சுவர் மாடன்

1

சுஷில் குமார்

சுசீலாத்தைக்கு கன்னிக்கு வைத்துக் கொடுக்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பக்கத்து கோவில் ஒலிபெருக்கியில் வில்லுப்பாட்டு தொடங்கியிருந்தது.

“பெண்ணே பகவதி, அறைக்குள்ளே இருந்தாலும்.. அறைக்குள்ளே இருந்தாலும்….
..ஆமம்மா…
அரணறியா மாயமுண்டோ?
..ஆமம்மா…
சிமிழுக்குள்ளே இருந்தாலும்.. சிவனறியா மாயமுண்டோ?
என்று அந்த பகவானும்.. என்று அந்த பகவானும்..
இன்னுமென்ன சொல்லுகிறார்?…”

**

“ஏல நண்டா, அழுக்குக் கால கொண்டு வீட்டுக்குள்ள வராத..ல.. பொறவாசல்ல போயி காலக் கழுவு.. தொடச்சி தொடச்சி முதுகு ஒடயி எனக்கு.”

அம்மா சொல்வதைப் பொருட்படுத்தாமல் சூர்யா அழுக்குக் காலோடு வீட்டிற்குள் ஓடினான். சூர்யா என் அண்ணன் மகன். மற்ற நாட்களென்றால் கூட அம்மா பொறுத்துக் கொள்வார், ஆனால் புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று எங்கள் வீடு பரிசுத்தமான கோவிலாகவே மாறும். வீடு துடைக்கும் துணியை எடுத்துக் கொண்டு வந்து மறுபடியும் வீட்டைத் துடைத்தார்.

“இந்தப் பயலோட… என்னா பாடு படுத்துகாம்மா…தாத்தா வரட்டும்.. சொல்லிக் கொடுக்கேன் பாரு… பெல்ட்டால ரெண்டு வாங்குனா தான் நீ செரிப்பட்டு வருவ…” என்று எரிச்சலில் கத்தினார் அம்மா.

“தாத்தா என்ன அடிக்க மாட்டாலே.. ஐ..ஐ..” என்று வலிச்சம் காட்டிக்கொண்டே புறவாசலுக்கு கால் கழுவப் போனான்.

“மக்கா..தண்ணில வெளயாடாத மக்கா.. தடுமம் புடிச்சிராம.. நல்ல பிள்ளேலா மக்கா.. ஆச்சி சொன்னா கேப்பேல்லா… செனம் வா.. ஆச்சிக்கூட வீட்ட ஒதுங்க வச்சித்தா மக்கா…”

“நா தண்ணில வெளாடவேல்ல ஆச்சீ.. சும்மா தா இருக்கே…”

“தங்கக் கொடம்லா.. வா மக்கா… சோக்கேடு வந்துராம மக்கா…” அம்மாவின் கண் கலங்க ஆரம்பித்தது.

சூர்யாவிற்கு கடந்த இரண்டு மாதங்களாக சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருக்கிறது. அடிக்கடி வலி பொறுக்காமல் துடிதுடிக்கிறான். வீட்டு வைத்தியங்கள் எதுவும் பலனளிக்காததால் சென்ற வாரம் மத்தியாஸ் வார்டில் சென்று பெரிய டாக்டரைப் பார்த்தோம். ஸ்கேன் எடுக்கச் சொன்னார்.

ஸ்கேன் முடிவைப் பார்த்த டாக்டர் அதிர்ச்சியாகி கேட்டார், ”பயலுக்கு இதுக்கு முன்னாடி ஒண்ணும் பிரச்சன வரலியா?”

அண்ணனும் மைனியும் குழப்பத்தோடு இல்லையெனத் தலையாட்டினர்.

“ம்ம்..ஒண்ணும் பெரிய பிரச்சன இல்ல.. பையன் பொறவிலயே ஒரே ஒரு கிட்னியோட பொறந்துருக்கான்.. ” என்று சொல்லி பரிசோதனை முடிவுகளைத் தொடர்ந்து பார்த்தார்.

மைனி அதற்குள் அழ ஆரம்பித்தாள். அண்ணன் அவளை சமாதானப்படுத்த, டாக்டர், “எம்மோ, இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லம்மோ.. நூறுல ஒண்ணு, ஆயிரத்துல ஒண்ணு இப்டி வரும்…”

“டாக்டர்.. எதாம் ரிஸ்க் இருக்கா டாக்டர்?” என்று கவலையோடு கேட்டான் அண்ணன்.

“ஒண்ணுல்லப்போ.. நா தா சொல்லுகேம்லா… நெறய ஆளுகோ நாரோயில்லயே உண்டும்.. எல்லாம் நல்லாதா இருக்கா.. இந்த மாறி இன்ஃபெக்சன் வராம சுத்தமா பாத்துக்கோங்க.”

எங்கள் குடும்பத்தில் யாராலும் அதை நம்பவே முடியவில்லை. என்னதான் செய்ய முடியும்? இருப்பதை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதைத் தவிர.

அப்பா, “செரி.. செரி.. பாப்பம்.. இப்ப என்ன செய்ய?.. கொஞ்சம் கவனமா இருக்க வேண்டியதான்..”என்றார்.

அம்மாவை சமாதானப்படுத்த முடியவில்லை. “அருமாந்த பிள்ளல்லா.. எவ கண்ணு பட்டோ தெரில…”

“நீ சும்மாக்கெட.. கண்ணு மயிருன்னு..”

“ஒங்க வேலயப் பாருங்கோ.. நா படிச்சிப் படிச்சி சொன்னேன்லா.. அந்தச் சொவர எழுப்பிக் கட்டுவோம்னு.. கேக்க மாட்டுக்கியோ.. எம் புள்ளக்கி இப்டி ஆயிட்ட..சாமி காரியம்லா.. எல்லாத்துலயும் வீம்பு காட்டுனா முடியுமா?…”

“வாய மூடிக்கிட்டு கெட.. மனுசன டென்சன் ஆக்கப்புடாது.. பொறவு வேற மாறி ஆயிரும்..”

“ஒங்களுக்கு சாமி வேண்டான்னா நீங்க சும்மா இரிங்கோ.. சாமி கொண்டாடி சொன்னதுலேந்து மனசே செரியில்ல.. ஒரே கெட்ட சொப்பனம்.. நீங்க கெட்டாட்டா மூத்தவன் கெட்டுவான்..லே, நீ கொத்தமார கூட்டிட்டு வா..ல… பத்தாயிரமோ.. இருவதாயிரமோ.. என் செயின வச்சி செய்வோம்..” என்று அண்ணனைப் பார்த்து சொன்னார் அம்மா.

அப்பாவின் கோபம் உச்சத்தை அடையப் போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. கண்கள் சிவக்க, “செறுக்கிவுள்ள நீ வாய மூடுட்டி.. சொவரு மயிரு.. எல்லாத்தயும் தூக்கிப் போட்டுக் கொளுத்திருவேன்.. எப்பவும் ஒரு மாறி இருக்காது பாத்துக்கோ..” என்று கத்திவிட்டு வெளியே சென்றார். அண்ணன் சென்று அம்மாவை சமாதானப் படுத்தினான்.

அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டால் எங்கள் வீடு வேறு ஒரு வீடாக மாறிவிடும். இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள், மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பார்கள். நாங்கள் எல்லோருமே அப்பா இல்லாதபோது ஒரு மாதிரியும் அவர் இருக்கும்போது வேறு மாதிரியும் தான் இருப்போம். ஒரு வார்த்தை கூட பெரிய விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.

**

எங்கள் வீட்டு சுற்றுச் சுவர் நான்கு அடி உயரமிருக்கும். மேற்கு நோக்கிய பிரதான வாசல். வடக்குப் பார்த்த வீடு. வீட்டின் கிழக்குச் சுவரைத் தொட்டடுத்து சக்தி வாய்ந்த அம்மன் கோவில். ஒரு குடும்ப சமூகத்தினரால் நடத்தப்படும் கோவில். மூல தெய்வங்களாக காட்டாளம்மன், பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன் என மூன்று பெண் தெய்வங்கள் உட்கார்ந்த நிலையில் சிலைகளாக நடுக்கட்டிடத்தில் கம்பீரமாக வீற்றிருப்பார்கள். சுற்றிலும் நூற்றியெட்டு சிறு தெய்வங்கள். சிறு தெய்வங்கள் என்றால் வரிசையாக நடப்பட்ட சிறு சிறு கருங்கற்கள் தான். அவை வெள்ளையடிக்கப் பட்டிருக்கும். சிலவற்றிற்கு தலைப் பகுதியில் காவி அடிக்கப்பட்டிருக்கும்.

**

சிறு தெய்வக் கற்களுக்கு இடையில் ஆளுயர கரிய சிலை ஒன்று நிற்கும். கோவத்தில் வெறித்துப் பார்க்கும் கண்களோடு, வேட்டைக்குப் போகும் தோற்றத்தில் அது நிற்பதைப் பார்க்கும் எவருக்கும் ஒரு நொடி நெஞ்சு படபடக்கும். அந்த சுடலை மாடன் சிலைக்கு நேர் எதிராக எங்கள் வீட்டுப்பிரதான அறையின் சன்னல் இருந்தது.

**

செவ்வாய் வெள்ளி என்றால் அந்த ஊரே அங்கு கூடி விடும்.நண்பகலில் உச்சிகாலப் பூஜை, மாலையில் அந்திகாலப் பூஜை. பூஜைக்குத் தேவையான ஒத்தாசைகளைச் செய்து கொடுக்க என் அம்மாவும் மைனியும் செல்வார்கள். கோவிலுக்குத் தேவையான தண்ணீர் எங்கள் புறவாசல் தண்ணீர்க் குழாயில் இருந்து ஒரு ஹோஸ் குழாய் போட்டு எடுப்பார்கள். எல்லா சாமி சிலைகளையும் சுத்தமாகக் கழுவி சந்தனம், களபம் தெளித்துப் பூவைத்து முடித்து, பின் படையலுக்குத் தேவையான நைவேத்தியப் பண்டங்களைத் தயாரிப்பார்கள். காலையிலேயே சுடலை மாடன் கதை வில்லுப் பாட்டாக ஒலிபெருக்கியில் ஆரம்பிக்கும். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை என்றாலும் முழுக் கதையையும் கேட்பது ஒரு தனி சுவாரஸ்யம்.

**

அந்தப் பாட்டு அந்த ஊரில் எல்லோருக்கும் மனப்பாடம். மிக பயங்கரமான ஒரு பெண் கவர்தல் மற்றும் பழிவாங்கல் கதை. தம் பொக்கிஷங்களைக் கொள்ளையிட்டுச் சென்ற மந்திரவாதிப் பெரும்புலையனான காளிப்புலையனின் கன்னிப்பெண் மாவிசக்கியை சபதமிட்டு மாயாண்டி சுடலைமாடன் எறும்பு உருவத்தில் வந்து கற்பழித்துச் சென்ற கதை.

**

நான் அந்த கோவிலுக்குப் போவது சாமியாட்டம் பார்க்கத்தான். பாக்கியலட்சுமி அக்கா மீது அந்த மூன்று பிரதான தெய்வங்களும் ஒவ்வொன்றாக இறங்கி வந்து ஆட, மக்கள் எல்லாரும் பயபக்தியோடு நிற்பார்கள்.

நாக்கைத் துருத்திக் கொண்டு ‘ஏய்..ஏய்’ என சத்தமிட்டுக் கையால் பல சைகைகள் செய்வார். பூசாரி ஓடிப் போய் ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து கொடுப்பார். எலுமிச்சை, மூங்கில் பிரம்பு, திருநீர்க் கொப்பரை, பெரிய அரிவாள், பூ மாலை, பூச்சரம். படையல் வைத்த பொங்கல் சோறு அல்லது அரவணை.

ஆட்டம் உச்சம் பெற்று அக்கா கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் தள்ளாடி நடப்பார். அப்போது சுற்றியுள்ள நபர்களில் குறிப்பிட்ட சிலரைப் பார்த்து கையசைத்துக் கூப்பிடுவார். பயபக்தியோடு அவர் முன்னால் சென்று நின்றால் சிலரை ஏற இறங்கப் பார்த்து திருநீறு பூசி விட்டு அனுப்புவார். சிலருக்கு ஒரு கைப்பிடி சுடு பொங்கலையோ அல்லது வாழைப்பழத்தையோ கையில் திணிப்பார். பெண்களுக்கு தன் மாலையிலிருந்து பூக்களைப் பிடுங்கிக் கொடுப்பார்.

ஒருசிலரிடம் மட்டும் அக்கா கேட்பார், “என்ன? சொன்னது ஞாபகம் இல்லயா டே? என்கிட்ட வெளயாடாத கேட்டியா?”

அவர்களில் சிலர் உறைந்து போய் நிற்பார்கள். தவறு செய்து மாட்டிக்கொண்டது போல. சிலர் அக்காவை நேருக்கு நேர் பார்த்து தைரியமாகப் பேசுவது ஆச்சரியமாக இருக்கும். அது சாமிக்கும் பக்தனுக்குமான ஓர் ஒப்பந்தம்.

என் அம்மா அம்மன் ஆடுவதைக் கண்டுகொள்ளாதது போல நிற்பார். ஆனால், பக்கத்தில் பயங்கரமாக கத்திக்கொண்டு ஆட ஆரம்பிக்கும் சுடலைமாட சாமியையே பார்த்துக் கொண்டிருப்பார். ராஜேந்திரன் மாமா பகல் வேளைகளில் மொடாக் குடிகாரர், ஒரு மாதிரியான ரௌடியும் கூட. ஆனால், பூஜை நேரங்களில் அவர் வேறு ஒரு உருவமாக மாறி நிற்பார். ஆராசனை வந்து சுடலையாக அவர் துள்ளிப் பாய்வதைக் கண்டு குழந்தைகள், பெண்களெல்லாம் கண்களை மூடிக் கொள்வார்கள். ஆனால், என் அம்மா அவரை பிரமித்துப் பார்த்து நிற்பார்.

ஒவ்வொரு முறை சுடலை ஆடி வரும்போதும் முதலாவதாக என் அம்மாவை தான் அழைத்துப் பிரசாதம் குடுப்பார். கூட்டத்தில் அம்மா எங்கு இருந்தாலும் அவர் சரியாகக் கண்டுபிடித்துக் கையை அசைத்துக் கூப்பிடுவார். அம்மா துளியும் பயம் இல்லாமல் முன்னால் செல்வார். ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் அவர் ஏதேனும் குறி சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களிடம் செல்வார்.

அப்படி ஒரு வெள்ளிக் கிழமை அம்மாவை அழைத்த சுடலை கொஞ்ச நேரம் பேசாமல் அவரது சிலையை சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார். அம்மா கையெடுத்து அந்த சிலையைக் கும்பிட்டு நின்றார். ஒன்றும் புரியாமல், “நீங்கதா பிள்ளேல நல்லாக்கி விடணும்..” என்றார் அம்மா.

சுடலை தலையை இல்லை என்பதுபோல அசைத்து மீண்டும் அவரது சிலையைக் காட்டி பின் எங்கள் வீட்டைக் காட்டினார்.

“ஓ.. ஓ.. ஊ.. எம் மக்களே.. சொவர ஏத்திக் கெட்டு.. சொவர ஏத்திக் கெட்டு..”

அம்மா குழப்பமாக, “மனசுலாவல..என்ன செய்யணும்…” என்று கேட்டார்.

“ஓ..ஊ…மக்க வீட்டுச் சொவர ஏத்திக் கெட்டுன்னேன்.. எம் பார்வைல ஒரு கன்னி இருக்கா.. மாத்து.. மாத்து…” அவரது கண்கள் செக்கச்செவேலென தீப்பிழம்பாக இருந்தன.

அம்மாவுக்கு ஏதோ புரிவதாகத் தெரிந்தது. “அது.. அது எங்க மைனிலா.. இவ்வோ அக்கா.. அவள வச்சுதா கும்புடுகோம்…”

“மாத்து.. எம் பார்வ படுது.. மாத்து.. மறிச்சுப் பேசாத.. ம்ம்ம்.. நல்லாக்கி வப்பேன்.. மாத்து..” என்று சொல்லி நகர்ந்தார் சுடலை.. அம்மாவிடம் எப்போதுமே இந்த மாதிரி உரையாடலில் அவர் எதாவது செய்யச் சொல்லிக் கேட்பார். பாயசம், வேட்டைக்கான சல்லடம், வல்லயம், வாழைக் குலை, அல்லது சில சமயம் ஒரு முழு படையலைக் கேட்பார். அம்மாவும் ஒத்துக்கொண்டு பதிலுக்கு ஒரு கோரிக்கையை வைப்பார். அப்படி அண்ணனின் திருமணத்திற்காக அம்மா வாங்கி வைத்த வெள்ளிக் கண்கள் தான் சிறப்புக்கொடை நாட்களில் அவரை அலங்கரிக்கும்.

“சுடல பார்வைல நேரா நம்ம சாமி படம்லாம் இருக்கு.. மைனி படமும் இருக்குல்லா.. சொடலக்கி பார்வைல கன்னிய வைக்கக் கூடாதாம்ப்பா.. அதான் காம்பவுண்ட் சொவர ஒயத்தி கட்டச் சொல்லுகாரு.. செலவப் பாக்காதீங்கப்பா.” அம்மா சொல்லி முடித்து அப்பாவைப் பார்த்தார்.

அப்பாவின் முகம் மாறுவது எங்களுக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியது. “அப்டி முட்டாள்தனமால்லாம் பண்ண முடியாது.. சாமி சாமின்னு வேற வேலையில்ல ஒனக்கு.. ஒனக்கு சாப்பாடு சொடலயா போடுகாரு? வேற வேலையத்துத் திரியானுகோ”

சாமி விசயத்தில் மட்டும்தான் அப்பா அப்படி. ஆனால் சுசீலா அத்தையை மனதில் அவர் சாமிக்கும் மேல்தான் வைத்திருக்கிறார். அத்தையை நாங்கள் யாரும் பார்த்ததில்லை, அம்மா கூட பார்த்ததில்லை. அப்பாவும் அத்தையும் இரட்டைப் பிள்ளைகள். ஊரே கண் போடும் அளவுக்கு இருவரும் எப்போதும் சேர்ந்தேதான் இருப்பார்களாம். அவ்வளவு பாசம். நல்ல வசதியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீரழிஞ்ச குடும்பம். அப்பாவின் சிறு வயதிலேயே தாத்தா இறந்து விட, குடும்பப் பொறுப்பேற்க படிப்பை விட்டுவிட்டு  அப்பா பல வேலைகள் செய்திருக்கிறார். அப்பா அத்தையுடன் சேர்த்து ஏழு பிள்ளைகள். எல்லாரையும் நிமர்ந்து வரச் செய்து, அப்பா ஒரு கப்பலில் கிடைத்த வேலைக்காக பாம்பேவிற்குச் செல்லப் புறப்படவிருந்த சமயத்தில் அத்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆயிருக்கிறது. ஒரு வாரம் அரசாங்க ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்திருக்கிறார்கள். திடீரென ஒரு நாள் மூச்சுத்திணறி அப்பாவின் மடியிலேயே அத்தையின் உயிர் பிரிந்திருக்கிறது.

இன்று எங்கள் வீட்டில் உள்ள கருப்பு வெள்ளைப் புகைப்படம் தான் எங்களுக்கு அத்தை. அவர் பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார் அப்பா. சுசீலா சுசில் ஆகிப் போனது. ஒவ்வொரு வருடமும் அத்தைக்கு கன்னிக்கு வைத்துக் கொடுப்பது எங்கள் வீட்டில் மிக முக்கியமான சடங்கு. அத்தை படத்திற்கு மாலை போட்டு, பொட்டு வைத்து, தாம்பாளத்தில் ஒரு பட்டுப்புடவை, ஜாக்கெட் துணி, வளையல்கள், சாந்துப்பொட்டு, கண் மை, முகம் பார்க்கும் கண்ணாடி, நெயில் பாலீஷ்,மல்லிகைப் பூ போன்றவற்றை வைத்து, தலை வாழை இலையில் உப்பு, நேந்திரங்காய் வத்தல், வாழைக்காய் துவட்டல், தயிர் வெள்ளரிக்காய் பச்சடி, இஞ்சிப் பச்சடி, நார்த்தங்காய் பச்சடி, அவியல், சேனைக் கிழங்கு எரிசேரி, சாதம், பருப்பு, சாம்பார், ரசம், புளிசேரி, மோர், அடை பாயாசம், பால் பாயாசம், பப்படம், பழம், போளி எல்லாம் படைத்துக் கும்பிடுவது வழக்கம்.

அன்று முழுதும் அப்பா யாரிடமும் பேச மாட்டார். மதியம் படையல் முடிந்து குடும்பமாக சாப்பிட்டு, பின் மாலை உளுந்தவடை, அரிசி முறுக்கு, நெய்யப்பம் செய்து மீண்டும் ஒரு படையல். சாயங்கால பூஜை முடிந்து எல்லோரும் பயபக்தியோடு காத்திருப்போம். ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் பதற்றம் ஏறிக்கொண்டே போகும். சரியாக ஏழு மணிக்கு அப்பாவின் முகம் பிரகாசமாகும். அம்மா கண்களை மூடி எதையோ வேண்டிக் கொண்டிருப்பார்.

சொல்லி வைத்தாற்போல் அத்தையின் படத்தின் மீது வந்து அமரும் அந்த மின்மினிப் பூச்சியைப் பார்த்து நானும் வணங்கி நிற்பேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, இந்நிகழ்வு ஒரு வருடம் கூட தவறியதில்லை. மற்ற எந்த நாட்களிலும் எங்கள் வீட்டில் அப்படி நிகழ்வதில்லை. வளர்ந்ததும் இது என்ன விதமான நம்பிக்கை என்றெல்லாம் நான் குழப்பிக்கொள்ளவில்லை. அத்தை வருவார், ஆசீர்வாதம் செய்து செல்வார் என்றுதான் நானும் நம்பினேன். இன்றும் நம்புகிறேன். சாமியை நம்பாத அப்பாவும் அதை உறுதியாக நம்புகிறார்.

அண்ணனும் மைனியும் வீட்டில் நுழையும் போது அம்மா சூர்யாவின் உடலைத் துடைத்து விட்டுக்கொண்டிருந்தார். சூர்யா அம்மாவிடம், “ஆச்சி, அப்பாட்ட சொல்லாத..” என்று சொல்லி அம்மாவிடம் செல்லமாக நடித்தான். அம்மா அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமையல் வேலையைக் கவனிக்கச் சென்றார். மைனியும் சென்று சேர்ந்து கொண்டாள்.

“மலையாளம் தன்னதிலே.. அங்கே தன்னதிலே..
மாந்த்ரவாதி பெரும்புலையன்..
இருநூறுப் புலையனுக்கும்.. அறுநூறுப் புலையனுக்கும்..
எஜமான் காளிப் பெரும்புலையன்.. அந்த எஜமான் காளிப் பெரும்புலையன்.. ”

சூர்யா சன்னதம் வந்தது போல நாக்கைத் துருத்திக் கொண்டு ஆட ஆரம்பித்தான். அம்மாவும் மைனியும் “வந்தாச்சா.. வாங்க.. வாங்க.. இன்னும் சோறு பொங்கலயே சொடல..”

“அம்மி வெட்டிப் பறக்க செய்வான்.. அம்மி வெட்டிப் பறக்கச் செய்வான்..
ஐநூற்றுக் காத வழி.. ஐநூற்றுக் காத வழி..
சுளவு வெட்டிப் பறக்கச் செய்வான்.. அப்டி.. சொளவு வெட்டிப் பறக்கச் செய்வான்..
தொண்ணூற்றுக் காத வழி..”

திருநீற்றை எடுத்து வந்து அம்மா, மைனி இருவருக்கும் ஆடிக்கொண்டே பூசி விட்டான் சூர்யா. இருவரும் பயந்துபோய் நிற்பதாக நடித்தார்கள்.  

“எட்டி, நீ மாமாட்ட சொல்லு இன்னிக்கி.. பிள்ளக்கி இப்டி ஆனது ஒரு மாறி இருக்கு.. ஒறக்கமே இல்லட்டி..”

“நா சொல்ல மாட்டம்ப்பா..மாமா மூஞ்சியப் பாத்தாலே எனக்கு ஒரு மாறி ஆயிரும்.. அவங்கட்ட சொல்லுங்கத்த.. அவங்க சொன்னாதா மாமா கேப்பா…”

“அது செரி வராதுட்டி.. அப்பாவும் புள்ளயும் பொறவு சண்ட போடதுக்கா? அன்னிக்கி அவன் சொன்னதுக்கே ராத்திரி அவ்வோ ஒறங்காம வெப்ராளப் பட்டா..”

“அப்போ கொழுந்தன்ட்ட சொல்லி பேசச் சொல்லுங்கத்த…”

“ஆமா, நல்ல ஆளப் பாத்த.. அவன் அவ்வொளுக்கு மேல.. ஒண்ணுன்னா ஒம்போதும்பான்.. சத்தமா பேசாத.. முன்னாடிதான் இருக்கான்..”

திடீரென்று மைனி ‘ஆ’வென கத்தினாள். காய்கறி வெட்டும்போது கை விரலில் பட்டு ஒரே ரத்தம். காப்பிப் பொடி வைத்துக் கட்டி விட்டோம். அவள் போய் படுத்துக் கொண்டாள். அம்மாவின் முகம் இன்னும் இருண்டு போனது. அண்ணனிடம் போய் மைனி அந்தச் சுவர் விசயமாகப் பேசுவது கேட்டது.

எண்ணி எட்டு நாளைக்குள்ளே.. நாளைக்குள்ளே..
திட்டமுடன் கற்பழிப்பேன்..
எண்ணி எட்டு நாளைக்குள்ளே.. நாளைக்குள்ளே..
சத்தியமாய் கற்பழிப்பேன்..”

வெளியே சென்றிருந்த அப்பா உள்ளே நுழையும்போது அடுப்பில் ஏதோ தீயும் வாடை அடித்தது. நான் ஓடிப்போய் சமையலறையில் பார்க்க, அம்மா சுவர் ஓரமாக கண்களை மூடி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நெடுமூச்சுகளாக விட்டுக் கொண்டிருந்தார். அடுப்பில் பாயாசம் அடியில் பிடித்து பாத்திரம் கருகி புகை எழ ஆரம்பித்திருந்தது. அப்பா ஓடி வந்து அம்மாவின் நெஞ்சில் தடவி விட்டு தண்ணீர் கொடுக்கச் சொல்லி என்னிடம் சைகை செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை அம்மாவின் வாயில் விட்டேன். தண்ணீர் இறங்க இறங்க அம்மா மெதுவாகக் கண்களைத் திறந்தார். தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

“சொன்னா கேக்க மாட்டுக்காளே ஒங்கப்பா.. ஒண்ணுஞ் செரில்ல.. அவ கைல வெட்டி ரத்தம்.. நா எப்டி விழுந்தேன்னே தெரில.. சொவர ஒயத்திக் கெட்ட சொல்லு.. இல்லன்னா நா எங்கயாம் போறே..”

அப்பாவின் முகம் கோவத்தில் சிவந்தது. வெளியே சென்று வீட்டு முற்றத்தில் அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தார். அம்மா என்னிடம் புலம்பிக் கொண்டே இருந்தார். இதுவரை ஒரு நாள் கூட அவர் சமையல் இப்படி ஆனதில்லை. அவ்வப்போது படபடப்பு வருவதுண்டு என்றாலும் இந்த மாதிரி மயங்கி விழுந்ததெல்லாம் இல்லை.

“மாவிசக்கி எப்படிப் புலம்புகிறாள்? எப்டி, எப்டியம்மா புலம்புகிறாள்?
..எந்தகப்பா பெரும்புலையா.. என்ன மோசம் வந்ததடா?..
எந்தகப்பா பெரும்புலையா.. என்ன மோசம் வந்ததடா?..
சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே..
சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே..” 

மறுபடியும் பாயாசம் வைத்து அத்தைக்கு படையலிட்டுக் கும்பிடும்போது யாருடைய மனதிலும் நிம்மதி இல்லை. அப்பாவின் முகமும் குழப்பமாகவே இருந்தது. சூர்யா வேறு அன்று சாப்பிட மாட்டேனென அடம் பிடித்து ஒரே அழுகை.

**

மாலை பூஜை.. சாம்பிராணி காட்டி, தீபாராதனை கொடுக்கும்போதும் அம்மா கண்கலங்கிக் கொண்டே இருந்தார்.. ஏழு மணியை நெருங்க நெருங்க எல்லோர் மனதிலும் படபடப்பு.. வழக்கத்தை விட இன்று ஒரு படி அதிகமாக. திடீரென்று அப்பா அத்தை படத்தின் முன்னால் இருந்து நகர்ந்து வெளியே சென்றார். நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர் முகத்தை மாறி மாறிப் பார்த்தோம். ஏழு மணி ஆனது. அம்மா கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தார்.

**

கொள்ளிக்குப் பிள்ளையற்று கொடிமுடிந்து போவாயடா..
கொள்ளிக்குப் பிள்ளையற்று குடிமுடிந்து போவாயடா..
எள்ளும் குருக்குமது நிறந்து முளைக்குமடா..
எள்ளும் நல்ல குருக்குமது ..நிறந்து முளைக்குமடா .. ஆஆ…”

அன்று அப்படித்தான் நிகழும் என எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்ததோ என்னவோ! மின்மினிப் பூச்சி வரவேயில்லை.. எட்டு மணி ஆகி விட்டது.. அத்தை வரவில்லை.. எனக்கு கண் கலங்கிக் கொண்டு வந்தது..

திடீரென்று அப்பா வெளியே இருந்து கத்தினார்.. “சுசீ..”

நான் ஓடிப்போனேன், “அப்பா.. என்னப்பா?”

“நாளக்கி அந்தக் கொத்தன வரச் சொல்லு”.. சொல்லிவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து வெளியே சென்றார்.

தலை வாலை இலை வைத்து மாயாண்டி அமர வைத்து..
பாளை அருவாளால் தன் மகளை நெஞ்சு கீறி..
ஈரக்குலை தாமரக்கா எடுத்து வைத்தார் மாயாண்டிக்கு..”

**

ஒரு வழியாக எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவர் இரண்டடி உயர்த்திக் கட்டப்பட்டது. கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க ஹோஸ் குழாய் போடுவதற்கு வசதியாக சுவற்றில் ஓர் இன்ச் அளவிற்கு ஓர் ஓட்டை விட்டுக் கட்டியிருந்தார் கொத்தனார். எதேச்சையாக அந்த ஓட்டையில் கண் வைத்துப் பார்த்த போது சுடலை மாடன் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சுஷில்குமார் – [email protected]

1 COMMENT

 1. நண்பர் சுஷீல்குமார் @Sushil Kumar Bharathi அவர்களுடைய இந்த சுவர் மாடன் கதையின் தலைப்பே கொஞ்சம் வித்யாசமாக பட்டது எனக்கு. அது என்ன சுவர் மாடன் என்று கொஞ்ச நேரம் தலையைப் பிய்த்துக் கொண்டேன். இந்த சுவர் மாடன் பெயரை முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.

  பெயருக்கு ஏற்றவாறு கதையும் முற்றிலுமாக ஒரு குறியீட்டுத் தன்மையுடன் இருக்கிறது.

  ஒரு விஷயத்தை நம்ப மறுக்கும் ஒரு மனிதன் அதை எப்பொழுது நம்ப ஆரம்பிக்கிறான் என்பது கவனித்துப் பார்த்தால் வியக்க வைக்கும் மற்றும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு நிகழ்ச்சியே.

  பக்தி என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம். நம்பிக்கை, நம்ப முடியாத விஷயங்கள் நிகழும் பொழுது அதை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்படுவது. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கன்னி பூஜையின் பொழுது மின்மினிப்பூச்சி வருவது என்பது ஒரு நம்ப முடியாத விஷயம். அந்த நம்ப முடியாத விஷயமே சுஷீலின் தந்தையாரின் நம்பிக்கைக்கு அடித்தளமாக அமைகிறது. ஒரு நம்பிக்கை உடைந்து போதலும் கூட மற்றொரு புதிய நம்பிக்கை உருவாக்கத்திற்கு காரணமாகக் கூடும். அப்படித்தான் சுஷீலின் தந்தை மாடனின் விஷயத்தில் ஒரு புதிய நம்பிக்கைக்கு ஆட்படுகிறார். சுவர் எழுப்புவதற்கு ஒத்துக் கொள்கிறார்.

  சுசீலின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு எளிதில் யோசிக்க முடியாத திருப்பத்தை அவர் வைப்பதை நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். இந்த சுவர் மாடன் கதையிலும் அவ்வண்ணமே. தண்ணீர் பைப் விடுவதற்கான ஓட்டை மாடனின் பார்வைக்கு நேராக அமைவது கதையின் முடிச்சை மட்டுமல்ல நமது மூளையையும் சேர்த்து ஒன்றாக பெயர்க்கிறது. இதில் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், ஓட்டைக்கு இந்த புறமாக கண் வைத்துப் பார்த்தால் மாடனின் பார்வை தெரியும். ஆனால் சற்றே தொலைவில் இருந்து மாடனின் இடத்தில் நின்று நோக்கினால் அவருக்கு என்ன தெரியும் என்பது புரிபடாத ஒன்றே. அதை புரிந்துகொள்ள முயற்சிப்பதில் தான் கதையின் முடிச்சு உள்ளது.

  அவரது அண்ணன் மகனின் குழந்தைத்தனமான இயல்பு நடத்தைகள் கவனிக்கப்பட்டு வெகு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எழுத்தாளனுக்கே உரிய கூரிய பார்வை.

  சுஷீலின் இந்தக்கதை செய்த புண்ணியத்தால் கொஞ்சம் மாடன் கதையையும் படித்து என்னுடைய நாட்டாரியல் குறித்த அறிவை வளர்த்துக்கொண்டேன். அந்த வகையில் இந்தக் கதை எனக்கு ஒரு புதிய திறப்பே. மற்றபடி அந்த எறும்பாக சென்று ஒரு பெண்ணை கர்ப்பமாக்கும் மாடனின் குறியீட்டு விஷயம் எல்லாம் எனக்கு இன்னும் புரிந்தபாடில்லை.

  இவர் மிக நன்றாக காட்சி வர்ணனைகளை செய்வதில் நிபுணத்துவம் பெற்று இருக்கிறார். அந்த ஆலயமும் அங்கு நிகழ்கின்ற நிகழ்ச்சி களும் கண்முன் வந்து நிற்கின்றன.

  ஒரு தன் அனுபவ கதைக்கான எல்லாவிதமான சிறப்புக்களையும் இந்தக் கதை உள்ளடக்கி இருக்கிறது. தன் குடும்பத்தையே கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர். இது ஒரு மிகப்பெரிய வெற்றி.

  நல்ல கதை. நாட்டாரியல் தொன்மங்களின் புரிதல் இல்லாமல் இந்த கதையை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. தொன்மங்களின் குறியீட்டுக் தன்மையும் மெய்ப் பொருள் விளக்கமும் புரிந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான கதை. நல்வாழ்த்துக்கள் சுஷீல்.

  மேலும் மேலும் சிறந்த கதைகளை அளிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு என் இதயப் பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here