சோழன் வாலறிவன் கவிதைகள்

0

1) கஞ்சி உப்பு பாதாம் ஏகபோக போதை

*

நான்
கொஞ்சம் தவறில் இருக்கும்போது
கஞ்சிக்கு உப்பு இருப்பதில்லை
கொஞ்சம் சரியில் இருக்கும்போது
உப்புக்கு கஞ்சி இருப்பதில்லை
முழு உண்மைக்கான பம்மாத்திலிருக்கும்போது
பாயாசத்திற்கு பாதாம் இருப்பதில்லை
என்
கொஞ்சம் சரிக்கு
எல்லாவற்றின் மீதும் ஏக்கம்
கொஞ்சம் தவறுக்கு
எல்லாவற்றின் மீதும் பேராசை
முழு உண்மைக்கு
ஏக போகத்தின் அகோரப் பசி
முழுதான பொய்யிற்கோ
பிழைப்பை ஆட்டி ஆட்டி
போட்டுடைக்கும் டாஸ்மாக் போதை

*** 

2) டாலரின் சாணக்கியம்

*

என் பேச்சில் நானில்லை
என் எழுத்தில் நானில்லை
என் செயலில் நானில்லை
என் பசியில் நானில்லை
என் காதலில் நானில்லை
என் காமத்தில் நானில்லை
என் முலையின் பால் பாலாயில்லை
சந்தையின் நானில்
நானிருக்க விருப்பமில்லை
நானின் விருப்பத்திற்கு
சந்தை விடுவதாயில்லை
நானில்லாத நானில்
நிரப்புகின்ற நானும்
நிரம்புகின்ற நானும்
என்னுடைய நானும்
தனி
தனி
தனி
ஒவ்வொரு தனியும்
ஒவ்வொரு தனிச்சந்தை
கூடுகையே டாலருக்குக் கேடு
யார் நானையும் யார் நானும்
என் நானை நானேயும்
அறியாமல் இருப்பதே
டாலருக்குச் சந்தை

***

3) ஒரு கொலையின் கதை

*

உழைப்பாலான எங்களுக்கு
கூழாங்கல் வாழ்வு
இருப்பின் சங்கடநிலை இல்லை
எதற்குமே மதிப்பில்லாத போது
எல்லாமே சரிதானே
என்றாள் தோழி
விதியின் போக்கை எதிர்க்கும் கணமும்
மதியின் போக்கில் மிதக்கும் கணமும்
ஒன்றேதான் என்றன
காலையில் முன்னே செல்லும் நிழலும்
மாலையில் பின்தொடரும் நிழலும்
படுக்கைக்கு இடையில் நட்சத்திரம் முளைத்தது
பூ மலர்வது போல அதற்க்கு பல் முளைத்தது
பூசனம் படிந்த கனவுகள் இல்லை
புழுவைத்த நம்பிக்கைகள் இல்லை
புளித்த துக்கங்களும் இல்லை
புனிதப் பெருமிதங்களும் இல்லை
விருப்பம் போல உழைப்பில் ஒளிர்ந்தோம்
சின்னஞ்சிறு துயரங்களின் கர்ப்ப இருளில்
கண்ணாமூச்சி ஆடினோம்
கால ஓட்டத்தில் சிறு வெடிப்பு
நூற்றி இருபது நாட்களாக
சந்தையில்லை உழைப்பில்லை உணவில்லை
அன்றைய உழைப்பை விற்று
அன்றைய உயிர் வளர்த்தவர்களுக்கு
பிழைக்க வழியில்லை
வேறு கதியும் திக்கும் தெரியவில்லை
யாருக்கும் யாருமே இல்லாத
சந்தைக் கூட்டத்தின் ஓலத்தில்
யார் யாரை நோவது யாரையெல்லாம் கொல்வது
நிதானத்து நின்று நியாயம் கேட்டால்
பட்டப்பகலில் கைது செய்கிறார்கள்
நடு வீதியில் நிற்க வைத்து படம் பிடிக்கிறார்கள்
தாயுக்கு முன் மகளையும்
தந்தைக்கு முன் மகனையும்
உயிரில் தீ மூட்டி  மூட்டி காய்கிறார்கள்
தினமும் சந்தையில் விற்க
ஒன்றுமில்லாதவர்கள்  சாகட்டுமென்கிற
டாலரின் தனிப்பெருங் கருணைக்கு வணங்கி
சேலையின் ஒரு முனையில் தந்தை
சேலையின் மறு முனையில் தாய்
சேலையின் நடுச்சுருக்கில் பால்பற்கள் மலர்ந்த
குட்டி நட்சத்திரம்.

சோழன் வாலறிவன்

(கூத்துப்பட்டறைக் கலைஞரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். “நடிப்பு இதழின் ஆசிரியர்”. நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here