Tuesday, November 5, 2024
Homesliderடிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்

டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்

மணி எம்.கே மணி

கரத்தின் மத்தியில் இருக்கிற ஒரு நெருக்கடிப் பகுதி அது. இருந்தாலும் வரிசையாக இடைவிடாமல் நீண்டிருந்த கடைகளுக்கு முன்னால் காரை நிறுத்த முடியும். வாட்டம் பார்த்து நிறுத்தி விட்டு, காரை விட்டு இறங்குவதற்கு முன்னால் முன்பகுதி சீட்டுகளுக்கு நடுவே தொக்கான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டேன். எனது மனைவியையும், அவளுடைய நட்சத்திரனையும் கொல்லுவதற்காக வாங்கின சாமான். வயிற்றுப் பகுதிக்குள் செருகிக் கொண்டு நடந்தேன். இந்த பனிரெண்டு மணி நடு உச்சி வெய்யிலில் இடித்துக் கொண்டு செல்லுகிற ஜனங்களின் முட்டாள்தனமான பாடுகளை வெறுத்துக் கொண்டு சில் கிளாஸ் போட்டுக் கொண்டேன். எனக்கு யாரையும் பார்க்கப் பிடிப்பதில்லை.

அந்த உயர்நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில் செல்லுகிற மூத்திர சந்தின் கடைசிக்கு வந்தால் அந்தப் பள்ளியில் இருந்து வெளியேற ஒரு டொக்கு கதவு. உள்ளே நுழைந்தேன். பழைய கட்டிடத்தின் நாற்றம் தொட்டது. வாட்ச்மேன் ஒரு இழிவான சலாம் போட்டான். உள்ளே புகுந்து காரிடாருக்கு அப்பால் படிகளில் ஏறினேன். மீண்டும் மீண்டும் ஏற வேண்டும். மூன்று மாடிகளுக்கு அப்புறம் வருகிற வினோத வளைவைக் கடந்தால் மொட்டை மாடி. ஒரு ஜமாவே இருக்கிறது. ஒருத்தனும் நகம் கடிக்கவில்லை என்பதைப் பார்த்தேன், அத்தனை பேரும் அப்படித்தான் இருந்தான்கள். சலாம் அலெக்கும் என்றார் புகாரி பாய். அத்தனை பேரும் இருந்த இடத்தில் இருந்து நகர்ந்து வட்டம் போட்டு விட்டார்கள். நானும் எனக்கு ஒதுக்கப்பட்ட இடுக்கில் திணித்துக் கொண்டு குத்த வைத்து உட்கார்ந்தேன். துப்பாக்கியை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டேன்.

வெங்கடேசன் சீட்டுக் கட்டைப் பிரித்தான்.

எல்லோரும் பார்த்துக் கொண்டோம்.

ஆட்டம் துவங்கியது. நான் பொதுவாக அவதானிப்பில் இருந்தேன். குடியிருப்புப் பகுதியில் ஒலாத்தும் கோழிக்குஞ்சைப் பார்த்திருக்கிற கருடன் தன் பாட்டுக்கு வட்டம் அடிப்பது போல. இன்றைய ஜூதுக்கு பிக்சிங் ஹை. அதனால் பேச்சு குறைவாக இருந்தது. எல்லோருமே பேச்சை விட்டிருந்தான்கள். கருணா குப்பி கொண்டு வந்திருந்தான். அதை ஊற்றித் தருவதற்கு ஒரு இளவட்டம். சம்பிரதாயத்துக்கு பெக்கு போடவா என்பதற்கு பதில் அவனே கூட ரொம்ப லேட்டா தான் ஒன்றை ஊற்றிக் கொண்டு ரவா லட்டை கடித்துக் கொண்டான். ஸ்டேஷனில் இருந்து ஒரு வத்தல் போலீசு வந்து மாமூலை வாங்கிக் கொண்டு போனபோது எனக்கு கெலிப்பு துவங்கியது. சுரத்தை துவங்கினேன். தம்பி,  ஒரு நாப்பத்தஞ்சு போடு. சோடா வேணா. அப்படியே இறக்கினேன். எரிந்து கொண்டு இறங்கியது. அநேகமாக எல்லோரும் எனது இன்றைய லக்கை புரிந்து கொண்டு விட்டார்கள். ஏசு என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். சாலை வியாபாரிகளிடம் பேசி அவர்கள் மூலம் மூணு லட்சம் தண்டல் வாங்கி வந்தது பூராவும் கோயிந்தா. அவனோடு மூன்று பேர் இருக்கிறார்கள். பணம் இல்லாமல் எப்படி திரும்புவது என்கிற கணக்கின்படி அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தாக வேண்டும். அதேதான், மொத்தப் பணத்தையும் நான் மூட்டை கட்டுவதற்கு முன் துப்பாக்கியை எடுத்து வாயில் கடித்துக் கொண்டேன். ஏசு மற்றும் அவனின் தடியன்களைத் தவிர அத்தனை பேரும் நழுவிச் சென்றார்கள்.

“ என்ன லவடா லுக்கு? பே, பே, எழுந்து பே ! “

என்னவோ, போய் விட்டார்கள். காருக்கு ஏறுவதற்குள் மடக்க முற்படவில்லை. இன்றைய எனது விருத்தம் அப்படி இருந்தது. மோதிப் பார்க்கிற லைட் டிம்மு போட்டிருக்கும். நெடுஞ்சாலை ஓட்டல் ஒன்றின் முன்னே காரைப் போட்டு விட்டு குடித்தேன். தயிர் சாதம் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் தூங்க முடிந்தது. எழுந்த போது ஒரு அவசரம் தோன்றி காரை பறக்க செய்தேன். தடாவைத் தாண்டிய போது சின்ன நிதானம் வந்தது. நான் அவசரப்படக் கூடாது. அதற்கு ஒரு அவசியமும் இல்லை. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தவாறு வந்தேன். அந்த நேரத்தைய போக்குவரத்தும் மோசமாகவே தான் இருந்தது. அவ்வப்போது பார்த்த கோடை காலத்தின் மேகம் எவ்வளவோ நினைவுகளை மல்லுக்கட்ட முயலுவதாக இருந்தது. நான் எல்லாவற்றையும் தவிர்க்கவே விரும்புகிறேன்.

நான் தேடி வந்த ஊர் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

ஓரளவிற்கு தெரியும்.

மனம் கூர்மையாக இருக்கவே தனியாக இருந்த அந்த வீட்டை அடைத்து கொஞ்சம் பணத்தை பொதி செய்து  எடுத்துக் கொண்டேன். கதவைத் தட்டினேன். மஞ்சு என்னைப் பார்த்ததும் பின்னடைந்து ஓடினாள். எனக்கு சட்டென வந்த மூச்சிரைப்பில் திணற வேண்டி வந்த போது , அவள் எழுப்பின ஒரு விதமான சப்தம் பிடிக்கவில்லை. உள்ளே சென்று மறைந்தாள். ஆத்திரத்துடன் சோபாவில் அமர்ந்தேன். கொண்டு வந்த பணத்தை சோபாவின் மீது வைத்தேன். அது குவிந்து கிடந்தது. காத்திருந்தேன். உள்ளே பல்வேறு குரல்கள். என்னுடைய எண்ணங்களைக் கண்டுபிடிக்க தர்க்கம் செய்து கொண்டிருந்தன. முதலில் எனது மனைவியின் தற்போதைய கணவன் வந்து எட்டிப் பார்த்தான். முன்னேறி வந்து ஆழமாகப் பார்த்து நின்றான். நான் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளும் வந்தாள். அதற்கு அப்புறம் வந்தது அவனுடைய தங்கையும் அம்மாவுமாக இருக்க வேண்டும். வந்து வேடிக்கை பார்த்த குழந்தை அவனது தங்கையினுடையது.

மஞ்சு வரவில்லை.

நான் பொதுவாக கண்களால் அந்தப் பணத்தைக் காட்டினேன்.

அனைவருக்கும் அப்போதுதான் அப்பொதியின் மீது கண்கள் போயிற்று.

எழுந்து கொண்டேன்.

திரும்பி வருகையில் மஞ்சுவை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை மட்டும் கவனமாக சொல்லி விட்டு வந்தேன்.

காரைக் கிளப்பி நகர்த்தும் போது திரும்பிப் பார்த்தால் வீட்டின் கதவை அடைத்திருந்தார்கள்.

எங்கே செல்லுவது என்பதை முடிவு செய்யவில்லை. அது, கார் சென்னைக்கு செல்ல வேண்டிய சாலையில் செல்லாமல் அதற்கு எதிர்புறமாக சென்று கொண்டிருப்பதில் புரிந்து கொண்டேன். நான் எங்கே செல்லுவேன் என்பதை நானே வேடிக்கை பார்க்கிற மாதிரி இருக்கிறது. அப்படித்தான் கொஞ்ச நாட்கள்  முன்பு எனது வீடு செதிலடைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளப்பகுதியில் குடித்தனங்கள் அடித்துச் செல்லுவதைப் போலிருந்தது அது. அப்படியே தான் நான் சந்தோஷமாக நேர்கொண்டிருந்த வணிகமும். பலமுறை மூழ்கியும் எழுந்து வந்து பார்க்கும்போது பலவும் கண்ணில் இருந்து மறைந்து போயிருக்கும். எதை தானம் கொடுத்தேன், எதையெல்லாம் விற்றேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. பல லாட்ஜ்களில் தொடர்ச்சியாக குடித்துத் தூங்கி ஒருநாள் திடுக்கிட்டெழுந்து மீசை தாடியை மழித்து குளித்திருக்கிறேன். நல்ல ஆடைகளை அணிந்து எனது தன்னம்பிக்கையை துழாவி இருந்திருக்கிறேன். அது ஒரு பாவனை மட்டுமே. அந்த நாட்களை முடித்துக் கொண்டு இப்போது இப்படி துவங்கி இருக்கிறேன்.

பெட்ரோல் போட்டவாறு இருப்பதில் ஒரு உவகை.

ஒன்றுமே இல்லை.

இலக்கு கூட இல்லை.

ஆனால் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். நன்றாகத் தானே இருக்கிறது? தத்துவார்த்தமாக? குச்சி மிட்டாய், மூக்குப் பொடி, பாங்கு, பாசந்தி என்று எதயும் விடவில்லை. தத்துவம் என்றெல்லாம் பீத்தல் நினைப்பில் பல்டி போடுவதைக் காட்டிலும் இப்படி ஜிலோவாக சோக்கு பண்ணுவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது. ஏன், பலதடவை எனக்கு தயிர் சாதம் கிடைக்கவில்லை, வற்றி வறண்டு பூமியெங்கும் வகிடு போட்டிருந்த அப்படி ஒரு ஊரில், அப்படி ஒரு வெயில் நாளில் பெருச்சாளிக் கறி தின்னக் கிடைத்து சாப்பிட்டேன். இது கூடப் பரவாயில்லை. வெறும் சாராயம் குடித்துக் கொண்டு தூங்கி எழுந்து சாப்பிட மறந்து, அப்புறம் சாப்பிடக் கிடைக்காமல் துளி நிழலுக்கு ஏங்கி மேலே முடியாமல் காரிலேயே ஒருமுறை மலைத்துக் கிடந்தேன். கனவுகள் அப்படியே வானிலிருந்து பொழிகிற ஜிகினாக்களாக என்னைச் சுற்றி பறந்து கொண்டிருந்தது. எனது செல்லக் குட்டி, எனது ராஜாத்தி, எனது உயிரின் உயிர் , எனது மகள் மஞ்சு செவன்த் std இல் இருந்து டபுள் பிரமோஷன் ஆகி நயன்த் std க்கு போகிற வழியில் எனக்கு வாய்க்கரிசி போட்டு ஒரு சொம்பில் பாலும் ஊட்டிச் சென்ற சந்தோஷத்தில் திடுக்கிட்டு எழுந்த போது அவர்களைப் பார்த்தேன். ஒரு அப்பனும் அவனது மகளும். சற்றுத்தள்ளி உட்கார்ந்து ஒரு அழுக்கு மூட்டையைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். எனது பசித்த வயிற்றிற்கு அந்த மணம் எட்டியாக வேண்டுமே? அது ரொட்டியே தான். எனது திறந்த வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்து விட்டது. ஒரு பிச்சைக்காரனைப் போல  இரந்து விட்ட கண்களில் இருந்த பரிதாபத்தை அவன் அடையாளம் கண்டு கொண்டு ஓடி வந்தவன் அதைப் பிய்த்துக் கொடுத்தான். கடித்துக் கொள்ள பச்சை மிளகாய். அந்தக் குழந்தை தண்ணீர் பாட்டிலை நீட்டியது. மூளை சொல்லுவதை கேட்கிறதா வயிறு, வாரித்தின்று விக்கல் வந்து கண்ணீர் விட்டு எனது பசி தணிந்த போது சாய்ந்தேன். ஒன்றும் பேச முடியாமல் கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்தேன். அவர்கள் பேசுகிற பாஷையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் அந்தக் குழந்தையைப் பார்க்க பார்க்க மனம் முட்டியது. காரை எடுத்தேன். பார்த்துக் கொண்டு நின்றிருந்த அந்த ஆளிடம் நூறோ, இரு நூறோ எடுத்துக் கொடுத்து கொண்டு நகர்ந்து வேகமெடுத்து சற்று தூரம் போன பிறகு திரும்பிப் பார்த்தபோது திடுக்கிட்டேன்.

இரண்டு பேரும் கையெடுத்துக் கும்பிட்டவாறு ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

நிதானமாக இருந்து, இன்னும் கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்திருக்கலாமே என்கிற எண்ணம் புரண்டபோது வெறுமையும் வெறுப்பும் தட்டியது. இவர்கள் இரண்டு பேரில்லை. உண்மையில் இதுதான் இந்த நாடு. அவ்வளவு வேகத்தில் நான் காரை ஒட்டியது கிடையாது. எல்லாவற்றிலும் இருந்து தப்பிப்பது போலவே ஓடினேன். ’டிவைன் ஹார்ட் டிஸ்கோ’ ஹோட்டலில் கேட்டதைக் கொடுத்துவிட்டு ஒருநாள் முழுவதும் தூங்கினேன். எழுந்தபோது கடைசியாக கண்ணுக்குள் நின்றிருந்தது எனது மனைவியின் முகம் தான். மஞ்சுவின் படிப்பு பற்றி புகார் சொல்லிக் கொண்டிருந்தாள். நீ அவளை விரட்டக்கூடாது என்று மன்றாடிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் இந்தப் பிரமையை எப்படி கலைப்பது என்று தெரியாமல் விழித்து, அப்புறம் முகத்தின் மீது தண்ணீர் அடித்துத் துரத்தி தெருவில் இறங்கி நடந்தேன். எனக்கே நான் எதையோ தேடுவது போலிருந்தது. என்னவோ ஒன்றை வாங்க வேண்டும். அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு நடந்தேன். மதுக்கடையைப் பார்த்ததும் விறுவிறுப்படைந்து ரம் மற்றும் பியர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு வரும்போது குடித்துக் கொண்டு முடிவதற்கு விஷம் போல எதுவும் கிடைக்குமா என்று கிளம்பிப் புறப்பட்டது ஞாபகம் வந்தது.

அதற்கெல்லாம் அவசியமில்லை.

யாரிடமும் தப்பில்லை.

நாங்கள் ரொம்ப லவ்வு கொண்டாடி, ரொம்ப சீன் போட்டு வாழ்ந்ததில் ஒருவருக்கு ஒருவர் சலித்துப் போனோம். வாழ்வில் பிளஷர் தேடாத ஆம்பள பொம்பள இருக்க முடியுமா? எல்லாத்துக்கும் ஒரே போல டப்பா தட்டுகிற கொஞ்சம் முட்டா பசங்க ஒருத்தர ஒருத்தர் அன்பா வெச்சுக்கோங்க, பண்பா வெச்சுக்கோங்க என்பார்கள். திருப்தியா செஞ்சியா என்று ஓரக்கண்ணால் உள்ள பூந்து பேசுவதாக நினைத்துக் கொள்வார்கள். சலிப்பைப் பற்றி, அதன் வீரியம் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள். பிரியாணி தின்று சலித்து நான் இன்று தயிர் சாதத்துக்கு அலைவது என்ன? பெருச்சாளிக் கறியைக் கூட இனிமேல் தேடுவேன். தனது காதலன் என்று ஒருவனைத் தேர்ந்து அவனை கண்ணீர் விட்டுக் காதலித்து முருகன் என்கிற பெயரைக் கொண்டவனுக்கு நட்சத்திரன் என்கிற பெயர் சூட்டி எனது மனைவி அவனுடனே ஓடிப் போனதற்குக் காரணம் சலிப்பு தான். சமீபமாக எனக்குக் கூட அவளது மூஞ்சியைப் பார்க்கும்போது மிகவும் வெறுப்பாக இருந்தது. ஏதாவது தீர்வு இருக்குமா என்று தேடிய போது காலையில் மனைவி எழும் முன் எழுந்து காப்பி போட்டு அவளை முத்தமிட்டு எழுப்பி கொடுத்து குட்மார்னிங் சொன்னால் பொண்டாட்டியை கைக்குள் போட்டுக் கொள்ளலாம் போன்ற உபதேசங்கள் கிடைத்தன. இந்த மாதிரி சர்க்கஸ்களை செய்ய நேர்ந்தால் நான் மூர்ச்சை போடவேண்டி வரலாம்.

எனது வலி மஞ்சு மட்டும் தான்.

ஹோட்டல் வாசலில் யாரோ இரண்டு பெண்கள் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் இருந்து இறக்கிய பெண் மஞ்சு போலவே இருந்தாள்.

அவர்களைத் தாண்டிக் கொண்டு வந்தேன்.

இருட்டும் வரை குடித்தாலும் சோர்வு குறைவாக இருந்தது. அது போல குடிப்பதை நல்லபடியாக குடிக்கவும், சாப்பிடுவதை நல்லபடி சாப்பிடவும் முடிந்தது. முக்கியமாக ஒரே சீற்றத்தில் கும்பலான யோசனைகள் நெருக்கடி கொடுக்கவில்லை. எதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்பது  இப்போது உறுத்தல் போல உருமாறிக் கொண்டது பாருங்கள்.  புத்தி நன்றாக இருந்தாலே பிரச்சினை தான் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆமாம், அவர்கள் அந்தப் பெண்ணை இந்த ஹோட்டலுக்கு எதற்கு கொண்டு வர வேண்டும்? என்ன காரணத்தினால் அந்த பலவந்தம்?

சன்னலில் எட்டிப் பார்த்தேன்.

இப்போது அந்தப் பெண் டிஸ்கோ டிரெஸ் போல கலர் கலர் ஆடை உடுத்தியிருந்தாள். சகல அயிட்டம்களும் வைத்து சிங்காரம் பண்ணியிருக்கிறார்கள். ஆட்டோவிற்கு பதில் ஒரு படகுக் கார் நின்றிருந்தது. பெண்களுக்கு பதில் ஆண்கள். அவள் காரில் ஏற மறுக்க, காரில் இருந்து இறங்கி வந்த ஒரு சோன் பப்டி அவளைக் காலால் உதைத்தான். இவர்களும் அவளை இழுத்து வைத்து அறைய ஆரம்பித்தார்கள்.

காரின் உள்ளே இருந்து இறங்கிய சேட்டு தலையை சொறிந்தான்.

கீழே இறங்கிப் போனேன். துப்பாக்கியால் நான்கு பேரையும் சுட்டுவிட்டு சந்தோஷமாக சிரித்துக் கொண்டு நின்றேன் . 

***

மணி எம்.கே மணி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular