமாதியை நோக்கி வழிபடச் சென்றுகொண்டிருந்தனர்..

நான் ஆலமர நிழலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு ஓடிவந்தவன் சாப்பாடை என்னிடம் கொடுத்துவிட்டு எப்போதும்போல அருகில் உட்கார்ந்துகொண்டு பேசத்தொடங்கினான்..

“இன்னைக்கு என்ன ரொம்ப டயர்டா இருக்கிங்க சாமி”

“நீ ஏன்டா இவ்வளவு நேரம் வரல…”

“கோச்சுகாதீங்க சாமி… வேல ரொம்ப அதிகம்.. பௌர்ணமி கூட்டம் வேற.. இந்த கூட்டத்துல இருந்து தப்பிச்சு சாப்பாட போட்டு வரதுக்குள்ள லேட்டு ஆகிடுச்சு..”

“ரொம்ப நடிக்காதடா..” என்று சொல்லிக்கொண்டே பொட்டலத்தைப் பிரித்தேன்.

“சாமி.. இன்னைக்கு சாப்பாடு எப்படி இருக்குதுன்னு பாருங்க” என்றான் சிரித்துக்கொண்டே..

“என்னடா எப்பயும் போல தான..”

“இல்ல.. சாமி இன்னைக்கு ஸ்பெஷலு..”

“என்னடா ஸ்பெஷல்…”

“இன்னைக்கு அன்னதானம் ஃபுல்லா ஒரே ஆளு தான் கொடுக்குறாரு.. பல்க்கான பார்ட்டி போல… அன்னதானம் சாப்பாடு கடமைக்கேன்னு கொடுக்காம.. நல்லா செலவழிச்சு டேஸ்ட்டா பண்ணிருக்காங்க” என்றான் குள்ளன்.

சாப்பாடு குள்ளன் சொன்னது போல பிரம்மாதமாகத்தான் இருந்தது. சுவைக்கச் சுவைக்க இந்த சாப்பாட்டை எங்கோ சாப்பிட்டது போன்ற உணர்வு எழுந்தது. ஆனால் சரியாக கணிக்க முடியவில்லை. கண்டிப்பாக இந்த சாப்பாட்டை எங்கோ சுவைத்த நாக்கு மூளைக்கு அதை ஞாபகப்படுத்திப் பார் என்று சொல்லிக்கொண்டேயிருந்தது..

“அவரு இதுக்கு முன்னாடி நெறைய தடவ வந்துருக்காரு… நீங்க பாத்துருப்பீங்க..” என்றான் குள்ளன்.

“பாத்துருக்கலாம்..” என்று முடித்துக்கொண்டேன்.

“இன்னைக்கு அவரால எல்லாத்துக்கும் நல்ல சாப்பாடு…”

அதற்கு தலையாட்டாமல் இருந்த என்னை கவனித்தவனாய், “சாமி ..உங்களுக்கும் தான்..” என்றான்.

நான் தடியை எடுத்து ஒருமுறை கீழே அவனை நோக்கிக் காண்பித்து வைத்துவிட்டேன்.

“சாமி எடுத்துட்டு அடிக்காம வச்சா புண்ணியம் இல்ல..” என்று தடியில் அடிங்க என்று முதுகைக் காண்பித்தான் சிரித்துக்கொண்டே. பேச்சை நிறுத்தாதவனாய் “இன்னைக்கு அவர ஒங்க கிட்ட கூட்டி வரவா..”

“கூட்டி வந்து என்ன பண்ணப் போற”

“சாமிய பாக்குறது கூட புண்ணியம்தான…”

“இருக்கட்டும்…”

“அப்போ நான் கூட்டிட்டு வந்தறேன்..நீங்க எங்கயும் போய்ராதீங்க..”

குள்ளனை நேர்கொண்டு பார்த்தேன்.

“முடிஞ்சா கூட்டி வரேன் நீங்க ஒடனே கோச்சுகாதீங்க… கால் வலி பரவால்லையா..?”

“இருக்குது …..”

“ரொம்ப நடக்காதீங்க…..” என்று அக்கறை தொனியில் சொல்லிவிட்டு அருகில் இருந்தவன் நான் சாப்பிட்டு முடித்திருந்த இலையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெட்டுச்சாமியின் ஜீவசமாதி இருக்கும் இடத்திற்குச் செல்லத்தொடங்கினான் .

வெயிலேறி இருந்தது… காலில் கட்டியிருந்த துணியை சீழிலிருந்து ஒழுகிய தண்ணீர் நனைத்திருந்தது. சிவ..சிவா என்று மரத்தின் அடிப்பகுதியில் தலைமுட்டப் படுத்துக்கொண்டேன். நேரெதிர் கண்களில் வெட்டுச்சாமியின் இல்லம் இருந்தது. கண்களை அதை நோக்கி இருந்தவாறே தூக்கம் என்னை ஆட்கொண்டது. இருண்ட வெளிக்குள்ளிருந்து தன்னை எழுப்பிடும் குரலாய் குள்ளன் இருந்தான். இந்த வருடங்களில் தொடர்ச்சியாக என் காதுகளில் ஒலிக்கும் அந்தக் குரலை தெரிந்து எழுந்துகொண்டேன். குள்ளனுடன் சேர்த்து ஒரு குடும்பம் நின்றிருந்தது. கணவன், மனைவி, ஒரு குழந்தை, அதில் ஒருவரின் தாய் என்றிருந்த குடும்பத்தை குள்ளன் இப்படி அறிமுகப்படுத்தினான், “சாமி.. இவங்க தான் இன்னைக்கு அன்னதானம் பண்ணவங்க..” என்று சொல்வதற்குள் அவன் அருகில் நின்றிருந்த வயதான அம்மா என் கால்களில் விழ, அதைத் தொடர்ந்து அந்தக் குடும்பமே என்னுடைய காலில் விழுந்தது. இப்போது என் மூளை அந்தச் சாப்பாடை எங்கு சாப்பிட்டோம் என்று சரியாக நினைவு கூர்ந்தது. அவனேதான்.. நான் கூட்டிவந்தவன்தான்.. என்னுடைய நண்பனேதான் அவன். எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது கண்கள் சொருகி பார்வையில் நண்பனின் முகத்தை அடையாளப்படுத்திக்கொண்டே சரிந்து விழுந்தேன். சாமி என்ற குள்ளனின் குரல்தான் நினைவு இருந்தது.

எவ்வளவு நேரம் மயங்கியே இருந்தேன் என்று தெரியவில்லை. கண்களைத் திறக்கும்போது நண்பனின் குடும்பம் என் பக்கத்திலேயேதான் இருந்தது. ‘ஒன்னும் இல்லையே சாமி’ என்று என் தோளைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் குள்ளன். ஒன்னுமில்லை என்று அவனை விலக்கி அதிர்ச்சியிலிருந்த குடும்பத்தை பார்த்தேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு நினைவுகூர்வார்கள் என்று ஆசையாக எண்ணிய மனதில் சங்கடம் குடிகொண்டு கண்டுபிடித்துவிடக் கூடாது என்று மாறியது. இறுதியில் நண்பனாவது கண்டுபிடிப்பான் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவனோ ‘ஆசிவாங்கிட்டு போலாம்னு.. வந்தோம் சாமி..’ என்று முடித்துக்கொண்டு நகர்ந்துவிட்டான் . அவனுக்கு கண்டிப்பாக நான் யார் என்று தெரிந்திருக்கும். குள்ளன் அவர்களை வழியனுப்ப அவர்களுடன் சென்றான் .

அவனை இந்த இடத்திற்கு கூட்டி வந்தபோது அந்தச் சாமி சொன்னார் இனிமேல் என் தயவு அவனுக்கு தேவைப்படாது என்று அப்படிதான் நடந்தது. நாங்கள் நண்பர்களாக இருந்தது முதல் இப்போதுவரை சுழன்ற காலகட்டங்கள் எப்படி நிறுத்தியிருக்கிறது என்று மனம் பித்தாகிற்று. அன்று வெட்டுச்சாமியின் ஜீவசமாதியில் அவரின் நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுநாள் வரை உயர்வாய் எண்ணியிருந்த மனிதரை தன் குருவை எள்ளி நகையாடினார் வெட்டுச்சாமியின் நண்பர்.. அவரைப் பொறுத்துக்கொள்ளாது மனம் அந்த இடத்திலேயே அவரை அடித்தது. வயதில் மூத்தவர் என்றுகூட பார்க்காது அடித்தேன். ‘இவன பத்தி என்னைக்காச்சும் ஒருநாள் புரியும்டா’ என்று சாபம்விட்டுப் போனார். அந்நாள் முதல் வாழ்வில் நான் அதிகமாகப் பயன்படுத்திய வார்த்தை ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்றுதான். எனக்கு தலை சுற்றியது.. நான் இப்போது எங்கு இருக்கிறேன் என்று தோன்றிய கணம் என்னுள் சுழன்றோடிய கோபத்தை எப்படிக் காட்டுவது.. யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறேன்.

“சாமி ஆசிர்வாதம் பண்ணுங்க..” என்று அருகில் வந்தவர்களை வெறிகொண்டு கையில் வைத்திருந்த குச்சியால் அடித்தேன்.

“நான் தோத்தவன் டா… நான் தோத்தவான் டா” என்று சுற்றியிருப்பவர்களை அடித்துக்கொண்டே ஜீவசமாதியைச் சுற்றி ஓடினேன். தறிகெட்டு ஓடிய கால்களை ஆலமரத்தின் வேர்கள் நிறுத்தியது. நிமிர்ந்து அந்த ஆலமரத்தைப் பார்த்தேன்.

கத்திச் சொன்னேன், “அப்படி என்னதான் எழுதுனான்.. அவனுக்கு இவ்வளவு கொடுத்துருக்க..” என்று கூறி சுற்றி இருந்தவர்களை கையில் வைத்திருந்த குச்சியால் விலக்கி அதில் கட்டி தொங்கவிட்டிருந்த வேண்டுதல் பேப்பர்களைக் கிழிக்கத் தொடங்கினேன்..

அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்த குள்ளன் “பௌர்ணமி அன்னைக்கு தடி சாமியார் இப்படிதான்.. நல்லா வேண்டிக்கோங்க.. அருள் கொடுக்கும்” என்று சொன்னவனை நோக்கி தடியை எறிந்தேன்.

***

லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
மின்னஞ்சல்: [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here