ரமேஷ் ரக்சன் கதைகள் – 08
பையன பாத்தா கெட்டியா நிக்றவன் மாதிரிதான் இருக்கு… என்ன புடிச்சி போடுவுமா?”
“வேல செய்றவனா தான் தெரிது” சேத்து போடுங்க…
ஓட்டல் முதலாளிக்கு தங்குவேலை, சாப்பாடு கூடப் பிரச்சினையாய் தெரியவில்லை. அவன் முன்னமே சொன்ன காரணங்களும் நிராகரிக்க முடியாத அளவிற்கு இருந்தது. இல்லையெனில் கைச் செலவுக்கு என அப்போ அப்போ பணத்தைக் கொடுத்து “பையனை பிடிச்சி போடலாம்” என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கி தான் இருந்தது.
எந்த சூழ்நிலையில் பிழைப்பு தேடி வந்தான் என்பதும், அவன் அம்மாவை முன்னிறுத்தி வேலை கேட்பதாலும், அவனுக்கு வேலை போட்டுக் கொடுக்க வேண்டுமென்று மாஸ்டரை அழைத்தார் ஓட்டல் முதலாளி.
மணியைக் ‘கல்’லில் நிற்க வைக்கலாமென்றால், அவனுக்குக் கேஸ் அடுப்புகூட பற்ற வைக்கத் தெரியாது. சரி பாத்திரங்களைக் கழுவ விடலாமென்றால், ஏற்கனவே ஆள் இருப்பதால் அதுவும் முடியாது. அவனது முகபாவனைப் பாத்திரம் கழுவ அனுப்பும் அளவிற்கு இல்லை. இருந்தும் வேலை வேண்டுமென்று, காலையிலிருந்து கவனித்து மாலை வந்து கேட்பவனை எப்படித் துரத்திவிட முடியும்…?
ஓட்டலோடு மேன்சன் சேர்ந்தே இருப்பதால், அங்கேயே வேலை செய்யும் பசங்களுக்கென மொத்தமாய் ஒரு ரூம் ஒதுக்கப் பட்டிருந்தது. அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு. படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்தவன் என்பதால் விதிமுறைகள் எல்லாம் வரிசையாக அடுக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுவதும் “ம்” கொட்டுவதையும் தான் பதிலாய்க் கொடுத்துக் கொண்டிருந்தான் மணி..
“கடைக்கு மேல நம்ம பயலுவ கூடத் தங்கிக்கனும், ஊருகார பயலா வேற இருக்க…”
“காத்தோட்டமா தூங்கனும்னா மேன்சன் பயலுவ மேல மாடில தூங்குவானுவ
அங்கன படுத்துக்க”
“போட்டுக்கத் துணிமணிலாம் இருக்காடே?”
“கொண்டு வந்துருக்கேன் அண்ணாச்சி”
“சரி, ஒரு பழைய சட்ட டவுசர மாட்டிக்க.”
“ம்…”
“ஊரு மாதிரி எல (இலை) எல்லாம் இல்ல. எல்லாம் கவர் தான்”
அப்டியே தூக்கி போட்டுடலாம். மூஞ்ச சுழிக்காம வேலய பாக்கனும் புரிதாடே?”
“சரிணே…”
சொல்ல வேண்டியதில் முச்சமிருப்பதாய் தோன்றியதும், மீண்டும் அழைத்து “தண்ணி சிகரெட் பழக்கமிருக்கா?” என்று சம்பிரதாயக் கேள்வியை முன் வைத்தார். மணி தனக்கு அந்தப் பழக்கம் ஏதுமில்லை என்றான். ஒருபடி மேலே போய் “பாக்கு கூடப் போட மாட்டேன்” என்று சொல்லி முடித்தான்.
“வரும்போது எல்லாம் யோக்கியனா தான் வரான்”
தனக்குள் பேசியவர் மீண்டும் தொடர்ந்தார். மாடியில் குடிப்பவர்கள் பாக்கு போடுபவர்களென எல்லோரும் இருக்கிறார்கள் பார்த்து பழகிக்கொள் என்று சின்னப் பையனுக்கென்ற கரிசனத்தோடு அனுப்பி வைத்தார். கடையிலிருந்து ஒருவனின் மூலம் தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தான்.
ரெயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே வரும்வழியில் ஒரு ரூபாய் காயின் மூலம் ஊருக்கு வந்ததைச் சொல்லியதோடு சரி, இந்த மூன்று நாட்களில் இன்னும் பேசவேயில்லை. அப்படியே அம்மாவிற்கு பேசவேண்டுமென்றாலும் பக்கத்து வீட்டு அக்காவுக்கு போன் செய்து அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி தான் பேச வேண்டும்.
இதற்கு முன் முதன்முறையாய் அப்படித்தான் பேசியிருந்தான். தெருவிலேயே எதிர் எதிர் வீடு என்பதால் சன்னல் வழியாகவே போன் கொடுத்து விடுவாள் அந்த அக்கா. ஆகையால் போன் பேசுவதிலும் எந்தப் பிரச்சனையுமில்லை.
ஆனால் போன் வேண்டுமே?
மணி தங்கியிருக்கும் அந்த நீண்டத் தெருவில் ஒரு ரூபாய் காயின் பூத்துமில்லை, எஸ்.டி.டி கடையுமில்லை. ஒரு வழியாய் வேலைக்கு சேர்ந்த மறுநாளே, மாஸ்டர் கல்லில் ஏறும் முன் விசயத்தைச் சொல்லியதும் பேசச்சொல்லி தனது போனை கொடுத்தார். வேலைக்குச் சேர்ந்துவிட்டதையும் இடம் தோதுவாக இருப்பதாகவும் போன் பேசி துண்டித்தான்.
முதலாளிக்கு ஒரு நல்ல பழக்கமிருந்தது. சமையல் வேலை முடிந்ததுமே, பசி இருந்தால் சாப்பிட்டபின் வேலை பார்த்தால் போதும் என சொல்லிவிடுவார். ஏனெனில் பசியோடு யாரும் வேலை செய்யக்கூடாது என்பது அவர் கொள்கை. கடையடைக்கும் வேலையில் பசித்தால் சாப்பிடலாம் என்றதில் மணிக்கு கூடுதல் மகிழ்ச்சி.
நாட்கள் மிக வேகமாய் நகரத்துவங்கியிருந்தன. மேன்சனிலிருந்து சாப்பிட வருபவர்களை நன்கு அறிந்து வைத்திருந்தான். வெள்ளி என்றால் அவனுக்குக் கொண்டாட்டம் தான். அன்று ஓட்டலுக்கு விடுமுறை என்பதோடு மட்டுமல்லாது, வியாழன் இரவில் மொட்டை மாடியில் யார் கதை பேசிக்கொண்டிருந்தாலும் கூட இருந்து கதை கேட்பது வாடிக்கையாய் வைத்திருந்தான் மணி.
ஒருநாள்விட்டு ஒருநாள் தான் அம்மாவிடம் பேசுவதாய் முன்னமே அம்மாவிடம் தெரிவித்திருந்தான். ஆனாலும் அடிக்கடி மொபைல் கேட்பதுபோல் இருப்பதால் மொபைல் வாங்கலாமா என்ற யோசனையைத் தன்னுடன் வேலை செய்பவர்களிடம் தெரிவித்தான்.
“1000 ரூவாய்க்கே சைனா செட் இருக்கு. கேமரா, பாட்டு எல்லாம் ஏத்தி கேக்கலாம்” என்று சொல்லவும் தனக்கென முதல் ஆசை முளைவிட்டிருந்தது. பணம் அனுப்புவதை நிறுத்தவும் முடியாது அதேபோல் குறைக்கவும் முடியாது என்று மணிக்கு நன்று தெரியும்.
எப்போதும் போல் இல்லாமல் வியாழன் இரவு கசந்தது. அவர்களோடு சகஜமாய் சிரித்துப் பேச முடியவில்லை. எண்ணமெல்லாம் மொபைல் போனிலேயே இருந்தது. எப்போது தூங்கினான் என்று கூடத்தெரியாது. வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமாகவே விடிந்திருந்தது வெள்ளி.
கொஞ்சம் கூடுதலாய் உரிமையெடுத்துப் பழகியிருந்த 202 ஆம் நம்பெர் ரூம் அண்ணனை சந்திக்கச்சென்றான் மணி.
“என்னடா காலைலயே?”
“நீங்க நேத்து ராத்திரி இந்தத் துணி தோச்சி போட ஆள் கெடச்சா நல்லாருக்கும். ஒரு செட்டுக்கு 10 ருவா தரேனு சொல்லிட்டு இருந்திங்கள்ல?”
ஆமா அதுக்கென்னடா?
தான் மொபைல் வாங்க வேண்டிய சூழ்நிலையையும், ஒரு நாள்விட்டு ஒரு நாள் அம்மாவிடம் எப்படிப் பேசுகிறான் என்பதையும் சொல்லி முடித்தான். சின்னப் பையனென்ற தயக்கமிருந்தாலும் மணி வென்றிருந்தான் ஒரு வேண்டுகோளோடு.
“சட்ட பேண்ட நான் தோச்சிடுறேன். ஜட்டி பனியன மட்டும் நீங்க தோச்சிடுங்க”
சிரித்துக்கொண்டே சோப்பு வாங்க பணமும் துணியை ஊற வைக்க சர்ப் பொடிக்கான காசு, துவைப்பதற்கான காசும் முன்னமே கொடுத்தார். கூடவே அறை நண்பர்களும் சேர்ந்துகொண்டு துணி துவைக்கக் கேட்கவும் மணிக்கு 150 ரூபாய் வருமானம் உறுதியானது.
கடைக்குச் செல்லும் வழியிலேயே தான் வாங்கும் மொபைல் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன பாட்டெல்லாம் பதிய வேண்டும் 1000 ரூபாய் சேர எவ்வளவு துணி துவைக்க வேண்டும் என்று யோசனையோடு தெருவை மெதுவாய் அளந்து கொண்டிருந்தான். ஒரு மாதத்திற்குள் சேமித்துவிடலாமென்று ஒரு மணக்கணக்கினை போட்டுவிட்டு அறை வந்தான் மணி.
ஒரு மாதத்திற்குள் என்ற நம்பிக்கையெல்லாம், இவர்கள் போல இன்னும் சிலரை சேர்த்துக்கொண்டால் போதும். சாயங்கலாம் ரூமிற்கு வந்ததும் மேலும் சிலரை கேட்டு தனது மொபைல் வாங்கும் கனவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு அன்றைய பொழுதும் வெற்றிகரமாக முடிந்திருந்தது.
முதல் வாரமாய் வெள்ளி அன்று மட்டும் துணி துவைத்துக்கொடுத்து வந்த மணி மறு வாரத்திலிருந்து வியாழன் இரவு வெள்ளி இரவு என நான்காய் பிரித்து, ஒரு பொழுதிற்கு 10 செட் வீதம் 400 ரூபாய் சம்பாதித்திருந்தான் மணி. கனவுகள் தன் தேவை வீட்டுத் தேவையென எதையெல்லாம் வாங்க வேண்டுமென்றே துணி துவைக்க உக்காரும் போதெல்லாம் நுரையெல்லாம் கனவுகளின் பிம்பமாகிக்கொண்டிருந்தது.
“அப்றம் கைல பணம் சேர ஆரம்பிச்சாச்சி… அடுத்து என்ன? தண்ணி அடிச்சி பழக வேண்டிதான?”
முதன்முறையாக அந்த மொட்டை மாடியிலிருந்து மணியை நோக்கி இந்தக்கேள்வி எழுந்தது. பல்வேறு காரணங்கள் சொல்லி மறுத்தும் விடாதுபிடியாக வார்த்தை வலுக்கத்துவங்கியிருந்தது அந்த இரவு. எத்தனை சொல்லியும் நிற்காமல் பேச்சு வளர்ந்துகொண்டிருந்தது.
“ஓட்டல்ல எச்சித்தட்டு கழுவுற… எங்க பனியன் ஜட்டி தொவைக்க மாட்டியாடா”
“வேண்டாம்ணே அப்டிலாம் சொல்லாதிங்க”
“என்னடா பெரிய மயிரு கோவம்வேற வருமா உனக்கு”
“அசிங்கமா பேசாதிங்கணே”
“அடிங்க… ஓத்தா மொறைக்ற நீ”
“தேவ்டியாவுள்ள… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…”
சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்…
– ரமேஷ் ரக்சன்
(rameshrackson@yahoo.com)