வாழையடி வாழை
மலரொன்று உறங்கிக்கொண்டிருந்தது
முழுதும் மூடிய விழிகளில்
உறைந்திருந்தது
சிறு புன்னகை
கனவுகளில் மிரளும் முகச்சுளிப்பு
வெளியின் இரைச்சல்களென
அறையின் உரையாடல்கள்
எதையோ, எங்கோ,
யாரோ திடீரென உருட்டும்
சின்னஞ்சிறு அரவங்களால்
உறக்கத்திலேயே அதிர்ந்து
கைகளை அணைப்புக்காய்
அவ்வப்போது காற்றில் துழாவும்
பிறந்து சில நாட்களேயான
பச்சிளம் குழந்தை.
பாதுகாக்கும் பனிக்குடம் விட்டுவந்த
சின்னஞ்சிறு மலரே!
வெளியின்
இருப்பின் சாகசங்கள்
ஆரம்பிக்காத இத்தருணத்தின் பூவே!
நெடும் பயணத்தின் முதல் நாளிலிருக்கும்
உன்னை ஏந்திக்கொள்கிறேன்.
அரவணைப்பின் சுகந்தத்தில்
உறக்கம் தழுவிப் பிரகாசிக்கும் உன் முகத்தால்
துக்கம் மேலிட உன்னைத் தொட்டிலிலிட்டு
மொட்டை மாடிக்கு ஓடிச்சென்றேன்.
கைகளிரண்டை விரித்து
அந்தியின் முன் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தேன்.
மேகங்களுக்கிடையே வந்த கீழ்வானச் சிவப்பு
உன் சிவந்த மலரிதழ் பாதங்கள்
என் முகத்தில் பட்டதும் கொண்ட
மிருதைப் போலவே
வந்தெனைத் தழுவிக் கொண்டது.
எனக்கும் சற்று
ஆறுதலாக இருந்தது.
*
கேட்கப் பழகுதல்
மூச்சுவிட சிரமாயிருக்கும்
தருணமொன்றில்தான் உதவியெனக் கேட்கத் தோன்றும்
தூரத்திலிருந்து அப்போதுதான்
வேகமாக வந்து கொண்டிருக்கும்
ஒரு பழைய துக்கம்.
உதவுபவர்கள் அருகாமையிலேயே இருக்கிறார்கள்.
வாயைத் திறந்து கேட்க வேண்டும்
அவ்வளவுதான்.
கேட்பதற்காய் முயற்சிக்கும் முகத்தில்
திறக்கும் வாயிலிருந்து
உடனேயே ஒலி எழுவதில்லை.
முதலில்
பொழுதும் உறக்கமும்
ஒன்றுசேர மறுக்கிறது.
உதவி கேட்கத் துடிக்கும்
குரல்வளையை உள்ளிருந்தே
தடுக்கிறது உருவமற்ற ஒன்று.
பின்பு
உள்ளே ஒரு போர் மூள்கிறது.
நீண்ட போராட்டத்திற்குப் பின்
அது வீழ்த்தப்படும் நாளில்
உதவிக்காய் எழும் குரல்களை
நீங்கள் கேட்கலாம்.
பல நேரங்களில் அது
உங்களின் குரல் போலவும்
ஒலிக்கலாம்.
*
மறத்தல் என்பது…
உண்மையில் மறத்தல் ஒரு பாவனை
துக்கத்தை இன்னொரு துக்கத்தால்
மூடும் செயல் போன்றதது
ஒன்றை மறக்கப் பழகுவதென்பது
மீண்டும் அதைத் தொட்டுத் தொட்டு
சரிபார்ப்பதைப் போன்றது
அங்கேயேதான் இருக்கிறதா
அவ்வளவும் போதுமா என
சதா கேள்வி கேட்கும் மனதுடன்
போராடுவதைப் போன்றது
நெடுநாள் மனதிலிருந்த அன்பின் சாயல்
எங்கும் தட்டுப்பட்டுவிடக் கூடாத
பதற்றத்தில் உலவுவதைப் போன்றது
நினைவுகள் தடம் புரளும் நாளில்
மறக்க வேண்டியவற்றை விட
அதைச் சார்ந்தவர்களின் பெயர்கள்
முதலில் மறக்கின்றன
பின்
வானம் முழுவதுமாக இருண்டுவிடுகிறது
அதைப் பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
இருளில் கரைகின்றன
இறுதியில்
மறக்க நினைக்கும் ஒன்றை மட்டும்
விடிவெள்ளி போல்
இன்னும் நினைவில் வைத்திருக்கும்
பகல்களால் சதா உறங்காது உலவுகிறோம்.
உண்மையில் ஒன்றை மறப்பதென்பது
அதைச் சார்ந்தவற்றை மறப்பது
அந்த ஒன்றை மட்டும்
எப்போதும்
மறப்பது அல்ல.
***
ச.மோகனப்ரியா – இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி வருகின்றன.
இவரது மின்னஞ்சல் முகவரி : mohanapriyawrites@gmail.com