Monday, December 9, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்தகவற்தொழில்நுட்ப நிறுவனங்கள்: சந்தைப் போட்டிக்கெதிரான போக்கும் சட்ட நடவடிக்கைகளும்!

தகவற்தொழில்நுட்ப நிறுவனங்கள்: சந்தைப் போட்டிக்கெதிரான போக்கும் சட்ட நடவடிக்கைகளும்!

ரூபன் சிவராஜா

மெரிக்காவில் பேஸ்புக்கிற்கு எதிரான வழக்குகள் 2020 டிசம்பர் நடுப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகால விசாரணை ஆய்வுகளுக்குப் பின்னரே இச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்காவின் அரச வணிக ஆணையம் (Federal Trade Commission) பேஸ்புக்கின் ஏகத்துவ சந்தை அதிகாரத்திற்கு எதிராக இந்த வழக்கினைத் தொடுத்துள்ளது. Instagram, WhatsApp ஆகிய இரண்டு கொள்வனவுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கவில்லை. Instagram மற்றும் WhatsApp ஆகியவற்றை பேஸ்புக்கிடமிருந்து பிரித்துத் தனி நிறுவனங்களாக ஆக்குவது வணிக ஆணையத்தின் இலக்கு எனப்படுகிறது. பேஸ்புக், கூகிள் போன்வற்றின் பாவனையாளர் தகவல் தகவமைப்பு என்பது தனிநபர் தகவல் பாதுகாப்பினைப் பாரிய கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பேஸ்புக்கிடமிருந்து இன்ஸ்ராகிராம் மற்றும் வட்ஸ்அப்பினைப் பிரித்தெடுக்கும் பட்சத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பினை மேம்படுத்தமுடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது.

போட்டியாளர்களைச் சந்தை நீக்கம் செய்தல் தொடர்பான அணுகுமுறை பேஸ்புக்கின் உள்ளக மின்னஞ்சல்களின் தகவல்களில் இருந்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2008-இல் அதாவது பேஸ்புக் உருவாக்கப்பட்ட சில ஆண்டுகளில், ‘போட்டியிடுவதைவிட கொள்வனவு செய்வது இலகுவானது’ என்று மார்க் எழுதியமை தெரியவந்துள்ளது. அதேபோல், 2012-இல் மின்னஞ்சல் ஒன்றில் ‘எவ்வளவு தொகை வேண்டுமானாலும் Instagram கொள்வனவிற்குச் செலுத்தத் தயாராக உள்ளதாக’ எழுதியுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய மூன்றும் ஒன்றோடென்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உதாரணத்தின் மூலம் அதனை விளக்குவது பொருத்தமானது. நாம் இந்த மூன்றிலும் கணக்கு வைத்திருக்கும் ஒருவராக இருந்தால் நாம் இன்ஸ்டாகிராமில் படங்களைப் பதிவேற்றும் போது ஒரே நேரத்தில் தன்னியல்பாக அந்தப்படம் பேஸ்புக்கிலும் பதிவேற்றப்படும் பொறிமுறைத் தெரிவு உள்ளது. அதேபோல் பேஸ்புக் தகவல் பரிமாற்ற தொழிற்பாட்டுக்கும் வட்ஸ்அப் தகவல் பரிமாற்றத் தொழிற்பாட்டிற்குமிடையில் அவற்றை இணைக்கும் பொறிமுறையும் உண்டு.

அமெரிக்காவினுடைய நீதித்துறை அமைச்சகம் கூகிள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது. பேஸ்புக் மீது வழக்குத் தொடரப்பட்ட அதே காரணம் சார்ந்தது தான் கூகிள் மீதான வழக்கும். புதிய வரவுகளையும் புத்தாக்க (Innovation) உருவாக்கங்களையும் தடுக்கின்றது என்பதும் கூகிள் மீதான குற்றச்சாட்டு. கூகிளின் தேடியந்திரம் தான் (Google search engine) அப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான i-Phone மற்றும் Mac-கணினிகளின் இணைய உலாவிகளாகப் (Web Browser) பாவனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக அப்பிள் நிறுவனத்திற்கு பில்லியன் டொலர் தொகையினையும் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு அமெரிக்காவின் சந்தைப் போட்டி சார்ந்த கட்டுப்பாடுகளை விதிப்பதோடு வணிக ஏகத்துவத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ‘நம்பிக்கை மீறல் சட்டத்தின்’ (Antitrust laws) கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 90 வீதமான இணைய உலாவிகள் கூகிள் தேடியந்திரத்தினையே பயன்படுத்துகின்றன. Bing, Yaahoo உட்பட்ட வேறு தேடியந்திரங்கள் மிகக்குறைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகின்றன. கூகிள் வெறுமனே தேடுதள இயந்திரம் மட்டுமல்ல என்பதைப் பலரும் அறிவோம். அது மிக நுண்ணிய உலக வரைபட வழிகாட்டி, மின்னஞ்சல், நேரடி ஒளிபரப்பு வசதி உள்ளடக்கிய YouTube காணொளித் தளம், Google disk எனப்படும் மெய்நிகர் சேமிப்பு இடம், Google Meeting  எனப்படும் காணொளிச் சந்திப்புச் செயலி உட்பட்ட இன்னபிற வசதிகளைக் கொண்டுள்ளது. YouTube தளம் 2005-இல் மூன்று முன்னாள் Paypal ஊழியர்களால் உருவாக்கப்பட்டது. 2006-இல் இதனைக் கூகிள் 1.65 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கூகிளைத் தவிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது என்ற நிலையை அந்நிறுவனம் ஏற்படுத்தியிருக்கின்றது. பேஸ்புக் போலவே நாம் என்ன செய்கின்றோம் என்பது மட்டுமல்லாமல் நாம் எங்கு செல்கின்றோம், எதனைத் தேடுகின்றோம், பார்க்கின்றோம், வாசிக்கின்றோம், பேசுகின்றோம் என்பதையெல்லாம் கூகிள் அறிந்து தகவமைத்து வைத்திருக்கின்றது.

பேஸ்புக் உள்ளடக்கம் சார்ந்த மதிப்பீடுகள், தடை மற்றும் நீக்கம் போன்றவற்றைப் பெரும்பாலும், அதாவது 90 வீதத்திற்கு மேலாக Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமே செயற்படுத்துகின்றது. மனித வள கட்டுப்பாட்டாளர்கள் (Human moderators) குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பேஸ்புக்கில் பகிரப்படும் இன-நிற-ஒடுக்குமுறைவாதக் கருத்துகள் மற்றும் அவதூறு, வெறுப்புக் கருத்துகளை உரியமுறையில் அடையாளம் கண்டு நீக்குவதில் வெற்றியளிக்கவில்லை என்பதைப் பேஸ்புக் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

வழக்கு சாதகமாக வெல்லப்படுமாயின் 2005-இல் பேஸ்புக் தொடங்கப்பட்டதிலிருந்து தடையற்ற வளர்ச்சிப் பாதையில் நகர்ந்த முழு நிறுவனத்தையும் மறுசீரமைக்க நேரும். இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றன பேஸ்புக்கிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம் எனப்படுகிறது. அத்தகைய பிரித்தெடுப்பு என்பது பேஸ்புக் நிறுவனத்திற்கான “இருத்தலியல் அச்சுறுத்தல்” என்று மார்க் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

அதேபோல் அமேசோன் இணைய வணிகத் தளமும் அந்தத்துறையில் தனித்த அதிகாரத்துடன் இயங்குகின்றது. 1995-இல் ஒரு இணைய புத்தக விற்பனைத் தளமாக அது தொடங்கப்பட்டது. இன்று பெரும்பாலான எல்லாவகைப் பொருட்களினதும் இணைய வழிக்கொள்வனவுத் தளமாக ஆகியிருக்கின்றது. உலகின் எல்லாப் பாகங்களிலும்; கிளைகளைக் கொண்டுள்ளது. 2017-இல் அதன் வருமானம் 177 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு, 300000-ற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனம். அனைத்து வகையான உடுபுடவைகள், இலத்திரனியல் நுகர்வுப்பொருட்கள், புத்தகங்கள், இசை, பாடல்கள், திரைப்படங்கள், அலுவலகப் பாவனைக் கருவிகள் உள்ளிட்ட அனைத்தையும் அமேசோனில் கொள்வனவு செய்யலாம். அமேசான் பிரைம் என்பது திரைப்படங்களுக்கான அதன் தனித் தளம். அமேசோனின் வணிக வெற்றி அதன் உரிமையாளர் Jeff Bezos-இனை உலகின் முதன்மைச் செல்வந்தராக ஆக்கியது. 2018-இல் அவரது வருமானம் 155 பில்லியன் அமெரிக்க டொலர் எனப்படுகிறது.

அமேசோனின் மற்றுமோர் முக்கிய வணிக அமைப்புமுறை என்பது ஏனைய சிறிய மற்றும் பெரிய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களின் பொருட்களை விற்பதற்குரிய அனுசரணை வழங்குவது. அதற்கான இணையத் தொழில்நுட்பத்தைப் அந்நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலமும் தனது வருமானத்தைப் பெருக்குகின்றது. அவர்களும் வேறு மாற்று வழியைத் தேடமுடியாதபடி அவர்களுக்கான ‘பூட்டு’ போடப்பட்டுள்ளது. ஏனெனில் மிகப்பாரிய எண்ணிக்கையிலான நுகர்வோரைத் தன்னுள் அமேசோன் வைத்திருக்கின்றது.

கோவிட்-19 பெருந்தொற்றின் பேரிடர் காலம் இணையவழிக் கொள்வனவுகளை முன்னரைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏலவே சந்தை அதிகாரத்துடன் திகழ்ந்த அமேசோன் கோவிட் காலத்தில் மேலும் பலமடைந்துள்ளது. இந்த நெருக்கடியின்போது அதனைப் பயன்படுத்தி, இணைய வணிகத்தில் தனது சந்தை அதிகாரத்தை அதிகரித்துவரும் அமேசோன், அமேசோனுக்குப் பொருட்களை விநியோகஸ்தர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும், மூன்றாம்-தரப்பு விற்பனையாளர்களின் பொருட்களைவிட தன் சொந்த முதல்-தரப்பு தயாரிப்புகளுக்கு சாதகமாகவும் பயன்படுத்துகின்றமைக்கு சான்றுகள் உள்ளதாக வழக்கினைத் தொடுத்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் Antitrust சட்டவாக்கத் துணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைப்போட்டி ஆணையமும் (EU competition commission) இந்நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகள் பலவும் இவற்றுக்கு பெரும் வரித்தொகைகளையும் விதித்துள்ளன எனக் கூறப்படுகின்றது. கூகிளின் சந்தைப் போட்டி மோசடிகளுக்காக ஒன்றரை பில்லியன் டொலர் குற்றப்பணம் கடந்த 2019 மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டது.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல பேஸ்புக், கூகிள், அப்பிள் மற்றும் அமேசோன் போன்றவை தம்மையொத்த பிற தளங்கள் உருவாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்போது அவற்றைத் தாமே கொள்வனவு செய்து வந்துள்ளன. 2012-இல் பேஸ்புக் Instagram-னையும் 2014-இல் WhatsApp-னையும் கொள்வனவு செய்தது. இன்ஸ்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகியன பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்படாது விடப்பட்டிருக்குமாயின் அவை பேஸ்புக்கிற்குச் சவாலான தளங்களாக சந்தைப் போட்டியை அவை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்ற பார்வை உள்ளது. அண்மையில்கூட Parler என்ற தகவல் பரிமாற்றத் தளம் (செயலி) கிட்டத்தட்ட அரங்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது அடிப்படையில் Trump ஆதரவு செயலி என்பதோடு தீவிர வலதுசாரிச் சார்புக் கருத்துகளைப் பரப்புகின்றதும் பரிமாறுகின்றதுமான தளம் எனப்படுகிறது. கூகிள் மற்றும் அப்பிள் ஆகியன முறையே தமது Google Play மற்றும் App Store செயலிகள் கொள்வனவுத் தளத்திலிருந்து அச்செயலியை நீக்கியுள்ளன. அமேசோன் அச்செயலிக்கான சேர்வர் இடத்தினையும் (Server storage) மறுத்திருந்தது. இத்தகைய போக்குகள் தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்ப வணிகப் பெருநிறுவனங்கள் எத்தகைய அதிகாரத்தைத் தம்வசம் கட்டமைத்து வைத்துள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றது.

பொதுவாக வணிக ஏகத்துவம் என்பது போட்டி நிறுவனங்கள் உருவாக இடமளிக்காமல் தனது இடத்தை தனித்த முதலிடமாகப் பேணுவதைக் குறிக்கின்றது. இந்த நிலை பாவனையாளர்கள் நுகர்வோரை விட விஞ்சிய அதிகாரத்தை குறித்த நிறுவனத்திற்கு வழங்குகின்றது. நுகர்வேரை அதில் தங்கியிருக்கின்ற நிலையை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பொருளின் வடிவத்தை, உள்ளடக்கத்தை,  இன்னபிற விடயங்களை மாற்றவும் விலையை ஏற்றவுமான அதிகாரத்தை நிறுவனம் தன்கையில் வைத்திருப்பதைக் குறிக்கின்றது. பேஸ்புக் பாவிப்பதற்கு அதன் பாவனையாளர்கள் பணம் செலுத்துவதில்லை. ஆனால் அதன் ஊடாக அதிகப்படியான விளம்பரங்கள் எம்மை நோக்கி, எமது பார்வைக்கு வந்தவண்ணம் உள்ளன.

இந்த விளம்பரங்களை நுகர்வோரின் (பேஸ்புக் பாவனையாளர்கள்) பார்வைக்குக் கொண்டுசெல்வதற்கு ஏதுவாக பாவனையாளர்களாகிய நாம் எம்மைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் அளிக்கின்றோம். எமது பதிவுகள், பகிர்வுகள், நாம் எந்தெந்த விடயங்களை விரும்புகிறோம் என்பதன் மூலம் எமது விருப்பு வெறுப்புகள் தகவமைக்கப்படுகின்றன. நாம் யார், நாம் என்ன செய்கின்றோம் என்ற தகவல்கள் திரட்டப்படுகின்றன. மேற்சொன்ன எம்மைப் பற்றிய தகவல்களைத் தகவமைத்து, வகைப்படுத்தி திரட்டுகின்ற பொறிமுறைகளையும் கேளிக்கை, மகிழ்வூட்டல் விளையாட்டுகளையும் செயலிகளையும் (Apps) பேஸ்புக் கொண்டுள்ளது.

பேஸ்புக்கின் சந்தை அதிகாரம் என்பது விளம்பரங்களில் கட்டியெழுப்பப்பட்டதாகும். இது விளம்பரதாரர்களுக்கும் பெரும் இலாபத்தைக் கொடுக்கின்றது. ஏனெனில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் 2,8 பில்லியன் பேர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்ராகிறாம் பாவனையாளர்கள் 3 பில்லியன் பேர் எனத் தரவுகள் கூறுகின்றன.

சமூக ஊடக அமைப்புமுறை என்பது முற்றிலும் வணிக மாதிரியமைப்பினைக் கொண்டது. இன்னொரு வகையில் சொல்வதானால் அது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பெருவணிகம். பாவனையாளர்கள் பற்றிய தகவல் சேகரிப்பும், சேகரிக்கப்பட்ட தகவல்களை வணிக நிறுவனங்களின் விளம்பரத் தேவைகளுக்காக விற்பதும் பேஸ்புக்கின் முதன்மை வருமானம். பேஸ்புக் பாவனையாளர்களின் விருப்பு, வெறுப்பு, குறிப்பாக நுகர்வுப் பொருட்கள் சார்ந்து அவர்களின் விருப்புகளை அறிந்து, அதற்குரிய வகையில் அவர்களுக்கு விளம்பரங்களைக் காண்பித்தல், அனுப்புதல் என்பதாக வணிக அணுகுமுறை உள்ளது. சமூக ஊடகமாக விளிக்கப்பட்டாலும் அது உண்மையில் ஒரு வணிக நிறுவனம். அது கொண்டிருக்கும் பரந்த வாய்ப்புகளும் தகவல் பரப்பலுக்கான பரந்தவெளியும் ஊடக நிறுவனத்திற்குரிய; பயன்பாட்டு மற்றும் விளைவுகளைக் கொண்டுள்ளது. எனினும் ஊடகம் சார்ந்த அறம்சார் கருத்துச்சுதந்திரம் சார் நியமங்களை அது பின்பற்றுவதில்லை. ஊடக நிறுவனம் என்ற வரையறைக்குள் சிக்காமல் சமூக-வணிக நிறுவனம் என்ற நிலையைத் தக்கவைப்பதில் மார்க் பிரயத்தனம் கொண்டுள்ளார்.

சமூக, அரசியல், தகவல் சார்ந்த கருத்தியல் பகிர்விற்கும் அறிவுப்பரிமாற்றங்களுக்கும் கூடி விவாதிப்பதற்குமான ஊடக நியமங்களுக்கு உட்பட்ட மாற்று ஊடகத் தளங்களை உருவாக்குவது தொடர்பான தேவைகள் பற்றியும் சில மட்டங்களில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. பேஸ்புக், கூகிள் போன்ற இன்றைய தகவற் தொழில்நுட்ப வணிக ஊடகத் தளங்கள் அல்லாத மாற்று ஊடகங்கள் பற்றிய பிரஸ்தாபிப்பு அது. அதேவேளை பேஸ்புக் ஏகத்துவமாக இருப்பது அதன் வடிவம், பயன்பாட்டுவெளி சார்ந்து இயல்பானது என்ற கருத்தும் சில மட்டங்களில் நிலவுகின்றது. பேஸ்புக்கினை ஒத்த அதே சேவை பயன்பாட்டினைக் கொண்ட வெவ்வேறு சமூக ஊடகத் தளங்கள் உருவாக்கப்படின் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இழக்கப்பட்டுவிடும் என்றும் கருதப்படுகின்றது.

பேஸ்புக்கைப் பாவிக்கத் தொடங்கியவர்களில் பெரும்பான்மையினர் அதனைவிட்டு விலகுவது கடினம். தனிநபர் பாவனை, உலகின் பொதுவிடயங்கள் சார்ந்த தகவல்கள், பகிர்வுகள் என்பதைத் தாண்டிய வகிபாகத்தினை அது கொண்டிருக்கின்றது. குடும்பம், நட்புவட்டம், கல்வி, கலை, பண்பாடு, விவாதம் மற்றும் இன்னபிற சமூக உறவுகளின் பிணைப்பு சக்தியாக அது முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இந்நிலையில் அதன் ஏகத்துவ அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் புறந்தள்ளக் கூடியவை அல்ல.

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது. தொடர்புக்கு – svrooban@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular