Monday, October 14, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்டெல்டா ஊதாரி (புதிய தொடர்)

டெல்டா ஊதாரி (புதிய தொடர்)

ஆட்டங்களின் மூன்றாம் சாமம்

சிவகுமார் முத்தய்யா

ஞ்சை மாவட்டம்  1991 வரை மேற்கே  வல்லம்  தொடங்கி விரிகுடா கடலின்  தென்கிழக்கு  கழிமுகத்துவாரமான கோடியக்கரை வரையிலான பெரிய மாவட்டமாக இருந்தது. அப்போது மேலத்தஞ்சை என்றும் கீழ்தஞ்சை என்றும் அழைக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் இருந்து கிழக்கு பகுதிகளான நீடாமங்கலம், குடவாசல், மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை வேதாரண்யம்,  கோடியக்கரை வரை  அவ்வாறு அழைத்தனர். 91-ல் தான் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.  கிழத்தஞ்சை பகுதிகளை பொறுத்தவரை தை, மாசி, பங்குனி இந்த மூன்று மாதங்களும் அறுவடை காலங்கள். சித்திரை தொடங்கிவிட்டால் கோவில் திருவிழாக்களும் தொடங்கிவிடும். கடந்த ஆண்டும், இந்த வருடமும் கொரோனாவினால் தடை நீடிக்கிறது. இந்த நேரத்தில் கடந்த காலங்களின் திருவிழா கொண்டாட்டங்களையும், நாட்டுப்புற கலைஞர்களின் நினைவுகளையும் அசைபோடுகிறது மனசு. 

கோடைக்காலத்தின்  பகல்நேர வெயிலைக் கண்டு அஞ்சி உள்ளடங்கிக் கிடக்கும் கிராமத்து ஜனங்கள் மாலைப்பொழுதில் சட்டென்று உற்சாகம் அடையத் தொடங்கி விடுவார்கள். வயலில் வேலை பார்த்தவர்களுக்கு, பங்குனியும், சித்திரையும் ஓய்வு. இந்த காலத்தில்தான் குடும்ப விழாக்களைக் கொண்டாடுவது, கோவிலுக்குத் திருவிழா நடத்துவது என ஒரே சந்தோஷம் பெருகும். கொண்டாட்டத்தின் முகவரியாக கிராமங்கள் இருந்தன. இது தமிழ்நாட்டிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் பொதுவான அம்சம்தான். இதில் ஒவ்வொரு மாவட்டம் அல்லது வட்டாரம் என்று தனித்த அம்சங்கள் இருந்தன. ஏன் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.  இப்படி மதுரை மாவட்டத்தில் கொண்டாடப்படும் முனியாண்டி சாமி திருவிழாவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் பூக்கார மாரியம்மன் கோவிலில் திருவிழாவும் வேறு வேறு அம்சங்களுடன் வாழ்க்கையும் விவசாயத்தையும் சார்ந்து மிக நெருக்கத்தில் வைத்துக் கொள்ளும் ஒரு முனைப்பின் விளையாட்டு.

கிராமங்களில் திருவிழாவின் போது நடத்தப்படும்  நிகழ்ச்சிகள்  கலைகளின் வளர்ச்சிக்கும் அதே நேரத்தில்   மக்களின் உள்ளார்ந்த ரசனையை ஊக்குவிக்கும் பொருட்டு நிகழ்த்தப்படும். அல்லது பொழுதுபோக்கை மேம்படுத்தும் விதமாகவும் அமைகிறது.  

கிராம்புறங்களில் இன்றும் நாட்டுப்புறக் கலைகளுக்கும், பாடல்களுக்கும் எப்போதும் குறையாத மவுசு உண்டு. மக்களோடு வாழ்வியலில் வலி நிரம்பும் பாடல்கள் எப்போதும் கூடியிருப்பவை. சமூகத்தில், பல்வேறு பணிகளில் ஈடுபடும் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களுக்கு எனத் தனிப்பாடல்களை உருவாக்கிக் கொண்டனர். வயலில் வேலை செய்வோர் தெம்மாங்கு பாடல்கள், நடவு செய்யும் பெண்களுக்கு என்று தனித்த மெட்டுகளில் பாடல்கள், பெண்ணை மையம் கொண்டு கும்மிப்பாடல்கள் கிராமத்தில் நிகழ்வுகளின் போது இன்றும் கூட பருவம் எய்திய இளம்பெண்களை முன்வைத்து ‘வயதுக்கு வருதல்’ என்று சொல்லப்படும் சடங்கின் போது பாடப்படுகிறது. பருவம் எய்திய பெண் ஆண்களிடம் எச்சரிக்கையுடன் சமூகத்தில் எவ்வாறு நடந்து தன் பிறந்த குடியைக் காத்து தன்மானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் அர்த்தத்தில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும். ஆனால் நடவுப்பாடல்கள் உழைப்பின் ஊடாக பாடப்படுவது. அப்போது பாடல் பாடுவது மூலம் வேலை அலுப்பைப் போக்கிக் கொள்ளவும், தனது குமுறல்களை வெளிப்படுத்தும் நோக்கிலும் தங்களே மெட்டுக்கட்டி, தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைப் போட்டு கிராமத்து கவிதாயினிகள் உலவிய காலம் அது. சிலர் புதுமெட்டுக்களை கூட உருவாக்கியிருக்கிறார்கள். அது பதிவு செய்யப்படவில்லை.

இந்தப் பாடல்கள் எல்லாமே செவிவழியாகக் கேட்கப்பட்டு, ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவியது என்றே சொல்லலாம். ஒவ்வொரு கிராமத்திலும், பாடல் பாடுவதற்கு என்று சில பாடகர்களும், அதேபோல இரவு நேரங்களில் கதை சொல்லுவதற்கு என்று சில கதைச்சொல்லிகளும் இருந்தார்கள். இந்த மரபின் நீட்சியாகவே நாட்டுப்புற இசை என்கிற ‘வடிவம்’ உருவானது. அதேபோல பாடப்படும் பாடலுக்கு பின்னணியாக  மண் பானைகள் மற்றும் பறையிசை கொண்டு தாளம் போட்டு  பாடும் வழக்கமும் உருவானது. பறையடித்துக் கொண்டே பாடுவது. தவில் மற்றும் ஏனைய வாத்திய கருவிகள், நாதஸ்வரம் போன்ற குழலிசைக் கருவிகள் உருவாக்கும் ஓசையை கொண்டும் பாடல்கள் பாடப்பட்டன. இவையெல்லாம் வாய்மொழிப் பாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள்.

இவை ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமாவின் தாக்கத்தினால், நாட்டுப்புற  கலைகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைந்து போனது. இந்நிலையில் தஞ்சாவூர் பகுதியில் நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிப்பில் புதுபாணி உருவாக்கப்பட்டது. அது தஞ்சாவூர் ‘நைய்யாண்டி’ மேளம் என்றும், அதில் கலவையாக கரகாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், குறவன் குறத்தியாட்டம் என்ற ‘வகைபாட்டில்’ நாட்டுப்புற நிகழ்வு ஒழுங்குப்படுத்தப்பட்டு கிராமக் கோவிலில் திருவிழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.  இது 1960 காலகட்டங்களுக்குப் முன்பு திருவிழாவில் மேடையேறி வந்த புராண இதிகாச நாடகங்களுக்கு மாற்றாகவும், மக்களுக்கு ஏற்பட்ட அலுப்பின் காரணமாகவும், இந்த நாட்டுப்புறக்கலை வடிவத்துக்கு ஆதரவு கூடியது. “தஞ்சாவூர் குறத்தி ஆடினா தண்டையார்பேட்டை கிளுகிளுக்கும்” என்ற சொலவடை கூட உண்டு. அந்தளவுக்கு, குறவன் குறத்தியாட்டத்தையும், நையாண்டி மேளத்தையும் இன்றும் கூட ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் போன்ற பகுதிகளில் பெயர்பெற்ற  நாட்டுப்புறக் கோஷ்டியினர் இருந்தார்கள்.  கோடைக்கால இரவுகளில் நான் சிறுவனாக இருந்த இருந்தபோது 10 மைல்களுக்கு  மற்றும் அப்பாலிருக்கும் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து  நையாண்டி மேளம் குறவன் குறத்தி ஆடிப்பாடும் எசப்பாட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட இத்தனை மைல் தூரத்தில் இருந்து கேட்கும்போதே உற்சாகம் பீறிட்டுக் கொள்ள எழுந்து உட்கார்ந்து கொள்வேன்.

திருவாரூர் சுற்று வாட்டார கிராமங்களில் அமைந்துள்ள அங்காளம்மன், பெரிய நாயகி, ஐய்யனார், மதுரை வீரன், நொண்டிவீரன், பாவடைராயன், மாரியம்மன், பெத்தரண்ணா சுவாமி, காளியம்மன் கோவில்களில் உள்ள நிகழ்வுகளுக்கு நாட்டுப்புறக் கச்சேரிகள் அவசியம் இருக்கும். இதனைத் தவிரவும் சிலவருடங்கள் வள்ளித்திருமணம் நாடகம் நடக்கும். ‘மேயாத மான்’ என்று ஒரே பல்லவியை பாடிப்பாடி தூங்க வைத்துக் கொண்டிருப்பார்கள். அல்லது அரிச்சந்திரா மயான காண்டம் போடுவார்கள். அரிச்சந்திரா புராணத்தின் இறுதிக்கட்ட நிகழ்வான மயானத்துக்குச் செல்லும் காட்சியைத் துவங்கி, அரிச்சந்திரன் வெட்டியான் வேடம் தரித்து ‘நான் ஆதியிலும் பறையன் இல்லை. சாதியிலும் பறையன் இல்லை; என நான்கே மூக்கால் கட்டையில் பாடுவதை வயதான பெரியவர்கள் மூக்கு சிந்தியபடி பாடிக்கொண்டு இருப்பார்கள்.  பெத்தராண சுவாமி பெரியநாயகி அம்மன் கோவில்களில் போடப்படும் நாடகங்கள் லவகுசா அல்லது துரியோதனன் கூத்துக்கள் ஆகும். இதில் அதிகம் பாடல்களிலே பல விஷயங்களை விவரிப்பார்கள். வசனம் மிகக் குறைவு. அதிலும் இதில் நடிப்பவர்களில் பெண்களே கிடையாது. நாடகத்துக்கு இடையிடையே வந்து ஆடிப்பாடிச் செல்லும் ‘பபூன்’ மட்டும் கொஞ்சம் சிரிக்க வைக்கும் நோக்கில் ‘ஹாஸ்யம்’ பண்ணுவார். அதுவும் சமயத்தில் சொதப்பலாகவே இருக்கும். இந்நிலையில் இந்த நாடகங்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவானது. இந்நிலையில் தான் இளைஞர்கள் இரவு நேரங்களில் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு அங்கங்கே சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர் விளம்பரங்களை பார்த்து ஆட்டம் பார்க்க கிளம்பத் தொடங்கினார்கள்.

நான் ஆட்டம் பார்க்கப்போன அனுபவமே சுவாரசியமானது. நான் வசித்து வந்த கிராமத்திலிருந்து தெற்கே 16 கி.மீ தொலைவில் இருந்த கூத்தாநல்லூரில் ஆட்டம் நடப்பதாக எங்களது கிராமத்து இளைஞர்கள் முதல்நாளே இதுகுறித்துப் பேசிக் கொண்டார்கள். அப்போது நான் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வாடகை சைக்கிள் எடுத்து அதில் வண்டிக்கு இருவராக அதுவும் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்புவதாக திட்டம் உருவானது. அதன்படி இரவு 9 மணிக்குள் பத்துபேரும் சாப்பிட்டு விட்டு, பிள்ளையார் கோவில் திடலுக்கு வந்துவிட வேண்டும். வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு இரவு வாடகையான 2 ரூபாயை முன்பணமாக கொடுத்தால்தான் சைக்கிள் தருவார்கள். அதன்படி கிளம்பினோம். ஐந்து சைக்கிளில் மன்னார்குடி சாலையைப் பிடித்து ஆட்டம் நடக்கும் மதுரைவீரன் கோவில் முகப்புக்கு போய் சேர்ந்தபோது இரவு பதினோரு மணி. அப்போது வரிசையாக கட்டப்பட்டிருந்த கூம்புவடிவ ஒலிபெருக்கியில் மேளம் வாசிக்கப்படும் ஓசை மட்டும் கேட்டது. கலர்கலரான பல்புகள் எரிய வீரன் கோவில் பின்னே இருந்த வயலைச் சுத்தப்படுத்தி  பார்வையாளர்கள் அமர  மைதானம் போல் ஆக்கியிருந்தார்கள்.

நாட்டுப்புறக் குழுவினர் சுற்றிவந்து ஆடும் வகையில் வட்டமாகக் கயிறு கட்டியிருந்தார்கள். அதில் வேறு நபர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை.  தடுப்புவேலி வேறு அமைக்கப்பட்டிருந்தது.   நான்கு புறங்களிலும் பார்வையாளர்கள் அமரும் வகையில் மணல் கொட்டி ஒழுங்குப்படுத்தப்பட்டு இருந்தது. கொஞ்சம் தூரத்திலிருந்து மூன்று பெண்கள் கூந்தலோடு  ‘மயில்கொண்டை’ வைத்துக்கொண்டு, ஜிகினாக்கள் மின்னும்  குள்ளப்பாவாடை அணிந்து கால்களில் சலங்கையைக் கட்டிக்கொண்டு  நடந்து வந்தார்கள். அப்போது விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. நாங்கள் சைக்கிளை தூரத்தில் நிறுத்திவைத்துக் கொண்டே பார்த்தோம். விழாக்குழுவினர் எங்களை அந்தப் பகுதியில் சைக்கிளை நிறுத்த வேண்டாம் என்று விரட்டினார்கள்.  எங்களில் மூத்தவனாக இருந்த வெங்கடேசன் சைக்கிள் அனைத்தும், வாடகைக்கு எடுத்தது, அதுவும் வீட்டுக்குத் தெரியாமல் எடுத்தது. இப்போதே வீட்டில் தேடத்தொடங்கியிருப்பார்கள். ஆகவே சைக்கிள் திருட்டு போய்விட்டால் தொலைந்தோம் என்று கிலியை ஏற்படுத்தினான்.

இதற்கு என்ன செய்வது என யோசித்தபோது ஐந்து சைக்கிளையும், ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும், அரைமணி நேரத்துக்கு ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக்கொள்ள மற்றவர் ஆட்டம் பார்க்க முடிவானது. கரகத்தை தலையில் வைத்துக்கொண்டு, மூன்று ஆட்டக்காரிகளும் ஆடிக்கொண்டிருந்தார்கள். இது கிட்டத்தட்ட இரவு 1 மணிக்கு மேல் நடந்தது. தவில் வித்துவான்கள் 6 பேரும் மாற்றி மாற்றி அடித்து அவர்களைச் சோர்வடையச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு இடையே மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம் நடந்தது. பபூன் மட்டும் அவர்களிடையே வந்து ஆடி ஆட்டகாரிகளை சில்மிஷம் செய்து பாட்டு பாடினார். அவனுக்கு பதில் ஆட்டம் போட்டு அந்த ஆட்டக்காரிகளும் உதைத்து, திட்டி ருசி கூட்டினார்கள். அவ்வப்போது பபூன் நாகராசன்,  குறவன் மாணிக்கவேலையும், குறத்தி கனகாவைப் பற்றி வர்ணனை செய்துக் கொண்டிருந்தார். கட்டழகி! மெட்டழகி! அரேபிய குதிரை என குரல் கொடுத்து அழைத்தார். இடைவேளை விடப்பட்டது. அதுவரைக்கும் ஏழுபேர் மாற்றி மாற்றி சைக்கிளுக்கு காவல் இருந்தனர். அதன்பிறகு என்முறை வந்தது. இருபது நிமிடத்துக்கு பிறகு ஆறடி உயரத்தில் கம்பீரமாக குறவனும்-குறத்தியும், ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர்கள் இல்லை என ஆட்டக்களத்துக்கு வந்தபோது விசிலும் இளைஞர்களின் கூக்குரலும் அதிர்ந்தன. கிராம நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஒலிவாங்கி முன்பாக வந்துநின்று இங்கே நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்க்க வந்திருக்கும். உங்களுக்கு பணிவான விண்ணப்பத்தை வைக்கிறேன். தயவுசெய்து எவரும் குறத்திக்கு பணம் குத்திவிட ஆசைப்பட வேண்டாம். அப்படி மீறினால் எங்கள் கிராம நிர்வாகத்துக்கு பதில்சொல்ல வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆங்காங்கே நின்றபடி குரல்கொடுத்துக் கொண்டும் விசிலடித்துக் கொண்டுமிருந்தார்கள். சபைக்கு வணக்கம் செய்து குறவனும் குறத்தியும் ஆடத்தொடங்கிய போது மூன்றாம் ஜாமம் தொடங்கியிருந்தது. என்னுடைய அரைமணி நேர சைக்கிள்  காவல் முடிந்து ஆட்டத்தைக் காண வேண்டும் என்ற   ஆவலில் அருகில் போய் நின்றேன். கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டத்தில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சமஅளவில் இருந்தார்கள். ஒருவர் முகத்தில் கூட தூக்கக்களை தெரியவில்லை. குறவனும்-குறத்தியும் எதிர்பாட்டு பாடி எதிராட்டம் ஆடுவது, மேளக்காரர்கள் அடித்த மேள இசையும், அவ்வளவு நேர்த்தியும் சுவையுமாக இருந்தது. குறத்தி கனகா எம்பி குதிக்கும்போது மேலேறிய ஆடையைப் பார்த்து வயதானவர்கள் வாய் பிளந்தார்கள். அவர்கள் ஆடிய ஆட்டத்தில் பூமியே குலுங்கியது போலிருந்தது. அவர்கள் காலிலிருந்த சலங்கையில் இருந்து முத்துக்கள் தெறித்தன. குறவன் – ‘கணீர்’ குரலில், சினிமா பாடல்களை சேர்த்தும், பிரித்தும் பாடினார். இப்படியாக காலை 5 மணியோடு, வாழைக்காய் வெட்டுவது, தேங்காய் உடைப்பது, தீக்குள் பாய்வது என சாகசங்களோடு நிறைவுற்றது. நாங்கள் ஐந்து சைக்கிளில் ஊருக்குள் நுழைந்தபோது ஊரே திரண்டு நின்றிருந்தது. அதன் பிறகு வீட்டில் ‘நல்ல’ கவனிப்பு.

இந்த குறவன் -– குறத்தியாட்டம் என்பதே நரிக்குறவர் இன மக்களின் ‘பேச்சை’ மையப்படுத்தி அவர்கள்போலப் பேசி சாமியோவ்.. சாமி்.. என்று குரல் எழுப்பி, பாட்டு பாடும்போது அது அழகாகவும், பார்க்க வேடிக்கையாகவும் அமைந்து விடுகிறது என்கிறார் நாட்டுப்புற இசையை இருபது வருடங்களுக்கு மேலாக நடத்தி,  பல கோஷ்டிகளோடு ஒருங்கிணைந்து நிகழ்ச்சி நடத்தி வரும் தவில் வித்துவான் அ. குமரேசன், தஞ்சாவூர் நகரத்தில் குறவன் – குறத்தி ஆட்டத்துக்கு என்று ஒருபகுதியே அப்போது இருந்ததாக சொல்கிறார்கள். அங்கு எப்போதும் தவில் பயிற்சி நடக்கும். கிளாரிநெட் ஊதி இரவு பகலாக பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல குறத்தியாக ஆடி ஓய்வு பெற்றவர்கள்  இதனைக் கற்றுக்கொண்டு ஆட விரும்பும் ஆண், பெண்களுக்கு பயிற்சியும் கொடுத்தார்கள்.

இது என்னவோ, பொழுதுபோக்கு ஆட்டம், கேலிக்கூத்து என்று நினைத்து விடாது இருக்க, இதிலும் சில நுட்பங்களையும், ஆட்ட முறைகளையும் கையாண்டார்கள் என்கிறார் எழுத்தாளர் சி.எம். முத்து. எந்தக் கலையாக இருந்தாலும் ‘சரி’ அது தனக்கு உரிய ஒரு வடிவத்தை தகவமைத்துக் கொள்ளும்போது, அது தனக்கான உள்ளடக்கத்தையும் இயல்பாகவே பெற்றுக்கொள்ளும் என்பது இதற்கு பொருந்தும்.

இந்த ஆட்டத்துக்கு மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இந்தக் கலையை கற்றுக்கொள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. அதன்படி தஞ்சாவூர் வட்டாரத்தைக் கடந்து மதுரை மாவட்டத்திலும் அது சுற்றியுள்ள பகுதிகளிலும், நாட்டுப்புறக் கோஷ்டியினர் உருவானார்கள். திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் என்ற பகுதியில் இருந்த ‘மானங்கணி’ என்ற நாட்டுப்புற கலைஞர். மிக திறமையான ஆட்டக்காரர். இவருடைய இயற்பெயர் கணேசன். ஆனால் மிக மூர்க்கமான ஒரு ஒழுங்கில் அசுரவேகத்தில் வானுக்கும், பூமிக்குமாக எம்பிக் குதித்து, இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, மக்கள் ‘மானங்கணி’ என்று அழைத்தார்கள். அதனை தனது பட்டமாகவே இவர் வாரித்துக் கொண்டார். இந்த ஆட்டத்தை தனக்கே உரித்தான பாணியில் ஆடும் வித்தகர்கள் நிறைய பேர் உருவானார்கள். தஞ்சாவூர் சித்ரா, ஒரத்தநாடு செடிபவுனு, புதுக்கோட்டை மாலதி, பொய்யூர் கஸ்தூரி, திருச்சி ரமா, அதுபோல வேளுக்குடி ரமேஷ், சீதனங்கட்டளை கண்ணப்பன், தஞ்சாவூர் ஜெயகுமார், மன்னார்குடி காமராஜ், வலங்கைமான் தனபால் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது இவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. காரணம் எல்லா நாடடு்ப்புற மண்ணின் கலைகளுக்கு சவாலாக சினிமா இருப்பதால் இந்த ஆட்டத்தை வெகுஜன மக்களை கவரவும், குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கவும், ஆபாசம் இதனுள்ளே புகுத்தப்பட்டது. தகாத வார்த்தைகளில் வர்ணிப்பது. இரட்டை அர்த்தப் பாலியல் பேச்சுகள் என அந்தக் கலையை வேறு ஒரு தளத்துக்கு இட்டுச் சென்று இருக்கிறது. ஆபாசமாக ஆடவும், பேசவும் தயங்கும் ஆட்டக்காரர்கள், தற்போது இந்தக் கலையை தவிர்த்து இருக்கிறார்கள். சாதாரண மக்களின் ரசனைக்கு ‘தீனி’ போடுவதாக இரட்டை வசனங்கள் திணிக்கப்படுகின்றன என்று நாட்டுப்புற ஆய்வாளர்கள் வருத்தமடைகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மேடையை ஆக்கிரமித்து இருந்த புராண இதிகாச அம்சங்களைக் கலைத்து, கலகக்குரலாக வெளிவந்த நாட்டுப்புறக்கலை மெல்ல சிதைந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் ஜாமங்களில் சலங்கை அதிர ஆடி இளைஞர்களின் இரவுகளை களி கொள்ளச் செய்த குறத்திகளின் நடனம். காற்றின் அலைவரிசைகளில் உதிர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

(தொடரும்)
***

சிவகுமார் முத்தய்யா, நெற்களஞ்சியமான கீழத்தஞ்சை திருவாரூர்- தண்டலைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை, கவிதை, கட்டுரை என இது வரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் – muthaiyasivakumar@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular