செல்லம்மாவின் கீர்த்தி

0

ஜீவ கரிகாலன்

ஷானின் வெட்டாட்டத்திற்கு பின் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு நிறையவே அழுத்தம் கொடுத்திருக்கும். அதை எதிர்கொள்வது ஒருவித போதையும் கூட. இந்நாவலை அவர் எழுத எடுத்துக்கொண்ட சிரமங்கள், கள ஆய்வு, வாசிப்பு என உழைப்பைக் கொட்டி எழுதி முடித்திருக்கிறார். அது வெற்றியும் அடைந்திருக்கிறது. முதல் காரணமே இந்த நாவலின் கேன்வாஸ் குறித்த அவரது நம்பிக்கை. இரண்டு பாகமாய் வெளியிடும் திட்டம், ஆகவே நிறுத்தி நிதானமாக முதல் பாகத்தில் நிறைவான ஓட்டங்களை எடுத்துள்ளார்.

தமிழுக்கு டான் பிரவுன்கள் தேவை என்கிற கட்டுரை குறித்து பேசிக்கொண்ட நினைவுகள் வந்து போயின.

தங்கம் – தமிழில் பெரிதாக treasure hunt படங்கள் கூட வெளி வந்ததில்லை. சிவப்பு நிற வண்ணத்தை பாய்ச்சியபடி க்ளோசப் முகத்தால் மிரட்டும் வில்லன்கள் என்னதான் தங்கக்கட்டிகளைக் கடத்தினாலும், கதாநாயகியைக் கடத்தியதற்காகவோ, கதாநாயகனின் தந்தையை கொன்றதற்காகவோ தான் கொல்லப்படுவார். ஆனால் இந்திய மனதின் மிகப்பெரும் ஆசைகளில் ஒன்றாக தங்கம் எத்தனை நூறு ஆண்டுகளாய் இருந்து வருகிறது. தங்கத்திற்கான உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை இந்தியா எனச்சொல்கிறார்கள்.

ஒரு பதிப்பாளனாக மட்டுமல்லாது, வாசகனாகவும் வெகுஜன இலக்கியங்கள், வெகுஜன அறிவியல் நூல்கள் மீது பெரும் நம்பிக்கை உள்ளவன் என்கிற வகையில் இவ்வகையிலான நாவல்கள் இன்னும் கணிசமாக எழுதப்பட்டால் தமிழில் வாசிப்பதற்கான புதிய வாசகர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவு கூடும். கல்லூரி நாட்களில் சுஜாதாவை வாசிப்பது ஒரு தனி பிம்பத்தைக் கட்டமைப்பது போன்ற சூழல். மாதத்திற்கு ஒன்றிலிருந்து ஐந்து எழுதும் வகையறாக்களை இதில் சேர்த்துக்கொள்ள முடியாது, அதற்கு இணையாக தீவிர இலக்கியத்தில் எழுதித்தள்ளும் இயந்திரங்களும் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே இவற்றைச் சொல்கிறேன்.

பொன்னியை வாசிப்பது என்பது ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட்டில் அந்தி மாலையிலிருந்து இரவு வரை நண்பருடன் அமரும் வைன் டின்னர் போன்றது. ஒரு பாஸ்கெட் நிறைய நான்களை ஆர்டர் செய்துவிட்டு முழுமையாக போத்தலையும், ‘நான்’களை முழுமையாகத் தீர்க்கத் தேவைப்படும் கால அளவே.

உலகில் உள்ள அரசாங்க பெட்டகங்களில் இருந்தெல்லாம் தங்கங்களைக் கொள்ளை அடிக்கும் க்ரைம் காட்சிகள் ஒருபுறம், பொன்னி சுரங்கங்களை அமைப்பதற்கான முயற்சியும், இடர்களும் என ஒருபுறமும், மற்றொரு புறத்தில் பொன்னியைக் கொல்வதற்கான முயற்சியும் பொன்னியை வேவு பார்க்கும் முயற்சியும்.  இவை எல்லாமும் இரணிய சேனை என்கிற சோழர் காலத்திலிருந்து தங்கப்புதையலை பாதுகாக்கும் நாவலின் பிரதான பாத்திரங்களை ஒன்றிணைக்கும் ஃப்ளாஷ்பேக் இந்நாவலின் பெரும்பலம்.

நாவலின் ஆன்மா கோலார் தங்க வயல் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம், ஷானின் உழைப்பும் எழுத்துத்திறனும் அதை கச்சிதமாகக் காட்சிப்படுத்தியது. கோலாரில் தங்க உற்பத்தி குறைந்து வந்த காலக்கட்டம் அது, கிட்டத்தட்ட 8000 டன்கள் வரை சுரண்டி முடிக்கின்ற காலத்தில் explorationக்காக வரும் ஜேம்ஸ் துரையின் பின்னணியிலிருந்து தொடங்கும் கதை, அவரது காதல், சூழ்ச்சி என்கிற வெவ்வேறு முனைகளில் இருந்து ஒரு மையத்தை நோக்கி கதை நகர்கிறது. கதையின் மையம் என்னும் கண்டுபிடிக்கப்படாத தங்கப்புதையல்கள் குறித்த ரகசியம்.

தற்காலத்தில் நடக்கும் கதையின் மையமும் இரணிய சேனை பாதுகாத்து வரும் அந்த ரகசியம் தான். கொலை முயற்சி, சூது, தங்கச் சுரங்கம் பற்றிய தகவலகள், ஆளுமை மிக்க கதாபாத்திரங்கள், காதல் காட்சி என எல்லா விதத்திலும் திறம்பட கையாண்டிருக்கும் ஷான் ஆச்சரியப்படுத்திய ஒரு விசயம் அரசியல்.

பொதுவாக liberated எண்ணம் கொண்ட ஷானின் கட்டுரைகள் முகநூல் பதிவுகள் அறிவியல் மற்றும் மானுடத்தின் மேன்மைகளுக்கான அறம் என்று அவர் நம்புகிற சுதந்திர மனநிலையில், பிரதேச உணர்வு, இன உணர்வுகளைக் கடந்தது. நாவலின் பிரதான பாத்திரமான பொன்னியை (ஸ்பாய்லர் அலெர்ட்***) உலகமே வியக்கும் குற்றங்களை செய்தும் அவற்றை நியாயப்படுத்தி கோலார் தங்க வயலை மீண்டும் செயல்பட வைக்கும் செலுத்து விசை(driving force)ஒரு இன உணர்வை, பிரதேசத்திற்கான உணர்வைக் கொண்டது இதையே கொஞ்சம் Zoom Out செய்து பார்த்தால் தேசியம் அல்லது தேசபக்தி என்றும் கருதலாம். ஆனால் அவற்றின் சுத்தத்தன்மை குறித்த எந்த ஐயப்பாடும் எவர் ஒருவருக்கும் வந்துவிடாது, கோலார் தங்க வயலின் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு இனத்து மக்கள் மீது மட்டும் தழும்பும், விரக்தியுமே எஞ்சியிருப்பதை தன் கள ஆய்வு மற்றும் வாசிப்பின் வழி அவர் உறுதி செய்துள்ளதே. இப்படியான பாவங்களை சுமந்து நிற்கின்ற ஒரு நிலத்தின் மீது மக்களுக்கு இருக்கின்ற பற்றும் உணர்வும் தங்கத்தை விட ஒருபடி மேலானது என்பதை பிரதான கதாப்பாத்திரங்களான பொன்னி, பொன்னியின் சகோதரர்கள் மற்றும் அவர்களைக் கொல்ல திட்டமிடுபவர்கள் இருவரது நோக்கிலும் இருப்பதை ஆசிரியர் சித்திரப்படுத்தியிருப்பது வாசிப்பை உணர்வுபூர்வமாக மாற்றி இருக்கிறது.

எல்லோருமே மெச்சிய கதாபாத்திரம் செல்லம்மா, பெண்களை மதிப்புடன் விரும்புகிற கலைஞன் தனித்த வெற்றி பெறுவான் என்பது எனது நம்பிக்கை. ஐரோப்பாவின் கடற்கரை ஒன்றில் நடந்துவரும் பொன்னியாக இருக்கட்டும், பழங்குடியின செல்லம்மாவாக இருக்கட்டும் பாத்திரப்படைப்பில் கம்பீரமாக சித்தரித்ததும் இந்நாவலின் வெற்றிக்கு ஒரு காரணம். துரையின் கடிதத்தை சென்னைக்கு அஞ்சல் செய்யக் கிளம்பும் அவரது உதவியாளர் பழனி வீட்டை விட்டுக் கடந்து சென்றதும், சைக்கிளை விட்டு இறங்கி அக்கடிதத்தை வாசிக்க ஆரம்பித்த இடத்தில் இருந்து பழனியின் கதாபாத்திரம் தனி ஆவர்த்தனம் நடத்துகிறது.  கிட்டத்தட்ட 20 பாத்திரங்களை அவர்தம் பின்னணிக் கதையோடு மிகச்சரியான அளவிற்கு தைக்கப்பட்டுள்ள இப்புனைவு எல்லா தரப்பு வாசகனுக்கும் பிடித்த நூலாக இதைக்கருத வைக்கும். இதில் தங்கச் சுரங்கங்கள் பற்றி ஷான் தரும் தகவல்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளது. மிக பிரம்மாணடமான நாவலாக இதை மாற்ற வைத்ததும் இதுவே. ஆப்பிரிக்காவில் செயற்படாமல் இருக்கின்ற தங்கச்சுரங்கம், கோஸ்ட் மைனர்ஸ் என நம்மை ஒரேமூச்சில் வாசிக்க வைக்க அவர் நிறையவே உழைத்திருக்கிறார். ஆய்வு, உழைப்பு எல்லாமே கைகூடியும் வந்திருக்கிறது.

காட்சிப்பூர்வமாக என்றால் முழுமையாகத் திரைப்படம் என்று சொல்ல முடியாது, வெட்டாட்டத்திலும் இவ்வகையிலான விளக்கம் தான். ஒரு திரைக்கதை ஆசிரியராக அவருக்கு இது மிக நன்றாகத் தெரிந்திருக்கும். இது ஒரு நல்ல கிராஃபிக் நாவல் போன்ற என்கிற உவமை சரியானதாக இருக்கும். சித்திரங்கள், வசனங்கள், வடிவமைப்பு என இவையெல்லாம் ஷானின் ஆக்கம் இதை motion, animate  செய்து உள்வாங்கிக் கொள்வது

வாசகனின் கற்பனை. அந்த இடைவெளியை விடத் தெரிந்த வெற்றிகரமான எழுத்தாளன் ஷான். (பல இலக்கிய க்ளைம்களில் இந்த வித்தை தெரியாமல் தாங்கள் பார்த்த அயல் தேசத்து திரைப்படம் பல்லிளிக்கும் என்பதைக் கனிவுடன் கூறிக்கொண்டு)

இப்படியான ஒரு நாவலுக்கு தேவைப்படும் உழைப்பு ஒரு எழுத்தாளனுக்கே பெரும் transitionஐ கொடுத்திருக்கும் (நாவல் எழுதத் தொடங்கும் முன்னரும் பின்னருமாக) என்கிற ஒரு எண்ணமும் வந்துபோனது. மில்லிமீட்டர் அளவில் லாஜிக் இடித்தல்கள் இருந்தாலும் கொசுவைப்போல் அடித்து விட்டு வாசிக்கலாம். நாவலின் மிகப்பெரும் பலமாக இருப்பதும் அதேபோல் படைப்பின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது நிலம் குறித்த மக்களுக்கான அசலான உணர்வும், வேட்கையும் தான். ஏனெனில் தங்கத்திற்காக எத்தனை ஆசைப்படும் இம்மக்களுக்கு நிலம் தான் முதல் கனவு.

பொன்னி தரமான ஒரு புனைவு.

ஷான்

வாசல் படைப்பகம், ஈரோடு

REVIEW OVERVIEW
Previous article4 . நாயகன் என்ற கண்
Next articleவைரஸ் குறுங்கதைகள்
%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf ஜீவ கரிகாலன் ஷானின் வெட்டாட்டத்திற்கு பின் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு நிறையவே அழுத்தம் கொடுத்திருக்கும். அதை எதிர்கொள்வது ஒருவித போதையும் கூட. இந்நாவலை அவர் எழுத எடுத்துக்கொண்ட சிரமங்கள், கள ஆய்வு, வாசிப்பு என உழைப்பைக் கொட்டி எழுதி முடித்திருக்கிறார். அது வெற்றியும் அடைந்திருக்கிறது. முதல் காரணமே இந்த நாவலின் கேன்வாஸ் குறித்த அவரது நம்பிக்கை. இரண்டு பாகமாய் வெளியிடும் திட்டம், ஆகவே...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here