நதியில் எறிந்த கற்களை தேடி எடுப்பவன்
எரியும் மனிதனின் கடைசி நொடிகளை
ஒரு நேர்கோட்டைப் போல உங்களால் வரைந்திட முடியாது.
1.
மென்மையாக ஒரு கொலையை முடித்து வைப்பதென்பது,
பழகிய புல்லாங்குழலை கடைசியாக ஒருமுறை வாசித்து விட்டு
வெகுதூரமாக எறிந்திடுவது
அல்லது
பழக்கப்படுத்தியிருந்த உயிரின் நம்பிக்கைகளை உயரமான
ஒன்றிலிருந்து தள்ளி விடுவது
அல்லது
கடைசியாகக் கெஞ்சிடும் ஒரு மனதின் லயத்திலிருந்து விரிந்திடும்
உலகை ரசித்துக் கொண்டிருப்பது
அல்லது
அவ்வளவு விலகி நின்று
வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அன்பொன்றை
எல்லாவிதங்களிலும் சுலபமாகக் கைவிடுவது
2.
கரடுமுரடான ஒரு எதிரியிடம் பழகுவதென்பது
அந்த வழியாக ஓடிடும் நதியொன்றின் மீது சிறுசிறு கற்களை
எறிந்திடுவது போலானது தான்
பிறகு
வற்றிய அந்நதியில்
அக்கற்களைத் தேடிப்போய் எடுத்துப் பாதுகாப்பது தான்
அவ்வெதிரியின் சிரிப்பை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பதென்பது.
3.
ஒரு பூவைப் பறித்து கசக்கியெறியும் குரூரத்தில்
ஒருவன் தன் ஞானத்தைத் திறந்து விடுகிறான்
மற்றொருவன் அவனது அறியாமையை பகிர்ந்து கொள்கிறான்
வேறொருவன் உலகின் அமைதியை உற்றுப் பார்க்கிறான்
சம்பந்தமேதுமில்லாதவன் கொலையை பாதியில் கைவிடுகிறான்
4.
இந்தப் பாதையில் கிடக்கும் பாதத்தடங்கள்
நேற்றின் கனிந்த பாடலொன்றை
எல்லோருக்காகவும் பாடிக் காண்பிக்கின்றன.
உலகம் முடிகின்றன இடம் வரை
அப்பாதங்களை அழைத்துச் சென்று காண்பித்து விட்டு
திரும்பவும் அழைத்து வந்து அதேயிடத்தில்
கிடத்தியிருக்கிறது..
5.
ஒரு சன்னலைப் போல எவன் தன்னைத் திறக்கிறானோ
அவனே மனிதனுக்கு வெகு அருகிலிருக்கும்
மற்றொரு மனிதனாகிறான்
6.
எல்லாவற்றையும் தேடி எடுத்துத் தருபவன்
சிறிய பொருளொன்றின் மீது படிந்திருக்கும் திசையையும்
காலத்தையும் சேர்த்தேக் கொடுக்கிறான்
7.
ஒரு மனிதன் ஒரு வரிசையைக் குலைக்கிறான்
குலைந்த அவ்வரிசை சில மனிதர்களை ஆயுதமாக்குகிறது
சில ஆயுதங்கள் அந்த இடத்தை மௌனமாக்குகின்றன
பிறகு
ஒரு தற்காலிக வரிசையை சிலர் உருவாக்க முயல்கின்றனர்
8.
திறக்கப்படும் சன்னல்
வானம் தனிப்பட்ட யாருடையதாகவு மிருப்பதில்லை யென்கிறது
மூடப்படும் சன்னல்
தலைகீழான ஒற்றைக் குரூரத்தை யார் மீதோ கையாளுகிறது
இல்லாத சன்னல்
தொடர்பற்ற பல கனவுகளை வெளியேற்றிட வழியற்றிருக்கிறது
நினைவிலிருக்கும் சன்னல்
எப்போதும் உதிர்ந்து பறக்கும் ஒரு சந்தோசத்தைக் காண்பிக்கிறது
9.
கடைசியாக மண்ணில் கிடந்த ஆயுதங்களிலொன்றைக்
கைகளிலெடுத்துப் பார்க்கிறான்
உயிர்களைப் பறித்திட்ட கருவி போலவே இல்லை யது
ஒரு ஆறுதலுக்காகத் தவித்திடும் சிறிய மனதை ஒற்றிய
வடிவத்தில்
அவனின் கைகளுக்குள் முழுவதுமாக அடங்கிக்கொள்கிறதது
10.
அவனின் நினைவிலிருந்த ஒரு ஆயுதத்தில்
ஒரு நொடி மிச்சமிருந்தது
அதற்கு முன்பாக ஒரு இதயமிருந்தது
வெட்டப்படுவதற்கு முன்பிருந்த அதன் துடிப்பின்
இசையை அதிலிருந்து தான் அவன்
முழுமையாகக் கேட்டுப் பார்க்கிறான்
***
ஜீவன் பென்னி
ஓவியம் – Katsushika Hokusai
அலாதி சுகம் கவிதை படித்ததில் அழகு கவியே