சோழன் வாலறிவன் கவிதைகள்

3

01}

அறிவு
நம்மை நன்மை தீமையென
தராசில் வைக்கிறது

ஞானம்
நம் சகலத்தையும்
ஒழுங்கு படுத்துகிறது

யாருடைய அறிவு
யாருடைய தராசு
யாருடைய ஞானம்
யாருக்கு நன்மை
யாருக்கு தீமை
யாருக்கான ஒழுங்கு

எல்லா காலமும்
பொருள் குறித்தே
எல்லா பாயிரமும்
காசானவனின் மசுரு குறித்தே

02}
கூறு போடும் டாலர்

ஒவ்வொரு நானும்
புனித மாஸ்க்கை
புரட்சி மாஸ்க்கை
மாட்டிக் கொண்டு
எத்தனை எத்தனை ஒத்திகை பார்த்தும்
திரைக்கதைப்படி மேடையில் அத்தனையும் சொதப்பல்

என் நானை நீங்கள்
நடிகரென்று சொன்னாலும்
உண்மையில் அதுக்கு
நடிக்க சுத்தமாக வராது
சுட்டுப் போட்டாலும்
சாம்பலிலும்
அடிமையின் துரோகத்தின் சந்தர்ப்ப வாதத்தின்
மரபணு நெடி அடவுகள் போடும்

அதே புன்னகை
அதே வேம்பூ
அதே காதல்
அதே காமம்
அதே தாழ்வின் அகங்காரம்
ஆலகாலத்தின் அடவுகள்

பன்றியான
என் நானை
அதன் சகதியில்
அதன் களிதீரத் தீர
வாழ்வளித்தே வைத்திருக்கிறேன்

சந்தையில் கூறுவைக்க
தயார் நிலையில் இருக்கும்
அரசின் கூர் ஈட்டியை எப்போதும்
அன்போடு வரவேற்று காத்திருக்கிறேன்

களிதீரத் தீர
என்னையும் நன்றாக உண்டு
நீங்கள் மாஸ்க்குகளோடவே காத்திருங்கள்
புலி மான் கோமாதா எருமை பன்றி
பாம்பு பூனை எலி மண்புழு எல்லாமே
சந்தையின் டாலர் கண்களுக்கு
ஒரு கூறு தான் ஒரே ஒரு கூறு மட்டுமே தான்

03}

டாலர் அறிக்கை

அத்தனைக்கும் ஆசைப்படு
அத்தனைக்கும் இடங்கொடு
அத்தனைக்கும் கண்ணீர் விடு
அத்தனைக்கும் ரத்தம் சிந்து

நீ உழைத்த உழைப்பு
உன் வாய்க்கரிசிக்கும் தேறாது
மரணமே பூரண விடுதலை
சாவு அழைக்கும் போதே செத்துப் போ

04}

கலைக்கும் நமக்கும் இடையே
மூன்று பாதைகள்

நம்மை உணரவைப்பது.

நம்மை மறக்கடிப்பது.

மறந்து கொண்டிருக்கும் போதும்,
உணர்ந்து கொண்டிருக்கும் போதும்
கட்டியக்காரனாக தண்ணீர் தெளிப்பது.

அன்றாடத்தின் அவஸ்தையில் நின்று
கலையில் அவஸ்தையின் நுண்மை படித்து
எதிர்த்துச் சாவது அல்லது சுயம் செத்துப் பிழைப்பது.

அவன் உணர வைக்கிறான்
இவன் மறக்கடிக்கிறான்
நீ கட்டியக்காரன்
எதிர்ப்பவன் காலத்தின் கர்ப்பத்தில்
நான் சுயம் செத்த சந்தர்ப்பத்தின் ஊளை.

என் எல்லா சொற்களும்
அதிகாரத்தின் அறம் எரித்துக் குவித்த
பிணங்களின் சாம்பல் கங்குகள்.

***

சோழன் வாலறிவன்

3 COMMENTS

  1. தீராக் களியுடன் புசித்த கவிதைகள்.
    சோழ விருந்து.

  2. தீராக் களியுடன் புசித்த கவிதைகள்.
    சோழ விருந்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here