– ஜா. தீபா
கடந்த நான்கு மாதங்களாக இந்தியா பொது முடக்கத்துக்குள் உள்ளது. பொதுமுடக்கம் தொடங்கிய முதல் இரண்டு மாதங்களில் அரசாங்கம் கொரோனாவை விரட்டுவதற்குப் பல உபாயங்களைக் கையாண்டது. விளக்கு ஏற்றுவது, கைதட்டுவது, செல்போன் ஒளியை கொரானா வைரஸுக்குக் காட்டுவது என்பதும் இவற்றில் அடங்கும். அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனாவில் இருந்து மக்கள் வெளிவருவதற்குப் பொருளாதார ரீதியிலான திட்டங்களை வகுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அன்றைய தினம் கூகிளில் மற்ற இந்திய மொழிகளால் தேடப்பட்ட வார்த்தையாக ‘ஆத்மநிர்பர்’ இருந்தது. அதாவது ‘தற்சார்பு இந்தியா’ என்பது அதன் அர்த்தம்.
‘தற்சார்பு பாரதம்’ என்பது இந்தியா தனக்கான பொருளாதார தேவையைத் தானே பூர்த்தி செய்து கொள்வது என்கிற அர்த்தத்தில் மோடி அவர்களால் சொல்லப்பட்டது. இந்த உரைக்குப் பின் நாட்டில் நடைபெறுகிற ஒவ்வொன்றுமே கவனத்தில் கொள்ள வேண்டியவை. அதில் முக்கியமான ஒன்றாக EIA 2020 வரைவினைப் பார்க்க வேண்டியிருக்கிறது. Environmental Impact Assessment என்பது இதன் விரிவாக்கம்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்கிற இந்த வரைவினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பார்ப்பதற்கு முன்பு சமீப கால உதாரணச் சம்பவம் ஒன்றினை பார்க்க வேண்டியிருக்கிறது.
தற்சார்பு பொருளாதாரக் கொள்கையின் ஒரு அம்சமாக நிலக்கரி சுரங்கங்கள் தனியார் வசம் ஏலம் விடப்படும் என்றது அரசு. உடனே அதனை செயல்படுத்தத் தொடங்கியது. சத்திஸ்கர் மாநிலத்தில் சூரஜ்பூர் மாவட்டத்தில் ஹஸ்டியோ அராந்த் என்கிற காட்டுப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை அரசு கடந்த ஜூன் 18 அன்று தனியாருக்கு ஏலம் விட்டுள்ளது. ‘ஆத்ம நிர்பர்’ திட்டத்தின் ஒரு பகுதி இது என்றிருக்கிறார் பிரதமர் மோடி.
இந்த அடர்ந்த காட்டுபகுதியைச் சுற்றிலுமுள்ள ஒன்பது கிராமங்களும் தற்போது இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒன்பது கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களும் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ‘ஆத்ம நிர்பர்’ எனும் பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் காடுகளால் ஏற்கனவே தற்சார்பு பொருளாதாரத்தை நம்பியுள்ள இந்தக் கிராமத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்றிருக்கின்றனர் அவர்கள். இதோடு அந்தக் கிராமத்தினர் தங்களுடைய கடிதத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்கள், “ஏற்கனவே இங்குள்ள சமூகத்தினர் கோவிட் 19 தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இப்போது வாழ்க்கையின் நிச்சயமின்மையையும், இடப்பெயர்வினையும் சந்திப்பது துரதிருஷ்டவசமானது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும் அரசாங்கம் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலக்கரி சுரங்க ஒப்பந்தங்கள் அரசினால் அதானி நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் நாம் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டு வரைவினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
Environmental impact assessment எனப்படுகிற சுற்றுச்சூழல் மதிப்பீடு மறு வரைவு செய்யப்பட்டுள்ளது. EIA என்பது நீர்நிலைகள், காடுகள் போன்ற பகுதிகளில் உருவாகிற திட்டங்கள், தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவினைக் கொண்டது. இந்த வரைவில் சொல்லப்பட்ட விதிமுறைகளைக் கொண்டே தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு அனுமதி தரப்படுகிறது.
இந்த வரைவு வெளிவந்ததுமே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், சூழலியல் நிபுணர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் முன்வைக்கும் ஒரு வலிமையான கருத்தானது நம்மை எச்சரிக்கை செய்கிறது. “இந்த வரைவு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கா அழிப்பதற்கா?” என்கிற கேள்வியில் இருந்து தொடங்குகிறது அவர்களது எச்சரிக்கை.
இந்த வரைவில் உள்ள அம்சங்கள் நம்மை அச்சத்திற்குள்ளாக்குவதே இதற்கு காரணம். மிகுந்த கவனத்தில் எடுத்துக் சொல்லப்பட வேண்டியவையாக சிலவற்றைக் குறித்து தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகின்றனர்.
உள்நாட்டு நீர்வழிப்பாதைகளில் மேற்கொள்ளப்படுகிற மாற்றங்களுக்கு சுற்றுச்சூழல் இயக்ககத்தின் அனுமதி தேவையில்லை என்கிறது புதிய வரைவு. 25 முதல் 100 கிலோமீட்டர் தூரத்துக்குள் நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதலுக்கு முன் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையை விரிவாக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. இதற்கு சேலம் எட்டு வழி சாலைத் திட்டம் உதாரணம். இப்படியிருக்க, நூறு கிலோமீட்டர் வரை நெடுஞ்சாலையை அகலப்படுத்த சுற்றுச்சூழல் இயக்ககத்தின் முன்-அனுமதி தேவையில்லை என்பது நாம் எதிர்பாராத விளைவுளை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பிட்ட பகுதியில் காட்டுப்பகுதி குறுக்கிட்டால் அந்தக் காட்டினை அழித்து சாலையை உருவாக்குவதற்கும் அனுமதி கிடைத்திருக்கிறது என்பது கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.
அதே போல் கட்டடமோ, ஒரு தொழிற்சாலையோ விதிமீறல்களோடு கட்டப்பட்டு வந்தால் கூட திட்டம் முடிந்த பிறகு திட்டத்துக்கு பிந்தைய ஒப்புதலைப் (Post Facto) பெறலாம் என்கிறது புதிய சட்ட விரைவு. இது சட்டத்துக்கு முரணானது என்று ஏப்ரல் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த போதும் இந்த அம்சம் வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. திட்டத்தில் விதிமீறல் இருக்கும்பட்சத்தில் அரசாங்க பிரதிநிதிகளோ, திட்டத்தை முன்மொழிபவரோ மட்டுமே புகாரளிக்க இயலும். மக்களுக்கு புகாரளிக்கும் உரிமை இல்லை என்கிறது புதிய வரைவு. நம்முடைய பகுதியில் தொடங்கப்படும் புதிய தொழிற்சாலையினால் நமது நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுமெனில் அதனை பொதுமக்களில் ஒருவராக நாம் புகாரளிப்பதற்கு இந்த புதிய வரைவு தடுக்கிறது.
இந்தியாவின் நிர்வாக அமைப்பில் எப்போதும் சில குறைபாடுகள் இருந்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு ஒரு உதாரணம் விசாகப்பட்டணத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட தொழிற்சாலை வாயு கசிவு. வாயு கசிவினால் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார்கள் மக்கள். இந்த வாயு கசிவுக்கு காரணமான எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலை எந்த முன் அனுமதியும் பெறாமல் இருபது வருடங்களாக இயங்கி வந்திருக்கிறது. இதை அந்த நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. மக்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் இது போன்ற ஆபத்தினை விளைவிக்கும் நிறுவனங்களுக்கு எப்படி அனுமதி தர முடிந்தது என்ற கேள்விக்கு நாம் விடை தேடுகிற சமயத்தில் தான் சட்டத்துக்கு புறம்பான நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட ‘சில திட்டங்கள்’ குறித்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படாது என்றும் தெரிவிக்கிறது புதிய வரைவு.
இந்த வரைவினை சட்டமாக்குவதற்கு முன்பு மக்களின் ஆலோசனைக்காக வரைவினை வெளியிடவேண்டும் என்கிறது விதிமுறை. அதனால் இந்த புதிய வரைவினை வெளியிட்டு மக்கள் தங்கள் கருத்தினைப் பதிவு செய்வதற்கு ஜூன் மாதம் 10ம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் தந்திருந்தது. இந்த நோய்த்தொற்று காலத்தில் இந்த கால அவகாசம் மிகக் குறைவானது என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டதால் ஆகஸ்ட் 10வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதுவே குறைவான அவகாசம் தான் என்றிருக்கும்போது சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கால அவகாசத்தை ஜூன் 20ம் தேதிக்கு குறைத்திருந்தார். கால அவகாசத்தை நீட்டிக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மக்கள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்க ஆகஸ்ட் 11 வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கோவிட் 19 தாக்கத்திலும், பாதிப்பிலும் உள்ள இந்த சமயத்தில் புதிய வரைவினை சட்டமாக்குவதற்கு அரசு காட்டும் அவசரத்தன்மை எச்சரிக்கை உணர்வை அதிகப்படுத்துகிறது. இந்தியா போன்று வெவ்வேறு பின்னணிகள், மொழிகள் கொண்ட நாட்டில் இது போன்ற வரைவுகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வருகையில் மக்களின் கருத்துகளைப் பதிவு செய்ய போதிய கால அவகாசம் தேவைப்படும். சுரங்கப்பணிகள தொடங்குவதாக இருந்தாலும் , அணுமின் நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவை நிறுவப்பட்டாலும் அதன் பாதிப்பு நேரடியாக பழங்குடியினரையும், மீனவர்களையுமே தாக்கும். அதனால் சுற்றுச்சூழல் தொடர்பான எந்த வரைவும், சட்டமும் விளிம்பு நிலை மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்வது மிக அவசியம்.
அதனால் அவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பிராந்திய மொழிகளில் வரைவினை அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வரைவினை வெளியிட்டிருக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம். டெல்லி உயர்நீதிமன்றம் பிராந்திய மொழிகளில் வரைவினை மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டபிறகே மொழிபெயர்ப்பு பணிகள் தொடங்கியுள்ளன. வரைவு மொழிபெயர்ப்பக்கப்பட்டு மக்கள் ஒவ்வொருவரையும் குறிப்பாக பழங்குடியினர், மீனவர்கள், மலைவாழ் மக்களை எல்லாம் சென்று அடைந்து அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு கருத்தினையும், எதிர்ப்பையும் பதிவு செய்வதற்கான அவகாசம் தரப்படவில்லை என்பது மற்றுமொரு ஆபத்து. வரைவினை வெளியிடும்போதே பிராந்திய மொழியில் வெளியிட்டிருக்க வேண்டுமென்பது அடிப்படையான ஒரு செயல், அதனை இந்த அரசு செய்யத் தவறியிருக்கிறது. மக்களை புறந்தள்ளிவிட்டு கொண்டுவரப்படுகிற திட்டமோ என்கிற சந்தேகத்தை ஆரம்ப நிலையிலேயே இது ஏற்படுத்திவிட்டது.
இதற்கு முந்தைய வரைவின் (E I A 1996)படி, 20,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்கள் கட்டும்போது மாவட்ட நிலை மதிப்பீட்டு நிபுணர் குழு திறனாய்ந்து கட்டடத்துக்கான அனுமதி தரும். புதிய வரைவின்படி 1,50,000 சதுர அடி வரைக்குமான கட்டடத்துக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை. அதாவது இது ஒரு விமான நிலையம் அமைப்பதன் சதுர அடி அளவு. ஒரு கட்டடம் கட்டுகையில் சுற்றுசுழல் மாசுபாடு அடையும். இதனைக் கட்டுப்படுத்தவே கட்டடம் கட்டுவதில் கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டது. 1,50,000 சதுர அடி வரை கட்டடம் கட்டலாம் என்பது சூழலுக்கு எத்தகைய ஆபத்தினை விளைவிக்கும் என்பதை புரிந்து கொண்டால் புதிய வரைவு சூழலுக்கு எந்தளவுக்கு பாதகமானது என்பதை உணர முடியும். சென்னை மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் கட்டடங்கள் அதிகம் கட்டப்படுவதால் சூழலுக்கு ஏற்படும் அபாயங்கள் அதிகம்.
தன்னிறைவு பொருளாதாரம், வர்த்தகத்தை எளிமையாக்குதல் என்கிற பெயரில் வெளிக்கொண்டு வரப்பட்ட இந்த புதிய வரைவில் உள்ள ஒரு முரணை எடுத்துகட்டாகச் சொல்லலாம்.
புதிய நிதி ஆயோக் அறிக்கையில் நிலக்கரியில் முதலீடு செய்வதென்பது அத்தனை இலாபகரமானது அல்ல என்கிறது. ஏனெனில் நிலக்கரி தொழிற்சாலைகளை நிர்வகிப்பதும், நிலக்கரியை இறக்குமதி செய்வதும் அதிக செலவினை எடுத்துக் கொள்வது. அதே நேரம் சூரிய சக்தி திட்டங்கள் சிக்கனமானதாக உள்ளது, அப்படியிருக்க நாம் சூரிய சக்தித் திட்டத்தையே முன்வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் சூழலியல் நிபுணர்கள். ஏனெனில் அதற்கான தட்ப வெப்பமும், வசதியும் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால் அரசு நிலக்கரி வளத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
இந்தியாவின் மத்திய காட்டுப்பகுதி நிலக்கரி சுரங்கத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டன. இங்கு உற்பத்தியாகும் நிலக்கரியை பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்ல சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் போடப்படும். அதற்காக மட்டுமே மத்திய அரசு 50,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதற்காக காடுகள் அழிக்கப்பட வேண்டியிருக்கும், மக்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். சமகாலத்தில் இந்தியாவில் காடுகள் அழிக்கப்படுவது என்பது இதற்கு முன்பு நிகழ்ந்ததைவிட அதிகமோ என்கிற சந்தேகத்தை சில நிகழ்வுகள் சொல்கின்றன.
இரண்டு சம்பவங்களைச் சுருக்கமாக சொல்ல வேண்டும். மத்தியபிரதேசத்தின் உமர்வாடா கிராமம், மகாராஷ்ட்ராவின் பிஜாபூர் கிராமம், உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டம், சட்டிஸ்கரின் மகாசமுந்த் மாவட்டம், ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் இங்கெல்லாம் அரசு தனியாருக்காக காடுகளைக் கையகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த இடங்களில் வாழும் பழங்குடியினர் ஒடுக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். இயற்கை சமநிலை குலைகிறது. ஒரு உதாரணம் கடந்த டிசம்பரில் ஒரிசாவில் சம்பல்பூர் மலைகிராமத்தில் இலட்சக்கணக்கான மரங்கள் திடிரென்று வெட்டி வீழ்த்தப்பட்டன. இந்தக் காட்டினை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். சித்ராங்கதா சௌத்ரி என்கிற பத்திரிக்கையாளர் இதனை வெளிக் கொண்டு வந்த பின்னரே சுற்றுசூழல் ஆர்வலர்களின் அழுத்தத்தால் தற்காலிகமாகக் காட்டினை அழிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பகுதி நெய்வேலி நிலக்கரி குழுமத்தினரால் அதானிக்கு ஒப்பந்தமாகத் தரப்பட்டிருந்ததே காட்டின் அழிப்புக்கு காரணம்.
இரண்டாவது உதாரணம் ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் 1890களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து நிலஉரிமைக்காக விவசாயிகளை ஓரணியில் இணைத்தவர் பிர்சா முண்டா. இன்றும் அவர் ஜார்கண்ட் மக்களின் ‘பகவான்’, மாபெரும் தலைவராக நினைக்கப்படுகிறார்.
25வது வயதில் பிர்சா முண்டா சிறையில் இறந்தபிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் சோட்டாநாக்பூர் குத்தகை சட்டத்தினைக் (1908) கொண்டு வந்தது. அதன்படி ஜார்கண்ட் பழங்குடியினரின் நிலங்களை விவசாயம் மற்றும் அரசு சேவைக் நிறுவனக் கட்டடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிறது சட்டம். அதோடு நில குத்தகை உரிமையை ஒரே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியினைரிடம் மட்டுமே தர இயலும் என்பதும் சட்டத்தின் அம்சம்.
ஆனால் பாஜக அரசு இதில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி நிலம் கேள்விக்கு உட்படுத்தாமல் எவர் வசம் வேண்டுமானாலும் தரப்படலாம் என்பதான திருத்தமாக இருந்தது. கிராம சபையின் அனுமதி பெறப்படாமல் நிலங்களை தாரை வார்க்கும் வேலையிலும் அரசு ஈடுபட்டது. இதனை எதிர்த்து பழங்குடியினர் இலட்சக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக கிராமத் தலைவர்கள் உட்பட 10000க்கும் அதிகமானவர் பேரில் தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.
இப்படியான சந்தேகங்களையும், தீர்க்கப்பட வேண்டிய அம்சங்களையும், மறைமுகத்தன்மையும் கொண்டதாக புதிய வரைவு உள்ளதாலேயே அனைத்துத் தரப்பினரும் எதிர்த்து வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சி என்கிற ஒற்றை வார்த்தையில் அத்தனையையும் கடந்து செல்ல நினைக்கிறது அரசு. தற்சார்பு பொருளாதாரம் என்பதை வெறும் கவர்ச்சியான வாக்கியமாக மாற்றிவிட்டு அதன் போர்வையில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வந்துவிடுகிற வித்தையினை அரசு செய்யத் தொடங்கிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
நீர், நிலம் காற்று இவை மக்களுக்கானது, வருங்கால சந்திதியினருக்கானது. வெறும் அரசியல் பாண்டங்கள் இல்லை இவை. சில நிறுவனங்களுக்கு மட்டுமே வளர்ச்சி ஏற்படுத்தித் தருவதல்ல தற்சார்பு பொருளாதாரம் என்பது. கண்ணுக்கெட்டாத தொலைவில் வாழுகின்ற ஒவ்வொரு மக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பது. அது இந்த புதிய வரைவு ஏற்படுத்தித் தருமா என்பது சந்தேகமே. அரசு இந்த புதிய வரைவினை செயல்படுத்த உறுதி கொண்டுள்ளது.
பொதுமக்களான நமக்கிருக்கும் ஒரே கேடயம் நமது கருத்தினை பதிவு செய்வது மட்டுமே. ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் நமது கருத்தினையும், எதிரிப்பினையும் மின்னஞ்சல்கள் மூலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டியது மட்டுமே ஒரே வழி.
இது நமது குரலாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. நமது வருங்கால சந்ததிகள் நம்மை நம்பச்செய்யும் கடைசி யுக்தியும் இது தான்.
- ஜா.தீபா
No need for us…