Thursday, June 13, 2024

ஜன்னல்

 • கார்த்திக் பாலசுப்ரமணியன்

1

றையின் எல்லா பக்கங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இருள் திரவமாகி வழிந்து கொண்டிருந்தது.  நாசியைத் துளைத்தது பழம்பாசியின் வாடை. சுற்றிலும் தவளைகளின் கூக்குரல். கண்கள் இருளுக்குப் பழக நேரம் பிடித்தது. கைகளை நீட்டித் துழாவினேன். முழுவதுமாக கைகளை நீட்டும் சுதந்திரத்தைப் பறித்து இடித்தது சுவர். சுற்றிலும் சுவர். சுவரைப் பற்றிய உள்ளங்கையில் படிந்தது வழுவழுப் பாசியின் ரேகை. அருவருப்புடன் சட்டையில் துடைத்துக் கொண்டேன். கைகளை நன்கு கழுவ வேண்டும். மெதுவாக, ஒவ்வொரு விரலுக்கு இடையிலும் மேலும் கீழும் நக இடுக்குகளையும் சேர்த்து கவனமாய் கழுவ வேண்டும். ‘ஹாப்பி பர்த் டே’ பாடிக்கொண்டே அது முடியும் வரை கழுவ வேண்டும். கணுக்கால் வரை தண்ணீர் நிரம்பியிருந்தது. அதன் குளுமை பாதங்களில் ஓடிய நரம்பு ஒவ்வொன்றையும் தொட்டுக் கிளர்த்தியது. மெது மெதுவாக, பார்வை துலங்க ஆரம்பித்தபோது அது அடைக்கப்பட்ட அறையல்ல, கிணறு என்பது விளங்கியது. அதைப் பார்க்க விரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

அப்படியே எவ்வளவு நேரம் போயிருக்கும் என்று தெரியவில்லை. உறங்கிக் கொண்டிருந்தவனின் பின்மண்டையில் நன்கு முறுக்கித் திரட்டப்பட்ட கடப்பாரை போலிருந்த கம்பியால் ஓங்கி அடித்ததைப் போலிருந்தது முதன்முறை ஒலித்த அவ்வழைப்பு மணியின் ஓசை. அதன் பின்னான ஒவ்வொரு அழைப்பிற்கும் அடிபட்ட மண்டைப் பிளவிலிருந்து இரத்தம் பீய்ச்சி அடித்தது. தலை பாரமாகி கனத்தது. தலையை இரண்டு உள்ளங்கைகளாலும் இறுகப்பிடித்தபடி எழுந்து உட்கார்ந்தேன். தலையணை நனைந்திருக்கிறதா என்று ஒருமுறை தடவிப் பார்த்தேன். அச்சப்படும்படியான அசம்பாவிதம் ஏதும்  நிகழ்ந்திருக்கவில்லை. வெறும் கனவுதான். அடியொன்றும் இல்லை, ஆனால் வலி மட்டும் இருந்தது. வரவேற்பு அறையிலிருந்த வாஷ்பேஸினில் கைகளை சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டேன். மறக்காமல் ‘ஹாப்பி பர்த் டே’ பாட்டுப் பாடினேன். பாட்டின் முடிவில் அதுவரை மறந்து விட்டதாக நம்பிக்கொண்டிருந்த அவளின் பெயரை அனிச்சையாக உச்சரித்தேன். ச்சை சைத்தான்!

அந்தி அடைந்த பிறகே மனமும் உடலும் உற்சாகம் கொள்ள ஆரம்பிக்கிறது. ஊர் உறங்கும்போது விழித்திருப்பதும், அது பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒடுங்கி உறங்குவதும் தான் உவப்பானதாகவும் இயல்பானதாகவும் இருக்கிறது. முந்தைய இரவில் தொடர்ச்சியாக மூன்று படங்களைப் பார்த்துவிட்டுத் தூங்கும்போது மணி நாலரையைத் தொட்டிருந்தது. அப்போதும் தூக்கம் பிடிக்கவில்லை. அதுவரை சந்தித்த தோல்விகள், அடைந்த அவமானங்கள், நேர்கொண்ட புறக்கணிப்புகள், துரோகங்கள் என்று மனதின் இருண்ட மூலைகள் ஒவ்வொன்றாய்த் தேடித்தேடி கரம்பித் தள்ளியது முந்தைய இரவென்னும் எலி. எண்ணவும் தகாத உறவொன்றின் நினைவின் துணைகொண்டு மைதுனம் செய்து முடித்தபோதுதான் தூங்கியிருக்க வேண்டும். இப்போது இது ஒரு வாடிக்கை. அறையில் ஆள் யாரும் இல்லாததால் கிடைத்திருக்கும் புது வசதி.

சரிந்திருந்த லுங்கியை முதலில் சற்று தளர்த்தியும் பின்பு இழுத்து இறுக்கியும் கட்டிக்கொண்டேன். கைகளைக் கழுவி முடித்து முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டிருக்கும்போது மறுபடியும் அழைப்பு மணி ஒலித்தது. முகத்திலறைந்த நீரோடு அப்படியே போய் கதவைத் திறந்தேன். கதவிலிருந்து மூன்றடி தள்ளி முகத்தில் பச்சைநிறக் கவசம் அணிந்த பெண் ஒருத்தி ஒரு கையில் பரீட்சை அட்டையும் மறு கையில் ரெனால்ட்ஸ் பேனாவுமாக நின்று கொண்டிருந்தாள். அனிச்சையாக குனிந்து லுங்கியைச் சரிபார்த்துக் கொண்டேன்.

கவசம் முகத்தை மூடியிருந்ததில் தனித்து ஒளிர்ந்தன கண்கள். கவசத்துக்குப் பின்னிருக்கும் முகத்தைக் கண்களால் வரைந்து பார்த்தேன். இன்று மூன்றாவது நாள் என்று நினைக்கிறேன். தினமும் வருகிறாள். கழுத்தில் நீலநிறத்தில் மாநகராட்சியின் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது.

“பேர் தீபன் இல்லியா?”

“ஆமா.”

“வயசு?”

“இருபத்தி நாலு.” முகத்திலிருந்து வழிந்த தண்ணீர் சொட்டுச் சொட்டாய் லுங்கியை நனைத்தது.

“காய்ச்சல், சளி, இருமல் ஏதாவது இருக்கா?”

“இப்போதைக்கு இல்லை.”

அவளைப் புன்னகைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் மெலிதாகச் சிரித்துக் கொண்டது அவள் அணிந்திருந்த பச்சைநிறக் கவசத்தை மீறி கண்களில் தெரிந்தது. அவள் எப்போது அங்கிருந்து கிளம்புவாள் என்றிருந்தது. மூத்திரப்பை கனத்து முடுக்கிக் கொண்டிருந்தது.

“பேயே, பேயே சீக்கிரம் போய்த் தொலையேன்”.

சொன்ன ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டாள். தலையை, ‘போய் வருகிறேன்’ என்பதாக அசைத்துவிட்டு கிளம்ப எத்தனித்தவள் மறுபடியும் என் பக்கமாகத் திரும்பி, “வீட்ல உங்களைத் தவிர வேறு யாராவது இருக்காங்களா?” என்றாள்.

“இல்லை” என்று சொன்னதும் திரும்பவும் கவசத்துக்குள்ளாகப் புன்னகைத்துக் கொண்டாள். அந்த நேரத்தில் என் கைக்குக் கனவில் கண்ட இரும்புத்தடி ஏதும் கிட்டாதது எங்கள் இருவரது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் கிளம்பிப் போனதும் மூத்திரப்பையைக் காலி செய்துவிட்டு, அவள் தொட்டிருக்கச் சாத்தியமிருந்த கிரில் கதவுகளின் கம்பிகள், அழைப்பு மணியின் ஸ்விட்ச், அவள் கை வைத்துத் திரும்பிய சுவர்ப்பகுதி என்று ஒவ்வொன்றையும் கிருமி நாசினியில் நனைக்கப்பட்ட துணி கொண்டு துடைத்தேன். கைகளை மறுபடியும் ஒருமுறை சோப்பிட்டுக் கழுவினேன். கதவினை தாழ்ப்பாள் இடாமல் சாத்தினேன். என் அறையில் சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த கனத்த திரைச்சீலை சற்று விலகி, ஒளி உள்ளே வந்து கொண்டிருந்தது. அதை சரிசெய்து மீண்டும் அடரிருளைத் தருவித்தேன். அவ்விருள் மட்டுமே மனதுக்கு இதமாக இருந்தது. இமை கனத்து வலித்தது. மறுபடியும் படுக்கையில் சாய்ந்து கொண்டேன்.

*

2

அறையெங்கும் இருளின் ஆக்கிரமிப்பு. தனிமையின் வாசனை. நாவெங்கும் கசப்பின் ருசி. இருந்தும் யாருமறியாமல் எரிந்து கொண்டிருந்தது நினைவுகளின் சுடர். தூக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்து கொண்டேன். வலி, தலையிலிருந்து பின்மண்டை வழியே இறங்கி கழுத்து வரை நீண்டது. மீண்டும் விண்விண்ணென்ற வலி. ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கவும் இயலவில்லை. தலையணையைச் சற்று உயர்த்தினாற்போல் வைத்து மறுபடியும் சாய்ந்து படுத்துக்கொண்டேன். எத்தனை கவனமாய் மறைத்த போதும் மெல்லிய ஒளி எங்கிருந்தோ அறைக்குள் கசிந்து கொண்டிருந்தது. அவ்வொளியின் பிரதிபலிப்பில் அறையின் காற்றாடி புதுப்புது வடிவெடுத்துச் சுழன்று கொண்டிருந்தது. அது காற்றை விலக்கி ஒலித்த ஓசை மட்டும் செவிகளை நிரப்பிக் கொண்டிருந்தது. மொபைலை எடுத்து நேரம் பார்த்தேன். மணி எட்டரை. இன்னும் கொஞ்ச நேரத்தில் சோட்டு, காலை உணவைக் கொண்டு வந்து வைத்து விடுவான். அவன் வந்து போனதும் சாப்பிட்டுவிட்டு ஒரேயடியாகத் தூங்கிக் கொள்ளலாம்.

சோட்டு, இப்போது எனக்கும் அவனுக்கும் மட்டுமாகச் சமைக்கிறான். நான் தங்கியிருந்தது மூன்று அறைகளைக் கொண்ட வீடு. ஒவ்வொரு அறையிலும் இரண்டு அடுக்குகளைக் கொண்ட இரண்டிரண்டு கட்டில்கள். அறைக்கு நான்காக இந்த வீட்டில் மட்டும் மொத்தம் பன்னிரண்டு பேர்கள் வசித்துக் கொண்டிருந்தோம் போன வாரம் வரை. இதே போன்ற மூன்று அறைகள் கொண்ட வீடு மூன்றும், இரண்டு அறைகள் கொண்ட வீடு நான்கும் என மொத்தம் ஏழு வீடுகள் கொண்ட இந்த சிறு அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் ஒரே ஒருவருக்குச் சொந்தமானது. இக்குடியிருப்பின் உரிமையாளர் ஒரு முன்னாள் கவுன்சிலர். இது தவிர்த்து பக்கத்தில் அவருக்குத் தனி வீடு ஒன்றும் இருந்தது. அங்குதான் அவர் வசித்து வந்தார். சாப்பாட்டுடன் சேர்த்து அறைக்கு ஒருவருக்கு ஆறாயிரம் ரூபாய். குளியலறை வசதியுடன் கூடிய எங்கள் அறைக்கு மட்டும் ஆறாயிரத்து ஐந்நூறு. இப்போது அங்கிருந்த அத்தனை வீடுகளுக்கும் சேர்த்து நான் ஒரே ஒருவன் மட்டுமிருந்தேன். மற்றவர்கள் அத்தனை பேரும் அவரவர் ஊர்களுக்குச் சென்று விட்டார்கள்.

சோட்டுவுக்குச் சொந்த ஊர் ஒடிஸாவின் நுப்பாடா மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமம். அவனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் இப்பகுதியில் இதுபோன்று இருந்த விடுதிகளில் இரண்டு மூன்று பேர்களாகச் சமையல் வேலையிலிருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் ஊருக்குக் கிளம்பி விட்டனர். சோட்டு மட்டும் ஊருக்குச் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டான். ஏன் போகவில்லை என்று கேட்டதற்கு அவன் ஏதேதோ காரணங்களை அடுக்கினாலும் பயணத்தின் பொருட்டு அவன் தன் சேமிப்பைச் செலவு செய்ய விரும்பவில்லை என்பதே உண்மை. விமானம், ரயில், பேருந்து என்று மாநிலங்களுக்கு இடையிலான எல்லாவிதமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. அவன் நண்பர்கள் சேர்ந்து யார் யாரையோ பிடித்து பால் கேன்கள் ஏற்றிச் செல்லும் டெம்போவை எப்படியோ பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். அடுக்கப்பட்ட பால் கேன்களுக்குப் பின்னால் இருக்கும் சிறிய இடத்தில் பன்னிரண்டு பேர்கள் கிட்டத்தட்ட முப்பத்திரண்டு மணிநேரப் பயணம்.  

இதற்கு முன்பு அவனிடம் அதிகம் பேசியதில்லை. ‘சோறிடு’, ‘குழம்பு கொண்டு வா’, ‘காயைத் தனியே வை’ – இவற்றுக்கு மேல் ஒரு வார்த்தை அதிகமாய்ப் பேசியதில்லை. எல்லோரும் அவரவர் ஊருக்குக் கிளம்பியிருந்த நாளன்று அவன் தங்கியிருந்த சமையல் அறையிலிருந்து டிரான்சிஸ்டர் வழியாகப் பழைய இந்திப்பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. விடியும் வரை அவ்வறையின் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

வரவேற்பறையில் நடமாடும் சத்தம் கேட்டது. சோட்டுவாகத்தான் இருக்க வேண்டும். இப்போது வெளியே போனால் அவனிடம் ஏதாவது பேச வேண்டியிருக்கும். அதற்கான மனநிலை இல்லை. இப்போதெல்லாம் யாரிடமாவது பேசுவதென்பதே எரிச்சலைக் கொடுக்கிறது. அதுவும் காரண காரியமில்லாமல் சம்பிரதாயத்தின் பொருட்டு பேசுவதைப் போன்ற அபத்தம் வேறெதுவுமில்லை. ‘ஹலோ’, ‘வணக்கம்’, ‘நலமா?’ போன்றவையே ஒரு மொழியின் அருவருப்பூட்டும் வார்த்தைகள் என்பேன்.

அலுவலகம், வீடு, தெருக்கடைகள், இதோ இப்போது தங்கியிருக்கும் விடுதி என எந்தவொரு இடத்திலும் உள்ளத்தில் உள்ளதைப் பேசிவிட முடிவதில்லை. இடத்துக்கும் ஆளுக்கும் தக்கவாறு புதிய புதிய முகங்களை எடுத்துச் சூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கேட்ட விடுமுறையைக் கொடுக்காமல், எதிரே பார்க்க நேர்ந்த பாவத்துக்காக வலிந்து வரவழைத்துக் கொண்ட அக்கறையுடன் “இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா?” என்று கேட்ட மானேஜரிடம் “அதை நான் பாத்துக்கிறேன். உன் வேலையைப் பார்த்துட்டுப் போடா மயிரே.” என்றுதான் நான் சொல்லியிருக்க வேண்டும். தனித்த பயணமொன்றின் போது, “பேமிலியா வந்துருக்கோம். கொஞ்சம் மாறி உட்கார்ந்து கொள்ள முடியுமா?” என்று கேட்டவனிடம்  காதுக்கு அருகில்போய் “ஏன் சார் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்க வேண்டும். ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்படிப் பேசிவிட முடிவதில்லை. மாறாக நன்றிகளையும், பரவாயில்லைகளையுமே பதிலாகத் தர வேண்டியிருக்கிறது. அதனால்தான் மனதுக்குப் புறம்பாகப் பேச வேண்டியிருக்கும் சந்தர்ப்பங்களையே தவிர்த்துவிடப் பார்க்கிறேன். அது இயலாதபோது இத்தகைய உரையாடல்களை விரும்பும், வரையறுக்கப்பட்ட கோடுகளின் மேல் விலகாமல் நடக்கும் மனிதர்களையே ஒட்டுமொத்தமாக வெறுக்கத் தொடங்கி விடுகிறேன்.

அரவம் ஒழிந்ததும் எழுந்து வரவேற்பு அறைக்கு வந்தேன். சோட்டுதான் வந்து போயிருக்கிறான். சாப்பாட்டு மேசையில் மூடியிருந்த தட்டுக்களை விலக்கினேன். ஒரு தட்டில் நான்கு தோசைகளும் சின்ன கிண்ணத்தில் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு போட்டுச் செய்த குழம்பும் இருந்தது. வாசனையே பசியைக் கிளறியது. மறுபடியும் கைகளைச் சோப்பு போட்டு ‘ஹாப்பி பர்த் டே’ பாடிக்கொண்டே கழுவினேன்.

பொதுவாக சோட்டுவின் சமையல் பிரமாதமாக இருக்கும். அவன் அளவுக்கு ரொட்டியை மிருதுவாகவும் சுவையாகவும் செய்யும் இன்னொரு ஆளைப் பார்த்ததில்லை. மஞ்சளைத் தூவி, வெந்தயக் கீரையை கிள்ளிப்போட்டு போகிற போக்கில் செய்து கொண்டுவரும் பருப்புக் கடைசலுக்கு பிரமாதமாக சுவை கூடிவிடும். பத்து பன்னிரெண்டு பேருக்குச் சமைக்கும்போது இருந்த பக்குவமும் சுவையும் இரண்டே இரண்டு பேருக்குச் சமைக்கும் போது ஏனோ கூடாமல் போனது.

*

3

இரண்டாவது தோசையைப் பிய்த்து உருளைக்கிழங்கு குழம்பில் தோய்த்து தின்று கொண்டிருக்கும்போது தான் அன்று இன்னும் பல் விளக்கியிருக்கவில்லை என்பது உறைத்தது. வீடடங்கி இருக்கும் இந்நாட்களில் நான் குறைந்தபட்சமாகப் போற்றி வந்த அன்றாட ஒழுங்குகளும் கலைந்து தலைகீழாகிப் போயிருந்தன. வாட்ஸ்-அப்பில் வைக்கப்பட்டிருக்கும் நிலைத்தகவல்கள் ஒவ்வொன்றாய் பார்க்கத் துவங்கினேன். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிருக்கும் அபத்த களஞ்சியங்கள் அத்தனையையும் ஒருசேர தரிசிக்க இதைவிட வேறொரு சிறப்பான இடமெதுவும் இல்லை. ஒவ்வொன்றாகக் கடந்துபோய்க் கொண்டிருக்கும்போதுதான் இடையில் வரிசையாக அனுமன் படங்கள் வைக்கப்பட்டிருந்த வேங்கடநாதனின் நிலைதகவல் கண்ணில்பட்டது. மூன்று நாட்களாக முப்பது முறைக்கும் மேல் அழைத்திருப்பேன். ஒருமுறை கூட போனை எடுக்கவில்லை. இருக்கும் அவசர நிலையில் எங்காவது சிக்கிக் கொண்டிருப்பானோ என்று நினைத்தால் வாட்ஸ்-அப் நிலைதகவலில் அனுமனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறான் தடியன். அவன் இனி போனை எடுப்பான் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. வெறும் முன்பணத்தோடு போனது வரையில் சற்று மகிழ்ச்சி. இப்படித்தான் பெரிய இழப்புகளுடன் ஒப்பிட சிறிதாகத் தெரியும் இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் என்னுடைய அகராதியில் மகிழ்ச்சி என்று பெயர் வைத்திருக்கிறேன்.

வாழ்வின் மீது கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை கொள்ளும்படி பற்றிக்கொள்ள சிறு கயிறு கிடைக்கும் போதெல்லாம் பெரும் கோடாரி ஒன்றை எடுத்துக்கொண்டு காலம் புன்னகைத்தபடி என் பின்னே நிற்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு நல்லதொரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பிருந்தும் அப்பாவின் மரணம் அதைக் கலைத்துப்போட்டு ஊருக்கு அருகில், தினம் எட்டு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துப் போய்வரும்படியான பாலிடெக்னிக்கில் கொண்டு சேர்த்தது. அங்குப் படித்து தேறி வேலைக்கு வந்து பத்தாயிரத்தில் ஆரம்பித்து நான்கு வருடங்களில் இன்று இருபதாயிரம் சம்பளம் வாங்கும்போது சேர்ந்திருக்கும் கடன் கழுத்தை நெரித்து நின்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பி வெளியேறக் கிடைத்த சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பினை இன்றைய உலகளாவிய ஊரடங்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அவ்வாய்ப்பு தள்ளிப் போடப்பட்டிருக்கிறதா அல்லது முற்றிலும் கைதவறி விட்டதா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

இதற்கிடையில் கிடைத்த ஒரே ஆறுதல் மீரா. ஆனால், எதிர்பாரா தருணமொன்றில் நான் அறிய நேர்ந்த துரோகத்தின் கூர்மை அவளையும் என்னையும் இருவருக்குமிடையிலிருந்த உறவையும் ஆளுக்கொரு திசையில் கிழித்து எறிந்துவிட்டுப் போனது. இத்தகைய தனிமைச்சிறை நாட்களில் அவ்வுறவைப் புதுப்பித்துக் கொள்ள வெட்கமேயில்லாமல் மனம் உந்தித் தள்ளுகிறது. சற்று அடங்கி இரு சனியனே!

மூன்றாவது தோசையைப் பிய்த்துக் கையில் எடுக்கும்போது மறுபடியும் அழைப்பு மணி அடித்தது. ஊரே அடங்கியிருக்கும் போது இந்த வீட்டுக்கு மட்டுமென்ன? இதனால்தான் பகல்களைப் பிடிப்பதில்லை. கைகளைக் கழுவிவிட்டு வெளியே வந்தேன். வீட்டின் உரிமையாளரான முன்னாள் கவுன்சிலரும் அவரின் பின்னால் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தனர். அவர் மட்டும் முகக்கவசம் அணிந்திருந்தார்.

இது அவர் வீடாகவே இருந்த போதும் இப்போது நான் தகுந்த பாவனையுடன் வரவேற்றாக வேண்டும். முகத்தில் கனிவையும், நன்றியுணர்ச்சியையும் கொண்டுவந்து வணக்கம் சொல்ல வேண்டும். வராவிட்டாலும் சிரிக்க வேண்டும்.

“வாங்க சார். உள்ள வாங்க”

“இருக்கட்டும் தம்பி. இவங்க நமக்கு வேணடப்பட்டவங்களோட ஃப்ரெண்டு. ஒரு வேலையா சென்னைக்கு வந்தவங்க இந்த லாக்டவுன்ல மாட்டிக்கிட்டாங்க. சேலத்துல இருந்து இவங்க அப்பா ஒரு கார் பிடிச்சு வந்து கூட்டிட்டுப் போக முயற்சி பண்ணிட்டுருக்கார். அனுமதி கிடைச்சதும் ஒன்னு இரண்டு நாள்ல வந்து கூட்டிட்டுப் போயிடுவார். அதுவரைக்கும் இங்க ஒரு ரூம்ல தங்கிப்பாங்க.”

முதன்முதலில் இந்த விடுதிக்கு வந்து சேர்ந்த போது மிகுந்த கண்டிப்புடன் அவர் போட்ட கட்டுப்பாடுகளில் ஒன்றை அவரே மீறுகிறார். இத்தனைக்கும் அவர் என்னிடம் ஒரு பேச்சுக்குக்கூட அபிப்பிராயம் கேட்கவில்லை. தகவல் தருகிறார். அவ்வளவுதான். இங்கு நானும் எதுவும் சொல்வதற்கில்லை. அப்படி வேண்டப்பட்டவர்களாக இருந்தால் தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளலாமே? தற்போதைய சூழலின் காரணமாய் கவிந்திருக்கும் பயத்தின் பொருட்டே இங்கே அனுப்புவாராயிருக்கும். இல்லையெனில் அவர் சொன்னதைப் போல அதிகப் பழக்கமில்லாதவளாக இருக்க வேண்டும். எது எப்படியோ இது எனக்குக் கிடைத்த சுதந்திரத்தின் மேல் விழுந்த பலத்த அடி.

அந்தப் பெண்ணை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. முதல் பார்வையிலேயே அவளை ஆத்மார்த்தமாக வெறுக்கத் தொடங்கியிருந்தேன். பக்கத்தில் குளியலறையுடன் இணைந்திருந்த மற்றொரு அறையை அவளுக்குக் காண்பித்துவிட்டுச் சென்றார்.

*

4

இந்த வீட்டில் இன்னொரு ஆள் இருக்கிறார் அதுவும் ஒரு பெண் என்று நினைக்கும் போதே ஒருவித பதற்றம் வந்து பற்றிக்கொள்கிறது. அந்நினைப்பு காலையிலிருந்து இருந்த தலைவலியை மேலும் அதிகரித்தது. தெருவில் அம்மணமாய் ஓடுவதைப் போலிருந்தது. அறைக்கு உள்ளே போனவன் மதியச் சாப்பாட்டுக்காக சாயங்காலம் ஐந்து மணிக்கும், இரவுச் சாப்பாட்டுக்காக பதினொன்றுக்கும் என வழக்கத்தைவிட தாமதித்து வெளியே வந்தபோது அவள் ஏற்கனவே சாப்பிட்டு முடித்துச் சென்றிருந்தாள். இப்படியாக அவளைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை சாமர்த்தியமாகத் தவிர்த்துக் கொண்டேன்.

மறுநாள் காலையில் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்த அருவருப்பான இசை என்னைத் தூக்கத்திலிருந்து கலைத்தது. தூக்கம் கலைந்து தலையை உதறிக் கொண்டு உட்கார்ந்தபோதுதான் அந்த இசை இன்னும் துல்லியமாகக் காதில் கேட்டது.

என் அறையிலிருந்து வெளியே வரவேற்பறைக்கு வந்தேன். அறையின் ஜன்னல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து வந்த வெளிச்சத்தில் கண் கூசியது. சாப்பாட்டு மேசை சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இருந்த குட்டி ஸ்பீக்கரிலிருந்துதான் இசை வந்து கொண்டிருந்தது. மறுபடியும் என் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன். மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுமிடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவளெல்லாம் இங்கே வந்து என்னைச் சாகடிக்கிறாள். அடுத்தவர் சுதந்திரத்தைப் பறிப்பது குறித்த குற்றவுணர்வற்ற கட்டைகளில் ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டுக்கு இடமில்லை போலும்.

நான் என் அறையின் கதவைச் சாத்திக் கொண்டதும் பக்கத்து அறையின் கதவு திறந்து கொண்டது. தாமதித்து சாப்பிட எழுந்து வெளியே வந்தபோது பரத்தி விரித்து விடப்பட்ட கூந்தலைக் கோதிக்கொண்டே யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொள்ளாமல் மேசையிலிருந்த உணவை எடுத்துப்போட்டுச் சாப்பிட ஆரம்பித்தேன்.

என் முதுகுப் பக்கம் அவளுடைய நிழல் ஊர்வதை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.

“உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்து வைக்கிறானே அந்தப் பையனைத் தெரியுமா?”

பின்னாலிருந்து நகர்ந்து எனக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்து கொண்டாள். அவளுடைய குரல் எனக்கு மிகவும் பரிச்சயமான குரலொன்றினை நினைவுபடுத்தியது. இப்போது நான் பதில் சொல்ல வேண்டும். ஒருமுறை அவளை நிமிர்ந்து பார்த்தேன். பரிசுத்த அழகி.

“ஆமா.. சோட்டு”

“ஓ.. யெஸ்.. எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும். உங்களுக்குத் தொந்தரவு இல்லன்னா சாப்பாட்டுல கொஞ்சம் காரத்தைக் குறைச்சுப் போட சொல்ல முடியுமா. எனக்கு அல்சர் ப்ராப்ளம் இருக்கு. மாத்திரை போட்டுட்டு இருக்கேன். ஸ்ட்ரெஸ்னால வந்ததுன்னு டாக்டர் சொல்லிருக்கார். அதுனால அது சரியாகுற வரை கொஞ்சம் சாப்பாடுலயும் கவனமாக இருக்கணும். அதான் ப்ளீஸ்” என்றாள்.

“சரி நான் பேசுறேன்”

*

5

அன்று மதியம் சோட்டு சாப்பாட்டினை எடுத்துக்கொண்டு உள்ளே நுழையும்போது வெகு தற்செயலாகச் செல்வதுபோல் வரவேற்பறைக்கு வந்தேன்.

“ஹாய் பையா”

“ஹலோ சோட்டு”

உணவு கொண்டுவந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான். கழுவி அடுக்கப்பட்டிருந்த தட்டுகளையும் எடுத்து வைத்தான். “சாப்பிடுகிறீர்களா? பரிமாறட்டுமா?” என்றான்.

“நீயும் என்னோடு சாப்பிடுவதாக இருந்தால்”

என் கண்களை உற்றுப் பார்த்துச் சிரித்தான். ‘உனக்கு என்ன வேண்டும் சொல்’ என்பதைப் போலிருந்தது அவனுடைய அந்தப் பார்வை. அன்று, கொஞ்சம் ரொட்டி, சாதம், பருப்பு மற்றும் வெண்டைக்காய்ப் பொரியல் என்று அடுக்கியிருந்தான். கூடவே பூர்ண கொழுக்கட்டை போலிருந்த இனிப்பு வேறு செய்திருந்தான். ருசியும் பழைய சுவையுடன் இருந்தது. இருவருக்கும் சேர்த்து அவனே பரிமாறினான். அவனுடைய வலது கையில் ‘மா’ என்று இந்தியில் பச்சை குத்தியிருந்தான்.  இதற்கு முன்னே கவனித்திருந்தாலும் இன்று ஏனோ துருத்திக்கொண்டு தெரிந்தது.

“சாப்பாடு பிரமாதமாக இருக்கிறது சோட்டு” என்றேன். உண்மையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லாம் சரியாக அமைந்திருந்தது. சிரித்தபடி பாராட்டை ஏற்றுக் கொண்டான்.

“இன்றைக்கு அப்பா அம்மாவுக்குத் திருமண நாள். இது போன்ற நாட்களில் எல்லோரும் எங்கள் பாட்டி வீட்டுக்குப் போவோம்.” என்றான். இதைச் சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தான். இதுபோன்ற தருணங்களைக் கையாள்வது எனக்குச் சிக்கலான காரியம். இப்போது அவர்களின் திருமண நாளுக்கு இவனுக்கு நான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா? இல்லை அவர்களைப் பற்றி எனக்குத் தேவையில்லாத தகவல்களை அவனிடம் கேள்விகளாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமா? திரும்பத் திரும்ப அபத்தச்சுழல். இதற்கு அஞ்சிதான் நான் வெளியே வராமலிருந்தேன். அவளால் வந்த வினை.

என்னிடமிருந்து எதுவும் பதில் வராததால் அவன் தட்டினைப் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தான்.  

“சோட்டு.. ரெண்டு நாள் கொஞ்சம் சாப்பாட்டுல காரத்தை குறைச்சுக்கோ சோட்டு. புதுசா வந்திருக்கவங்க அதிக காரம் சேர்க்க மாட்டங்க போல. கஷ்டப்படுறாங்க.” என்றேன்.

சரி என்பதாகத் தலையை ஆட்டினான்.

சிறிது நேரம் கழித்து அவனே “எல்லாம் சரியாக இருந்திருந்தால் இன்று எங்கள் ஊரில் யோகேஷ்வர் திருவிழா ஆரம்பித்திருக்கும். ஊரே கோலாகலமாக இருக்கும் தெரியுமா?” என்றான்.

“ஆமாம்.. ஆமாம் எல்லாம் சரியாக இருந்திருந்தால் நீயும்கூட நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்குப் போயிருப்பாய் இல்லியா?” என்றேன்.

“ஓ.. உங்களிடம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். அவர்கள் சென்ற டெம்போவை ஆந்திர சோதனைச்சாவடியில் போலீஸ் பிடித்துவிட்டார்கள். தடையை மீறி பால் கொண்டு வரும் வண்டியில் ஏமாற்றி வந்ததற்காக அத்தனைப்பேரையும் கைது செய்து விட்டார்கள்.”

“அய்யோ.. பிறகு, உன் நண்பர்கள் என்ன செய்தார்கள்?”

“அமைதியாக இருப்பதைத் தவிர எங்களால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் தலையை குனிந்தபடி சாப்பிட்டு முடித்த தட்டை பாத்திரத்தொட்டிக்கு கழுவ எடுத்துப் போனான்.

*

6

மறுநாள் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது “நன்றி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். தண்ணீர் சுத்திகரிப்பானிலிருந்து ஒரு டம்ளரில் தண்ணீரைப் பிடித்து மேசையில் வைத்தாள். மறுபடியும் “நன்றி” என்றாள். வெகு இயல்பாக அவள் அதைச் செய்தபோதும் எனக்கு என்னவோ செய்தது. இவளிடம் யார் இப்போது தண்ணீர் கேட்டார்கள்? ஓர் உதவிக்குப் பதிலுதவி செய்து நன்றிக்கடன் தீர்க்கிறாளோ? நல்லதோ கெட்டதோ இந்தப் பெண்களுக்கு எல்லாவற்றையும் பதிலுக்குப் பதில் செய்துவிட வேண்டும். சில சமயங்களில் ஒன்றுக்கு இரண்டாய்.

எனக்கு அவள் எப்போது இங்கிருந்து கிளம்புவாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த முறை நானும் கொஞ்சம் பேச்சை வளர்க்க விரும்பினேன். தண்ணீரை எடுத்து ஒரு மடக்கு குடித்துவிட்டு, “தாங்க்ஸ்.. உங்களுக்கு சேலம்தானே. சென்னைல வேலை பாக்குறீங்களா?”

“இல்ல இல்ல.. ஒரு கேஸ் விசயமா லாயர் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். அப்படியே இந்த லாக் டவுன்ல மாட்டிக்கிட்டேன்.”

“ஓ.. இப்போ எப்படி ஊருக்குப் போவீங்க?”

“அப்பா.. அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா சேலம் கலெக்டர் ஆபிஸ்ல பேசிட்டு இருக்கார். பெர்மிஷன் கிடைச்சதும் வந்து கூட்டிட்டுப் போயிடுவார்” இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டு உரிமையாளர் சொன்ன அதே பதிலையே சொல்கிறாள். அவள் இதைச் சொல்லும்போது தன் மீது பச்சாதாபத்தைக் கோரும் பாவனை எதுவும் இல்லை. அவள் இயல்பாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. 

என் அறைக்குள்ளே வந்ததும் இரண்டு விசயங்கள் என்னை உறுத்திக் கொண்டிருந்தன. முதலில் அவளின் வலது கன்னத்தின் கீழ்புறம் இருந்த மச்சம். அம்மாவுக்கும் இதே இடத்தில் இதே போன்றொரு மச்சம் உண்டு. அடுத்தது அவள் ஏதோ வழக்கு சார்ந்து வந்திருப்பதாகக் கூறியிருந்தாளே. என்ன வழக்காக இருக்கும்? தனியாக வந்திருக்கிறாள் என்றால் ஏதேனும் பாலியல் தொந்தரவு பற்றியதாக இருக்குமோ? அழகாக வேறு இருக்கிறாள். திருமணம் ஆகிவிட்டதா என்பது தெரியவில்லை. அப்படி ஆகியிருந்தால் ஏதேனும் குடும்ப வன்முறையாகவோ அல்லது திருமண முறிவாகவோ இருக்கலாம். அப்படியான வழக்குகளைப் பற்றித்தான் இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவளுக்கும் அதைப் போன்ற ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதைத் தெரிந்து கொள்ள மனம் அரிக்கத் தொடங்கியது. நிதானமாக யோசித்துப் பார்த்தால் இந்த விசயத்தில் எனக்கு ஏற்பட்ட அக்கறைக்கு அவள் அழகாக இருப்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்று இரவு அவள் கதவு திறந்து உணவு மேசைக்கு வந்த அதே நேரத்தில் சரியாக நானும் போனேன். இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டோம். அவளிடமிருந்து சந்தன வாசம் எழுந்து வந்தது. அவளே ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். ஒரு வார்த்தை பேசவில்லை. தலையை குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மெதுவாக நிமிர்ந்து அவள் கவனத்தைக் கலைக்காமல் கன்னத்திலிருந்த மச்சத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டேன்.

இப்போது ஏனோ அடிக்கடி அவளைப் பார்க்க வேண்டும், ஏதாவது பேச வேண்டும் என்று பரபரக்க ஆரம்பித்தது. துரதிர்ஷ்டவசமாக மறுநாள் முழுவதும் அவளைக் காண வாய்க்கவில்லை. ஒருமுறை பாத்திரங்களை நகர்த்தும் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது சோட்டு நின்று கொண்டிருந்தான். அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்தேன். அது தேவையற்ற பல்வேறு கற்பனைகளைக் கிளறிவிடும் என்பதால் அமைதியாக இருந்து விட்டேன். ஒருவேளை அவள் கிளம்பிச் சென்று விட்டாளோ என்று நினைத்தேன். இல்லை, அப்படியென்றால் உடனிருக்கும் என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் யாரும் கிளம்பிச் செல்வார்களா? என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

பக்கத்து அறைதானே, ஏதாவது காரணம் வைத்துக் கொண்டு தட்டி இருக்கிறாளா என்று பார்க்கலாமா? இல்லை அது தவறு. ஒருவேளை கதவைத் தட்டி அவள் அதைத் திறந்து புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டால் உளறிக்கொண்டு நிற்பேன். கச்சிதமாய் பொய் சொல்வது எனக்கு கைவராத கலை. அற்பமாய் மாட்டிக்கொண்டு விழிப்பேன். அப்போதுதான் எனக்கு அந்த யோசனை தோன்றியது. அன்றிரவு வரவேற்பறையின் ஜன்னல்கள் அத்தனையையும் இழுத்துச் சாத்தினேன்.

மறுநாள் காலையில் சாத்தப்பட்ட ஜன்னல்கள் எதுவும் திறக்கப்படவில்லை.

*

 • கார்த்திக் பாலசுப்ரமணியன் – மென்பொருள் துறையில் வேலை செய்யும் இவர். ஒரு சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ மற்றும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. email – karthikgurumuruganb@gmail.com
Previous article
Next article
RELATED ARTICLES

3 COMMENTS

 1. தனிமனிதன்
  தனிமனிதனின் தனிமை
  ஊரடங்கு எனும் அரசு கட்டுப்பாடு உருவாக்கிய தனிமை

  என ஒவ்வொரு தளமும் ஒன்றாக நெய்யப்பட்ட ஒரு சொல்கூட மிகையாக எழுதப்படாத காலத்திற்கு ஏற்ற சிறப்பான கதை.

  வாழ்த்துகள் ஆசிரியர் மற்றும் தளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular