Tuesday, July 16, 2024
Homesliderசுயம்பாகி

சுயம்பாகி

லாவண்யா சுந்தர்ராஜன்

1

குளியலறையை டெட்டால் போட்டு கழுவிக் கொண்டிருந்தான் தினகரன். கொடியபேல் கொட்ரோலி பகவதி கோவில் மணியோசை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. காலை நேர மங்கல ஆரத்திக்கு போக வேண்டுமென்று தினகரனுக்கு ஆசை. ஆனால் அந்த நேரத்தில்தான் எல்லோரும் சாப்பிட வருவார்கள். அவர்களுக்கு தட்டு எடுத்து வைக்க, தண்ணீர் ஊற்றி வைக்க என்று அரக்கப் பறக்க வேலையிருக்கும். அடுப்பில் எதையாவது கிண்டிக் கொண்டோ அல்லது வருபவர்க்கு பரிமாறும் வேலையையோ சந்திரகாந்த் பார்ப்பார். பூஜையின் மணியோசை கேட்கும் நேரத்தில் அது போன்ற வேலைகளை, சின்ன வேலைகளைப் பார்க்க அமைந்தால் கூட பரவாயில்லை, காலை பரபரப்பு முடிவதற்கு முன்னரே மூன்றாம் எண் அறையில் இருக்கும் ரஞ்சன் சாருக்கு தினம் குளியலறையைக் கழுவ வேண்டும். அதுவும் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டும். அவர் இல்லாத சமயம் அவரது அறைக்குள் நுழைந்தாலே அவருக்கு பிடிக்காது. குளியலறை கழிவறை சுத்தம் செய்யும் போதுதான் தினமும் மங்கல ஆரத்தி நடக்கிறது.

நல்லவேளை மற்ற அலுவலர்கள் எல்லோரும் தங்கள் அறையை எப்போது சுத்தம் செய்ய வேண்டுமென்று எந்த கட்டுப்பாடும் வைப்பதில்லை. சத்யா இருக்கும் நாட்களில் அறைகள் சுத்தம் செய்வதில் தினகரனோடு அவனும் கொஞ்சம் பங்கெடுப்பான். முன்பெல்லாம் காலையில் எல்லா வேலைகளையும் முடித்த பின்னரே அறைகளை சுத்தம் செய்வதும், மாளிகையின் வரவேற்பறை, பிற இடங்களை சுத்தம் செய்வதையும் இருவரும் செய்வார்கள். மூன்றாம் எண் அறைக்கு ரஞ்சன் சார் வந்த பின்னர் சுத்தம் செய்யும் வேலையை காலையிலேயே தொடங்க வேண்டியிருந்தது. ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்துவிட்டு குளிக்க முடியாது. அதனால் எல்லா இடங்களையும் அப்போதே சுத்தம் செய்ய வேண்டிருக்கும். காலை வேளையென்பதால் சமையலறையில் சத்யா அவனுடைய அப்பா சந்திரகாந்துக்கு உதவுவது போல பாசாங்கு செய்து கொண்டு தரை துடைக்கும், படுக்கைகளை தட்டி போடும் வேலைகளை தினகரன் தலையில் கட்டிவிடுவான். சில நாட்கள் முன்பு ஒருமுறை சத்யா குளியலறையைக் கழுவியிருப்பான். அன்று தினகரனுக்கு உடல்நிலை சரியில்லை. அடுத்த நாளே தினகரனிடம் “பாத்ரூமெல்லாம் சத்யா கிட்ட க்ளீன் பண்ண விடாத அவன் சின்னவன் இதெல்லாம் ஒழுங்கா பண்ணாம விட்டான்னா ஆபிஸர் யாரும் கம்பிளைண்ட் பண்ணிட்டா நமக்கு ரொம்ப சிக்கலாயிடும். உனக்கு ஏன் அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது” என்றார் சந்திரகாந்த்.

இத்தனைக்கும் சத்யா கல்லூரியில் தினகரனுக்கு ஒருவருடம் ஜூனியர். தினகரன் அவனை எவ்வளவு காபந்து பண்ணியிருப்பேன். சத்யா தினகரனுக்கு ஒருவிதத்தில் தூரத்து சொந்தம். சத்யாவின் தாத்தாவும் தினகரனின் தாத்தாவும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். முடுபத்ரி பகவதி கோவிலில் அன்னம் சமைப்பவர்கள். தினகரன் உணவக மேலாண்மை படிப்பு முடிந்து வேறு நல்ல வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு விருந்தினர் மாளிகையை மறைமுக ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கும் சந்திரகாந்த் தனக்கு உதவி செய்ய ஆள் தேடிக் கொண்டிருப்பதை கேட்டு தினகரனின் அப்பா அவனை சந்திரகாந்திடம் பேசி வேலைக்கு சேர்த்து விட்டார்.

KLYஅது பெரிய எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்கள் மாற்றலாகி தங்களது குடும்பத்தைப் பிரிந்து மங்களூர் வரும்போது அவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கென கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை. அந்த மாளிகையில் தங்குபவர்களுக்கு உணவு அளிப்பது முதல் அவர்களது உள்ளாடைகள் துவைத்து கொடுப்பது வரை செய்யும் எல்லா வேலைகளுக்கும் சந்திரகாந்துக்கு நல்ல ஒப்பந்தத் தொகையை அந்த நிறுவனம் அளிக்கிறது. மாளிகையை பராமரிக்க, சமையல் உதவி செய்ய என்று கணக்கு காட்டி நான்கு ஆட்கள் சம்பளத்தை நிறுவனத்திடமிருந்து அவரால் பெற முடியும். அதில் கணிசமான தொகை தினகரனுக்கு கிடைக்கும் என்றும் அது மட்டுமல்லாமல் அலுவலர்கள் அங்கே கொடுக்கப்பட்ட உணவு பட்டியல் தவிர வேறு பிரத்தியேக உணவுகளை தயாரிக்கச் சொல்லி தனியாக பணம் கொடுப்பதிலும் மேற்படி வருமானமும் இருக்குமென்றும் சொல்லி தினகரனை அழைத்துக் கொண்டு வந்தார் சந்திரகாந்த். தினகரன் படித்த படிப்புக்கு அங்கே சமையலும் செய்ய வாய்ப்புண்டு என்று சொல்லித்தான் தினகரனின் அப்பா அவனை சம்மதிக்க வைத்தார்.

மங்களூர் கொடியபேல் பகுதியில் பெரிய தோட்டத்தின் நடுவில் அமைத்திருந்த அந்த மாளிகை வந்த புதிதில் தினகரனுக்கு மாபெரும் கனவுலகத்தில் நுழைந்த உணர்வைக் கொடுத்தது உண்மைதான். தோட்டத்தில் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நிற்கும் பாக்கு மரங்களும், எண்ணெய் பூசி பளபளக்கச் செய்த போல முரட்டு பச்சை நிறத்தைக் கொண்ட இலைகள் பளபளக்கும் பலா மரங்களும் நிறைய இருந்தன. விதவிதமான பூக்களும் மருதாணி மலர்களும் கும்மென்று மணம் பரப்பிக் கொண்டிருந்தின. அதில் அதிகாலை நேரத்தில் பலவிதமான பட்சிகள் சத்தம் செய்துகொண்டே இருக்கும். அங்கே நடக்கும் கச்சேரியில் தினகரனால் கண்டுபிடிக்க முடிந்த ஒரிண்டு குரல்களில் கிளியும், குயிலும் அடக்கம். வல்லூறுகள் கூட வந்து சிலசமயம் அமர்திருக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரியும் நந்தியாவட்டையும், சந்தன நிறத்தில் பூக்கும் செம்பருத்தைகளும் இருந்தன. தோட்டத்தில் பரந்த கிளைகளோடு இருந்த பாதாம் மரத்தடியில் இருந்த கல்மேடை நான்கைந்து பேர் அமர போதுமானது. மாளிகையின் வரவேற்பறையிலும் பெரிய பெரிய ஷோபாகளும் பெரிய தொலைகாட்சியும் உண்டு. அதில் அமர்ந்து இளைப்பார தினகரனுக்கும், சத்யாவுக்கும் மிகவும் பிடிக்கும். அங்கே தங்கியிருக்கும் அலுவலர்கள் யாரும் இல்லாத சமயத்தில் கொஞ்ச நேரம் ஷோபாவிலோ பூங்காவின் கல்மேடையிலோ அமர்ந்திருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் ரஞ்சன் சார் வருவார். அப்போது விரைந்து எழுந்து ஓடினாலும் அவர் இழிவான பார்வையை எப்படியாவது தினகரன் மீதோ சத்யா மீதோ பதிவு செய்துவிடுவார். மறுநாள் கண்டிப்பாக நேரடி ஒப்பந்தங்காரர் கணேஷ் வந்து சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் கத்திவிட்டு போவார்.

படித்த படிப்புக்கு பெரிய நட்சத்திர விடுதியிலோ, கப்பலிலோ வேலைக்கு சென்று நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்தது எல்லாம் கனவாகிப் போனது தினகரனுக்கு. வந்த புதிதில் காய்கறி வெட்ட, சமையல் உதவி வேலைகள் என்றே நினைத்திருந்தான். போகப்போக அது வெறும் எடுபிடி வேலை என்றே புரிந்தது. ஆனாலும் இங்கே கிடைக்கும் வருமானத்தை நம்பிதான் அவன் குடும்பமே இருந்தது.

2

“எங்க வீடு மங்களூர் லால்பாக்ல இருக்கு. அங்க தான் மங்களூர் கார்போரேசன் ஆபீஸ் கூட இருக்கு. அது தான் எம் ஜி ரோட்ல மிகப் பெரிய பில்டிங். அதுக்கு அடுத்தது எங்க வீடு இருக்க கார்டன் என்களேவ் தான் பெருசு. அதுல முதல்மாடில தான் எங்க வீடு இருக்கு. என் அம்மா மிகவும் சுறுசுறுப்பானவர். ஆனால் என்னால் எங்க அம்மா கீழ விழுந்துட்டாங்க. டாக்டர் அங்கிள் கிட்ட அப்பா கூட்டி கிட்டு போயிருக்காங்க”

“அம்மா கீழ விழந்தது எல்லாம் சொல்ல வேண்டாம். நேத்து வரை இருந்த அம்மாவை சொன்னா போதும்”

சத்யா அர்ஜுனுக்கு நாளை அவன் பள்ளியில் “என் வீடும் என் அம்மாவும்” என்ற தலைப்பில் பேச வேண்டி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். அர்ஜுனுக்கு குடிக்க தினகரன் பால் கொண்டு வந்து கொடுத்தான். பால் வாங்கி ஓரு வாய் வைத்தவன்.

“அங்கிள் பால் கசக்குது”

“ஸ்ஸ்.. சக்கரை போட மறந்துட்டேன். ஆனந்த் சார் சக்கரையே போட்டுக்க மாட்டார்ல்ல.. அந்த நியாபகத்தில்” என்று தலையைச் சொறிந்து கொண்டு நின்றான் தினகரன்

“போய் சக்கரை போட்டு எடுத்துட்டு வா” என்றார் சந்திரகாந்த்.

சாயங்காலம் ஆறு மணியிருக்கும் வேகவேகமாய் விருந்தினர் மாளிகைக்கு வந்த வந்த ஆனந்த் “மஞ்சுளா கீழே விழுந்து அடிபட்டுட்டா.. நான் அவளை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறேன். இவன் இங்கே இருக்கட்டும். சத்யா கொஞ்சம் அவனுக்கு ஸ்பீச் பிரிப்பேர் பண்ணி விட்டுரு” என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை.

பாலை வாங்கிக் கொடுத்தவன் “சாயுங்காலம் நீச்சல் குளத்தில விளையாடிட்டே இருந்தேன். அப்ப விளையாட்டு ஜோர்ல நான் கால் வழுக்கி தண்ணீல விழப்போவது போல குளத்துக்கு பக்கத்துல நகந்துட்டேனா, அம்மா நான் விழுந்துற போறேன்னு நினைச்சி வேகமா ஓடி வந்தாங்கல, அப்ப கால் வழுக்கி கீழே விழுந்துட்டாங்க”

“சரி நீ பாலை குடி”

“உடனே சமாளிச்சி எந்திரிச்சிட்டாங்க. ஆனா அப்படியே முதுக பிடிச்சிட்டு உட்கார்ந்துட்டாங்க. என்னாச்சும்மா நான் அழுதேன். ஒன்னுமில்லை லேசா வலிக்கிதுன்னு சொனனாங்க. ஆனா அவங்களுக்கு ரொம்ப வலிச்சிருக்கும் போல, எப்போவும் படிக்கட்டுல தான் ஏறிப்போவாங்க அம்மா, நொண்டி நொண்டி வந்து லிஃப்ட்ல போனாங்க. அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி அவங்களால நிக்கக் கூட முடியல. ஒக்காரவும் முடியல. எனக்கு எதுவும் சாப்பிடக்கூட குடுக்கல. அப்பாவை போனில் கூப்பிட்டாங்க.”

“சரி நீ பாலை குடிச்சிட்டு வேற என்ன பேசப்போறேன்னு சொல்லு நாளைக்கு அம்மா வந்துடுவாங்க” என்றான் தினகரன்.

“கானா லாகவ்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டான் தினகரன்.

“ஏன் அங்கிள் பயந்துட்டீங்க” என்று சிரித்தான் அர்ஜுன்.

சந்திரகாந்தும், தினகரனும் வேகமாய் எழுந்து சென்று சாப்பாத்தி செய்ய ஆரம்பித்தனர்.

ள்“லாக்பாக் ரோட்டில் மிகப்பெரியது எங்க வீடு.”

“இல்லை முன்னாடி சொல்லி குடுத்தேன்ல அதுபோல சொல்லு அர்ஜுன்” என்றான் சத்யா.

அர்ஜுன் சிணுங்கி அழ ஆரம்பித்தான். உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு வெளியே பூங்காவில் இருக்கும் கல்மேடைக்கு அழைத்து சென்று ஏதோ விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான் சத்யா.

ஆனந்த் சார் இரவு பத்து மணிக்கு வந்தார். அர்ஜுன் அதற்குள் தூங்கியிருந்தான் “மஞ்சுளாவுக்கு ஸ்பைனல் கார்ட்டில் அடிப்பட்டிருக்காம். இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டி ஆஸ்பத்திரியிலேயே இருக்க சொல்லிட்டாங்க. எங்க கம்பெனி ஐடி பார்த்துட்டாலே இவனுங்க இப்படித்தான் போட்டு தாக்கிடுவாங்க”

“அதனால என்ன சார், கம்பெனி தானே காசு குடுக்குது. மேடம் சரியாகி வீட்டுக்கு வந்துட்டா போதும்” என்றான் சந்திரகாந்த்.

“சரி நான் வீட்டுக்கு போய் அர்ஜுன் ஸ்கூல் பேக், ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து தந்துடறேன். நீங்க காலையில ரெடி பண்ணி அனுப்பிடுங்க. நான் மறுபடி ஹாஸ்பிடல் போகணும் எப்ப வருவேன்னு தெரியாது”

“சரி சார் நான் பார்த்துக்கிறேன். இன்னும் சாப்பிட்டு கூட இருக்க மாட்டீங்க சாப்பிட்டு கிளம்புங்க” என்றார் சந்திரகாந்த்.

மஞ்சுளாவை மூன்று வாரம் படுத்த படுக்கையை விட்டு எழக்கூடாது என்று சொல்லி விட்டார்களாம் அதனால் அர்ஜுனும் ஆனந்த் சாரும் சந்திரகாந்த் பங்களாவில் தான் சாப்பிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் தினமும் அர்ஜுனை பள்ளிக்குக் கிளம்பும் பொறுப்பு தினகரனுடையாகி விட்டது. சத்யா அர்ஜுனின் வீட்டுப்பாடங்களை கவனித்தான். சந்திரகாந்த் அவனை காலையில் லாக்பாக் மெயின் ரோட்டுக்கு பைக்கில் கொண்டு வந்து பள்ளிக்கூட வேனுக்கு அனுப்பி வைப்பார். மறுபடி சாயுங்காலம் போய் கூட்டிட்டுக் கொண்டு வருவார்.

மூன்று வாரம் இந்த அதிகப்படியான வேலையால் விருந்தினர் மாளிகையிலிருந்த பிற அலுவர்கள் கொஞ்சம் அசௌகரியபட்டிருக்கலாம். ரஞ்சன் சாரைத் தவிர வேறு யாரும் எதுவும் நேரடியாகச் சொல்லவில்லை.

மூனு வாரங்கள் கழித்து மஞ்சுளாவை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவள் முன்னர் இருந்த எழில் கொஞ்சும் நிலையில் இல்லை. ஏதோ அரை மயக்கத்திலேயே இருந்தாள். பேசுவதும் குழம்பிப் பேசுவது போலிருந்தது. அவள் பேசுவது எதுவுமே யாருக்கும் புரியவில்லை.

ஆனந்த சார் “அவ இப்ப இருக்க நிலையில் சமைக்க, மத்த வேலை எல்லாம் பாக்க முடியாது சந்திரா. கொஞ்ச நாளைக்கு வீட்டுல சமையலுக்கு தினகரனை அனுப்பி வைக்க முடியுமா” என்றார்.

“சார் இதெல்லாம் கேட்கணுமா. அனுப்பி வைன்னு ஆடர் போடலாம் சார் நீங்க”

3

காலை ஐந்து மணிக்கு எழுந்து வெளியே வந்தான் தினகரன். ஐந்து மணிக்கு எழுந்தால் தான் இப்போதெல்லாம் சமாளிக்க முடிகிறது. முன் முற்றத்தில் நின்று கொடியபேல் பகவதி கோவில் கோபுரத்தை தரிசனம் செய்தான். விருந்தினர் மாளிகையை விட சற்றே மேடான பகுதியில் கிட்டதட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கோவிலின் முகப்புத்தோரண வாயிலில் மையமாக அமர்ந்திருந்த சிம்ம வாகினியைப் போலொரு அழகியை வேறெங்கும் பார்த்ததில்லை. அவள் சிவப்புப் புடவை மடிப்புகள் கண்பதற்கு நிஜமாய் அசைவது போலிருக்கிறது. சிம்மத்தை பார்த்தால் அது கர்ஜிப்பது போலிருந்தது. அன்னையின் பளிங்கு முகம் இருபுறமும் எரிந்த மின்சார விளக்கொளியில் பளீரென்றிருந்தது. தேவியின் முகம் குங்குமப்பூ கலந்த பால் நிறத்திலிருந்தது. மஞ்சுளா மேடம் மேனியின் நிறம் அதே போலவே இருக்கும் என்று நினைத்தான் தினகரன். தோரண வாயிலில் கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருந்த ஆரஞ்சு வர்ண கொடி தினகரனை போலவே படபடத்துக் கொண்டிருந்தது. காலையில் கோவிலிருந்து பகவதி சரணங்கள் மெல்லக் கசிந்து காற்றில் வந்து கொண்டிருந்தது. தவிட்டுக் குருவிகள் ஓயாமல் ஒலியெழுப்பி அதற்கு பின்னணி இசை அமைத்தது. மனம் அமைதியடைந்தது.

விருந்தினர் மாளிகைக்கு எதிர்புறமிருந்த அடுக்கத்தின் உட்பரப்பிலிருந்த மகிழம் பூ மரத்திலிருந்து எழுத வாசனை மனதை மயக்கியது. வண்ணாத்தி குருவி, கருங்குருவிகளின் ஓயாத ஒசை அந்த நேரத்தின் ஏகாந்தத்தின் இனிமையை இன்னும் கூட்டியது. கோவிலை நோக்கி மீண்டும் திரும்பினான் தினகரன். பூரண பொலிவுடன் திகழ்ந்த தேவியின் முகம் அவனைப் பார்த்து வசீகரமாய் புன்னகைப்பது போலத் தோன்றியது. தேவியின் முகம் பார்க்கப் பார்க்க மஞ்சுளா மேடம் முகமே நினைவுக்கு வந்தது. அந்த நொடியே வீட்டுக்கு போய் மனைவியை கட்டிக்கொள்ள தவித்தது மனம். ஆனால் அவள் இருப்பதோ மூடுபத்திரியில் சமணர் கோவில்களுக்கு மத்தியில் இருக்கும் சற்றே பெரிய குடிலில். ஆனந்த் சார் வீட்டுக்கு போக ஆரம்பித்தலிருந்து வீட்டுக்கு போகவும் வழியில்லை. இங்கேயே வேலை அதிகம் இருக்கிறது.

சொந்தக்காரன் என்று சந்திரகாந்திடம் வேலைக்கு சேர்ந்தால் இரண்டாம் பட்சமாகவே நடத்துகிறார். காலையில் எழுந்து மஞ்சுளா மேடம் வீட்டுக்கு போய்விட்டு அங்கே வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்த்தால் இங்கே மேல் வேலைகள் எதுவுமே முடிந்திருக்காது. உடனே அரக்கப் பறக்க மேல் வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது ரஞ்சன் சார் கடுக்கிறார். இப்போதாவது சத்யா கொஞ்சம் கூட மாட உதவி செய் என்று சொல்ல மாட்டார் சந்திரகாந்த். அவருக்கு பிள்ளை என்ற பாசம் வருகிற அளவு சித்தப்பா மகன் தானே என்ற பாசம் வரவில்லை. முன்பெல்லாம் எல்லோரும் ஆறு மணிக்கு தான் எழுந்து கொள்வோம். ஆனால் இப்போது ஆனந்த் சார் வீட்டிலிருந்து வரும்போதே ஏழு ஆகி விடும். மாளிகையில் அலுவலர்கள் எல்லோருமே எட்டு மணிக்கு பத்து நிமிடம் இருக்கும் போதே சாப்பிட வரத்தொடங்கி விடுவார்கள். நல்லவேளை ரஞ்சன் சாரிடம் சந்திரகாந்த் ஏதோ சொல்லி அவர் போன பின்னர் அறையை சுத்தம் செய்தால் போதுமென்று வாய் வாக்கு வாங்கி வைத்திருக்கிறார்.

இந்த விருந்தினர் மாளிகையின் ஒப்பத்தம் கிடைக்க ஆனந்த் சார் ஒரு காரணம் என்று சந்திரகாந்த் அடிக்கடி சொல்வார். ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்திரகாந்த் துபாயில் தனது வேலை ஒப்பத்தம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மங்களூர் வரும் விமானம் எட்டு மணி நேரம் தாமதமானது. அதே விமானத்தில் தான் ஆனந்த் சார் குடும்பத்தோடு துபாய் சுற்றுலா பயணம் முடித்து திரும்பி வர வேண்டியிருந்தது. மஞ்சுளா மேடம் பார்க்க வெண்ணையில் கொஞ்சம் போல இளம்சிவப்பு வண்ணம் சேர்த்து செய்த சிலை போல அப்படியொரு பளபளப்பு. கொங்கணி தேசத்து நிறம். மலையாளப் பெண்ணின் உடல்வாகு சேர்த்து செய்த அற்புதப் படைப்பு. அர்ஜுனுக்கு அப்போது இரண்டு வயதுக்குள் இருக்கும். துருதுருவென்று விமான நிலையம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தானாம். அவனுக்கு போக்கு காட்டி விளையாட வைத்து அவனோடு பொழுது போக்கியது ஆனந்த் சார்க்கு மிகவும் பிடித்து விட்டது. சந்திரகாந்தின் வேலை விபரங்களை கேட்டபோது நட்சத்திர உணவுவிடுதியில் ஒப்பந்தம் முடிந்து ஊர் திரும்புவதாக சொல்லியிருக்கிறார். இனி மறுபடி வேலை தேடிதான் போக வேண்டும் என்பதையும் சொன்னாராம். அதை நினைவில் வைத்துக்கொண்டு எண்ணெய் நிறுவனத்திற்கு விருந்தினர் மாளிகைக்கு ஒப்பந்தக்காரரிடம் சிபாரிசு செய்திருக்கிறார் ஆனந்த சார். அந்த ஒப்பந்தக்காரர் மேற்பார்வையிலிருந்த இரண்டு மூன்று விருந்தனர் மாளிகையில் ஒன்றான கொடியபேல் பகவதி அம்மன் ஆலயத்தின் அருகிலிருந்த மாளிகையில் சந்திரகார்ந்தை பணியமர்த்தினார். “அஞ்சி வருஷமா இந்த இடத்த முழுசா கட்டுக்கு கொண்டு வர எவ்ளோ உழைப்பு, எவ்ளோ நெளிவு சுழிவு? அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்று தினகரனிடம் ஒருமுறை சொன்னார்.

மஞ்சுளா மேடத்துக்கு எப்போது சரியாகுமென்று தெரியவில்லை. ரஞ்சன் சாருக்கு அர்ஜூன் அங்கே வந்திருந்த நாள் முதலே பிடிக்கவில்லை. ஆனந்த் சாரிடம் சொல்ல முடியாது சந்திரகார்ந்திடமும் எதுவும் சொல்ல மாட்டார் தினகரனிடம் தான் கடிந்து கொள்வார்.

4

கார்டென் என்களேவ் அடுக்கத்தில் முதல் தளத்திலிருந்த அந்த வீட்டு தென்மேற்கு பகுதியில் இருந்த படுக்கையறையை ஒட்டி மேற்குபுறம் அமைந்திருந்த பால்கனியில் மாலை வெயில் முழுமையாக படர்ந்திருந்தது. முதல் தளத்தை எட்டிவிட வேண்டுமென்று பேராசையோடு வளர்ந்திருந்த தீக்கொன்றை மரம் அடர் சிவம்புத்தில் பூத்திருந்தது.

அந்தப் பூக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. அங்கிருந்து ஓடி வந்தவள் தினகரிடன் “அய்யோ மரம் முழுக்க நெருப்பு” அவள் உடல் நடுங்கியது.

“இல்லை மேடம் அது நெருப்பில்லை. பூங்கொன்றை”

“இல்லை எனக்கு ஓங்கி அலறணும் போலிருக்கு. நீங்க யாருமே நான் சொல்றத ஏன் நம்பமாட்டேங்கிறீங்க”

“சரி மேடம் அது நம்மை ஒன்றும் செய்யாது”

“அப்படித்தான் நேத்து சாயங்காலம் காலார காத்து வாங்க நடந்து போயிட்டுயிருந்தப்ப ஒரு பாம்போட தலை மட்டும் வெட்டுபட்டுக் கிடந்தது. ஆனாலும் அது சீறிக்கிட்டே புரண்டு புரண்டு என்னைத்தான் கொத்த வந்தது. அப்ப நடுமுதுகில் சுரீர்ன்னு பயம் பரவுச்சு. ஆனந்திடம் சொன்னேன் அவரு நம்பல.”

“ம் சொல்லுங்க மேடம்”

‘மேல பாரு’ ன்னார். நான் மேலே பார்த்தேன் கொத்தா அஞ்சாறு இல்ல பத்து பாம்பு, அவ்வளவு அகலமா படமெடுத்து பாக்கவே பயங்கரமா இருந்துச்சி. உத்து பார்த்தா பிளவுண்டு அதோட நாக்கு நீண்டு என் பக்கத்தில வருது. பயமாக இருக்குன்னா ‘வலிக்கிதா வீட்டுக்கு போலாமா’ என்று பொருத்தமில்லாமல் சொல்றார்.”

“..”

“அவரும் அர்ஜுனும் என்னவோ ரகசியமாக பேசிக்கிறாங்க. இவங்க எல்லோரும் சேர்ந்து என்னை என்னவோ செய்யப் போறாங்க. ஆனந்த் கூட இப்படி எனக்கு துரோகம் செய்வார்ன்னு நான் கனவில் கூட நினைக்கவில்லை.”

“இல்லை மேடம் யாரும் உங்களுக்கு கெடுதல் எதுவும் செய்யல. நர்ஸ் வந்துடுவாங்க. ஊசி போடுவாங்க. நீங்க தூங்குங்க”

“அய்யோ நீலகவுன் போட்ட அந்த பிசாசு வந்தா, அவள் வந்து ஊசி போட்ட உடனே இந்த மெத்தை கடல் மேல மிதக்குது. அவள் அந்த ஊசில என்ன மருந்து ஏத்துறா?. ஆனந்த் கிட்ட கேட்டா ‘நடக்கும் போது முதுகு வலிக்கிதுல்ல அதுக்காகன்னு’ சொல்கிறாரு. எனக்கு முதுகில் வலியில்ல. அது பயம். இவங்களுக்கு எல்லாம் ஏன் சொன்னா புரியறதில்ல.”

“சரி மேடம் இனி நர்ஸ் கிட்ட ஊசி போட வேண்டாம்ன்னு சொல்றேன். மாத்திரையும் சாப்பிட மாட்டேன்கிறீங்களே”

“அன்னிக்கி ஹாஸ்பிடல்ல இருந்தப்ப பாத்ரூம் போகக்கூட உன்னால முடியலன்னு மாத்திரங்க எல்லாம் சிரிச்சிச்சி. அதனால் தானே அதை எல்லாம் தூக்கி எறிஞ்சேன். அப்போதிலிருந்து தானே நீலகவுன் போட்டவள் ஊசி போட ஆரம்பித்தாள். அப்ப இருந்து நான் உதவாக்கர ஆயிட்டேன்”

“இல்ல மேடம் அப்படியில்ல”

“அப்ப நீ ஏன் வர? நீ வந்தா கூட ஓகே. அந்த சந்திரகாந்த் அப்பப்ப ஏன் வரான்? நீ பேசறது போல அவன் நான் சொல்றதை கேட்கறதும் இல்லை. உத்து உத்து பார்க்கிறான். அவன் சரியில்ல. அவனை இங்கே வரவிடாதே. நீயே வா.”

“சரி மேடம் நானே வரேன்”

“என் வேலை எல்லாம் நீங்களே செய்றீங்க. எனக்கு இனிமே இந்த வீட்டில் எந்த இடமும் இல்லயா? நான் இந்த ரூம்லயே முடங்கிப்போய் விடுவேனா?”

“இல்ல மேடம் உங்களுக்கு உடம்பு சரியானதும் செய்வீங்க”

“எனக்கு உடம்புக்கு ஒன்னுமில்ல. என்னால எல்லா வேலையும் செய்ய முடியும். நர்ஸ் போடும் ஊசில தான் இப்படி ஆயிட்டேன். இனிமே நானே சமையல் செஞ்சுப்பேன். நாளையிலிருந்து நீ வரக்கூடாது” என்று மஞ்சுளா கத்தினாள்.

“சரி மேடம் செய்யலாம்”

இட்லிகளை எடுத்து அதன் வெப்பம் குறையாமல் இருக்கும் பாத்திர அடுக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். சாப்பாட்டு மேசை மீது இட்லி தட்டுகளையும், அந்த பாத்திரத்தையும் வைத்துவிட்டு உள்ளே சென்று அவன் பரபரப்பாக எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது “நீ ஏன் இப்படி சத்தம் செய்ற” என்று கேட்டுக்கொண்டே சாப்பிடும் மேசையருகே வந்தாள் மஞ்சுளா.

“பார் தினகரன் நீள்வட்ட கிணறு. அழகா இருக்குல. தண்ணீர் தேன் நிறத்தில் இருக்கு. என் முகம் எவ்வளவு தெளிவாக அழகாக தெரியுது இதுல. தண்ணி மேல மயிலிறகு அசையுது. ஆனா அது ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு? “

“மேடம் கொஞ்ச அங்கே பாருங்க. அது தென்னை மரம்.”

“ஜன்னல் வழியா காத்து. அதான் பச்ச கீத்த அசைக்குது. இங்க தண்ணில அதன் பிம்பங்கள். மயில் இறகு அல்ல. இது சாப்பாட்டு மேசைல. இல்ல நான் ஆசையா வாங்கிப் போட்ட முட்டை வடிவ சாப்பாட்டு மேசை. என்னை குழப்பாத.. இது பழுப்பு நிற தண்ணி. இது தண்ணீர் மேசை. ஏன் உன் முகம் என் முகத்துகிட்ட தெரியுது. நீ என்னை என்ன செய்யப் பார்க்கிற”

இட்லி இருந்த தட்டை வீசி எறிந்தாள் மஞ்சுளா. சாப்பாட்டு மேசை உடைந்து. அதிலிருந்து தெறித்த ஒரு கண்ணாடித்துண்டு தினகரன் நெற்றியில் பட்டு காயம் ஆனது. அர்ஜுன் பயந்தபடி பார்க்கிறான்.

5

சுல்தான் பெட்டரி கோட்டையருகே இருக்கும் பூங்காவின் வண்டி நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பெருமூச்செறிந்தார் ஆனந்த். விருந்தினர் மாளிகைக்கு வந்து தினகரனை அழைத்துக் கொண்டு தண்ணீர் பாவி கடற்கரைக்குச் செல்லலாம் என்றார். தினகரன் அன்று மஞ்சுளா மேடம் இட்லி தட்டை வீசி எறிந்த போது இரவுப்பணி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த ஆனந்த் நெற்றியில் பட்ட காயத்தை டெட்டால் வைத்து கட்டிவிட்டார். அதன் பிறகு ஓரிரு நாள் சந்திரகாந்த் ஆனந்த் சார் வீட்டுக்கு சென்றார். பிறகு என்ன ஆனதோ அவரும் போகவில்லை.

அந்தப் பூங்காவில் ஒரு பெரிய மீன் சிலையை கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் தூக்கிக்கொண்டு நடப்பது போல ஒரு சிலையிருந்தது. அவ்வளவு பெரிய சுறா மீன். ஆனால் அது நிஜ மீன் போலவே இல்லை. அந்த இரண்டு மனிதர்களும் குட்டையாகச் செயற்கையாகத் தெரிந்தனர். பூங்காவில் இருந்த பூக்கள் எல்லாம் கடற்காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தது. பெரிய கஜலஷ்மி சிலை இருபக்கமும் இரண்டு சிறிய யானைகளோடு பிரம்மாண்டமாய் இருந்தது. ஆனால் எதிலும் இயற்கைத்தனமில்லை. தண்ணீர் பாவி கடற்கரைக்கு அங்கிருந்து படகு செல்லும். கடற்கன்னிகள் போலிருந்த சிலை நடுவே அமர்ந்திருந்தவர் ஒருகாலத்தில் தேசத்தின் ராஜாவாக இருந்திருக்கலாம்.

“மஞ்சுளாவுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். அவளோடு வரப்ப இந்த விளக்குங்க அதோட ஒளி, இங்க உலவற காத்து எல்லாமே ஒரு அபூர்வ உணர்வ தரும். அவளோட இனி எப்போ இங்க வரமுடியுன்னு தெரியல. அவகூட இல்லாத இந்த இடம் ‘பச்’.. எந்த சுவாரஸ்யத்தையும் தராது.”

“சார் வருத்தபடாதீங்க.. மேடம் சீக்கிரமா சரியாடுவாங்க”

“நிமிஷ நேரம் சும்மா இருக்க மாட்டா மஞ்சுளா. வீட்ட இன்ச் இன்சாக சுத்தம் பண்ணுவா. விதவிதமா சமையல் செய்வா. யார் கண்ணு பட்டதோ? அவ வழக்கமான வேலயெல்லாம் செஞ்சி மூனு மாசமாச்சி. இனி அப்படி அவளால வேல செய்ய முடியுமான்னு கூட தெரியல. என்னன்னு தெரியாத பூதமொன்னு அவளோட இருக்கு.”

“ஆமாங்க சார் முன்னே எல்லாம் மஞ்சுளா மேடத்த பார்த்தா கொடியபேல் பகவதியை பார்த்தது போலவே இருக்கும். என்னவோ கெட்ட நேரம்”

“அவள் இப்பதான் மெல்ல மெல்ல தேறி வந்தாள். சந்திரகாந்த் வரது அவளுக்கு பிடிக்கலன்னு தான் முதலில் நினைச்சேன். அவன் வரும் போதெல்லாம் பெட்ரூம் விட்டு வரமாட்டா. இன்னும் தன்னை முழுசா போர்த்திக்கிட்டு நடுங்கிக்கிட்டே இருப்பா. கால் விரல் தெரிஞ்சா கூட இழுத்து இழுத்து மூடிக்குவா.”

“ஒன்னும் பிரச்சனையில்ல சார். நீங்க கவலபடாதீங்க”

“அவள் அடிப்பட்ட அன்னிக்கி மாடிவரை அவளே தானே நடந்து போயிருக்கா. அன்னிக்கி கொஞ்ச நேரம் நின்னு சமைக்கக் கூட செய்தாளாம். அப்பறம் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகிற வழியிலோ, பல டெஸ்ட் எடுக்க படுக்கைல இருந்து ஏத்தி இறக்கி முதுகெலும்பில என்ன பிரச்சனன்னு கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு மயிரிழை அளவே விட்டிருந்த விரிசலை பெரிசாக்கி விட்டானுங்க. அப்பறம் சர்ஜரி, பெயின் கில்லர், உடல் பயிற்சின்னு அவளுக்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்க நானே காரணமாயிட்டேன்.”

“சார் ஏன் கவலைபடறீங்க இதில் உங்க தப்பு என்ன இருக்கு. டிரீட்மென்ட்க்கு தானே அழைச்சிட்டு போனீங்க.”

“மருத்துவமே பிரச்சனையை பெரிதாக்கி விட்டதோ. அவள் காய்சல், ஜலதோஷம் எதற்குமே மருந்து சாப்பிட மாட்டா. இதயும் அப்படியே விட்டிருந்தா அவளாகவே சரியாகியிருப்பாளோ?

“…”

“இன்னிக்கி நைட் டியூட்டி முடிஞ்சி காலையில எட்டரை மணிக்கு வந்தப்ப மஞ்சுளா இட்லி உடைந்து விட்டது என்று அழுது கொண்டே இருந்தாள். அர்ஜூன் பள்ளிக்கு கிளம்பாமல் விழித்தபடி அமர்ந்திருந்தான். அர்ஜூன் என்னிடம் ‘அம்மா அவர் மேல தட்டை தூக்கி எறியப் போனாங்க. அம்மா தட்டை எறிய விடாம கைய பிடிக்க வந்தாரு. அம்மா அடிச்சிட்டாங்க’ என்றான். இருக்கின்ற பிரச்சனைகள் போதென்று இந்த சந்திரகாந்த் வேற. அவனுக்கு கிறுக்கு தான் பிடித்திருக்கிறது. இப்பதான் அவள் கொஞ்சம் பழைய நிலைக்கு வர்றாப்புல இருந்துச்சி. அதற்குள்ள இவனே அவள பழையபடி ஆக்கிட்டான்.”

“..”

“துபாய் ஏர்போர்ட்டில் ஒன்றுமே தெரியாதவன் போல இருந்தான். குழந்தைக்கு அந்த ஐஞ்சாறு மணிநேரத்துல காட்டிய அன்புக்கு ஏதாவது செய்ய நினைச்சி அவனுக்கு நான் இந்த வழிகாட்டினேன். நான் அவனுக்கு அதிகம் சலுகை காட்டறேன்னு கணேஷ் வேறு என்னிடம் அடிக்கடி புகார் சொல்கிறான். கம்பெனில சந்திரகாந்துக்கு டைரக்ட் காண்ட்ராக்ட் கொடுக்க நான் சொன்னதுல அவனுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்ல. ஏன் ரஞ்சனுக்கும் கொஞ்சம் கூட அதில் பிடித்தமில்லை. சப் காண்ட்ராக்ட்ல இருக்கப்பவே சந்திரகாந்த் மதிப்பதில்லன்னு சொல்வாரு.”

“சந்திரகாந்த் மேல தப்பெதுவும் இருக்காது சார்”

“சந்திரகாந்த் நல்லவன் தான் ஆனால் கொஞ்சம் சாதுர்யமானவன்னு அவன் வந்த புதிசுலேயே தெரிஞ்சது. நல்ல பெயர் வாங்கணுமின்னு தெரியாதத கூட தெரிஞ்சது போல சாமர்த்தியமா பேசுவான். மற்றபடி விஷமம் இல்லை. அதான் கொஞ்சம் விலகி மரியாதைக்கான இடைவெளிலயே வைத்திருந்தேன். ஆனா?”

“அவருக்கு இங்க பிரச்சன சார். ரஞ்சன் சார் மட்டுமில்லை எல்லோருமே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க”

“எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே. உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே எனக்கு ட்ரான்ஸ்பர் ஆகப் போகுதுன்னு”

“இடம் மாறினாலாவது மஞ்சுளா மேடத்துக்கு சரியாடலாம் இல்லையா?”

“நானும் அப்படித்தான் நம்பறேன்”

6

மதிய சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்க பையை எடுத்துக்கொண்டு ஹம்பனெஹெட்டே மார்க்கெட்க்கு கிளம்பினான் தினகரன். ஹம்பனெஹட்டே மணிக்கூடு. இதைப் பார்த்து பெருமூச்செறிய மட்டுமே முடிகிறது. அவனுக்கு அதுதான் ஈபில் டவர். பத்துக்கு பத்து அகலமுள்ள நான்கு சுவர் சூழ்ந்த தூண் வடிவம். முதல் தளத்தில் நாலுகட்டு வீட்டு படிப்புறா அமைப்பில் அலங்கார கோபுரமும் இருக்கும். அதற்கு மேல் ஒருவரிருவர் இணைந்து வலம் வருவதற்கு தேவையான அளவு இடம் விட்டு மற்றொரு சதுர வடிவ எழுப்பப்பட்டிருந்து. அந்த நான்கு சுவரின் உச்சியில் தென்னம் தொன்னையை கவிழ்த்து வைத்தது போல நான்கு புறமும் மழை வடிய அட்சி ஓடு வேயப்பட்டு ஒற்றை கும்பம் வைக்கப்பட்டிருக்கும். நான்கு முனைகளில் பாம்பு வடிவமில்லை அது மட்டுமே அதற்கும் கோவில் கோபுரத்துக்குமான வேறுபாடு கோபுரத்துக்கு கீழே நான்குபுறமும் சுவர் அகலத்துக்கு இணையான கடிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் அதில் மணி பார்ப்பவர் தான் யாருமில்லை.

வீட்டில் அண்ணனும், அப்பாவும் உணவக மேலாண்மை படித்த மாதிரியே தான் தினகரனும் படித்தான். அவன் அரபிக்கடல் காற்றை எவ்வளவு காலம் தான் குடிப்பது. ஐரோப்பா பனியில் நனையலாம் என்று நினைத்த கனவுகள் கனவுகளேவே இருக்கின்றன. சத்யா பாடு பரவாயில்லை அவனுக்காவது அப்பா நேரடி ஒப்பந்தம் முயற்சி செய்து கொண்டிருகிறார். தினகரன் குடும்பத்துக்கு இந்த வேலையை விட்டால் எந்த வருமானமும் இல்லை. வேலை எவ்வளவு செய்தாலும் தினகரனின் அப்பா சந்திரகாந்த்கிடம் ஒவ்வொரு மாதமும் வந்து தினகரனின் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார். செலவுக்கு மட்டும் தான் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு போவார். கேட்டால் சாப்பாடு, தங்க இடம் இலவசம் உனக்கு எதுக்கு காசு என்பார். அவர் சொல்லும் கதைகளில் வீட்டுபடும் பாடு தினகரன் வாயை அடைக்கும்.

தினகரன் அப்பாவின் அப்பா கோவிலில் சிறு சிறு நேவேத்தியம் செய்து தரும் வேலையில் இருந்தார். அவர் தொடங்கிய அன்னமிடும் தொழில் தான் என் வரையிலும் தொடர்கிறது. தனது ஒரே மகனை போஷிக்க போதுமான அளவு வருமானம் தினகரன் தாத்தாவுக்கு கிடைத்தது. தினகரனின் பாட்டி அவன் அப்பாவின் சிறுவயதிலேயே இறந்துவிட தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் பெரும்பாலும் பூஜை முடிந்து தரப்படும் பிரசாதமே போதுமானதாக இருந்தது. அவன் அப்பாவும் அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வளர்ந்து விட்டார். பிரச்சினை திருமணத்திற்கு பின்னர் தொடங்கியது. சிறிய சீரியல் லைட் போன்று சிவந்த ஆவாரம் பூக்கள் நிறைந்த அவர்கள் வீடு அம்மாவுக்கு போதவில்லை. தோரண வாயில் கொண்ட பெரிய மாளிகை வேண்டும் என்ற அம்மா கனவு அப்பாவை சீனா, துபாய் என்று உலகின் பல்வேறு நகரங்களுக்குத் துரத்தியது. அண்ணனையும் ஐரோப்பிய நாடுகளில் வேலைக்கு அனுப்பியது.

தினகரன் விருப்பம் அண்ணனோடு ஐரோப்பாவிற்குச் செல்வது. அண்ணனைப் போலவே நானும் அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து மணந்து கொள்வேன் என்று அம்மாவுக்கு பயம். அப்பாவுக்கும் அது பயமாக இருக்கலாம். விரைவிலேயே திருமணத்தை முடித்து வெளிநாடு செல்லும் ஆசையை மாற்றி விட்டார். அவன் பத்தினிக்கு அதிக ஆசைகள் இல்லை. அப்படிப்பட்ட பெண்ணை தான் தினகரன் அம்மா அவனுக்கு பார்த்திருந்தாள். குடும்பத்திற்கு உழைக்க இங்கேயே வேலை செய்தால் போதுமென்று தினகரன் மனைவி சொல்லி விட்டாள். உழைப்பிருந்தால் போதும் அங்கே போய் சேமிப்பதை விட மிக அதிகம் சேமிக்கலாம் என்றும் அவளை விட்டே சொல்லியிருந்தனர். எங்கே போனாலும் நம்ம ஊர் போல வராது என்று எல்லா சமாதானமும் சொல்கிறாள். தினகரனின் அப்பா சத்யாவுக்கு சந்திரகாந்த் நேரடி ஒப்பந்தம் எடுத்துக் கொடுத்த கையோடு அவனுக்கும் ஒன்று ஏற்பாடு செய்வார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.

நேரடி ஒப்பந்தம் கிடைப்பது இருக்கட்டும் பின்னர் தினகரன் நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருந்தாலும் இப்போது இங்கே எச்சில் தட்டு தான் கழுவ வேண்டியிருக்கிறது. அதுவும் ரஞ்சன் சார் சாப்பிட்டு கை கழுவ எழுந்து சென்று திரும்பும் முன்னரே தட்டை எடுத்து அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டுமென்பார். கை கழுவி விட்டு வந்து அமர்ந்து காபி குடிக்கும் போது எச்சில் தட்டு இருக்கக் கூடாதாம். ஒரு நிமிட நேரம் வேறு வேலையாக இருந்தால் கூட ஒப்பந்தக்காரர் கணேஷிடம் போய் சொல்லிவிடுவார். அவர் வந்து திட்டிவிட்டு போவார்.

அப்போதெல்லாம் தினகரனுக்கு ஏன் இந்த இடத்தில் இவ்வளவு கூழை கும்பிடு போட்டுக்கொண்டு இருக்க வேண்டுமென்று தோன்றும். ஆனால் தாத்தா சொல்வது தான் நினைவுக்கு வரும். “விருந்தினர் விருந்துண்ட புண்ணியம் அவர் சாப்பிட்ட இடத்தை எச்சிலிட்டு துடைக்கும் போதுதான் கிடைக்கிறது” அவர் தொடங்கி வைத்த உண்டி தொழிலில் இதுவும் நியாயம் தானே.

7

ஆனந்த் சார் மாற்றலாகிப் போன பின்னர் எல்லாமே தலைகீழாகி விட்டது. தினமும் ஏதேனும் காரணம் சொல்லிக்கொண்டு தினமும் கணேஷ் வந்து விடுகிறான். சின்னச் சின்ன குறைகளைக் கண்டுபிடித்து திட்டிக் கொண்டிருக்கிறான். தினகரன் ஆனந்த் சார் வீட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது ரஞ்சன் சார் ஒருநாள் கணேஷிடம் வந்து “ஆனந்த் சாரிடம் சொல்ல முடியால அவங்க வீட்டுக்கு சந்திராவை வேணும்னா அனுப்பேன் தினகரன் போயிட்டா, சத்யாவுக்கு அடுப்படி வேலையே சரியா இருக்கு, ரூம் சுத்தம் பண்ண நான் ஆபீஸ் வந்தப்பறம் வரும்போது, அதை தூக்கி இங்க, இதை தூக்கி அங்கன்னு வைச்சிடறீங்க. எனக்கு தேடவே சரியா இருக்கு. பாத்ரூம் கூட நான் இருக்கும் போது சுத்தம் செய்றப்புல சுத்தமா செய்றது இல்லை” என்றார். இப்போது ஒப்பத்தம் ரஞ்சன் சார் கையில் தான். கொடியபேல் கொட்ரோலி ஶ்ரீ பகவதி கணேஷை ஏமாற்றவில்லை, ஆனந்த் சார் கிளம்பிய உடனேயே ரஞ்சன் சார் வேறு சந்திரகாந்த் மேல் புகார் கொடுத்து இருக்கார். அதனால் சந்திரகாந்த் கதை அவ்வளவு தான் என்று நினைத்தான் கணேஷ்.

“என்ன சந்திரா பேராசை பட்டா இப்படித்தான். உள்ளதும் போச்சா.”

“கான்டிராக்ட் ஆனந்த் சார் வற்புறுத்தினதுனால தான் அப்ளை பண்ணேன் கணேஷ் அண்ணா. இப்ப இருக்க மாதிரியே இருந்துடறேன்”

“விட்டா என் தலை மேலயே ஏற பார்த்தல்ல, இப்போ இன்னும் இரண்டு மாசத்துல மூட்டை கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியது தான். ரெடியா இரு”

இவ்வளவும் சொல்லும் போது சந்திரகாந்த் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அழுது விடுவான் போலிருந்தது. சத்யா தன் அப்பாவைச் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தான். கொடியபேல் பகவதி கோவில் மணி சந்தியாகால மங்கல ஆரத்திக்காக ஒலித்துக் கொண்டிருந்தது கொண்டிருந்தது. தினகரன் கைகளை குவித்து கண்களை மூடியபடி நின்றான். அவன் மனமார தேவியை தரிசித்திருக்க வேண்டும். அதுதான் அவன் முகம் மலர்ந்து அழகாய் புன்னகைக்கிறான். வெளியே வந்து கல்மேடையில் சாவகாசமாய் அமர்கிறான்.

ரஞ்சன் சார் அறையிலிருந்து வெளியே வந்தார். “கணேஷ் பங்களாவில் எல்லோரும் காண்ட்ராக்டை சந்திரகாந்துக்கு கொடுக்கச் சொல்லி மெயில் போட்டுட்டாங்க. அவனுக்கு ஆர்டர் நிச்சயம். அவனுக்கு இங்கே வைக்கலைன்னா உன்னையே மாத்த சொல்றாங்க. நீ இனிமே இங்கே வந்து தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றார். தினகரன் முகம் இருண்டு போனது. கூடவே அவன் மனைவி நினைவு வந்து முகத்தில் நிம்மதி படர்ந்தது. அதுவரை நிமிர்ந்து கல்மேடை மேல் அமர்ந்திருந்தவன் பணிவோடு எழுந்து உள்ளே சென்று இரவு உணவுக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான்.

***

லாவண்யா சுந்தர்ராஜன் – நீர்க்கோல வாழ்வை நச்சி, அறிதலின் தீ எனும் கவிதைத் தொகுப்புகளும் புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆசிரியர் தொடர்புக்கு – lavanya.sundararajan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular