சூ.ம. ஜெயசீலன்
வீட்டுக்குச் செல்ல விடுதி கண்காணிப்பாளர் அனுமதி கொடுத்ததன் ஆச்சர்யம் ஜெகனுக்கு விலகவே இல்லை. மாணவர்கள் குளிர் காய்ச்சலில் நடுங்கும்போதும், “தூங்கினாலும் பரவாயில்லை, படிப்பறையில் தூங்கு” என்பார். சத்தமாகப் பேசினால், “பனிரெண்டாம் வகுப்பு வந்துட்டா பெரிய ஆளுன்ற நெனப்பா? பிச்சுப்புடுவேன் பிச்சு” என்பார். இலை உதிர்ந்த இடங்கள் தளிர்ப்பதுபோல, இன்று அவருக்குள்ளும் நல்லெண்ணம் துளிர்த்திருக்கிறது.
அனுமதி கிடைத்த முப்பதாவது நிமிடத்தில் பேருந்தில் இருந்தான் ஜெகன். வழக்கமாக வாங்கும் ரிப்போர்ட்டர், ஜுனியர் விகடன் எதுவும் கையில் இல்லை. கூட்டம் கூடியது. மனதுக்குள் தனிமை அதிகரித்தது. பொம்மையோடு இடித்துக்கொண்டே சென்ற குழந்தை, ‘நீங்க அடுத்த இருக்கையில் ஆண்களோடு சேர்ந்து உட்காருங்களேன்’ மனு போட்ட இளம் பெண், வியர்க்க விறுவிறுக்க கொய்யாப் பழ கூடையுடன் அருகில் வந்தமர்ந்த வயதானவள், எதனாலும் ஜெகனின் தவம் கலையவில்லை.
கையில் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் படியேறிய கர்ப்பிணியை உற்றுப் பார்த்தான். ‘ஏழெட்டு மாதம் இருக்கும்’ என நினைத்தவன், வயிற்றில் குழந்தை இறந்திருப்பது போலவும், சுருண்டிருப்பது போலவும் கற்பனை செய்தான். சில விநாடிகள்தான். தன் எண்ணக் கசப்பை விழுங்கி பார்வையை இடம் மாற்றினான். பிறகும் பேருந்து நிலையத்துக்குள் இரண்டு கர்ப்பிணிகளைப் பார்த்தான். வயிற்றில் குழந்தைகள் இறந்திருப்பது போலவே தோன்றியதால் கண்களை மூடி சாய்ந்தான்.
“ராசா! அக்கா வயித்துல உள்ள குழந்தை இறந்துருச்சுயா! வீட்டோட முதல் பேரக்குழந்தை வயித்தவிட்டு வெளியிலேயே வரலயேப்பா. எட்டு மாசத்துலேயே விட்டுட்டுப் போயிடுச்சே ராசா” காலையில் தொலைபேசியில் அம்மா சொல்லி அழுததை மனசு மீண்டும் மீண்டும் அழுதது.
அக்கா கருவுற்றதில் இருந்தே ஜெகன் பெரிய மனிதர் போலதான் நடந்துகொண்டான். அக்கா வீட்டில் ‘கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டி’ மட்டும் இருந்ததால், தன் வீட்டு விசிடி பிளேயரை அக்காவுக்குக் கொடுத்தான். தன் உண்டியலை உடைத்து தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், பஞ்சதந்திர கதைகள், நன்னெறி கதைகள் என குறுந்தகடுகள் வாங்கிக் கொடுத்தான். “வேலை செய்துகொண்டு இதை கேளுக்கா. புள்ளையும் சேர்ந்து கேட்கும்” என்றான். வீட்டில் எப்போதும் கதைகள் ஒளிபரப்பாவதைக் கண்ட மச்சான், “வீடே தமிழ் புலவரின் அரசவைபோல இருக்கிறது. அக்பரும் கிருஷ்ணதேவராயரும் திரும்ப வந்துடப் போறாங்க” என கேலி செய்தார்.
தன் மருமகப் பிள்ளைக்காக இவ்வளவும் செய்த ஜெகன், ‘வயிற்றில் குழந்தை இறந்துவிட்டது’ என கேட்ட நொடியில் தலைசுற்றி அமர்ந்துவிட்டான். அதனால்தான், “வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வா” என கண்காணிப்பாளர் அனுப்பிவிட்டார்.
இரண்டரை மணிநேரம் பயணித்து தேவகோட்டையில் இறங்கி ஆட்டோ தேடினான். மே முதல் தேதி என்பதால் ஆட்டோக்கள் பெரும்பாலும் ஸ்டாண்டுக்குப் போய்விட்டன. உழைப்பாளர் தின பாடல்கள் ஆங்காங்கே கேட்டன. ஆட்டோ வருகிறதா என இரண்டு பக்கமும் பார்த்து இல்லை என முடிவு செய்யும் முன்பாகவே கால்கள் நடக்கத் தொடங்கின.
மகன் மருத்துவமனை வாசலில் நுழையும்போதே பார்த்துவிட்ட அம்மா ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதார். “முதல் பேரக்குழந்தையை கொஞ்ச முடியாமல் போச்சே… கேசட்டெல்லாம் வாங்கிக் கொடுத்து மருமகப் பிள்ளையை வளர்த்தியே ராசா… சொல்லாமக் கொள்ளாம அந்தக் கடவுள் எடுத்துக்குச்சே…” எதிர்பார்ப்பும் இழப்பும் வார்த்தைகளில் வடிவிழந்து விழ தோள் நனைந்தது.
அப்பா அழுது ஜெகன் பார்த்ததே இல்லை. இப்போது, அவர் கைகளைப் பிசைவதைக் கண்டு கண்கள் கசங்குவதை அறிந்தான். அறையின் வாசலில் நின்று அக்காவைப் பார்த்தான். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்தார்கள். வாய் வார்த்தை ஏதும் இல்லை. ஆனாலும் பேசினார்கள்.
பார்வையின் அர்த்தங்கள் பார்க்கப்படுகிறவர்களுக்கு மட்டுமே ஓரளவு புரியும்., அந்தப் பார்வை இயலாமையைச் சுட்டுகிறதா, பரிதாபம் காட்டுகிறதா, பாசம் கூட்டுகிறதா, நம்பிக்கை ஊட்டுகிறதா, அடுத்தவர் தோல்வியைக் கொண்டாடுகிறதா எனப் புரியும்.
“மாமியார் வீட்டுல தான் ஜெகன் அக்கா இருந்துச்சு. இராத்திரி சாப்பிட்டுட்டு, என்னிடம் போன்ல கொஞ்ச நேரம் பேசிட்டு நல்லாதான்யா தூங்கப் போச்சு. இராத்திரில எப்படியோ தண்ணிக் குடம் லேசா ஒடஞ்சி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிருக்கு. காலையில எனக்குப் போன் பண்ணி அழுகுது. மாமனாரும் மாமியாரும் எங்கேன்னு கேட்டா, ‘அவங்க காலையில சீக்கிரமாவே வயலுக்குப் போய்ட்டாங்கன்னு சொல்லுது.’
“யாராவது வயலுக்குப் போய் சொல்லிருக்கலாமேம்மா”
“ஓப்படியா போய் சொல்லிருக்கு. ஆனாலும் வேலையெல்லாம் முடிச்சுட்டு மதியத்துக்கு மேலதான் வந்திருக்காங்க. காரு எடுக்காம, பஸ்லேயே கூட்டிடுட்டு வந்தாங்க. நான் காலையிலேருந்தே ஆஸ்பத்திரிலதான் இருந்தேன். டாக்டர் உடனே ஸ்கேன் எடுக்கச் சொன்னாரு. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமா நீரு போய்க்கிட்டே இருந்தது. அடுத்த நாள் காலையில ஆறு மணி இருக்கும், ‘அம்மா, குழந்தை முண்டாம இருக்கும்மா’ன்னு அக்கா சொன்னுச்சு. டாக்டர் பார்த்துட்டு எந்த அசைவும் இல்லன்னு சொல்லிட்டாரு. எனக்கு உசிரே போச்சு. அதுதான் உடனே உனக்கு போன் பண்ணினேன். குழந்தைய தொலச்சிட்டோமேடா…”
சொல்லி அழுத அம்மா, மருத்துவரைப் பார்த்ததும் விரைந்து போனார். “சார்… மதியம் தாண்டிடுச்சு… ரொம்ப நேரமாகிடுச்சு சார்… ஆப்பரேசனாவது பண்ணுங்களேன் சார்… பயமா இருக்கு… ஆப்பரேசனாச்சும் பண்ணுங்களேன்… தாயை மட்டுமாவது காப்பாத்திடுங்களேன்..” கெஞ்சினார்.
“அம்மா, சுகப்பிரசவமாவே குழந்தைய எடுத்துடுவோம். தாய்க்கு ஒன்னும் ஆகாம குழந்தைய பிறக்க வச்சிடுவோம். நீங்க கவலைப்படாதீங்கமா. தம்பி, அம்மாவ அந்தப்பக்கமா கூட்டிட்டு போங்க” சொல்லிச் சென்றார். பின்னாலேயே போனார் அம்மா.
வரவேற்பு பகுதியில் ஜெகன் அமர்ந்தான். கவலை, பயம், மகிழ்ச்சி, பதட்டம் எல்லாவற்றையும் சுமந்த பல கர்ப்பிணி பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அம்மா, மாமியார், மதினி, மற்றும் கணவர்களால் அழைத்துவரப்பட்டவர்களும், யாருடைய துணையுமின்றி தனியாக வந்தவர்களும் அங்கே இருந்தார்கள்.
“கவலப்படாதப்பா. எப்படியாவது குழந்தைய கத்திப்படாம எடுத்திடணும்னு தெய்வத்துக்கிட்ட வேண்டிக்க”
ஆறுதல் தந்த திசையைப் பார்த்தான் ஜெகன். பதில் ஏதும் எதிர்பார்க்காத அந்தப் பெரிய மனுசி, “என் மகளுக்கும் இப்படித்தான்யா நடந்தது.” சொல்லி நிறுத்தினார். “அந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாது. வயித்துல அஞ்சு மாச கரு. முந்துன மாசம் பரிசோனைக்குப் போகும்போதுகூட ‘குழந்தை ஆரோக்கியமா இருக்கு’ன்னு டாக்டர் சொல்லிருக்காரு. திடீர்னு ஒருநாள் குழந்தையோட அசைவே இல்லை. மகளுக்குத் தெரிஞ்சுடுச்சு ஏதோ ஆச்சுன்னு. மருமகன்ட சொல்லிருக்கா. அந்த மனுசன் காதுலயே வாங்கிக்கல. மறுநாளும் சொல்லியிருக்கா. அப்பவும் அவரு கண்டுக்கல. கடைசியா மகளே தனியா மருத்துவமனைக்குப் போயிட்டா. ‘குழந்தை இறந்து ரெண்டு நாளாச்சு. ஏற்கெனவே புள்ள பெத்தவதானம்மா நீ. இதுகூட தெரியலையா. ஒடனே அட்மிட் ஆகு’ ன்னு சொல்லிருக்காங்க.
‘வீட்டில மூத்த மகன் இருக்கான். ஒன்னரை வயசுதான் ஆகுது. ராத்திரி தேடுவான். நாளைக்குக் காலையில் வந்து அட்மிட் ஆகிக்கிறேன்’ன்னு சொல்லிருக்கா புத்திகெட்டவ. மருத்துவர்கள் என்ன சொல்லியும் கேட்கல. சாயங்காலம் மருமகனும் ஒன்னும் கேட்டுக்கல.
மறுநாள் மருத்துவமனையில் வயித்த சுத்தப்படுத்த அவளுக்கு இனிமா கொடுத்திருக்காங்க. ரூமுக்கும் டாய்லெட்டுக்குமா நடந்து நடந்து பெலமிழந்து, ஒரு கட்டத்துல செவுத்த புடிச்சுக்கிட்டே வந்து மயங்கி விழுந்துருக்கா. மும்பையில தனியா இருந்ததால யாருமே துணைக்கு இல்லை. மக தனியா தவிச்சிருக்கா” மூக்கை உறிஞ்சிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.
“பிறகுதான் எனக்கு தெரியவந்தது. மகளுக்கு ரெண்டாவதா கரு தங்கியதிலிருந்தே, ‘கருவக் கலைச்சிடு… கலைச்சிடு’னு அன்றாடம் மருமகன் தொல்ல பண்ணிருக்காருன்னு. வார்த்தை முழுசும் நஞ்சு. தினந்தோறும் தகப்பனே தன்னைக் கொல்லச் சொல்லறானேன்னு அந்தப் பிஞ்சு கவலப்பட்டுச்சோ, இல்லை… தகப்பனாச்சும் சந்தோசமா இருக்கட்டுமேன்னு நெனச்சுச்சோ… அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும், தானாகவே மடிஞ்சிருச்சு. புள்ளைய கண்டம் துண்டமா வெட்டி எடுத்துப் போட்ட பிறகுகூட, பொண்டாட்டிய கூட்டிட்டுப் போக மருமகன் வரலயாம்.” கண்ணீரு வறண்டு முகத்தில் வெறுமை படர்ந்தது.
“சீக்கிரம், யாராவது மெடிக்கலுக்குப் போய் ‘சுகபிரசவ கிட்’ வாங்கிட்டு வாங்க” அக்காவின் அறையிலிருந்து வெளிவந்த செவிலியர் படபடவென்று ஒரே மூச்சில் சொன்னதும் ஜெகன்தான் முதலில் ஓடினான்.
மருத்துவமனை முகப்பில் இருந்த கடையில், குழந்தைப் படுக்கை, பராமரிப்புத் துண்டு, குழந்தை நாப்கின், குழந்தையைத் துடைக்கும் துணி, குழந்தை உடை உள்ளிட்ட சுகபிரசவ கிட்டை வாங்கிக்கொண்டு விரைந்தான்.
அரைமணி நேரம் கடந்திருக்கும். அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், “அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உயிர் இருக்கிறது” என்றார். அழுத விழிகள் கையெடுத்துக் கும்பிட்டன. தாயின் வயிற்றைக் கிழிக்காமல் குழந்தையை எடுத்த மருத்துவருக்கு நன்றியுரைத்தன. மருத்துவர் சொன்னார், “ஆனால், குழந்தைக்கு 10 விழுக்காடு மட்டுமே உயிர் இருக்கிறது. நான்கைந்து நாட்கள் மட்டுமே குழந்தை உயிருடன் இருக்கும்.”
குழந்தை இறந்துவிட்டதோ என அழுதவர்கள், வயிற்றைக் கிழிக்காமல் எடுத்துவிடுங்கள் என கெஞ்சியவர்கள், தாயை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என கதறியவர்களிடம் உயிரோடு ஐந்து நாட்கள் வாழ்ந்தான் அம்மழலை.
***
சூ.ம. ஜெயசீலன் பிலிப்பைன்ஸில் வசிக்கிறார். ‘உஷ்… குழந்தைங்க பேசுறாங்க’, ‘திருநங்கைகள் வாழ்வியல் – இறையியல்’, ‘ஈழ யுத்தத்தின் சாட்சிகள்’ உள்ளிட்ட 18 நூல்களின் ஆசிரியர். இவரின் மொழிபெயர்ப்பில் அண்மையில், ‘என் பெயர் நுஜுத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது’ நூல் வெளிவந்துள்ளது.
Heart touching.i was in tears.
குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் தாயின் உணர்வுகளையும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் உறவுகளின் உணர்வுகளையும் வார்த்தைகளில் வடித்து இருக்கிறீர்கள்… உங்களின் கதைகள் பல களங்களை காண வாழ்த்துக்கள்…
அருமையான கதை
அருமையான கதை💐💐💐
பார்வையின் அர்த்தங்கள் பார்க்கப்படுகிறவர்களுக்கு மட்டுமே ஓரளவு புரியும்., அந்தப் பார்வை இயலாமையைச் சுட்டுகிறதா, பரிதாபம் காட்டுகிறதா, பாசம் கூட்டுகிறதா, நம்பிக்கை ஊட்டுகிறதா, அடுத்தவர் தோல்வியைக் கொண்டாடுகிறதா எனப் புரியும்.
சிறுகதை முழுவதும்
மிகவும் எதார்த்தமாக, உண்மையை வெளிப்படுத்துகின்ற, மிகவும் அருமையான ஒரு சிறுகதை. நண்பனுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உனது எழுத்துப்பணி.
சிறப்பு. பாராட்டுகள், ஜெயசீலன். R.M. John
Awesome story
Felt the real pain of a mother who looses their baby before seeing the earth
Congratulations for this story which is an awareness to the mother to take care of their fetus with much care
Superb story. Reality shows in this story. Congratulations🎉