Friday, July 12, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்டெல்டா ஊதாரி - 3

டெல்டா ஊதாரி – 3

கொரோனா வார்டில் சொல்லப்பட்ட கதை

சிவகுமார் முத்தய்யா

கொரோனா வந்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடியவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தடுப்பு ஊசிகள், மாற்று மருந்துகள் என அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தற்போதும் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். தொற்று நோய் குறித்த பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் ஒரு பக்கம் அச்சத்தையும் மறுபக்கம் பயமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மருத்துவ உலகம் சற்று சலிப்புடன் ஏற்றுக்கொள்ளவே செய்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த அந்த கடைசி ஞாயிற்றுக்கிழமை. தமிழகத்தைப் போல டெல்டாவில் கடும் வெய்யிலும் வறட்சியுமாக வீட்டுக்குள்ளே முடங்கி எல்லோரையும் போல நானும் இரவையும் பகலையும் போ…போவென சபித்து விரட்டிக் கொண்டிருந்தேன். அலைதலில் பற்று கொண்ட என்னால் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பது அவ்வளவு எளிதாக எனக்கு இருக்கவில்லை. தொற்று குறித்தான பயத்தால் எல்லோரும் போல் எனக்கும் மனக்குலைவு ஏற்பட்டிருந்தது.

இதற்கு தூபம் போடுவது போல ஊடகங்கள் கொரோனா குறித்த மரணங்களை அறிவித்து பயத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. இலக்கியம் படிக்கவும், பேசவுமான மனநிலையின்றி அலைந்து கொண்டிருந்தேன். இந்த நிலையில் அந்த நண்பரிடமிருந்து மன்னிக்கவும், படிம கவிஞர் நீலமேகத்திடம் இருந்து எனக்கு செல்போனில் அழைப்பு வந்தது.

இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கவிஞரின் குரல் கவியரங்கத்தில் கவிதை பாடும்போது ஏற்ற இறக்கம் கொண்டு ராகமாய் ஒலிப்பது போல செல்போனில் ஒலித்தது. என்னை அழைப்பதில் அவர் உறுதியாக இருந்தார். கவிஞரின் நச்சரிப்பு தங்காமல் அவரது இல்லத்துக்கு கிளம்ப முடிவெடுத்தேன். நான் புறப்படுவதற்குள் கவிஞர் தொடர்ந்து நாலைந்து தடவை போன் செய்துவிட்டார். வேறு வழியின்றி இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன்.

நான் பெரும்பாலான நேரங்களில் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன். இதுவும் கவிஞருக்கு நன்கு தெரியும். ஆனாலும் அது குறித்து என்னிடம் குறைப்பட்டு கொண்டதில்லை. இதனை தாண்டி என்மீது அவருக்கு ஒரு மதிப்பு இருக்கவே செய்தது. கவிஞருக்கு பொதுப்பணித்துறையில் உதவியாளர் பணி. பணியின் போது அவரது தந்தையார் இறக்க நேரிட்டதால் வாரிசு அடிப்படையில் இவருக்கு அரசு வேலை கிடைத்திருந்தது. எதற்காக அவரை நான் சந்திப்பதை பல நேரங்களில் தவிர்க்கிறேன என்றால் அவரது கவிதை செயல்பாடு மீது நான் கொண்ட அதிருப்தியால் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

அவரது கவிதை செயல்பாட்டின் தொல்லை தங்க முடியாமல்தான் தவிர்க்க தொடங்கியிருந்தேன். இதுவரை கவிஞர் தனது சொந்த ஊதியத்தின் மூலமாக ஐந்து கவிதை தொகுப்புகள் கொண்டு வந்து இருக்கிறார். மேலும் சில வார இதழ்களில் அவ்வப்போது கவிதைகளும் எழுதிவருகிறார்.
ஆனாலும் அதில் எதுவுமே என்னை கவரவில்லை. இதில் அவரது படைப்புகளை படித்த சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்.

நான் கவிஞருடன் வெட்டாற்றங்கரை எண்கண் பாலத்து மதகிலும் திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலம்பாள் மண்டபத்திலும் பல மணி நேரங்கள் அவரது கவிதையின் தரம், மற்றும் உத்திகள் பற்றி எடுத்துச் சொல்லியும் பார்த்துவிட்டேன். இதனைத் தவிர உள்ளூர் பிரமிள் தொடங்கி சிலி நாட்டு கவிஞன் பாப்லோ நெருதா வரை எத்தனையோ கவிஞர்களின் கவிதை புத்தங்களை வாசிக்க கொடுத்தும் எந்த மாற்றமும் நிகழவில்லை. அவர் ஊதிய சங்கை மீண்டும் மீண்டும் ஊதிகொண்டு இருந்தார். இதனால் நீலமேகத்திடம் கவிதைப் பற்றி பேசுவதையே முழுமையாக நிறுத்தியிருந்தேன். ஆனால் அவர் என்னை மட்டுமே அவர் கவிதைகள் குறித்து தடாலடி விமர்சனம் செய்ய அனுமதி அளித்திருந்தார். வேறு யார் அவரது கவிதைகள் குறித்து பேசினாலும் மனிதர் வம்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். சில நேரங்களில் இது கொலை மிரட்டல் வரைக்கும் கூட சென்றதுண்டு. இது ஒருபுறம் இருக்க, ஆண்டின் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அவரது திருமண மற்றும் பிறந்த நாட்களில் எனக்கு மட்டும் ‘தீர்த்தவாரி’ கொண்டாட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுப்பார். சரக்கு பார்ட்டிக்கு அவர் வைத்திருக்கும் ரகசிய பெயர் தான் ‘தீர்த்தவாரி’ ஆகும்.

அன்றைய அழைப்பும் அப்படியான ஒன்று தான். நீண்ட நாளைக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமனார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தீர்த்தவாரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த தனிமையை அனுபவிக்க வேண்டும் என்ற காத்திருப்பில் என்னை அழைத்திருப்பதாகச் சொன்னார். தனது “இருத்தலை” நீண்ட நாளைக்கு பிறகு இன்று முழுமையாக உணர்வதாகவும் பெருமிதமாகக் குறிப்பிட்டார். மாடி வீட்டின் பால்கனியில் அமர்ந்தேன்.

நாற்காலிகள் போடப்பட்டன. மேசையில் மது பாட்டில்கள் வைக்கப்பட்டன. ஊரடங்கின் போது கவிஞருக்கு மட்டும் எப்படி பாட்டில்கள் கிடைத்தன என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. ஊரடங்குக்கு முன்பாகவே கவிஞர் வாங்கி சேமித்து வைத்தவை. சேமிப்பு மற்றும் கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்ற விவகாரங்களில் கவிஞர் கறார்தன்மை கொண்டவர். தங்க நிறத்தில் மின்னும் திரவத்தை கண்ட நான் பெரும் பேறாக எண்ணி பரபரப்பாகிவிட்டிருந்தேன். மெல்லிய இருள் வரத்தொடங்கியிருந்த முதிர்ந்த மாலைப்பொழுதில் ’மது விளையாடலை’ தொடங்கினோம். தீர்த்தம் கோப்பைகளில் மினுங்க தொடங்கின. கவிஞரின் கண்கள் சிவக்கத் தொடங்கியதும் முதலில் மத்திய அரசு பற்றிய தனது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். கொரோனா நோய் தொற்று, சீனா நடத்தும் கிருமி போர் என்றார். எங்களின் உரையாடல் உள்ளூர் தொடங்கிய உலகம் வரை நீண்டு தொடர்ந்தது. அவரது உரத்த குரல் கணீரென்று ஒலித்தது. இரவாகியிருந்தன. வானில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. நீலமேகம் உற்சாகம் கொண்டவராக திடீரென்று எழுந்து போய் ஒரு காகித்தை எடுத்து வந்து வேகவேகமாக அதில் எழுதினார்.

நான் மூன்றாவது ரவுண்டில் இருந்தேன். சில மிடறுகளும் மணி காராபூந்தியும் சமமான அளவில் சுவைத்துக் கொண்டேயிருந்தேன். அவர் கவிதை எழுதி முடித்த கர்வத்தில் என்னைப் பார்த்தார். அவரது கண்கள் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. “தல இந்த கவிதையை மட்டும் கேளும்” என காதிதத்தைப் பார்த்து வாசிக்க தொடங்கினார். அதில் கொரோனா வைரஸ் கிருமியை தனது தீந்தமிழால் எரித்துச் சம்பலாக்கியிருந்தார். கடைசி வரியை இப்படி முடித்திருந்தார். “கொரோனாவே… உனக்கு ஒரு கொடுஞ்சாவு வராதா” என்று இதனைக் கேட்டதும் எனக்கு பெரும் சிரிப்பு வந்தது. மல்லுக்கட்டி அடக்கிக் கொண்டேன்.

நான் நான்காவது முறையாக எனது கோப்பையில் திரவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன். அவருக்குள் கவிதை பெருவெள்ளமாக ஊற்றெடுத்து விட்டது என்பதை அவர் உதிர்க்கும் வார்த்தைகளில் இருந்து உணர்ந்தேன். நானும் கவிபேரரசு தான் என்றார். அவரது சொற்களில் தீவிரத்தன்மை எனக்கு சிறிது பயத்தை உண்டாக்கியது. அவருடன் சேர்ந்து நான் தீர்த்தம் பருகி நூறு நாட்கள் மேல் ஆகியிருக்கும் என நினைத்தேன். இத்தனை நாட்கள் அவர் அறிந்த, அனுபவித்தவற்றை என்னிடம் சொல்லி தீர்க்கும் முனைப்பில் இருந்தார். இனிமேல் அவரிடமிருந்து தப்ப முடியாது என தோன்றிய கணத்தில், “நேரமாயிட்டு கிளம்புறேன்” என்றேன். “தோசை மாவு உள்ளது. தோசை வார்த்து குளிர்சாதன பெட்டியில் வெள்ளாட்டு கறி குழம்பு உள்ளது இருவரும் சாப்பிடலாம்” என்றார். நான் ஐந்தாவது கோப்பையை முடித்து விட்டு கிளம்புகிறேன் எனப் பிடிவாதமாக வெளியேறினேன்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் வீட்டில் இருந்து நான் இறங்கி வருவதை ஏமாற்றத்துடன் பார்த்தார். அப்போது நான் நிமிர்ந்து இருள் கொண்ட வானத்தைப் பார்த்தேன். மழை பெய்வதற்கான அறிகுறிகள் துலங்கின. எனது செல்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். சில நிமிடங்களிலேயே தூறல்கள் விழத்தொடங்கியிருந்தன. ஆனாலும் அந்த இதமான காற்று இருசக்கர வாகன பயணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு பார்லாங் தூரம் வந்திருப்பேன், மழை கொட்டத் தொடங்கியிருந்தன. தூறல் தான் விழும் என்ற என் கணிப்பு பொய்யாகியிருந்தது. பின்வாங்காது நிறைந்த போதையில் குளிர்ந்த காற்றும் மழையோடும் தொப்பலாக நனைந்துபடி வீடு வந்து சேர்ந்திருந்தேன்.

அதன் பிறகு என்ன நடந்தது என எதுவும் நினைவில்லை. காலை எட்டு மணிக்கு எழுந்துப் பார்த்தேன். தலை கனத்து போயிருந்தது. மூக்கு அடைத்து மூச்சு விட சிரமமாக இருந்தது. மனைவியை அழைத்து ‘டீ’ கேட்டேன். பாக்கெட் பால் முறிந்து விட்டது என்றாள். வெளியே வந்தேன். இரவு பெய்ந்த மழையின் சுவடு இன்றி வெக்கலித்திருந்த காலைப்பொழுதில் தெருவின் முக்கில் இருந்த டீக்கடைக்கு வந்து டீ கேட்டேன். ஊரடங்கையும் மீறி கிராமத்து டீக்கடை ஒன்று இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆட்கள் அதிகமில்லை. இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எனக்கு நான்கு தும்மல்கள் வரிசையாக எழுந்தன. டீக்கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். கிளாஸ்சை வாயில் வைத்தபோது மெல்ல அமட்டியது. சற்று தூரம் போய் இரண்டு முறை காறி உழிழ்தேன். டீயைக் குடித்ததும். காலை கடனுக்கான மணி வயிற்றுக்குள் அடித்தது.

வீட்டுக்கு வந்து ஒரு அரைமணி நேரம் கூட ஆகியிருக்காது. வீ ட்டு வாசலில் இரண்டு பேர் நின்று உள்ளே பார்த்து, “சார்” என குரலிட்டனர். நான் வெளியே வந்து என்ன? என்று கேட்டேன். “சார்.. நீங்கள் தும்மியதாகவும் இருமி துப்பியதாகவும் போன் வந்தது” என்றனர். “யார் சொன்னது நீங்கள் யார்” “நாங்கள் சுகாதாரத்துறை சார். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்கள்.

நான் அவர்களிடம் “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நைட் சரக்கு கொஞ்சம் ஓவர். அதோடு மழையில வேற நனைஞ்சுட்டேன்” என்றேன். அவர்கள், “கடை தான் இல்லியே.. சரக்கு உங்களுக்கு எப்படி கிடைச்சது” என்றார்கள். அதனை கேட்டு கடுப்படைந்த நான் “அதைப் பற்றி விசாரிக்க நீங்கள் யார்?” எனக் கேட்டு வாக்குவாதம் செய்யத் தொடங்கினேன். தெரு ஜனங்கள் கூடிவிட்டிருந்தனர். என் மனைவி நடப்பவற்றை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து டெஸ்ட் மட்டும் கொடுத்துவிட்டு வந்தால் போதும்” என்று கெஞ்சினார்கள். எனக்கு அணிந்து கொள்ள ‘’மாஸ்க்’ கொடுத்தார்கள்.

சில நிமிடங்களிலேயே அபாய ஒலியை எழுப்பியவாறு தெரு முக்கில் வந்து ஆம்புலன்ஸ் நின்றது. தெரு ஜனங்கள் என்னைப் போகச்சொல்லி வலியுறுத்தினார்கள். மனைவி அச்சத்துடன் என்னைப் பார்க்க, வேறு வழியின்றி ஏறி அமர்ந்தேன். எனது மகள் அழுகையுடன் நான் போவதைப் பார்த்தாள்.

நான் டீ குடித்த போதும் இரவு அருந்திய மதுவின் போதை கொஞ்சம் இருக்கவே செய்தது. மருத்துவமனையில் முகமுடியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்னை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது மீண்டும் தொடர் தும்மல் வந்தது. இதனைக் கண்டு அஞ்சிய அவர்கள் என்னை கொரோனா சந்தேக வார்டுக்கு கொண்டு செல்லுமாறு பணியாளிடம் தெரிவித்தனர். சில நிமிடங்களில் கொரோனா டெஸ்டும் எடுக்கப்பட்டது.

நான் மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்த வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இரண்டு பெண் செவிலியர்களும் நான்கு ஆண் பணியாளர்களும் அந்த வார்டில் இருந்தனர். அதில் இரண்டு பணியாளர்கள் கொரோனா நோயாளிகள் எவரும் தப்பிவிடமால் இருக்க காவலுக்கு இருந்தனர். 15 படுக்கைகள் போடப்பட்டிருந்தன. அதில் இரண்டு படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தது.

இடைவெளியுடன் போடப்பட்டிருந்த படுக்கையில் ஜன்னலோரமாக எனக்கு இடம் அளிக்கப்பட்டது. படுக்கையில் இருந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம் ஆண்களாகவே இருந்தனர். இவர்கள் டெல்லியில் நடந்த ஏதோ ஒரு மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் என்று சொன்னார்கள். எனக்கு அருகிலே படுக்கையில் இருந்த நடுத்தர வயதுக்கார மன்னார்குடி கோபால் என்னை பயம் கலந்த பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் செல்போனை எடுத்து இதே மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலைப் பார்க்கும் சித்தி மகன் கண்ணனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அவன் குரல் சற்று உள்ளடங்கிப் போயிருந்தது. மதியம் வந்து பார்ப்பதாக சொன்னான். ஆனாலும் எனக்கு அது தேவைப்பட்டது. கவிஞரை அழைத்தேன். அவர் உறக்கம் கலையாத கரகரப்பான குரலில் பேசினார்.” “நீங்கள் எழுந்த பிறகு போன் பண்ணுங்க” என்றேன். அவரிடம் தெளிவான பதில் இல்லை. படுக்கையில் சிறு போதையின் சோர்வில் குழப்பமான மனநிலையில் படுத்துவிட்டேன். நேரம் கடந்து கொண்டிருந்தது. எனக்கு வீட்டில் இருந்து சில உடைகளும் காபி பிளாஸ்க், தம்ளர். செல்போன் சர்ஜர், புத்தகங்கள் போன்றவையும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பணியாளர் ஒருவர் வந்து அந்த பேக்கை என்னை அழைத்துக் கொடுத்தார். அதில் முன்று நாவல்களும் மற்றும் காலம் – வரலாற்று சுருக்கம் என்ற ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய அறிவியல் புத்தகமும் இருந்தது. வாசித்தே பொழுதை கழிக்கலாம் என்று ஆறுதல் அடைந்து கொண்டிருந்தேன். அப்போது பணியாளர் ஒருவர் வந்து நீங்க கண்ணன் சார் அண்ணவா? என்றார். ஆமாம் என்று தலையாட்டினேன். “சரிண்ணே ஒன்னும் பிரச்சனையில்ல.. பயப்படாம இருங்க” என்றவன். என் பெயர் மூர்த்தி எப்போது வேண்டுமானலும் கூப்பிடுங்க என்று அவனது போன் நம்பரையும் கொடுத்தான். காலை ஆகாரம் ஒரு தட்டில் கொடுத்தார்கள் சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன். எனது வார்டில் இருந்தவர்களுக்கு இடைவிடாது போனில் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.

மல்லிகா செவிலியர் வார்டுக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் உரத்த குரலில் போனில் பேசிக்கொண்டிருந்தவர்கள். சற்று அடக்கி வாசித்தனர். நான் செல்போனில் முகநூல் பக்கங்களை பார்த்து கொண்டிருந்தேன். மல்லிகா நர்ஸ் அப்போது தான் பணிக்கு வந்திருந்தார். “யாரு இங்க நியூ அட்மிஷன்” என்றாள். மூன்றாவது படுக்கையில் இருந்த கொடிக்கபாளையம் சுலைமான் பாய் என்னைச் சுட்டிக்காட்டினார். நான் அவரைப் பார்த்தேன். எல்லோருக்குக்கும் சூடான நிலவேம்பு குடிநீர் கொடுத்தார். எனக்கும் கொடுத்தார். அவரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு. சில மாத்திரைகளும் வழங்கப்பட்டது. நான் எதனையும் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே படுத்து உறங்கிவிட்டிருந்தேன்.

மதியம் பணிரெண்டு மணியிருக்கும் கவிஞர் நீலமேகம் போன் பண்ணினார். நடவந்தவற்றை சுருக்கமாக சொன்னேன். செலவுக்கு கூகுள் பேவில் பணம் அனுப்புகிறேன் என்றார். “அது எல்லாம் வேண்டாம். “அது எவ்வளவு பாக்கி இருக்கு” என்றேன். சற்று யோசித்தவர்… ‘ஒன்னு இருக்கு அதுவும் ரம்’ என்று இழுத்தார். அவருக்கு ரம் பிடிக்காது குடிக்க மாட்டார். அதனால் அவரிடம் கொஞ்சும் தொனியில் எப்படியாவது அதை எடுத்து வந்து எனக்குத் தர முடியுமா என்று கேட்டேன். “எப்படி” என்றார். ஒரு பையில் வைத்து அதற்கு மேல் நாலைந்து புத்தகங்களை அடுக்கி வைத்து எடுத்து வாருங்கள் என்றேன். பதிலேதும் சொல்லாமல் போன் கட்டாகியது.

மதிய சாப்பாடு பறிமாறப்பட்டபோது சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் ரெண்டு பேருக்கு ‘பாசிட்டிவ்’ வந்திருந்தது. அவர்களை எங்களது வார்டில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் படுத்திருந்த படுக்கைகளை அப்புறப்படுத்தினார்கள். இரும்பு கட்டிலில்களில் கிருமிநாசினிகளை தெளித்தனர்.

கண்ணன் என்னை பார்க்க வந்திருந்தான். பாதுகாப்பு கவச உடையில் இருந்தான். செவிலியர்கள் மல்லிகா மற்றும் சிந்துஜா ஆகியோரிடம் என்னை “அண்ணன் ஒரு கதையாசிரியர்” என்று அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் ஒருமாதிரியாக என்னை பார்த்து சிரித்தார்கள். எதுவும் கேட்கவில்லை. வார்டில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் பெரியவர்கள் தங்களுக்கு கொரோனா வந்துவிடக் கூடாது என்று படுக்கையில் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு எல்லோர் முகத்திலும் மரண பயம் கரைபுரண்டது. சிலர் தங்கள் உறவுகளிடம் இனி நான் உயிரோடு திரும்பிவர வாய்ப்பில்லை என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தனர். நான் அவர்களை பார்த்து கொண்டு மவுனமாக அமர்ந்திருந்தேன்.

இரவு 7 மணியிருக்கும் கவிஞர் அழைத்தார். பதட்டத்துடன் எடுத்தேன். “ஆஸ்பத்திரி வாசல்ல நிக்கிறேன்” என்றார். “அங்கேயே நில்லுங்கள் ஆள் அனுப்புகிறேன்” என்றேன். பணியாளர் மூர்த்தியை அழைத்து புத்தகபையோடு வாசலில் நண்பர் நிற்கிறார் என்றும் அவரிடமிருந்து அதனை வாங்கிவரச் சொன்னேன். சில நிமிடங்களிலே புத்தகப்பை வாங்கி வந்திருந்தான் பணியாளர். கவிஞருக்கு போன் செய்து நெஞ்சம் கனிந்த நன்றியை தெரிவித்தேன்.

7 மணிக்குள் இரவு சாப்பாடு வந்துவிடும் என்றார்கள். அதற்குள் 90 மில்லியாவது போட்டுவிட வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் இருந்தேன். அது லிட்டர் பாட்டில் வேறு. அதனை கவனமாக எடுக்க வேண்டும். இது என்னிடம் இருப்பது தெரிந்து போனால் உடனே பறிக்கப்படும். ட்ரஸ் மாற்றுவது போல் போக்கு காட்டி பேக்கில் பாட்டிலை எடுத்து வைத்துக்கொண்டே தண்ணீர் பாட்டிலோடு கழிவறைக்கு போனேன். வேறு வழியில்லை. தண்ணீரை பாதியளவு கீழே ஊற்றிவிட்டு அந்த ஒயிட் ராம்மை 200 மில்லி அளவுக்கு பாட்டிலில் கவனமாக ஊற்றினேன். சில நிமிடங்களில் வார்டின் படுக்கைக்கு வந்தேன். மார்க்வேஸ்சின் “தனிமையின் நூறாண்டுகள்” நாவலை எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு மிக நிதானமாகப் பருகத் தொடங்கினேன். சில நிமிடங்களிலேயே சப்பாத்தி மற்றும் இட்லியுடன் இரவு உணவு வந்தது.
அதனை சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தி கொண்டேன். வியர்க்கத் தொடங்கியது. எனக்குள் உற்சாகம் கரைபுரள தொடங்கியது.

கவலையுடன் படுக்கையில் இருப்பவர்களை பார்த்து பேசத்தொடங்கினேன். “இது ஒரு பெரிய நோயே இல்ல. நம்ம நாடு வெப்பமண்டல நாடு. இங்க எப்படிபட்ட வைரஸ் கிருமியா இருந்தாலும் ஒரு பத்து நாளக்கி கூட தாக்கு பிடிக்காது. நீங்க வேண்ணா பாருங்க பாய்” என்றேன் சுலைமானைப் பார்த்து. அப்போது அவர், “அரே அல்லா” என்று முணுமுணுத்தார். என் பேச்சு தொடர்ந்தது. படுக்கையில் அரை தூக்கம் மற்றும் கவலையில் இருந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள். எனது குரல் அவர்களை ஏதோ ஒருவகையில் பாதித்து இருக்கும் என்று எண்ணினேன். அப்போது பணியாளர் மூர்த்தி வெளி வரண்டாவில் இருந்து என்னைப் பார்த்தவன் அர்த்தத்துடன் புன்முறுவல் காட்டினான். ஒருவேளை புத்தகப்பையைப் பிரித்து சரக்கைப் பார்த்திருப்போனோ என்று எனக்கு தோன்றியது. எதுவானாலும் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

என் பேச்சை எல்லோரும் கேட்கத் தொடங்கினர். மல்லிகா செவிலியர் பக்கத்து அறையில் ஒய்வு எடுத்துகொண்டிருந்தார். அவரது ஜூனியர் சிந்துஜா மட்டுமே முகப்பில் அமர்ந்து கேஸ் விவரங்களை எழுதிக்கொண்டிருந்தாள். நான் படுக்கையில் அமர்ந்து எனது பக்கத்தில் இருந்த மன்னார்குடி கோபாலிடமும் நான் நாட்டு நடப்புகளை உரத்த குரலில் பேசினாலும் கொரோனாவைச் சுற்றியே வட்டமிட்டது பேச்சு. சரக்கு மிதமாக வேலை செய்யத் தொடங்கியிருந்து.

இது ஒரு நோயே இல்லை. இதனை வைத்து அரசு இயந்திரங்கள் மக்களை ஏமாற்றி மன நோயாளியாக ஆக்கி கொண்டிருக்கிறார்கள். யாரும் பயப்பட வேண்டாம் என்று நான் சொன்னபோது சிந்துஜா நர்ஸ் என்னை கேலியாகப் பார்ப்பது தெரிந்தது. சுலைமான் பாய் என்னைப் பார்த்து நீங்கள் புலவரா என்றார். அதற்கு மன்னார்குடி கோபால், “இல்லை பாய் கவிஞர்” என்றார். அதனை சுலைமான் பெரிதாக எடுத்துக் கொள்ளமால் “பரவாயில்ல நீங்க பேசுங்க” என்றார் அப்போது நான் “பாய் நீங்க வெளிநாட்டுக்கு போயிருக்கிங்களா” என்றேன். “என்ன இப்படி கேட்டிட்டிங்க புலவரே. இருவது வருஷம் மலேசியாவுல பரோட்டா கடை வெச்சிருந்தேன். இப்ப ரெண்டு வருஷமாத்தான் இங்க கொடிக்கால்பாளையத்துல இருக்கேன்” என்றார். நான் அவரை குடைய ஆரம்பித்து விட்டேன். அவரது ஒட்டல், வியாபரம், லாபம், நஷ்டம், பணியாளர்கள் என்று விலாவரியாகச் சொல்லத் தொடங்கிவிட்டார் பாய். எல்லோரும் அவரது பேச்சை ஆர்வமாக கேட்கத் தொடங்கிவிட்டனர்.

பாய்.. அங்க பொம்பள சமாச்சாரம் எப்படி என்று கேட்டபோது சற்று தயங்கினார். “அதை ஏன் புலவரே இந்த நேரத்துல கிளப்புறீங்க. அது ஒரு வாழ்க்கை. அதை மாதிரி இனி நெனைச்சாலும் வாழ முடியாது. இருபது வருஷம் என்பது எனக்கு எப்படி ஓடிச்சுன்னே தெரியில. இரவு பத்து மணிக்கு கடையை அடைச்சிட்டு பொம்பள சோக்குல கிளம்பிடுவேன். சீனாக்காரிங்களும், மலேயா பொண்ணுங்களும், தாய்லாந்து அழகிங்களும் இன்னும் மனசை விட்டு நீங்கல” என்று சொல்லிவிட்டு மவுனமாகி அவர் நினைவுகளில் முழ்கிபோனார். எனக்கு தூக்கம் வந்தது.

அதிகாலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து படுக்கையில் இருந்த நாவலை எடுத்துப் பார்த்தேன். வாசிக்கத் தோன்றவில்லை. கவிஞர் நீலமேகம் கொண்டு வந்து கொடுத்திருந்த புத்தகப்பையை தூழாவினேன் நாலைந்து கவிதைப் புத்தகங்கள் இருந்தது. எதிர்பார்க்காத நிமிடத்தில் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் மற்றும் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை ஆகிய நாவலும் இருந்தன. இரண்டு சிறிய அளவிலான நாவல்களையும் கவிஞர் எனக்காக எடுத்து வந்திருந்தார். அதனை எடுத்து தனியாக வைத்துவிட்டு யோகா செய்யத் தொடங்கினேன்.

யோகா செய்பவர்கள் மது அருந்தக் கூடாது என்று சொல்வார்கள். நான் இருபது வருடங்களாக மதுவும் அருந்துகிறேன். யோகாவும் செய்கிறேன். பதினைந்து நிலைகளை முடித்துவிட்டு சர்வாங்காசனத்தில் இருந்தபோது மல்லிகா நர்ஸ் புத்தம் புதிய கவச உடையில் வந்து மிகச்சரியாக இரண்டு மீட்டர் தொலைவில் நின்று “இதுவும் உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டபடி பார்த்துக் கொண்டிருந்தார். நான் மூன்று நிமிடங்கள் அந்த நிலையில் இருந்து எழுந்து மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது கோபால் வந்து கவிஞரே.. எனக்கும் யோகா சொல்லிக் கொடும் என்றார்.

மல்லிகா நர்ஸ் நடந்துபோய் தனது இருக்கையில் அமர்ந்தார். நான் மூச்சுப்பயிற்சியை முடித்துவிட்டு, எழுந்து மல்லிகாவிடம் வந்து “மேடம் எனக்கு ரிசல்ட் எப்ப வரும் என்று கேட்டேன்” “இன்னும் மூனு நாள் ஆகும்” என்று சொல்லிவிட்டு ஏதோ குறிப்புகள் எழுதி கொண்டிருந்தார்.

மருத்துவர் வந்து தூரத்தில் நின்று எங்களுக்கு அளிக்கப்பட்ட எண் அடிப்படையில் உடல் நிலவரம் குறித்து விசாரித்தார். எனக்கு இருமலோ, தும்மலோ இல்லை என்று சொன்னேன். அதனை அவர் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. மாத்திரைகள் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். நான் தூக்கியெறிந்துவிட்டு வாடிவாசல் நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது கையில் இருப்பதைப் பார்த்து சுலைமான் பாய் என்ன புத்தகம் என்று கேட்டார். அந்த நாவலின் கதையைச் சுருக்கமாகச் சொன்னேன். அந்தக் கதையில் மிருகத்துக்கும் – மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும் இறுதியாக மிருகம் அதனை வளர்க்கும் மனிதனால் கொல்லப்படுவதையும் சொன்னேன். சுலைமான் பாய் கழிவிரக்கம் கொண்டார்.

அப்போது கோபால் “யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி இருக்கிறதா” என்று என்னிடம் கேட்டார். இருக்கிறது ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையே நிகழும் உடலுறவு தான் என்றேன். கோபால் விக்கித்து நின்றார். சுலைமான் பாய் விழுந்து விழுந்து சிரித்தார். சரிய்யா சொன்னிங்க புலவரே… அதனை மற்றவர்களுக்கும் கேட்கும்படி சத்தமாக சுலைமான் சொல்லிவிட்டுச் சிரித்தார். மற்றவர்களும் சிரித்தார்கள்.

சுலைமான் பாய், “இப்ப உங்க கையில இருக்குற புக்குல அந்த மாதிரி கதையிருக்கா புலவரே” என்றார். “அந்த மாதிரி கதை புடிக்குமா பாய்” என்றேன். “சொல்லுங்க கேட்போம்” என்றார்.

பதிலேதும் சொல்லாமல் எழுந்து அந்தப் பையோடு போய் அதில் இருந்த பாட்டிலைத் திறந்து நூறு மில்லி அளவில் குடித்துவிட்டு வந்தேன்.

மூன்று விஜயாக்கள் என்ற குறுநாவலை சற்று மாற்றி ஒரே பெயரில் உள்ள மூன்று பெண்கள் வெவ்வேறு சமூகநிலையில் இருந்து தெரிந்தோ, தெரியாமலோ, சூழ்நிலை காரணமாகவோ பாலியல் உறவில் ஈடுபாடுகிறார்கள் என்பதைச் சற்று காமரசம் பொங்க விவரித்தேன். அதுவரை நோய் தொற்றின் கவலையில் ஆழ்ந்து இருந்தவர்கள் எழுந்து அமர்ந்தார்கள். சிலர் ஆர்வ மிகுதியில் ‘ம்’ போட்டார்கள். குறுக்கீடு இல்லாமல் சொல்லிக்கொண்டே போனேன். விஜயபுரத்து விஜயா பற்றிய வர்ணணையில் லயித்துப் போன கூத்தாநல்லூர் ரகீம் பாய் அவள் ஒரு தெய்வப்பிறவி என்று முணுமுணுத்தார். சற்று தூரத்தில் இருந்து மல்லிகா எனது கதையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். சற்று இடைவெளியிட்டு மீண்டும் நூறு மில்லியை அருந்திவிட்டு வந்தேன். அதன் பிறகு அரசவனங்காடு சாரதாவின் கதையைப் பற்றி சொன்னேன். ஆசை அடங்காத பெண்ணான சாரதாவின் இறுதிக்காலத்திலிருந்து கதையைத் தொடங்கி அவளது காதலன்கள் அவளின் இளம்பருவத்தோடு பல்வேறு படிநிலைகளில் நான் படித்திருந்த சில அந்த மாதிரியான கதைகளின் விவரணைகளையும் சேர்த்துச் சொல்லி முடித்தபோது மதியமாகியிருந்தது.

எனது அருகில் இருந்த கோபால் தனது செல்பேசியில் யாரிடமோ போனில் கெஞ்சும் தொனியில் பேசிக்கொண்டிருந்தார். வார்டில் இருந்த நோயாளிகளும் போனும் கையுமாக இருந்தார்கள். சுலைமான் பாய் ஏற்பாட்டினால் பள்ளிவாசலில் இருந்து எங்களுக்கு மட்டன் கறியுடன் சாப்பாடு வந்தது. நான் மறுபடியும் குடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன்.

மாலை 5 மணிக்கு எழுந்தேன். மதியம் குடித்திருந்த மது என்னவோ செய்தது. பாட்டிலில் அரை பாட்டிலுக்கும் குறைவாகவே இருந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு மீண்டும் கொஞ்சம் குடித்தேன். சுலைமான் என்னை அழைத்து உயர்தரமான பேரிச்சைப் பழங்களை கொடுத்து சாப்பிட சொன்னார். மீண்டும் அவர்களுக்கு இடையே அமர்ந்து கதை சொல்லத் தொடங்கினேன்.. அவர்கள் மிக நெருங்கி அமர்ந்து கதைகளைக் கேட்டார்கள். ஒருவர் சொன்னார், நீங்கள் சொல்றது காட்சியா பார்ப்பதை விட இன்னும் கற்பனையை உருவாக்குது. சிலர் முகக்கவசம் அணிவதைக்கூட மறந்து இருந்தார்கள். அந்த இரவு நீண்ட நேரம் கதையாடல் நடந்தது. என்னைப் போல் மற்றவர்களும் அவர்களது அனுபவக் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். பல அனுபவங்கள் அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நர்ஸ் சிந்துஜா மணியாகிவிட்டது படுங்கள் என்று சத்தம் போட்டாள். அப்போது கோபால் தனது டியூசன் வாத்தியாரின் மனைவியிடம் மண்டியிட்ட கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார். மல்லிகா ஒய்வு அறையில் இருந்து வந்து “இது என்ன ஆஸ்பத்தரியா? லாட்ஜா? மணி ஒன்னாகுது. படுங்கப்போறீங்களா.. போலீசை அழைக்கவா” என்றாள். அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. என்னை எரித்துவிடுவது போல பார்த்தாள். அனைவரும் சிரித்துக்கொண்டே படுக்கையில் விழுந்தோம்.

மூன்றாவது நாள் பாதிபேருக்கு மேல் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது. அதில் சுலைமான், ரகிம் மற்றும் கோபாலும் இருந்தார்கள். என்னிடம் போன் நம்பர் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனார்கள்.

சரக்கும் என்னிடம் இருப்பு குறைந்து கொண்டே வந்தது. யார் கதை கேட்டாலும் நர்சுகளுக்குத் தெரியாமல் சொல்லிக்கொண்டு இருந்தேன். எனக்கும் நான்காவது நாள் ’நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்தது.

நான் டிசார்ஜ் சீட்டை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். அப்போது சிந்துஜா வந்து பக்கத்து அறையில் இருந்து மல்லிகா கூப்பிடுகிறார் என்று சொன்னாள். நான் அவரிடம் சென்றேன், “சார் கிளம்பிட்டிங்களா? என் சர்வீஸ்ல உங்கள மாதிரி ஆளை நான் பார்த்தே இல்ல. கொரோனா எவ்வளவு பெரிய நோய். அதை பத்தி கவலைபடாம ஒரே கதை உங்களுக்கு. நான் இதைப்போல கதை கேட்டது இல்ல. பொண்ணை கல்யாணம் பண்ணிக்குடுத்து பேரப்புள்ளையும் தூக்கிட்டேன். உங்க கதைங்கள கேட்டது இருந்து நைட்டுல அதே ஞாபகம். என் புருசனோட வாழ்ந்த அந்த பத்து வருஷத்துல அப்படி ஒன்னுமே இல்லன்னு தான் தோனுது. நீ மட்டும் கல்யாணம் ஆகாத ஆளா இருந்தின்னா வை. உன்னை இப்பவே கல்யாணமே பண்ணிக்குவேன். இப்ப உன்னை நான் அழைச்சிட்டு போனா உன் பொண்டாட்டி பாவம் இல்லியா. ஆனா ஒன்னு இதே மாதிரியா யார்கிட்டேயும் சொல்லி மூட் ஏத்துற வேல செய்யாதே” என்று பேசி முடித்தார் மல்லிகா. அவளுக்கு பதில் சொல்லாமல் வெளியேறிக் கொண்டிருந்தேன். அப்போது என் செல்போன் சிணுங்கியது. எதிர்முனையில் இருந்து பேசிய கவிஞர் நீலமேகம் “எனக்கு காலையிலிருந்து காய்ச்சல் அடிக்குது. தொற்றா இருக்குமோன்னு பயமா இருக்கு” என்றார். பயப்படாதே மாலை வீட்டுக்கு வருகிறேன் என்றேன்.

-தொடர்ந்து பேசுவான் ஊதாரி….

***


சிவகுமார் முத்தய்யா – நெற்களஞ்சியமான கீழத்தஞ்சை திருவாரூர்- தண்டலைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை, கவிதை, கட்டுரை என இதுவரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் – muthaiyasivakumar@gmail.com

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular